ss

Monday, May 28, 2012

விவசாயம் ( 20 )


பஞ்சகாவ்யம்

பஞ்சகாவ்யம் என்றால் பசு சம்பந்தப்பட்ட ஐந்து பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்று பொருள்.

இது மனிதருடன் இணைபிரியாது வாழ்ந்து வரும் பசுமாட்டுக்கு உயர்வான மதிப்பும் மரியாதையும் கொடுக்கவும் கடவுளின் ஒரு வடிவமாக மதிக்கப்படும் அதைத் துதிக்கும் முகமாகவும் இந்துக்கோவில்களில் ஒரு சடங்குப் பொருளாகக் கையாளப்பட்டு வந்தது. புனிதமாகவும் கருதப்பட்டது. பெரிய அளவு சாதாரண மக்களால் அறியப்படவில்லை. 

அவர்கள் பசுவின் கோமியத்தையும் சாணத்தையும் பாலையும் வெவ்வேறு முறைகளில் தனித்தனியாக புனிதச் செயல்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் சமீப ஆண்டுகளில் பஞ்சகாவ்யம் என்ற பெயரில் இது விவசாயிகளிடம் செல்வாக்குப்பெற்று வருகிறது.

பசுமாட்டின் கோமியம்(மூத்திரம்), சாணம், பால், தயிர், நெய் என்ற ஐந்து பொருட்களையும் உள்ளடக்கியதாக இது தயாரி;ககப்படுகிறது.

இது விவசாயப் பயிர்களுக்கும் செடிகொடிகளுக்கும் பழமரங்களுக்கும் உரமாகவும் ஊக்குவிப்பானாகவும் பயன்படுத்திச் சோதிக்கப்பட்டதில் நல்ல பயன் இருந்திருக்கிறது.காரணம் இதில் கலந்துள்ள பொருட்களால் அதில் உருவாகும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் பயிர்களின் இயற்கையான வளர்ச்சிக்குத் துணைபுரிவதால் பயிர்கள் அதை ஏற்றுக்கொண்டு நன்கு வளர்வது அறியப்பட்டுள்ளது.

இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகும். ஆதாவது வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதும் நன்மை விளைவிக்கக்கூடியதும் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

வேதிப் பொருட்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது அது உடனடியாகப் பலனைக் கொடுத்ததால் விவசாயிகள் கண்மூடித்தனமாகப் பிரயோகித்து நிலத்திலுள்ள சத்துக்கள் வேகமாக அழிவதைக் கணக்கில் கொள்ளாமல் நிலத்தைப் பாழ்படுத்தினர். உண்மையில் துவக்கத்தில் வேதிப்பொருள் பயன்பாட்டின்போது விளைச்சல் கூடுதலாகக் கிடைத்தது அவற்றால் மட்டும் அல்ல. அதற்கு முன்னர் வளப்படுத்தப்பட்ட ப+மியாக இருந்ததும் ஒரு காரணம். 

ஆனால் துவக்ககாலப் பயன்பாட்டால் கிடைத்த பயன் வேதி உரங்களால் என்று நம்பி அதைச் சார்ந்திருக்கும் வேளாண் பண்பாடு உருவாகிறது. கால்நடைப் பயன்பாடு குறைந்துவிட்டது. எந்தக் கால்நடைப் பயன்பாட்டின் பின்னணியில் வேதி உரங்கள் புகழ் பெற்றனவோ அந்தக் கால்நடைப் பயன்பாடும் கால்நடை உரமும் நிலத்தில் குறைந்ததும் தனியாக வேதி உரங்களை நிலங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. வலுக்கட்டாயமாகப் பயன்படுத்துவதால் நிலங்கள் களர்த் தன்மை பெற்று நோயெதிர்ப்பு சக்தியையும் இழந்துவிட்டதால் இரண்டுங்கெட்டான் நிலையை அடைந்துவிட்டன. 

ஆதாவது இயற்கை உரங்களின் வளங்களின் ஆதாரத்தையம் இழந்து வேதிப் பொருட்களின் பயன்பாட்டையும் நிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில் முந்தைய நிலைக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் ஒரு திரிசங்கு நிலையை விவசாயம் அடைந்திருக்கிறது. ஆதாவது அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டு கடைசியில் அரசனும் புருஷனும் ஆத்தோடு போன கதை ஆகிவிட்டது.

துவக்க காலத்தில் உணவுத் தட்டுப்hட்டைப் போக்க வேதி உரப்பயன்பாடு தாற்காலிகமாகக் கைகொடுக்க பின் விளைவுகளை மறந்து சரியாகத் திட்டமிடவில்லை. 

அதன் தொடர்ச்சியாக சிங்கத்தைத் துரத்திச் சென்ற கழுதையைப் போல் வேதிப் பொருட்களுக்குப் பின்னால் போன விவசாயம் அது திரும்பிப் பாக்கவும் ஆபத்தாக முடிந்தது.

இயற்கைக்கு ஆதரவாக, வேதிப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக கொடுக்கப்படும் குரலை யாரும் கவனிக்காது இருந்த காலம் மாறி என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்கவேண்டிய கட்டாயம் உருவாகிறது.

அதுதான் இயற்கை விவசாயம் என்பது. இயற்கை விவசாயம் என்பது ஏதோ இப்போது கண்டுபிடிக்கப்பட்டது போலப் பலரால் அதிசயமாகப் பார்க்கப் படுகிறது. ஆனால் அது கோவலனால் கைவிடப்பட்ட கண்ணகியைப் போன்று பாரம்பரியமாக நடந்து வந்தது.

இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நீண்டகாலம் ஆனநிலையில் கால்நடைகளையெல்லாம் தின்று தீர்த்த நிலையில் கால்நடைப் பயன்பாடு வழக்கொழிந்த நிலையில் கால்நடைகளிடம் வேலை பழக்கி வேலை வாங்கும் தொழில் திறம் மறைந்த நிலையில் விவசாயத் தொழிலாளர்கள் எல்லாம் தங்களின் தொழில் நுணுக்கத்தையும் உழைப்புத் திறனையும் கைவிட்ட நிலையில் இயந்திரப் பயன்பாட்டால் கடின வேலைகள் செய்ய ஆட்கள் இல்லை என்ற நிலையில் இயற்கை வேளாண்மை என்ற உணர்வு எழுந்துள்ளது.

ஆனால் அந்த உணர்வைச் செயல்படுத்த இன்றைய விவசாயமும் அதுதொடர்பான மக்களும் தயாராய் இருக்கிறோமா? 

உடனடியாகச் சந்தைக்குச் சென்று நல்ல காளைமாடுகளை வாங்கி வந்து கருவேலமரத்தால் செய்யப்பட்ட கலப்பையால் நிலத்தை நன்கு உழப்போகிறோமா?

அல்லது காங்கேய இனப் பசுமாடுகளை வாங்கிவந்து கன்று களர் என்று பட்டி நிறையக் கால்நடைகளை ஆடுகள் மாடுகள் என்று வளர்க்கப் போகிறோமா?

அவற்றையெல்லாம் விவசாய நிலங்களில் கட்டுதரை போட்டு அதன் சாணத்தையும் மூத்திரத்தையும் ஆட்டுப் புழுக்கைகளையும் உடனுக்குடன் மண்ணோடு கலங்கச்செய்து அதன் மூலம் மண்ணை நுண்ணியிர்களாலும் மண் புழுக்களாலும் நிரம்பி வழியச் செய்யப்போகிறோமா?

அல்லது குளம், எரி போன்ற இடங்களில் கிடைக்கும் வண்டல்மண் படிவுகளை மாட்டு வண்டிகளில் அள்ளி;க்கொண்டு வந்து போட்டு வளங்குறைந்த நிலங்களை யெல்லாம் வளம் பெறச் செய்யப்போகிறோமா?

அல்லது கொழுஞ்சி, எருக்கு, ஆவாரை, சீமெண்ணைப்பூடு, தும்பை போன்ற செடிகளையெல்லாம் பிடுங்கி வண்டிவண்டியாகக்கொண்டு வந்து எருக்குழிகளில் இட்டு மக்கவைத்தோ நேரடியாகவே வயல் சேற்றில் அமிழ்த்திப் புழுங்கவைத்தோ இயற்கையாக மண்ணில் எருச் சத்தைக் கூட்டப்போகிறோமா?

அல்லது தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சணப்பு தட்டைப்பயறு கொள்ளு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை விவசாய நிலம் முழுவதும் விதைத்து அடர்ந்த புதர்போல் வளர்ந்தபின் அப்படியே மண்ணில் புதைந்து எருவாகுமாறு உழவு செய்யப்போகிறோமா?

இவ்வளவும் செய்தால்தான் இயற்கையான முறையில் விவசாய நிலங்கள் வேறு எந்த வேதி உரங்களும்  போடாமல் வளம் பெறும்.

ஆனால் இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமா?

உடனடியாக நாம் செய்யக்கூடியதெல்லாம் நிலத்தை உழவு செய்து அதில் பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து மடக்கி உழுது வளம் சேர்க்கவேண்டியது முக்கியமானது. அதுகூட வேதிப் பொருட்களைப் போட்டு சக்கையாகிப் போன மண்ணில் வேதிப் பொருள் இடாமல் நன்கு வளராது. முதல் முறை வேதி உரங்களைப் போட்டாவது வளர்ந்த பின்பு உழுது மண்ணை வளப்படுத்தவேண்டும்.

அதன்பின்பு வேதி உரங்களைப் போடாமலே பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து வளர்த்து அழித்து அழித்து மண்ணை வளப்படுத்த வேண்டும்.

அத்துடன் விவசாய வேலைகளுக்கு திடீரெனக் கால்நடைகளை ஈடுபடுத்தும் முறைக்கு மாற முடியாது. இனி எப்போதும் முடியாது. காரணம் அதற்கு ஆட்கள் கிடையாது.

அதனால் கரவை மாடுகள் கண்டிப்பாக வளர்க்கவேண்டும். அவற்றின்மூலம் பால் வருமானம் ஒரு பகுதி கிடைக்கும். அதைவிட அதன் சாணத்தால் பூமியை வளப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் விவசாய வருவாய் மகத்தானதாக இருக்கும். அதுவே கடினமானதுதான் என்றாலும் கால்நடைகள் இல்லாமல் விவசாயம் கிடையாது என்ற நிலையில் ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் கரவை மாடுகள் வளர்த்தே ஆகவேண்டும்.

கரவை மாடுகளுக்கான தீவனப் பயிர் உற்பத்திக்கென குறிப்பிட்ட பரப்பை நிலத்தில் ஒதுக்கியே ஆகவேண்டும். அத்தோடு ஆடுகள் மேய்க்க ஆள் கிடைக்காது என்கிற நிலையில் மேய்க்காமலே ஆடுவளர்ப்பு என்கிற நவீன முறைக்கும் மாறித்தான் ஆகவேண்டும்.

இவ்வளவு செய்தாலும் இயற்கை முறையில் விவசாயப்பயிர் நன்கு வளர சில வருடங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவரை தாக்குப்படிக்கும் விவசாயிக்கு உதவியாக பால் கொள் முதல் விலையில் இருந்து அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயவிலை கொடுப்பது வரை அரசுகள் உதவவேண்டும். இல்லாவிட்டால் இயற்கை வேளாண்மைக்கு மாறிச்செல்ல முடியாது.

இப்படிப்பட்ட கடுமையான விவசாய முறைகள் பின்பற்றப்பட்டாலன்றி நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்த முடியாது இயற்கை முறையில் பயிர் செய்யமுடியாது என்கிற நிலையில் பஞ்சகாவ்யம் என்ற நுண்ணூட்டத்தை மட்டும் நம்பி மண்புழு வளர்ப்பு என்கிற தலையைச் சுற்றி வாய்க்குக் கையைக் கொண்டு சென்று உண்பதைப்போன்ற முறையை நம்பி நிலத்தை வளப்படுத்த முடியாது. 

பஞ்சகாவ்யம் என்பது பசுமாட்டின் ஐந்துவிதமான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் நுண்ணூட்டமே!ஆதாவது நுண்ணுயிரிகளின் செரிவு ஆகும். அது இடப்படும் நிலத்துக்கும் தெளிக்கப்டும் பயிருக்கும் நன்மை விளைவிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் அது பயன்படுத்தப்படும் முன் பயன்படுத்த வேண்டிய நிலம் எந்த மாதிரி தகுதியில் இருக்கவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பஞ்சகாவ்வயம் என்பது சர்வரோக நிவாரணிபோலவும் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போலவும் சித்தரிக்கப் படுகிறது. அதனால் விவசாயிகள் மனதில் இயற்கை வேளாண்மையிலுள்ள முழு விபரங்களையும் தவிர்த்து கடினமல்லாத ஒரு பகுதியை ஊக்குவிப்பதாகத்தான் அமைகிறது. அது நடைமுறைக்கு நன்மை தரக்கூடியது அல்ல.

பஞ்சகாவ்யம் பயன்படுத்தப்படும் நிலம் முதலிலேயே கால்நடைக் கழிவுகளாலோ எருக்குழிக் கழிவுகளாலோ இயற்கை எருவாக இடப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது பசுந்தாள் உரச்செடிகளை உழுது மண்ணில் மக்கிப்போய் இருக்கவேண்டும். அல்லது சாணக்கரைசலை அடிக்கடி கரைத்துவிட்டதன் மூலம் நிலத்தில் இயற்கையான சத்துக்கள் ஏற்றப்பட்டிருக்கவேண்டும்.

அப்போதுதான் பயிர் நல்ல போஷாக்குடன் துவக்கத்திலிருந்தே வளர்ந்து வரும். 

அந்த நிலையில் நிலத்தில் இருக்கும் சத்துக்கள் மெதுவாகத்தான் எடுத்துக்கொள்ளும் என்கிற அடிப்படையில் பஞ்சகாவ்யத்தைப் பாசன நீரில் கரைத்துவிடுவதன்மூலம் வேர் மூலமாகவும் தெளிப்பான்களின் மூலம் தெளிப்பதால் இலை மூலமாகவும் மேலும் உரமூட்டப்படுகிறது. ஏற்கனவே போஷாக்குடன் இருக்கும் பயிர் இந்த வீரியமான நுண்ணூட்டத்தைக்கொடுப்பதால் பயிர் மிக நன்றாக வேகமாக வளர்வதுமட்டுமல்ல சத்துக்குறைவால் ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படுகிறது என்பது மட்டுமல்ல பூச்சிகளால் பகை நுண்ணியிரிகளால் ஏற்படும் நோய்களை எதிர்த்து நிற்கும் நோயெதிர்ப்பு சக்தியையயும் பெறுகிறது. அதன் பின்பு அமோக மகசூலைக்கொடுப்பதில் சந்தேகம் என்ன?

ஆனால் பஞ்சகாவ்யம் பயன்படுத்துப்படுவதற்கு முன் நிலத்துக்குச் செய்யவேண்டியப பக்குவப்படுத்தும் முன்னேற்பாடுகள் எதையும் முக்கயத்துவம் கொடுத்துக் குறிப்பிடாமல் பஞ்சகாவ்யம் இருந்தால் போதும், அதைப்பக்குவமாகப் பயன்படுத்தினால் போதும், ஓரிரு மாடுகள் இருந்தால் போதும், பல எக்கர் பரப்பு நிலத்தைச் சுலபமாக வளப்படுத்திவிடலாம் என்றெல்லாம் பிரமை உருவாக்கப்படுகிறது.

இதை யார் செய்கிறார்கள் என்றால் இயற்கை வேளாண்மையில் அளவற்ற ஆர்வமுள்ள இயற்கையின் மேல் ஈடுபாடுள்ள படித்தவர்கள்தான் இதைச்செய்கிறார்கள்.

அவர்கள் நடைமுறைவாழ்வில் விவசாயப்பணிகளில் மண்ணை வளப்படுத்துவதில் நேரடி அனுபவப்படாதவர்கள். அதைச்சார்ந்து வாழாத ஆனால் இயற்கை வேளாண்மையில் நாட்டமுடையவர்கள். அவர்களின் அதீத ஈடுபாடுதான் இப்படித் தவறான மயக்கத்தை உருவாக்குகிறது. 

அவர்கள் சில விஷயங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை.

ஆதாவது இந்தப் பஞ்சகாவ்யாவின் உள்ளடக்கம் என்ன? அது ஏன் தாவரங்களுக்கு நல்ல பயன் தருகிறது? அதற்கு இணையான மாற்று எதுவும் இல்லையா? அதில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துக்கள் உண்மையாகவே நிலத்துக்குப் போதுமானவைதானா? அது நிலத்தில் எப்படி செயல்படுகிறது? அறிவியல் பார்வையில் அதன் கட்டமைப்பு என்ன என்ற கேள்விகளை யாரும் கேட்டுப் பாhத்ததாகத் தெரியவில்லை!

ஆதாவது முன்னோர் பயன்படுத்திய பசுவை அடிப்படையாகக் கொண்ட பஞ்சகாவ்யம் புனிதமானது மட்டுமல்ல, அற்புதமான குணங்களை;க் கொண்டது, விவசாயத்துக்கு அற்புதமாகப் பயன்படக்கூடியது, பல நோய்களைக் குணப்படுத்தக்கூடியது,  மனிதருக்கும்கூட மருந்தாகப்பயன்படும், உள்ளுக்குச் சாப்பிடவும் செய்யலாம் இத்தியாதி எண்ணங்களை அவரவர் மனதுக்குப்பட்டதை எல்லாம் வளர்த்துக்கொண்டு அதை அறிவியல் கண்டுபிடிப்புகள் போல் பிரச்சாரமும் செய்கின்றார்கள். 

சுருக்கமாகச்சொன்னால் கெட்டுப்போன பொருட்களின் அல்லது கெடுக்கப்பட்ட பொருட்களின் ஒருவிதமான கலவை அவ்வளவே! வேதிப்பொருள் கலக்காத கெட்டுப்போகக்கூடிய குணம் கொண்ட ஒவ்வொரு பொருளிலும் பஞ்சகாவ்யத்தின் ஒரு பகுதிப் பண்புகள் உண்டு. அது இயற்கையின் நியதி! அதில் சேர்க்கப்படும் பொருட்களின் செறிவைப் பொருத்து அதன் ஊட்டச்சத்து இருக்கும். 

பசுமாட்டின் பொருட்களைக்கொண்டுதான் இது தயாரிக்கமுடியும் என்றால் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என்ற ஐந்து பொருட்களை மடடும்தான் பயன்படுத்தவேண்டும். அதுதான் பஞ்சகாவ்யம்.

ஆனால் சர்க்கரை, பழங்கள், இளநீர், கள், இன்னும் பலபொருட்களையும் சேர்த்துத் தயாரித்து அதைப் பஞ்சகாவ்யம் என்று சொல்கிறார்கள்.

ஆதாவது அந்தப்பெயர் ஆன்மிக காரியங்களில் இடம்பெற்ற பெயராக இருப்பதால் அதன் பெயரைமட்டும் வைத்துக்கொண்டு என்னென்னமோ கலந்து செய்கிறார்கள்.

அப்படிச் செய்வது தவறே அல்ல. அதற்கான உண்மையான காரணங்களை மட்டும் சொல்லி உண்மையான அதன் பயன்படுதன்மையை மட்டும் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.

சந்தைக்குச் சென்று கெட்டுத் தூக்கி எறியப்படும் பழ வகைகளையும் வீட்டில் கெட்டுப்போன உணவுவகைகளையும் கழுதை பன்றி குதிரை மாடு உட்பட கிடைக்கும் கால்நடைகளின் சாணத்தையும் மூத்திரத்தையும் சாக்கடை நீரையும் சேர்த்தால்கூட அருமையான ஊட்டச்சத்தக்கள் மிகுந்த ஒரு கலவை கிடைக்கும். அது மனிதருக்குக் குமட்டக்கூடியதாகக் கூட இருக்கலாம். ஆனால் தாவரங்களுக்கு அதுதான் தேவை. 

மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் கழிவுகள் தாவரங்களுக்கும் தாவரங்களின் கழிவுகள் மனிதருக்கும் ஏற்றவை. அதுதான் அடிப்படை விதி! அந்த விதிக்கு உட்பட்டு என்னவகையான கலவையைத் தயார் செய்தாலும் அது தாவரங்களுக்கும் இயற்கை வேளாண்மைக்கும் ஏற்றதுவே ஆகும்.

அதைவிட்டு பஞ்சகாவ்யம்தான் சிறந்தது அதைக்கொண்டு வெற்றிகரமாக விவசாயம் செய்யலாம் என நினைப்பதும் பிரச்சாரம் செய்வதும் இயற்கை வேளாண்மையை வளர்ப்பதற்குப் பயன்படாது. 

வளம் குறைந்த ஒரு நிலத்தில் வேறு எதையும் பயன்படுத்தாமல் தனியாகப் பஞ்ச காவ்யத்தைப் பயன்படுத்திப் பார்த்தால் உண்மையை அறியலாம். நிச்சயமாக மகிழும்படி இருக்காது. காரணம் பயன்படுத்தப்படும் அளவும் அதில் அடங்கியுள்ளவையும் வளங்குறைந்த நிலத்தை வளப்படுத்துவதற்குப் போதுமானது அல்ல.  

அதுபோலவே ஆவூட்டம், ஆட்டுட்டம், மீன் ஊட்டம், இயற்கைப் பூச்சிவிரட்டி இன்னும் நிறைய வகையான பொருட்களளைப் பற்றி அவற்றின் ஊட்டத்தைப்பற்றி மிகையாகப் பிரச்சாரம் செய்வதும் பயன்படாது.

இதையெல்லாம் நம்பி அழகாக விவசாயம் செய்ய யாராவது இறங்கினால் நொந்து நூலாகிப் போவார்கள் என்பதில் ஐயமே இல்லை! 

இயற்கை வேளாண்மை என்பது ஒரு மாபெரும் திட்டமிடல்! அரசின் ஒத்துழைப்புடனும் இயற்கை மேம்பாடு என்ற தூரப்பார்வையுடனும் அணுகவேண்டிய அவசியமான தவிர்க்கமுடியாத முறை ஆகும்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் வெறும் உணர்வை அடிப்படையாகக் கொண்டு இறங்கினால் இதுநாள் வரை வேதிப் பொருட்களைக் கொண்டு விவசாயிகளை ஏமாற்றிக் கொள்ளையடித்தவர்கள் இனி இயற்கைமுறைத் தயாரிப்பு என்னும் பெயரால் இயற்கைப் பொருட்களின் செறிவுட்டப்பட்ட இயற்கைத் தயாரிப்பு என்று சொல்லி பாட்டில்களில் அடைத்து அதிலும் காசு பார்த்து விடுவார்கள். 

இப்போதே அந்த ஆலைத் தயாரிப்புகளை விவசாயக் கண்காட்சிகளில் பார்க்கலாம்! இந் வர்த்தக உலகம் தனது லாபத்துக்காக எந்தத் தவற்றையும் செய்யும். இயற்கை வேளாண்மையின் சிறப்புகளையும் வர்த்தக நோக்கு பலிவாங்கிவிடும்.

எச்சரிக்கை வேண்டும். பஞ்ச காவ்யா மட்டும் விதிவிலக்கு அல்ல!

2 comments: