ss

Tuesday, April 24, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )


குடும்பத்தில் கடமைகள்.

கோடானுகோடி மக்கள் வாழும் இவ்வுலகில் அனைவருமே நேரடியான சொந்த பந்தங்களாக இருக்க முடியாது. 

தாய், தகப்பன், கணவன், மனைவி, சகோதர சகோதரியர், பெற்ற பிள்ளைகள், உற்றார் உறவினர், உள்ளுர்க்காரர், ஒரேபகுதியைச் சேர்ந்தவர், ஒரே மொழிபேசுபவர், ஒரே ஜாதிமதத்தைச் சேர்ந்தவர் ஒரே நாட்டுக்காரர் இதுபோன்ற அனேக முறைகளில் மனித உறவுகள் விளங்குகின்றன. ஆனாலும் அத்தனை உறவுகளும் ஒரே மாதிரியான தன்மை படைத்தவை அல்ல.


இன்ப துன்பங்களில் பங்கேற்கும் பாச உணர்வு, உணர்வின் நெருக்கம், நட்பின் ஆழம், மற்ற வகையிலான சமூகப்பற்று என்பதன் அடிப்படையில் உறவின் தன்மை வேறுபடுகிறது.அந்தப் பல்வகையான உறவுகளில் குழந்தை முதல் இடைவிடாமல் பின்னிப் பிணைந்து வாழ்வதாலும், வளர்ப்பின் போது பாசப் பிணைப்புடன் பெற்றோர் வளர்ப்பதாலும், அவர்கள் அரவணைப்பில் கட்டுப்பாட்டில், நெருக்கமான பந்தத்துடன் உடன்பிறந்தோர் வாழ்வதாலும் வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியர் கட்டுண்டு வாழ்வதாலும் அதேபோல் வாழையடி வாழையாக வரும் பாசப் பிணைப்புகளாலும் கிளைக்குடும்ப உறவுகளாலும் குடும்ப உறவுகள் மட்டும் மற்ற உறவுகளைவிட முக்கியத்துவம் பெறுகின்றன. 

மற்ற உறவுகளைக் காட்டிலும் கணவன்மனைவி, தாய்தந்தையர் பிள்ளைகள் என்ற உறவுகள் மிக இறுக்கமானதாக விளங்குகிறது. இந்த வகையான உறவு மனித இனத்தில் மட்டுமல்ல. பிற உயிரினங்களிலும் உயர்வானதே. பிற உயிரினங்களைப் பொருத்தவரை வாழ்நாள்முழுவதும் அந்த உறவு நீடிப்பதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். மனித இனத்தைப் பொருத்தவரை சொத்துரிமையையும் இன்னொரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
பெற்றோர், கணவன்மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரியர், உறவினர் என உறவின் நெருக்கம் படிப்படியாக விரிவடைந்து, தொடர்புகள் பலவீனம் அடைந்து கடைசியில் சமூகம் என்ற பொதுவான அம்சத்துக்கு வந்து சேர்கிறது.


இதில் முதல் படியில் உள்ள குடும்ப உறவுகளைப் பேணிக் காக்கும் கடமையில் இருந்து நாட்டு மக்களுக்காகவும் மனித இன மேம்பாட்டுக்காகவும் ஒட்டு மொத்த உலக நலனுக்காகவும் ஆற்றும் கடமைகள் வரை ஒவ்வொருவரது கடமையும் பலதரப்பட்டவையாகும். இதில் ஒவ்வொருவரும் தான் பிறந்த, தான் வாழும் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிடத்துக்கு வருகின்றன. உலகளாவிய சிந்தனை கொண்டவராயினும் உலக மக்களனைவரையும் தனது குடும்பத்தாரைப் போல் நேசிப்பவராயினும் தன் சொந்தக் குடும்பத்துக்கான கடமைகளில் இருந்து தப்ப முடியாது. 

அப்படித் தப்ப நினைப்பவர்கள் பொறுப்பற்றவர்களாகத் தூற்றப்படுவர். இல்லாவிட்டால் பந்த பாசங்களைக் கடந்த அல்லது சொந்தக் குடும்பப் பொறுப்புக்கள் இல்லாத அல்லது அவரது குடும்பப் பொறுப்புக்கள் ஏதும் மீதமற்ற ஒருவராக இருக்க வேண்டும். இத்தனை கட்டுக்கள் இருந்தும் அதையெல்லாம் தாண்டி பொது நலன் ஒன்றை மட்டுமே கருதிச் செயல்படும் சுத்த வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது மிகமிக அரிது. சாதாரண நிலையில் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தில் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்போர் மரியாதையைப் பெற முடியாது. எனவே குடும்பத்தில் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும். குடும்பக் கடமைகளில் பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகள், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வெண்டிய கடமைகள், பிள்ளைகள் பெற்றொருக்கும் தங்களுக்குள்ளேயும் செய்யவெண்டிய கடமைகள், உறவினர் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய கடமைகள், பொதுவான கடமைகள் என சில முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.


பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் பிள்ளைகள் மட்டுமல்ல அவர்கள்வழிச் சந்ததிகளும் அடங்குவர். 

பெற்றோர் பத்துமாதம் சுமந்து பிள்ளை பெற்று விட்டதை மட்டும் முதல் பெருமைக்குரிய கடமை என்று கருதினால் அது மடமையாகும். எந்த ஒரு பிள்ளையும் அது விரும்பிக் கேட்டு பெற்றோரால் சுமந்து பெறப்படுவதில்லை. எனவே பத்துமாதம் சுமந்து பெற்றதற்காக மட்டும் யாரும் நன்றிக்கடன் பட வேண்டிய அவசியமில்லை. 

மேலும் பிள்ளையைப் பெறுவோர் தமது இச்சையைத் தீர்த்துக் கொள்ளவும் சந்ததிகளைப் பெற்று வளர்க்கும் பாரம்பரிய வழக்கத்தின்படியும் பிற்காலத்தில் தங்களைப் பேணிப் பாதுகாக்கும் கடமைகளைச் செய்யவும்தான் பிள்ளைகளைப் பெறுகிறார்களே தவிர இல்லாத ஒரு உயிருக்குச் செய்யயும் உதவியாக அல்ல. 

ஆனால் அப்படிப்பெறும் குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் செலுத்தும் அன்பிலும் கற்பிக்கும் நல்ல நெறிமுறைகளிலும் வழிகாட்டும் அம்சங்களிலும் ஒருவருக்கொருவர் காட்டும் பாசப் பிiணைப்பினாலும் தான் பெற்றோரின் பாத்திரம் சிறப்புப் பெறுகிறது.  பெறவேண்டும். அது நாளை பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகளைக் கற்றுக் கொடுக்கும் அம்சங்களாக விளங்க வேண்டும். 

அதைவிட்டு அனைத்து உயிரினங்களின் பொதுப் பண்பான சுமந்து பெற்றதை மட்டும் பாராட்டுவது மரபுவழி வந்த பண்பாக இருக்கலாமே தவிர பெற்றோர்க்குரிய பெருமையைப் பறைசாற்றும் அம்சமாக இருக்க முடியாது.

எனவே ஒவ்வொருவரும் ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெறும் வண்ணம் உடல் நலம் பெற்றிருத்தல் வேண்டும். பெற்ற குந்தைகளை ஏழையாயினும் பணக்கார் ஆயினும் நேடியாகப் பாசத்தைப் பொழிந்து வளர்க்க வேண்டும். நல்ல நெறிகளைப் புகட்ட வேண்டும். தாம் வாழும் காலம் வரையிலும் பிள்ளைவழிப்பட்ட சந்ததிகளைக்கூட அன்பு பாராட்டி தம் முதிர்ந்த அனுபவங்களை உள்ளடக்கிய நெறிகளைப் போதிக்க வேண்டும். 

தம் பிள்ளைகள் பெரிய மகான்களாக வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்க வேண்டும். பொருளியல் வாழ்வில் பெற்ற பிள்ளைகளுக்கு உதவும்படியாக காலம்பூராவும் சிந்தனை இருக்க வேண்டும். அவர்களுக்குக் குடும்ப வாழ்வு உருவாக்குங்கால் தமது அனுபவத்தில், உலக அனுபவத்தில் கற்றுக்கொண்ட படிப்பினைகள் அடிப்படையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். வழிகாட்டவேண்டும். 

ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளுக்குத் தவறாமல் மனித நேயத்தைப் போதிக்க வேண்டும். இவ்வுலகையும் உலக வாழ்வையும் சரியாகப் புரிந்து வாழக் கற்பிக்க வேண்டும். மொத்தத்ததில் தம் பிள்ளைகள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற குறிக்கோள் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பிள்ளைகளின் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றபடி அவர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் கணக்கிலெடுததுக்கொள்ள வேண்டும். மதிக்கவேண்டும். 


பெற்றோர் பிள்ளைகள் என்ற உறவைப் போலவே கணவன் மனைவி என்ற உறவும் அதற்கு இணையான அல்லது அதைவிட உயர்ந்த உறவாகும். ஆண், பெண் என்ற இருபாலோராய் உள்ள மனித இனம் தொடர்ந்து பல்கிப் பெருக வாழையடி வாழையாய் இருக்கும் உறவின் உயர்ந்த வடிவமே கணவன் மனைவி உறவாகும். கணவன் மனைவி உறவென்பது சகல வழிகளிலும் வெளிப்பட வேண்டிய அன்புமயமான உறவாகும். 


பொதுவாகக் குடும்ப உறவுகளே பொருளாதார உறவுகளைப்போல சிறுமைப்படுத்தப்பட்ட காலம் இது. அதில் கணவன் மனைவி உறவும் விதி விலக்கல்ல. கணவன் மனைவி உறவு மலரும் திருமண காலத்திலேயே வர்த்தகம் போலப் பேரம் பேசும் அவலங்களைக் காண்கிறோம். அதன்மூலம் தாம்பத்தியம் மலரும் முன்னமே சுயநலம் என்னும் தீமை புகுந்து அதன்வழி பிறக்கும் பல் வேறு எண்ணங்களும் உயர்ந்த வாழ்க்கைக்குப் பொருந்தாததாகி விடுகிறது. 

கோணலாய்த் துவங்கிக் கோணல்மாணலாய் நடத்தப்படும் குடும்ப வாழ்வில் அவர்களுக்கென்று ஏற்பட்ட கடமைகள் மதிப்பிழந்து போய்விடுகின்றன. நிறையப் பேருக்கு அத்தகைய கடமைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதன் காரணமாய் ஏற்ப்படும் விளைவுகளால் குடும்பத்தின் அத்தனை உறவுகளும் சிறுமைப் பட்டுப் போகும். ஆரோக்கியமற்ற உறவுடன் வாழும் எந்தக்கணவன் மனைவியும் தம் பிள்ளைகளுக்கு நல்வழி புகட்டும் தகுதியைப் பெறமாட்டார்கள்.

எனவே கணவன் மனைவி உறவு அதற்குண்டான சிறபபுடன் இருக்க வேண்டுமெனில் இருவரும் ஒருவருக்கொருவர் ஒரே மாதிரி மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும். ஒருவர் மற்றவரின் பலம், பலவீனங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் பொறுப்பேற்றுக் குடும்பத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும். திருமணத்துக்கு முன்பே தனக்கு வரப்பேகிற கணவனோ மனைவியோ எப்படி இருக்க வேண்டுமென பண்பாடு ரீதியாக விரும்புகிறோமோ அப்படிப்பட்டவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னால் தெரிய வருகின்ற குறை நிறைகளைப் பக்குவமாகக் கையாண்டு குறைவில்லா வாழ்வாக மாற்ற வேண்டும். யாருக்கும் யாரும் அடிமைப்படுதல் மட்டுமல்ல அப்படிப்பட்ட எண்ணமே கூடாது. 


கணவனின் பெற்றோரை மனைவியும் மனைவியின் பெற்றோரைக் கணவனும் உயர்வாக மதிக்க வேண்டும். மற்ற உறவினர் விசயத்திலும் அப்படியே. அதன்முலம் கணவன் மனைவி உறவில் அன்பு பெருக்கெடுத்து ஓடும். சுருங்கச் சொன்னால் நலன்பயக்கும் அத்தனை வகையான உறவுகளின் தன்மைகளும் கணவன் மனைவி உறவில் வெளிப்படுதல் வேண்டும். அதுதான் சிறந்த இல்வாழ்க்கை. அதே போல் பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் சிறப்பானவை ஆகும்.  
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை . 
என்னோற்றான்கொல் எனும் சொல்’’என்னும் வள்ளுவனின் குறளே அதற்குப் போதுமான விளக்கத்தைக் கொடுக்கிறது. ஆதாவது இப்பேர்ப்பட்ட பிள்ளைகளைப் பெறப் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ என்று மற்றவர்கள் சொல்லும் வண்ணம் வாழ்வதுதான் பிள்ளைகள் பெற்றொருக்குச் செய்யும் கடமை ஆகும்.

பத்து மாதம் சுமந்து பெறுவது மட்டும் நன்றிக்கடன் பட வேண்டிய அளவு சிறப்பான கடமை ஆகி விடாது என்பது பெற்றோருடைய கடமைகளை வலியுறுத்தச் சொல்லப்பட்ட கருத்தே யொழிய அது பிள்ளைகளுக்குப் பொருந்தாது. 

கொடூரமான தீயவர்களாய் இருந்தாலொழிய பெற்றோரை மதித்துப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது பிள்ளைகளின் உயர்ந்த கடமையாகும். காரணம் மற்ற எந்த உயிரினத்துக்கும் இல்லாத மனிதனுக்கே உரித்தான மனிதாபிமானம் வழிப்பட்ட அன்புநெறியாகும் அது.


எனவே பிள்ளைகள் பெற்றோரை மதித்து அவர்கள் விரும்பம் நன்னெறியில் மட்டுமல்ல அதனினும் மேன்மக்களாய் விளங்க வேண்டும். காலமாற்றத்துக்கு ஏற்ப முந்தைய தலைமுறையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக விளங்கவேண்டும். 

ஆக ஒவ்வொருவரும் அவர்களின் பெற்றோர் சாகும்போது தம்பிள்ளைகள் வாழ்வாங்கு வாழ்கிறார்கள் என்ற பெருமிதத்துடன் சாகும் வண்ணம் வாழ வேண்டும். பெற்றோர் தம் பிள்ளைகள் நன்கு வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தம்மை வருத்திக்கொண்டு பிள்ளைகளுக்கான கடமைகளைச் செய்வதைப் போலவே பெற்றோரின் வயோதிகமான பலவீனமான காலத்தில் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்கள் மனம் மகிழும் வண்ணம் சேவை செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். பெற்றோர் என்பதில் அதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதியவர்களும் அடங்குவர். ஒரே குடும்பத்தில் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்குள் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உண்டு. திருமணத்துக்கு முன்போ அதற்குப்பின்போ என்றும் அன்பு மாறாமல் இருக்க வேண்டும். ஒருவர் நலனில் ஒருவர் மிகுந்த அக்கரை கொண்டிருத்தல் வேண்டும் மூத்தவர் இளையவருக்கு வழிகாட்டக்கூடிய, சகிப்புத்தன்மை கூடுதலாய்ப் பெற்ற பண்புடையவராய் விளங்க வேண்டும். மூத்தவர்கள் தமக்கு இளையவர்களுக்கு தாய்தந்தையரைப் போன்றவர் ஆவர். ஒருவர் காலில் படுவது மற்றவர் கண்ணில் படுவதைப்போல் உணரும் அன்புள்ளம் கொண்டோராய் இருக்க வேண்டும். இறுதிக் காலம் வரையிலும் தீங்கு பயக்கும் எண்ணங்களுக்கு இடங் கொடுக்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒத்துழைத்து அடுத்த தலைமுறையினர்க்கு முன்னுதாரணமாய் வாழ வேண்டும்.

அதேபோல் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அவரவர் வழியில் உறவு கொண்டிருக்கும் அனைத்து உறவினர்களுடனும் சுமூகமான உறவு கொண்டிருக்க வேண்டும். 

ஒவ்வொருவருடைய பந்துக்களையும் மதித்து நடப்பதன்மூலம் தமக்குள் பாசமும் நேசமும் மேலும் மேலும் இறுக்கமாகும். மாமியார் மாமனாரைப் பெற்றோரைப்போல் மருமகள் எண்ணுவதும் மருமகளைத் தம் பெற்ற பிள்ளையைப் போல் மாமனார் மாமியார் எண்ணுவதும் உயர்ந்த பண்பாடு ஆகும். மருமகன்களும் அப்படியே. 

அதேபோலக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய நண்பர்களையும் மற்றவர் மதிக்க வேண்டும். ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் மற்றவர் மதிக்க வேண்டும். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட திறமைகளை மற்றவர்கள்; பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். 

அதேபோல் யார் தவறு செய்தாலும் மற்றவர்கள் அதைப் பக்குவமாகத் திருத்த வேண்டும். ஓவ்வொருவரும் தத்தம் கருத்துக்களையும் திட்டங்களையும் மற்றவர்மேல் திணிக்கக் கூடாது. அதன் நல்ல அம்சங்களை எடுத்துச் சொல்லி அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். 

சொத்து விசயங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்கு தன்னைவிடக் கூடுதலாக விட்டுக் கொடுக்க மனப்பூர்வமாக விரும்ப வேண்டும்;. பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டவேண்டும். 


ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எந்தத் தொழிலாயினும் அந்தத் தொழில் சிறக்க அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு உழைக்க வேண்டும். குடும்பத்தின் பொது நலனில் ஆண் பெண் வயது வித்தியாசமின்றி அனைவரும் அக்கரை கொண்டு செயல்பட வேண்டியது பொதுவான கடமை ஆகும். பொது வாழ்க்கை, நண்பர்கள், காதல், திருமணம் போன்ற வற்றில் ஒவ்வொருவருடைய நியாயமான உணர்வுகளை மற்றவர் அங்கீகரித்தலும் தவறுகளைத் திருத்த முயலுவதும் பொதுவான கடமைகள் ஆகும்.

குடும்ப வாழ்வில் உறவுகள் இத்தகைய உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டியிருப்பினும் நடைமுறையில் பெரும்பாலும் அவ்வாறு இல்லை. ஓவ்வொருவரும் இத்தகைய உயர்ந்த பண்பாடுள்ள குடும்பங்களாக தம் குடும்பமும் மற்றவர்களும் மாறத் தொடர்ந்து முயல வேண்டும். 


குடும்பத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும்;. அவர்க்குண்டான கடமைகளைச் சரிவரச்; செய்யாமல் விடும்போது முரண்பாடுகள் தலையெடுத்து பின்னர் அதுவே தீங்காக மாறும். ஒரு கட்டத்தில் தீராப் பகையாக ஆகிவிடுவதும் உண்டு. 

தவறு செய்பவர்களைத் தொடர்ந்து திருத்த முயற்சி செய்தும் திருந்தாத, குடும்பத்துக்கு மேலும் மேலும் தீங்கு செய்துவரும், சமூகவிரோதத் தன்மை கொண்ட, இனித் திருத்தமுடியாது என்ற நிலைக்குச் சென்ற, தீமையே வடிவான, பிறர் துன்பஙகளை லட்சியம் செய்யாத எவரையும் குடும்ப உறுப்பினர் தகுதியை விட்டுத் தூக்கி எறியத் தயங்க வேண்டியது இல்லை. 

அத்தகையவர்கள் தாயோ, தகப்பனோ, சகோதர சகோதரிகளோ, கணவன்மனைவியோ, பிள்ளைகளோ யாராக இருந்தாலும் குப்பைகளைப்போல் தூக்கி எறிந்துவிட வேண்டும். அத்தகையோர் மனித இனத்தில் வைத்துப் போற்றத் தகுதியற்றவர் என்பதால் தூக்கி எறியத் தயங்க வேண்டியதில்லை.

தீயவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் தவறுகளைச் சரி செய்ய முடியாதவர்களை, தவறான செயல்பாட்டில் பிடிவாதமாக இருப்பவர்களை, நன்றி கெட்டவர்களை, சூழ்நிலைகளால் மனம்மாறிப் பண்பாடு குறைந்தவர்களை. அக் குறைபாடுகளைச் சரி செய்ய சந்தர்ப்பமோ சாத்தியமோ இல்லாத பட்சத்தில் அத் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வரை விலக்கி வைப்பது நல்லது. 

அதன்மூலம் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் மனம் புண்பட்டவர்கள் ஆற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படும். குறைபாடுகள் களையப்படாவிடில் நிரந்தரமாகப் பிரிந்து விடுவதில் தவறில்லை. ஆனால் மற்றவர்கள் சம்பந்தமான உறவுகளில் குடும்பக் கடமைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தீமைகளைக் களைய வேண்டும். தவறானவரகள் மேல் ஏற்படும் சலிப்பால் உயர்ந்த பண்புகளைக் கைவிடக்கூடாது. 


எனவே நாம் நமது வாழ்வின் பிரதான பகுதியான குடும்ப வாழ்வில் அதற்குரிய உயர்ந்த கடமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் சமுதாய வாழ்விலும் பிரதிபலிக்கும். 

அத்தகைய உயர்ந்த பண்பாடு வளரும் அளவு தீமைபயக்கும் முரண்பாடுகளைக் கொண்ட, மோசமான கலாச்சாரத்தின் செல்வாக்கில் சிக்கியுள்ள, சுயநலமே பிரதான பண்பாடாய் மாறிப்போயுள்ள, தனிமனித ஒழுக்கத்தில் குறைபாடுள்ள, மனித நேயம் என்றால் என்னவென்றே தெரியாத கோடானுகோடி மக்களைக்கொண்ட, அறியாத அப்பாவிகளாகவும் அடிமைகளாகவும் ஏமாளிகளாகவும் எண்ணற்ற மக்கள் வாழும் இவ்வுலகம் அதன் வளர்ச்சிப்போக்கில் அற்புதமான அம்சங்களை உள்ளடக்கிய ஆனந்தமயமான உலகமாக மாறும். 

No comments:

Post a Comment