ss

Monday, April 16, 2012

அரசியல் ( 1 )


எது அரசியல்

கருத்தோட்டம் (1)

அரசியல் என்றால் என்னவென்று நாம் புரிந்திருக்கிறோம்? அரசியல் கட்சிகள் செய்வதுதான் அரசியல்! அப்படித்தானே?

அது சரியான பார்வையா? சாப்பிடக்கூடிய வகையில் செய்வதுதான் சமையல். அப்படியல்லாமல் செய்யக்கூடிய வேலையைச் சமையல் என்று சொல்வது எப்படித் தவறோ அதேமாதிரி மக்;களுக்குப் பயன்படாத அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் எல்லாம் அரசியல் ஆகாது.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக வாழ்கின்ற மனிதன் தான் வாழும் சமூகத்துடன் தனக்கிருக்கும் உறவின் தன்மையைத் தான்மட்டும் தீர்மானித்துவிட முடியாது. காரணம் மனித நாகரிகம் தோன்றிய நாளில் இருந்தே இயற்கையுடனும் பிற உயிரினங்களுடனும் தனியொருவனாக நின்று போராடி வளரவில்லை. இத்தனை சாதனைகளையும் புரிந்துவிடவில்லை.

மாறாக தன்னினத்தாரோடு சேர்ந்துதான் கூட்டாகத்தான் வாழ்ந்து சாதித்தான். அந்தக்கூட்டு என்பது குடும்பங்களாகவும் கூட்டங்களாகவும் ஊர்களாகவும் நகரங்களாகவும் நாடுகளாகவும் இருந்தன. இருந்து வருகின்றன.

அப்படியானால் என்ன பொருள்? தனிமனிதனாக உலகில் வாழவோ தாம் விரும்புவதைச் சாதிக்கவோ முடியாது ஒருங்கிணைந்த சமுதாய வாழ்வுதான் சாத்தியம் என்பதே!

அப்படிப்பட்ட சமுதாய வாழ்வு ஒவ்வொருவரின் தனித்தனியான விருப்பங்களுக்கு அப்பால் பொதுவான சமுதாய நலன் என்ற ஒரு பொதுக் கோட்பாட்டுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பொதுக்கோட்பாடுகளையும் பொதுநலன் சார்ந்த திட்டங்களையும் உருவாக்கி அதன்படிதானே வாழ முடியும்? அந்த அற்புதக்கலைதான் அரசியல்!

அது உள்ளுர், வட்டாரம், பிரதேசம், மாநிலம், நாடு, உலகம் என பல படித்தரங்களில் பலவிதமாக நடைமுறையில் உள்ளது.

அதை அதி உன்னதமான ஒன்றாக நடத்தி அதனால் மக்கள் உயர்வாழ்வு வாழக்கூடிய நாடுகளும் சரியாக நடத்தாமல் மக்கள் திக்குத் தெரியாமல் தத்தளிக்கும் நாடுகளும் மிகவும் மோசமாக நடத்துவதால் மக்கள் சீரழியும் நாடுகளும் உலகில் உள்ளன.

அதன்காரணமாக முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, முதலாளித்துவ ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம், என்ற பலவகையான ஆட்சிமுறைகள் தோன்றி அதன் மூலம் அதன் கீழ் மக்கள் ஆளப்பட்டும் வருகிறார்கள்.

மன்னராட்சி அல்லது சர்வாதிகார ஆட்சிநடக்கும் நாடுகளில் தனிமனித உரிமைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் இருக்காது. ஆனால் அங்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில குறைந்த பட்ச நெறிமுறைகள் இருக்கும். இருந்துதான் ஆகவேண்டும்

ஆனால் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தில் தங்கள் பங்கையும் செலுத்த வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அந்த உரிமையைத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலமாகவோ தங்கள் பங்கைச் செலுத்துகிறார்கள்.

இந்த மாதிரி மக்கள் தங்கள் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சியில் பங்கெடுக்க ஏற்ற முறையில் பொதுவான மக்கள்நலநனை அடிப்படையாகக்கொண்ட பொதுக் கோட்பாடுகளை வைத்து இயக்கங்கள் தோன்றி மக்களை அதன் கீழ் திரட்டவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட இயக்கங்களை உருவாக்கி நிர்வகிக்கும் பங்கெடுக்கும் விமர்சிக்கும் திட்டமிடும் அந்தக் கலைக்குப் பெயர்தான் அரசியல்.

அதேபோல அடிமைப்பட்டுக் கிடக்கும் நாடுகளின் விடுதலைக்காகவும் மக்களைக் கொடுமைப்படுத்தும் கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்துவதற்காகவும், மக்களைக் கொள்ளையடிப்பதே நோக்கமாகக்கொண்டு ஏமாற்று அரசியல் நடத்தும் நாடுகளில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்மூலம் எழுச்சிபெறச் செய்வதற்காகவும் அரசியல் இயக்கங்கள் தோன்றவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இப்படியான பல்வேறு தேவைகளின் காரணமாக பல்வேறு அரசியல் இயக்கங்கள் தோன்றவேண்டிய கட்டாயம் உலகில் உள்ளது. ஆனால் தோன்றும் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் சிறப்பாக மக்கள் பணி ஆற்றிவிடுவதில்லை. மக்களுக்கு துரோகம் செய்பவை ஏராளமாக உள்ளன.

மக்களுக்காக உருவாகும் அரசியல் இயக்கங்கள் எதுவானாலும் அதன்பால் மக்கள் செலுத்துகின்ற ஈடுபாட்டைப்பொருத்தே அவற்றின் தரம் அமைகிறது.

மக்கள் தங்கள் ஆதரவில் தங்களுக்காக உருவான ஒரு அரசியல் இயக்கம் தாம் நினைத்தபடி அல்லது தம்மிடம் சொன்னபடி செயல்படுகிறதா என்று கண்காணிப்பதும் அவற்றின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும்தான் அந்த இயக்கங்கள் தவறு செய்யாமல் இருக்க ஒரே வழி!

அப்படிப்பட்ட ஈடுபாடு மக்களால் செலுத்தப்படாமல் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் அல்லது அதில் செயல்படும் நபர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது செய்யவேண்டும் என்று எதிர்பார்த்து மக்கள் நம்பியிருந்தால் அந்த நிலையில் தவறுகள் நடக்கவே வாய்ப்;பு உள்ளது.

இன்று நமது நாட்டில் அதுதான் நடந்துகொண்டுள்ளது. அதனால் அதிருப்திப்படும் மக்கள் இன்றும் கூட ஒரு தவற்றிலிருந்து இன்னொரு தவற்றுக்கு மாறிச்செல்கிறார்களே தவிர அதுதான் தங்களின் ஜனநாயகப்பணி என்று தவராக நினைக்கிறார்களே தவிர தமது தவற்றை உணரவில்லை அல்லது போதுமான அளவு உணர்த்தப்படவில்லை.

இந்த நிலையில் நமது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகளில் மாற்றம் வரவேண்டும். அதில் உள்ள சீர்கேட்டுக்கு நாம்தான் காரணம் என்று எண்ணுவதற்குப் பதிலாக அரசியலே மோசமானது, அரசியல்வாதிகளே மோசமானவர்கள்  என்ற முடிவுக்குவந்து அரசியலையும் அரசியல்வாதிகளையும் வசைபாடும் பண்பாடு தற்போது மேலோங்கியுள்ளது.

இந்த வசைபாடும் பண்பாடு உருவானதற்கு யார் காரணமோ அவர்களைப் பிரித்து ஒதுக்கிவிட்டு சரியான அரசியல் இயக்கங்கள் வளர தமது பங்கை ஆற்றுவதற்குப் பதிலாக எல்லோரையும் எல்லா இயக்கங்களையும் ஒருதட்டில்வைத்துப்பார்த்து அனைத்தையும் தூற்றி வருகிறார்கள். அதன்காரணமாக தேர்தல் காலங்களில் எல்லோரையும் ஒன்றுபோல் பாவிப்பதால் அந்த நேரத்திய தாற்காலிக உணர்வுகள் மட்டுமே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் அம்சங்கள் ஆகிவிடுகிறது.

அதன் காரணமாக மக்களுக்கான நீண்டகாலத் திட்டங்களையெல்லாம் பேரளவுக்கு பேச்சோடு நிறுத்திவிட்டு தாற்காலிகமாக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான யுக்திகளும் பொய் பித்தலாட்டங்களும்தான் அரசியல் என்று ஆகிவிட்டது.

இத்தகைய ஒரு நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் எதுவென்றாலும் அவை மக்களுக்கான அரசுகளாக இல்லாமல் போவது இயல்பே!  மக்களிடம் ஏமாற்றுவதற்காகச் சொல்லும் வாக்குறுதிகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். காரணம் அதுதான் அவர்களின் உண்மையான பண்;பு. அதேநேரம் இந்த அவல நிலையைக் கண்டும் அவற்றின்பால் எதிர்ப்புணர்வு இருந்தும் மக்களின் தவறான வசவுகளுக்கு அஞ்சி நல்லவர்கள் அரசியல் பக்கம் வராமல் ஒதுங்கும் போக்கும் தீவிரமாக உள்ளது.

அதன்காரணமாக இந்திய அரசியல் முற்றிலும் தீயசக்திகளின் கைகளுக்குப் போய்விட்டது.

இந்த நிலை மாறி மதிக்கத்தக்க மக்கள் நலனில் அக்கரை கொள்ளும் அரசுகள் உருவாகவேண்டும் என்றால் மக்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் பொத்தாம் பொதுவில் வசைபாடுவதைக் கைவிட்டு  தீய சக்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நல்ல இயக்கங்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். அப்படிப்பட்ட தேசபக்தக் கடமையை யாரோ செய்வார்கள் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் தம்பங்கைச் சிறப்பாகச் செய்யவேண்டும்.

அப்படி நல்லது கெட்டது எது என்று இனங்காணவும் கற்றுக்கொள் வேண்டும். எந்த இயக்கமாக இருந்தாலும் அவற்றின் கொள்கை என்ன கோட்பாடு என்ன? மக்களையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையம் பற்றிய அவர்களின் பார்வை என்ன அவற்றின் கட்டமைப்பில் ஜனநாயகப் பண்புகள் இருக்கின்றதா அல்லது தனிநபர்களின் துதிபாடும் கூட்டமாக இருக்கிறதா என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

அப்போதுதான் நமது நாட்டில் நல்ல அரசியலும் நல்ல அரசுகளும் தோன்றவும் நல்லாட்சி நடக்கவும் மக்கள் குறைதீர்ந்து வளம்பெறவும் வாய்ப்புகள் உருவாகும். அப்படியல்லாத எந்த எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும் வாய்ப்பு இல்லவே இல்லை!

2 comments: