ss

Friday, August 19, 2016

எனது மொழி ( 222 )

ஒலிம்பிக் பெருமை!

ஒலிம்பிக்கில் ஓரிரு பதக்கங்களை வென்றது வென்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பெருமையே!... அதே நேரம் சில விபரங்களையும் எண்ணிப்பார்ப்பது அவசியம்..இதை நமது நாட்டுக்கே கிடைத்த பெருமையாக நினைப்பது சரியா? அப்படியானால் பஞ்சத்தால் அடிபட்ட சின்னஞ்சிறு நாடுகள்கூட வாங்கும் அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாம் வாங்கமுடியாமல் போவது சிறுமை அல்லவா? இதே வீராங்கனைகள் ஒரு சதவிகிதம் பின்தங்கிஇருந்தால்கூட இந்தப் பெருமை அவர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்காது! அந்த ஒரு சதவிகிதத்தை நம்பித்தான் நமது தலை நிமிர்வும் தலைகுணிவும் இருக்கிறதா? அந்த ஒரு சதவிகிதத்தைத் தவற விட்டிருந்தால் அவர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்களா? பாராட்டுக்களாலும் பணத்தாலும் குளிப்பாட்டப்பட்டு இருப்பார்களா?

இந்த ஆரவாரம் எல்லாம் நமது பலவீனத்தை மக்களிடமிருந்து மறைக்கும் அவமானகரமான செயல்கள் ஆகும். அந்த வீராங்கனைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தாமல் இருந்திருந்தாலும் இதே மரியாதை அவர்களுடைய முயற்சிக்குக் கிடைத்திருக்கும் என்றால் நமது ஆரவாரம் நியாயமே! ஆனால் அலட்சியப்படுத்தப்பட்டு இருப்பார்கள்! அதனால் ஒருநூலிழையில் புகழ்ச்சியாய் மாறிய இகழ்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.
உண்மையாகவே நமது பெருமை வாங்கும் பதக்கங்களில் இல்லை! நமது மக்களின் வாழ்வில் விளையாட்டும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதிலும் அதனால் எல்லா விளையாட்டுக்களிலும் எண்ணற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதிலும் அந்த அளவு பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றுவதிலும்தான் பெருமை அடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எத்தியோப்பியாவையும் கிரேனடாவையும் விடப் பின்தங்கியிருக்கிறோம் என்று கவலைப்படுவதே நியாயம்!

Friday, August 12, 2016

எனது மொழி ( 221 )

பாம்பு கற்பிக்கும்  பாடம்! 

ஒரு பம்புகூட தனது உடம்பின் மேல்பாகம் பயனற்றுப் போகும்போது, அது தனது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக  ஆகும்போது சட்டையாக உரித்து ஒதுக்கிவிட்டு புத்துணர்வுடன் புது வாழ்வைத் தொடங்கிவிடுகிறது.

தான் உரித்து விட்ட சட்டையைத் திரும்பிக்கூடப்  பார்ப்பது  இல்லை.

ஆனால் மனிதராகிய  நாமோ உறவு,  சொத்து, சுகம், பாசப்பிணைப்பு போன்ற மேல்சட்டைகள்   தாங்க முடியாத சுமைகளாகிப்போன பின்னாலும்   அவற்றைக் கைவிட  மனமில்லாமல் சுமந்துகொண்டு துன்பங்களை வளர்த்துக்கொள்கிறோம்.

 வேண்டாத சுமைகளைக் கைகழுவி  விட்டு இருக்கும் வாய்ப்புகளுடன், இருக்கும் உறவுகளுடன், புதுவாழ்வு வாழ்ந்தாலென்ன?

அந்த நிலையில்  வாழும் மற்றவர்கள்  மனிதரே  இல்லையா?

போலியான துன்ப வாழ்வினால் அடையும் நன்மைகள் என்ன?Tuesday, August 9, 2016

ஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )

மூலம்

நமது புலன்களாலும் அறிவாலும் உணரக்கூடிய மற்றும் உணர முடியாத நம்மைச் சுற்றியும் அண்டவெளியில் உள்ள அத்தனையும் அணுவைவிடச் சிறிய மற்றும் அணுக்களால் ஆனவையே!

அவற்றின் விதவிதமான சேர்மானமும் சிதைவுமே நாம் காணும் மற்றும் காண முடியாத அத்தனை பொருட்களும் இயக்கங்களும் ஆகும். இந்த இயக்க மகா சமுத்திரத்தில் புலனுக்கே எட்டாத சின்னஞ்சிறிய ஒன்றுதான் நாம் வாழும் உலகமும் அதில் அடங்கியுள்ள அத்தனையும் ஆகும்.

இதில் ஒரு துரும்பான மனிதனும் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒரு நுண்ணிய அங்கமே!

ஜடப் பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் இயக்கங்களுக்கும் அவற்றின் ஆழமான அங்கமான அணுக்களுக்கு இடையே நடக்கும் இயக்கங்களுக்கும் அப்பால் அவற்றின் ஒரு ஒழுங்கமைந்த இரண்டாம் சுற்று இயக்கமான உயிரியல் இயக்கமும் அண்டத்தில் நிலவுகிறது.

அந்த உயிரியல் இயக்கக் கூறின் ஒரு வடிவம்தான் மனிதன்.

அவனுக்குக் கிடைத்த சிறப்பு வாய்ப்புதான் பரிணாம வளர்ச்சி.

அதன்காரணமாக சிந்தனைத் திறனும் திட்டமிடலும் இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவும் ஆகும்.

அந்த அறிவைக்கொண்டு அனைத்தையும் ஆராயும் வல்லமை கிடைத்தது.அதில் பிறந்த ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் மூலம் பற்றிய சிந்தனை.மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை இதுதான் மூலம் அல்லது படைப்பாளி என்று எண்ணற்ற நம்பிக்கைகளும் எண்ணற்ற தத்துவங்களும் நிலவுகின்றன.

ஆனால் கிட்டத்தட்ட அவை அனைத்துமே இந்த அண்டத்தில் நமது சூரியமண்டலத்தில் நமது பூமியில் மனிதர்களாகிய நமது மூலையில் உதித்த கற்பனை வடிவங்களே!

அந்தக் கற்பனை வடிவங்களே கடவுள்களாகவும் அவற்றை வலியுறுத்தும் தத்துவங்களே மதங்களாகவும் இன்றளவும் விளங்குகின்றன.

அவை  சொல்லும் ஒவ்வொன்றும் மனித விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டவைதானே தவிர உண்மையைப் பிரதி பலிப்பவையாக இல்லை.

காரணம் அவை நாம் காணும் மற்றும் காண முடியாத அனைத்தும் எதோ ஒன்றால் படைக்கப்பட்டவை என்றே சொல்வதோடு. இதுதான் படைத்தது என்றும் சொல்கின்றன.

ஒருபடி மேலேபோய் மனித மனமும் அறிவும் கொண்ட யாரு ஒரு தேவன் படைத்தான் என்றும் சொல்கின்றன.

மனித  அறிவுக்கு எட்டிய அதிகபட்ச எல்லையைவிட கணக்கிட முடியாத அளவு துவக்கமும் முடிவும் இல்லாத இந்த அண்டத்தை அதில் புலப்படாத ஒரு புள்ளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பவசத்தால் உருவான மனிதன் இப்படித்தான் படைக்கப்பட்டது இன்னார்தான் படைத்தார்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை!

அதைவிட  வேடிக்கை பெரிய பெரிய தத்துவ வாதிகளும் சிந்தனையாளர்களும் அதை மறுக்க முடியாத உண்மைகளாக நம்புவதும் நம்பவைப்பதும் ஆகும்.

அவர்கள்  எவரும் ஒன்றைமட்டும் நினைக்கத் தவறுகிறார்கள்.

ஆதாவது எல்லாவற்றையும் ஒரு சக்தி படைத்தது என்றால் அந்த சக்தியை எது படைத்தது, , எங்கிருந்து படைத்தது, அதை யார் படைத்தார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திப்பதே இல்லை!

அதற்கு விடை கொடுத்தால் அல்லாமல் படைப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்வது எப்படி அறிவுடைமை ஆகும்?

ஆனால் நம்பத் தகுந்த வேறொரு கண்ணோட்டமும் இருக்கிறது.

அது படைப்பு என்று சொல்லப்படும் அனைத்தையும் இயக்கம் என்று சொல்கிறது.

நம்மையும் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அதற்கு உள்ளும் புறமும் நடக்கும் அத்தனையையும் பேரியக்கமாகவும் அதன் உள்ளுறுப்பான சிறு இயக்கங்களாகவும் பார்க்கிறது.

அதில்  படைப்பது என்ற செயல் இல்லை. படைக்கப்படும் எதுவும் இலை.

எல்லாமே  என்றென்றும் இருந்துவரும் இயக்கங்களே!

அந்த இயக்க வெள்ளத்தில் தோற்றமும் மறைவும் இடைவிடாமல் நடக்கின்றன.

ஆனால் வடிவங்கள் மட்டும் குறுகிய மற்றும் நீண்டகாலத்துக்கு அப்படியே இருப்பதுபோல் தோன்றுகின்றன.

அனாலும் அதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிப்பட்ட  மாற்றங்களுக்கு மனிதனும் விலக்கு அல்ல!

ஒட்டு மொத்த இயக்கத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைப்போன்றே வாழ்ந்துவரும் சக மனிதர்களுடன் மோதல் இல்லாமல் இணக்கமாக வாழ்வதும் அதற்கான தத்துவங்களை வகுத்து அதன்படி வாழ்வதுமே மனித வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

அதைத்தான் உண்மையான ஆன்மிகமாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.

ஆனால்  நடந்தது வேறு

பரிணாம வளர்சியின் காரணமாக மனித வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு என்பது பிற உயிரினங்களைப்போல அல்லாமல் பல சிக்கலான படித்த தரங்களாக விளங்குகிறது.

இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போன்றவை என்பதை உள்ளபடியே உணராமல் ஒவ்வொருவரும் பிறருடைய துன்பங்களைப் பற்றி நினைக்காமல் தான்மட்டும் இன்பமான உலகில் வாழவேண்டும் என்று போராடும் போர்க்களமாக வாழ்வை ஆக்கி விட்டார்கள்.

 அதனால் துன்பங்களில் இருந்து விடுபட்டு தங்களால் விரும்பப்படும் இன்பத்தை எப்படி அடையலாம் என்பதை தங்கள் மனம்போனபடிஎல்லாம் சிந்திக்கத் துவங்கியபோதுதான் பேரியக்கமாக நினைப்பதற்குப் பதிலாக அனைத்தையும் படைத்ததாக நம்பப்பட்ட பரம்பொருள் அல்லது இறை களமிறக்கப்படுகிறது.

அதற்கு எண்ணற்ற வேடங்கள் இடப்பட்டு எண்ணற்ற தத்துவங்களுடன் மக்களைத் துன்பங்களில்  இருந்து விடுவித்து சுவர்கத்துக்கு அனுப்பும் பணி கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை அவை மக்களில்  ஒருவரைக்கூட  சுவர்கத்துக்கு  அழைத்துச்  செல்லவும்  இல்லை. வாழ்வில்  விரும்பிய  இன்பத்தைக் கொடுக்கவும்  இல்லை.

இந்தப்  பொய்மான்  வேட்டையை  இன்றளவும்  ஆன்மிகம் என்ற பெயரால் மதங்களின் பெயரால்  நம்பிக்கொண்டும்  நம்பவைத்துக்கொண்டும்  இருக்கிறோம்.

அறிவாற்றல் மிக்க சிந்தனைத் திறன் மிக்க யார் இதை  மக்களின் மேலான  வாழ்க்கைக்கு  உதவக்கூடிய  உண்மையான ஆன்மிகம்  என்று ஏற்றுக்கொள்ள  முடியும்?

மாறாக படைப்புக்கொள்கையை  நிராகரித்து அனைத்தையும் இயக்கமாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு  மனிதனும்  தான் விரும்பியதை  அடைய இல்லாத யாரையோ  எதையோ  நம்பி வாழ்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய முறையான கடமைகளே வாழ்வின் பணியாக இருந்திருக்கும்.

அதை  வகுத்துக் கொடுக்கும்  திட்டவட்டமான  பாதைகளே தத்துவங்களாக இருந்திருக்கும். ஒட்டுமொத்த  மனித இனத்தின் இணக்கமான  வாழ்வுமுறையே உண்மையான  ஆன்மிகமாக இருந்திருக்கும்.

அந்த உண்மையான  ஆன்மிகத்தின் மகத்துவம்  உணரப்படும்  வரை  ஆத்திகர்  என்றும்  நாத்திகர்  என்றும்  கடவுள் என்றும்  கடவுள் மறுப்பு என்றும்  கூக்குரல் எழுப்பிக்கொண்டு இல்லாத ஒன்றுக்காகப் போராடி  மடிவதே வாழ்க்கையாக இருக்கும்!
Monday, August 8, 2016

எனது மொழி ( 220 )மனச்சாட்சி...

மனச்சாட்சி மனச்சாட்சி என்கிறார்களே! அதன் உண்மையான பொருள் என்ன? மனச்சாட்சி என்பது பொதுவானதா? அல்லது தனியானதா? ஒவ்வொருவருக்கும் அறிவு வேறுபடுவதைப் போலவே மனச் சாட்சியும் வேறுபடுகிறது. அதனால்தான் நல்லவையும் கெட்டவையுமாக அனைத்தும் நடக்கிறது.. ஒன்று அறிவுக்குத் தவறென்று பட்டாலும் அதைச் செய்ய பல்வேறு சாக்குகளுடன் அனுமதிப்பது ஒருவரின் மனச் சாட்சியே! அதுபோலவே என்ன துன்ப துயரங்கள் வந்தாலும் மனதாலும் தீயவற்றைச் செய்ய நினைக்காமல் இருக்கச் செய்வதும் ஒருவருடைய மனச் சாட்சியே!.. இதில் பொது மனச்சாட்சிக்கு இடம் எங்கே?...