சித்தர்களைப் பற்றிய சிந்தனைகள்
சித்தர்கள் மருத்துவராக, மொழி வல்லுனர்களாக, புலவர்களாக, தத்துவ ஆசான்களாக, அறிவியலாலர்களாக, இன்னும் பலவிதமாகத் தங்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் ஆராய்ச்சியால் மூலிகைகளில் இருந்து அல்லது வேறு பொருட்களைக்கொண்டு தங்கம் உருவாக்கினார்கள் என்று சொல்வது அவர்களை இழிவுபடுத்தும் பிரச்சாரமாகும்.
இதை நாம் நம்புவதில் அர்த்தம் இல்லை! தங்கத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதே அறிவுபூர்வமான செய்தி ஆகும்.
ரசவாதத்தினால் தங்கம் உருவாக்கினார்கள் என்று இப்போதும் சொல்கிறார்கள். மூலிகைகளால் உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். அது நடைமுறையில் நிரூபிக்க முடியாத ஒன்று!
தற்போது செயற்கையாகத் தங்கம் கூடத் தயாரிக்க முடியும். என்றாலும் அத்தகைய தொழில்நுட்பம் அக்காலத்தில் இல்லை! அக்காலமுறைப்படி அதைச் செய்துகாட்டி மெய்ப்பிக்க முடியாது!
சித்தர்களின் உண்மையான சிறப்புகளை மதிப்பிழக்கச் செய்வன இதுபோன்ற செய்திகள்!
சித்தர்கள் அறிஞர்கள்! ஆனால் அவர்கள் பெயரைப் பயன்படுத்தி மக்களின் அறிவை மழுங்கடிக்கும் வேலை நடப்பதைப் பிரித்துப் பார்க்கவேண்டும்.
ரசவாதம் மூலம் தங்கம் செய்வது ஒரு வேதிவினை என்றும் அதை அறிந்திருந்த சித்தர்கள் ஓரிருவர் அந்த தயாரிப்பு ரகசியத்தை வெளிப்படுத்தாமல் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
எந்த ஒரு வேதியியல் முறையும் மக்கள் பார்வைக்கு வந்தபின்னால் ஒரு சிலரைச் சார்ந்ததாக இருக்கமுடியாது. அப்படி ஒரிருவரைச் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கும் என்றால் அதை அனைவருக்கும் பொதுவான அறிவியல் கலையாக எப்படி நிரூபிக்கமுடியும்? நிரூபிக்க இயலாத ஒன்றை நவீன அறிவியல் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
சித்தர்கள் காலத்தில் அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதைத்தான் செய்திருப்பார்கள்!
அதை இப்போதும் செய்யலாம்!
அவர்கள் விட்டுப்போன அறிவியலையும் மற்ற மகத்தான பங்களிப்புகளையும் அறிந்ததைச் செய்யவும் அறிய இயலாததை அறிய முயல்வதும்தான் சரியானது!
அதைவிட்டு அவர்களைப் பற்றிக் கற்பனைக் கதைகளை பஜனை பாடுவதைமட்டும்செய்து உண்மையில் அந்த மகான்களை இழிவு படுத்திக்கொண்டுள்ளார்கள்!
அதையே தொடரக்கூடாது என்பது மட்டுமல்ல அத்தகைய புரட்டுகளை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் சித்தர்களைப் பற்றிய ஞானம் காக்கையும் நரியும் கதையைப் போல் சிறுத்துப் போய்விடும்!
சித்தர்களைப் பற்றி வழக்கில் உள்ள செய்திகள் அனைத்தும் மதிக்கத்தக்கவையா என்று யோசித்தோம் என்றால் அவர்கள் உண்மையில் அவமதிக்கப்படுகிறார்கள் என்று புரியும்!
ஆனால் அவர்கள் சம்பந்தமான அபத்தங்களை எதிர்த்தால் அப்படி எதிர்ப்பவர்களை சித்தர்களின் எதிரிகள்போலவும் கதை பரப்புபவர்கள்தான் பற்றாளர்கள் போலவும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்!
அது அறியாமையும் போலி நடத்தையும் ஆகும்!
அதனால் பயன் பெறுபவர்கள் சித்தர்கள் பெயரைச் சொல்லிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளே!
சித்தர்களின் எத்தனையோ கண்டுபிடிப்புகளும் செயல்முறைகளும் மறைக்கப்பட்டு மறக்கவும் பட்டுவிட்டன என்று சொல்பவர்கள் உண்டு.
மறைக்கப்பட்டிருந்தாலும் மறக்கப்பட்டிருந்தாலும் அதை உறுதிப் படுத்தும் வரை அறியப்படாத வகையில்தான் வைக்கப்படவேண்டும். உண்மை என்று ஏற்றுக்கொள்வது சரியான முறை அல்லவே?...
தவறானதைத் தவறானதென்றும் சரியானதைச் சரியானதென்றும் அறியாததை அறியாததென்றும்தான் கொள்ளவேண்டும்!
அகத்தியர் நாடி சோதிடம் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊருக்குக் கடை விரித்துத் தொழில் செய்கிறார்கள்.
சித்தர்களின் ஏடுகள் அடிப்படையில் சோதிடம் சொல்வதாகச் சொல்கிறார்கள்.
சித்தர்கள் அப்படி தங்கள் ஏடுகள் எத்தனை ஆயிரம் காப்பி பிரிண்ட் போட்டு இவர்களிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள்?
அந்த மாதிரிக் கோடானு கோடி வருங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர்கள் எப்படி முன்னறிந்து பதிவு செய்து வைத்திருக்க முடியும்?
இதுமாதிரி ஆட்கள்தானே சித்தர்களின் பெயரைக் கெடுப்பவர்கள்? இவையெல்லாம் மறைக்கப்பட்ட உண்மைகளா?
எந்த இடத்திலும் மகான்களான சித்தர்களை நாம் ஏளனம் செய்வது இல்லை !
ஆனால் அவர்கள் பெயரால் நடக்கும் அறிவியலுக்குப் பொருந்தாத அபத்தங்களை விமர்சிக்காமல் எப்படி விட முடியும்?
பொய்யர்கள் சித்தர்களின் பெயரைச் சொல்லி அறிவியலையே ஏளனம் செய்வது அனுமதிக்கக்கூடாத ஒன்று! உண்மையில் அத்தகையவர்கள் சித்தர்களை கேலிப்பொருளாக்குகிறார்கள்.
சித்தர்களின் வேதியல் மதிப்பு மிக்கதே!
காரணம் அவர்கள் பல்வேறு பொருட்களைச் சேர்த்து புதுப்புது மருந்துகளை உருவாக்கியதாக அறிகிறோம்.
இன்றும் சூரணங்கள் புழக்கத்தில் உள்ளது!
ஆனால் ரசவாதம் என்ற வார்த்தையே அறிவாற்றல் மிக்கவர்களிடம் இருந்து வருவதில்லை!
அப்படி வந்தால்கூட அத்தகையவர்கள்மேல் கொண்ட மதிப்பாலும் நம்பிக்கையாலும் ஒருக்கால் அப்படி இருக்கலாம் என நினைக்கலாம்.
ரசவாதம் என்ற வார்த்தையைத் தவிர அது சம்பந்தமான எந்த விபரமும் தெரியாதவர்கள்தான் கேட்பவர்கள்மேல் பாய்ந்து பிராண்டத் தயாராக இருக்கிறார்கள்!
சித்தர்கள் ரசவாதத்தால் தங்கம் செய்தார்கள் என்பதைவிட மருத்துவத்தில் தங்கத்தையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே சரி!
ராசவாதத்தை மறுப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் அந்தமாதிரி அறிவியல் வளர்ந்திருக்கவில்லை என்பதைத்தான் காரணமாகக் கொள்கிறோம்.
ஆனால் அதை நியாயப் படுத்துபவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாக இருப்பதால் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் எதுவும் சொல்வது இல்லை! சொல்லவும் முடியாது!
அறிவியல் முன்னோக்கித்தான் பயணிக்கும் ! பின்னோக்கிப் பயணிக்காது!
அதனால் ரசவாதம் மூலம் தங்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருந்தால் இப்போது முந்தையதைவிட மேம்பட்ட முறையில் அது வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை!
இன்னும் சில கேள்விகள்:
அய செந்தூரம் போன்ற மருந்துகளையும் பஞ்சலோகம் எனப்படும் உலோக சேர்க்கையையும் சித்தர்கள் அறிந்திருந்தார்கள்.
அப்படியானால் ஏன் தங்கத்தைத் தவிர மற்ற உலோகங்களை ரசவாதத்தின்மூலம் தயாரிக்கவில்லை?
தங்கம் மட்டும் விலை மதிப்புள்ளதென்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்றால் இன்றளவும் கிராக்கி உள்ள அந்தத் தொழில்நுட்பம் மறைந்துபோக வாய்ப்பே இல்லை! ஏன் மறைந்தது?
தண்ணீரில் நடப்பது, கூடுவிட்டுக்கூடு பாய்வது, நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்வது போன்ற கதைகள் எல்லாம் உண்மையா?
இந்தமாதிரி மோடி மஸ்தான்களாகச் சித்தரிப்பது அவர்களை இழிவு படுத்துவது ஆகாதா?
சித்தர்களின் ஞானத்தை உண்மையாகவே உணர்ந்து அவர்களின் பார்வையில் நாமும் நிறையக் கற்று அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவேண்டும் என்று சொல்பவர்களைவிட கற்பனைக் கதைகளை நம்புபவர்களும் பரப்புபவர்களும்தான் சித்தர்களுக்குச் சிறந்த மரியாதை செய்பவர்களா?
உண்மையாகவே சித்தர்களை மதித்துப் போற்றுவது உண்மையானால் அவர்களின் அனைத்துச் சிறப்புகளையும் ஆய்வு செய்து இந்தக் கால அறிவியல் வசதிகளையும் பயன்படுத்தி மேலும் வளர்க்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் உலகின் மிகச் சிறந்த மருத்துவமாக சித்த மருத்துவம் ஆகியிருக்கக் கூடும்.
இனியும் செய்யலாம்! அதுதான் சித்தர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் நன்றிக் கடனும் மட்டுமல்ல மக்களை இன்றைய மருத்துவக் கொள்ளை மற்றும் பக்கவிளைவு என்கிற ஆபத்துக்களில் இருந்தும் விடுதலை செய்யும் வழியும் ஆகும்! .