நாட்டு மாடுகள்!
இப்போதெல்லாம் இயற்கை வேளாண்மையைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது!
அதன்மூலம் நஞ்சில்லா உணவு மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படுகிறது!
அதற்கு சீமை மாடுகள் பயன்படாதாகையால் நாட்டுமாடுகளின் அவசியமும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் நாட்டுமாடுகளின் பயன்பாடு குறைந்து அழியக்கூடிய நிலையை நெருங்கிக்கொண்டுள்ளது.
இன்னும் தப்பிப் பிழைத்திருக்கும் நாட்டுமாடுகளைத்தான் காப்பாற்றி மேலும் பெருக்கவேண்டும்!
நாட்டுமாடுகள் காப்பாற்றப்படவேண்டுமானால் நாட்டுமாடுகளை விவசாயப் பணிகளிலும் உள்ளூர்ப் போக்குவரத்துகளிலும் பயன்படுத்தவேண்டும்!
அப்படிப்பயன்படுத்தவேண்டுமானால் அந்த மாடுகளிடம் வேலை வாங்கக்கூடிய விவசாய வேலையாட்கள் போதுமான அளவு இருக்கவேண்டும்.
போதுமான அளவு வேலையாட்கள் இதை நம்பிப் பிழைக்க வேண்டுமானால் அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவேண்டும்!
வேலையாட்களுக்கு நல்ல ஊதியம் வழங்கவேண்டுமானால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கவேண்டும்.
விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கவேண்டுமானால் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவேண்டும்.
விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கவேண்டுமெனில் நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களில் தனிநபர் செலவினங்களில் கூடுதல் சதவிகிதம் விளைபொருட்களுக்கானதாக இருக்கவேண்டும்!
அரசுகளின் திட்டங்கள் அதற்கேற்ப திட்டமிடப்படவேண்டும்!
இத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து நமது பாரம்பரிய விவசாயத்தையும் நாட்டு மாடுகளையும் காக்கவேண்டிய அவசியம் யாருக்குத் தேவை?
அவனவனுக்குக் கொள்ளையடிக்கவும் கொள்ளையடித்த சொத்துக்களைப் பதுக்கவும் பாதுகாக்கவுமே நேரம் போதவில்லை! இதற்கெல்லாம் நேரமெங்கே?
கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை அப்படின்னானாம்!......
நாட்டுமாடுகளாவது இன்னொண்ணாவது!.....
வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றமுடியாது!
ஆனால் செய்த தவறுகளில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு சரியான பாதைக்குத் திரும்ப முடியும்!
ஆனால் போகாத ஊருக்கு வழிதேடுவதே நமது மக்களின் எண்ண ஓட்டங்களாக உள்ளது!
அது ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாய் உள்ளது!
ஒருகாலத்தில் வாழ்ந்தால் போதும் என்ற அளவுக்குத்தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டது.
அதனால் கிடைத்த மலிவான உழைப்பின்மேல்தான் விவசாயம் நிலைகொண்டிருந்தது!
தொழிலாளர்களின் வறுமைதான் விவசாயிகளின் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்தது.
ஆனால் காலம் மாறிவிட்டது. இப்போது அவ்வளவு மலிவாக தொழிலாளர்கள் கிடைக்கமாட்டார்கள்.
ஆனால் அப்படிக் கிடைத்தால்தான் வாழமுடியும் அல்லது செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயத் தொழிலை இன்னும் வைத்திருந்தால் அது பாழ்பட்டுப்போகாமல் என்ன செய்யும்?
அதுதான் இப்போது நடக்கிறது!
இதற்கு விவசாயிகள் சிலரின் மாறுபட்ட முயற்சிகளோ தனிநபர்களின் தனித் திறமைகள் எல்லாம் தீர்வாகுமா?
அரசுகளின் திட்டமிடல் அன்றி , அரசுகளின் ஆதரவு இன்றி அரசாங்கத்தை நம்பி இருந்தால் பயனில்லை என்று நினைத்துச் செய்யப்படும் முயற்சிகள் எல்லாம் பயன்தராது!
என்றைக்கும் ஒன்றை உணரவேண்டும். ஒரு அரசானது நல்ல நோக்கங்களுக்கு இசைவாக இல்லை என்றால் நிச்சயம் அது எதிராக நிற்கிறது என்று பொருள்!
அதனால் அரசுகளை நிர்பந்திக்கப் போராடுவது என்பது இரு விதங்களில் பயன் கொடுக்கும்.
முதலாவது மக்கள் விரோத நிலையை கடைப்பிடிக்காமல் தடுப்பது. இரண்டாவது நல்ல திட்டங்களைச் செயல்படுத்த நிர்பந்திப்பது!
இதை மறந்து அரசுகளை அல்லாமல் விவசாயிகளோ அல்லது ஒட்டுமொத்த மக்களோ தீர்வை எதிர்பார்த்தால் அது தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதாகும்!