விளைபொருள் விலையேற்றமும் விவசாயியும்.....
நண்பர்களே!
விவசாயி விளைவிக்கும் எந்தப் பொருள் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்குப் பயனுள்ள ஒன்றாக நினைப்பது சரியா?
இப்படி ஒரு கேள்விய நான் முகநூலில் எழுப்பினேன்.
அதற்கு நிறைய நண்பர்கள் சரி அல்ல என்று பதில் அளித்திருந்தார்கள்.
அதற்குக் காரணமாகப் பல காரணங்களைச் சொல்லியும் இருந்தார்கள்.
ஆதாவது இடைத் தரகு, வர்த்தகக் கொள்ளை, விலை நிர்ணயம் இல்லாமை அரசின் தவறான அணுகுமுறை, விவசாயிகளின் செலவினங்கள் அதிகரிப்பு போன்ற பல காரணங்களைச் சொன்னார்கள்.
அத்தனை பதில்களும் இன்றைய விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி அக்கரை உடையவையாகவும் மாறுதல் வேண்டுபவையாகவும் இருந்தன.
ஆனால் நான் எழுப்பிய கேள்விக்குப் பொருத்தமான முழுமையான பதில்களாக இல்லை.
உண்மை என்னவென்றால் விவசாயம் பற்றிய விவசாயிகள் உட்பட மக்கள் அனைவரின் புரிதலில் இருந்துதான் அத்தகைய பதில்கள் வெளிப்பட்டன.
ஆனால் உண்மையில் இதற்கான பதில் வேறு வகையானது!
ஒரு விவசாய விளைபொருள் விலை உயர்கிறது என்றால் அதற்கான காரணங்களை அறியவேண்டும்.
எப்போது உயர்கிறது?
சந்தைக்கு வரத்துக் குறையும்போது!
எப்போது வரத்து குறைகிறது?
அதிகமான விவசாயிகள் அந்தப் பொருளை அதிகம் பயிர் செய்யாதபோது!
பயிர் செய்துள்ள விவசாயிகளும் தங்களால் எவ்வளவு பரப்பில் விவசாயம் செய்ய முடியுமோ அவ்வளவு பரப்பில் அந்தப் பயிரைச் சாகுபடி செய்யாதபோது!...
ஆதாவது விலை உயர்வு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பது இல்லை!
பயிர் செய்யும் வாய்ப்பு உள்ள விவசாயிகளாலும் தங்கள் நிலத்தில் மிகச் சிறு பகுதியே சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கிடைக்கிறது.
அப்படியானால் இதிலிருந்து என்ன தெரிகிறது?
பெரும்பாலான விவசாயிகளுக்கும் அந்த விலை உயர்வுக்கும் சம்பந்தம் கிடையாது!
ஒரு சிறு பகுதி விவசாயிகளுக்கும் முழுமையாகக் கிடைப்பது கிடையாது.
இந்த நிலையில் எந்தப் பொருள் என்ன விலைக்கு விற்றாலும் அதைப் பயிர்செய்த விவசாயிகே முழுப் பயன் இல்லாத நிலையில் பயிரே செய்யாத விவசாயிகளுக்கு என்ன பயன்?
இப்படி இருக்க ஒரு பொருளின் விலை அதிகமானவுடன் அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைப்பதுபோன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதும் அதை நம்புவதும் என்ன நியாயம்?....
ஆனால் அதுதான் நடக்கிறது!
காய்கறிகள் உற்பத்தி குறைந்து கொஞ்சம் விலை கூடிவிட்டால் ஆலாய்ப் பறக்கிறார்கள்! வெங்காயம் கிலோ இவ்வளவு, கத்தரிக்காய் இவ்வளவு, தக்காளி இவ்வளவு என்று!
எதோ அந்த நேரத்தில் விளையும் சில பண்டங்களால் சிறு பகுதியினருக்குக் கிடைக்கும் அற்ப காசுகூடப் பறிபோக வேண்டுமா?
ஆனால் அப்படிப்பட்ட பிரச்சாரம்தான் தொடர்ந்து நடக்கிறது.....
அது அநியாயம்! உண்மைக்கு மாறான மாயத் தோற்றம்!
அனைத்து விவசாயிகளுக்கும் விளையும்போது நல்ல விலை விற்றால் மட்டுமே அனைத்து விவசாயிகளின் முழு நிலமும் பயிர் செய்யப்பட்டு விளைச்சல் நல்ல விலைக்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் விலையேற்றத்தால் பயன்பெற்றார்கள் என்று சொல்வது சரி!
அப்படியல்லாமல் சந்தையில் விலை உயர்ந்தவுடன் அதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துவிட்டது என்று பொத்தாம் பொதுவில் சொல்வது நயவஞ்சகமும் மோசடிப் பிரச்சாரமும் ஆகும்!
அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கவும் மக்களுக்கும் நியாய விலையில் விளைபொருள் கிடைக்கவும் என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்!
அதுதான் நிரந்தரத் தீர்வு!....
No comments:
Post a Comment