ss

Saturday, June 9, 2012

ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (24)


உலகையும் வாழ்வையும் சரியாகப் புரிதல்                  

நாம் வாழும் இவ்வுலகம், அதில் அடங்கியுள்ள எண்ணற்ற அம்சங்கள்,அதில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உயிரினங்கள், அதில் மிக அற்புத வளர்ச்சி அடைந்திருக்கும் மனித இனத்தின் வாழ்க்கை, மனிதனின் வாழ்வுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு, பூமியின் இயக்கம், அதில் வாழும் மனிதனின் இயக்கம், மனிதனுக்கும் மற்ற உயிரினத்துக்கும் உள்ள தொடர்பு போன்ற அனேக விசயங்களில் மக்கள் போதுமான அறிவு பெற்றிருக்க வில்லை. 
    
அதன் காரணமாக உலகம் பலவாறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது பொருத்தமானதாகவும் இணக்கமானதாகவும் சரியானதாகவும் இல்லை. எனவே இன்ப வாழ்வு வாழ்வதற்குப் பதில் துன்பத்தில் மூழ்கிப் போயிருக்கிறோம்.
    
எழுத்து வடிவிலான வரலாற்று விபரங்கள் ஒருசில ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அதிலும் மிகப்பழமையானவை யெல்லாம் நிரம்பக் கட்டுக் கதையாக இருப்பதால் அந்தக் கதைகளின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் கருத்துக்களையும் வைத்தே அக்கால வரலாற்றையும் சமுதாய நிலைமைகளையும் யூகிக்க வேண்டியுள்ளது. 

ஆனால் நவீன அறிவியலின் ஆய்வுகளைக் கொண்டும் பண்டைக்காலத் தொல்பொருட்களை ஆராய்ந்தும் உலகம் மற்றும் உயிரின வளர்ச்சி மற்றும் வரலாறு சம்பந்தமாக ஓரளவு அறிய முடிந்துள்ளது.; அவை  கற்பனைக் கதைகள் அல்ல.  
    
அந்த அடிப்படையில் பார்த்தால் சிலநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றியதாக நம்பப் படுகிறது. 

அதிலும் பெரும்பாலான காலம் நெருப்புப் பந்தாகவே இருந்துள்ளது. அதன் பின்பு படிப்படியாகக் குளிர்ந்து பெருமழையும் வெப்பமும் பல லட்சக் கணக்கான ஆண்டுகள் பிரளயமுமாகப் போராடி பூமியின் மேல்பகுதி இறுகிக் கெட்டியாகிறது. 

வெளிப்பகுதி வாயுமண்டலமும் உட்பகுதி அக்கினிக் குழம்பும் இடைப்பட்ட மேல்பகுதி கடினமான அமைப்புமான பூமியுருண்டை உருவாகிறது. 

தொடர்ந்த இயற்கை மாற்றங்களாலும் பிரளயங்களாலும் மேடும் குழியுமாக, ஆறுகளும் மலைகளும் கடல்களுமாக இன்றைய தோற்றத்துக்கு வருகிறது. தொடர்ந்த மாற்றங்களால் நில அமைப்பு மாறிக்கொண்டே செல்வது இன்றும் தொடர்கிறது.
    
பூமியின் மேற்பரப்பின் வெப்பம் தணிந்து கொண்டே வந்து கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தாவரங்களும் உயிரினங்களும் சிறுகச்சிறுக உருவாகின்றன. அவற்றை அறிவியலாளர்கள் பலவாறு வகைப் படுத்தியுள்ளனர். 

கோடிக்கணக்கான தாவரங்களும் உயிரினங்களும் தோன்றி வளர்ந்தன. அப்படித் தோன்றிய உயிரினங்களில் ஒன்றான மனிதன் விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மாறி வேறுபட்ட பாதையில் இன்றைய நிலைவரை முன்னேறி விட்டான். 
    
இவை புராணக் கதைகளைப் போன்ற கற்பனைகள் அல்ல.

அறிவியலாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த முடிவுகள்.

அவை நடைமுறையில் நாம் பார்க்கும் நிகழ்வுகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஒத்து வருவதால் உறுதிப்படுகின்றன. 
    
மனிதன் வேறுபட்ட பாதையில் வளர்ச்சி பெற்றதற்குக் காரணம் நிமிர்ந்து நின்று நடக்கப் பழகியதும் முனனங் கால்கள்  இரண்டும் கைகளாகப் பயன்படத் துவங்கியதும் ஆகும். 
    
விலங்குகளுக்குத் தானும் தனக்கு விலங்குகளும் இரையாகிப் பேராபத்துடன் நீண்ட நெடுங்காலம் மரங்களிலும் மரப் பொந்துகளிலும் குகைகளிலும் வாழ்ந்து திரிந்த மனிதன் கைகளைத் திறம்படப் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மாறுகிறது. 
    
தன் உடலுறுப்புகளால் நேரடியாகப் போராடியதற்குப் பதிலாகக் கல்லாயுதங்களைக் கொண்டு  போராடி வாழ்கிறான. லட்சக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சிப் போக்கில் கற்காலம், உலோககாலம் எல்லாம் கடந்து இன்றைய நவீனகாலம் வரை வெற்றிகரமாக முன்னேறியுள்ளான். 
   
தேவையின் ஒருபகுதியாக மனிதனின் நாகரிக வளர்ச்சியை ஒட்டியே மொழி, எழுத்து, கலை இவையெல்லாம் வளர்கின்றன.

தேவைகள் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே சென்றதால் இயற்கைச் சக்திகளைத் தனது தேவைக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் கலையான அறிவியலும் மகத்தான வளர்ச்சி பெற்றது.

சிந்தனைத்தரம் உயர்ந்தது. 
    
மனிதன் இயற்கையாகவே கிடைத்ததை உண்டு வாழ்ந்த நிலை மாறி சமைத்து உண்ணவும் விவசாயம் செய்யவும் தொழில்கள் செய்யவும் கற்றுக் கொள்கிறான். 
    
ஒருகாலத்தில் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காய் வாழ்ந்ததுபோய் இன்று இவ்வுலகில் தன்னிகரற்றவனாய் உலகை ஆட்டிப்படைப்பவனாய் இயற்கையையும் பிற உயிரினங்களையும் தனக்கு அடிமைப் படுத்தியவனாய் வாழ்ந்து கொண்டு உள்ளான். 

கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் ஒரே உயிரினமான மனிதனின் வரலாறும் அவன் பயன்படுத்திய கருவிகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. 
   
கல்லாலான கருவிகளில் துவங்கிய மனித வரலாறும் இன்று அதியற்புத மின்னணு  யுகத்தில் போய்க் கொண்டுள்ளது. 
   
இன்னமும் அதிவேகமாகவும் அதி நுணுக்கமாகவும் தொழில் நுணுக்கமும் அறிவியலும் வளர வளர வாழ்க்கையும் பண்பாடும் அதற்கேற்றாற்போல் மாறும். 

அறிவியல் கலையில் முன்னேறுமளவு வாழ்க்கைத் தரத்திலும் மகத்தான முன்னேற்றம் ஏற்படும்.

ஆனால் அத்தகைய பயன்கள் முரண்பாடற்ற முறையில் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும். 

இயற்கையிலேயே உருவாகி அதில் மாறுபட்ட உயிரினமாய் வளர்ந்தோம். இயற்கையின் பல்வேறு அம்சங்களைத் நமக்கு உணவாகவும் துணையாகவும் எடுத்துக்கொண்டோம். இயற்கையில் பல மாற்றங்களைச் செய்து செயற்கையின் துணையுடன் வாழ்கிறோம். 

அதனால் மனித இனமாகிய நாம் நமது வாழ்க்கையையும் இயற்கையுடனும்; சக மக்களுடனும் உள்ள உறவுகளையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல இதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்ற உண்மையை உணர வேண்டும்.

அதனால் சக உயிர்களுடனும் சக மக்களுடனும் இணங்கி வாழ்வது எப்படி என்பதைக் கற்று அதன்படி வாழ்வதே சிறந்த வாழ்வாகும். 

அதன் மூலம் இப்பூவுலகை மேலும் மேலும் நாமும் நமது சந்ததிகளும் நல்லமுறையில் பயன்படுத்தி அழகுடன் வாழ ஒவ்வொருவரும் அக்கரை கொள்வது உயர்ந்த நெறியாகும்.  

    

No comments:

Post a Comment