ss

Tuesday, July 31, 2012

விவசாயம் ( 31 )


இயற்கை வேளாண்மைக்கு எது தடை?

இப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.

ஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன?

அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல் இயற்கை சார்ந்த பழைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டு விட்டோம்;.

இப்போது அதை எப்படிப் புதுப்பிப்பது என்று தெரியாமல் விழித்து விழிபிதுங்கி நிற்கிறோம்.

ஆதாவது ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


இந்த உலகில் இல்லாத ஒன்றை நாம் புதிதாக உருவாக்கிவிட முடியாது. அதேசமயம் இருப்பது எதையும் இல்லாமல் செய்யவும் முடியாது! இன்னும் சொல்லப் போனால் இவ்வுலகில் இருந்து ஒரு அணுவைக்கூடக் கூட்டக் குறைக்க மனிதனால் முடியாது.

ஒன்றை இன்னொன்றாக மாற்றி நாமும் அப்படியே மாறுவதன் மூலம் வாழ்ந்துகொண்டு உள்ளளோம். அவ்வளவே!

ஆனால் அந்த மாற்றத்தை என்னமாதிரிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே இந்த உலகவாழ்வின் சாதக பாதக அம்சங்கள் உருவாகின்றன.

அப்படிப் பார்த்தால் மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலாக நாம் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இ;நதப் பூமிப் பந்தை இயற்கையை உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாக ஆக்குவதன் மூலம்தான் நமது சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம். 

அதில் ஒன்றுதான் விவசாயம் ஆகும்.

விவசாயம் செய்வதற்காகக் காடுகளை அழித்தோம். எண்ணற்ற தாவரங்களை அழித்தோம். உயிரினங்களை அழித்தோம். புல் பூண்டுகூட நாம் அனுமதித்தால்தான் வாழமுடியும் என்ற சூழலை உருவாக்கினோம்.

காடுகளை அழித்து அந்த இடங்களையெல்லாம் விவசாய நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் வாழும் இடங்களாகவும் மாற்றினோம்.

வளமான மண்ணாக இருந்ததாலும் கால்நடைகள் சார்ந்த விவசாய முறைகளாக இருந்ததாலும் இயற்கை தன்னை எவ்வளவு சேதப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று நமக்கு வாழ்வளித்தது.

ஆனால் மக்கள் பெருக்கம் அதிகரித்ததாலும் தேவைகள் அதிகரித்ததாலும் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டன. வாழும் இடங்களும் விவசாயமல்லாத தொழில்களும் புல்பூண்டுகூட முளைக்கமுடியாத எந்த உயிரினமும் வாழத் தகுதி இல்லாத பூமிப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போவதை இன்றும் காண்கிறோம்.

இந்த நிலையி;ல் பெருகி வரும் மக்கள் தேவைக் கேற்ப மற்றவற்றைப் போலவே உணவுத் தேவையும் மற்ற விளைபொருள் தேவையும் அதிகரிக்கிறது.

அதனால் மிகை உற்பத்திக்காகத் திட்டமிடப்படுகிறது. 

அதன்காரணமாக விவசாயத்தில் இயந்திரங்கள் புகுத்தப்படுகின்றன. ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ப வீரிய ஒட்டுரகங்கள் அனைத்துப்பயிர்களிலும் புகுத்தப்படுகின்றன.

கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாக மாற்றப்படுகின்றன.

கால்நடைகளின் கழிவுகள் மூலம் வளமடைந்து வந்த நிலங்கள் ரசாயன உரங்களைமட்டும் நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டு விட்டன.

துவக்கத்தில் ஏற்கனவே வளமிக்கதாக இருந்த நிலங்கள் ரசாயன உரப் பயன்பாட்டின் மூலம் தாற்காலிகமாக கூடுதல் விளைச்சலைக் கொடுத்துவிட்டு நிலத்தின் இயற்கை வளம் குறைந்தபோது எடுபடாமல் போனதுடன் விவசாயிகளுக்குப் பெருத்த நஷடத்தை உண்டுபண்ணி தற்கொலைகள் நிகழும் நிலைக்கு வந்தது.

கால்நடைப்பயன்பாடு என்பது வெறும் பால் உற்பத்திக்கு மட்டுமே என்பது போலச் சுருங்கிவிட்டது.

இந்த நிலையில் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு இப்போது மேலோங்கினாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவு எதிர் மறை அம்சங்கள் உள்ளன.

இயற்கை வேளாண்மை சிறப்பாக நடக்கவேண்டுமானால் கால்நடைகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். அல்லது அதற்கு ஈடாக பால்பண்ணைத் தொழில் விரிவடைய வேண்டும்.

எப்படி எடுத்துக்கொண்டாலும் விவசாய நிலங்களுக்கு ஈடாக மேய்ச்சல் நிலங்களும் அதில் மேய்வதன் மூலம் பயன்தரக்கூடிய கால் நடைகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் பயிர்நிலங்களுக்கு வெளியில் இருந்து பயிர்நிலங்களுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பெறமுடியும்.

அதுவல்லாமல் அந்தந்த நிலங்களில் விளையும் விளைபொருட்களாகவும் அவற்றின் சக்கைகளாகவும் வெளியேறும் சத்துக்களை மீட்டு நிலத்தை வளப்படுத்த வேறு வழி கிடையாது.

எந்த வகையான இயற்கை உரங்களைப் பெறவேண்டுமானாலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிற நிலப்பகுதிகளின் பயன்பாட்டைச் சார்ந்துதான் இருக்கமுடியும்.

அப்படியானால் என்னபொருள்?

விவசாய நிலத்தின் ஒரு பகுதி விளைநிலமாகவும் மறுபகுதி மேய்ச்சல் நிலமாகவும் இருக்கவேண்டும்.

முன்னர் அப்படித்தான் இருந்தன. ஆதாவது கால்நடைகள் வேறு மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிட்டுவந்து விளைநிலங்களுக்கான உரத்தைக் கொடுத்தன. உழைக்கவும் செய்தன.

இப்போது மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில் அந்தந்த நிலங்களிலேயே கால்நடைத் தீவனத்தையும் உற்பத்திசெய்து கால்நடைகளையும் வளர்த்து நிலத்தையும் மேம்படுத்த வேண்டும்.

அறுவடைக்குப் பின் கால்நடைகளுக்குப் பயன்படாத காய்கறிச்செடிக்; கழிவுகள் அப்படியே நிலத்தில் விடப்பட்டால் இற்று எருவாகும் ஆனால் அதைக்கூட இற்று மண்ணுக்கு எருவாகும் வரை இருந்தால் அடுத்த பயிர் செய்யமுடியாது என்பதால் தீ வைத்துக் கொளுத்துவதுதான் நடக்கிறது. 

பெரும்பாலான தோப்புகளிலும் தென்னை மட்டைகள் தீவைத்துக் கொளுத்தப் படுகின்றன. அல்லது எரிப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன.

ஆதாவது ஒரு பயிர்நிலத்திலிருந்து நம்மால் உறுஞ்சப்படும் சத்துக்களுக்குக் கூடுதலாக அல்லது இணையாகவாவது  வெளியில் இருந்து கொடுக்கப்படவேண்டும். ஆனால் அப்படிக் கொடுக்காதது மட்டுமல்ல நிலத்துக்கு அவசியமானவை கொழுத்தப்படுவதும் நடக்கிறது.

இதில் ஒரு கொடுமையான விஷயம் என்வென்றால் இன்று கால்நடைகளுக்கான தீவனப் புல் வகைகள் அனைத்தும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னலும்  வேதி உரங்கள் இடப்பட்டுத்தான் வளர்க்கப்படுகின்றன. வேதி உரங்கள் இடப்படாத தீவனப்புல் வகைகள்தான் கால்நடைகளுக்குப் போடவேண்டும் என்றால் இன்று நமது நாட்டில் கால்நடைகளே அதிலும் கரவைமாடுகள் அல்லது வேலை மாடுகள் வைத்திருக்கமுடியாது என்பதுதான் உண்மை!

இந்த நிலையில் இயற்கைவிவசாயம் செய்யத் தேவையான நில வளத்தைப் பெறுவது எப்படி என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை! 

சிலர் மட்டும் செய்யும்போது அவரவர் முயற்சிக்கு ஏற்ப ஏதாவது ஒரு வகையில் சாணக் கழிவுகளோ பிற கழிவுகளோ கொண்டுவந்து தங்கள் நிலத்தில் இடமுடியும். ஆனால் அதுவே அனைவரும் பின்பற்றும் வேளாண்முறை ஆனால் நிலத்தை வளப்படுத்துவது எப்படி என்பதுதான் பிரச்சினை!

விவசாய நிலங்களில் ஒரு கணிசமான பகுதி நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தப்படவேண்டும். அதற்கு இணக்கமான திட்டங்;கள் வகுக்கப்பட்டு அரசுகள் விவசாயிகளுக்கு உதவவேண்டும். ஒரு சராசரிக் குடிமகனின் வருவாயில் கணிசமான பகுதியை உணவுப்பொருட்களுக்கு செலவிடப்படும்படியான ஒரு பொருளாதார நிலை உருவாக்கவேண்டும். இன்றைய காலநிலைமைகளுக்கேற்ப விவசாய வேலைகளுக்குக் கூலிகொடுக்க கட்டுபடியாகும் விதத்தில் விவசாய வருமானம் உயரவேண்டும்.

அப்படிஏதும் நடக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமல்ல எந்த விவசாயமும் செய்வது கடினமே!


உணவே மருந்து ( 27 )

சோற்றுக் கற்றாழை
===============

சோற்றுக் கற்றாழையை அனைவரும் அறிந்திருக்கலாம். காரணம் இதுவும் ஒரு அற்புத மூலிகை. 

இதை எந்த வறட்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது! 

பீனிக்ஸ் பறவையின் அழியாத் தன்மையைப்பற்றிக் கதை சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ இந்த சோற்றுக் கற்றாழையைப் பொருத்தவரை அது உண்மை.

வேண்டாமென்று வெட்டித் தூக்கி எரிந்தாலும் எறியப்பட்ட அந்த இடத்திலும் கிடைத்ததைக் கொண்டு செழித்து வளரும். தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சக்தி அபாரமாகப்பெற்ற ஒரு மூலிகை.

இதைப் பற்றியும் ஒறு தவறான கருத்து உண்டு. ஆதாவது அதன் கசப்பும் கசப்பு வாசனையும் ரொம்ப அதிகம், குமட்டக்கூடியது என்று சொல்வார்கள். 

ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் அதை முட்களை நீக்கிவிட்டு நீளநீளமாக வெண்டைக்காய் அளவுக்கு அரிந்து கழுவிவிட்டுப் பச்சையாக அப்படியே மென்று தின்னலாம். 

வேம்புக் குச்சியால் பல்துலக்கினால் எந்த அளவு கசப்பு இருக்குமோ அந்த அளவுதான் கசப்பு இருக்கும் 

நான் சர்வ சாதாரணமாக மென்று தின்பேன்,

அதன் பயனை அறிந்து பயன்படுத்தினால் பல உடல் பிரச்சினைகளுக்கும் குடல் பிரச்சினைகளுக்கும் மருந்தாய்ப் பயன்படும்!

எனது மொழி ( 57 )


கனவுகள்

கனவுகள் பற்றிய பற்றிய நம்பிக்கை பலர் மனதில் ஆழமாக உள்ளது! கனவுகளை வைத்து சில முடிவுகளை எடுப்பவர்களும் இருக்கிறார்கள் 

காரணம் கனவுகள் பற்றிய அவர்களின் நம்பிக்கை அந்த அளவு வலிவுடன் இருப்பதே!

ஆனால் கனவுகளுக்கும் வாழ்க்கை நடப்புகளுக்கும் உள்ள உறவுகள் சரியாகச் சிந்தித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்!

நாம் விழிப்புநிலையில் இருக்கும்போது நமது வாழ்க்கை அனுபவங்களைச் சரியாகக் கோர்த்து எண்ணிப் பார்க்கிறோம் .

ஆனால் தூக்க நிலையில் உணர்வுகள் ஓய்வுநிலையில் இருப்பதால் எண்ணங்கள் எழுவது இல்லை. 

ஆனால் தூக்கநிலை பலவீனப்ப்படும்போது அரைகுறை எண்ணங்கள் எழுகின்றன.

அந்த எண்ணங்கள் வழக்கம் போலச் சிந்திக்க முடியாமல் மேலெழுந்த வாரியாக ஒழுங்கற்று நினைவுக்கு வரும் பதிவுகளைக்கொண்டு சிந்திப்பதால் அது குழப்பமாகத்தான் இருக்கும்.

சில நாம் ஏற்கனவே அறிந்தவையாகவும் சில அறிந்தும் அறியாததாகவும் மேலும் சில முற்றிலும் அறியாததாகவும் இருக்கும்.

காரணம் சுய நினைவின்றி மனதில் எழும் பிம்பங்கள்!

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக சில சம்பவங்கள் நெருக்கமானவையாக இருந்தால் அது கனவைப்பற்றிய தவறான முடிவுகளுக்குப் போகக் காரணமாகிவிடுகிறது.

அது சரியான அறிவுடைமை அல்ல!

கனவுகள் கனவுகளே!

Monday, July 30, 2012

எனது மொழி ( 56 )


மதத் தர்மங்கள்!

அனைத்து மதங்களின்ன்கீழ் வாழும் மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொது தர்மம்தான் உலகமக்களை ஒன்றுபடுத்தும்.

அதைவிட்டு தங்கள் மதம்தான் அனைத்திலும் சிறந்தது என்று நினைக்கும் போக்கும் எல்லாமதங்களும் ஒன்றுதான் என்று நினைக்கும் போக்கும் மக்களைப் பிளவுபடுத்தவே செய்யும்.

அனைத்து மக்களும் அனைவர் இல்லங்களுக்கும் செல்வதுபோல் அனைத்து மக்களும் அனைத்து வழிபாட்டு இடங்களுக்கும் செல்லும் வகையில் மத சம்பிரதாயங்கள் மாறவேண்டும்.

அப்போதுதான் சகோதரத்துவம் வளரும்.

அனைத்தும் மாறிவரும் நாகரிக உலகில் மதச் சட்டங்கள் மட்டும் மாறக்கூடாது என்பது பரிசீலனை செய்யப்படவேண்டும். காரணம் அது இறைவனுக்கு எதிரானது அல்ல!

ஒருகாலத்தில் உருவாக்கப்பட்ட தர்மங்கள் அனைத்தையும் மக்கள் அப்படியே இப்போது பின்பற்றுவது இல்லை. அனைத்திலும் மாறித்தான் இருக்கிறார்கள்.

அதனால் மதத் தர்மங்களிலும் மாற்றம் செய்ய வேண்டும்!

கூடாது என்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மத தர்மத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பதை விளக்கவேண்டும்!


உலகில் மக்களிடையே மேலான உறவும் பண்பாடும் வளரவேண்டும் என்பதில் யாருக்கும்  கருத்து வேறுபாடு இல்லை! 


அப்படிப்பட்ட பண்பாடு உருவாவதற்கு இந்த மதங்கள் உதவவில்லை என்பதே எனது கருத்து. காரணம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மக்களை வழிநடத்துகின்றனவே அல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு போது நெறி பற்றிச் சிந்திப்பதே இல்லை.


எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என்றால் மோதல் அவசியம் இல்லையே! 


ஒவ்வொரு மதமும் தங்களை ஒருபகுதி மக்களுக்கானது என்று சொல்வதில்லை. உலக மக்கள் அனைவருக்குமானது என்றுதான் சொல்கின்றன. 


எல்லாமதங்களும் ஒரேபோல நல்லவை என்றால் தங்களுடையமதம்தான் அனைத்துமக்களுக்குமானது என்பது தவறாகிவிடும்.


இவை அனைத்தும் பெயரால்மட்டும்தான் வேறுபட்டு இருக்கின்றனவே அல்லாமல் குணத்தால் அனைத்தும் ஒன்றுதான்.


ஆதாவது எல்லா குணம் படைத்த மக்களும் எல்லாமதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் அடையாளங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும்தான் வேறு வேறு!


பிளவுண்டு கிடைப்பதைவிட சிறந்த பண்புகளின்கீழ் ஒன்றுபடவேண்டும் என்கிறேன். 


ஒரே மருத்துவமனையில் ஒரே படுக்கையில் படுத்திருந்து நாம் பிறக்கமுடியும் என்றால் ஏன் சாகும்போது மட்டும் பிரிக்கப்படவேண்டும்?


அனைத்தும் படைக்கப்பட்டது இறைவனால் என்று அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்ளும்போது அந்த இறைவனை தொழுகின்ற இடங்கள் மட்டும் ஏன் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் இருக்க வேண்டும்?


ஏன் ஒரு இடத்தில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு ஒருபகுதி மக்கள் மட்டும் அனுமதிக்கப்படவேண்டும்?


அனைத்து மக்களும் அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான கோட்பாடுகளை மட்டும் முன் நிறுத்தி ஒரு புதுப் பண்பாடு உருவானால் மக்கள் மதங்களால் வேறுபட்டிருக்க அவசியமில்லை என்பதே எனது நோக்கம்!

Sunday, July 29, 2012

எனது மொழி ( 55 )
மனிதன்!

உள்ளூருல ஒரு பிரச்சினைன்னா சாதிக்காரனா ஆகுறீங்க!

வெளியூர்க்காரனோடு பிரச்சினைன்னா உங்க ஊர்காரனா ஆகுறீங்க!

அடுத்த மதத்துக்காரனோடு பிரச்சினைன்னா உங்க மதத்துக்காரனா ஆகுறீங்க!

அடுத்த கட்சிக்காரனோடு பிரச்சினைன்னா உங்க கட்சிக்காரனா ஆகுறீங்க!

அடுத்த மாநிலத்தோடு பிரச்சினைன்னா உங்க மாநிலத்துக்காரனா ஆகுரீங்க!

அடுத்த நாட்டோடு பிரச்சினைன்னா உங்க நாட்டுக்காறனா ஆகுறீங்க!

லஞ்சம் வாங்கக் கைநீட்டுறப்போ ஊழல்வாதியா இருக்கிறீங்க!

இத்தனை வேஷம்போடத் தெரிஞ்ச நீங்க எப்படா மனுஷனா ஆகப்போறீங்க?
---------------------------------------------------------------------------------------------------------
======================================================================
--------------------------------------------------------------------------------------------------------

Friday, July 27, 2012

பல்சுவை ( 6 )


எச்சரிக்கை!

ஒவ்வொரு விபத்து நடந்தபின்னால் அது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்படுவது நம்நாட்டில் வழக்கமான ஒன்றுதான்.

பல தொழிற்சாலைகளில் பல பள்ளிக்கூடங்களில், பல ஆறுகளில், பல ஏரிகளில், பல திரை அரங்குகளில். பல ரயில்களில்,பல ஏரிகளில், கோயில்களில், இலவசங்கள் வழங்கும் இடங்களில் என ஒரு பட்டியலே போட முடியும்.

அதனால் அப்பாவிமக்கள் குழந்தைகள் கூட்டங்கூட்டமாகக் கொல்லப்படுவதையும் பார்க்கிறோம்.

ஒரு சம்பவம் நடந்தபின்னால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்படுவதாக அறிவிக்கப்படும்.

இப்போது அடுத்துப் பெரிய சம்பவமாக நடக்கக்கூடிய ஒன்றாக நான் ஒன்றைச் சொல்கிறேன்.

அது நடந்து சிலநூறு மக்கள் கொல்லப்பட்டபின்னால் புது விதி களைப் பின்பற்றச் சொல்வதைவிட முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் நல்லது!

ஆம்! பெரிய ஜவுளிக்கடைகள்.

திருமண காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் கூட்டம் அலைமோதும். 

நான் ஜவுளிக்கடைகளின் உள்ளே இருக்கும்போது பலமுறை இப்போது நாம் வந்த வழி தீப்பற்றினால் என்னவாகும் என்று நினைத்தவுடன் வெளிவந்திருக்கிறேன்.

காரணம் அவற்றில் பிரதான பகுதியில் தீப்பற்றினால் உள்ளே சிக்கிக்கொள்பவர்கள் கண்டிப்பாக தீக்கு இரையாகாமல் தப்பிக்க முடியாது.

பெரிய கடைகள் எல்லாமே மின்வயர்களால் வலைபோல் பின்னப்பட்டுள்ளன. குளிர் சாதன வசதிக்காக முழுவதும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளே நூற்றுக்கணக்கான மக்கள் குவிகிறார்கள்.

மின்சாதனங்களும் மின்சாரமும் அதிகமாகப் பயன்படுத்தப் படும் நிலையில் எந்த நேரமும் மின்கசிவால் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் பலமாடிகளில் உள்ளிருக்கும் எல்லோரும் வெளியேற பெரும்பாலான கடைகளில் ஒரே வழிதான் பிரதானமாக இருக்கும். 

அதனால் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பத்து வினாடிகளுக்குள் வெளியேறும் வசதி உறுதி செய்ய உத்தரவிடவேண்டும். 

இல்லாவிட்டால் அது மாதிரி சம்பவம் நடந்தால் மக்களுக்கு என்ன சால்ஜாப்பு சொல்லலாம் என்று முன்கூட்டியே யோசித்து வைக்கலாம்!

விவசாயம் ( 30 )


பூச்சிக் கொல்லியும் பூச்சி விரட்டியும்வேதிப்பொருட்களான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் தாவரங்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமல்ல நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லபடுகின்றன.

ஆனால் இயற்கைமுறையில் தயாரிக்கப்படுபவை பூச்சிக் கொல்லிகளே அல்ல. அவை பூச்சி விரட்டிகள்.

காரணம் அவை எந்தப் பூச்சிகளையும் கொல்வதில்லை! மாறாக நாம் எந்தப் பயிரைப் பாதுகாக்க விரும்புகிறோமோ அந்தப்பயிரை பூச்சிகள் உண்ணாமல் தடுக்கின்றன. 

அதனால் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ஒன்று வேறிடம் செல்லவேண்டும் அல்லது அவற்றின் எதிரிகளால் கொல்லப்படவேண்டும்.அல்லது உணவின்றி அழியவேண்டும்.

இதைத் தான் இயற்கைத் தயாரிப்பான பூச்சிவிரட்டிகள் செய்வது. 

அது எப்படி சாத்தியம் ? 

பூச்சிவிரட்டி எப்படி செய்யப்படுகிறது என்று பார்த்தால்தான் அதன் ரகசியம் தெரியும்!

ஆதாவது சில தாவரங்களில் இலைகள் எந்தப் பூச்சிகளாலும் உண்ணப்படுவதில்லை. 

காரணம் அதை எந்தப் பூச்சிகளும் விரும்புவது இல்லை.

அப்படியானால் எந்தப் பூச்சிகளாலும் விரும்பப்படாத சில தாவரங்களின் இலைகளை நன்றாக இடித்து பசுமாட்டின் சிறுநீரில் ஊரவைத்து பயிர்களின்மேல் தெளித்துவிட்டால் பூச்சிகள் அதை உண்ண முடியாதல்லவா! 

இதுதான் பூச்சி விரட்டியின் ரகசியம்!

எனது மொழி ( 54 )

தகுதி

ஒரு மனிதனின் தகுதியை பாரம்பரியம்,வளர்ப்புமுறை, கல்வி, வாழும் சூழல் ,அனுபவங்களை எதிர்கொள்ளும் முறை இவைதான் தீர்மானிக்கின்றன.

இவற்றில் எதன் தாக்கம் அதிகமோ அந்த குணம் மேலோங்கி இருக்கும். மற்ற நம்பிக்கைகள் எல்லாம் வெறும் கற்பனைகளே!
------------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
------------------------------------------------------------------------------------------------------------

இயற்கை ( 10 )

அழிவு வேகம்


இலைகளைத் தின்னும் இந்தப் புழுக்களுக்கும் இயற்கையை அழிக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

என் பார்வைக்கு ஒரு வித்தியாசம் முக்கியமாகப் படுகிறது.

ஆதாவது புழுக்கள் அழிக்கும் வேகத்தைவிட இயற்கை மீண்டும் உருவாக்கும் வேகம் அதிகம்.


இயற்கை உருவாக்கும் வேகத்தைவிட மனிதன் அழிக்கும் வேகம் அதிகம்!

மனித இனம் வாழுமா?....

Thursday, July 26, 2012

உணவே மருந்து ( 26 )


இயற்கை எனிமா 

நண்பர்களே!

நமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல  மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.

அது உண்மையும்கூட.

அதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன.

அதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும். 

அந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம்.

எனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது.

ஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம். நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்!

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்  இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது.

அது இயற்கையான முறை.

அதுதான் இயற்கை எனிமா! இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்!

உடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம்! 

அதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது.

இயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா!

மரம் ( 14 )

சப்பாத்திக் கள்ளிஇதை சப்பாத்திக் கள்ளி என்று சொல்வார்கள்! உங்களில் நிறையப்பேர் இதைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! இது செம்மண் நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் வேப்பமண்டலத் தாவரம். மூலிகை குணங்கள் நிறைத்தது. 

அழிந்து வரும் இந்தத் தாவரம் படத்தில் உள்ளதுபோல் அல்லாமல் பெரும் புதர்போல் வளரக்கூடியது.

முட்கள் நிறைந்தது. பசுமையான காய்களையும் ரோஜா வண்ணத்தில் பழங்களையும் உடையது. பழங்களைப் பறித்து முட்கள் கைகளுக்குப் படாமல் நிலத்தில் உரசி நீக்கிவிட்டு சாப்பிடலாம். நான் சிறுவயதில் மாடுமேயக்கும்போது நிறைய சாப்பிட்டிருக்கிறேன்!

இந்தக் கள்ளியின் இளம் மடல்களை வெட்டியெடுத்து முட்களைச் சீவிவிட்டு சமையலுக்குப் பயன்படுத்தலாம். பீன்ஸ் போல் இருக்கும். மற்றவர்கள் இதைச் செய்வதில்லை. ஆனால் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.

இது காடுகளில், தரிசுகளில், புரம்போக்குகளில் நிறைந்திருந்தால் எப்பேர்ப்பட்ட பஞ்சத்திலும் தான் அழியாது இருப்பதுமட்டுமல்ல நம்மையும் காக்கும்! 

அந்தோ பரிதாபம்! இது காணக் கிடைக்காமல் அழிந்து வருவதை என் வாழ்நாளிலேயே கண்கூடாகக் காண்கிறேன்.

இயற்கைத் தாய் நம்மை மன்னிப்பாளா?

Wednesday, July 25, 2012

மரம் ( 13 )


வேம்பும் காக்கையும்

நண்பர்களே!

வேப்பமரத்துக்கும் காக்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.

காக்கைகள் இதன் பழத்தை நிறையத் தின்றுவிட்டு ஆங்காங்கே எச்சமிடுவதால் மீண்டும் மீண்டும் முளைத்து மரங்களாகின்றன.

நாம் செய்யவேண்டிய வேலையைக் காக்கைகள் செய்து விடுகின்றன.

அதனால் வேம்புமட்டும் நிறையக் காணப்படுகிறது!

ஆனால் சமீப காலங்களில் காக்கைகள் குறைந்து வருவதுபோல் உள்ளது.

அப்படிக் காக்கைகள் குறைந்தால் வேப்பமரங்களும் குறைந்துவிடும்!

காக்கைகளைக் காப்பாற்ற இதுவும் ஒரு முக்கியக் காரணமாக நினைக்கப்படவேண்டும்.


-------------------------------------------------------------------------------------------------------
======================================================================
=======================================================================

கள்ளி
======

இது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம் ஆகும். மரம்போல் உயரமாகவும் புதர்போலவும் வளரக்கூடியது. மூலிகைப் பண்பு மிக்கது.

இதனை உணவுக்காகவோ உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியாது. காரணம் இது அமிலத்தன்மையும் விஷத் தன்மையும் உடையது. வெளிப்புறமாகப் பூச்சு வைத்தியமாகவும் ஆவியில் கொதிக்கவைத்து ஒத்தனம் கொடுக்கும் வைத்தியமாகவும் சிறந்த பயனளிக்க் கூடியது.

இது முன்னர் மானாவாரி விவசாயிகளின் விவசாயத்துக்கு சிறப்பாக உதவி வந்துள்ளது.

இதனை நிலத்தைச் சுற்றிலும் வேலியாக நட்டு வளர்த்திருப்பார்கள்.

இது வேலியாகப் பயன்படும் அதே நேரம் அதன்மேல் பிரண்டை, கோவை, வேலிப்பருத்தி போன்ற அருமையான மூலிகைக் குணமுள்ள தாவரங்கள் நன்கு படர்;ந்து வளரும். அவை முலிகையாகவும் உணவாகவும் நமக்குப்பயன்படும் அதேநேரம் கால்நடைகளுக்கும் மிகச்சிறந்த தீவனமாகும்.

கள்ளியின் இளம் மடல்கள்கூட வரண்ட காலங்களில் வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப்பயன்படும்.

இவற்றின்மேல் பல்வகைத்தாவரங்கள் படர்ந்து வளருமாதலால் அவை சில பறவையினங்களுக்கும் ஓணான் பச்சோந்தி பாம்புகள் போன்றனவற்றுக்கும் வாழ்விடங்களாகப் பயன்படுகிறது.

முன்னர் கிராமப்புற மக்கள் இந்தக் கள்ளியின் காய்ந்து கிடக்கும் மடல்களை விறகுக்காகவும் பயன்படுத்துவர்.

கிராமப்புற விவசாயியின் இணை பிரியாத நண்பனாக இருந்த இது தற்காலம் பழக்கத்திலிருந்து வெகுவாக ஒழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்தான் இப்போதும் உள்ளது.

கடும் வரட்சியைத் தாங்கி நின்று மனித இனத்துக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் இவை போன்றவற்றை ஒழித்துக்கட்டுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்று.

விவசாயம் ( 29 )


நாயைக் கட்டிவைத்து…..
====================

நான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக எனது சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது புதிதாக ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருந்தார்கள். நல்ல அழகான வீடு. புறக்கடையில் வீட்டுத்தோட்டம். அதன் மத்தியில் அழகான ஒரு கிணறு. தெட்டத் தெளிவான தூயதண்ணீர். ஆனந்தமான குளியல்.

சரியாக இரண்டு வருடம் கழித்து அதேவீட்டுக்கு மீண்டும் ஒருமுறை போயிருந்தேன். அதிர்ந்துதான் போய்விட்டேன்! வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி! ஆம் கோகோ கோலாவை கிணற்றில் நிரப்பிவைத்திருந்த மாதிரி இருந்தது. அருகில் இருந்த காகித ஆலையின் கழிவு நீரைக் கிணற்றுக்கு அருகே செல்லும் ஓடையில் விட்டதன் பலன்!

அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களான உணவையும் நீரையும் காற்றையும் கூட நஞ்சாக்குமளவு முன்னேறியிருக்கும் நிலையில் நம் மேல்தட்டு மக்கள் காசுக்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்யக்கூடிய அளவு சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.

இந்த நிலையில் நாயைக் கட்டிவைத்து அடிப்பது போல விவசாயி நச்சுப்பொருட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டு நஞ்சில்லா உணவைக் கேட்டால் எப்படிக் கொடுப்பான்?

பிற உயிரினங்கள் ( 2 )கருணை

ஒவ்வொரு உயிரினமும் அறிந்தோ அறியாமலோ பிற உயிரினங்கள் பலவற்றின் அழிவுக்குக் காரணங்களாக வாழ்கின்றன.

மனித வாழ்வு எண்ணற்ற  உயிரினங்களின் அழிவின்மேல் கட்டப்பட்டுள்ளது! 

அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

அதனால் பிற உயிரினங்களை உண்ணாமல் வாழ முடியும் கொல்லாமல் வாழமுடியாது!

தவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய பிற உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பதும் அப்படிக் கொல்லும் உயிரினங்களைக்கூட ஒரு வினாடிகூடத் துன்புறுத்தாமல் இருப்பதும் தான் நாம் பின்பற்றவேண்டிய கருணை முறை ஆகும்!

அதைவிட மேலான கருணை முறை எதுவும் கிடையாது! 

அப்படி இருக்குமென்றால் அவை வெறும் கட்டுக்கதைகளே!
ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )


தத்துவப்போராட்டம்

எந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ கற்றறிந்த அறிஞர் பலர் பலவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள் என்றால்  அதுதான் சுத்தமான முதல்தரமான மூட நம்பிக்கை! 

காரணம் அதை வாழ்க்கை அனுபவங்களுடன் சரியாகப் பொருத்த முடியவில்லை! 

அத்தகைய கருத்துக்களைத்ததான் ஆணித்தரமான நிரூபிக்கப்பட்ட தத்துவங்களாகச் சொல்லி உலக மக்களை அறியாமை இருளிலேயே நீண்ட நெடுங்காலம் வைத்துள்ளார்கள்! 

இந்த நிலை மாறவேண்டுமானால் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உண்மையான ஆன்மிகவாதிகள் போராடவேண்டும் 

அத்தகைய தத்துவப் போராட்டம்தான் உலக மக்களை வருங்காலத்தில் நிம்மதியாக வாழவைக்கும்.

நாம் வாழும் உலகு உயிரின வாழ்க்கைக்கு என்றென்றும் ஏற்புடையதாக விளங்கும். இழந்தது மீட்கப்படும்!

--------------------------------------------------------------------------------------------------------
======================================================================
---------------------------------------------------------------------------------------------------------


தூய அன்பு!


ஒருபகுதியினரால் ஏற்கப்பட்டு வேறோருபகுதியினரால் மறுக்கப்படும் எதுவும் ஆன்மிகம் ஆகாது! அவை ஆன்மிகத்துக்கு எதிரானவை.

உலகத்தில் இறைநம்பிக்கையுடைய அத்தனை மக்களையும் தலைமைதாங்கி வழிநடத்தும் அத்தனை மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தத்துவங்களே ஆன்மிகம்.

அதேபோல அனைத்தினாலும் மறுக்கப்படும் ஒரு தத்துவம்தான் ஆன்மிகமறுப்பு அல்லது நாத்திகம்.

இவை இரண்டும் சாராம்சத்தில் வாழ்க்கைத் தத்துவத்தின் இருவேறு இணையான பாதைகள். ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல!

உண்மையான ஆன்மிகமும் ஆன்மிக மறுப்பும் அறிவியலுக்கு முரண்படமுடியாது.

இரண்டும் வலியுறுத்தும் வாழ்க்கைக் கடமைகள் ஒன்றுதான்.

இவை இரண்டுக்கும் அப்பால் பேசப்படும் முரண்பாடுள்ள அத்தனையும் மூடநம்பிக்கைகளே!

அவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு என்றென்றும் வாழ்க்கையைப் போர்க்க்களமாக்கி வைத்துள்ளன.

எனவே வருங்காலம் உலகமக்கள் அனைவர் வாழ்வும் அன்பால் பிணைக்கப்படவேண்டுமானால் அத்தகைய மூடநம்பிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து உண்மையான ஆன்மிகத்தின்கீழ் திரளவேண்டும்!

அந்த நிகழ்வின் வளர்ச்சிப்போக்கில் காலவெள்ளத்தில் மூடநம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட அனைத்து தத்துவங்களும் அவற்றைத் தாங்கி நிற்கும் மதங்களும் கரைந்துபோய் உலகம் முழுவதும் ஒரே தத்துவத்தின் வழி நடக்கும்

அதுதான் தூய அன்பு! தூய ஆன்மிகம்!

------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
--------------------------------------------------------------------------------------------------------

Tuesday, July 24, 2012

மரம் ( 12 )


குதிரைகளும் கழுதையும்


நண்பர்களே! 

இந்தப் படத்தில் மூவகை மரங்கள் உள்ளன.

ஒன்று கருவேல மரம்.

இதன் நிறம் கருமையாகவும் உறுதியாகவும் கிளைகள் வாட்டசாட்டமாகவும் முட்கள் நீளமாகவும் இருக்கும். 

இது தமிழ்நாட்டு விவசாயிகளின் இணைபிரியாத பாரம்பரிய மரம். 

விவசாயக் கருவிகள் அனைத்தும் இதைக்கொண்டுதான் செய்தார்கள்.

இந்தமரம் இல்லாத ஒரு விவசாயத்தைப் பற்றி முன்னர் நினைத்தே பார்த்திருக்க முடியாது! அவ்வளவு அவசியமான மரமாகும்.

இரண்டாவது வெள்வேலமரம்.


இதன் நிறம் வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகவும் கிளைகள் குட்டையாகவும் நெருக்கமாகவும் முட்கள் குட்டையாகவும் இருக்கும். 

இதன் பயன்கள் கருவேலமரம் அளவு இல்லாவிட்டாலும் இதுவும் தமிழ்நாட்டு விவசாயிகளின் பாரம்பரிய மரம் ஆகும்.

இந்த மரத்தின் மையப்பகுதி சாமான்கள் செய்யவும் பட்டைகள் சாராயம் காய்ச்சவும் பயன்படும்.

இலையும் காய்களும் வெள்ளாடுகளுக்கு நல்ல உணவாகும். 

அதனால் வேலமரம் என்று சொன்னால் இந்த இரண்டைத்தான் குறிக்கும்.

ஆனால் இந்த இரண்டின் மானத்தைக் கப்பலேற்றுவதற்காகவே வந்ததுதான் விஷ்முள்மரம் என்று சொல்லக்கூடிய வேலிமுள்மரம். சில இடங்களில் மட்டும் இதை அறியாமல் வேலிக் கருவை என்பார்கள். 

இது குறைந்த பயனும் நிறையத் தீய குணங்களும் கொண்ட பயனற்ற மரவகை ஆகும்.

இது யாரும் வைத்து வளர்க்காமலும் வளர்த்தும் இரண்டுவிதமாகப் பெருகி இப்போது அழிக்கமுடியாத அளவு இடம் கிடைத்த பக்கமெல்லாம்  வனம்போல் வளர்கிறது.

 குதிரையைப்போல் தோற்றமிருப்பதால்  யாரும் கழுதையைக் குதிரை சொல்வதில்லை.

ஆனால் அப்படிப்பட்ட ஒற்றுமைகூட இல்லாத நிலையில் படித்த சில அறிவுஜீவிகளின் அறியாமையால் விஷமுள் மரத்தைக் கருவேலமரம் என்று பெயரும்வைத்து அதை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பெரிய பிரச்சாரமும் செய்துவிட்டார்கள். 

அதற்கு முகநூலில் கிடைத்த வரவேற்பு அளவே இல்லை. மறுப்புக் குரல் ஈடுபடவே இல்லை!

இனியாவது ஒருவிஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆதரிக்க அல்லது மறுக்க வேண்டும். 

இல்லாவிட்டால் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் நண்பர்களே!

படத்தில் முன்னால் புதர்போல் தெரிவதுதான் விஷ முள் செடிகள். இன்னும் பெரிதாக வளரும். ஒழிக்கவேண்டியவை!

பின்னால் வெண்மையாக சிறியதாகத் தெரிவது வெள்வேலமரம். பெரிய மரமாக வளரும். பாரம்பரிய மரம்.

பின்னால் கருமையாகத் தெரிவதுதான் புகழ்மிக்க கருவேலமரம். விவசாயிகளின் தோழன்.

Sunday, July 22, 2012

எனது மொழி ( 53 )
அருமையும் கொடுமையும்

பழைய சாதத்துக்கு இரண்டு வித மரியாதை உண்டு!

ஒன்று அருமை!

இன்னொன்று கொடுமை!

ஆதாவது வசதி இருப்பவன் செலவழிக்காமல் இருப்பதற்குப் பெயர் சிக்கனம். காரணம் அவன் நினைத்தால் எது வேண்டுமானாலும் வாங்கலாம்!

ஆனால் வசதியற்றவன் செலவழிக்காமல் இருப்பதற்குப் பெயர் வறுமை! காரணம் அவன் விரும்பினாலும் வாங்க முடியாது!

அதுபோல வசதி இருப்பவனுக்குப் பழைய சாதம் அருமை!

வசதியில்லாதவனுக்கு அதே பழைய சாதம் கொடுமை!

இதுதான் வாழ்க்கை!
---------------------------------------------------------------------------------==============================================
--------------------------------------------------------------------------------தப்பித்து!....

சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் புவி வெப்பமாதல் அதிகரிப்பாலும் உலக வாழ்வு ஆபத்தில் இருக்கிறது என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டுதான் உள்ளது!

சமூக அக்கரை உடையவர்கள் அந்த ஆபத்திலிருந்து மீளவேண்டும் என்று அக்கறையும் படுகிறார்கள்.

ஆனால் யாரால் இதைத் தடுத்த நிறுத்த முடியுமோ அவர்கள் அதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்தபாடில்லை!

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் தாங்கள் மேல் தளத்தில் ஆபத்தில்லாமல் இருக்கிறோம் என நினைக்கிறார்கள்போலும்?

-------------------------------------------------------------------------------
============================================
--------------------------------------------------------------------------------
அண்டவெளியில் உயிரினங்கள்......


இப்பிரபஞ்சத்தில் - எல்லையற்ற புறவெளியில் - உயிரினங்கள் வாழக்கூடிய எண்ணற்ற பகுதிகள் இருக்கின்றன என்பதற்கு பால்வெளி மண்டலத்தில் உள்ள சுமார் பத்தாயிரம் கோடி விண்மீன்களில் ஒன்றான சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் நமது சின்னஞ்சிறு பூமியில் நாமும் இன்னும் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருப்பதே ஆதாரமாகும்.
-------------------------------------------------------------------------------------------------------
=======================================================================
-----------------------------------------------------------------------------------------------------------
அறிவாளியும் முட்டாளும்


ஒரு முட்டாளின் நூறு தவறுகளைவிட ஒரு அறிவாளியின் ஒரு தவறுக்கு வலிமை அதிகம்!

காரணம் முட்டாளின் தவறுகளை மற்றவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்

அறிவாளியின் தவற்றை சரியென்று நினைத்துச் சிலராவது பின்பற்றுவார்கள்!

----------------------------------------------------------------------------------------------------------
======================================================================
---------------------------------------------------------------------------------------------------------


விவசாயம் ( 28 )


இயற்கையும் விவசாயமும்
======================

மனிதன் கற்கால மனிதனாக இருந்ததில் இருந்து  இன்றைய நவீன காலம் வரை தேவையைப் பொறுத்தே அனைத்துத் துறைகளும் முன்னேறிவந்துள்ளது. 

விவசாயம் அதற்கு விதிவிலக்கு அல்ல! 

எந்தமாதிரி விவசாயம் தேவைப்பட்டதோ அந்தத் திசையில் அது முன்னேறித்தான் வந்துள்ளது. 

மனிதத் தேவைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது. 

இயற்கையின் மற்ற உயிரினங்களின் தேவை கணக்கில் கொள்ளப்படவில்லை. 

துவக்க காலத்தில் இயற்கையை சிதைக்காத வேளாண் முறைகள் தான் இருந்தது. 

ஆனால் மனித முன்னேற்றம் என்பதே இயற்கையை அழிப்பதைக்கொண்டுதான் சாதிக்கப்பட்டுள்ளது! 

விவசாயமும் அப்படியே! 

தொழில்புரட்சிக்குப் பின்பு தொழில்களைப் போலவே விவசாயத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.

 அதற்காக இயற்கையை அழித்தொழிப்பதிலும் சாதனைகள் புரியப்பட்டுள்ளது. 

இன்றுவரை அதன் வேகம்கூடக் குறையவில்லை. 

அதனால் உண்ணும் உணவே நஞ்சாக்கப்பட்டுள்ளது. அடுத்த முன்னேற்றம் என்பது மேலும் அதிகமாக நஞ்சாக்கும் திசையில் இருக்கமுடியாது இருக்கக்கூடாது என்பதே உடனடியாகக் கற்கவேண்டிய பாடம்! 

மாற்றாக செய்த அழிவுகளைச் சீர்திருத்தும் திசையில் நஞ்சற்ற உணவை உற்பத்தி செயும்திசையில் விவசாயம் முன்னேற வேண்டும். 

விவசாயத்துக்காக எந்த மரங்கள் அழித்தொழிக்கப்பட்டதோ அந்த மரங்களைச் சார்ந்து வருங்கால விவசாயம் இருக்கவேண்டும்!

அது காலத்தின் கட்டாயம்! 

Thursday, July 19, 2012

மரம் ( 11 )ஊஞ்சமரம்

நண்பர்களே! 

இதுதான் ஊஞ்ச மரம்!

இன்று காலையில் நான் எடுத்த படம்!

இந்தமரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் வயதுடையது. 

அரப்பு என்னும் தலைகுளிக்கும் மூலிகைப்போடி இதன் இலைகளை அரைத்துத்தான் தயாரிக்கப்படுகிறது!

இந்த மரத்தின் அடியில் கருப்பணசாமி என்கின்ற சாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால் யாரும் அருகில்கூட செல்வதில்லை!

அதனால் அடிமரம் கந்தலாக ஆனபின்னும்கூட இன்னும் மரம் வாழ்கிறது!

இன்னும் பல்லாண்டு பல தலைமுறை வாழ்க என வாழ்த்துவோம்!

எனது மொழி ( 52 )
மக்கள் பல மதங்களாகவும், பலகோட்பாடுகளின்கீழும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளதால். அவற்றுக்கு அப்பால் உலகமக்களின் ஒற்றுமையை ஏற்ப்படுத்த ஒரு உலகளாவிய பண்பாடு உருவாக வேண்டும் என்பது என் ஆசை! 

அதற்கு ஏற்கனவே உள்ள பிளவுகளின் கீழ் நின்று மோதிக்கொள்வது உகந்த வழி அல்ல! 

அதனால்தான் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் உன்னத வழியில் நின்று உரையாடவேண்டும் என்று விரும்புகிறேன். 

அதற்கு நாம் ஏற்கனவே கற்றுள்ள ஞானத்திலிருந்து சரியானதை நமது உள்ளத்தில் இருந்து நமது குரலாக வெளிப்படுத்துவது மனமாச்சர்யமற்ற அன்பை வளர்க்கும் என்று கருதுகிறேன். 

மகான்களை விட்டுவிட்டு அவர்களிடம் கற்றதை மனதில் நிறுத்தி நம் சொந்தக் குரலில் உரையாடலாம் என்று சொல்கிறேன். 

அதுதான் அந்த மகான்களுக்குச் செய்யும் மரியாதை என்றும் கூறுகிறேன். 

புத்தகங்களில் கற்றதை அல்லது ஒருவர் சொன்னதை அப்படியே கையாள்வது சரியென்றால் நாம் கற்றுக்கொண்டது என்ன? 

ஒரு ஜெராக்ஸ் இயந்திரத்துக்கும் நமக்கும் வேறுபாடு என்ன? 

இனியும் ஒன்று என்னவென்றால் நமது கருத்தின்மேல் விவாதிக்கலாம். 

மகான்களின் கருத்துக்களின்மேல் விவாதித்தால் அதற்கு பதில்சொல்லமுடியாமல் போகும்போது யார் வந்து சொல்வார்கள்?

-------------------------------------------------------------------------------------------------------
===================================================================
----------------------------------------------------------------------------------------------------

ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை!

அந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.

அதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா?

ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை!

அந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.

அதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா?

உண்மைகள் காலம்தோறும் மாறுவதில்ல. எது உண்மை என்ற முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும்! அந்த முரண்பாடுகளின் மோதல்தான் உண்மையான அறிவு வளர்ச்சி,தத்துவ வளர்ச்சி!Wednesday, July 18, 2012

மரம் ( 10 )

வெள்வேலாமரம்

நண்பர்களே!

தமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களில்  வெள்வேலாமரமும் ஒன்று!

கொங்குநாட்டில் இதை வெவ்வேலாமரம் என்று சொல்வார்கள்.

இதன் அடிமரம் இரண்டடிக்கும் சற்றுக் கூடுதலாக வரையிலும் உயரம் முப்பது அல்லது நாற்பது அடிவரையிலும் வளரலாம்!

அடிமரம் மற்றும் கிளைகளின்  பட்டை வெண்மை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும். 

கிளைகள் நெருக்கமாகவும் குட்டையாகவும் இருக்கும்.

முட்கள் குட்டையாகவும் வலியதாகவும் இருக்கும்!


இதன் காய்கள் புளியம் பிஞ்சைப்போல்  இருக்கும். ஆடுகள் விரும்பி உண்ணும்.

இதன் இலைகள் மிகவும் சின்னதாக இருக்கும். அது பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான உணவு!

இந்த மரம் கருவேலமரத்தைப்போல அவ்வளவு கடினமானது அல்ல! ஆனால் அதன் உள்புறமுள்ள சேகு எனப்படும் மையம் கடினமாக இருக்கும். 

அந்த மையப் பகுதியைத் தவிர மற்றவை பயன்படாது. எரிக்க மட்டும்தான் பயன்படும்.

இதன் பட்டைக்குச் சிறப்புத் தகுதி உண்டு! அதை வெட்டும்போதே மணம் வீசும் !

 கள்ளச் சாராயம் க்காய்ச்சுபவர்களுக்கு இதுதான் முக்கிய மூலப்பொருள்!

அதற்கு ஒரு பழமொழிகூட உண்டு!

வேலாம்பட்டையும் வெல்லமுமாம்! வேர்வைத் தண்ணிக்குச் சாராயமாம்!

இதன் காரணமாகவே இந்த மரங்களின் பட்டையை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக உரித்துக் கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்! 

காலையில் பார்த்தால் உரித்த வெள்ளாடுபோல் காணப்படும். 

சமீப காலங்களில் இந்த மரம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இதைக் குறிப்பிட்ட உயரம் வளரும்வரை கிளைகளை அரக்கி(சீவி)விட்டால்தான் உயரமாக வளரும் .

இப்போதெல்லாம் அப்படி யாரும் செய்யாததால் ஆங்காங்கே செடிகளாகவும் புதர்களாகவும் காணப்படுகிறது. சில மறந்கள்மட்டுமே பெரியதாக உள்ளது.

இந்தப் படம் நேற்று என்னால் எடுக்கப்பட்டது.வயது குறைவான மரம்! பட்டை உரிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த மரம் இது!  அடிமரத்தில் அடையாளம் தெரியும்!

Tuesday, July 17, 2012

மரம் ( 9 )


பாவம் பனை!

(நண்பர்களே! நான் தினமும் போகும் பாதையில் இரண்டு பனைமரங்கள் இருக்கும். அதன் அடியில் நூற்றுக்கணக்கான பனங்காய்களும் கொட்டைகளும் சிதறிக்கிடக்கும். அப்போது என் மனதில் ஒரு சராசரி மனிதனுடன் அது பேசுவது போன்ற கற்பனை எழும். அதுதான் இந்த உரையாடல்! படம் நேற்று (16.7.12)  காலையில் எடுத்தேன்!)

அந்தப் பனைமரத்தின் அடியில் அந்த மனிதன் நின்று கொண்டிருக்கிறான். 

மரத்தையும் அதன் அடியில் சிந்திச் சிதறிக்கிடக்கும் பனங் காய்களையும்  மாறி மாறிப் பார்க்கிறான்.

அவனைப் பார்த்த அந்த பனை மரத்துக்கு மிகவும் மகிழ்ச்சி! தன்னை மதித்து நின்ற அவனுடன் பேசத் துவங்கியது. 

ஐயா! ஏன் வெய்யிலில் நிற்கிறீர்கள்? 

சும்மா!

என்னிடம் நிறைய நிழல் இல்லை! ஆனாலும் உங்கள் ஒருவருக்குப் போதும். நிழலில் நில்லுங்களே!


வேண்டாம் வேண்டாம்!

ஏன் ஐயா? என்ன யோசனை? 

உனக்கு அடியில் பார்! இத்தனை காய்களை இறைத்து வைத்திருக்கிறாய்! போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக!

ஐயா அது உங்களுக்கு இடைஞ்சல் அல்ல! அவை எனது பிள்ளைகள்! பொறுக்கிக் கொண்டுபோய் ஒரு இடத்தில் புதைத்துத் தண்ணீர் விடுங்கள்! சிலமாதங்களில் அருமையான கிழங்குகளாக மாறி உங்களுக்கு உணவாகப் பயன்படுவார்கள்!

எனக்கு வேறு வேலை நிறைய இருக்கு!

என்னவேலை ஐயா? 

இப்போ உன்னை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்!

ஐயையோ! ஏன் ஐயா இப்படித் தகாத வார்த்தையைச் சொல்கிறீர்கள்?

நான் என்ன தவறு செய்தேன்?

உன்னாலெ என்ன பிரயோஜனம்?

தலைமுறை தலைமுறையாக எங்கள் வம்சம் உங்களுக்குப் பயன்பட்டுத்தான் வந்திருக்கிறது.

அதேபோல் எனது வயது குறைவா இருந்தாலும் நானும் எனது முன்னோர்களைப் போலவே உங்களுக்குப் பயன்படுவதற்காகவே வாழ்கிறேன்!

ஒரு சுக்கும் கிடையாது! உன்னலெ எங்களுக்கு உபத்திரவம்தான் தாங்க முடியலே!

என்ன ஐயா? எனது தலையில் பாளை விட்டபோது நீங்கள் பதனீர் குடித்திருக்கலாம்! அல்லது கொஞ்சநாள் கழித்து நுங்குக் காய்கள் வெட்டிச் சீவிச் சாப்பிட்டுருக்கலாம்! அதன்பி;ன்னாவது பழுத்த பின்னால் பழமாவது சாப்பிட்டுருக்கலாம்! நான் எல்லாம் கொடுத்தேன்... நீங்கள்தான் சாப்பிடவில்லை!

இப்படிக் குத்தீட்டி மாதிரி கால் முதல் தலைவரை உன்னோட உடம்பு இருந்தா நாங்க எப்படி நுங்கு பறிச்சு சாப்பிடறது?

ஐயா உங்க முன்னோர் அவ்வப்போது எங்கள் காய்ந்த ஓலைகளையும் அதன் அடிமட்டைகளையும் வெட்டிச் சுத்தமாக வைத்திருந்தார்கள். அந்தப் பொருட்களையும் வீட்டுக் கூரை வேய்வதற்கும்  கூடை முடைவதற்கும் இன்னும் நிறைய வேலைகளுக்கும் பயன்படுத்துனாங்க. நாங்க எப்பவும் சுத்தமா இருப்போம். அதனால் நினைச்சா எங்க மேலே ஏறி பதனி இறக்கவும் நுங்கு பறிக்கவும் முடிஞ்சது. இப்பவும் என்னைச் சுத்தமா வச்சிருந்தா உங்களுக்கு நல்லதுதானே!

அடச் சீ! சும்மா இரு! காங்க்ரீட் போட்டு வீடுகட்டாம இன்னும் உன்னோட ஓலையைப் பாத்துட்டா நாங்க இருப்போம்? பிளாஸ்டிக் கூடைகள் வந்தாச்சு. உனக்கு என்ன வேலை? உன்னோட பதனியும் நுங்கும் உன்னச் சுத்தம் பண்ணுற கூலிக்கு பத்தாது! உன்னோட நுங்கையும் பதனியையும் நம்பிப் பொழச்சது அந்தக்காலம். இப்போ அப்படி இல்லே. காசுபோட்டா கொகோ கோலாவே சாப்பிடுவோம்! உம்மேலெ ஏறுறதுக்கு ஆளில்லே! அதனாலெ.....

அதனாலெ? 

உன்ன வெட்டி விலைக்குத் தர்றோம்னு சொல்லி விலைபேசியாச்சு! செங்கல் சூளைக்கு போகப் போறே!

அடப்பாவிகளா! காலங்காலமா நாங்க உங்களுக்குச் செஞ்ச நன்மைக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதுதானா?

நீ யாருக்குப் பயன்பட்டியோ அவங்களப் போயி கேளு! இப்போ சும்மா கிட!......

கோடாரி எடுத்துவரப் போனான்!...... நல்ல மனிதன்!
===============================================================
நுங்கும்,பதநீரும், பழமும், கிழங்கும், கள்ளும், கற்கண்டும், கருப்பட்டியும் , வெயிலுக்கு விசிறியும், கூடை முறம் பின்ன நாரும், எண்ணற்ற மக்களுக்கு வேலையும் கொடுத்த பனைமரமே!

உனக்கு நன்றிக் கடனாக ஓய்வு கொடுத்திருக்கிறோம்....

செங்கல் சூளைகளில் செங்கற்களைச் சுட்டுவிட்டுச் சாம்பலாக ஓய்வு கொள்!....


https://www.facebook.com/photo.php?fbid=620176191383397&set=a.244609168940103.64557.100001730669125&type=1&theater

Monday, July 16, 2012

நாம் யார் தெரியுமா ( 11 )


உயிரும் வலியும்

உயிருள்ள எதுவாக இருந்தாலும் அதற்கு இன்பம் துன்பம் என்ற உணர்வு இருக்கவே செய்யும்.

தாவரங்களுக்கு நேரும் துன்பத்தை நாம் உணராததால் அதைப் பொருட்படுத்துவது இல்லை.

தவிர எந்த ஒரு உயிரினமும் வாழ எது ஆதாரமாக இருக்கிறதோ அதை அழிப்பதையோ உண்பதையோ மனதை உறுத்தும் செயலாகப் பார்ப்பது இல்லை. 

அதுதான் உயிரியல் நடைமுறைக் கோட்பாடு! 

மனிதனும் அந்த விதிப்படிதான் தான் எதை உண்ணாமல் அல்லது கொல்லாமல் வாழமுடியாதோ அதையெல்லாம் கொல்வதையும் உண்பதையும் பொருட்படுத்துவது இல்லை! 

தாவர உணவு அத்தகைய அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதை அழிப்பதையோ கொல்வதையோ யாரும் மனதை உறுத்தும் ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை!

ஆனால் மாமிச உணவை உண்ணாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதால் அதை உண்பவர்கள் ஒருவிதமாகவும் உண்ணாதவர்கள் ஒருவிதமாகவும்  காருண்யம் ச்ம்பந்தப்பட்ட விஷயத்தில் முரண்படுகிறார்கள்! 

ஆகவே தாவரங்களாகட்டும் உயிரினங்களாகட்டும் அவற்றின் வலி அல்லது துன்புறுத்தல் அல்லது கொல்தல் விஷயத்தில் மனிதருக்குள் பொதுவான கருத்து இல்லையே தவிர வலியும் வருத்தமும் எல்லாவற்றுக்கும் பொதுவானதே! 

தவிரக்கமுடியாதவற்றுக்கு நாம் பலரும் பலவிதமான காரணங்களைக் கற்பித்துக்கொள்கிறோம் அவ்வளவே!

சொல்லக் கொதிக்குதடா! ( 1 )


நமது கதியும்.......!

இது என்ன தெரிகிறதா? 

தனது தந்தையின் கரங்களால் புதைக்கப்படும் ஒரு குழந்தை!

வேறு யாருமற்ற நிலை!

தனது வாழ்வுகூட உறுதியற்ற நிலை!

தனது பிஞ்சுக் குழந்தையின் சடலத்தை அப்படியே எறிந்துவிட்டுப் போய்த் தான் பிழைக்க மனமில்லாத ஒரு தந்தை வேறு என்னதான் செய்வான்?

இப்படிச் சாவதற்கா அவர்கள் பிறந்தார்கள்?

ஆம். இதுமட்டுமல்ல இது போல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான பல பல்லாயிரம் மக்கள் நடைப்பிணமான மற்றவர்களும் மனதளவில் பிணமாகிப்போன ஒரு துயரம் உலகில் எங்கு நடந்தது? 

வேறு எங்கும் அல்ல. நமது நாட்டில்தான்!

நடந்து இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

அதுதான் போபால் விஷவாயுத் துயரம்!

தப்பிப் பிழைத்தவர்களுக்கோ இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கோ இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை!

இன்றைய நிலையில் உயர் அதிகாரம் படைத்த ஒருவர் கைக்கூலியாகப் பெரும் அளவுகூட தேவைப்படாது அந்த நிவாரணத்துக்கு!

இந்திய நாட்டில் பிறந்ததைத் தவிர அபர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை!

அவர்களுக்காக தாங்கள் வாங்கும் கைக்கூலியில் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்காத பாவிகள் ஆளும் நாட்டில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்!

அவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டில்தான் வாழ்கிறோம்.

நாளை நமக்கும்நமது சந்ததிகளுக்கும் இத்தகைய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மறப்பதற்கு இல்லை! 

நாளை நாமும் இப்படிக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்கள் ஆகலாம்! நம்மைக்கொல்லும் குற்றவாளிகளும் குறைவின்றிவாழலாம்! நாட்டையும் ஆளலாம்!

இந்த நிலையில் வாழும் பிழைப்பும் ஒரு பிழைப்பா?

சிந்திப்போமே!

Sunday, July 15, 2012

விவசாயம் ( 27 )


கிராம வாழ்க்கை 

நண்பர்களே! ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

ஆதாவது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்யாத,தெரியாத நண்பர்களும் உறவுகளும் நகர்ப்புறங்களில் உண்டு. 

கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், கிடாய்வெட்டு போன்றவற்றுக்கு போகும் இவர்கள் மிகவும் மகிழ்ந்து போகிறார்கள்.

அவர்கள் காட்டும் அன்பு, கிராமிய மணம், இயற்கைச் சூழல், கால்நடை, கிணறு, தண்ணீர், இளநீர், கிடாய்வெட்டு விருந்து இவற்றில் லயித்து மனதைப் பரி கொடுக்கிறார்கள்.

விஷேச நாட்களில், விருந்தினர் உள்ள நாட்களில் அவர்கள் இவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் தினசரி வாழ்க்கை முறை என்று நம்பி விடுகிறார்கள்!

அந்த இயற்கைச் சூழலை இவர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ அப்படிப்பட்ட மனநிலையில் கிராமத்தவர் எப்போதும் இருப்பதாக எண்ணுகிறார்கள்.

இயற்கை சுற்றுச் சூழலைப் பற்றிய இவர்கள் பார்வையும் கிராம மக்களின் அனுபவமும் வேறானது என்பதைக் காணத் தவறுகிறார்கள்!

அவர்களின் வாழ்க்கைச் சூழல் அத்தகைய ரசனையுடன் வாழ அவர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் காணத் தவறி விடுகிறார்கள்.

தங்கள் வருவாய் கூடுதலாக இருந்தாலும் கிராமத்தவர்போல் நிம்மதியாகவும் திருப்தியாகவும் தாங்கள் இல்லை என்று நினைக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக தாங்களும் விவசாயம் செய்தால் அப்படி அமைதியாக வாழலாம் என்றும் நினைத்து செயலிலும் இறங்கி விடுகிறார்கள்.


கிராமத்தில் நிலம் வாங்கி அதை அபிவிருத்தி செய்யவும் வரவு பார்க்கவும்  படாதபாடு படுகிறார்கள்.

விவசாய அனுபவம் இல்லாததும் வேலை தெரியாததும் பெரிய பிரச்சினைகளாக முன் நிற்பதைப் பார்த்து வாடிப் போகிறார்கள்.

இந்த நினையில் எந்த உணர்வால் கிராமம் போகவேண்டும் என்று முடிவெடுத்தார்களோ அந்த உணர்வு பின்னுக்குப் பொய் சராசரி கிராம வாழ்க்கையைத்தான் அவர்களும் வாழும்படி ஆகிறது.

அதையும் தாண்டி சாதிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தங்களது முடிவை எண்ணி வருத்தப்படவே செய்கிறார்கள்.

அதனால் கிராம மக்களைப் பற்றியும் கிராமிய வாழ்க்கையைப் பற்றியும் உண்மைக்கு மாறான கற்பனைகளை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்குவது சரியல்ல.

உண்மையான நிலைமைகளையும் தங்களின் வருங்காலத் தேவைகளையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டு முடிவெடுக்கவேண்டும். அதுதான் மிகச் சரியாக இருக்கும்!

Saturday, July 14, 2012

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )


தேவை ஒரு புதுக் கோட்பாடு! 

நான் ஆன்மிகத்தையும் இறைப்பற்றையும் போற்றுபவன். ஆனால் மதங்களைப் போற்றுவதில்லை. காரணம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைக் காட்டுகின்றன. நாம் எந்த வழியைப் பின்பற்றுவது? அதனால் உலகிற்கு ஆன்மிகமும் இறைப்பற்றும் போதும் என்று எண்ணுகிறேன்! மதங்களால் ஆவதென்ன?

இப்போதுள்ள மனித சமுதாயத்துக்கு வழ்காட்டும் அம்சங்கள் எல்லாம் கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் மனிதனால் உருவாக்கப் பட்டவையே! 

ஆனால் அவை அனைத்துமக்களையும் ஒரே உயர்ந்த பண்பாட்டின்கீழ் கொண்டுவரத் தவறி விட்டது. 

முற்காலத்தில் சிறு நாடுகளாகவும் சிறு மக்கள்கூட்டங்களாகவும் இருந்ததால் பொதுப் பண்பாட்டின் அவசியம் அவசரமாகத் தேவைப்படவில்லை! அதனால் ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு பகுதியில் செல்வாக்குப் பெற்று இருந்தது. 

ஆனால் இப்போது உலகளாவிய உறவுகள் ஏற்பட்டுவிட்ட நிலையில் உலகளாவிய பொதுப் பண்பாடு தேவைப்படுகிறது. 

அந்தப் பொதுப் பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அறிஞர்கூடி முடிவெடுத்து உலகிற்கு வழிகாட்டும் நிலை உலகில் இல்லை. 

அதனால் பல்வேறு மத அடிப்படையிலான தத்துவங்களும் தங்களுடையதுதான் தலைசிறந்தது என்ற மனோபாவத்தில் விட்டுக்கொடுக்காமல் மக்களிடம் செல்வாக்கு செலுத்திக்கொண்டுள்ளன. 

அதனால் மக்களுக்கு எது ஏற்படவேண்டுமோ அந்த அமைதியான சமுதாயமாக உலகு மாற்றப்படவில்லை! 

உலகில் ஒவ்வொருநாளும் மனித நேயத்துக்கு எதிரான நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.  ஆனால் எந்தமதமும் அதைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பதுமட்டுமல்ல காரணமாகவும் விளங்கின. 

இந்த நிலையில் உலகம் முழுமைக்குமான ஒரு போதுக்கொட்பாட்டை ப் பற்றி சிந்திக்கவேண்டியதாகிறது. 

அப்படி ஒரு கோட்பாடு உருவாகவேண்டுமானால் இப்போதுள்ள மதங்களுக்கு மாற்றாக உலகமக்கள் அனைவருக்கும் பொருந்தும் படியான ஒரு  சிந்தனை தேவைப்படுகிறது. அதுதான் நான் வலியுறுத்தும் விஷயம்! 

அதன்மூலம் உலகமுழுமையும் ஒரே கோட்பாட்டால் வழிநடத்தப்ப்படும்போது இப்போது பொருத்தமற்றதாக உள்ள மதங்கள் நாளடைவில் புதுக் கோட்பாட்டில் கரைந்துவிடும்! 

அதுதான் எதிர்காலத்துக்கு நல்லது! 

எனது மொழி ( 51 )

உள்ளத்தில் உள்ள அழுக்கையும் நாற்றத்தையும் கழுவத்தெரியாமல் நாற்றமெடுக்கும் உடலைக் கழுவி வேடமிட்டு, ஏமாற்றித் திரியும் வேடதாரிகளே! 

ஆண்டவன் அத்தனையுமாக இருக்கும்போது உங்களில் மட்டும் எப்படி இல்லாமல் போனான்! 

தனது உடம்பின் ஒரு பகுதி தன்னை வணங்கும்படி எந்த உடம்பும் விரும்பாது! அப்படியிருக்க தான் அத்தனையுமாயிருக்கும்போது தன்னில் ஒரு உறுப்பாக உள்ள மனிதன் தன்னை வணங்கவேண்டும் என்று எந்த மூடனிடம் சொன்னான்?

ஆன்மிகத்தை அவமதிக்காதீர்!


-----------------------------------------------------------------------------------------------------------------------------===================================================================------------------------------------------------------------------------------------------------------ஒரு கேள்வி!
==========

வயிறு நிறையத் தண்ணி குடிக்கச் சொல்லிவிட்டு ஒண்ணுக்கு மட்டும் போகவேண்டாம் என்றால் முயுமா?

அதுமாதிரி எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் என்கிறமாதிரி பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து மக்களிடையே விட்டுவிட்டு........

 அதைவிட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைமையையும் உருவாக்கிவிட்டு...........

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாதீர் என்று மக்களிடம் சொன்னால்.....

அது எப்படி நிற்கும்?  

--------------------------------------------------------------------------------------------------------------------------
=====================================================================
--------------------------------------------------------------------------------------------------------------------------


இவை எதற்கு?

நாலு பேரும் நாலு திக்கில் இழுத்தால் செத்த பிணம்கூட சுடுகாடு போய்ச் சேராது!

அப்படியிருக்க இந்த அறுநூத்தி அம்பது கோடி மக்களையும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு திக்கில் இழுத்தால் அவர்கள் எப்படி ஒற்றுமையாய் வாழ முடியும்?

எனவே உலகில் தூய ஆன்மிகம் நிலைபெறவேண்டுமானால் முதலில் இந்த மதங்களைக் கைகழுவ வேண்டும்!