ss

Thursday, October 23, 2014

விவசாயம் ( 85 )

வானகம்....... அடுத்த அடி !

நண்பர்களே! 

இயற்கை வேளாண்மை ஆர்வலர்களின் மற்றும் முன்னோடிகளின் தலைமையிடமாகக் கருதப் படுவது மறைந்த நம்மாழ்வார் அவர்கள் வாழ்ந்த மற்றும் வளர்த்த வானகம் ஆகும். 

காரணம் எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கி என்பதுபோல எல்லா இயற்கை ஆர்வலர்களது கவனமும் வானகம் நோக்கி என்பதாக இருப்பதே!

அத்தகைய குவிமையமான வானகம் வருங்காலத் தேவைகளைக் கணக்கில்கொண்டு ஐயா அவர்களின் குறிக்கோளுக்கு ஏற்ற முறையிலும் அதை மேலும் உயர்வான தரத்தில் முன்கொண்டு செல்லும் வகையிலும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை யார் செய்வது? எப்படிச் செய்வது? எங்கிருந்து துவங்குவது? 


அதற்கான திட்டம் ஏற்கனவே ஐயா அவர்களால் அல்லது அவருடைய வழி காட்டுதல்கள் அடிப்படையில் வகுக்கப்பட்டு இருந்தால் அந்தத் திட்டப்படி முன்கொண்டு செல்லப்பட வேண்டும். 

இல்லாவிட்டால் சரியான பாதையில் செல்லச் சரியான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 

அந்தத் திட்டம் எப்படி இருந்தால் நல்லது?

இயற்கை வேளாண்மைதான் மக்களுக்கும் உலகுக்குமான வேளாண்மை , நடப்பிலுள்ள வேளாண் முறைகள் ஒழிக்கப்படவேண்டியவை என்பதை மெய்ப்பிக்கும்படியான அனைத்து விவசாயிகளும் மக்களும் அறிஞர்களும் ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு வேளாண் முறையை அங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதன் கிளை அமைப்புகளாக நாடெங்கும் நிலவளம் நீர்வளத்தைப்[ பொறுத்து பல்வேறு வகையான மாதிரிப் பண்ணைகள் உருவாக்கப்படவேண்டும். 

அவைகளெல்லாம் அனைத்து விவசாயிகளும் அறிஞர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் வந்து பார்வையிடும் பயிலும் பயிற்சிக் களங்களாகவும் இருக்க வேண்டும். 

ஆதாவது வேதிப்பொருட்கள் அடிப்படையிலான நச்சு விவசாயத்துக்கு எதிரான போர்ப்பயிற்சிக் களங்களாக விளங்க வேண்டும். 

அத்தகைய ஒரு மாபெரும் அமைப்பாக விரிவாக்கும் திட்டத்துடன் துவக்கம் செம்மையாகத் துவக்கப்பட வேண்டும். 

அதற்கு இப்போதுள்ள வானகப் பொறுப்பாளர்கள் திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கவேண்டும். 

வானகத்தின் நிர்வாகிகள் ஒன்றுகூடி இப்போதுள்ள நிலைமையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 

வானகம் துவங்கிய காலத்தில் இருந்து இப்போது வரையான காலகட்டத்தில் அங்கு கிடைத்த அனுபவங்களை ஆராயவேண்டும். 

அந்த அனுபவங்களின் சாதக பாதக அம்சங்களை ஆய்வு செய்து படிப்பினைகளாக வரையறுக்கவேண்டும். 

கடந்த காலத்தில் நடந்த சரியான பணிகள் என்னென்ன, செய்யத் தவறிய பணிகள் என்னென்ன ,  அதற்கான காரணங்கள் என்ன , என்பதைப் பட்டியலிடவேண்டும். 

ஆதாவது சுய விமர்சன அடிப்படையில் படிப்பினைகள் கற்றுக்கொள்ளவேண்டும். 

அந்த அடிப்படையில் வானகம் அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன, அதற்கான வாய்ப்புகள் என்ன, நிதியாதாரங்கள் என்ன என்பதுபோன்ற அம்சங்களைஎல்லாம் கணக்கில்கொண்டு ஒரு திட்ட அறிக்கை தயார்செய்ய வேண்டும். 

குறிப்பாக வானகத்தின் குறைந்த பட்ச நீராதாரங்களை வலுப்படுத்திப் பாசன வசதியை மேம்படுத்தவும் மழைநீர்க் குட்டைகளின் மூலம் கிடைக்கும் நீராதாரங்களைப் பயன்படுத்தவும் அங்கு நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்றும் ஊழியர்களுக்கான குறைந்த பட்ச வசதிகளை மேம்படுத்துவதுமான அம்சங்கள் திட்ட அறிக்கையில் இடம்பெறவேண்டும். 

அதேபோல வானக மேம்பாட்டுக்கான கட்டுமானங்கள், வாகனங்கள் உருவாக்கமும் திட்டத்தில் இடம்பெறவேண்டும். 

இன்னும் தேவையான பல அம்சங்களை உள்ளடக்கியதாகத் திட்ட அறிக்கை இருக்க வேண்டும். 

அதன்பின்னால் நாடு முழுவதும் இருக்கக்கூடிய இயற்கை வேளாண் முன்னோடிகள் பட்டியல் ஒன்று தயார்செய்ய வேண்டும். 

ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்டதாக ஒரு இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் சபை  ஒன்று கூட்டப்பட வேண்டும். 

அந்த சபைக்கு பட்டியலிடப்பட்ட முன்னோடிகளுக்கும் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்குமான பொது அழைப்பு விடுக்கப்பட வேண்டும். 

சபைக் கூட்டத்துக்காக வருபவர்கள் முன்கூட்டியே வருகை பதிவு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

அந்த சபைக் கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை வைக்கப்பட்டு அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும். 

அனைவரின் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு அதில் சிறந்த ஆலோசனைகளை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் சேர்த்து முழுமையான வழிகாட்டு ஆவணமாகத் தயாரிக்க வேண்டும். 

தேவைப்பட்டால் வானகத்தை நிர்வகிக்கக் கூட்டுப் பொறுப்புள்ள ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். 

அல்லது ஏற்கனவே  அங்கீகரிக்கப்பட்ட நிரந்தரக் குழு இருந்தால் அதற்குத் துணையாக  ஒரு ஆலோசகர் குழுவை அமைக்கலாம். 

அந்த ஆவணத்தையும் அவ்வப்போது மாறுதலுக்கு உள்ளாகும் நிர்வாக மற்றும் ஆலோசனைக் குழுக்களையும்   அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தில் வானகம் செயல்பட வேண்டும். 

அதுதான் வருங்கால வானகத்துக்கும் அதன் ஒளியில் வளரவேண்டிய இயற்கை வேளாண்மை முறைக்கும் நிரந்தர நன்மை பயக்கும்!




No comments:

Post a Comment