ss

Thursday, April 19, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )ஆன்மிகத்தில் முதல் தரமும் இரண்டாம் தரமும் 

ஆன்மிகம் என்பதை இரண்டு விதமாகப் பிரித்துப் பார்க்கலாம். 


முதலாவது அறிஞர் அல்லது வல்லுனர்களுக்கானது. இரண்டாவது பாமர மக்களுக்கானது.முதலாவது அறிவியல் ரீதியான கேள்விகளை எதிர் கொள்ளும் போது சொல்லப்படும் பரம்பொருள் கோட்பாடு.முதல் தரமானது.இது, எல்லாமுமாக இருப்பது பரம்பொருள். அதில் அடங்கியுள்ள சிறிய பெரிய 

அத்தனையும் அதன் அங்கங்களே என்கிறது. (அதைத்தான் பரமாத்மா என்றும் ஜீவாத்மா என்றும் சொல்லி வந்தார்கள் இப்போதும் சொல்கிறார்கள்.)இது அண்டத்திலுள்ள அனைத்தும் அணுக்களாலான பல்வேறு வகைப்பட்ட இயக்கங்களே என்கிற அறிவியல்கூற்றுக்கு நெருக்கமானதாகும்.அதுமட்டுமல்ல. இது இரண்டாந்தர ஆன்மிகத்துக்கு ஆதரவாகச் சொல்லப்பட்டதும் அல்ல. அறிவியல்ரீதியான வினாக்களுக்குத் தவிர்க்க இயலாமல் கூறப்பட்டதாகும். இன்னும் சொல்லப்போனால் அறிவியலைப்பார்த்து ஆன்மிகமும் அப்படிப்பட்டதுதான் என்றுசொல்வதற்காகக் காப்பியடிக்கப்பட்ட தத்துவமாகும். ஆன்மிகம் என்ற பெயரால் பாமர மக்களை நிரந்தரமாகக் கட்டிவைக்க அதன் வல்லுனர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட தத்துவமாகும். ஆனாலும் சிறந்தது. காரணம்அது அறிவியல் சிந்தனைக்கு நெருக்கமானது.இரண்டாவது பாமர மக்களுக்கான ஆன்மிகம். இதற்கு எந்தவரைமுறையும் கிடையாது. காட்டுமிராண்டிக் காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம் வரை ஆன்மிகம் என்ற பெயரால் யார் எது சொன்னாலும் செய்தாலும் அதை இந்த ஆன்மிகம் ஏற்றுக்கொள்ளும். ஏதோ ஒரு வகையில் அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகள் அதில் பொதிந்திருக்கவேண்டும். அவ்வளவுதான் அதில் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் அறிவாற்றலுக்கு இருக்காது. அது அவசியமும் இல்லை. இது இரண்டாம் தரமானது. நடப்பில் உள்ளது.இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.


ஆதியில் மனித இனம் ஆத்திகம், நாத்திகம், அறிவியல் இதுவெல்லாம் என்னவென்றே தெரியாமல் லட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தது. அதன் பின்பு பரிணாம வளர்ச்சியால் விலங்கு நிலையில் இருந்து மனிதனாக மாறியபின்னும் பல்லாயிரம் வருடங்கள் காட்டிமிராண்டியாகத்தானே வாழ்ந்தான்? அதற்குப் பின்னும் நாகரிகத்தின் துவக்ககாலத்திலும் விலங்குகளை வேட்டையாடியும் தான் விலங்குகளுக்கு உணவாகியும் வாழ்ந்த காலத்திலும் மனிதன் இந்தக் கோட்பாடுகள் எல்லாம் என்னவென்று அறியாமல்தானே வாழ்ந்தான்? ஒரு கட்டத்தில் ஓரிடத்தில் தங்கி விவசாயமும் கால்நடை வளர்ப்பும் என்கிறமாதிரி ஒரளவு நிலையாகத் தங்கி வாழும் முறையைக் கற்றுக்கொண்ட பின்புதானே தான் வாழும் உலகைப்பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்கிறான்? துவக்கத்தில் என்னசெய்தான்? தன்னால் பரிந்து கொள்ள முடியாத இயற்கைச் சீற்றங்களைக் கண்டு மிரண்டான். வெள்ளம் எதனால் வருகிறது? பெருநெருப்பு எப்படித் தோன்றுகிறது? புயல், பூகம்பம் போன்றவை எப்படித் தோன்றி ஏன் மனிதனைத் தாக்குகின்றன? கொள்ளை நோய்களால் ஏன் மக்கள் கூட்டங்கூட்டமாகச் சாகிறார்கள் என்பதற்கான காரணங்கள் எல்லாம் மனிதனால் அறியப்பட்டிருக்கவில்லை. அதனால் எதைக் கண்டெல்லாம் பயந்தானோ அதையெல்லாம் பணிந்து வணங்கத் துவங்குகிறான். தான் எப்படி மற்ற உயிரினங்களைக்கொல்வதும் அலைக்கழி;ப்பதுமாக வாழ்கிறோமோ அதுபோலவே வேறு சில சக்திகள் தம்மைத் தீங்கு செய்து அலைக்கழிக்கின்றன என்று நம்புகிறான். எந்தெந்த வடிவங்களிலெல்லாம் தீங்குகள் மனிதனுக்கு ஏற்பட்டதோ அவற்றையெல்லாம் தனக்கு மேற்பட்ட சக்திகளாகப் பாவித்து பயந்து வணங்குகிறான்.தான்கண்டு பயந்து வாழ்ந்தவற்றை மட்டுமல்ல தனக்கு வாழ்வளித்துக் கொண்டிருந்த பலவற்றையும் தனக்கு அந்த உதவியை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கவேண்டும் என்பதற்காக வண்ஙகினான்.


இப்படியாகத்தான் பூமி, வானம், மழை, ஆறு, மலை, நெருப்பு, நீர், இடி, மின்னல், பலவகையான மிருகங்கள், பறவைகள் பாம்புகள், பல்லிகள், எலிகள்கூட மனிதனால் வணங்கப்படும் கடவுளர்களாகவும் அவற்றின் வாகனங்களாகவும் மாறின. அப்போதெல்லாம் மனித இனத்தின் உணர்வுகள் ஒரே திசையில் இருந்தன. முரண்பாடுகள் எழவில்லை. அதனால் இந்த நம்பிக்கைகளுக்கு விளக்கமளித்துக் கொண்டும் வழிகாட்டிக்கொண்டும் இருக்கும் உழைக்காமல் வாழ்ந்த ஒரு கூட்டம் உருவாகிறது. அந்தக்கூடடம் உழைக்காமல் வாழ்ந்த கூட்டமாதலால் அந்தச் சுகத்தைத் தக்கவைத்துக் கொள்ள மேலும் மேலும் மக்களை அத்தகைய பழையநிலையிலேயே வைத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால்தான் அவர்கள் மனிதன் பயந்து வணங்கிய அத்தனைக்கும் உருவம் கொடுத்து அவற்றைத் திருப்திப்படுத்த வேண்டி மனிதனுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும் அவற்றுக்கும் படைத்து வணங்கும்படி கற்பித்த பழக்கமும் ஏற்பட்டது. அந்த உழைக்காமல் வாழ்ந்த கூட்டம் மக்களால் கடவுளர்களுக்குப் படைக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் காணிக்கைகளையும் வைத்துக் கொழுத்து வாழ்ந்தது.விதவிதமான கடவுளர்களும் விதவிதமான வழிபாட்டுமுறைகளும் வளர்ந்தன. மக்களும் கடவுளர்களுக்குப் படையல் செய்வதைத் தயங்காமல் செய்தார்கள். ஓரிடத்தில் கூடிவாழ்ந்ததாலும் விவசாயம், கால்நடைவளர்ப்பு கருவிகள் கண்டுபிடிப்பு வேலைப்பங்கீடு பல்வேறு வகையான கைத்தொழில்கள் இவையெல்லாம் வளர்ந்ததால் மக்கள் அதற்கு முந்தய காலத்தை விட பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழும் நிலை ஏற்படுகிறது.


தங்கள் உழைப்பால் கிடைத்த பயன்களைக் கூட தாம் வணங்கும் பல்வேறு கடவுளர்களின் அருளால் கிடைத்த வரமாகக் கருதினார்கள். அந்தமாதிரி எண்ணக் கற்பிக்கப்பட்டிருந்தார்கள்! அந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் தக்கவைத்துக் கொள்ள புதுப் புது நம்பிக்கைகளும் வளர்க்கப்பட்டன. மக்கள் வளர்க்கும் ஏராளமான உயிரினங்கள் கடவுளர்க்குப் பலியாகக் கொடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் அறிவும் மொழியும் கருத்துக்களும் சிக்கல்களுக்குத் தீர்வுகளும் மக்களிடையே வளர்ந்திருந்தன. எதுவொன்றுக்கும் ஏன், எதற்கு, எதனால், என்று கேள்விகள் கேட்டுத் தன் அறிவை மேலும் மேலும் கூர்ப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. அதனால் முன்போன்று எந்தக் கேள்வியும் இல்லாமல் மக்களிடம் இருந்து கடவுளர் பேரால் கொள்ளையடிப்பது கடினமாகிறது.மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு தத்துவ விளக்கங்கள் கொடுப்பது அவசியமாகிவிட்டது. அதனால் ஏராளமான கருத்துக்களையும் சடங்கு சம்பிரதாயங்களுக்கான வழிமுறைகளையும் மந்திரங்களாகச் சொல்லப்பட்டு வந்ததையும் ஒன்றிணைத்து கடவுள்பற்றி மக்களுக்கு அனைத்தையும் உணர்த்தும் மறைநூல்களாக உருவாக்கினார்கள். அந்த மறைநூல்களையும் அவர்கள் தங்களுக்கு மட்டும் தெரிந்த ஒன்றாக வைத்துக்கொண்டு மக்களை அன்படி நடக்கக் கோரினார்கள். மறைநூல்கள் மக்களுக்கு எட்டாத ஆனால் மக்களை சிறுபான்மையினர் ஆளும் சாதனமாக்கப்பட்டது. மக்களும் மதவாதிகளின் செல்வாக்கையும் அரசுகளே கீழ்ப்படிந்து நடந்த வலிமையையும் கண்டு வேறு வழியின்றி கீழ்ப்படிகிறார்கள். அப்படிக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டார்கள்.


அப்படி அறிவியல் சிந்தனைகளை ஒட்டி எதிர்த்துக் கேட்டவர்கள், அறிவியல் விளக்கம் கொடுத்தவர்களெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்ட அதேநேரம், மக்களின் அறியாமை யில் முற்போக்கான மாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக தங்களின் ஆன்மிகப் பிற்போக்குத் தனங்களுக் கெல்லாம் புதுப்புது விளக்கங்களைக் கொடுத்து மக்களை அறியாமை இருளிலேயே வைக்க முயற்சிசெய்தார்கள் அதில் இன்று வரை வெற்றியும் பெற்று வருகிறார்கள்.இதே நேரத்தில் அறிவியல் கண்டு பிடித்த ஒவ்வொரு சங்கதிக்கும் ஆன்மிக விளக்கங்களைக் கொடுத்து வந்ததல்லாமல் அந்த அறிவியலே ஆண்டவன் மனிதனுக்கு அருளிய வரம் என்று சொல்லவும் செய்தார்கள். அறிவியல் அறிந்த எல்லைகள் விரிய விரிய ஆன்மிகமும் அதையெல்லாம் தங்கள் கடவுளரின் அதிகார எல்லைக்குள் கொண்டுவருவது இன்றும் நடந்துவரும் ஒரு வேடிக்கையான உண்மையாகும். அந்த அறிவியல் சிந்தனைகளுக்குக்கூட அடிப்படைக்காரணம் எல்லாம் வல்ல இறைவன்தான் என்றும் அடித்துக் கூறினர்கள். கண்களால் காணக்கூடியதையும் அறிவால் உணரக்கூடியதையும் கண்களால் காணமுடியாத ஒன்றின் அறிவால் உணரமுடியாத ஒன்றின் படைப்பாக இன்றளவம் கூறி நம்பவைத்துக் கொண்டுள்ளார்கள். மக்கள் மட்டும் அல்ல அறிவியலாளர்களும் கொலை வாளுக்கு அஞ்சி அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள்.


ஆக காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடும் கதையாக அறிவியல் ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலமாகக்கண்டறிந்த அனைத்தையும் ஆண்டவன் அருள் என்பதாகக் கூறிக்கொண்டே அறிவியலை விடாது பின்தொடர்ந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை! ஆனால் அறிவியல் சிந்தனைகளை விரட்டிக்கொண்டே வந்து அதைத்தங்களின் இறைவனின் படைப்பாகக் காலங்காலமாகச் சொல்லிவந்த நிலையில் அப்படிச் சொல்லக்கூடிய அறிவைக்கூடச் சாதாரணமான மக்களுக்கு அவர்கள் வழங்கவில்லை. அதன் காரணமாக மேல்தட்டு ஆன்மிகவாதிகள்; அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து தமதென்று சொல்லிக் கொண்டே பின் தொடர்ந்த நிலையில் மக்கள் பழைய துவக்ககாலப் பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் கைவிடத் தெரியாதவர்களாக இவர்களைப் பின்தொடர்வதில் மிகவும் பின்தங்கிவிட்டார்கள்.இந்த நிலையில் மக்களின் நாகரிகம் முன்னேற்றம் அடைய அடைய ஆட்சிமுறைகளும் மாறிக்கொண்டே வந்து உலகு முழுவதும் மக்களாட்சித் தத்துவங்கள் சக்தி மிக்கவையாக வளர்ந்து வரும் நிலையில் அறிவியலாளர்களின் நிலை ஒங்குவதும் ஆன்மிகவாதிகளின் நிலை தத்துவத் துறையில் பலவீனமடைவதும் தவிர்க்கமுடியாதவை ஆகிவிட்டன. எனவே அறிவியல் சிந்தனையாளர்கள் தத்துவார்த்தத் துறையில் ஆன்மிகவாதிகளுடன் நேரடியாக மோதுமளவு துணிவு பெற்றுவிட்டர்கள். 

ஆனால் இதில் என்ன சிக்கலென்றால் அறிவியல் சிந்தனைகளுக்கு நெருக்கமானவர்களாக ஆன்மிகவாதிகளின் மேல்மட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர்தான் இருந்தார்களேதவிர மக்களில் பெரும்பாலோர் அதை உணரும் அறிவுத்திறனற்றவர்களாக ஆன்மிகவாதிகளின் பிற்போக்கு வழக்கொழிந்த தத்துவம் என்ற மூட்டைக்குள்தான் வைத்துக் கட்டப்பட்டு இருக்கின்றனர்.

அறிவியல் சிந்தனையாளர்கள் அதை உடைத்தெரிய அரும்பாடு பட்டாலும் அதற்கு எதிராக சகலபலமும் பொருந்தியவர்களாக ஆன்மிகவாதிகள் இருக்கிறார்கள் என்பது அல்லாமல் அவர்களின் செல்வாக்குக்குள் வசிக்கும் மக்களில் மிகப் பெரும்பாலோர் அறிவியல் சிந்தனையாளர்களைத் தங்கள் எதிரிகளாகவே கருதும் குணத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை!

இது இப்படி இருக்க ஆன்மிக மறுப்பு அறிவியல்ரீதியாக மட்டும் அனைத்தயும் பார்க்கிறது. பார்க்கவேண்டும் என்றும் கூறுகிறது. காண்கின்ற உணர்கின்ற அனைத்தையும் பேரியக்கமாகவும் அதனுள் அடங்கியுள்ள அனைத்துக் கூறுகளையும் பேரியக்கத்தின் இயக்கத்துள் அடங்கியுள்ள இயக்கக் கூறுகளாகவும் பார்க்கிறது. 

அதே சமயம் பேரியக்கத்தின் மொத்தமும் அதில் அடங்கியுள்ள கூறுகள் எல்லாமுமே அணுக்களாலானவை என்றும் அந்த அணுக்களின் இயக்கங்களால் ஆனவை என்றும் கூறுகிறது. 

ஆனால் ஆன்மீகம் பல படித்தரங்களாகவும் வேறுபாடுடையதாகவும் இருப்பதால் அதன்கீழுள்ளமக்கள் அவரவர் அறிவுத்தரத்துக்கு ஏற்ப அந்த நிலைகளில் இருந்து தம்மை ஆன்மீகவாதிகளாக நினைத்து வாழ்கிறார்கள். 

ஒவ்வொரு நிலையில் இருப்பவர்களும் தமக்கு அடுத்த கீழ்நிலையில் உள்ளவர்களைவிடத் தம்மை அத்துறையில் மேம்பட்டவர்களாக எண்ணிக்கொள்வதோடு தம்மைவிட அந்தத்துறையில் மேம்பட்டவர்களாகக் கருதும் ஆன்மிகவாதிகள் சொல்வதைத் தங்களுக்கு வழிகாட்டுதலாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் ஆன்மிகம் அறிவியலுக்கு மாறான திசையில் பயணித்தாலும் மூடநம்பிக்கை கொண்டதாக இருந்தாலும் அதன் செல்வாக்கின் கீழ்தான் அனைத்து மக்களும் வாழ்கிறார்கள்.

ஆனால் அறிவியல்வாதிகளோ இயக்கத்தை இயக்கமாக மட்டும்தான் பார்க்கிறார்கள். அந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்பவர்கள் பலவேறுபட்ட படித்தரங்களாக இல்லை. மாறாக ஒத்த கருத்துடன் அனைத்தையும் அறிவியல்கண் கொண்டு ஆராய்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் சிந்திக்கத்தெரிந்த அறிவியல் கண்ணோட்டமுடைய சிறுபகுதியினர் மட்டுமே அதன்பின் இருக்கின்றனர். 

அவர்கள் சிறு பகுதியினராக இருந்தாலும் மாபெரும் அண்டத்தைப் பற்றிச் சரியாகச் சிந்திக்கிறார்கள். வாழ்க்கையைப் பற்றியும் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியும் சரியாக மதிப்பிடுகிறார்கள். தாங்கள் சரி என்று கருதுகின்ற அறிவியல் கண்ணோட்டத்தின்படி அனைத்துமக்களும் வாழ்ந்தால் உலக வாழ்வு மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் மக்களில் மிகப்பெரும்பாலோர் இரண்டாம் தர ஆன்மிகத்தின்கீழ் இருப்பதால் அவர்களைத்தான் சரியான பாதைக்கு மாற்றவேண்டிய கட்டாயம் அறிவியல்வாதிகளுக்கு உள்ளது.

ஆனால் அறிவியல்வாதிகளாக உள்ள சிறு பகுதியினர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இரண்டாம் தர ஆன்மிகவாதிகளாக வாழும் மக்களில் பெரும்பாலேர் அதைச் செவிமடுப்பதாக இல்லை. அவர்கள் தம்மைவிட மேலானவர்களாகக் கருதும் ஆன்மிகவாதிகள் சொல்வதைத்தான் கேட்கிறார்களே தவிர ஆன்மிக எதிர்ப்பாளர்கள் என்னதான் சொன்னாலும் அவர்களை எதிர்ப்பாளர்களாகப் பார்ப்பதால் ஏற்றுக்கொள்வது இல்லை!

அதே சமயம் அறிவியல்வாதிகள் தங்கள் கொள்கையிலும் அறிவியல் தத்துவங்களிலும் உறுதியாக இருப்பதால் ஆன்மிகத்துடன் தத்துவரீதியாக மோதுகிறார்கள். ஆனால் அதை ஒரு சரியான செயலாகப் பார்க்காமல் ஆன்மிகத்தின் எதிரிகள் என்ற ஒரே காரணத்தினால் நிராகரிக்கிறார்கள். புறக்கணிக்கிறார்கள். 

ஆனால் ஆன்மிகவாதிகள் அதன் எதிர்பாளர்களைப் புறக்கணிப்பதில் ஒன்று பட்டாலும் தங்களிடையே ஒன்று பட்டவர்களாக இல்லை. பல மதங்களாகவும் அவற்றின் உட்பிரிவுகளாகவும் சாதி. குலம், கோத்திரம், மொழி, வாழும் பகுதி என்ற அடிப்படையில் பிரிந்து தமக்குள் பகைமை உணர்வுடன் மோதிக்கொள்கிறார்கள்.

இப்போது நாம் ஒரு கருத்துக்கு வரவேண்டியுள்ளது.

ஆதாவது ஆன்மிகவாதிகளுடன் நேரடியாக மோதுவது ஒருமுறை

ஆன்மிகத்தின் உச்ச நிலைக்கும் நடைமுறையில் பின்பற்றி வாழும் தவறான வாழ்வுக்கும்
இடையேயான முரண்பாடுகளைச் சொல்லி அந்த ஆன்மிகக் கருத்து உள்ளவர்களுக்கு உள்ளேயே இருந்து சீர்திருத்தத்துக்காகப் போராடுவது இரண்டாவது முறை.

நேர் எதிராகப் போராடுவதால் உடனடி நன்மை எதுவும் ஏற்படப்போவது இல்லை. ஆனால் சீர்திருத்தத்துக்கான உள் போராட்டம் நடக்கும்போது ஆன்மிகத்தின் உயர்நிலைக்கு ஆதாவது அறிவியலின் நெருங்கிய நிலைக்குப் பக்கமாக மக்களின் பயணம் இருக்கும்.

எனவே ஆன்மிகத்தின் உச்சகட்ட நிலைக்கு ஆதாவது முதல்தர ஆன்மிகத்துக்கு மக்களை அழைத்துச்செல்ல முயல்வதும் அறிவியல் தத்துவத்துக்கு அழைத்துச் செல்ல முயல்வதும் தாண்டமுடியாத இடைவெளியுடையதும் எதிரும் புதிரானதும் அல்ல.

அதனால்தான் கௌதம புத்தரும் கார்ல் மார்க்ஸும் பெரியாரும் அம்பேத்கரும் மக்களைச் சரியான வழிக்கு மாற்ற இரண்டாம் தர ஆன்மீகத்தின் கீழ்வாழ்ந்த மக்களை அதைக் கைவிட்டு வரவேண்டும் என்பதை முன் நிபந்தனையாக விதிக்காமல் ஆன்மிகத்தின் கீழான வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளையும் அறிவுக்குப் பொருந்தாத மனிதாபிமானமற்ற விசயங்ளையெல்லாம் சுட்டிக்காட்டி அதற்கெதிராகப் போராட அழைத்தார்கள்!

புத்தர் வர்ணாசிரமக் கோட்பாட்டையும் ஆன்மா பற்றிய கோட்பாட்டையும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத இரண்டாம் தர ஆன்மிகக் கொள்கைகளையம் அக் காலத்திலேயே எதிர்த்தார். மார்க்ஸும் எங்கல்ஸும் வர்க்க பேதத்தை முன்னிலைப்படுத்தினர். பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்தால் அனைத்து ஆன்மிகப் பிற்போக்குத் தனங்களும் நொறுங்கி வீழ்ந்துவிடும் என்ற தத்துவப் பார்வையில் ஏற்றத்தாழ்வில் சிக்கியுள்ள அனைத்துமக்களையும் அவர்களின் இன்னல்களுக்குக் காரணமாக இருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் விடுதலைக்காகப் புரட்சி செய்யும்படி அழைத்தனர். 

பெரியார் கடவுள்நம்பிக்கையை எதிர்த்ததோடு வாணாசிரமக் கோட்பாட்டின்படி நிலவிய கொடுமைகளுக்கு எதிராக போர்கொடி தூக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் ஒரு புயலையே உருவாக்கினார். அதேபோல மாமனிதர் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்தார். கடைசியில் பௌத்தக் கோட்பாடுகளை ஏற்கச்செய்ய மக்களுக்கு அறைகூவல் விடுத்ததோடு செய்து காட்டியும் உலகப் புகழ் பெற்றார்.

இவர்கள் எல்லோரும் இரண்டாம் தர ஆன்மிகத்தின்கீழ் வாழ்ந்த மக்களை ஆன்மிகவாதிகளாகவே இருந்துகொண்டு இவர்கள் வகுத்த நெறியின்படி பொராட அழைக்க வில்லையா? மக்கள் ஆன்மிகவாதிகளாகவே இருந்துகொண்டு அந்த ஆன்மிகத்தை நிராகரிக்கும் கொள்கைகளை உடைய தலைவர்களின்பின் அணிவகுக்கவில்லையா? எதனால் இது நடந்தது?

மக்கள் ஆன்மிகவாதிகளாக இருந்தாலும் அந்த மக்களுள் இருக்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவதன்மூலம் அதன் ஒருபகுதிமக்கள் தங்கள் நிலையை மேலும் ஒரு படி உயர்த்திக்கொள்ளத் தங்கள் கொள்கைகளின் பின் அணிதிரள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் அப்படிச் செய்தார்கள். மக்களும் அப்படியே செய்தார்கள். 

அதனால் கிடைக்கும் பயன் என்னவென்றால் மக்கள் இரண்டாம் தர ஆன்மிகத்தின் கீழான வாழ்வை வாழ்ந்துகொண்டே அவர்களின் நிலையை உயர்த்திக்கொள்கிறார்கள். அந்த உயர்வு என்பது ஆன்மிகத்தின் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலையை நோக்கி அவர்களை இட்டுச்செல்கிறது. அதன் விளைவாக அறிவியல் கண்ணோட்டத்தின் பக்கம் நெருங்கியும் நகர்கிறது.

அறியாமையிலேயே மக்களை விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் அறிவியலுக்கு அன்னியமானவர்கள் அல்ல என்று காட்டிக்கொள்ள அறிவியலுக்கு இணையானவர்களாகக் காட்டிக்கொள்ள அதன் மேல்தட்டார் எந்த உயரத்துக்குப் போனார்களோ அந்த இடத்துக்கு பாமர மக்கள் உயர்ந்தாலும் அறிவியல் சிந்தனைக்கு அருகில் வந்துவிடுவார்கள். அறிவியல் சிந்தனைக்கு நெருக்கமாக வந்தால் அறிவியல் சிந்தனைகளை அவர்கள் மறுப்பதற்கு எந்தச் சுயநல அடிப்படைகளும் தடையாக இருக்கப்போவதில்லை. அதைத்தான் முதல்தர ஆன்மிகம் என்கிறேன்.

ஆனால் சாதாரண மக்கள் தங்கள் மாற்றத்தை இதைத் தவிர்த்து நேரடியாக அடையமாட்டார்கள். காரணம் அந்த அளவு அவர்கள்மனதில் ஆன்மிக எதிர்ப்பாளர்களைப் பற்றிய எதிர்ப்பு உணர்வு இருக்கிறது.

எனவே கீழ்மட்ட ஆன்மிகத்தில் வாழும் மக்களை நேரடியாக அறிவியல்பார்வைக்குக் கொண்டுவருவது இயலாத காரியம். அதற்குக் குறுக்குவழி எதுவும் இல்லை. எந்த வழியாகப் பிரித்து விட்டுவிட்டு அதன் முன்னோடிகள் சென்றார்களோ அதேவழியாகத்தான் இவர்களையும் கொண்டு செல்ல வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் ஆன்மிகத்தின் மேல்தட்டார் அறிவியலைப்பற்றி அறிந்தவர்களாக இருந்தும் சுயநலத்துக்காக அறிவியல் பர்வையை ஏற்க மறுக்கிறார்கள். ஆதாவது அருகில் இருந்தாலும் உண்மையை சுயநலன்கருதி ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் கீழ்தட்டு அல்லது சராசரி மக்களோ அறிவியல் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அறிவியல் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாகவும் வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் தூரத்தில் இருக்கிறார்கள். அவசியமானவர்கள் தூரத்தில் இருக்கிறார்கள் அவசியமற்றவர்கள் அருகில் இருக்கிறார்கள். அவசியமான அந்த மக்களையும் அவர்களின் முன்னோடிகளுக்குப் பக்கத்தில் வந்தால் அவர்களுக்குப்பக்கம் மட்டும் அல்ல. அறிவியல் சிந்தனைகளுக்குப் பக்கமும் வந்துவிடுகிறார்க்ள்

அப்படிப்பட்ட பாதையைத்தான் நான் நடைமுறைக்கு எளிதானதாகக் கருதுகிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் மூட நம்பிக்கைகள் அற்ற அறிவியல் சிந்தனைகளைக்கொண்ட முதல் தர ஆன்மிகத்தை நான் வரவேற்கிறேன். அது அனைத்தையும் பரம்பொருள் அல்லது பரமாத்மா என்றும் மற்ற அனைத்தையும் அதன் உட்கூறுகள் அல்லது ஜீவாத்மாக்கள் என்று கூறுகிறது.அதற்கு அடுத்துச் சொல்லப்படும் அனைத்துக் கட்டுக்கதைகளையும் நிராகரிக்கிறது.
அப்போது ஒட்டுமொத்தமான அனைத்தையும் பேரியக்கமாகவும் அதனுள் அடங்கியுள்ள அனைத்தையும் பேரியக்கத்துள் அடங்கிய பலவகையான இயக்கக் கூறுகளாகவும் பார்க்கின்ற அறிவியல் கண்ணோட்டத்துக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறது. அங்கே பகைமை உணர்வு இல்லை. மூட நம்பிக்கைகள் இல்லை! பாசமும் நேசமும் கொண்ட மக்களுக்கான இருவேறு இணையான பாதைகள் அவ்வளவே!

அதுதான் ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை!
No comments:

Post a Comment