ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )கணக்கு வைத்துச் செலவு செய்தல். 

நமது வாழ்க்கையில் நாம் பல்வேறு வழிகளில் செலவு செய்கிறோம். நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒவ்வொருவரும் செலவு செய்ய வேண்டுவது அவசியம். வசதிக்கேற்ப செலவுகளின் அளவு வேறுபடுகிறது. 


முற்காலத்தில் பண்டங்களைக் கொடுத்துப் பண்டங்களைப்  பெறுவது அல்லது வேலை வாங்குவது என்ற பண்டமாற்றுமுறை இருந்தது. அது நடைமுறையில் கையாளுவதற்குக் கடினமாக இருந்தாலும் அவ்வளவு சிக்கலானதாக இல்லை. காரணம் அன்றைய மக்களின் வாழ்க்கை குறுகிய வட்டத்துக்குள் இருந்தது. தேவைகளும் உணர்வுகளும் அதற்கேற்றதாகவே இருந்தது. செலாவணி முறைகளும் லேவாதேவி முறைகளும் சிக்கலானதாக இல்லை. 


ஆனால் நவீன உலகில் நாணய செலாவணி ஏற்பட்ட பின்பு சேமிக்கப்பட்ட உழைப்பை பண்டத்துக்குப்பதில் பணமாகப் புழங்கும் முறை ஏற்பட்டபின் வரவு செலவு முறைகள் எளிதாக ஆனால் சிக்கலானதாக மாறிவிட்டது.


பண்டமாற்று முறை இருந்தபோது பண்டங்களுடன் உழைப்பு நேரடியாக சம்பத்தப் பட்டிருந்தது. ஆனால் அந்த அர்த்தத்தில் புழக்கத்துக்கு விடப்பட் டிருந்தாலும் பணம் அதன் உண்மையான மதிப்பை இழந்து அதேநேரம் மனிதன் அதைச் சுற்றிச் சுற்றி வரும் பொருளாகிவிட்டது. பண்டமாற்று முறையின்போது இருந்த கடினத்தன்மை இல்லாததால் ஏமாற்றுகளும் கடன் வரவு செலவுகளும் அதிகரித்து விட்டன. 

வரவைவிடச் செலவுகள் அதிகரிகும்படியான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளோம். ஓரு சமுதாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களும் மக்களின் வாங்கும் சக்தியும் ஒத்துப் போகும் போது ஆதாவது கிட்டத்தட்ட சமமாக இருக்கும் போதுதான் மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருக்கும். உபரி சக்தி சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டு சமுதாயம் மேலும் மேலும் முன்னேற்றமடையும். நிறையவே உபரியாக இருப்பின் அடுத்த மக்கள்கூட்டத்துக்கும் உதவ முடியும்.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் உற்பத்திக்கு ஈடான வாங்கும் சக்தி இல்லாத நிலை இருப்பதால் உற்பத்தியும் தடைப்படுவதோடு வாங்கும் சக்தி குறைவாக உள்ள நிலையில் தங்கள் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளக் கடன் வாங்கிக் கடன்வாங்கி மக்கள் கூட்டமே இன்று கடன்காரக் கூட்டமாகி விட்டது. 


வாங்கும் சக்தி குறைந்;த மக்களிடையே தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் கொண்டு விளம்பரம் செய்கின்றன. வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதில் போதுமான அக்கரை காட்டப் படுவதில்லை. வாங்கும் சக்தி அதிகரிக்கப் படாமல் தேவைகளும் விருப்பங்களும் அதிகரிப்பதன் காரணமாக சக்திக்கு மீறி செலவு செய்து கடனாளி ஆக வேண்டியுள்ளது. ஓட்டு மொத்தமான சமூகம் கடனின்றி நலமாக வாழும் நிலை ஏற்படுவது தேவை. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வாழ்வில் பண வரவு செலவில் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

வருவாய் கூடக் குறைய இருக்கலாம். ஆனால் நமது செலவுகளை வரவுக்கு இணக்கமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

மிகவும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டாலொழிய மன நிம்மதி பாதிக்கப்படாது என்ற உறுதி இருந்தாலொழிய கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். (சிறு சிறு பரிமாற்றம் என்ற அளவில் இருந்தால் பரவாயில்லை);. 

அதுமட்டுமல்ல கடன்வாங்கும் நிலை ஏற்படுவதை முன்கூட்டியே அறிவால் உணர்ந்து தவிர்க்க வேண்டும். நமது அபிலாசைகளையும் திட்டங்களையும் நடைமுறை சாத்தியம் என்ற வட்டத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டுச் செலவு செய்யவேண்டும்.நமது வரவினங்கள் குறிப்பட்ட கட்டு திட்டத்துக்குள் நின்று விடுகின்றன. ஆனால் செலவினங்கள் கட்டுப்படற்ற வகையில் பிய்த்துப் பிடுங்குகின்றன. 

அராஜகமான முறையில் செலவினங்களும் அவை சம்பத்தப்பட்ட உணர்வுகளும் மனதில் மோதிக் கொண்டே இருப்பதால் வரவைக் கணக்கில் கொள்ளாமல் செலவினங்களுக்கு இரையாகி விடுகிறோம். காரணம் நமது வரவின் எஞ்சியிருக்கும் அளவையோ அல்லது வரவுக்கும் செலவுக்கும் இடையே இருக்கும் சாதக பாதக அம்சங்களையோ எந்த நேரமும் மனதில் வைத்திருக்க முடியாது. 

எனவே சமூகம், வாழ்வியல், நாகரிகம், பண்பாடு, உறவுகள் காரணமாக வரவைவிட செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏராளம்.

நாம் செய்யும் செலவுகள் பலதரப்பட்டவை. அவற்றில் பல அவசியமானவை. பல அவசியமற்றவை. அவசியமற்ற செலவுகளுக்கு அடிப்படையே தாற்காலிகமாக எழும் உணர்வுகள்தான. 

அந்த அவசிய மற்ற செலவுகளைத் தூண்டும் தாற்காலிக உணர்வுகள் மறைந்துவிடும். ஆனால் அதன் விளைவாகச் செய்த செலவுகளையும் உழைப்பையும் திரும்பப்பெற முடியாது. அது விரயமாகவோ கடனாகவோ நம்மைப் பாதிக்கும் அம்சமாக விளங்கும். 


ஒரு மோட்டார் வண்டியில் புறப்படும்போதே அதில் இருப்பில் உள்ள எண்ணை எவ்வளவு தூரத்துக்கு வரும், இன்னும் நாம் போகவேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு எண்ணைய் பிடித்துக்கொண்டால் சரியாக இருக்கும், கைவசம் பணம் எவ்வளவு உள்ளது, என்பது போன்ற அத்தனை கணக்ககையும் கணநேரத்தில் எண்ணிப்பார்த்து தேவையான அளவு பணத்தை எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம். ஒரு சிறுபயணத்துக்காகவே இவ்வளவையும் எண்ணிப் பார்க்கும் நாம் வாழ்க்கைப் பயணம் சம்பந்தமாக ஏன் போதுமான அளவு எண்ணிப் பார்க்காமல் தவறுகிறோம்? நிறைய செலவுகள்; செய்தபின்னால் நினைத்துப் பார்த்தால் அவசியம் அற்றதாகவே படும். அத்தகைய செலவுகளைத் தவிர்க்க வெண்டும். அவசியமானதை மட்டும் செய்ய வேண்டும். ஒருபொருளை வாங்க அல்லது வேறொரு செலவினத்தைச் செய்ய எண்ணம் வரும்போதே இது அவசியம்தானா, இந்தச் செலவு தவிர்க்க முடியாததுதானா? இதைவிட முக்கியமான செலவு வேறு ஒன்றும் இல்லையா? என்று முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும். எது அவசியமானது எது தேவையற்றது என்பதை அவ்வப்போது மன ஊசலாட்டம் இல்லாமல் கறாராக முடிவெடுக்க வேண்டும.;ஒரு சமுதாயத்தின் வரவு செலவுத்திட்டங்கள் உறுதியானதாக இருக்கவேண்டுமானால் உற்பத்தியும் வாங்கும் சக்தியும் சமமாக இருக்கவேண்டும் என்பதுபோலவே தனி மனிதவாழ்விலும் வரவினங்களும் செலவினங்களும் சமமாக இருந்தால்தான் கடனும் பிரச்சினைகளும் அற்ற வாழ்வு வாழமுடியும். அல்லது வரவினங்கள் செலவினங்களைவிடக் கூடுதலாக இருக்கவேண்டும்.

இதற்குப் பிரதானக் கடமையாக தினமும் செய்யும் செலவுகளை எழுதிவைக்க வேண்டும். அப்போதுதான் மாதா மாதம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல சம்பளம் அல்லாத வரவு உள்ளவர்கள் தங்கள் வரவினங்களையும் முறையாக எழுதி வைக்க வேண்டும்.


இப்படி வரவு செலவுகளை முறையாக எழுதி வைப்பதன் காரணமாகத் தேவையற்ற செலவுகளின் மொத்தப் பரிமாணம் எவ்வளவு, அது நமது வரவில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மனதார உணரும் வாய்ப்பு ஏற்படும். அதன் காரணமாக எத்தகைய செலவுகளைத் தவிர்க்க வேண்டும், எத்தகைய வீணான செலவுகளைத் தவிர்த்தால் இன்னும் உருப்படியான செலவுகள் என்னென்ன செய்யலாம் என்ற அனுபவ ரீதியான உணர்வும் கிடைக்கும். மேலும் வரவு செலவுக்கு இடையேயான நிலைமைகள் தெரிய வருவதால் மேலும் மேலும் வரவினங்களைப் பெருக்கவும் அதற்காக உழைக்கவும் ஆர்வம் பெருகும். அதன் காரணமாக வரவுநிலைமைகள் என்றும் செலவினங்களைவிட மேலோங்கும். அதனால் கடன்பட்ட நிலைமைகளில் கலங்கி நிற்கும் நிலைமைகளைத் தவிர்ப்பதோடு அர்த்தமுள்ள வாழ்கை வாழவும் உதவியாக இருக்கும். மேலும் நமது அனுபவங்களை நமது சந்ததியர்க்கும் பிறர்க்கும் எடுத்துச்சொல்லும் தகுதி உடையவர்களாக ஆகமுடியும். எனவே கணக்கு வைத்து செலவு செய்வதும் உயர்ந்த வாழ்க்கை நெறிமுறைகளுள் ஒன்றாகும்.

No comments:

Post a Comment