ss

Saturday, April 21, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )


முன்னோர்க்குச் செய்யும் மரியாதை 


மாமேதைகள் கோபர் நிகஸ_க்கும் கலிலியோவுக்கும் எனது மரியாதையையும் அஞ்சலியையும் முதலில் சமர்ப்பிக்கிறேன்.


இன்று உலகம் மகத்தான முன்னேற்றம் பெற தங்களை அர்ப்பணித்த அவர்கள் தாம் வாழும் காலத்தில் அவர்கள் கொண்ட நோக்கத்துக்காகவே மிக்க துயரடைந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்து எனது கருத்துக்களை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். 


பழைய கோட்பாடுகளில் எதாவது மாற்றம் செய்யவேண்டும் என்று சொன்னாலோ அதிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மாற்றவேண்டும் என்ற சொன்னாலோ விமர்சனம் செய்தாலோ அதிலுள்ள நியாயாயங்களைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக அப்படிமாற்றம் செய்வது நமது முன்னோர்க்குச் செய்யும் அவமதிப்பு என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். 

அப்படி முன்வைப்பவர்கள் கண்மூடித்தனமாக வழக்கொழிந்துபோன தத்துவங்களைத் தூக்கிப்பிடிக்கிறார்களே அல்லாமல் நடைமுறை வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதற்கேற்ப தத்துவங்களில் செய்யவேண்டிய மாற்றத்தையும் காண மறுக்கிறார்கள். அதற்குப் பிரதான காரணம் அத்தகைய பழைய பத்தாம்பசலித் தனமான கோட்பாடுகளால் பயனடைபவர்களாகவும் அப்படிப் பயனடைகின்றவர்களை நம்புபவர்களாகவும் இருப்பதுதான் காரணம்..


நம் முன்னேர்கள் உட்பட உலகின் அரிய மேதைகள் எல்லாம் மக்கள்வாழ வழங்கிய அரும்பெரும் தத்துவங்களை யெல்லாம் மேற்கொண்டும் வளர்க்காமல் அவர்களின் புகழ்பாடுவதுதான் வாழ்க்கைமுறை என்று வாழ்ந்து இன்னமும் நம்மவரை அறியாமை இருளிலேயே தவிக்க விட்டுள்ளார்களே அதை எண்ணி வேதனைப் படவேண்டியுள்ளது.நம்மவர்கள் முன்பு வாழ்ந்த காலத்தைவிட எண்ணிப்பார்க்க முடியாத அளவு நவநாகரிக உலகத்தில் வாழும் நமது வாழ்வை அவர்களின் வாழ்வுடன் ஒப்பிட்டுப்பார்க்க எண்ணுகிறேன்.


அன்று ஏட்டையும் ஏழுத்தாணியையும் கொண்டு குருகுல வாசமாகக் கல்வி பயின்றார்கள்.

இன்று எண்ணற்ற வசதிகளுடன் நவீன கல்விக்கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயில்வதோடு கணினியைத் தோழனாகக் கொண்டுவாழும் நிலையில் நம்மவர்கள் இருக்கிறார்கள்.


அன்று மாட்டு வண்டிகளிலும் ரதங்களிலும் பல்லக்குகளிலும் யானை குதிரை மேலும் கால்நடையாகவும் பயணம் செய்தார்கள். ஆனால் இன்று நாம் இயந்திரங்களினால் நிலத்தில் ஊர்கின்றோம், கடலில் நீந்துகிறோம், வானத்தில் பறக்கிறோம்.


அன்று வாளையும் வேலையும் கொண்டு போரிட்டு மடிந்தார்கள். இன்று உலகின் எந்தமூலையில் இருந்தும் யார்மீதும் எந்த நேரத்திலும் சப்தமில்லாமல் குண்டுபோட்டு அழிக்கும் கலையைக் கற்றிருக்கிறோம்.


அன்று உடம்பை மறைக்க சில எளிய ஆடைகளுடன் எம் முன்னேர்கள் வாழ்;ந்து மறைந்தார்கள். ஆனால் நாம் இன்று தினசரி வண்ணவண்ண ஆடைகளை உடுத்தி விதவிதமாக வலம் வந்துகொண் டுள்ளோம். 


நம் முன்னோர்களின் நினைவாக சிகை அலங்காரத்தைக் கூட விட்டுவைக்காமல் முற்றிலும் மாறிவிட்டோம. 


பிறப்பில் இருந்து இறப்புவரை எல்லாக் காலங்களிலும் எல்லா வாழ்க்கையம்சங்களிலும் நம்மவர் ஆதியில் கண்டறியாத நாகரிக வாழ்வு வாழ்ந்துகொண்டுள்ளோம்.


இன்னும் எண்ணற்ற வழிகளில் நம் முன்னோரைவிட வேறுபட்டவாழ்வு வாழ்ந்துகொண்டுள்ள நாம் அதையெல்லாம் அவர்களுக்குச் செய்யயும் அவமரியாதையாகவா கருதுகிறோம்? ஏன் அப்படிக் கருதுவதில்லை? ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தம்மிலும் மேம்பட்ட வாழ்வு வாழவேண்டும் என்றே விரும்பினர். அதனால் இன்றைய நமது மாற்றத்தை மாறுபட்ட வாழ்க்கை முறையை நம் முன்னோர்களின் ஆசியுடனேதான் வாழ்ந்து வருவதாக எண்ணியுள்ளோம். அதுதான் உண்மையும்கூட.


ஆனால் மக்களுக்கு வழிகாட்டும் தத்துவங்களில் மட்டும் நம் முன்னோர் நமக்குக் காட்டியவழிகளில் காலத்தால் அழியாதவை தவிர மற்றவற்றையும் மாற்றாமல் அப்படியேதான் பின்பற்ற வேண்டுமா? வாழ்க்கை நவீனமாக இருக்கவேண்டும் ஆனால் அதற்கு வழிகாட்டும் தத்துவம் மட்டும் பழையதாக இருக்கவேண்டும். இயந்திரங்கள் நவீனமாக இருக்கவேண்டும் ஆனால் தொழில் நுட்பம்மட்டும் பழையதாக இருக்கவேண்டும்.


இது எந்தவிதமான நியாயம்? இது எப்படி சாத்தியம்? 


எனவே எப்படி நமது முன்னோர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையைவிட நவீனமான வாழ்க்கையை நாம் வாழ்வதை விரும்புவார்கள் ஆசி வழங்குவார்கள் என்று எண்ணுகிறோமோ அதேபோல வழிகாட்டும் தத்துவங்களிலும் இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து நல்வாழ்வு வாழட்டும் என்றுதானே எண்ணுவார்கள்?


பழைய வழக்கொழிந்த தத்துவங்களைச் சொல்லிக்கொண்டு பொருந்தாத வாழ்வு வாழ்ந்துகொண்டு நம்மக்கள் ஒருவரை ஒருவர் கலகம் செய்து செத்து மடிவதைத்தான் முன்னோர்கள் விரும்புவார்களா? பொருந்தாததைக் கைவிட்டு புதிய சிந்தனைகளைக் கடைப்பிடித்து அனைத்துமக்களும் அன்பு நிறைந்த வாழ்வு வாழவேண்டும் என்று நம் முன்னோர் விரும்ப மாட்டார்களா? பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கைத்தத்துவம் அல்லவா? 


நம் முன்னேர் உடனிருந்து நமது எண்ணங்களையும் சிந்தனை, செயல்முறை வெளிப்பாடுகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் மனம் மகிழும்படி நமது கடமைகள் இருக்கவேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள்தான் நியாயமாகச் சிந்திக்க முடியும். 


அந்த வகையிலே எனக்கு சரியாகச் சிந்திக்கக் கற்றுக் கொடுத்த ஞான ஆசான் அந்த வங்கத்து முண்டாசு வேங்கை அனைவரையும் நேசிக்கத்தான் கற்றுக்கொடுத்தார். யாரையும் வெறுக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தீமைகளை எதிர்த்துத்தான் போராடும்படி சொன்னார். நல்லவர்களையும் நல்ல எண்ணங்களையும் அல்ல. அன்னாரைப் போற்றும் விதத்தில் அன்னார் காட்டிய வழியில் நடக்க எண்ணும் ஒருவர் எப்படி அவருக்கும் அவருடைய ஞான குருவுக்கும் அதற்கும் முன் வாழ்ந்து மறைந்த அனைத்து மேலோருக்கும் அவமதிப்பை இழைக்கமுடியும்?


மேன்மக்கள் வகுத்த தத்துவங்கள் அவர்களுக்கு முன் வாழ்ந்த மகான்களின் வழிநின்று அப்போதைய வாழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுபவை. அவர்களின் பணியை அதற்குப்பின்னால் அந்தந்தக் காலத்து வாழ்நிலைகளுக்கு ஏற்ப செய்யவேண்டியது இல்லையா? ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் அதன்பின்பு வரும், வாழும் மேதைகளுக்கு அந்தக் கடமை இல்லையா? அவர்களுடைய கடமைகள் எல்லாம் அப்படிச் சிந்திக்கின்றவர்களுக்கு இன்னல் விளைவிப்பதுதானா? 


முன்னோர்களது கருத்துக்களை நடைமுறை வாழ்வில் கொன்று அவை வைக்கப்பட்ட சவப்பெட்டியை வணங்குவதுதான் மக்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதை என்பதை நிராகரிக்கவேண்டும். அன்னாரது தத்துவங்களைக் காலத்துக் கேற்பப் புதுப்பித்து நடைமுறையில் பின்பற்றும் தத்துவமாக வளர்ப்பது அன்னாருக்குச் செய்யும் உயர்ந்த மரியாதை ஆகும். அதுமட்டுமல்ல, அதுதான் உலகமக்களை வாழ்விக்கும் ஒரே தத்துவமாக அன்பு என்ற சொல்லை உயிருள்ளதாக்கும்.


அதுவன்றி சில மகான் களின் பெயர் தெரியும் என்பதற்காக அவர்கள் இயற்றிய சிலபல நூல்களின் பெயர்கள் தெரியும் என்பதற்காக அதில் கொஞ்சம் கற்றிருக்கிறோம் என்பதற்காக அது தெரியாத மக்களை என்றென்றும் இவர்கள் ஆட்டுவிக்கும் படியெல்லாம் ஆடவேண்டும் என்று சமுதாயத்தின் முன்னணியில் இருக்கும் ஒரு பகுதியினர் எண்ணுவதும் அதைத்தொடர்ந்து பிடிவாதமாக வைத்திருப்பதும் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பவர்களை நிந்திப்பதும் எந்தவிதத்தில் நியாயம்? இதுதான் தர்மமா? 


அப்படியானால் மக்கள் என்றென்றும் புரிந்துகொள்ளமுடியாத குருடர்களாகவே இருக்கவேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆம் பயன்படாத பெட்டியில் பொக்கிஷம் இருப்பதாகச் சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதை நம்பும் குருடர்களாக மக்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்! 


ஆனாலும் இன்னும் அவர்கள் காட்டில்தான் மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனாலும் என்றென்றும் அப்படியே நீடிக்கவேண்டும் என்பது சரியல்ல.


ஒருவர் பிறருடைய செய்திகளையோ கருத்துக்களையோ விளக்குவதென்றால் அங்கு நான் என்ற வார்த்தைக்கு வேலை இருக்காது. ஆனால் தான் கற்றதை தனக்கு நியாயம் என்று படுவதை தான் கடமையாக எண்ணுவதை தன்னுடைய குரலாக வெளிப்படுத்தாமல் அடுத்தவர் சொன்னார் என்று சொல்ல முடியாதல்லவா? நான் என்ற அகந்தையும் இறுமாப்பும்தான் தவிர்க்கவேண்டிய குணங்கள்! நான் இந்த நெறியின்படிதான் நடப்பேன் பிறருக்கும் சொல்வேன் என்பது ஒவ்வொருமனிதனின் கடமை ஆகும். அதை ஒவ்வொருவரும் செய்யலாம். அவரவர் வழியில் அவரவர் நடக்க அனைவருக்கும் உரிமை உண்டு அந்த உரிமையை மறுப்போர் நியாயத்துக்கு முரணானவர்கள். அவர்களிடம் நியாய உள்ளத்தை வேண்டி எதுவும் செய்யமுடியாது. 


இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் என்னிலும் பலபங்கு கல்வி பயின்றவர்களே! அவர்களால் புரிந்துகொள்ளமுடியாத எதுவும் இங்கு சொல்லப்படவில்லை. எனவே அடியேனின் கருத்துக்களை ஆராயுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்பது இன்று வாழும் அனைத்துத் தத்துவங்களின் முன்னோடிகளுக்கு எனது விண்ணப்பம். அறிவியல் இன்று மனித இன அழிவுக்கே அடிகோலுமளவு சென்றதற்கு ஆன்மிகம் அதை என்றும் மதிக்காததுதான் காரணம்.

எனவே மூட நம்பிக்கைகளை அகற்றிய ஆன்மிகமும் அறிவியலும் கைகோர்க்கவேண்டும் என்று விரும்பும் இந்தப்புதுப்பாதை மனித குலத்தை மகத்தானதாக்குவது என்பதை நோக்கமாகக் கொண்டது!


1 comment:

  1. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்..பாராட்டுக்கள்!

    ReplyDelete