ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )


ஒழுங்கு.

இந்த உலகமும் அதில் அடங்கியுள்ள சகல விதமான சக்திகளும் அவற்றிற்குண்டான கோட்பாட்டின்படி முறையாக இயங்குகின்றன. அணுவுக்குள் அடங்கியுள்ள எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்றவற்றின் இயக்கத்தில் இருந்;து எல்லையற்ற அண்டவெளியில்; நிகழும் அத்தனை இயக்கங்களும் அதனதன் இயக்க விதிப்படி முறையாக இயங்குகின்றன. 


இவ்வுலக நிகழ்வுகளும், பெருமழையும், வெப்பமும், பனியும், குளிரும், பிறப்பும், வாழ்வும், இறப்புமான உயிரின வாழ்க்கையும்கூட பொதுவான விதிமுறைகளுக்கு இயைந்தேதான் நடக்கின்றன.ஓன்றுபடுதலும் முரண்படுதலும் பிரிதலும் வேறொன்றாய் மாறுதலும் போன்ற கோடிக்கணக்கான வடிவங்களில் இயக்கம் நடந்துகொண்டே உள்ளது. 
மனித வாழ்வில் வாழ்வைப் புரிந்து கொள்வதன் கோளாறு காரணமாகவும் வளர்ச்சி விதிகளுக்கு இயைந்து இன்பகரமான வாழ்வை வாழத் தவறுவதன் காரணமாகவும் நமது உயிரின வாழ்வின் போக்கை எதிரும் புதிருமான வழிகளில் பிரயோகித்து வாழ்வைத் துன்பமாக உணர்ந்து வருந்துகிறோம். அத்தகைய முரண்பாடான செயல்கள்கூட இயற்கையின் விதிகளுக்கு முரணானதல்ல. இயற்கையின் ஒரு உருவாக்கமான நமது மனித இனத்தின் வளர்ச்சிப் பாதையில் தோன்றும் அத்தனை விதமான உணர்வுகளும் உயிருள்ள உடம்பில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின்- தொகுப்பின் - தேவை, முயற்சி, நிறைவு, நோக்கம், இன்பம், துன்பம் போன்ற சலனங்களே. அந்த சலனங்கள் அந்த உயிரினத்தின் உயிரியல் அதைத் தொடரந்து மனவியல் போக்கிற்கு இயைந்திருக்கும் நேரத்தை இன்பமென்றும் மாறுபடும் நேரத்தைத் துன்பமென்றும் கூறுகிறோம்.

இவ்வுலகில் தனியொரு மனிதன் மட்டுமோ அல்லது வேறு தனியொரு உயிரினம் மட்டுமோ அல்லது தாவர வகைகள் மட்டுமோ வாழவில்லை. கோடிக்கணக்கான மக்கள்கூட்டம், கோடிக்கணக்கான கும்பலைக்கொண்ட கோடிக்கணக்கான உயிரினங்கள், அதேபோல் எண்ணற்ற தாவர வகைகள் இவ்வளவும் தினந்தோறும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடியும்படியான வாழ்க்கை முறையைக் கொண்டது இவ்வுலகம். 

எண்ணற்ற வகையிலான இயற்பியல் வேதியியல் மாற்றங்கள் இடையறாது நிகழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கும் இந்த பூமியை நம்பித்தான் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இத்தனை வகையான உயிர், தாவர வகைகள் வாழுகின்றன. வாழ்ந்துதான் ஆக வேண்டும். 

அத்தனை விதமான உயிரினங்களின் வாழ்க்கை முறையில் இயற்கையிலேயே ஒரு சமநிலை இருக்கிறது. இருந்துதான் ஆகவேண்டும். அத்தகைய சமநிலை தரும் வாய்ப்பால்தான் அந்தந்த நேரத்துக்கும் இடத்துக்கும் தகுந்த மாற்றங்கள் எல்லா இயக்கங்களிலும் வெளிப்படுகின்றன. 


ஆனால் இவ்வுலகில்; உள்ள கோடிக்கணக்கான உயிரினங்களில் மனித இனம்மட்டுமே தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கருவிகளையும் இயற்கைச் சக்திகளையும் பயன்படுத்திக் கொண்டது. அதற்கு ஏற்றாற் போன்ற உடலமைப்பு உதவியது. பின் வாழ்க்கைமுறை மாற மாற உடலமைப்பும் மிகவும் மாறியது.மனித இனம் வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத புதிய சக்தியோடு உலகில் வளரத்தொடங்கி கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதும் அதன் வாழ்கைமுறை மாறுகிறது. விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மாறி பேச்சு. எழுத்து, மொழி, கருத்து, தத்துவம், அறிவியல், அரசியல், கூட்டுறவு எனப் பல படித்தரங்களில் விலங்குகளில் இருந்து வெகுதூரம் விலகி மனிதன் முற்றிலும் வேறுபட்டவன் ஆகிவிட்டான்.இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் நேரடியாக இயற்கையுடன் போராடி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அல்லது இயற்கையின் போக்கில் வாழ்ந்து கொண்டிந்;த நிலையில் மனித இனம் மட்டும் இயற்கையின் போக்கைத் தனது வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வசப்படுத்தி அதன்வழி முன்னேறத் தொடங்கி இன்றுவரை அதேமுறை நீடிக்கிறது.

இதன் காரணமாக இயற்கையோடு அனைத்து உயிரினங்களுக்கும் இருந்த சமமான உறவுகள் மாறி மனிதன் மட்டும் இயற்கையின் போக்குகளிலும் மற்ற உயிரினங்களின் வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படுத்தி வாழும் வல்லமை பெற்றான். ஆதாவது இப்பூவுலக நிகழ்வுப் போக்குகளில் மனித இனத்தின் சார்புடைய தன்மை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. 

அதன்காரணமாக வாழ்வும் அழிவும் அனைவருக்கும் சமமாக இருந்த நிலைமாறி மற்ற உயிரினங்களின் அழிவும் மனித இனத்தின் வாழ்வும் வளம் பெற்றன. 

மனிதன் தொடர்ந்து தனது தேவையின் பயனாய், வளர்ந்த அறிவியலின் பயனாய் அனைத்துத் துறைகளிலும் வல்லமை பெற்றான். அதோடு கொள்ளை நோய்களை முன்கூட்டியே தடுப்பது உள்பட மருத்துவத் துறையிலும் மாபெரும் முன்னேற்றமடைந்து சாவின் விகிதத்தைக் குறைத்துத் தன்னினத்தைப் பெருக்க மனிதனால் முடிந்தது. 

அதன் காரணமாக இயற்கைச் சமநிலை பாதிக்கப் பட்டதோடு தன்னினத்தின் பெருக்கம் தனக்கே துன்பமாய் மாறும் நிலை மனித இனத்துக்கு ஏற்பட்டுள்ளது. 


இந்த நிலையில்தான் மனித இனத்தின வாழ்க்கை முறை எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

முற்கால மக்களின் முன்பு இயற்கையும் பிற உயிரினங்களும்தான் முன் நின்றன. அவற்றுடனான போராட்டம்தான் வாழ்க்கை என்று இருந்தது. ஆனால் மனிதனின் வேறுபட்டபாதையிலான வளர்ச்சியின் காரணமாக இன்று இயற்கையுடனான போராட்டத்தின் தன்மை வலுக்குன்றியும் சக மக்களுடனான போராட்டம் வலுப்பெற்றும் முன்னிற்கிறது. 

இயற்கையையும் பிற உயிரினங்களையும் வசப்படுத்தியதன் அல்லது பயமுறுத்திப் பணியவைத்ததன் காரணமாக மனித இனம் பெற்ற வெற்றி இன்று தமக்குள்ளேயே நடக்கும் முடிவற்ற போராட்டமாக மாற்றமடைந்து விட்டது.

மனித நாகரிகத்தின் வளர்ச்சி தமது வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக்கொள்வதுடன் அல்லது தம் விருப்பம்போல் இயற்கையையும் பிற உயிரினங்களையும் ஆட்டிப்படைத்ததுடன் நிற்கவில்லை. மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையே இருந்த விகிதாச்சாரமும் ஒழுங்குமுறையும் தவறான பாதையில் பயணித்தது. 

இயற்கையில் சராசரியாக மக்கள் கூட்டம் எந்த அளவில் இருந்திருந்தால் தாமும் தம்மையல்லாத பிற உயிரினங்களும் செழிப்புடன் வாழப் பொருத்தமாக இருந்திருக்குமோ அந்த அளவில் மக்கள் கூட்டம் நிற்கவில்லை. 

மனித இனத்தின் வளர்ச்சி என்பதே உலகத்தின ஒட்டு மொத்தமான உயிரினத் தாவர வகைகளின் அவசியத்தன்மைக்கு, அளவுக்கு இயைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஒழுங்கு தவறியதால் எல்லாமே மனிதனுக்காக என்ற கோட்பாட்டுடன் இயற்கையின் ஒழுங்கு மனிதனால் தவறத் துவங்கியது. மனிதருக்குள்ளேயே எனக்கு எனக்கு என்ற எண்ணங்கள் வலுப்பெற்று வாழ்க்கையே போர்க்களமாகிவிட்டது.


எவ்வளவுதான் நவீன அறிவியல் வளர்ந்திருந்தாலும் அதன்நோக்கமும் செயல்முறையும் இயற்கையையும் தாவரங்களையும் மற்ற உயிரினங்களையும் தம் வாழ்க்கைக்கு மேலும் மேலும் உதவும்படி மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர அறிவியல், முன்னேற்றம் என்ற பெயரால் மனித இனத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தீங்கான எதிர்விளைவை உண்டு பண்ணும் இயற்கைச் சம நிலையைச் சீர்குலைத்தல் என்றவழியில் செல்லக்கூடாது. பிற உயிரினங்களையும் தாவரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதைப் போலவே சமுதாயத்திலுள்ள அனைத்துப்பிரிவு மக்களுடனும் பொதுவான கருத்து அடிப்படையில் ஒத்தியைந்த வாழ்வு வாழும் பண்பாடு வளர வேண்டும்.

ஓவ்வொரு தனிமனித வாழ்விலும் இப் பிரபஞ்சம், உலகம், இயற்கை, தாவரம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி விதிகளைப் புரிந்து கொண்ட பின்னணியில் நடைமுறை ஒழுங்கமைந்து இருக்க வேண்டும். நமது எண்ணம், சொல், செயல் யாவும் பொதுவான சமுதாய வாழ்வின் நலனுக்கு முரண்படாத வகையில் மேலும் மேலும் இணக்கமாகவும் வழிகாட்டுவதாகவும் அமைய வேண்டும். 


வாழ்க்கைக் கடமைகளைச் செய்யும் போது நமது இயக்கங்கள் பிசகின்றி சீராக இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையினைப் புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளையெல்லாம் அனுசரித்து அதற்குப் பொருத்தமான வழிமுறைகளைக் கையாண்டு மனதுக்கு இதந்தரும் சரியென்று படும் வாழ்க்கை வாழ்வதுதான் வளர்ச்சி விதிகளுக்குப் பொருத்தமானதும் உண்மையில் நாம் இன்பம் என்று நினைக்கும் அனுபவத்தைப் பெறுவதும் ஆகும்.சராசரி வாழ்க்கைமுறை அல்லது நியாயமான வாழ்க்கைமுறை என்பது புரிந்து கொள்ளப்படாமல் தாறுமாறான முறையில் வாழ்க்கை அமைந்துள்ளதால் பெரும்பாலும் தவறான நடைமுறைகளை நாம் காண்கிறோம். இத்தகைய நிலையில் சராசரி நியாயமான வாழ்க்கை நிலையை அடைய அல்லது பாதுகாக்க பல நேரங்களில் பிறருடன் முரண்பாடுகளும் சச்சசரவுகளும் ஏற்படுவது இயல்பே. 

சரியான நிலைக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் நியாயமானதே. அது எந்தச் செயலாக இருந்தாலும் சமுதாய நலன்கருதி செய்யப்படின் அது நியாயமானதே!எனவே நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் தெளிவாக, சீராக, உறுதியாக, பிறருக்குப் பொருத்தமாக, சமுதாயத்துக்குப் பொருத்தமாக, எல்லோரும் மகிழ்ச்சிகரமான வாழ்வை அடைய உதவிகரமாக, இயற்கையின் போக்கில் எவையெல்லாம் நன்மையும் இன்பமும் தருவதாக உண்மையில் உணரப்படுகிறதோ அத்தகைய செயல்களைக் செய்கின்ற முறையில் வாழ்வின் கடைசிவரை இந்த மனித வடிவில் வாழும் வரை சிறப்பாக வாழ வேண்டும். அதுதான் உண்மையான ஒழுங்கு ஆகும்.

No comments:

Post a Comment