ss

Tuesday, November 18, 2014

அரசியல் ( 72 )

ந்நிய முதலீடு!.....

வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவுக்கு வரவேற்பதை ஒவ்வொரு ஆட்சியாளர்களும் கடமையாகவே செய்து வருகிறார்கள்! 

ஆதாவது அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டில் தொழில் துவங்குவதன்மூலம் இன் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பும் பொருளாதாரமும் பெருகும் என்பது அவர்கள் மக்களுக்குச் சொல்லும் காரணம் ஆகும்!

அதுவே சுத்தப் பித்தலாட்டம் ஆகும்!

அன்னியர் அளிக்கும் வேலை வாய்ப்புகளைவிட மறைமுகமாகப் பறிக்கும் வேலைவாய்ப்புகள்தான் இரட்டிப்பாக இருக்கும்.

காரணம் அவர்களின் முதலீட்டுக்குத் தக்க அளவு தொழிலாளர் எண்ணிக்கை இருக்காது. காரணம் தொழில்நுட்பத்துக்கும் ஆட்குறைப்புக்கும்தான் முன்னுரிமை இருக்கும்.

ஆனால் சுதேசி மூலதனம் மக்களின் வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்! (இப்போது அதுவும் கேள்விக்குறி ஆகிவிட்டது வேறு விஷயம்) 

அந்நிய நாட்டவர்கள் ஏன் தங்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கும் மேலாக  நம் நாட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்?

ஏன் நமது நாட்டவர் நமது நாட்டில் முதலீடு செய்வதற்கும் மேலாக அயல் நாடுகளில் முதலீடு செய்வது இல்லை? 


                    



தமிழ் நாட்டு மக்கள் தொகையில் கால்பங்குகூட இல்லாத சிறிய நாடுகளெல்லாம் நம் நாட்டில் முதலீடு செய்வது எதனால்? 

நூற்றி இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம்மால் அது முடியாமல் போனது எதனால்?

நமது நாட்டில் முதலீடு செய்வது வெளிநாடுகளுக்குப் பெருமை என்றால் நமக்கு அது இழிவுதானே?

அத்தகைய இழிவை நாம் ஏன் இரு கை நீட்டி வரவேற்க வேண்டும்?

வெளிநாட்டவர் மூலதனம் என்கின்ற பெயரால் வங்கிக் கணக்கை மட்டும்தான் நமது நாட்டுக்குக் கொண்டு வருகிறார்களே தவிர வேறு என்ன தங்கள் வளங்களை இங்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள்?

ஆனால் அதற்கு ஈடாக நமது இயற்கை வளங்களைக் கொண்டு , நமது மனித வளத்தைக் கொண்டு உருவாகும் தொழில் உற்பத்தி சாதனங்கள் மூலமாக எண்ணற்ற செல்வத்தைக் கொண்டு செல்கிறார்கள்! 

அவர்கள் கொண்டுவருவது வங்கி இருப்பை மட்டுமே!

ஆனால் கொண்டு செல்வது நமது வளங்கொழிக்கும் செல்வங்களை! 

காரணம் வர்த்தகத்தில் விலை மதிப்பைத் தீர்மானிக்கும் உரிமை கையேந்தும் நம்போன்ற நாடுகளுக்குக் கிடையாது! 

ஒரு நாடு சிறப்பான நிலையில் வல்லமையுடன் விளங்கவேண்டும் என்றால் அதன் வளங்கள் வெளியில் செல்வதைவிட வெளியில் இருந்து உள்ளே வரும் வளங்கள் அதிகமாக இருக்க வேண்டும். 

அல்லது தங்கள் சொந்த இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் பயன்படுத்தி சொந்த வலிமையை சொந்தக் காலில் உருவாக்க வேண்டும். 

அப்படியில்லாமல் உள்ளே வரும் வளங்கள் குறைவு, ஆனால் அதற்கு விலையாக வெளியே செல்வது அதிகம் என்பது மிக மோசமான அவமானகரமான நிலை ஆகும்! 

அத்தகைய அவமானத்தைத்தான் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் பெரும் விலை கொடுத்து இந்திய வளங்களையும் மக்களையும் அடகு வைத்து வாங்குகிறார்கள்! 

சிலர் நமது மக்கள் தொகையை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக முன்வைக்கிறார்கள்! 

அது வடிகட்டிய முட்டாள்தனமான, ஏமாளித் தனமான கருத்து ஆகும்! 

காரணம் இவ்வளவு மக்கள் தொகைக்கும் எந்த நாடும் நமக்கு இலவசமாக எதையும் வழங்கவில்லை! 

நமது செல்வங்களைக் கொள்ளை அடிப்பதன் மூலமாகவும் கடனுக்கு வட்டியாகவும் அசலாகவும் அவற்றுக்கு நம்மூலம்  கிடைக்கும் வருவாய்தான் அதிகம் என்பதை இனியாவது உணரவேண்டும்!....

நமது இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் அறிவுத் தரத்தையும் பயன்படுத்தி சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டால் உலகின் முன்னனி நாடாக மாற முடியும்! 

அப்படி இல்லாமல் அந்நியன் போடும் எலும்புத் துண்டுகளுக்கு நத்திக் கொண்டிருப்பவர்களை மக்கள் நம்பி இருக்கும் வரை நாடு கேடுகேட்டுத்தான் போகும்! 

போக விடலாமா?....

நம்மை ஆண்ட அந்நியனை விட ஆயிரம் மடங்கு மோசமான உள்நாட்டு அந்நியர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றால் தவிர நிச்சயம் நமது தலைகுனிவு தலைநிமிர்வாக மாறப்போவது இல்லை!...

No comments:

Post a Comment