ss

Saturday, April 21, 2012

நாம் யார் தெரியுமா? ( 8 )


அறிவும் மனமும்
புலன்களின் வாயிலாகப் பெறப்படும் உணர்வுகளும் கல்வியின் மூலமாகப் பெறப்படும் உணர்வுகளும் அனுபவ ரீதியாகப் பெறப்படும் உணர்வுகளும் உருவாக்கும் அதன் சத்தான சாரமும் வழிகாட்டியுமான அறிவு கூடவோ குறையவோ ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அறிவு உணர்வுகளின் விளைவுகளின் கருத்துப் பதிவு மட்டுமல்ல அவைகளை வழி நடத்தும் ஆசானும் ஆகும். இரும்பினாலான கருவிகளைக் கொண்டு அந்த இரும்பையே அடித்துப் பக்குவப் படுத்தி மேலும் பல கருவிகள் செய்வதுபோல் சூழ்நிலைகளின் உணர்வுத் தொகுப்பான அறிவும் தான் உருவாவதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் உணர்வுகளையும் மேலும் பண்படுத்தி தான் உள்ளடங்கியிருக்கும் மனிதனின் மற்றும் சூழ்நிலைகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் தனக்குத் தானே மேலும் மேலும் செழுமைப் படுத்திக் கொள்கிறது. 
அறிவு எனப்படுவது எப்போதும் அது பிறர்மேல் ஏற்படுத்தும் உடன்பாடான வீச்சின் பாதிப்பின் அளவைப் பொறுத்து அதன் தரம் வேறுபடுகிறது.

ஆனால் அறிவின் உடனே அதற்கு இணக்கமாக அதன் இடத்திலே அடிக்கடி அமர்ந்துகொண்டு அறிவிற்கு உடன்பாடான, எதிர்மறையான இருவகைச் செயல்களையும் தூண்டும் ஓர் அம்சம் உண்டு. அதுதான் மனம் என்பது.

நமது உணர்வுகளை வழிநடத்தும் அறிவாம்சம்தான் மனம் என்பது. உணர்வு என்பது ஒரு விளைவுக்கு எதிர் விளைவைத் தூண்டும் நிலை. மனம் என்பது அதை நிறைவேற்றும் அறிவின் புறநிலை. உணர்வுக்கும் அறிவுக்கும் இடைப்பட்ட நிலைதான் மனம் என்பது. உணர்வும் மனமும் கிட்டத்தட்ட ஒத்த இயல்புடையவை. உணர்வில் சிந்தனையம்சம் குறைவு மனதில் அது கூடுதல். ஆனாலும் அது அறிவு மேலோங்கி இருக்கும்போது அறிவுக்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்போது உணர்வுக்கும் நெருக்கமாக இருக்கும். அது இரட்டைவேடம் போடும் ஊசலாடும் இயல்படையது. பொதுவாகவே அறிவை விட உணர்வுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சராசரி மக்களிடையே மனம் என்பது உணர்வுக்குத்தான் நெருக்கமாக இருக்கும்.
நாம் பொதுவாக எதற்கெடுத்தாலும் மனதைத்தான் முன்னிலைப் படுத்திப் பேசுவோம். காரணம் நமது வாழ்வுடன் - நடக்கும் செயல்களுடன் - முதல் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது மனம் தான். மனம் என்பது உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருப்பதால் எப்போதுமே எந்த ஒரு செயலால் தூண்டப்படும் போதும் உடனே முன்னெழுவது அது தொடர்பான உணர்வுதான். காரணம் உணர்வுகளும் அத்துடன் பிறக்கும் அதுசம்பந்தமான மன அதிர்வுகளும் அல்லது பிரதிபலிப்புகளும் உடனுக்குடன் எழுபவை. அவை எழுவதற்குக் காரணம் ஆழமான சிந்தனைகள் அல்ல. அப்போது எழும் உணர்வுகளே! அப்போது எழும் உணர்வுகளை அதற்கு முன் அறிவாக மாற்றப்பட்ட உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் அவற்றுக்குள்ள வேறுபாடு புலப்படும். அந்த தாற்காலிக உணர்வுகள் அறிவுடன் சேர்க்கப்படத் தக்கதா அல்லது அதற்குத் தகுதியற்றதா என்று முடிவு செய்ய இயலும்.

ஆனால் அப்படித் தாற்காலிகமாக எழும் உணர்வுகள் அனைத்தும் அறிவின் வரையறுப்புக்கு ஒத்துப் போகாது. காரணம் அறிவு என்பது ஆராய்ந்து பின்னால் வரும் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவாவது. ஆனால் உணர்வு உடனடியாக எழுவது மட்டுமல்ல உடனடியாக அடுத்த கட்டத்தைச் சந்திக்க ஆர்வமூட்டுவது மட்டுமல்ல உடனே அடுத்த நடவடிக்கைக்குத் தூண்டும் அம்சமும் ஆகும். அப்போது அறிவின் ஆணை இல்லாமலே அடுத்தகட்ட செயல்பாடு நடந்துவிடும். அந்த ஆணையை இடுவதுதான் மனம் என்பது. அந்த அடுத்த கட்ட செயல்பாடு அறிவின் நிர்ணயிப்புகளுக்குப் பொருத்தமாக இருந்தால் தவறு இல்லை. ஆனால் அறிவின் நிர்ணயிப்பும் நடந்து முடிந்த செயலும் வேறு வேறாக இருந்தால் அந்த செயல் எதிர்மறையான விளைவுகளைத்தான் தரும். அதைத்தான் உணர்;ச்சிவசப்படுதல் என்கிறோம்.

இனியொரு கோணத்திலும் மனதின் செயல்பாட்டைப் பார்க்கலாம்.

ஒருவர் மனதில் தான் தினமும் மது அருந்துவது தவறு என்று படுகிறது. ஒருவருக்குச் சூதாடடம் தவறு என்று படுகிறது. கூடா நட்பும் தவறாகப்படுகிறது. புகை பிடிப்பது தவறாகப் படுகிறது. ஆனால் அறிவின் இந்தத் தவறென்ற நிர்ணயிப்பபை மீறித் தவறு நடக்கத்தான் செய்கிறது. அறிவுக்கு தவறென்று பட்டும் அத் தவற்றைச் செய்ய வைப்பது எது? அறிவை மீறி அப்படிப்பட்ட ஆணையைப் பிறப்பிப்பது யார்? அதுதான் திருவாளர் மனம் அவர்களின் திருப்பணி! அந்தத் தவறுகளின் காரணமாக எது விரும்பப்படுகிறதோ அந்தத் தவறான உணர்வுகளின் விருப்பத்தை உந்துதலை அதற்கும் அறிவுக்கும் இடைநிலையான மனம் நிறைவேற்ற விரும்புகிறது. அப்படியொரு இடைப்பட்ட உணர்வு மனதுக்கு இல்லாவிட்டால் தவறென்று கருதும் ஒன்றைச் செய்ய வாய்ப்பே இல்லை!

பொதுவாக நமது செயல்பாடுகள் மூன்றுவித ஆணைகளால் நடக்கிறது. முதலாவது உடனடி உணர்வுகளால் நடப்பது. அது இருவகைப்படும் ஆதாவது முதலாவது தினசரி வாழ்க்கைக் கடமைகள் சம்பந்தப்பட்டது. இரண்டாவது அறிவைக் கேட்கவேண்டிய அவசியமில்லாமல் உணர்வுகளே உத்தரவிடக்கூடிய புதிதாக வரும் சாதாரண பிரச்சினைகள் சாதாரண வேலைகள் தினசரிக்கடமைகள் சம்பந்தப்பட்டவை. அவை வழக்கமான ஒன்றாகவும் உணர்வுகளுக்குப் பெரிய அழுத்தம் கொடுக்காமல் அனுபவத்தால் கையாளக்கூடிய எளியவையாகவும் இருப்பதால் அவைற்றை அறிவின் திட்டப்படி உணர்வு சீராகச்செய்யும். அறிவுடன் முரண்பட வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவது அறிவும் உணர்வும் சேர்ந்து செய்யும் காரியங்கள். ஆதாவது அனுபவங்களைக் கொண்டு கடமைகளைச் செய்வது, தொழில் நுட்பத்துடன் வேலைகளைக் கையாள்வது கலைகள் கல்வி போன்ற தனிநபர் மற்றும் சமூகத் தேவைகளில் ஆர்வம் காட்டுவது, உறவுகளைப் பேணுவதும் வளர்ப்பதும் போன்றவை. இவை சம்பந்தமாக அறிவு ஒரு நிர்ணயிப்புடன் இருந்தாலும் அதன் நிர்ணயிப்பை செயல்படுத்தும்போது அது உணர்வின்றிச் செயல்படுத்த முடியாது. உணர்வின்றிச் செய்யப்படும் வேலைகள் சிறப்பாக இருப்பது இல்லை. காரணம் உணர்வு செயலூக்கத்துடன் சம்பத்தப் பட்டது. ஆனால் அறிவு வழிகாட்டும் அம்சமாக மட்டும் செயல்படுகிறது. அந்த அறிவு செயல்படும்போது உணர்வாக மாற்றப்பட்டுத் தான் செயல்படுத்தப் படும். அப்படி இல்லாவிட்டால் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய எந்த உத்வேகமும் இருக்காது. அந்த உத்வேகத்தை உணர்வும் அதற்கு நெருக்கமான மனமும்தான் கொடுக்கவேண்டும். எனவே அறிவும் உணர்வாகிய மனமும் இணைந்து இணக்கமாகச் செய்யும் செயல்களே சிறப்பாக இருக்கும்.

மூன்றாவதாக அறிவு தனியாகத் தன் பணியைச் செய்வது. இது மிகவும் உயர்ந்த நிலை ஆகும். ஆதாவது தன் அனுபவத்தாலும் கல்வியாலும் பெற்ற அளவிட முடியாத அம்சங்களைத் தொகுத்து அதை பலவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து உலக நடப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏற்கனவே இருப்பில் உள்ள வரையறுப்புகளுடன் ஒப்பிட்டு;ப் பார்த்து அடுத்த கட்டத்துக்கான முடிவுகளை எடுப்பது. இதில் உணர்வின் பங்கு நேரடியாகத் தேவைப்படுவதில்லை. ஆனால் மறைமுகமாகத் தேவைப்படுகிறது. ஆதாவது அப்படிப்பட்ட சிந்தனை யம்சத்தைத் தூண்டுவதால் கிடைக்கும் மன இன்பத்தை நாடி சிந்தனையின் வேகத்தைத் தூண்டும் அம்சமாக உணர்வு துணை நிற்கிறது. இந்த இடத்தில் அறிவு தனது இருப்பிலுள்ள பதிவுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் புதுப் படைப்பாக புது உத்தியை உருவாக்குகிறது. அந்த யுக்தியை அது உருவாவதற்குக் காரணமாக இருந்த புறச் சூழ்நிலைகளின் மேல் புற உலகின் மேல் மற்ற மனிதர் மேல் மற்ற உயிரினங்கள் மேல் இயற்கையின் மேல் எப்படிப் பிரயோகம் செய்வது என்பது பற்றிச் சரியாக சிந்தித்து முடிவெடுக்க முயல்கிறது. இந்த அறிவின் வேலைப்பாட்டில் உணர்வாகிய மனம் பெரும்பாலும் துணைதான் நிற்குமே தவிர இடையூறு செய்வதில்லை.

இந்த மூன்று வித செயல்பாடுகளில் முதலாவது கடைத்தரமானது. இரண்டாவது நடுத்தரமானது. மூன்றாவது முதல்தரமானது. இந்த மூன்றில் முதலாவதில் உணர்வாகிய மனம் ஆதிக்கம் செலுத்தும். இரண்டாவதில் அறிவும் உணர்வாகிய மனமும் சம பங்கு வகிக்கும். மூன்றாவதில் அறிவு ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருக்கும்.
ஒவ்வொரு தனிநபர் சம்பந்தமாகவும் விருப்பு வெறுப்பு என்னும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட அதனினும் மேலான மனம், அறிவு எனப்படுபவை இருந்தாலும் அதில் அறிவே சிறந்து விளங்கினாலும் எல்லாருடைய அறிவும் ஒரேமாதிரியான தரமுடையது அல்ல.

யாரொருவருடைய அறிவு மிக அதிகமான அளவு பிறருடைய உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் பொதுவான நியாயங்களுக்கும் இயற்கையின் நியதிக்கும் பொருத்தமாகவும் இணக்கமாகவும் உள்ளதோ அதுதான் பேரறிவு ஆகும். அத்தகையோரின் கருத்துக்களே தத்துவங்கள் ஆகின்றன. ஆனால் அந்த மாமனிதரின் அறிவாற்றலின் தரத்தைப் புரிந்து கொள்ளும் சக்தியும் ஞானமும் மிகப் பெரும்பாலோர்க்கு இல்லாத பட்சத்தில் அந்தப் பேரறிவுகூடத் தாற்காலிகமாக அல்லது நீண்ட காலம் கூட – அவர்கள் இறந்த பின்னும் கூட – புறக்கணிக்கப்படலாம். ஆனால் சமுதாய வளர்ச்சிப் போக்கால் தத்துவஞான வளர்ச்சிப் போக்கால் உண்மை உணரப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டுவிடும். ஆனால் அந்த உண்மைக்கு உரியவர் வாழ்ந்திருப்பார் என்பது நிச்சயமில்லை என்பது மட்டுமல்ல அவர் வாழுங் காலத்திலேயே அவருடைய துன்பங்களுக்கும் ஏன் மறைவுக்கும் கூட அவருடைய அந்த தத்துவ உண்மைகளே காரணமாகிவிடுவதுகூட உண்டு! அதேபோல தவறான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பலம்வாய்ந்த நம்பகமான சக்தியாக விளங்கும் கருத்துக்கள்கூட காலவெள்ளத்தில் ஒத்துப் போக முடியாமல் கரைந்துபோய்விடும்;.

எனவே கால வெள்ளத்தில் கரைந்து போகாத என்றென்றும் வளர்ச்சி விதிகளுக்கு இணையாகத் தன்னை வளர்த்துக் கொள்ளும் உயர்தரமுள்ள அறிவு படைத்தோர் மேலோர். அத்தகையோரே சமுதாயத்துக்கு வழிகாட்டும் தகுதி படைத்தோர் ஆவர்.
No comments:

Post a Comment