ss

Tuesday, November 18, 2014

ஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை (39)

ஆன்மிகம்! உண்மையை நோக்கி....

ஆன்மிகம் என்ற பெயரால் உலகத்தில் மக்களுக்குச் சொல்லப்படுகின்ற கோட்பாடுகளுக்கு அளவே இல்லை!

அவை மதங்களின் பெயரால் சொல்லப்படுகின்றன.

வேதங்களின் வாயிலாகச் சொல்லப்படுகின்றன.

மதத் தலைவர்களின் அருள்மொழிகளாகச் சொல்லப்படுகின்றன.

ஆன்மிகச் சொற்பொழிவாளர்களால் சொல்லப்படுகின்றன.

ஆன்மிக இலக்கியங்களின் கதா பாத்திரங்களின் மூலமாகச் சொல்லப்படுகின்றன.

பக்திமான்களாகக் கருதப்படும் வயதில் மூத்தவர்களின் கருத்துக்கள் மூலம் சொல்லப்படுகின்றன.

சாதாரண மக்கள் மத்தியில் வழங்கப்படும் கதைகள் மூலமாகக்கூட சொல்லப்படுகின்றன.

கல்வி வாயிலாகவும் சொல்லப்படுகின்றன.

நவீன அறிவியல் யுகமாக விளங்கும் இக்காலத்தில் ரேடியோ,தொலைக் காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்ற அனைத்தும் ஆன்மிகப் பிரச்சாரத்துக்காகத் தங்கள் பணியின் ஒரு பகுதியை ஒதுக்கி வித விதமான ஆன்மிகத் தத்துவங்களை பல முறைகளில் வெளிப்படுத்துகின்றன.

திரைப்படங்கள் மக்கள் மனதில் ஒரு ஆன்மிகத் தத்துவத் தாக்குதலையே தொடுக்கின்றன.

இத்தனை விதமாக மக்கள் மத்தியில் தொடர்ந்து காலங்காலமாகப் பரப்பப்படும் கோட்பாடுகள் அனைத்துக்கும் ஒட்டு மொத்தமான பெயர்தான் ஆன்மிகம்!

ஆன்மிகம் என்ற வார்த்தையைத் தவிர அந்தக் கோட்பாடுகளில் கருத்தொற்றுமை பெரும்பாலும் இருக்காது!

ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விதமாக எதைச் சொன்னாலும் அது ஆன்மிகமாகவே கருதப்படுகிறது.

அது சரியா என்று ஆராயப் படுவதும் இல்லை!

தனி நபர்கள்தான் போகட்டும், ஆன்மிக அமைப்புகளான மதங்களாகட்டும் ஆன்மிகம் பற்றிய பொதுவான வரையறுப்புக்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருந்தனவா என்றால் அதுவும் இல்லை!

அப்படிப் பட்ட ஒத்த பண்புகள் இருந்திருந்தால் உலகில் இத்தனை மதங்கள் தோன்றவும் இன்றுவரை நிலைபெற்றிருக்கவும் வழியே இல்லை!

ஆனால் நீடிக்கின்றன! நிலைபெற்றும் இருக்கின்றன!

ஆனால் இவ்வளவு குழப்பமான, மாறுபட்ட, எதிரும் புதிருமான கோட்பாடுகளைக் கொண்ட சங்கதிகள ஆன்மிகம் என்ற பொதுவான அடிப்படையாக எப்படி மக்கள் ஏற்றார்கள்?

அதுதான் இல்லை!

ஆன்மிகம் என்ற பெயரால் சொல்லப்படும் அல்லது நடக்கும் முரண்பாடான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய எண்ணற்ற அமைப்புகளையும் அவை சொல்லும் செய்திகளையும் வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கி ஆன்மிகம் என்று ஒரே மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டார்கள்!

அதில் உலக மக்கள் அனைவரும் அடக்கம்!

காரணம் உலக மக்கள் ஒவ்வொருவரும் அந்த ஆன்மிக மூட்டைக்குள் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.

அவற்றின் நிழலில் வாழ்ந்தார்கள்.

அந்த மூட்டைக்குள் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள்!

பெரிய மேதைகளும் இருக்கிறார்கள், முட்டாள்களும் இருக்கிறார்கள் !
கருணையே வடிவெடுத்தவர்களும் இருக்கிறார்கள், ஈவிரக்கமற்ற கொலைகாரர்களும் இருக்கிறார்கள்!

திருடர்களும் கொடைவள்ளல்களும் கலந்தே அதில் இருக்கிறார்கள்.

ஆண், பெண், வயோதிகர், குழந்தைகள், அத்தனைபேரும் இருக்கிறார்கள்.

காரணம் இத்தனை வகையானவர்களுக்கும் அது இடம் கொடுக்கிறது!
அது எப்படி சாத்தியமாயிற்று?

அதற்குக் காரணம் அதனுள் இருக்கும் ஒவ்வொரு வகையினரும் தங்களுக்கு இணக்கமானவருடன் இணங்கி வாழ்வதையும் முரண்பட்டவர்களுடன் மோதல் வாழ்வு வாழ்வதையும் அது தடுப்பதே இல்லை!

அனைத்து மக்களுக்கும் போதனைகளை வழங்கியதே தவிர அதன்படி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை!

அந்த மூட்டையையே நிராகரிக்கும் மக்கள் குறிப்பிட்ட அளவில் இல்லை!

அதனால் உலகமே அந்த மூட்டைக்குள் அடங்கி விட்டது!

அப்படியானால் ஆன்மிகம் என்பதே ஒரு மோசடியா? ஏமாற்று வேலையா?

அப்படியானால் ஆன்மிகத்துக்கு என்ன வந்தது? ஏன் தவறுகளுக்கு இடம் கொடுக்கிறது?

மக்கள் அனைவரையும் சரியாக வழி நடத்த அதனால் ஏன் முடியவில்லை?

நிச்சயம் அப்படி இல்லை!

அது தவறாக இருந்திருந்தால் பெரிய ஞானிகள் எல்லாம் அதில் இடம் பெற்றிருக்க மாட்டார்களே!

இதற்கான அடிப்படைக்காரணம் ஒன்றே ஒன்றுதான்!

ஆதாவது ஆன்மிகம் என்ற பொதுவான ஒரு விளக்கப்படாத தத்துவத்தின்கீழ் உறுப்புக்களாக உள்ள மதங்களும் மற்றவையும் மக்களுக்கு வழிகாட்டும் அம்சங்களாகச் சொல்லப்பட்ட உயர் தர்ம நெறிகளைக் குப்பையில் வீசவும் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் தயங்கவே இல்லை!

காரணம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஆன்மிகத்தின் பெயரால் எண்ணற்றவர்களை வாழ வைத்தன!

சடங்குகளும் சம்பிரதாயமும்தான் ஆதி முதல் இன்றுவரை என்றும் வட்டார அளவிலும் மக்கள் குழுக்கள் அளவிலும் ஆன்மிகமாக இருந்துள்ளன.

அவற்றின் ஆன்மிகமெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகளும் அந்த நம்பிக்கைகள் ஊட்டிய அச்சத்தைப் போக்க வழிபாட்டு இடங்களில் அதை நிர்வகித்த நிர்வாகிகளும் பூசாரிகளும் இன்னும் அதை நம்பி வாழ்ந்த பலர் சொல்லும் சடங்குகளைச் செய்வதுமே என்பதாகத்தான் இருந்துள்ளன.

அதனால்தான் கடவுள் என்ற பெயரால் தாங்கள் விரும்பிய, பயந்த, பயன்பட்ட அனைத்தையும் உருவங்களாக்கி வழி பட்டார்கள்!

தங்களுக்கும் புரோகிதர்களுக்கும் பிடித்ததையெல்லாம் கடவுளர்களுக்குப் படைத்தார்கள். பலிகளும் நடத்தினார்கள்!

நாளாவட்டத்தில் வட்டார அளவில் இருந்த கடவுள் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் அவை சார்ந்த கோட்பாடுகளும் உலகெங்கும் விரிந்து ஒன்றையொன்று தொடர்புகொள்ளும்படியாக விரிவடைகிறது.

அப்போது இந்த வழிபாடுகள் கடவுள் நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமும் எல்லாப் பிரிவுகளுக்கும் பொருந்தும்படியான கோட்பாடுகளும் தேவைப் பட்டன.
காரணம் மக்கள் காலப் போக்கில் ஒவ்வொன்றுக்கும் காரணம் கேட்கக் கற்றிருந்தார்கள்.

அப்படி எல்லா வட்டாரங்களுக்கும் எல்லாக் கடவுளர்களுக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும்படியாகச் சொல்லப்பட்ட தத்துவங்களே ஆன்மிகம் என்ற பொதுப் பெயரால் வழங்கப் பட்டன!

பின்பு காலப்போக்கில் உலகில் உள்ள கடவுள் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோட்பாடுகளுக்கும் ஆன்மிகம் பொதுப் பெயர் ஆகிவிட்டது.

அந்தப் பெயருக்கு யாரும் எந்தக் கடவுளும் எந்த மதமும் தனிச் சொந்தம் கொண்டாட முடியாது!

இப்படியாகத்தான் ஆன்மிகம் அனைத்து முரண்பட்ட விஷங்களின் பெட்டகமாகவும் கட்டிப்போடும் மூட்டையாகவும் மாறியது!

ஆதாவது கடவுள் வழிபாடுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் தத்துவங்களுக்கும் பின்னால் அவற்றை ஒன்றிணைக்கும் உபாயமாகத் தோன்றிய ஆன்மிகம் என்னும் கோட்பாடு கடைசியில் முதலிடத்துக்கு வந்துவிட்டது!

ஆனால் நடப்பது என்னவோ அந்த மூட்டைக்கு உள்ளிருக்கும் சடங்கு சம்பிரதாயங்களின் ஆதிக்கமே!

ஒரு காலகட்டத்துக்குப் பின்னால் உலக கடவுள் சார்ந்த நம்பிக்கைகள் எல்லாம் சிறு சிறு குழுக்கள் என்ற வட்டத்தைத் தாண்டி மதங்கள் என்ற சில பெரிய வட்டங்களுக்குள் அடங்கிவிட்டன.

ஆனால் அந்தப் பெரிய வட்டங்களுக்கு உள்ளும் முரண்பாடுகளும் மோதல்களும் ஏராளமாக இருப்பதால் அவற்றை ஒன்றாகக் காட்டவும் கட்டவும் ஆன்மிகம் என்ற சாக்கு அவசியப் படுகிறது.

சிறு தெய்வ வழிபாடுகளாக இருந்ததை பெரும் தெய்வங்களின் அவதாரங்களாகச் சித்தரித்தும் , அந்தப் பெரிய தெய்வங்களுக்கு உள்ளும் மனிதரைப்போன்ற உறவு முறை கற்பித்தும் எண்ணற்ற பக்தி முறைகளை புதிது புதிதாக உலக மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள்.

எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு ஒரு சில மதங்களுக்குள் அவற்றின் எண்ணிக்கை சுருக்கப்பட்டாலும் அவற்றுக் கெல்லாம் அடிப்படைகளாக மூட நம்பிக்கைகளே இருந்தன.

ஆனால் வளரும் அறிவியல் சிந்தனைகளுக்கு ஈடுகொடுத்துப் பதில் சொல்ல மூடநம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளால் ஈடுகொடுக்க முடியாத நிலையில் அறிவியலுக்கு இணையாக ஆன்மிகம் என்ற கோட்பாட்டை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது!

அப்படி உருவான ஆன்மிகம் வெறும் மூட நம்பிக்கை களாக இல்லாமல் அறிவியலை உள்வாங்கிக்கொண்டு விளக்கங்கள் கொடுக்கத் துவங்கியது!
அதுமட்டுமல்ல! குறுகிய சடங்கு சம்பிரதாயங்கள், துதிப் பாடல்கள், மந்திரங்கள், நேர்த்திக் கடன்கள், பலிகள் போன்றவற்றை விட்டுவிட்டு மக்களின் மேலான வாழ்க்கைக்கான வழி காட்டுதல்களை வழங்க ஆரம்பித்தது!

அத்தகைய மேலான தத்துவங்களும் வழி காட்டுதல்களும் உலக மக்களுக்கு அவசியமானவையாக இருந்தன. காரணம் மக்கள் ஒரே உலகில் ஒரே இடத்தில் வாழ்ந்தாலும் முரண்பட்ட துன்பமான வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள்! தங்களுக்குள்ளேயே கூட்டம் கூட்டமாக அழித்தொழித்தும் வந்தார்கள்.

அதனால் அன்பே கடவுள் என்று சொன்னபொது, கடவுள் கருணைக் கடல் என்று சொன்னபோது அனைத்து மதங்களுக்கும் அனைத்து மக்களுக்கும் அவை தாரக மந்திரங்களாக ஆயின!

மனிதருக்குள் பகைமையை மறந்து நேசத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் துனபத்தில் உதவிக் கொள்ளவேண்டும் என்றும் ஆன்மிகம் சொன்னபோது அனைத்து மக்களும் அதில் கட்டுண்டார்கள்!

இந்த வகையான நடைமுறைகளின்காரணமாக ஆன்மிகம் என்பது பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டுகின்ற ஒரு வினோத ஏமாற்றும் நிலையை எட்டி இப்போதும் நீடிக்கவும் செய்கிறது!

அறிவே இல்லாத முட்டாள்களில் துவங்கி அற்புத அறிவாற்றல் பெற்ற ஞானிகள், சிந்தனையாளர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் பொருத்தி அவரவர் மனதுக்குப் பட்டதுதான்  ஆன்மிகம் என்பதான மாய, மயக்க நிலையில் ஆன்மிகத்தை வைத்துள்ளார்கள்.

இதில் எந்த ஒருசாராரும் மற்றவர்களின் ஆன்மிகம் ஏன் வேறு படுகிறது என்று சிந்திப்பதே இல்லை!

தாழ்ந்த நிலை ஆன்மிகவாதிகள் உயர்ந்த நிலை ஆன்மிகத்தை அறியாமல் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும் மூட நம்பிக்கைகளை மட்டும் ஆண்மிகமாகக் கருதித் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள்!

உயர்நிலை ஆன்மிகவாதிகளோ தாங்கள் அடித்தட்டு மக்களை விட அதிகமாக ஆன்மிகத்தின் நுணுக்கங்களைப் பேசக் கூடிய தகுதிதங்களுக்கு இருப்பதையே பெருமையாகக் கருதியும் ஆண்டவனுக்கு நெருக்கமான இடத்தில் தாங்கள் இருப்பதாகவும் கருதி ஒருவித சுயநல மயக்கத்தில் வாழ்கிறார்கள்.

ஆக இரு தரப்பாரும் உண்மையான அனைத்துமக்களுக்குமான உயர்தர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதில் தவறுதான் செய்கிறார்கள்!

ஆதாவது உண்மை என்று நினைத்துப் போலிகளாக வாழ்கிறார்கள்!

இது எப்படித் தூய ஆன்மிகம் ஆகும்?

இது எப்படி உலக மக்கள் அனைவரையும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்?

இது எப்படி உலக மக்கள் அனைவரையும் எதிரும் புதிருமாக இல்லாமல் அவர்களை மேலான  வழியில் வழி நடத்தும்?

பொய்யான ஆன்மிக வேடத்திலிருந்து உண்மையான ஆன்மிகத்தின் வழியில் மாறிச் சென்றால் அன்றி வேறு கதிமோட்சம் இல்லை!...


No comments:

Post a Comment