வாயாடி!
(பாட்டி சொன்ன கதை)
ஒரு ஊரில் ஒரு பயங்கர வாயாடி இருந்தாளாம்.
அவளைக் கண்டால் பெரியவர்கள்கூடப் பயப்படுவார்களாம். அவ்வளவு வாய்க் கடுசு!
கல்யாண வயசானதும் எந்தமாப்பிள்ளையும் வரவில்லையாம்! தவறி வந்தவர்களும் அந்த வாயாடி வாய்திறந்ததும் ஓட்டம் பிடித்தால் அப்புறம் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை!...
கடைசியில் ஒரு ஆள் வந்தானாம். அவனுக்கு விபரம் தெரியாது என்று சிலர் விவரத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆஹா! அப்படிப்பட்ட பெண்தான் எனக்கு வேணும் அப்படின்னு அவன் ஒத்தக்காலுல நின்னானாம்.
அவன் தலையெழுத்து அப்படின்னு சொல்லி கல்யாணம் முடிவாயிடுச்சு!
அதுக்கு இடையிலியே அந்த வாயாடி பண்ணுற அட்டகாசத்தை அவனும் அப்பப்போ பார்த்தும் ஒன்னும் சொல்லலே!
கல்யாணமும் வந்தது.
முகூர்த்தநேரத்துல புரோகிகிதம் நடந்து முடிஞ்சு புரோகிதர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுக்கப் போனபோது, அந்த வாயாடி மணமகள் குறுக்கிட்டு! எய்யா, உனக்கு அறிவிருக்கா? தாலிச் சரட்டுக்கு மஞ்சள் பத்துலே! பாத்து வேலையைச் செய்! இல்லன்னா மரியாதை கெட்டுப்போகும் என்று கத்த, புரோகிதருக்குக் காலோடு போய்விட்டதாம்.
எப்படியோ ஒரு விதமா முகூர்த்தம் முடிஞ்சு பொண்ணு மாப்பிள்ளை ஊர்வலம் போயிருக்கு.
அப்போ பக்கவாட்டில் ஒருவர் பந்தம் பிடித்துக்கொண்டு வந்தார். அப்போவெல்லாம் கரண்ட் கிடையாது எண்ணைப்பந்தம்தான் எல்லாத்துக்குமே பிடிப்பார்கள்.
பந்தம் பிடிப்பவர் கொஞ்சம் பக்கமாக வந்துவிடவே வாயாடி,
"கறுக்கு(புகை) கவணம்மேல(கவுண்டர்மேலே) சாயுது! தள்ளிப் புடிடா காளிமுத்தா! ...இனி ஏதாச்சும் பக்கமா வந்தின்னா எட்டி ஓதச்சுப்போடுவேன்" அப்படின்னு கத்துனாளாம்!
ஊர்வலத்துல வந்தவங்க எல்லாத்துக்கும் வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம். இவன் தலையெழுத்து இப்பிடியா ஆகணும் அப்படின்னு மாப்பிள்ளைப் பையனைப் பார்த்து அங்கலாய்த்தார்களாம்.
எல்லாம் முடிந்து பொண்ணும் மாப்பிள்ளையும் வில்வண்டியில மாப்பிள்ளை வீட்டுக்குப் போனாங்களாம். வாயாடி ரவுசு அடங்கவே இல்லை . அவனும் ஒண்ணும் பேசவே இல்லியாம்....
மாப்பிள்ளை வீடு வந்தது. பொண்ணும் மாப்பிள்ளையும் இறங்கியதும் அவங்க வீட்டு நாய் ஓடிவந்து வள்ளு வள்ளு ன்னு செல்லமா சப்தம் போட்டுதாம்!
உடனே மாப்பிள்ளை ஓடிப்போய் அங்கே செருகி வைத்திருந்த சாட்டையை எடுத்துவந்து நாயை அடி பின்னி எடுத்தானாம்.
வாயாடி, ஐயோ ஏனுங்க இப்பிடி அடிக்கிறீக? அப்படின்னாளாம்.அதுக்கு அவன், " என்ன தைரியம் இருந்தா நாய் நான் இருக்கிற பயம் இல்லாம சத்தம் போடும் அப்படின்னானாம்.
அப்புறம் அங்கு கட்டிவச்சிருந்த ஒரு சேவல் கோழி கூவுச்சாம். கிடாய் ஒண்ணு மே ன்னு கத்துச்சாம்.
அவ்வளவுதான். மாப்பிள்ளைக்கு வந்ததே கோபம்!.. ஓடிப்போய்க் கொடுவாளை எடுத்துவந்து இரண்டையும் இரண்டே வெட்டில் வெட்டிப் போட்டுட்டானாம்.
ஆள் இருக்கிற அத்து இல்லாம சத்தம் போடுறீங்களா?... அப்படின்னு பசாரிச்சுட்டே கால்முகம் கழுவிக்கிட்டு வீட்டுக்குள் வந்தானாம்.....
அந்த வாயாடி அன்னைக்கு மூடுன வாயை அப்புறம் திறக்கவே இல்லியாம்!.....