ss

Friday, October 3, 2014

தாத்தா சொன்ன கதைகள்...( 1 )

சேருவாரோடு சேர்ந்த பொணம்.....

ஒரே ஒரு ஊர்ல, ஒரு காட்டுல நரி ஒண்ணு இருந்துச்சாம்.

அதுக்குப் பக்கத்து டவுன்ல ஒரு பூனை சிநேகிதன் இருந்தானாம்! 

ரெண்டுக்கும் சிநேகிதம்னாலும் சிநேகிதம் அப்படிப்பட்ட சிநேகிதமாம்!

தெனமும் ஒண்ணை ஒண்ணு பார்க்காம இருக்காதாம்!..

ஆதாவது பூனை தெனமும் நரியைப் பார்க்கக் காட்டுக்கு வந்திருமாம்! 

நரியும் தன்கிட்ட இருக்குற வகை வகையான கறியும் இல்லன்னா கடைசிக்கு எலும்புத் துண்டுகளாவது வச்சிருந்து குடுக்குமாம். 

பூனையும் ஒரு நாள் நரியப்பார்த்து ," நரியண்ணா! இது என்ன பிழைப்பு?...காடுமேடெல்லாம் சுத்திக்கிட்டு மழை வெய்யில்னு இல்லாமக் காஞ்சிகிட்டு....நான் இருக்குற இடத்துக்கு ஒருநா வந்து பாரு" அப்படின்னு தன்னோட எடத்துக்கு விருந்துக்குக் கூப்பிட்டுதாம். 

நரி யோசிச்சுதாம்! 

அங்கெ வந்தா எனக்கு வசதிப்படுமா, நான் சாப்பிடுற மாதிரி என்ன வச்சிருக்கே அப்படின்னெல்லாம்  கேட்டுதாம். 

அதுக்குப் பூனை," அட நீ ஒண்ணு! நான் இருக்குற எடம் இப்படி முள்ளுக் காடு அல்ல, பெரிய ஓட்டலாக்கும்! அங்கு கெடைக்கிற பதார்த்தம் உன்னோட ஆயுசுக்கும் இங்கே கண்ணுல பாக்க முடியாது"  அப்படின்னுச்சாம்! 

நரிக்கும் சபலம் வந்துடுச்சு! 

சரி நா வர்றேன்! ஆனா மனுசங் கண்ணு, நாய்க கண்ணுல படாம வரணுமே!...அப்படின்னுதாம். 

அதுக்குப் பூனை ராத்திரிலே ஊரடங்கவிட்டு யார் கண்ணுலயும் படாம வந்துரலாம் அப்படின்னு தயிரியம் சொல்லிச்சாம்.

அதுக்குமேல, நரியால ஆசையை அடக்க முடியலே! ... சரி! வர்றேன் அப்படின்னு உறுதியாச் சொல்லிருச்சாம்! 

ஆனா ஒண்ணு ஒரு விஷயத்துல நீ ஜாக்கிரதையா மனசக் கட்டுப்படுத்தி இருக்கணும் அப்படின்னும் பூனை சொன்னதாம்.

என்னன்னு நரி கேட்டுச்சாம்.

இங்கே காட்டுல பாடற மாதிரி அங்க வந்து ராகம் பாடக் கூடாது , அதுலமட்டும் கட்டுப்பாடா இருக்கணும் அப்படின்னுதாம் பூனை! 

நரியும் ஒத்துகிட்டுது! 

நரி மத்த சொந்த பந்தங்ககிட்ட, தான் டவுனுக்கு விருந்துக்குப் போறதா சொல்லியிருக்கு! 

அடே! கெட்ட சாவகாசமடா! வேண்டாம்! காட்டுல இருக்குற நமக்கு நாட்டு சாவகாசம் ஆபத்துன்னு எல்லோரும் வேண்டாம்னாங்களாம். 

நரி அவங்க பொறாமையால சொல்றாங்கன்னு சட்டை செய்யலையாம். 

ஒரு நாள் குறிச்சு அன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல நரி பொறப்பட்டு டவுனுக்குப் போச்சாம்! 

எதுர்ல வந்த பூனை ரொம்ப சூதானமா யார் கண்ணுலயும் படாமக் கூட்டிக்கிட்டுப் போச்சாம்!

சாக்கடைப்பக்கமெல்லாம் மறைஞ்சு மறைஞ்சு போனாப்போ நரிக்கு ஊள நாத்தம் பொறுக்க முடியலியாம்.

எப்படியோ ஒரு வழியா அங்கியும் இங்கியும் நொழைஞ்சு ஓட்டல் பின்வாசல் வழியா மேல நாலாவது மாடிக்குப் போயிட்டாங்களாம்! 

அப்புறம் யாருக்கும் தெரியாம ஒரு அலமாரிக்குப் பின்னால ஒளிஞ்சுட்டாங்களாம்! 

நரிக்கு இது ஒரு பொழப்பா அப்படின்னு இருந்துச்சாம்! ஆனா அந்த நேரத்துல யாருகிட்ட சொல்றது ? போட்டாட்டம் இருந்துச்சாம். 

கொஞ்ச நேரத்துல ஆளுக வந்து எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டுப் படுக்கப் போயிட்டாங்களாம். 

அப்புறந்தான் இவங்க வெளிய வந்தாங்களாம். விதவிதமா பலகாரமும் மிச்சமிருந்த சப்பாத்தியும் புரோட்டாவுமா வேணும்கிற அளவு தின்னாங்களாம்! 

ஆஹா! இப்பேர்ப்பட்டதையெல்லாம் இத்தனை நா சாப்பிடாம விட்டுட்டோமேன்னு நரிக்கு அங்கலாய்ப்பா இருந்துச்சாம்.  

இனி வெளிய போகணும்னா காலைலே நேரத்துல வெளி கேட் திறக்கணும்னு பார்த்துட்டு இருந்தாங்களாம். 

அப்போபார்த்து நரிக்கு சங்கீதம் பாடனும்னு தோணிச்சாம். 

மெல்லப் பூனைகிட்ட சொல்லிச்சாம்! 

அப்படி ஏதாவது ராகம் பாடுனே அப்புறம் காடு போய்ச சேர மாட்டேன்னு பூனை சொல்லிச்சாம்! 

ஆனாலும் தலையெழுத்து அத்துவானமா இருந்தா யாரை விட்டது சனியன்! 

நரி அழகா நல்ல ராகத்தோட சத்தமா சங்கீதத்தை மெட்டெடுத்து விட்டதாம!....

வயிறு  நிறையத் தின்ன குஷில ஆனந்தமா நரி பாடவும் சத்தம் கெட்ட ஆளுங்க என்னடா இங்கே நரி ஊழயுடுற சத்தம் அப்படின்னு தடிகளோட மேல ஓடியாந்தாங்களாம்!

பூனை ரொம்ப யோக்கியன் மாதிரி ஓடிப்போய் அவங்க பக்கத்துல நின்னுகிச்சாம்!

அவங்க தேடித் பாத்து அலமாரிக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு இருந்த நரியை  "வாடா மாப்பிளே!" அப்படின்னு சொல்லி வெளியெ இழுத்து ஆளுக்கு ரெண்டு போட்டாங்களாம்! 

நரி வாயைப் பொளந்துக்கிட்டு செத்துப்போக அப்புறம் அதைத்  தூக்கி வெளியே ரோட்டுல எறிஞ்சாங்களாம்! 

அப்போ காட்டுல இருந்த நரியோட சொந்தக்காரங்க நாலுபேர் காணோம்னு மனசு கேக்காம நடு ராத்திரில டவுனுக்குள்ள நொழஞ்சு தேடுனாங்களாம்! 

அப்போ ஓட்டல் முன்னால ரோட்டுல செத்துக் கெடந்ததப் பாத்து அடப்பாவி! இப்படிப் பண்ணிட்டியேடான்னு பொலம்புனாங்களாம்!

அதுல மொதல் நரி, " இது செருவாரோட சேர்ந்த பொணம்" அப்படின்னுதாம்.

ரெண்டாவது நரி," சேருவாரோட சேர்ந்தாலும் கூடமும் மாடமும் ஏறப்படாதல்ல? " அப்படின்னுதாம்.

மூணாவது நரி, " கூடமும் மாடமும் ஏறினாலும் தொலையுது! நாதங்க சங்கீதம் பாடிருக்கக் கூடாது!" அப்படின்னுச்சாம்!

அதுக்கு நாலாவது நரி, " நாதங்க சங்கீதம் பாடுனதுக்கும்  அவங்க தாளங்க மேளங்க போட்டதுக்கும் சரியாப்போச்சு!  பொறப்படுங்க நாம்ம மொதல்ல ஓடிப்போலாம்னு ஓடியே போயிட்டாங்களாம்!.......

No comments:

Post a Comment