ss

Monday, August 20, 2012

பல்சுவை ( 7 )


நண்பர்களே!

 நீண்ட நாளாக என்னால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சினையை உங்கள் முன்பு வைக்கிறேன். அதை எப்படித் தீர்க்கலாம் என நீங்கள் ஆலோசனை சொன்னால் அது ஒரு உயர்ந்த படிப்பினையாக அனைவருக்கும் அமையலாம்.

அண்ணன் தம்பி இருவரும் எனக்கு உயிர் நண்பர்கள். உயர்ந்த பண்பாளர்கள். யார் சிறந்தவர் என்று பாகுபடுத்திப் பார்க்கமுடியாத அளவு ஒரேமாதிரி குணம் படைத்தவர்கள். அவர்களுக்குள் நன்பர்களைப்போல் பழகுவார்கள்.

அவர்களின் சிறு வயதில் அவர்களின் தந்தை தையல் தொழிலாளி யாக இருந்தவர் மறைந்து விட்டார். அதனால் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணனும் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தம்பியும் குடும்பப் பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் ஆனார்கள்.

படித்துமுடித்த அண்ணன் வேலைக்குப் போவதென்றும் தம்பி தனது பள்ளிப் படிப்பைக் கைவிட்டு அப்பாவின் தையல் தொழிலைப் பார்ப்பது என்றும் அதனால் தாயும் உடன் பிறந்த சகோதரிகளும் சிரமப்படாமல் இருக்கவும் குடும்பம் முன்னுக்கு வரவும் நல்லதாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்து அதன்படியே செய்தார்கள்.

தான் படிப்பில் அண்ணனைவிடக் கெட்டிக்காரனாக இருந்தும் தம்பி தனது படிப்பை விட்டுவிட்டு குடும்பத்துக்காக உழைக்கிறான். தாயாரும் சகோதரிகளும் உதவிசெய்ததால் சிரமப்படாமல் இருக்க முடிந்தது.

அண்ணனுக்கு நல்ல வேலை கிடைத்து வெளியூரில் இருந்தார்.

இந்த நிலையில் அண்ணனுக்கும் சகோதரிகளுக்கும் திருமணம் நடத்தவேண்டி வந்தது. 

இருப்பில் இருந்த சேமிப்பையும் இவர்களின் உழைப்பால் சம்பாதித்ததையும் கொண்டு தம்பிக்கு உட்பட திருமணங்கள் சிறப்பாக நடக்கிறது.

இத்தனை செலவுகளுக்கும் அண்ணனிடம் பணம் கேட்கவில்லை. காரணம் அவர் சம்பாதிப்பதாவது இருக்கட்டும் நாம் கடன் வாங்கி செலவு செய்துவிட்டு கடனை அடைப்போம் என்கிற நல்ல எண்ணம்தான்!

ஆனால் தங்கைகள் கல்யாணம் முடிந்து போய்விட்ட நிலையில் தம்பி ஒருவரின் உழைப்பால் கடன்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கடன்கள் அதிகமாகிவிட்ட நிலையில் அண்ணன் பார்த்துக்கொள்வார் என்று இருந்த நேரத்தில் அண்ணன் வேறு விதமாகக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார்.

தம்பி எல்லாச் செலவுகளையும் செய்து குடும்ப பாரத்தையும் சுமந்ததால் அவர்கள் வாழ்ந்த வீட்டில் தனக்கு வந்த பங்கைத் தம்பிக்கே விட்டு விடலாம் என முடிவு செய்திருந்தார்.

ஆனால் அண்ணன் உரிய நேரத்தில் உதவிக்கு வரவில்லை என்று நினைத்த தம்பி அவரிடம் உதவி கேட்க விரும்பாமல் தனது பங்கு வீட்டை விற்றுவிட்டு கடன்களை தீர்;த்துவிட முடிவெடுக்கிறார். ஆனால் தனது பங்கைமட்டும் விற்றால் மீதியுள்ள அண்ணன் பங்கின் மதிப்புக் குறைந்துவிடும் என்பதால் அவருக்கும் விற்க எண்ணமிருந்தால் இருவரும் சேர்ந்து விற்றுவிடலாம் என முடிவெடுக்கிறார்.

அதைப்பற்றி ஆலோசிக்க அண்ணன் வீட்டுக்கு வெளியூர் சென்று விபரத்தைச் சொல்கிறார்.

அவர் தம்பியின் மேல் மிகவும் பாசம் கொண்டவர். அவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற அக்கரை கொண்டவர். தம்பி சொன்ன விபரத்தைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டார்.

வீட்டை விற்காமல் இருக்க சில வழிமுறைகளைச் சொன்னர். தம்பி அதை ஏற்றுக்கொள்ள வில்லை! தான் இனியும் கடன்காரனாக இருக்க முடியாது என்று சொல்லி விட்டார். 

கடைசியில் அண்ணன் பெற்றோர் தேடியவைத்த அந்த வீட்டை விற்க மனமில்லாமல் தம்பி பங்கை விற்காமல் தனது பங்கை விற்று தம்பியை வைத்துக் கொள்ளச்சொல்லி விட்டார்.

இதற்கு இரண்டு நிபந்தனைகள். ஒன்று கடன்களை அடைப்பதற்குப் பதிலாக ஒரு தையல் தொழில்சார்ந்த பொருட்கள் விற்கும் கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்து கடன் அடைக்கவேண்டும். இரண்டாவது தனது பங்கை விற்பதற்குப் பின்னால்  தம்பியின் பங்கை விற்க எப்போதும் நினைக்கக்கூடாது.

தனக்காக இவ்வளவு அக்கரைப்படும் அண்ணனின் வழிகாட்டலைத் தட்டிக்கழிக்க    மனம் இல்லாமல் தம்பியும் ஒப்புக்கொள்கிறார்.

அண்ணனுடைய பங்கு வீட்டைத் தம்பியே விலைபேசி விற்றும் விடுகிறார். இவர்கள் இருவருக்குள் இருக்கும் ஒற்றுமையை அறிந்த வீடு வாங்கிய நபர் அண்ணனைக் கேட்காமலே தம்பியிடம் விலை பேசி முழுத்தொகையையும் கொடுத்துவிட்டு தான் பத்திரப் பதிவைத் தனக்கு வசதிப்படும்போது வைத்துக்கொள்வதாகச் சொல்லி விடுகிறார். அண்ணனை அவர் பார்க்க்கூட இல்லை!

தம்பி அண்ணன் சொன்னபடியே அருகில் உள்ள நகரத்தில் ஒரு தையல் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனைக் கடை ஒன்று வைத்து நல்லபடி நடந்தது.

ஒரு வருடம் ஆகியது. தொழில் நன்கு நடந்ததே தவிர அது குடும்ப செலவுகளையும் சமாளித்துக் கடன்களுக்கான வட்டியையும் கொடுத்து அசலைக் கேட்பவர்களுக்குக் கொடுக்கமுடியவில்லை.

தொழிலுக்கும் இன்னும் முதலீடு தேவைப்பட்ட நிலையில் ஒன்றும் செய்ய முடியாமல் கடன்கள் அதிகரித்து மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.

இப்போதும் உள்ள ஒரே வழி தனது பங்கு வீட்டை விற்பதே! 

ஆனால் இனி அப்படிச் செய்ய முடியாது. அண்ணனிடம் விற்பதில்லை என்று வாக்குக் கொடுத்தாயிற்று

என்ன செய்வது? ஒரே ஒரு வழிதான் உள்ளது அண்ணன் அனுமதித்தால் விற்றுவிடலாமல்லவா?

மீண்டும் அண்ணன் வீடு பயணம். அண்ணன் கொடுத்த உதவி தொழில் நடத்தத்தான் பயன்பட்டது. தொழில் நன்றாக உள்ளது. ஆனால் கடன் பிரச்சினைக்கும் தொழில் அபிவிருத்திக்கும் போதுமானதாக இல்லை. எனவே நீங்கள் அனுமதித்தால் தனது பங்கையும் விற்றுக் கடனில்லாமல் தொழிலை இன்னும் சிறப்பாகச் செய்து முன்னேற முடியும் அதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

அதற்கு அண்ணன் நீ வாக்குத் தவறிவிட்டாய்! உனது சொத்தைக் காப்பாற்றத்தான் எனது பங்கை உனக்குக் கொடுத்தேன். இப்போது உனது பங்கை விற்கவேண்டும் என்கிறாய். விற்றுக்கொள். ஆனால் எனது பங்கு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.

இடிவிழுந்தது போல ஆகிவிட்ட தம்பி விற்றுவிட்ட அண்ணன் வீட்டை எப்படித் திரும்ப அவருக்குக் கொடுப்பது? அவர் பத்திரம் பதிவு செய்து கொடுக்காவிட்டால் வீடுவாங்கியவருக்கு என்ன பதில் சொல்வது?

ஒரே ஒரு வழிதான் இருந்தது. ஆதாவது அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டு தனக்கு உதவும்படி கேட்கவேண்டும். அப்படிக் கேட்டால் அவரும் உதவக்கூடியவர்தான். ஆனால் தன்னை வாக்குத் தவறியவன் என்று சொன்னதை அவரால் ஏற்றுக்கொள்ளவோ செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கேட்கவோ அவர் தயாராக இல்லை!

முடிவு? தம்பி சரி என்று அண்ணன் சொன்னதை ஒப்புக்கொண்டார். வெளியேறினார். நேராக வீட்டிற்குச் சென்று அண்ணன் வீடு வாங்கியவரிடம் மன்னிப்புக் கேட்டார். அண்ணனுடைய பங்குக்குப் பதிலாக தன்னுடைய பங்கை அவருக்குக் கிரையம் செய்து கொடுத்துவிட்டார். 

வெறும் கையும் காலுமாக சுமக்குமளவு கடனை வைத்துக்கொண்டு தான் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளியேறினார். 

அதன்பின் அவர் நகரத்திலேயே வாடகை வீட்டில் வாழ்ந்துகொண்டு வியாபாரம் செய்கிறார். கடன்களை பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் கட்டி முடித்து விட்டார். இன்றும் ஏழையாகவே வாழ்கிறார்.  

அண்ணன் சுயதொழில் செய்து பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். 

அதன்பின்னும் சிலவருடங்கள் சென்றன.

ஒரு கட்டத்தில் அண்ணன் தனக்கு கடுமையான நோய் ஏற்பட்டபோது அது தனது தம்பிக்குத்  தான் செய்த தீங்கின் பயனாக இருக்குமோ என்று நினைத்துத் தம்பியை நாடிச் சென்று என்ன மறுத்தும் கேட்காமல் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார்.

அதன்பின்பு சில நாட்களில் அண்ணன் இறந்து விட்டார். அவர் சாகும் வரையிலும் ஒருவரையொருவர் பகைமை பாராட்டியதோ கசப்பாகப் பேசிக்கொண்டதோ இல்லை! 

தம்பி இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். ஏழையாக.

ஆனால் தனது இறந்த அண்ணனை இன்னும் மன்னிக்கவில்லை!

இவருக்கு நேர்ந்த துன்பத்துக்காக அல்ல! வாக்குத் தவறியவன் என்று சொன்னதற்காக!

நண்பர்களே! நீங்கள் சொல்லுங்கள்!

அவர்களில் யார் செய்தது சரி? தவறு எங்கு நடந்தது? அவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்.

2 comments:

 1. /// இத்தனை செலவுகளுக்கும் அண்ணனிடம் பணம் கேட்கவில்லை.///

  அண்ணன் பங்கு கொள்ளாதது முதல் (பெரிய) தவறு...

  /// அவர்கள் வாழ்ந்த வீட்டில் தனக்கு வந்த பங்கைத் தம்பிக்கே விட்டு விடலாம் என முடிவு செய்திருந்தார்.///

  பிறகு ஏன் இரண்டு நிபந்தனைகள்....?

  அண்ணன் "எனது பங்கு இருக்கட்டும்" என்று சொன்னது எதற்காக...?

  // அண்ணனுடைய பங்குக்குப் பதிலாக தன்னுடைய பங்கை அவருக்குக் கிரையம் செய்து கொடுத்துவிட்டார். ///

  சரி... அண்ணனின் பங்கு என்னவாயிற்று...?

  //// ஒரு கட்டத்தில் அண்ணன் தனக்கு கடுமையான நோய் ஏற்பட்டபோது அது தனது தம்பிக்குத் தான் செய்த தீங்கின் பயனாக இருக்குமோ என்று நினைத்துத் தம்பியை நாடிச் சென்று என்ன மறுத்தும் கேட்காமல் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார். ///

  சாகப் போகிற நேரத்தில் தான் பலருக்கு வாழ்வின் அர்த்தம் தெரிகிறது... அவர் செய்த பெரிய தவறுக்கு (மேலே குறிப்பிட்டுள்ளேன்) தண்டனை கிடைத்து விட்டது...

  /// தம்பி இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். ஏழையாக.///

  ஏழையாக... சரி... சந்தோசமாக வாழ்கிறாரா...? எப்படி வாழ்வார் ? மன்னிக்கும் தன்மை இல்லையே... (இது தான் இவருக்கு தண்டனை)

  தம்பி அண்ணனின் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும்... அது தான் மனிதத் தன்மை...

  (இதில் துணைவியார்கள் [ரொம்ப முக்கியமாச்சே] , குழந்தைகள் யாரும் வரவில்லையே...)

  அவரவர் பங்கை அவரவர் பெயரில் முதலில் மாற்றி இருக்க வேண்டும்...

  கஷ்டம் வரும் போது அவரவர் பங்கை விற்று இருக்க வேண்டும்... யாராவது ஒருவர் கஷ்டப்படும் போது உதவி செய்திருக்க வேண்டும்... (பிறகு அண்ணன் தம்பியாக பிறந்து என்ன செய்ய...?)

  நன்றி ஐயா... தவறு இருப்பின் மன்னிக்கவும்...

  ReplyDelete
 2. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி! நண்பரே! இந்த செய்தியை இயற்கை உணவும் இனிய வாழ்வும் குழுமத்தில் வைத்தேன், நிறைய விமர்சனங்கள் வந்தது! அதை நீங்கள் நேரம் கிடைத்துப் படித்தீர்கள் என்றால் இதுபற்றிய இன்னும் விரிவான செய்திகள் அதில் உள்ளன. அதில் தம்பியானவர் வேறு யாரும் அல்ல! சாட்சாத் நானேதான். இதிலுள்ள வீடும் தையல் தொழிலாளியும் என்பதை நிலமும் விவசாயியும் என மாற்றிக்கொள்ளவும் அவ்வளவுதான் மற்ற அனைத்தும் உண்மை! நான் முதலில் சொல்லாததற்குக் காரணம் நான் என மற்றவர்கள் அறியக்கூடாது என்பதுதான்! நன்றி!

  ReplyDelete