ss

Saturday, April 14, 2012

விவசாயம் ( 5 )சோளம் அன்றும் இன்றும்

பழைய வேளாண் முறைக்கும் நவீன வேளாண் முறைக்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அந்தவேறுபாடு மக்களுக்குச் சாதகமானது அல்ல. பாதகமானது.

ஆதாவது நவீன சாகுபடி என்ற பேரால் மிகையான உற்பத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாதிப்பையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அத்தகைய வேறுபாடு என்னவென்றால் விளைபொருட்கள் நிலுவையில் இருக்கும்பொது பச்சையாகவே பறித்து உண்ணக்கூடியதாக முன்னர் இருந்தது. இப்போது பச்சையாக உண்ணத் தகுதியோ சுவையோ இல்லாத விளைபொருட்கள்தான் விவசாயத்தில் உற்பத்தி செய்வது என்ற கொடுமையான நிலைமை ஏற்பட்டுவிட்டது.உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சோளம். முன்பு வெள்ளைச்சோளம், சடைமஞ்சள்சோளம், கிட்டஞ்சோளம், மொட்டைவெள்ளச் சோளம் போன்ற பல பெயர்களில் விவசாயத்தில் முக்கியப்பங்கு வகித்தது. வெள்ளைச் சோளத்தைக் கார் சோளம் என்றும் சொல்வார்கள். மாசி பங்குனிப்பட்டம் அதற்கு ஏற்றது. மஞ்சள் சோளம் பரட்டாசிப்பட்டத்துக்கு மிகவும் ஏற்றது.

சோளப்பயிர் வளரவளர அதன்மணம் காற்றில் மிதந்து வந்து நம்மை மயக்கும்.

அதன் இளம் பயிரில் ஒருவிதமாகவும் கதிர் வெளிவரும்போது ஒருவிதமாகவும் கதிர் பால்பிடிக்கும்போது ஒருவிதமாகவும் விளைந்தபயிர் ஒருவிதமாகவும் மணக்கும்.


உங்களில் எத்தனைபேருக்கு நான் சொல்லும் செய்தி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆதாவது வெள்ளைச் சோளப் பயிர் கதிர் பிடிக்கும்நேரத்தில் இரண்டுவிதத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். முதலில் அதன் பால்கதிரை ஒடித்து இரண்டு கைகளாலும் நசுக்கித் தேய்த்து அந்த விளையாத இளஞ்சோளத்தை ருசித்துத் தின்பது. நெருப்பில் சுட்டும் சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாக இருக்கும்.

இரண்டாவதாக அதன் அடித் தட்டு (தட்டை என்றும் சொல்வார்கள்). அதை ஒடித்து கரும்பைப் போலவே மென்று சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். இனிப்பாக கரும்பைப்போலவே இருக்கும்.

இது இன்றுள்ள பெரும்பாலோருக்குத் தெரியாது. காரணம் அத்தகைய சோள வகைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.

இப்போது உள்ள சோளவகைகள் எல்லாம் மிகை உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட சுவையில்லாத அல்லது கசப்புச் சுவை உள்ள சக்கைகள் ஆகும். சோளத்தையே தின்னமுடியாது அப்புறம் அதன் தட்டையைத் தின்பதெங்கே?

உண்மையாகவே இப்போது விளையும் நெல் உட்பட எந்தத் தானியத்தின் வைக்கோல் அல்லது தட்டைகளையும் கால்நடைகள்கூட விரும்பிச் சாப்பிடுவது இல்லை!

இதே கதிதான் கம்பு, ராகி, பயறுவகைகள், சாமை, தினை போன்ற சிறுதானியங்கள், போன்றவற்றுக்கும் ஏற்பட்டது.

இதில் பொதிந்துள்ள மக்கள் உணராத ஒரு உண்மையும் சோகமும் என்வென்றால்  முன்னர் இயற்கை உணவு என்கின்ற உணர்வு இல்லாமல் இயல்பாகவே உண்டு வந்தவை ஒழிந்துவிட்டன. இன்று அந்த இடத்துக்குப் பல்வேறு முறைகளில் சமைக்கப்பட்டும் இயந்திரங்கள் அல்லது உயர்வெப்ப அடுப்புகளில் பல ரசாயனக் கலவைகளையும் சேர்த்துச் சுட்டெடுக்கப்பட்டும் வெளிவரும் நச்சுப்பொருட்களைத்தான் உணவென்ற பெயரில் உண்ணும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.

முன்பு விவசாயத் தொளிலாளியான ஒரு ஏழைகூட தான் வேலை செய்யும் நிலத்தில் விளைந்த சோளக் கதிரைத் தேய்த்துத் தின்றான். நிலக்கடலைச் செடியைப் பச்சையாகப் பிடுங்கி அதன் காய்களைப் பறித்துச் சாப்பிட்டான். பயறு வகைகளும் கம்பும் ராகியும் அவனுக்கு பசிக்கு உணவாகப் பயன்பட்டன.

நான் அப்படியெல்லாம் சிறுவயதில் உண்டு அனுபவப்பட்டிருக்கிறேன். மாடுமேய்க்கும் மேய்ச்சல்நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் இருந்து செட்டிக்காரச் சிறுவர்கள் கட்டுக்காவலை மீறி கொண்டு வந்து பச்சையாக பசிக்கும் விளையாட்டுக்குமாக உண்பார்கள். நான் உண்டிருக்கிறேன்.

ஆனால் அந்தப் பாரம்பரிய முறைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டதால் இன்று ஒரு ஏழைகூட வெந்ததையும் ஆலையில் இருந்து வெளிவரும் உணவுப்பண்டங்ளையும் உண்டுவாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் உள்ள சிறு கடைகளில்கூட வெளிநாட்டுக் குளிர்பான வகைகள் மதுக்கடைகளில் மதுவகைகளும் குவிந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நோயெதிர்ப்பு சக்தியை இழந்து மருத்துவமனைகளும் மருந்தும்தான் கதி என்று நிறையப் பேர் வாழும் நிலை உள்ளதை அனைவரும் அறிவோம்.

இன்றைய நவீன விவசாயம் மக்களை இயற்கை உணவைவிட்டுத் தூர விரட்டியடித்துவிட்டது. இப்போதைய தலைமுறையினர்க்கே அதுபற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அடுத்துவரும் தலைமுறையினருக்கு இந்தக் கதையைச் சொல்லக்கூட ஆள் இருக்காது. எனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அந்த அனுபவங்களைக் கதைகதையாகச் சொல்லும்போதே ஒரு பக்கத்தில் சோகத்தால் உள்ளம் வேதனைப்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை!

(இந்தப் படத்தில் உள்ளது நவீன ரகம். மனிதனுக்கோ மாட்டுக்கோ ருசிக்காது. பழைய ரகத்தின் படத்தை இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை)

No comments:

Post a Comment