ss

Saturday, October 17, 2015

எனது மொழி ( 194 )

பூமிக்கு வெளியே!...

பூமிக்கு வெளியே தகவல் தொடர்புக்காகவும் மற்றும் பல ஆராய்ச்சிகளுகாகவும் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களும் ராக்கெட்டுகளும் ஆராய்ச்சிக் கருவிகளும் என நிறுத்திக் கொள்வதே நல்லது.

காரணம் அதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கும் இழக்கும் இழப்புகளுக்கும் கூடுதலாகப் பயன் கிடைக்கிறது.
ஆனால் அதற்கும் அப்பால் சந்திரன், செவ்வாய் , பிற கோள்கள், அண்டவெளி என எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக பூமியின் இயற்கைக் கட்டமைப்பும் பொருள் வளங்களும் இழப்பதற்கு ஈடாகப் பெரிய பயன் இருக்கப் போவதில்லை!

ஆனால் பூமியை மனிதன் வாழப் பயனற்றதாக்கும் திசையில் அது பெரும் பங்கு வகிக்கும்!

அதனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அண்டம் பற்றிய விபரங்களைக் கொண்டு வாழ்வதும் அந்த விபரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி வாழ்வதும் மட்டுமே  போதுமானது!

-------------------------------------------------------------------------------------------------------------
இதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டபோது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நான் சொன்ன பதில்கள்:
---------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நண்பரின் கருத்து:

வேறு கிரகங்களைப் பற்றி வெறும் கோட்பாடுகளின் அடிப்படையில் கணக்குப் போட்டு அறிவிக்கமுடியுமே தவிர அது 100% உண்மையாக இருக்கப் போவதில்லை.

எனது பதில்:

அப்படியே உண்மையாக இருந்தாலும் அதைப் பற்றி அறிந்துகொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அதற்கும் அப்பால் அங்கு செல்லவேண்டும் அதையும் நமது சொத்தாக பட்டா போட வேண்டும் என்று நினைத்தால் கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முயன்ற கதைதான் ஆகும்! சித்திரம் கிடைக்காது. ஆனால் கண்கள் நிச்சயம் போய்விடும்!
---------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நண்பர்:

எதிர்காலத்தில் அவை வாழ்விடமாகவோ, தாதுப்பொருட்கள் நல்கும் சுரங்கமாகவோ மாறலாம்\\\\\\

நான்:

சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பார்கள். ஆனால் சுமைகூலி முன்னூறு பணமாக இருக்கும் இது பயனுள்ளதாக இருக்காது. ஆனால் அதற்கான முயற்சிகளில் பூமியின் இயற்கை வளங்களை பலி வாங்கி விடும்!. சிந்திக்க வேண்டும்!

பூமியில் ஓரிடத்திலிருந்து இன்னொர் இடத்துக்குப் போய்வர ஆகும் செலவு ஆயிரக் கணக்கில் அல்லது லட்சக் கணக்கில் மட்டுமே! ஆனால் பூமியில் இருந்து விண்வெளிக்குப் போய்வர ஆகும் செலவு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகள். அவ்வளவு துகையும் எதற்காகச் செலவிடப்படுகின்றன? விண்வெளிப் பயணத்துக்கான கருவிகள் தயாரிப்புக்கும் அவை தொடர்பான இதர வேலைகளுக்கும் ஆகும்! அந்த வேலைகளில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஏதாவது ஒன்று இருக்கிறதா? விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் பல நூறு அல்லது ஆயிரம் டன் கணக்கில் பூமியில் இயற்கையைப் பாழ்படுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்படி இல்லை என்றால் இயற்கையைப் பாழ்படுத்தாத புஷ்பக விமானம் ஏதாவது விண்வெளிப் பயணத்துக்கென கண்டுபிடிக்கப்பட வேண்டும்!
--------------------------------------------------------------------------------------------------------------

  பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் செய்யப்படும் எந்த ஆய்வும் பயனுள்ளதே! காரணம் அதற்காக நாம் இழப்பதைவிட அடையும் பயன்கள் கூடுதலானவை. காரணம் இப்போதுள்ள விண்வெளிக் கலங்களின் வேகமே அதற்குப் போதுமானது. தொழில் நுட்பமும் போதுமானது. மனித ஆயுளும் போதுமானது. ஆனால் அயல் கிரகங்களுக்கோ அல்லது அயல் நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்களுக்கோ பயணிக்கும் திட்டங்களுக்கு இப்போதுள்ள விண்கல வேகங்களோ மனித ஆயுளோ தொழில் நுட்பமோ போதுமானவை அல்ல! அத்தகைய தொழில் நுட்பங்களைக் கண்டறிவதற்கான முயற்சி அல்லது பயணிக்கும் முயற்சி பூமியின் இயற்கைச் சூழல்களை பாதிக்குமளவு இருக்கும் என்பதே எனது அடிப்படைக் கருத்து! ஆனால் அவற்றால் கிடைக்கப்போகும் பயன் என்பது உத்திரவாதமானது அல்ல
------------------------------------------------------------------------------------------------------------

அறிவியலால் அநேக சாதனைகள் புரியப்பட்டிருந்தாலும் இனியும் புரியப்படும் என்பது உண்மை என்றாலும் அதனால் என்றென்றும் முடியாதவையும் எண்ணற்றவை உள்ளன! உதாரணத்துக்கு மனித ஆயுள் நீட்டிப்பைச் சொல்லலாம். மனிதனின் ஆயுள் அதிக பட்சம் நூறாண்டுகளுக்கு மேல் நீட்டுவது கடினம் என்கின்ற நிலையில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயண நேரம் பிடிக்கும் ஆய்வுகளால் என்ன பயன் இருக்க முடியும்?

பூமிக்கு மிக அருகில் நாலரை ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரமான பிராக்சிமா சென்டாரி என்கிற விண்மீனுக்கு இப்போதுள்ள நமது விண்வெளி வாகனத்தின்மூலம் சென்றால் தோராயமாக அறுபதாயிரம் வருடங்கள் ஆகலாம். அதற்கு அப்பால் கோள்கள் இருப்பதாக நினைக்கும் விண்மீன்கள் பலமடங்கு தூரத்தில் இருப்பவை!...அங்கெல்லாம் கற்பனை வாகனத்தில் தவிர நிஜ வாகனத்தில் பயணிக்க முடியுமா? அதற்கான ஆய்வுகளுக்காக பூமியின் வளங்கள் சிதைக்கப்பட வேண்டுமா?...
--------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:
இந்த சிந்தனை நாங்குனேரிக்கு வெளியே பெண் எடுப்பதை எதிர்ப்பதற்கும், கடல் கடந்து வியாபாரம் செய்வதை எதிர்ப்பதற்கும், கொலம்பசின் வாயாஜின் பலனை அனுபவிப்பதை நிராகரிப்பதற்கும் சமமாகவே படுகிறது.

எனது பதில்:

கேள்வியையும் கேட்கப்படுவதற்கான காரணங்களையும் பற்றி யோசித்தீர்களா? நாங்குநேரிக்கும் கூடங்குளத்துக்கும் உள்ள தூரத்துக்கும் மில்கிவே என்று சொல்லப்படுகிற பால்வெளி மண்டலத்துக்கும் அண்ட்ரோமிடா காலக்சிக்கும் உள்ள தூரத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? தெரியாதென்றால் தெரிந்துகொள முயலுங்கள்! தெரியும் என்றால் விளக்கமாகச் சொல்லுங்கள்! அண்டவெளி என்பது அண்டை வீடு அல்ல!

கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்றால் அப்படிக் கடப்பதற்குத் தேவையான வசதிகள் தோன்றிவிட்டன. அப்படிப் பட்ட வசதிகளைத் தோற்றுவிக்கப் பெரிய அளவில் இயற்கைக் கட்டமைப்புகளைச் சீர்குலைக்கவில்லை. ஆனால் அண்டத்தில் சூரிய மண்டலத்தைத் தாண்டவோ அல்லது சூரிய மண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள கோள்களில் குடியேறவோ விரும்பி அதற்காகச் செய்யப்படும் முயற்சிகளுக்காக இயற்கையை பெருமளவில் சீர்குலைக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதே புவி வெப்பமாதலின் பாதிப்புகளை உணரத்துவங்கியுள்ள நிலையில் அதை மேலும் விரைவு படுத்தவே இந்த ஆய்வுகள் பயன்படும். அதனால் மனிதனின் அறிவியல் ஆக்க ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் வளரலாம். அழிவுப் பாதை நல்லதல்ல! பதிவை நன்றாகப் படிக்கவும்!
==============================================================No comments:

Post a Comment