ss

Friday, May 18, 2012

அரசியல் ( 4 )

கருத்தோட்டம் (4)


ஒரு காலத்தில் உழைப்பாளர்கள்,பிறர்உழைப்பில் வாழ்பவர்கள் என இருபிரிவுகள்தான் பிரதானமாகக் கருதப்பட்டன. ஆனால் தற்காலத்தில் உடலாலும் அறிவாலும் உழைக்கின்ற உழைப்பாளிகள் அனைவரும் ஏற்றத்தாழ்வான பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டனர். 


வெள்ளைக்காரன் மட்டும் நம்மைப் பிரித்தாளவில்லை. நமது அரசுகளும் மக்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக அத்தனை விதமான சூழ்ச்சிகளையும் கையாளவே செய்கிறார்கள்.இத்தனையும் தாண்டித்தான் மக்கள் பொது நோக்குடன் ஜனநாயகப் பார்வையில் சிறந்த அரசியலுக்கான போராட்டத்தை நடத்தியாக வேண்டும் என்றே நினைக்கிறேன்!அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொருந்தக்கூடிய மக்கள் அரசியல், சிறந்த அரசியல் நாகரிகம் உருவாகவேண்டும்! இதுவே நல்லோரின் விருப்பமாகவும் இருக்கும் என்றும் கருதுகிறேன்!ஜனநாயகத்தை நாம் வெறுக்க முடியாது. வெறுக்கக்கூடாது! காரணம் அதைவிட உயர்ந்தது வேறு எதுவும் இல்லை என்பதே!


ஆனால் ஜனநாயகம் என்ற பேரால் நடக்கும் கூத்துக்களையும் மோசடிகளையும் எத்தனைநாள் பொறுத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் இந்த மக்கள் என்று எண்ணும்போதுதான் வெறுப்பு வருகிறது!முதலில்அரசியல்பற்றி நாம் நினைத்துக்கொண்டிருப்பது சரியா என்று சிந்திக்கவேண்டும். 


அரசியல் என்றாலே அருவருக்கத்தக்கதான ஒன்றாக நமது நாட்டில் ஆக்கப்பட்டுவிட்டது. அரசியல்வாதி என்றாலே அவனைவிட மோசமான மோசடிப் பேர்வழி யாரும் இல்லை என்ற எண்ணம மக்கள் மனத்தில் ஆழமாக உருவாக்கப்பட்டுவிட்டது. இது சரியா? சரியல்ல என்பதே நியாயமான பதிலாகும்.பாலில் விஷம் கலந்துவிட்டது என்பதால் பாலையே விஷம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று சொல்வதாகும்.அரசியல் என்பது சமுதாயத்துக்கு அடிப்படைத் தேவையாகும் . அதுவன்றி சமூகமாக வாழ வேறு வழிகாட்டுமுறை இல்லை. அதை அயோக்கியர்களின் பொறுப்பில் விட்டு விட்டு அரசியலையே அயோக்கியத்தனம் என்று சொல்வது என்ன நியாயம்?அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று சொல்வதால் அயோக்கியர்கள் வெட்கப்படப் போவதில்லை. நல்லவர்கள்தான் அந்த இழிவான சொல்லுக்குப் பயந்துகொண்டு ஒதுங்கும் நிலை ஏற்ப்படும். அதுதான் நடந்திருக்கிறது. அதனால் அரசியல் முழுக்கவும் தீயவர்களின் கைகளுக்குப் போவது தவிர்க்கமுடியாதல்லவா?இந்தநிலை மாறவேண்டுமேன்றால் நல்லவர்கள் தங்கள் அஞ்ஞாத வாசத்தை முடித்துக்கொண்டு சரியான அரசியல் கொள்கைகளுடன் மக்கள்பணியாற்ற முன்வரவேண்டும்! நாம் கனவுகள் காண்போம். அம்பானிகளாக ஆகவேண்டும் என்று அல்ல! அனைவரும் வாழவேண்டும் என்ற பெருநோக்குடைய மனிதர்களாக! அனைவரும் அம்பாநிகளாக ஆகிவிட்டால் அப்பாவிமக்களாக வாழ்வது யார்? மக்களில் பெரும்பாலோர் அப்பாவிகளாக இருந்தால்தான் சிலர் அம்பானிகளாக ஆக முடியும்.


நாம் அம்பாநிகளாகவும் ஆகவேண்டாம் ! அப்பாவிகளாகவும் பிள்ளைப்பூச்சிகளாகவும் இருக்க வேண்டாம்!நாம் சிந்திப்பது அனைவரும் சிந்திக்க வேண்டியது இந்த அல்லோல கல்லோலப்படும் வாழ்க்கை முறையிலிருந்து அனைத்து மக்களும் அமைதியான இன்பமான வாழ்வு வாழ அனுமதிக்கும் ஓர் உயர்ந்த அரசியலமைப்பு பற்றித்தான் ஆகும்!


இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களில் பெரும்பாலோருடைய பெயரைச் சொல்லவே அருவெறுப்பாக இருக்கிறது. காரணம் அவர்களின் பெயரை உச்சரிப்பதுகூட அவர்களை மதிப்பது போன்றதாகி விடுமே என்பதுதான்!

ஆகவே சிறந்த அரசியலைப் பற்றி நாம் உரையாடுவதன்மூலம் அதற்குத் தகுதியுடைய வர்களுக்கு மரியாதையும் தகுதியற்றவர்களுக்கு அதற்குத் தகுந்த மரியாதையும் மறைமுகமாக வழங்கப்படும்! பெயர்குரிப்பிடவேண்டிய அவசியமே நமக்கும் இல்லை நல்லவர்களுக்கும் இல்லை!


ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் உரிமைகளும் உண்டு. கடமைகளும் உண்டு. ஆனால் நமது உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்றே தெரியாதவர்கள்தான் நமது நாட்டில் மக்களாக வாழ்கிறார்கள், தலைவர்களாக ஆள்கிறார்கள்! 


அப்படியிருந்தால் ஜனநாயகம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்று நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம்! இந்த முறையை ஜனநாயகமாக நினைக்கும் வரை அந்தத் தவறுக்குத் தண்டனையாக இப்போதுள்ளதை விடவும் மோசமானதொரு சூழலில் வாழத்தான் வேண்டும்!


ஒரு நாட்டின் எந்தப்பகுதியில் வாழும் மக்களும் தாம் அந்தநாட்டின் ஒரு அங்கமாக வாழ்வதை எண்ணிப் பெருமைப்படவேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக நாடு. மற்றவையெல்லாம் மக்கள் இனங்களின் சிறைச் சாலைகளே! அவை தமது மக்களுள் இருக்கும் ஒற்றுமையின்மையால் சிதறுண்டுபோகும். தவிர்க்க முடியாது!

2 comments: