ss

Wednesday, March 21, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (1)

முன்னுரை

எனது வாழ்வின் பிரதானக் கடமையாக நான் இதுகாறும் எண்ணிவந்த ஒரு கடமையை இப்போது துவங்குகிறேன். இதுவரையிலும் எனது எண்ணத்தைச் செயல் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இப்போதும் அது சரியான முறையில் கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு  வாழப்போகும் வயது  குறைந்துகொண்டே போகிறது. இனியும் தாமதித்தால் எனது எண்ணங்களை எனது ககோதர மக்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாமல் போகலாம். அதன்மூலம் எனது வாழ்வே பயனற்ற ஒன்றாகப் போய்விடும். காரணம் நான் எனது மக்களுடன் பகிர்ந்துகொள்ளப் பலகாலம் உள்ளத்துள் வைத்தும் ஏட்டில் எழுதி வைத்தும் பாதுகாத்து வைத்திருப்பது உபயோகமற்ற வெறும் குப்பைகள் அல்ல. உலகத்தில் நடைமுறையில் உள்ள குப்பைகளை எரித்துச் சாம்பலாக்குவதற்குப் பயன்படக்கூடிய நெருப்பு ஆகும். 

எனது தலைமுறையில் நான் நேரடியாக அனுபவித்து அறிந்ததும் அதற்குமுன் நடந்ததாக கல்வியின்மூலமும் வரலாற்றின் மூலமும் தெரிந்து கொண்டதும் மனித வாழ்வுக்குப் பொருந்தக்கூடிய உயர்பண்புகளாக பெரும்பாலும் இல்லை. மனித குலத்துக்கே தீங்குபயத்து வந்த எண்ணற்ற தத்துவங்களையும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் துடைத்தெரிய அது பயன்படவேண்டும் என்று நான் விரும்புதில் தவறில்லை என்றே கருதுகிறேன். 

அத்தகைய முயற்சியில் எண்ணற்ற பெரியோர்கள் எல்லாக் காலத்திலும் முயன்று வந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இன்றுள்ள நிலைமைகளுக்குத் தக்கவாறு மக்களையும் மனித வாழ்வையும் மற்ற உயிரின வாழ்வையும் வரக்கூடிய பேரழிவில் இருந்து காக்கவல்ல ஒரு மாபெரும் சக்தி இம்மண்ணுலகில் இல்லை என்றே கருதுகிறேன். மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபட்ட பாதையில் பயணம் செய்யத் துவங்கிய பின்னால் எத்தனையோ அறிஞர்கள் தோன்றி இருக்கிறார்கள். எத்தனையோ க்ண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எத்தனை எத்தனையோ தத்துவங்களை உலகிற்கு வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவுக்கும் மேலாக இன்று நடைமுறை வழக்கத்தில் மனித குலத்தை ஆட்டுவிக்கும் சக்திகளாக தீயசக்திகளும் தீய தத்துவங்களும்தான் இருப்பதைக் காணமுடிகிறது.

இப்போது நடைமுறையில் உள்ள வாழ்க்கைமுறையாலும் உலக மக்களியையே நிலவும் உயர்தர்ம நெறிகளைப்பற்றிக் கவலைப்படாத பண்பாட்டுச் சீரழிவாலும் பலமுறை இந்த வாழ்வு தேவையா என்ற கேள்விக்கு ஆளாகியுள்ளேன். இந்த வாழ்வுமுறையில் உள்ள கேடுகளை எதிர்த்து ஏதாவது செய்தாலொழிய மற்ற எந்த ஒரு அம்சத்தைக் கொண்டும் இந்த உலகில் வாழவேண்டும் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. இது கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக என்றுள் நடக்கும் மனப் போராட்டம் ஆகும். 

இதுகாலமும் என் சக மக்கள் என்னைப் பற்றியும் எனது உயர்ந்த எண்ணங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள துன்பகாலங்களிலும் நெறிதவறாமல் வாழ்ந்து காட்டிய ஒன்றை மட்டும்தான் என்னால் செய்ய முடிந்தது. உயர்தரமிக்க நூல்களைப் படிப்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்ததோடு எனது எண்ணங்களை எல்லாம் எழுத்துவடிவில் பதிவும் செய்திருந்தேன். சொந்த வாழ்வுத் தேவைகளுக்காகவே உடலுழைப்பை நம்பி இருக்கவேண்டிய நிலையில் என் எண்ணங்களையும் உயர்ந்த சிந்தனைகளையும் என் மக்களுக்கு நூல்வடிவிலோ வேறு வடிவங்களிலோ வெளிப்படுத்த இயலவில்லை. 

இப்போதும் அறிவியல் வழங்கிய கணினி என்கிற சாதனம் இல்லாதிருந்தால் இதற்கு ஒரு வடிவம் கொடுக்க இயலாமலே போயிருக்கும். 

ஏற்கனவே எழுதி வைத்திருந்த எழுத்துக்களைச் சரிபார்க்கவும் மீண்டும்  அவசியமானவற்றைச் சேர்க்கவும் பிழைகள் இல்லாமல் ஒழுங்குபடுத்தவும் விரைவில் எழுத்து வேலையைச் செய்யவும் கணினி கைகொடுத்தது. இல்லாவிட்டால் இந்த முயற்சியைச் செய்யக்கூட முடியாமல் போயிருக்கலாம். கணினி மூலம் தட்டச்சு செய்ய இரண்டு மாதங்கள் தட்டச்சு வகுப்புக்கு எனது ஐம்பத்து எட்டாவது வயதில் சென்று பழகினேன். பகலில் தோட்டத்தில் எனது வேலைகளைச் செய்து கொண்டே ஒரு குறிப்பிட்டநேரத்தில் ஒரு மாணவனாக என்னை மாற்றிக்கொண்டு தட்டச்சைப் பயின்றேன். அது ஒரு இனிய அனுபவம்.

நான் ஒரு மனிதன் என்பதற்கு மேலாக எந்தவிதமான சிறப்பு அடையாளங்களையும் விரும்பவில்லை. இந்த உலகமக்களுள் ஒருவன் என்பதற்கும் இந்த உலகம் என்னுடைய வீடு என்பதற்கும் மேலாக என்னை ஒரு நாடு அல்லது ஒருபகுதி அல்லது ஒரு எல்லை என்பதுபோன்ற குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி என்னை நானே என்றும் எண்ணிப் பார்த்தது இல்லை. என்னை ஒரு குறிப்பிட்ட ஊர்க்காரனாகவோ ஒரு வட்டாரத்தைச் சேர்ந்தவனாகவோ ஒரு மாநிலம் அல்லது ஒருநாடு அல்லது ஜாதி மதத்தைச் சேர்ந்தவனாகவோ என் சகோதர மக்கள் நினைப்பதை நான் விரும்பாததற்குக் காரணம் அப்படி எண்ணப்படுவதில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க இயலாமல் பாதியில் வெளியேறி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்த நான் என்னை ஒரு மாணவனாகவே எண்ணிக்கொண்டு இதுவரையிலும் கல்வியை ஒரு முதற் கடமையாகவே கருதியதோடு கற்றும் வந்திருக்கிறேன். கடப்பாறை மண்வெட்டி பிடிக்கும் கையால் பேனாவைப் பிடிக்கவோ எனது எண்ணங்களை எழுத்துக்களாக்கவோ நான் பயப்படவே இல்லை, காரணம் இந்த உலகில் மனித சமுதாயத்தில் நடக்கும் நியாயமற்ற போக்குகளின்பால் நான் அடைந்த எதிர்மறையான உணர்வின் வலிமை அத்தகைய அச்சத்துக்கு இடங்கொடுக்கவில்லை. 

நான் ஒரு இலக்கியவாதியாக இல்லாமல் இருக்கலாம். எனது எழுத்துக்களில் சொக்கவைக்கும் அழகியல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு சத்திய ஆவேசம் இருக்கும். காரணம் இவ்வுலகின் இவ்வுலக மக்களின் நியாயமற்ற பல்வேறு தாக்குதல்களையும் தாங்கி இதுகாலமும் நெறிபிறழாமல் வாழ்ந்திருக்கிறேன். எனது எழுத்துக்களின் மூலம் நான் இது நாள்வரையிலும் வாழ்ந்த மேலோர் செய்த பணிகளுக்கு மேலாகப் புதிதாக எதுவும் செய்துவிடப் போவதில்லை. ஆனால் இன்னும் எண்ணற்ற மேலோர் தோன்றவும் அவர்கள்மூலம் இவ்வுலகு அழிவுப் பாதையிலிருந்து சரியானபாதைக்குப் பாதைமாறவும் நான் எனது புதுப்புதுக் கருத்துக்கள் மூலம் விதை விதைக்க விரும்புகிறேன்.

நான் விதைக்கப் போகும் விதைகள் முளைத்து எண்ணற்ற தத்துவ மரங்களாக வளரவேண்டும். அந்தமரங்களும் பூத்துக்காய்த்து அளவற்ற தத்துவ விதைகளைச் சிந்தவேண்டும். அவையெல்லாம் மீண்டும் மீண்டும் முளைத்து இந்த உலகையே உயர்தர்ம நெறிகளின் நிழலுக்குள் கொண்டுவரவேண்டும். உயர்ந்த மனிதருக்கும் உயர்ந்த பண்புகளுக்கும் மட்டும்தான் நிழலாக விளங்வேண்டும். அதற்கு மாறான மனிதருக்கும் பண்புகளுக்கும் அதுவே நெருப்பாக மாறவும் வேண்டும். உலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரையும் நேசிக்கக்கூடிய உலகாக அது இருக்கவேண்டும். மக்களாய் பிறந்தும் மாக்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே அப்படி இல்லாமல் உண்மையிலேயே மக்கள் வாழும் உலகாக இருக்கவேண்டும்.

என்னுடைய எழுத்துக்களில் எனது எண்ணங்களை மட்டும்தான் வெளிப்படுத்தப் போகிறேன். அது இதுவரையிலும் நாம் அறிந்திருப்பதிலும் மாறுபட்டதாக இருக்கும். ஏனென்று சொன்னால் இதுவரை எத்தனையோ தத்துவங்களைப் பயின்றிருந்தாலும் மேன்மக்களின் அறிவரைகளைக் கேட்டிருந்தாலும். அதைச் சரியாகப் பின்பற்றும் பழக்கம் போதுமான அளவு மக்களிடம் இல்லை. காரணம் உயர்ந்த தர்மங்களைக் கற்பிப்பவர்களாகட்டும் அதுபற்றி உயர்வாகப் பேசித் திரிபவர்களாகட்டும் நடைமுறை வாழ்வில் அதைப் பின்பற்றுகிறார்களா என்றுபார்த்தால் விடை மகிழும்படி இல்லை. இதனால் உயர் தர்மங்கள் மதிப்பிழந்து போகின்றன. மனிதன் ஏற்றுக்கொண்ட தர்மங்களும் அவனின் செயல்பாடுகளும் ஒரேமாதிரி இல்லாததால் இன்று மனித இனமே அழிவின் விளிம்பில் இருப்பதைப் பார்கிகிறோம். 

எனவே மனிதன் பேசும் உயர்தர்ம நெறிகளும் அவனால் பின்பற்றப்படும் செயல்பாடுகளும் இணையாக இருப்பது அவசியமாகிறது. அதற்குத்தடையாக இருப்பவற்றைத் துடைத்தெறிந்து அதன்தொடர்சியாக எண்ணம், சொல், செயல் மூன்றும் இணையாக உயர்தர்ம நெறிகளை அடிப்படையாகக் கொண்டதாக மாறவும் அதன் விளைவாக இன்று வெறும் கற்பனையாக இருக்கும் சுவர்க்கமாக இந்த பூமியையே மாற்றவும் எனது வாழ்வு பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான் புது முயற்சியைத் துவங்கியுள்ளேன்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு அணுவைக்கூட புதிதாக உருவாக்கவோ அல்லது இல்லாமல் அழித்தொழிக்கவோ முடியாது என்பது அறிவுடைய அனைவருக்கும் தெரியும். ஒன்றை இன்னொன்றாக மாற்றித்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதுதான் வாழ்க்கைமுறையும்கூட. அத்தகைய சக்தியை இழக்கும்போதுதான் மரணம் அடைந்து எதிலிருந்து உருவானோமோ அந்த இயற்கையிலேயே ஐக்கியமாகிவிடுகிறோம். 

ஓன்றை தனக்கேற்ற முறையில் இன்னொன்றாக மாற்றி வாழ்வதுதான் வாழ்க்கை என்பதால் ஒவ்வொருவரும் இயற்கையை மட்டுமல்ல தம்மையொத்த மனிதரையும் தனக்கேற்ற முறையில் இருந்தால் நல்லது என்று எண்ணுவதோடு மட்டுமல்ல அதற்காக எல்லா முயற்சியையும் செய்கிறார்கள். அதேமாதிரி ஒவ்வொருவரும் தமது செயல்பாடு இயற்கைக்கும் தம்மையொத்த பிற மனிதர்க்கும் ஏற்புடையதாக இருக்கின்றதா என்று சிந்திப்பதே இல்லை. மற்றவர் தமக்காக வாழவேண்டும் என்று எண்ணுமளவு தாம் பிறர்க்காக வாழ்கிறோமா என்று எண்ணிப்பார்ப்போர் மிகமிகக் குறைவாகவே இருப்பதுதான் சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாகி விடுகின்றது.

அப்படியானால் இவ்வுலகம் தனக்கேற்றதாக இருக்கவேண்டுமானால் ஒவ்வொருவரும் தான்வாழும் இவ்வுலகுக்கு ஏற்றவர்களாக வாழவேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை ஆகிவிடுகிறது. இந்த எளிய நிபந்தனையைக் கூடப் புரிந்துகொள்ளாமல், உணராமல்தான் வாழ்வையே நரகமாக்கிக்கொண்டு ஒடடுமொத்தமான சமுதாயத்தையே நாசமாக்குவதிலும் அவரவர் பங்கைச் சிறப்பாகச் செய்து வருகிறோம். அதுமட்டுமல்ல எந்த இயற்கையை ஆதாரமாகக்கொண்டு அனைத்து உயிர்களும் வாழ்ந்து வருகின்றோமோ அந்த இயற்கையையே விட்டுவைக்காமல் எதிர் கால உயிரின வாழ்வுக்கே பயனற்றதாக மாற்றும் விதத்தில் அழித்தொழித்து வருகிறோம்.

இந்தப்போக்குகள் எல்லாம் மாற, இப்போது மனித சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் தத்துவங்கள் பயன்படுகிறதா? அப்படிப் பயன்படும் தத்துவங்களைப் பின்பற்றுகிறோமா? பயனுள்ள தத்துவங்கள்தான் இன்று மனித சமுதாயத்தை வழிநடத்துகிறது என்றால் இன்று நம் கண்முன் நடக்கின்ற சமுதாய அவலங்கள் ஏன்? 

எந்தத் தத்துவத்தின்படி மனிதசமுதாயம் நடந்தாலும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தத்துவங்கள் மனிதகுலத்துக்கு வழிகாட்டுவதாக இருந்தாலும் ஒன்றைமட்டும் அவை உள்ளடக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம். 

ஆதாவது இந்த உலகமும் அதன் சூழ்நிலைகளுமே மனிதகுலத்தை உருவாக்கின. சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொருமனிதரையும் பாதிக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதரின் செயல்பாடும் நாம் வாழும் சூழ்நிலையிலும இந்த உலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூழ்நிலையில் ஏற்பட்ட இணக்கமான மாற்றத்தால்தான் நாம் உருவானோம். அதேபோல் அதே சூழ்நிலையின் எதிர்மறையான மாற்றத்தால் ஒருகாலத்தில் நாம் அழியவும் செய்வோம். அதனால் இந்த உலகின் சூழல் இணக்கமானதாக இருக்கும்வரைதான் மனிதகுலமும் மற்ற உயிரினங்களும் வாழமுடியும்.  மனிதகுலத்தின் வாழும் காலத்தைத் தீர்மானிப்பதில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களுடன் மனித இனத்தால் ஏற்படுத்தப்படும் சாதக பாதகமான மாற்றங்களும் சேர்ந்துகொள்கின்றன. எனவே மனித குலத்தின் வாழுங்காலத்தைத் தீர்மானிப்பதில் மனித இனத்துக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதுதான் அநதப் பேருண்மை ஆகும். 

இந்த உண்மையை ஒத்துக்கொள்ளாத அல்லது உள்ளடக்கமாகக் கொள்ளாத எந்தத் தத்துவமாக இருந்தாலும் அது மனித குலத்துக்கு உதவாது. மாறாக அதை அழிவுப் படுகுழியில்தான் தள்ளும். அப்படித்தான் தள்ளிக்கொண்டுள்ளன. 

சூழ்நிலைகள் மனித வாழ்வின்மேல் பாதிப்பு ஏற்படுத்துவதையும் அதேபோல் மனிதன் சூழ்நிலைகளின்மேல் பாதிப்பு ஏற்படுத்துவதையும் போலவே ஒவ்வொரு மனிதனும் சக மக்களின் மேல் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி ஏற்படுத்தும் பாதிப்பு சாதகமாகவும் பாதகமாகவும் உணரப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறரால் தனக்கு ஏற்படும் பாதிப்புகள் சாதகமாகவே இருக்கவேண்டும் என்று கருதுகிற அதே வேளையில் தன்னால் பிறருக்கு சாதகமான பாதிப்புகள் மட்டும்தான் ஏற்படுகிறதா என்று எண்ணிப் பார்ப்பது இல்லவே இல்லை. அதன்காரணமாக மனிதருக்குள் அன்பும் பாசமும் பொங்கிப் பிரவாகமாக ஓடுவதற்குப் பதிலாக கசப்பும் வெறுப்பும் பகையுணர்ச்சியுமாக வாழ்வே அசிங்கப்பட்டு விகாரமாக ஆகிவிட்டது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலுத்தர்களாகத்தான் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டு உள்ளோம். 

எனவே நாம் விரும்பும் வண்ணம் வாழவேண்டுமானால் பிறரால் நமக்கு ஏற்படும் பாதிப்பு சாதகமாகவே இருக்கவேண்டும். அப்படிப் பிறரால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நமக்குச் சாதகமாகவே இருக்கவேண்டுமானால் நம்மால் பிறர்க்கு ஏற்படும் பாதிப்புகளும் அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கவேண்டும். இவை இரண்டும் நடக்காவிட்டால் யார்தான் உயர்ந்த வாழ்வு வாழ்ந்துவிடமுடியும்? அத்தகைய உயர்ந்த வாழ்வு வாழ்வதற்கு உதவும் தத்துவங்களே சிறந்த தத்துவங்கள். அத்தகைய உயர்ந்த வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்ட இயலாத தத்துவங்கள் துடைத்தெறியப்படவேண்டிய குப்பைகள்.

அத்தகைய உயர்ந்த தத்துவங்கள் உருவாகவேண்டுமென்றால் மக்களின் மனதிலே உயர்ந்த எண்ணங்கள் உருவாகி வளரவேண்டும். ஓவ்வொரு காலகட்டத்திலும் வாழும் மக்கள் அப்போது தாங்கள் வாழும் உலகையும் வாழ்வுமுறைகளையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். தங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மூலம் கற்றுக்கொண்டவற்றுடன் தங்கள் வாழ்வில் நடப்பதையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தலைமுறையினர்க்கு சரியான அறிவுச்செல்வத்தை விட்டுச்செல்ல முடியும். 

ஆனால் இத்தகைய அறிவுத்திறன் மக்கள் அத்தனை பேரிடமும் எதிர்பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. மனித சமுதாயத்தில் எப்போதுமே ஒரு பகுதியினர் முன்னோடிகளாகவும் பெரும்பகுதியினர் பின்செல்பவர்களாகவும்தான் இருப்பர். அந்த முன்னோடிகள் தாம் உணரும் உயர்ந்த வழியில் மற்ற அப்பாவி மக்களையும் வழிநடத்திச் செல்லவும் அவர்களையும் அறிவுமிக்கவர்களாக ஆக்கவும் தம்முடைய பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும். 

ஆனால் துரதிருஷ்டவசமாக மனித வரலாறு அப்படிப்பட்டதாக இல்லை. 

சமுதாயத்தை வழிநடத்திச்செல்பவர் யார் என்று பார்த்தால் பேரறிவு பெற்றிருப்போர், பெருஞ்செல்வம் பெற்றிருப்போர், அதிகாரம் மிகுந்திருப்போர் இவர்களே! 

பேரறிவு பெற்றிருப்போரில் பெரும்பாலோர் செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் தலைவணங்குபவர்களாகவும் அவர்களின் தயவில் வாழ்பவர்களாகவும் இருப்பதால் உண்மையில் செல்வமும் அதிகாரமும் படைத்தோரே சமுதாயத்தை வழிநடத்தும் பணியைச் செய்கிறார்கள். 

ஆனால் செல்வமும் அதிகாரமும் பெற்றிருப்போரில் பெரும்பாலோர் ஒட்டுமொத்தமான சமுதாய நலனில் அக்கரையற்றவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் இருப்பதால் சமுதாயத்தை வழிநடத்தும் தகுதி அற்றவர்களாக இருப்பதோடு தங்களின் சுயநலத்துக்காக மனித இனத்துக்கும் இயற்கைக்கும் பெருங்கேடு விளைவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மனித சமுதாயம் அறிவாற்றல் பெறுவதற்குத் தடையாகவும் இருக்கிறார்கள். தங்கள் சுயநலத்துக்காக அவர்களிடையே வாழ்வுக்குப் பொருந்தாத தத்துவங்களை உயர்தர்ம நெறிகளாகப் பரப்பவும் செய்கிறார்கள். அதனால் ஒட்டுமொத்தமான உலக சமுதாயம் அவர்களின் துன்பதுயரங்களுக்கு யார் காரணமோ அவர்களின் செல்வாக்கின் கீழ் அவர்களையே தமது லட்சிய புருஷர்களாகக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.

சுயநலமற்ற ஞானிகள் பலர் தோன்றி இவ்வுலகம் உய்யப் பாடுபட்டிருந்தாலும் கீழ்த்தரமான பண்புகளே உலகு முழுவதும் நிறைந்து விட்டன. காரணம் ஒப்புயர்வற்ற ஞானிகள் காலத்துக்குப்பின் அவர்களின் உயர் தத்துவங்கள்கூட சின்னாபின்னப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் மேல்மட்டத்திலுள்ள ஒட்டுண்ணிகளின் சுயநலத்துக்கு ஏற்றபடி புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு பயனற்றுப் போய்விடுகின்றன. இன்று நாம் உலகில் காணும் அத்தனை கேடுகளுக்கும் இந்தக் கேடுகெட்ட வாழ்வுமுறையே காரணமாகும்.

இந்த நிலை மாறவேண்டுமென்றால் மனித இனம் மேம்பட்ட வாழ்வு வாழவேண்டுமென்றால் சில புது வழிமுறைகளைக் கையாண்டு அவை தவறுகளுக்குப் பலியாக விடாமல் பாதுகாக்கப்பட்டுக்கொண்டே உலகம்முழுவதும் பின்பற்றப்படும் வாழ்வுமுறையாக மாற்றப்படவேண்டும். அந்த வழிமுறைகள் அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியதாகவும் மெல்ல மெல்ல அதைப் பின்பற்றக்கூடிய உயர்ந்த சிந்தனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் விதத்திலும் இருக்க வேண்டும். 

உலகில் அளவில்லாமல் தீயபண்புகள் வளர்ந்திருந்தாலும் நல்லவையும் இல்லாமல் ஒழிந்துவிடவில்லை. ஆனால் நல்லவை வலிமையில்லாமலும் இருக்குமிடம் தெரியாமலும் இருக்கின்றன. அந்த நல்ல உள்ளங்கள் இந்த உலகம் தப்பிப்பிழைக்க வழி ஏதும் இல்லையா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வுலகில் நடக்கும் தவறுகளை எண்ணியும் இது மாறுமா என்று எண்ணியும் உள்ளுக்குள்ளே ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளார்கள். 

அதே நேரம் இந்த உலகத்தைத் திருத்துவது பற்றிநம்பிக்கை இல்லாமல் மனங் குமைந்து கொண்டும் உள்ளார்கள். அறிவாலும் துணிவாலும் ஆகாதது அவநம்பிக்கையாலும் அச்சத்தாலும் ஆகாது என்பதை எண்ணத் தவறுகிறார்கள். தவிர்க்க இயலாத அளவு தீமைகள் வளர்ந்துவிட்டன. அதை எதிர்த்து துன்பப்படுவதைவிட அனுசரித்துப்போய்விடுவதுதான் நல்லோர்க்கு நல்லது என்ற எண்ணத்திலும் அனேகம் நல்லவர்கள் வாழ்கிறார்கள்.


ஆனால் இந்த பலவீனமான எண்ணங்களைத் தவிர்த்து உலகில் உள்ள நல்லோர் அனைவரையும் ஒன்றுபடுத்த முடியுமா? அத்தகைய திறமையுள்ளவர் உருவாகி உலகில் உள்ள நல்லோர் அனைவரையும் ஒன்றுபடுத்துவதன் மூலம் மனித சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பற்றுவார்களா என்று ஏங்குகின்றேன். அதற்கான உபாயங்களைப் பற்றி சதா சிந்தனை செய்தும் வருகிறேன். 

ஆனால் தாய்மொழியான தமிழைத் தவிர ஆங்கிலம் போன்ற அவசியமான மற்ற மொழியறிவு இல்லாததால் நேரடியாக அந்த முயற்சியைச் செய்ய சக்தியற்றவனாக இருக்கிறேன். எனவே நானறிந்த தமிழ்மொழியின் துணையுடன் தமிழறிந்த மக்களிடம் என் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டுசெல்லவும் அதன்மூலம் தமிழறிந்த உயர்பெருமக்களின் உள்ளங்களில் உலகநலன் என்னும் தீபத்தை ஏற்றவும் அதை மேன்மேலும் விரிவாக்கிச் செல்வதன்மூலம் உலகளாவிய அமைப்பாக அது விரிவடைந்து செல்வதைக் கண்கூடாக என்வாழ்நாளில் காணவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

ஒவ்வொரு துறையிலும் இருக்கும் உலகநலம் விரும்பும் உயர்பெருமக்கள் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இவ்வுலகைக் காக்கவேண்டும் அதற்கு நம்மாலான அனைத்தையும் செய்யவேண்டும் என்ற உயர்நோக்கமுடையவர்களாக மாறவேண்டும். இவ்வுலகுக்கு ஏதாவது செய்யமுடியும் என்ற வாய்ப்பும் சக்தியும் உள்ளவர்கள் அந்த வாய்ப்பை வீணடிக்காமல் பயன்படுத்தவேண்டும். 

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலதுறைகளிலும் நிபுணர்களாக விளங்குபவர்களில் உலக நலன் நாடுவோர் ஒரு அமைப்பினை உருவாக்கி அதன்கீழ் ஒன்றுதிரள வேண்டும். அந்த அமைப்பு அந்தந்த நாடுகளில் தமது செயல்பாடுகள் மூலம் மக்களின் பேராதரவைப் பெறவேண்டும். அதேபோல் உலகம் முழுக்கவும் அதன் செல்வாக்கு விரிவடைவதன் மூலம் உலகளாவிய அமைப்பாக மாற வேண்டும். அந்த அமைப்பு உலகம் முழுமைக்கும் நல்வழிகாட்டும் அமைப்பாக மாறவேண்டும். அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தில் உலகின் வாழும் விதிகளைத் தீர்மானிக்கும் அமைப்பாக மாறவேண்டும். இதுவே என் விருப்பம் இதற்காக என் வாழ்நாளைச் செலவிடவேண்டும் என்பது லட்சியம்.

அந்த உயர் லட்சியத்தை நோக்கி நகரும் விதத்தில் ஒரு உயர் திட்டம் வகுக்கவேண்டும். அத்தகைய திட்டம் வகுத்து அதன்படி செயல்பட விரும்புவோர் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டும்? சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் எத்தகையநெறிகளைப் பின்பற்றவேண்டும்? அத்தகையோருக்கு இருக்கவேண்டிய உலக அறிவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது போன்ற உயர்கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் பணியைத்துவங்க விரும்புகிறேன். 


வகை வகையான உணவு வகைகளை உண்ண விரும்புபவன் போல இந்த உலகம் எப்படி எப்படி எல்லாம் சிறந்து இருக்கவேண்டும் இருக்கமுடியும் என்பதைமட்டும் தெரிவிப்பவனாகவே நான் இருப்பேன். விரும்பும் உணவை சமைத்துத் தரும் சிறந்த சமயல்காரரைப் போல இந்த உலகிலுள்ள சகலகலா விற்பன்னர்கள் நான் விரும்பும் ஒரு உன்னத உலகில் நான் வாழ உடனே உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, அடுத்து வரும் தலைமுறையினராவது அனுபவிக்கவேண்டி உருவாக்குவார்கள், உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.


அந்தவகையில் ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்  என்ற தலைப்பில் இருபத்தைந்து கட்டுரைகள் கொண்ட ஒரு சிறு தொகுதியை அறிமுகப்படுத்துகிறேன். அதன்மூலம் ஒரு சிறந்த பண்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளான அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளேன். 

இதனைத் தொடர்ந்து அணுமுதல் அண்டம் வரையிலான அத்தனை பற்றியும் எனது விருப்பங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவேன். 

இது எந்த அளவில் உலகில் நல்லவர் மனங்களில் பரவுமோ எந்த அளவு எனது கனவு நனவாகும் என்ற நம்பிக்கையை வளர்க்குமோ தெரியாது.  அதுவரை மட்டுமல்ல, அதற்குமேலும் எனது மூச்சு இருக்கும்வரை அதைத் தொடர்வேன். 

காரணம் அப்படியொரு செயலைச் செய்தாலொழிய எனதுயிர் என்னுடலில் தங்கியிருப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லை!


11 comments:

 1. உங்களது உயர்ந்த எண்ணம் நிறைவேற எங்கெங்கும் நிறைந்து இருக்கும் அந்த இயற்கை உங்களுக்கு துணை நின்று உங்களை பாதுகாத்து வழி நடத்தட்டும். வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்....

  ReplyDelete
 2. மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்த உங்கள் மற்றும் உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவும் விமர்சனமும் என்னைச் சரியான பாதையில் வழிநடத்தவேண்டும் என்று விரும்புகிறேன்!

  ReplyDelete
 3. உங்கள் எண்ணம் நிறைவேறவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 4. //எந்தத் தத்துவத்தின்படி மனிதசமுதாயம் நடந்தாலும் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தத்துவங்கள் மனிதகுலத்துக்கு வழிகாட்டுவதாக இருந்தாலும் ஒன்றைமட்டும் அவை உள்ளடக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம். ஆதாவது இந்த உலகமும் அதன் சூழ்நிலைகளுமே மனிதகுலத்தை உருவாக்கின. சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொருமனிதரையும் பாதிக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதரின் செயல்பாடும்; நாம்வாழும் சூழ்நிலையிலும இந்த உலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூழ்நிலையில் ஏற்பட்ட இணக்கமான மாற்றத்தால்தான் நாம் உருவானோம். அதேபோல் அதே சூழ்நிலையின் எதிhமறையான மாற்றத்தால் ஒருகாலத்தில் நாம் அழியவும் செய்வோம். அதனால் இந்த உலகின் சூழல் இணக்கமானதாக இருக்கும்வரைதான் மனிதகுலமும் மற்ற உயிரினங்களும் வாழமுடியும்@ மனிதகுலத்தின் வாழும் காலத்தைத் தீர்மானிப்பதில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களுடன் மனித இனத்தால் ஏற்படுத்தப்படும் சாதக பாதகமான மாற்றங்களும் சேர்ந்துகொள்கி;ன்றன@ எனவே மனித குலத்தின் வாழுங்காலத்தைத் தீர்மானிப்பதில் மனித இனத்துக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதுதான் அநதப் பேருண்மை ஆகும். இந்த உண்மையை ஒத்துக்கொள்ளாத அல்லது உள்ளடக்கமாகக் கொள்ளாத எந்தத் தத்துவமாக இருந்தாலும் அது மனித குலத்துக்கு உதவாது மாறாக அதை அழிவுப் படுகுழியில்தான் தள்ளும். அப்படித்தான் தள்ளிக்கொண்டுள்ளன. //

  சிறப்பான வரிகள்.

  ReplyDelete
 5. //உலகில் அளவில்லாமல் தீயபண்புகள் வளர்ந்திருந்தாலும் நல்லவையும் இல்லாமல் ஒழிந்துவிடவில்லை. ஆனால் நல்லவை வலிமையில்லாமலும் இருக்குமிடம் தெரியாமலும் இருக்கின்றன. அந்த நல்ல உள்ளங்கள் இந்த உலகம் தப்பிப்பிழைக்க வழி ஏதும் இல்லையா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வுலகில் நடக்கும் தவறுகளை எண்ணியும் இது மாறுமா என்று எண்ணியும் உள்ளுக்குள்ளே ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளார்கள். அதே நேரம் இந்த உலகத்தைத் திருத்துவது பற்றிநம்பிக்கை இல்லாமல் மனங் குமைந்து கொண்டும் உள்ளார்கள். அறிவாலும் துணிவாலும் ஆகாதது அவநம்பிக்கையாலும் அச்சத்தாலும் ஆகாது என்பதை எண்ணத் தவறுகிறார்கள். தவிர்க்க இயலாத அளவு தீமைகள் வளர்ந்துவிட்டன. அதை எதிர்த்து துன்பப்படுவதைவிட அனுசரித்துப்போய்விடுவதுதான் நல்லோர்க்கு நல்லது என்ற எண்ணத்திலும் அனேகம் நல்லவர்கள் வாழ்கிறார்கள்.//

  ###உண்மை

  ReplyDelete
 6. ஒவ்வொரு துறையிலும் இருக்கும் உலகநலம் விரும்பும் உயர்பெருமக்கள் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இவ்வுலகைக் காக்கவேண்டும் அதற்கு நம்மாலான அனைத்தையும் செய்யவேண்டும் என்ற உயர்நோக்கமுடையவர்களாக மாறவேண்டும். இவ்வுலகுக்கு ஏதாவது செய்யமுடியும் என்ற வாய்ப்பும் சக்தியும் உள்ளவர்கள் அந்த வாய்ப்பை வீணடிக்காமல் பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலதுறைகளிலும் நிபுணர்களாக விளங்குபவர்களில் உலக நலன் நாடுவோர் ஒரு அமைப்பினை உருவாக்கி அதன்கீழ்; ஒன்றுதிரள வேண்டும். அந்த அமைப்பு அந்தந்த நாடுகளில் தமது செயல்பாடுகள் மூலம் மக்களின் பேராதரவைப் பெறவேண்டும். அதேபோல் உலகம் முழுக்கவும் அதன் செல்வாக்கு விரிவடைவதன் மூலம் உலகளாவிய அமைப்பாக மாற வேண்டும். அந்த அமைப்பு உலகம் முழுமைக்கும் நல்வழிகாட்டும் அமைப்பாக மாறவேண்டும். அதன் வளர்ச்சி ஒரு காலகட்டத்தில் உலகின் வாழும் விதிகளைத் தீர்மானிக்கும் அமைப்பாக மாறவேண்டும். இதுவே என் விருப்பம் இதற்காக என் வாழ்நாளைச் செலவிடவேண்டும் என்பது லட்சியம்.

  ### நன்று, பல்வெறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகள் தோன்றி அவற்றால் ஆனா மாட்டிலும் முயற்சி செய்துள்ளான அல்லது செய்து கொண்டு தான் உள்ளது. அதையும் தாண்டி எதிர்மறை எண்ணங்கள் பரப்பப்பட்டு/கற்பிக்கப்பட்டு கொண்டுடிருகிறது, வாழ்க்கை ஓட்டத்தில் இயன்ற அளவு நேர்பட செல்வோம் என்பதே என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

   Delete
 7. மாயச்சூத்திரம் ஒன்று ஸ்ரீ ராமானுஜருக்கு அவர் குரு காதில் சொன்னார் ...............
  ஓம் நமோ நாராயணாய அதை அவர் உள்ளுக்குளே சொல்லிய வண்ணம் பக்தி நெறி நிற்க வேண்டும்
  ஓம் நமோ நாராயணாய மந்திரம் எதை தரும் ......குருவிடம் கேட்டார் .......நிம்மதி ஆனந்தம் எதையும் தாங்கும் வலிமை குரு உரைக்க .....ரகசிய காப்பு முடிந்தவுடன் மதில் மீது ஏறி எல்லோர்க்கும் சொன்னார்
  ஓம் நமோ நாராயணாய ........................நீங்கள் சொல்ல்கிற மந்திரம்
  1.இயற்கையை நேசி நீ இயற்கையின் ஒரு பகுதி
  2. அறிவியல் பார்வையில் வாழ்வை வாழ்ந்து பழகு
  3.உறைந்த மானுடனாய் இருப்பதை தவிர்த்து மானுட உயர் பண்புகளால் நீ தான் உனக்கு தெய்வம் என இரு
  4. யோசனையும் செயலும் பலனும் யாவர்க்கும் ஆன மாதிரி செய்..............
  இவைகள் உங்கள் கட்டுரைகள் காட்டும் பாதை ...............நடப்போம் உங்கள் உடன்

  ReplyDelete
 8. உங்களது உயர்ந்த எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் ...

  ReplyDelete