லட்சுமி
- குறும்பட விமர்சனம்.....
கடந்த சில நாட்களாக லட்சுமி என்கிற குறும்படம் சமூக வலை தளங்களில் அதிகம் பேசப்படும் விசயம் ஆகிவிட்டது!
இயந்திரகதியில் சுவையின்றிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு குடும்ப வாழ்வில் மனைவி எதிர்பார்க்கும் எதுவும் கணவனிடமிருந்து கிடைக்கவில்லை.
ஊர் உலகத்துக்காகவும் வாழ்ந்து தீரவேண்டும் என்பதற்காகவும் வாழும் ஒரு வாழ்க்கை..
இதில் கணவனுக்கு வரும் ஒரு போன் கால் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்பதே காரணம்.
அதற்காக அவள் பெரிய ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
காரணம் கடந்த காலத்தில் அவளும் அப்படிப்பட்ட தவற்றைச் செய்துவருவதே அதற்குக் காரணம்.
அதற்காக அவளோ அவனோ கற்பித்துக்கொண்ட காரணங்கள் சரியாக இருந்திருந்தால் இருவரும் தங்கள் வழியில் தொடர்ந்து நடந்திருக்கவேண்டும்.
ஆனால் அவள் மீண்டும் பழையவளாகத் தன்னை மாற்றிக்கொள்ள அவள் விரும்புமளவு என்ன மாற்றம் நடந்தது?
கணவனும் அதேமாதிரி நடக்கிறான் என்று தெரிய வந்தது கூடுதல் துன்பம்தானே தவிர ஆறுதலான மாற்றம் அல்லவே!
அதுதான் காரணம் என்றால் அவனுடைய தவறு தெரியாமல் இருந்திருந்தால் அவள் தொடர்ந்து தவறு செய்துகொண்டிருந்திருப்பாள்தானே?..
ஆக அவன் இந்த விசயத்தில் தவறு செய்யாமல் இருக்கிறான் என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே தவறு என்று சொல்லப்படும் அவளின் நியாயத்தைச் செய்யத் துவங்கி விட்டாள்.
உண்மையில் கூடா ஒழுக்கத்தை முதலில் துவங்கியவள் அவளே!
அதனால் ஆணின் தவறுக்குப் பதிலடியாக பெண் நடந்துகொண்டாள் என்று சொல்வதைவிட இந்தப் படத்தில் ஆணுக்கு முன்மாதிரியாகப் பெண் நடந்துகொண்டிருகிறாள்!
அதைவிட ஆணைவிடப் பெண் ஒழுக்கக் கேட்டில் முன்னேறி விட்டாள் என்று படைப்பாளி சொல்கிறார் என்றே சொல்லலாம்.
ஆக தவறுகளில் ஆணுக்குப் பெண் இணையானவள் என்பதுபோய் ஆணுக்கு முன்மாதிரியாக நடப்பதுதான் முன்னேற்றமா?
இந்தப் படத்தின்மூலம் என்ன சொல்ல நினைக்கிறார்?
குடும்பவாழ்வில் திருப்தி இல்லையென்றால் கணவனோ மனைவியோ விருப்பம்போல் தனியாக ஒரு வாழ்க்கை வாழலாம் என்கிறாரா?
அது சரி என்றால் அவள் தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதாக ஏன் சொல்கிறார்?
இந்த மாதிரி திசை மாறும் வாழ்க்கை சரியல்ல என்று சொல்ல நினைக்கிறாரா?
அப்படி நினைத்திருந்தால் ஆண் பெண் இருவரின் நடத்தைக்கு எதிராக ஏதேனும் ஒரு முறையில் ஏதேனும் சொல்லியிருக்க வேண்டுமே!
ஆதாவது நல்ல குடும்ப வாழ்வைச் சீர்குலைக்கும் சமூகச் சூழலுக்கு எதிராக என்ன செய்யவேண்டும் , எந்தத் திசையில் மாற்றம் வேண்டும் தீர்வு வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டுமே!
ஒருவனுக்கு ஒருத்தி என்கிற அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறையின் நியாயத்தையோ அவசியத்தையோ சில வார்த்தைகளாவது சொல்லியிருக்க வேண்டுமே!
அப்படியும் இல்லையே!
ஆக என்னதான் நினைக்கிறார்!
ஆணோ பெண்ணோ சமூக நிர்பந்தத்தால் குடும்பமாக வாழ்ந்தாலும் திருப்திப்படும் விதமாக யாருடனும் எப்படியும் வாழலாம் என்கின்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறாரா?
இந்தக் கருத்து சமீப காலமாக வலுப்பெற்று வருவதாகவே நினைக்கிறேன்.
ஆதாவது ஆணுக்குப் பெண் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைப்போல இப்போது பெண் அவ்வளவு மலிவானவளாக இல்லை!
விரும்பக்கூடிய திருமண உறவு அவ்வளவு எளிதாகவோ நம்பத்தகுந்ததாகவோ இல்லை.
ஆண்கள் தன்னுடன் வாழப் பெண்ணே கிடைக்காத நிலையிலும் பெண் கிடைப்பது அரிதாகிவிட்ட இந்தக் காலத்தில் தனது கனவுலகின் துணைவனாகத திருப்திப் படும் ஒருவனைத் தேர்ந்தெடுக்கப் பெண்ணுக்கு வரம்பின்றிக் காலதாமதம் ஆகும் நிலையிலும் இருவருக்கும் பொதுவான ஒரு பொதுப் பிரச்சினை தலை தூக்குகிறது!
ஆதாவது காலா காலத்தில் திருமணம் ஆகாத நிலையில் தங்களின் பாலுணர்வை அதற்கு எதிராக நீண்டகாலம் கட்டுப்படுத்தி வாழ அவசியம் ஏற்பட்டுள்ளது!
அதை முறையான வழியில் தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் குறைந்த நிலையில் முறையற்ற கள்ள உறவை நியாயப் படுத்தும் அளவு வளர்சியடைந்துள்ளதாகவே நினைக்கிறேன்.
எய்ட்ஸ் பூதம் உலகில் பெரிதாக அச்சுறுத்துவதால் விலைமாதர் உறவும் விரும்பத் தக்கதாக இல்லை.
திருமணம் ஆகாத மற்றும் ஆன, பாலுணர்வுத் தேவையுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் உணர்வுப் போராட்டத்துக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்கிற சமூக அவசியம் முன்னுக்கு வந்ததன் விளைவே இந்த மாதிரி சிந்தனையோட்டம் என்று நினைக்கிறேன்.
ஒருக்கால் எண்ணற்றவர்களின் விருப்பமாக இருந்து வெளிப்படுத்தத் துணிவின்றி இருந்து இப்போதுதான் மடை திறக்கப்பட்டிருந்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கப் போகிறது!
ஆதாவது கட்டுப்பாடற்ற உறவுகள் அங்கீகரிக்கப்படும்போது குடும்ப உறவுகள் சிதைந்துபோவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
குடும்ப உறவுகள் சிதைந்து போவது வரலாற்றுத் தேவை என்றால் அதற்கு மாற்றாக அதற்கும் மேலான அதே சமயம் இருபாலருடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாத புதுப் பண்பாடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கான ஒரு முன்மொழிவை ஒரு படைப்பாளி செய்வது பாராட்டத் தக்கது!
அப்படியிலாமல் வெறும் பாலுணர்வை மட்டும் அளவுகோலாக வைத்துக் குடும்ப உறவுகளைச் சீர்குலைத்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.
பெண் மீண்டும் அடிமை ஆவாள்!
இன்று சொத்துரிமை என்பது வாழ்வில் முக்கியப் பங்கு வகிகிறது.
ஆண்கள் தங்களின் குழந்தைகளைக்கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஆபத்து உருவானால் பெண்களின் நிலை என்ன ஆகும்?
ஆண்கள் தங்களின் பிள்ளைகளைக்கூட தங்களுடையது அல்ல என்று அபாண்டமாகச் சொல்லி ஓடி விடலாம்.
பெண்களால் முடியுமா?
பிள்ளைகளின் வளர்ப்பு, கல்வி, எதிர்காலம் என்ன ஆகும்?
யாரைச் சார்ந்து பெண் வாழ்கிறாளோ அந்த ஆணுக்கு அடிமையாவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்!
இதுதான் பண்பாட்டு வளர்ச்சியா?
ஆணுக்குப் பெண் இணையானவள் என்பதே சமூக நீதி! அதைத்தான் பாரதி தனது பாடல்கள் மூலம் முரசறைந்து முழங்கினார்!
அதை, தான் வலியுறுத்தும் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு ஆதரவாகப் பயன் படுத்தியது கேவலமான இழிவாகும்!
மனைவியை பாலுறவுக்கு மட்டுமே கணவன் நாடினான் என்பதை இவ்வளவு பச்சையாக அருவெறுப்பாக, ஆபாசமாகத்தான் காட்ட வேண்டுமா? ஒரு கலைஞனால் வேறுவகையில் நயமாகச் சொல்ல முடியாதா?
ஆக இளம் வயதுப் பிள்ளைகளுக்கெல்லாம் பாலியல் வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது தவிர அந்த ஆபாசத்தால் எதை உணர்த்துகிறார்?
ஆதாவது அவள் தனது பாதையிலிருந்து திரும்பியிருக்கலாம்.
இந்தப் படத்தைப் போன்ற வக்கிரங்களால் அந்தப் பாதையில் நடக்கத் துணியும் எத்தனை பேர் அப்படித் திரும்புவார்கள்?
பண்பாடு என்பது நினைத்தால் அடித்துவிட்டு எழுதப்படும் கிறுக்கெழுத்து அல்ல!
மொத்தத்தில் சொல்லப்போனால் ஆணாதிக்க மனப்பான்மைக்கு வலு சேர்க்கும் விதத்தில் பெண்ணுரிமை அல்லது பெண் சமத்துவம் என்கின்ற பெயரால் முன்வைக்கப்பட்ட பண்பாட்டுச் சீரழிவுச் சித்திரமே இது!
உண்மையில் இது பெண்ணை அடிமையாக்கும்!
முடிந்தால் காரித்துப்பலாம்!