ss

Tuesday, May 8, 2012

உணவே மருந்து ( 11 ) மிகு எடையைக் குறைப்போமே!

இன்று உடல் எடைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளதாகவே நினைக்கிறேன்.

வாழ்வதற்கே உணவின்றிப் பரிதாபமாக வாழ்பவர்களும் உயிரை விடுபவர்களும் உலகில் அனேகம்பேர் இருக்க அதே உணவின் மிகுதியால் வேறொரு பகுதியினர் துன்பப்படுவதையும் பார்க்கிறோம்.

ஒரு குருவி எவ்வளவு எடை இருக்கவேண்டுமோ அவ்வளவு எடையுடன் இருந்தால்தான் அது வானில் பறந்து திரிய முடியும். ஒரு நாய் எவ்வளவு எடை இருக்கவேண்டுமோ அவ்வளவு எடையுடன் இருந்தால்தான் அது விரைந்தோட முடியும்.

ஒரு சொசுகூட அதற்கு இருக்கவேண்டிய எடையைவிடக் கூடுதலாக இருந்தால் பறந்து வந்து நம்மைப் கடிக்க முடியாது. அதனால் வாழவும் முடியாது.

இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ இதுபோன்ற உதாரணங்களைக் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால் மனித இனமாகிய நாம் மட்டும் எவ்வளவு எடை இருந்தால் நல்ல வாழ்வு வாழமுடியுமோ அவ்வளவு எடைதான் இருக்கவேண்டும் என்பதை உணரத் தவறுகிறோம்.


மற்ற உயிரினங்கள் வாழவேண்டுமென்றாலே அதற்கான எடையுடன் மட்டுமே உடம்பை வைத்திருக்கவேண்டும் இல்லாவிட்டால் வாழ முடியாது. 

ஆனால் மனிதனால் அப்படி வாழமுடியும் என்பதால் விதிக்கு மாறாக வாழ்கிறோம். அப்படி விதிக்கு மாறான வாழ்வு வாழ்வதால் வாழவேண்டிய முறையில் அல்லாமல் வாழ்வே ஒரு நோயாக வாழ்ந்துகொண்டுள்ளோம். இது சரியா?

மனிதன் தோன்றி வளர்ந்தது இயற்கையில்தான். துவக்க காலத்தில் நாமும் மற்ற விலங்குகளைப்போல உணவுக்கே போராடித்தான் வாழவேண்டியிருந்தது. அதனால் எப்படி இருந்தால் வாழமுடியுமோ அப்படித்தான் இருந்தோம்.

ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சியால் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்ட பாதையில் பயணத்தைத் துவக்கிய பின்னால் மற்ற உயிரினங்களைவிட சக்திமிக்கவனாக வளர்ந்த பின்னால் முன்போலவே மற்றவற்றைப்போன்ற வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை. மற்ற உயிரினங்களின் சக்தியை நமதாக்கிக் கொண்டோம். இயற்கையில் பொதிந்துள்ள சக்திகளை நமதாக்கிக் கொண்டோம். அதனால் சொந்த சக்திக்கு சொந்த உழைப்புக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

அதுமட்டுமல்ல உடலால் உழைப்பது இழிவானதாகக் கருதப்படும் போக்கும் வளர்ந்தது. 

நாம் வேண்டுமானால் வசதிக்குத் தக்கபடி ஊதாரித்தனமாகச் செலவு செய்யலாம். ஆனால் நம் உடம்பு அப்படிச் செய்யாது. உழைக்காமல் தேவையில்லாமல் தன்னிடமிருக்கும் சிறு சக்தியையும் செலவு செய்யாது.

ஆனால் நாம் உண்ணும் உணவு சாதாரணமான இயக்கத்துக்குப் போக கூடுதலாக இருக்கும் சக்தியைக் கொழுப்பாகச் சேமித்துவைத்துக் கொள்கிறது. அது உடம்பில் ஆங்காங்கே தங்கி எடையை அதிகரிக்கிறது.

அதன்காரணமாக நமது உடம்பை அந்நிய எடைபோல நாமே சுமந்து திரிகிறோம்.

அந்நிய எடையைக்கூட சில வினாடிகளில் அல்லது சில நிமிடங்களில் இறக்கி வைத்துவிடலாம். ஆனால் நம்முடைய உடல் எடையானது காலமெல்லாம் சுமக்கவேண்டிய பயனற்ற சுமை ஆகிறது.

பெண்களின் இடைக்கு உடுக்கையை உதாரணமாகச் சொல்வார்கள். காரணம் இரண்டும் மேலும் கீழும் விரிந்தும் இடையில் ஒடுங்கியும் இருக்கும். ஆண்களுக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் தற்கால ஆண் பெண் இருபாலரிலும் பெரும்பாலோர் தங்கள் இடைகளை உடுக்கைபோல் அல்ல தவில் போல் வைத்துள்ளார்கள். ஆதாவது மேலும் கீழும் சிறுத்தும் நடுவில் பெருத்தும்! இது நல்லதா?

இந்தக் கூடுதல் சுமையைக் கால்கள் மட்டும் சுமப்பதில்லை. தோள்கள் மட்டும் சுமப்பதில்லை. இதயம் சுமக்கிறது நுரையீரல் சுமக்கிறது. கல்லீரல் சுமக்கிறது. சிறுநீரகங்கள் சுமக்கின்றன. குடலும் சுரப்பிகளெல்லாம்கூடச் சுமக்கினறன. ஆம் அவையெல்லாம் பயனற்ற இந்தப் பாழாய்ப்போன குப்பைகளுக்காகத் தங்கள் பணியைக் கூடுதலாகச் செய்கினறன. அது சுமைதானே! 

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இந்தக் குப்பையான கூடுதல் சுமையைக் குறைக்காவிட்டால் வாழ்வைத் திருப்தியாக அனுபவிக்கமுடியாது.

குண்டாக இருக்கும் ஆணை ஒரு பெண்ணோ குண்டாக இருக்கும் பெண்ணை ஒரு ஆணோ மனப்பூர்வமாக விரும்பமுடியாது. அவர்கள் சேர்ந்து வாழும் வாழ்வு எப்படியிருக்கும் என்று பார்த்தால் கொடுமையாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

இத்தகைய அவலத்திலிருந்து மீண்டாகவேண்டும். அதற்காக ஒரு இலக்கு வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கைநோக்கி ஒவ்வொருநாளும் முயற்சி இருக்கவேண்டும். அந்த இலக்கை அடையும் முன்னே அதன் பயன்களை உணரலாம். அடைந்துவிட்டாலோ அற்புதமான ஒரு உலகையே காணலாம். இலக்கை நெருங்குமளவு நன்மையே!

ஆதாவது ஒரு ஆணோ அல்லது பெண்ணொ சிறந்த உடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கவேண்டுமானால் உடல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சில அம்சங்களைச் சொல்கிறேன். அந்த முறையில் ஒவ்வொருவருடைய உடலும் இயக்கமும் இருந்துவிட்டால் அதற்க ஈடு இணையே இருக்கமுடியாது.

முதலாவதாக ஒருவருடைய எடை எவ்வளவாக இருந்தாலும் சரி அவர் நிற்கும்போது அவருடைய உடம்பின் நடுப்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.

அவர் பாதங்கள் மட்டும் சமமாக நிலத்தில் படிந்திருக்கும் வகையில் முழங்கால்களை மடித்து குத்தவைத்து உட்கார முடியவேண்டும்.

அப்படி உட்கார முடிவது மட்டுமல்ல மடிந்திருக்கும் கால்களைச் சேர்த்துக் குழந்தையைக் கட்டி அணைப்பதுபோல அணைத்துக்கொள்ள முடியவேண்டும். அப்போது இருகைகளின் விரல்களும் அடுத்த கையின் முழங்கையைத் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். 

அதேபோல ஒரே காலால் நொண்டியடித்துக்கொண்டே நூறுமீட்டர் தூரமாவது நிற்காமல் செல்லக்கூடியவராக இருக்கவேண்டும்.

கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் போது மடியில் உட்கார்ந்திருக்கும் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு கைகளை ஊன்றாமல் அப்படியே மேலே எழுந்திருக்கவேண்டும்.

மூச்சிரைக்காமல் ஐநூறு தோப்புக்கரணம் போடக்கூடியவராக இருக்கவேண்டும்.

இந்தத் தகுதிகள் எல்லாம் ஒருவருக்கு இருந்து அவர் இயற்கை உணவில் ஈடுபாடும் காட்டினால் நூறு ஆண்டுகள் இளைஞரைப்போல் வாழ்வது நிச்சயம்.

இந்தத் தகுதிகள் எல்லாம் முன்னர் ஒவ்வொரு மனிதரிடமும் இருந்தன. ஆனால் நிறையப்பேர் இழந்துவிட்டோம். இழந்ததை மீட்டால் போதும்!

இது அடைய முடியாத இலக்கு அல்ல. அடைவதன்மூலம் வாழும் தகுதியை உயர்த்திக்கொள்வோம். 

பயனற்ற வாழ்வு வாழ்வதைவிடப் பயனுள்ள வாழ்வுக்கு முயற்சி செய்வோம். வெற்றியும் பெறுவோம்.

No comments:

Post a Comment