ss

Thursday, April 5, 2012

சிறுகதை ( 4 )


கமலா மெஸ்  

மாலா ஒரு பட்டதாரி. அவளுடைய பெற்றோருக்கு அவளைத்தவிர வேறு பிள்ளைகள் கிடையாது. வசதியான குடும்பமும் அல்ல. வீடுகளே இல்லாத காலத்தில் அவளுடைய தாத்தா வாங்கிப் போட்ட பத்து சென்ட் இடமும் அதிலிருந்த ஒரு சிறிய வீடும் மட்டும்தான் அவர்களுக்கு இருந்த சொத்து. இப்போது அந்தப்பகுதி குடியிருப்புகள் நிறைந்த ஒரு பகுதியாகி விட்டது. விலைமதிப்பும் எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது.

மாலாவின் அப்பா கனகசுந்தரம் அவருடைய அப்பாவுக்கும் ஒரே பிள்ளையாக இருந்ததால் அந்த இடமும் வீடும் அவருக்குமட்டும் சொந்தமாகிவிட்டது. அவர் ஒரு முன்னாள் மில் தொழிலாளி. பெரியவர்கள் சம்பாதித்த சொத்தை விற்காமலும் கடனில் சிக்காமலும் வாழ்ந்ததும்தான் அவரால் முடிந்தது. ஆனால் மாலாவை ஒரு ஆண்பிள்ளையை வளர்ப்பதுபோல் வளர்த்தார். அவளும் பழமையிலும் புதுமையிலும் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் பின்பற்றக்கூடிய கெட்டிக்காரியாக உருவானாள். பட்டதாரி ஆன கையோடு வேலைக்கு என்ன செய்வது என்று ஒரு நாளும் அவள் கவலைப்பட்டதில்லை. அவள் அப்பாவிடம் கற்ற அறிவும் அவர் கொடுத்த சுதந்திரமும் அவளைச் சுயமாகச் சிந்திக்க வைத்தது. துணிந்து களத்தில் இறங்கினாள். 

வீட்டுக்கு முன்புறம் நீளமும் அகலமுமாக இருந்த காலி இடத்தை வங்கிக்கடன் வாங்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட கட்டிடமாக மாற்றினாள். அதுதான் கமலா மெஸ் என்ற பெயரால் இன்னும் பிரபலமாகாவிட்டாலும் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது. ஆரம்பத்தில் இரண்டு பெண்களை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு துவக்கப்பட்ட அது மாலாவின் உழைப்பாலும் அப்பா கனகசுந்தரம் அம்மா கமலம் ஆகியோருடைய ஒத்துழைப்பாலும் இன்று ஐந்து பெண்கள் வேலை செய்யுமளவுக்கு வளர்ந்து விட்டது. 

இதில் புதுமை என்னவென்றால் கமலா மெஸ் என்றென்றும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஒரு நிறுவனமாக வளரவேண்டும், பெரும்புகழ் பெறவேண்டும் என்ற மாலாவின் லட்சியம்தான். 

மெஸ்ஸின் பெயர்ப் பலகையிலேயே உடல் நலத்துக்குப் பயன்படாத எந்த வகை உணவும் இங்கு கிடைக்காது என்று எழுதப்பட்டிருப்பதும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் அங்கே பரிமாரப்படுவது கிடையாது என்பதும் கூடுதல் சிறப்பம்சங்கள்.

காலை ஏழுமணிக்குத் துவங்கி இரவு எட்டுமணிக்குக் கண்டிப்பாக மெஸ் மூடப்பட்டுவிடும். மூன்று வேளையும் தேர்ந்தெடுத்த சில வகை உணவுகள்மட்டும் சுவையாகத் தயாரிக்கப்பட்டு பார்சலாக மட்டும் வழங்கப்படும். எண்ணெயில் சுடப்படும் எந்த வகை உணவும் அங்கு கிடையாது. அங்கேயே உண்ணவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்காக மட்டும் தனியாக ஒரு அறையும் ஒரு உணவுமேசையும் தண்ணீரும் உண்டு. பார்சலை வாங்கிக் கொண்டுபோய் அங்கே வைத்து உண்ணலாம். மிகவும் சுத்தமாக அந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால் அனுமதி இல்லை. மெஸ்ஸின் ஒவ்வொரு அங்குலமும் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதாலும் முற்போக்கான உயர் பண்புகளை வலியுறுத்தும் வாசகங்கள் வரவேற்பறைச் சுவர்களை அலங்கரிப்பதாலும் உள்ளே நுழையும்போதே மனதைக் கவர்ந்துவிடும்.

மெஸ்ஸில் பணியாற்றும் பெண்களுக்கு உயர்ந்த ஊதியமும் உயர்ந்த மரியாதையும் கொடுக்கப்படுவதால் அவர்கள் ஒவ்வொருவரும் அப்படியே மாலாவைப் பிரதிபலித்தார்கள். அவள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரேமாதிரிதான் நடந்து வந்;தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருமே அதன் விளம்பரதாரர் ஆனதால் இரண்டு மூன்று வருடங்களிலேயே அதன் புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்து விட்டது. பெரிய அளவில் கட்டிடத்தை விரிவு படுத்தவும் நிறையப் பெண்களுக்கு வேலை கொடுக்கவும் திட்டம் இருக்கிறது.
    
மாலாவுக்குத் திருமண வயதாகிவிட்டதால் கனகசுந்தரமும் கமலம்மாளும் நல்ல மாப்பிள்ளையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்திருந்தார்கள். அவளுக்கும் அந்த வயதுக்குண்டான கனவுகளும் இருக்கத்தான் செய்தன. அவளுக்குப் பிடிக்காத எதையும் அவர்களால் செய்ய முடியாது. அதேபோல்தான் அவளும்.

மாலாவின் அறிவுக்கும் திறமைக்கும் பெற்றோர் எவ்வளவு காரணமோ அந்த அளவு வேறொரு காரணமும் இருந்தது. பெண்விடுதலைக்கும் சமத்துவத்துக்கும் பாடுபடும் ஓர் மகளிர் அமைப்புடன் அவளுக்கேற்பட்ட தொடர்பும் அங்கு கிடைத்த நல்ல புத்தகங்களைப் படித்ததும்தான் அந்த இன்னொரு காரணம். அவளின் சொந்த வேலைகளுக்கிடையே அந்த மகளிர் அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

ஒருதடவை அவள் மெஸ்ஸ_க்காக சாமான்கள் வாங்க மார்க்கெட்டுக்குச் செல்லும் வழியில் மொபெட் தகராறு செய்ய அவளால் சரி செய்ய முடியாததால் பக்கம் ஏதாவது ஒர்க்ஷாப் இருக்குமா என்று அங்கிருந்த லேத் ஒர்க்ஷாப்பில் விசாரித்தாள். அங்கே நின்றிருந்த ஆந்த ஒர்க்ஷாப் ஓனர் அவளுடன் மிக அன்பாகப் பேசியதோடு அந்த வண்டியை அங்கே விட்டுவிட்டு ஒhக்ஷாப்பில் இருந்த வண்டியை எடுத்துக்கொண்டு போகச்சொன்னார். எவ்வளவு நல்ல மனிதர்! அவர் பெயர் சேதுலிங்கம். அதில் துவங்கி கொஞ்ச நாளிலேயே அவர்கள் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டார்கள். அதிலிருந்து அவள் அந்த வழியாகப் போகும்போது அவ்வப்போது அவரைப் பார்ப்பதும் முன்னால் உள்ள அறையில் உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசுவதும் வழக்கமாகிவிட்டது.

மாலா லேத் ஒர்க்ஷாப் வரும்போதெல்லாம் அவளிடம் ஏதாவது வாயைக் கிளறிக் கொஞ்சநேரம் சூடாகப் பேசவைத்து ரசிப்பது அவருக்கும் பிடித்தமான ஒன்றாகி விட்டது. ஓர்க்ஷாப்பில் நான்;கைந்துபோர் வேலைசெய்வதால் அவருக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். அப்போதெல்லாம் மாலா வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார். அவருக்கு அவளை நினைத்தாலே இனிக்கும்.

அன்று உள்ளுரிலேயே முற்போக்கு மகளிர் அமைப்பின் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் மாலாவும் கலந்து கொண்டாள். அரங்கு நிறைந்திருந்தது. பகல் ஒரு மணி இருக்கும். கலை இலக்கிய அமைப்பின் சார்பாகப் வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டிருந்த இளைஞன் ரகுராம் மேடை ஏறி சுமார் பத்து நிமிடம் பேசினான். பேசினான் என்பதைவிடப் புயலாய் வீசினான் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களின் நிலையைப் பற்றியும் அவர்கள் ஆண்களுக்கு நிகராக அல்லது அவர்களை விஞ்சக்கூடிய வகையில் அறிவையும் துணிவையும் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்திப் பேசிய அவன் ஒரு கட்டத்தில், “பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் பிற்போக்கு எண்ணங்களும் கருத்துக்களும் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும்! அடித்து நொறுக்கவேண்டும்! அதற்குப் பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் நேசிக்கும் ஆண்மையுள்ள ஒவ்வொரு ஆண்மகனும் துணைநிற்க வேண்டும்” என்று இடிபோல் முழங்கினான். கரஒலியால் அரங்கமே அதிர்ந்தது.

அப்போதுதான் மாலா பேசிய இளைஞனைக் கூர்ந்து கவனித்தாள். ஊள@ரிலேயே எங்கோ பார்த்த முகமாக இருந்தது. நினைவுக்கு உடனே வரவில்லை. ஆனால் அதன்பின் அவன் முகம் அவள் நினைவைவிட்டு அகலவே இல்லை. மாலை வீடு திரும்பியவள் கமலா மெஸ்ஸின் அன்றைய வேலைகளைச் சரிபார்த்ததோடு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். கணக்குகளைச் சரிபார்த்தபின் தான் இல்லாததால் வேலை பார்த்த பெண்களுக்கும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட ஓய்வற்ற வேலைக்கு கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டாள்.

அன்று இரவு அந்த இளைஞன் ரகுராமின் முகம் ஏனோ அடிக்கடி மாலாவின் மனத்திரையில் வந்து போயிற்று. அவனுடைய பேச்சு அந்த அளவு அவளைக் கவர்ந்திருந்தது. நமது நாடடுக்கே உண்டான சாபக்கேடான ஊருக்குத்தான் உபதேசம் என்று இல்லாமல் உண்மையான பேச்சாக இருந்தால் சரி என்று எண்ணிக்கொண்டாள். அதன்பின் தூங்கிப் போனாள்.

    நான்கைந்து நாட்களுக்குப் பின்பு மாலா மார்க்கெட்டுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது நண்பர் சேதுலிங்கத்தின் ஞாபகம் வரவே வண்டியை உள்ளே திருப்பினாள். ஸடாண்ட் போட்டு நிறுத்தியதும் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆயிலும் கிரீஸ{ம் அழுக்கும் படிந்த சட்டையும் கையில் சம்மட்டியுமாக வெளியில் வரும் …….இவன்? ஆம் அவனேதான். ரகுராம்! இவனா அவன்? நம்பமுடியவில்லை.

“நீங்க இங்கதான் வேலை பார்க்கறீங்களா? நீங்க ரகுராம்தானே? ”

“ஆமாம்! நான்….?.....இங்கேதான் வேலைபார்க்கறேன். அதிலென்ன சந்தேகம்? நீங்கதான் எங்க மொதலாளியைப் பார்க்கறதுக்காக அடிக்கடி வருவீங்களே? என்னச் சரியாப் பார்க்கலெபோல் இருக்கு! எனக்கு உங்களை நல்லாத் தெரியுமே! ”

“எப்படி? நாம்ம ஒருநாள்கூட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே? ”

“அது எதுக்கு? எங்க மொதலாளிக்கு உங்களைப் பத்தி தினமும் ஒருத்தர்கிட்டெயாவது புகழ்ந்து பேசலைன்னா சாப்பாடே இறங்காது! ஆமா என்னப்பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்? ”

        “பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் நேசிக்கிறது மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான தாக்குதல்களையும் கருத்துக்களையும் அநீதியையும் அடித்து நொறுக்கப் பெண்களுக்குத் தோள் கொடுப்பவர் நீங்கன்னு சமீபத்துலெதான் தெரிஞ்சேன்! மேடையிலே முழங்கிய கலை இலக்கியவாதியை இங்கே இந்த கெட்டப்புலெ பார்த்தவுடன் அதிர்ந்துட்டேன்! ” சிரிக்கிறாள்.

    அவனும் உரக்கச் சிரித்து விட்டான்.

“அடடடடடே!....” நீங்க மகளிர் மாநாட்டுக்கு வந்திருக்குறீங்க! அதுதானே கேட்டேன்! இத்தனை நாள் எங்க மொதலாளிகிட்டெதான் உங்க கதையை அடிக்கடி கேட்டிருக்கேன். இனி அவர் உங்களைப் பத்திச் சொல்ல வேண்டியதே இல்லே! ஆமா கலை இலக்கியவாதீங்க உழைப்பாளிகளா இருக்கக் கூடாதா? அல்லது உழைப்பளிகள் கலைஇலக்கியவாதிகள் ஆகமுடியாதா? உங்க பார்வைலெ அதுக்கெல்லாம் நிறையப் படிப்பு வேணுமோ?....”

    “இல்லவே இல்லே! முற்போக்கு மகளிர் அமைப்பாலெ வழி நடத்;தப்படற நான் எப்படி அந்த மாதிரி நினைக்க முடியும்? புடிப்புக்கும் பண்புக்கும் உழைப்புக்கும் எந்த மாதிரி உறவு இருக்கணும்ணு எனக்கு நல்லாத் தெரியும்! இரண்டு இடத்துலெ இரண்டு விதமாப் பார்த்ததுதான் என்னோட ஆச்சர்யத்துக்குக் காரணம். நல்லது நல்லது. நாம்ம இனித்தான் அடிக்கடி பார்ப்போமே! உங்க மொதலாளி அதுதான் என்னோட நண்பர் வந்துட்டார் அவரையும் பார்த்துட்டுப் போறேன். வரட்டுமா?” வெளியில் போய்விட்டு வந்த சேதுலிஙகம் அறைக்குள் நுழைந்தவுடன் அவளும் றுழைந்தாள்.
    
“என்னம்மா வந்து நேரமாச்சோ? நீ பெரிய ஆள். நேரமே கிடைக்கிறது இல்லே. அப்படித்தானே? ”

        “இல்லேங்கையா! வரமுடியலே. அதுதான்….அது சரீங்க உங்க ஒர்க்ஷாப்பலெ ஒரு லட்சியவாதியெ வேலைக்கு வச்சிருக்கீங்க! எனக்கு முன்னேயே அறிமுகப்படுத்தி வெச்சிருக்கலாமில்லே? ”
      
      “நீ யாரைச்சொல்றே? ”

      “அவர்தான் ரகுராம். அவரைப்பத்தி ஒரு உழைப்பாளியா மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். அவருக்குள்ளே ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கு. ஒருநாள் நீங்களே தெரிஞ்சு ஆச்சரியப்படப் போறீங்க! ” படபடவென்று பொரிந்தாள். 

“ம்?....ம்?...அவனா?.... அவன் நல்ல பையனாச்சே! நான் ஒண்ணும் தப்பாச்சொல்லலியே? ”

“நல்ல பையன்னு சாதாரணமாச் சொல்றீங்க? போகப்போக நல்லாத் தெரிஞ்சுக்கப் போறீங்க! ”

“சரி!சரி!....நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன். நீ அவனைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேல்லவா? அதே போதும்.” அர்த்தத்துடன் புன்னகை செய்கிறார். திரும்பவும் ஒரு பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பறந்துவிட்டாள். அவருக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் சரி. அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு மாலாவுடன் பேசிக்கொண்டிருப்பதென்றால் அலாதிப் பிரியம்!

இப்போதெல்லாம் சேதுலிங்கம் மட்டுமல்ல ரகுராமும் மாலாவுக்கு நண்பனாகி விட்டான். ரகுராமும் மாலாவும் ஒருவர் மதிப்பில் ஒருவர் உயர உயரப் போய்க்கொண்டே இருந்தனர். அவர்களின் நட்பு அவர்களையும் அறியாமலேயே ஆழத்தில் சென்றுகொண்டு இருந்தது. உணர்வின் ஆட்டங்களாக அல்ல. அறிவின் ராகங்களாக!

அவர்கள் அறிவு நிலையிலிருந்து உணர்வு நிலைக்கு எப்போது இறங்கி வருவார்கள் என்று சேதுலிங்கம் எதிர்பார்ப்பது அவருக்கே புரிந்தது.

முன்பெல்லாம் மாலா எந்த நேரமும் கமலாமெஸ்ஸைப் பற்றியும் அதை ஒரு பெரிய நிறுவனமாக உயர்த்துவதற்கான தனது திட்டங்களையும் பற்றி மட்டும்தான் அம்மா கமலத்திடம் அதிகமாகப் பேசுவாள். இப்போதெல்லாம் சேதுலிங்கத்தைப் பற்றியும் ரகுராமைப் பற்றியும் நிறையப் பேசுவது வழக்கமாகி விட்டது. இவள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது என்பது கனகசுந்தரம் கமலம் இருவருடைய அசைக்க முடியாத எண்ணம். ரகுராமைப் பற்றி மாலா சொல்வதை வைத்துப் பார்க்கும் போது மிகமிக நல்லவனாகவும் மாலாவுக்கு ஏற்றவனாகவும்கூடத் தெரிகிறது. அவனுடைய பெற்றோர் மிகவும் நல்லவர்கள் என்று சேதுலிங்கம் சொன்னதாக மாலாவே சொல்லியிருக்கிறாள். படிப்பு, வசதி போன்றவற்றைப் பற்றி அவளிடம் கேட்பதற்குக்கூட அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் ஒழுக்கம், உழைப்பு, உயர்ந்த பண்புகள் போன்றவைதான் அவளைப் பொருத்தவரை முக்கியமான தகுதிகள்.

ஒருவழியாக கனகசுந்தரமும் கமலமும் கலந்து பேசி சேதுலிங்கம் குடும்பத்தை விருந்துக்கு அழைப்பதென்றும் அப்போது மாலாவின் திருமணப்பேச்சை எடுப்பதென்றும் ரகுராமைப் பற்றி அவர்களிடமே கேட்பதென்றும் முடிவு செய்கிறார்கள். மாலாவிடமே கண்டிப்பாக அவர்களை வரச்சொல்லி சொல்லியும் அனுப்பினார்கள். மாலாவுக்கும் அவர்களின் எண்ணம் இனிக்கவே செய்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சரியாகப் பதினொரு மணிக்கு சேதுலிங்கமும் அவர் மனைவி மணியம்மாளும் கமலா மெஸ் முன்பாக பைக்கை நிறுத்துகிறார்கள். அங்தோன் வரச் சொல்லியிருந்தாள். வீடு பக்கம்தானாம். அந்த மெஸ்ஸே அவர்களுடையதுதான் என்று இதுவரை அவருக்கு மாலா சொல்;லவே இல்லை. மாலாவும் அவளுடைய அப்பா கனகசுந்தரமும் அம்மா கமலமும் தயாராக நின்று அவர்களை வரவேற்று மெஸ்ஸின் வரவேற்பறை வழியாக ஒரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

“உங்களைப்பற்றி மாலா சொல்லாத நாளில்லை! நீங்க எங்க வீட்டுக்கு வரவும் நாங்க உங்களைப் பார்க்கவும் இன்னைக்குத்தான் முடிஞ்சிருக்கு. எங்க சந்தோசத்தை எப்படிச் சொல்றதுன்னே தெரியலே!” கனகசுந்தரமும் கமலமும் இதைச் சொல்வதற்கே மகிழ்ச்சியால் திணறினார்கள்.

“மாலா அப்பப்போ கூப்பிடுவா. ஆனா இன்னைக்குத்தான் நேரம் வாச்சிருக்கு! ஆமா உங்க வீட்டுக்கே போலாமே. இந்த மெஸ் உங்க சொந்தக்காரங்களோடதா?”சேதுலிஙகம் கேட்டார்.

“இது எங்களோட மெஸ்தான்னு மாலா உங்களோட சொல்லலியா?”ஆச்சரியத்தோடு கனகசுந்தரம் கேட்கிறார்.

சேது லிங்கம் அதிர்ந்துதான் போய்விட்டார். “என்னஇது மாலா! ஏதோ கமலா மெஸ் பக்கம் ஒரு சின்னகடை இருக்கிறதாத்தானே சொன்னே?”அவள் பதிலொன்றும் சொல்லவில்லை. லேசாகச சிரித்துக்ககொண்டு நிற்கிறாள்;. கனகசுந்தரம்தான் பேசினார்.

“அவள் ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறாள். அவளோட சொந்தத் தகுதியை வைத்துத்தான் மத்;தவங்க அவளை நினைக்கணும், மதிக்கணும். பெத்தவங்க சொத்தையோ பெருமையையோ வெச்சு மேக்கப் போட்டுக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்லுவா. இதையே சொல்லலேன்னா இந்த மெஸ் நூத்துக்குநூறு அவ சொந்த முயற்சியாலும் உழைப்பாலும்தான் உருவானதுன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்காது. அப்படித்தூனே?”

அதன் பின்பு அவர்கள் பேசியது சேதுலிங்கம் காதுகளில் விழவே இல்லை. அவர் மனதில் மாலா மட்டுமே இமயத்துக்கு மேல் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தாள்.

சிறிது அமைதிக்குப்பின் பலகாரம் காப்பி சாப்பிட்ட பின்பு கனகசுந்தரமும் கமலமும் ரகுராமைப்பற்றிப் பேச்செடுத்தார்கள்.

“உங்க ஒர்க்க்ஷாப்புலெ வேலை செய்யுற ரகுராம்ங்கிறவரைப் பற்றியும் மாலா அடிக்கடி பேசுவா. அவங்க அப்பா அம்மாவும் ரொம்ப நல்லவங்கன்னு நீங்க சொன்னதாவும் சொன்னா. மாலாவுக்கு ஏத்தவரா இருப்பாருன்னு நெனைக்கிறோம். அவங்களோட பேசிப்பாருங்களே! அவர்மேலெ அவ ரொம்ப மதிப்பு வச்சிருக்கிறதாலெ அவரோட படிப்பு வேலை வசதி இதுங்களைப் பத்திக்கூட நாங்க கவலைப்படலே.” மாலாவின் பெற்றோர் அவர்கள் விருப்பத்தைச் சொன்னார்கள்.

  அதிர்ச்சியிலிருந்து மீண்ட சேதுலிங்கம் அவர்கள் சொன்னதைச் சிரித்துக்கொண்டே கேட்டவர் வாய் திறந்தார்.

 “அம்மா, நீங்க நெனைக்கிறது நடக்கும்! ஆனா நீங்க சொல்ற மாதிரிஅவங்க சாதாரணமானவங்க அல்ல.பையனும் லேசுப்பட்டவன் அல்ல.டபுள்எம்.ஏ படிச்சிருக்கான். வீடுவாசல், சொந்தத் தொழில் எல்லாம் உண்டுன்னா பாருங்களே! அவனும் உங்க பொண்ணு மாதிரியேதான். பெத்தவங்க சொத்துலெ வாழறதக் கேவலமா நெனைக்கிறவன். அவங்க பாடுபட்டுத் தேடுன சொத்து, அதை அவங்க இஷ்டம்போல் எதுவேணும்னாலும் செய்யட்டும், என்னோட எதிர்காலத்துக்கு என்னோட சொந்த உழைப்பும் முயற்சியும்தான் காரணமா இருக்கணும்னு சாதிக்கிறவன். அவங்க அப்பா அம்மாவும் அப்படியேதான். இருக்குற சொத்தை வச்சு அவன் சோம்பேறியா வாழணும்ணு நாங்களும் நெனைக்கலேன்னுட்டாங்க. உங்களுக்கும் சரிதானே?” நிறுத்தினார். 

இப்போது வியப்பின் எல்லையைத்தொட்டவர்கள் மாலாவும் பெற்றோரும். சராசரி நிலைக்கு வரக் கொஞ்ச நேரம் பிடித்தது. மாலாவின் அம்மா கமலம்தான் பேசினார்.

“அண்ணா, மாலாவைக் கேக்காமலே அவ எண்ணத்தைப் புரிஞ்சுட்டுத்தான் நாங்க உங்களோட பேசினோம.; உங்களுக்கும் சரீன்னு ஆச்சு. நடக்கும்னும் நம்பிக்கையாச் சொல்றீங்க. ஒருநாளைக்கு அந்தத் தம்பியையும் பெரியவங்களையும் வரச்சொல்லுங்க. சந்தோஷமாப் பேசி முடிச்சுக்குவோம்.”

சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சேதுலிங்கம்,

“அதெல்லாம் அவசியமே இல்லே!... ஏன் முழிக்கிறீங்க?.... இன்னேரமும் அவங்களோடதானெ பேசிட்டிருக்கீங்க!” பெரிய குண்டைத்தூக்கித் திடீரெனப்போட்டார்..

மாலாவின் தலைக்குமேலே ஆயிரம் அதிர்வெடிகள் முழங்கின. வாண வேடிக்கைகளும் வர்ண ஜாலங்களும்…அளவே இல்லை! பெற்றவங்களுக்கும்தான். அஞ்சாநெஞ்சம் படைத்த மாலாவின் கண்களில்கூட கண்ணீர் வருமா…? காலடியில் இருந்து தரை நழுவியது போலிருந்தது. ஓடிவந்து சேதுலிங்கத்தின் தலையைக் காதோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு செல்லமாக,

“நீங்க என்னைவிட ரொம்ப மோசம்” என்கிறாள். சேதுலிங்கம் மெல்ல அவள் பக்கம் திரும்பி அவள் தலையை வாஞ்சையாகத் தடவிக்கொண்டே,

“இல்லடா! அப்படி இல்லேன்னா உங்கண்ணுலெ இப்படியொரு ஆனந்தத்தப் பாக்கமுடியுமா?” என்றவர் கனகசுந்தரத்தையும் கமலத்தையும் பார்த்து

“இவங்க இப்படியே கொஞ்சநாள் சந்தோஷமா இருக்கட்டும். எப்போ விரும்புறாங்களோ அப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்!” சொல்லிவிட்டு அமைதியாகி விடுகிறார்.

இப்போதெல்லாம் ரகுராமும் மாலாவும் கூட காதலிக்கத் துவங்கிவிட்டார்கள்!4 comments:

  1. சுபாஷ் ம் ம் ம் ம்............. சபாஷ் !!!!!

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே!....

    ReplyDelete
  3. அனுபவித்து எழுதியது போல இருந்தது அய்யா

    ReplyDelete