ss

Wednesday, April 11, 2012

விவசாயம் ( 4 )உதவிகரங்கள் 

சாதாரணமாக வீடுகளில் மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு என்றால் மின்வாரியத்துக்கும் தொலைபேசி இணைப்பில் கோளாறு என்றால் தொலைபேசி அலுவலகத்துக்கும் ஒரு போன் செய்தால் அதைப் பதிவு செய்துகொண்டு வந்து பார்க்கிறார்கள். அதுபோலவே எத்தனையோ சேவைகள் உள்ளன.

ஆனால் விவசாயிகள் நாடுமுழுக்க உணவு உற்பத்தி என்னும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டிருந்தாலும். அந்தத் தொழிலில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி உதவி செய்ய எந்த ஏற்பாடும் கிடையாது!ஒரு பருவத்தில் என்னென்ன பயிர்கள் பயிர் செய்ய ஏற்றது, அதற்கான சாகுபடிமுறைகள் என்ன என்பது போன்ற ஆலோசனைகளுக்கு தங்களைப் போன்ற பிற விவசாயிகளின் கருத்துக்களைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். அது ஓரளவு பயனளித்தாலும் எல்லாவிதத்திலும் சரியானதல்ல!

வங்கிக் கடன் கூட்டுறவுக் கடன் சம்பந்தமாகவோ வேளாண்துறைகள் விவசாயிகளுக்கு அவ்வப்போது அறிவிக்கும் மானியம் கிடைக்கக்கூடிய சில வகைகள் சம்பந்தமாகவோ  எல்லா விவசாயிகளும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிவது இல்லை.

அதன் காரணமாக அரசுவழங்கும் சலுகைகளைக்கூட அதை முதலில் தெரிந்து கொள்ளும் சிலர் பயன்படுத்திக் கொள்வதும் பிறர் ஏமாற்றமடைவதும் நடக்கிறது.

அதுபோலவே எந்தப் பயிருக்கு என்ன விதைகள் வாங்கலாம், என்ன உரம் போடலாம், என்ன பூச்சிக்கொல்லி தெளிக்கலாம் என்பதற்குக்கூட சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உரம் மருந்துக் கடைக்காரர்களிடமே ஆலொசனை கேட்கவேண்டியுள்ளது.


எந்த உரக் கடைக்கடைக்காரரும் ஒரு விவசாய நிபுணரை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.

உரம், பூச்சிக்கொல்லி வணிகம் செய்யும் கடைக்காரரிடம் ஒரு விவசாயி போய் எதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டால் அவரிடம் உள்ள விதை, அவரிடம் உள்ள உரம், அவரிடம் உள்ள ப+ச்சிக்கொல்லி மற்றும் பலவற்றைத்தான் பரிந்துரைப்பார்.

அதுமட்டுமல்ல, அவற்றில் எது விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கிறதோ, எது அவருக்கு நல்ல லாபம் கொடுக்கக்கூடியதோ அதைத்தான் பரிந்துரைப்பார். தவிர தேவையில்லாதவற்றையும் அவசியத் தேவை என்று சொல்லி அவன் தலையில் கட்டுவார். அதுதானே வணிகபுத்தி?

 அந்த வணிகர் தனது பொருட்களை விற்பதன்மூலம் தான் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்துவாரே தவிர விவசாயிக்கு எது நல்லதோ அதைச் செய்யும் சமூகப் பணியை அவரிடம் எதிர்பார்க்கமுடியாது.

இந்த நிலையில் விவசாயியின் தேவைக்கும் அவர் சிரமப்பட்டுத் தேடிக்கொண்டு போய் செலவு செய்யும் பணத்தால் கிடைக்கும் பொருட்களின் தரத்துக்கும் சம்பந்தமே இருக்காது.

இந்த நிலைமையை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் பயிர்கள் எப்படி அவனுக்கத் தேவையான வருவாயைத் தரமுடியும்?

ஏன் இது போன்ற அவலநிலையிலிருந்து விவசாயியை விடுவிக்கக்கூடாது? கீழ்க்கண்ட நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளுக்கு உதவலாமே!

ஒரு விவசாயிக்கு அரசு அல்லது வங்கிகள் சம்பந்தமாக எந்த ஒரு விபரத்தை அறிய விரும்பினாலும் ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு போன் செய்தால் உடனே அந்த விவசாயியைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.

பயிர்கள். கால்நடைகள், விதைகள், நோய்கள், உரம் மருந்து போன்ற எது சம்பந்தமாகவேனும் விவசாயிக்கு பரிந்துரை தேவைப்பட்டால் வேளாண் துறையில் இருந்து வேளாண் தொழில் நட்பம் அறிந்த ஒரு ஊழியர் உடனே சென்று தேவையான பரிந்துரை செய்யலாம்.

ஒரு விவசாயிக்கு அவன் இருக்கும் இடம் தேடிச்சென்று உதவுவதைவிட வேறென்ன அத்தியாவசியப்பணி இருந்துவிட முடியும்?

அப்படி உதவிசெய்யாத ஒரு நாட்டில் விவசாயம் எப்படி சிறந்ததாக இருக்கமுடியும்?
===============================================

2 comments:

  1. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தொடர்ந்து உங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்!

      Delete