ss

Friday, March 29, 2013

விவசாயம் ( 50 )


அவசரத் தேவை!

வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரு அவசர சட்டத்தின்மூலம் தடைசெய்துவிடலாம்.!

ஒரு சில வருடங்களில் விவசாயிகள் சுதாரித்துக்கொள்ளலாம்! 

உடனடியாக இயற்கை விவசாயம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும். 

விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்! 

வேதி உரங்களுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் ஆகும் செலவைக்கொண்டு பற்றாக்குறைத் தானியங்களை இறக்குமதி செய்துகொள்ளலாம். 

மானாவாரி விவசாயத்துக்கு புத்துயிர் கொடுப்பதன்மூலம் உணவுப்பற்றாக்குறையை போக்கிக்கொள்ளலாம்.....

Tuesday, March 26, 2013

பல்சுவை ( 13 )


பேய்!

பேய் என்பது அனைத்து நாடுகளிலும் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவும் ஒரு அமானுஷ்யக் கருத்தாகும்.

அதை உண்மை என்று வாதிப்போர் நிறைய உள்ளார்கள் .

தவறான கருத்து என்று மறுப்பது மட்டும் அல்ல அத்தகைய நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

ஆனாலும் பேய்களைப் பற்றி ஏராளமான கதைகளும் திரைப்படங்களும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெரும் செல்வாக்குடன் இருந்துகொண்டுதான் உள்ளன! 

பொதுவாகப் பேய்கள் என்றால் அது அகால மரணமடைந்தவர்களின் ஆவியாகத்தான் நம்பப் படுகிறது! 

அப்படி நம்ப வைத்துக் கொஞ்சம் பேரும் அந்தப் பேயை விரட்டுவதாகக் கொஞ்சம் பேரும் மக்களை நம்பவைத்துக் காசு சம்பாதித்துக்கொண்டு உள்ளார்கள்! 

எதனால் பேய் நம்பிக்கை ஏற்படுகிறது?

ஏன் சாதரணமாக இறப்பவர்கள் பேயாக மாறுவது இல்லை?


தூக்குப் போட்டுச் சாகிறவர்கள் கண்கள் பிதுங்கி நாக்கு வெளியே தொங்கிக் கோரமான உருவமாகத் தெரிகிறார்கள்!

கிணற்றில் விழுந்து தண்ணீரில் ஊறி உப்பிப்போய் மேலே மிதக்கும்போது அதைக் கண்களால் பார்க்கத் துணிவு வேண்டும்! 

காரணம் அலங்கோலமாக மீன்கள் அரித்த நிலையில் உருக்குலைந்து போய் மிதக்கும்! 

ரயிலில் அடிபட்டுச் சாகின்றவர்களின் தோற்றம் வர்ணிக்க முடியாதது! 

துண்டு துண்டுகளாக சிதைக்கப்பட்டு மூளை சிதறிப்போய் ஆங்காங்கே காக்கைகள் பொறுக்கித் தின்னும் காட்சியைக் காணலாம்! 

அதேபோல கொலை செய்யப்படுபவர்களும் ரத்தவெள்ளத்தில் கிடப்பது, மூட்டையாகக் கட்டி வீசப்பட்டு நாறிப்போய்க் கிடப்பது, நாய்களால் சிதைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகளை உள்ளடக்கியது! 

தீயில் எரிந்து சாகின்றவர்களின் காட்சி எல்லாவற்றையும் விட பயமுறுத்தக் கூடியது! 

இவற்றில் ஆண்களை விடப் பெண்களின் கோரம் அதிகமாக இருக்கும்! 

இப்படிப்பட்ட அகால மரணங்களும் குரூரமான காட்சிகளும் காணும் ஒவ்வொருவர் மனதையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கின்றன. 

காரணம் அத்தகைய காட்சிகள் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் அல்ல! 

அத்தகைய உணர்வுகள் அன்றாடம் ஏற்படும் உணர்வுகள் அல்ல! 

அவை மற்ற காட்சிகளைப்போல அவ்வவு சீக்கிரம் மனதை விட்டு அகல்வது இல்லை! 

அது சம்பந்தமான பேச்சுக்கள் அதன் திகிலை அதிகப்படுத்துகின்றன. 

அதுநாள்வரை சாதாரணமாகவும் அழகாகவும் காட்சி அளித்தவர்கள், அதற்கு நேர்மாறான தோற்றத்தில் நினைக்கப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிறது! 

கூட்டமாக இருக்கும்போது ஒருவருடைய உணர்வுக்கு ஒருவர் வடிகாலாகவும் ஆறுதலாகவும் துணையாகவும் இருப்பதால் ஓரளவுக்குக் கட்டுப்படும் உணர்வுகள் தனிமையிலும் இருளிலும் பெரும் சக்தியுடன் மீண்டும் மனதில் மோதுகிறது! 

அது பயமாக மாற்றம் பெறுகிறது! 

ஒரு சிறு சலசலப்பும் ஒரு சிறு அசைவும்கூட அச்சமூட்டுவதாக உள்ளது!

ஒரு நிழல்கூட அத்தகைய காட்சிகளைக்காட்டி மிரட்டுகிறது! 

இருளிலோ சொல்லவேண்டியதே இல்லை! இல்லாத வெளிச்சங்கள் எல்லாம் தெரிவதுபோலவும் கேட்காத ஓசைகள் எல்லாம் மணியோசைபோல் கலீர் கலீர் என்று கேட்பது போலவும் மிரளச் செய்கிறது.

யாரேனும் ஒரு மனிதர் இருளில் அசைந்தால்கூட அல்லது ஒரு செடியின் கிளை அசைந்தால்கூட பயங்கரமான திகிலை ஊட்டுகிறது! 

அந்த நேரம் பார்த்து யார்யாரோ எப்போதோ சொன்ன பேய்க்கதைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது! 

தூங்க நினைத்தால் கண்களை மூடவே அச்சமாக இருக்கும்.

தவறி மூடித் தூங்க நினைத்தாலோ பயம் தூக்கத்தை விரட்டி அடிக்கிறது! 

எப்படியோ நாட்கள் செல்லச் செல்ல ஒரு வழியாகச் சமாளித்தாலும் சிலர்மட்டும் அந்தப் பய உணர்வை வெளிக் காட்டாமலே அடக்கி அடக்கி ஒரு வகையான மன நோயாளிகளாக ஆகிவிடுகிறார்கள்!

அதைத் தொடர்ந்து யாருடைய சாவு அதிகமான அச்சத்தை ஏற்ப்படுத்தியதோ அவர்களின் நினைவிலேயே மூழ்கிப்போய்க் கடைசியில் தானே உளறவும் ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது பேசும் ஆற்றலை இழக்கிறார்கள்! 

இந்த இரண்டு குணத்தையும் பேய் பிடித்ததற்கான குணங்களாகச் சித்தரித்து அதை விரட்ட ஆள்தேடத் துவங்கி விடுகிறார்கள்.

இத்தகைய கதைகளைக் கேட்டுக் கேட்டு அத்தகைய காட்சிகளைக் காணாதவர்ககூட கண்டவர்கள்போல் அச்ச உணர்வால் பாதிக்கப்படுகிறார்கள்.

பேய்க் கதைகளை நம்பாதவர்கள்கூட பேய்கள் நடமாடுவதாகச் சொல்லப்படும் சுடுகாடு அல்லது அகால மரணம் நிகழ்ந்த இடங்களுக்குத் தனிமையில் செல்லத் துணிவது இல்லை! 

நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட அந்த கோரக் காட்சிகள் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மனதை பாதிக்கக்கூடியவையாக உள்ளன! அதனால் தவிர்க்கவே செய்கிறார்கள்! 

இதுதான் பேயின் கதை!

இது பற்றிச் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதாக இருந்தால் இப்படிக் கூறலாம்.....

பலவீனமான உணர்வுகளைத் தாக்கி அச்சுறுத்தும் ஒருவகையான எதிர்மறை மனப் பதிவுகளே பேய்கள்.... 

ஒவ்வொரு மனிதனிடமும் வெளியே சொல்லாத தான் பயப்படும் சில சங்கதிகள் இருக்கும்.

அந்தச் சங்கதிகள்தான் தகுந்த நேரத்தில் மனத்திரையில் தோன்றிப் பேய்களாக  அச்சுறுத்தும். 

பெரும்பாலோருடைய மனதில் அகால அல்லது விகாரமாக மரணமடையும் சவங்கள் பற்றிய அச்ச உணர்வுகள் மனப் பதிவுகளாக இருக்கும். 

காரணம் அது நிறையப்பேருக்குப் பொதுவான பண்பாக இருகிறது. 

அதனால் அவை தொடர்பானவை பேய்கள் என்ற பொதுவான அச்ச உணர்வு வழக்கத்துக்கு வந்து விட்டது!

அது சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் தொடர்புள்ள விஷயம் ஆதலால் இன்றளவும் சக்தியுடன் விளங்குகிறது! 

அதைக் குறைப்பதற்கு ஒரே வழி அறிவியல் மற்றும் மூட நம்பிக்கைகள் அற்ற ஆன்மிக சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதே! 

விவசாயம் ( 49 )


விவசாயமும் தொழிலாளர்களும்! 

விவசாயம் என்பது விவசாயிகள் மட்டும் உழைத்து அனைத்து வேலைகளையும் செய்யும் ஒரு தொழில் அல்ல! 

பண்ணை நிலத்தைப் பொறுத்து செய்யும் பயிரைப் பொறுத்து தேவையான தொழிலாளர்களையும் வைத்துச் செய்ய வேண்டிய தொழில் ஆகும்! 

ஆனால் இன்றுள்ள நிலையில் விவசாயிகள் நிலையும் தொழிலாளர் நிலையும் விவசாயத்தொழிலுக்கு உகந்ததாக இல்லை! 

அவர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பும் வேலைமுறையும் வருவாய்ப் பங்கீடும் விவசாயிகளுக்குச் சாதகமாக இல்லை! 

முப்பது நாற்ப்பது வருடங்களுக்கு முன்னரெல்லாம் வருடத்துக்கு இத்தனை மூட்டை தானியம் என்றும் தானியத்துக்குப் பதிலாக இவ்வளவு ரூபாய் சம்பளம் என்றும் பேசி விவசாயத்துக்கு நிரந்தரமாக ஆள் சேர்ப்பார்கள். 

அதுவல்லாமல் கூடுதல் வேலைகளைச் செய்ய அவ்வப்போது அத்தக் கூலிக்கும் ஆள் பிடித்துக் கொள்வார்கள்! 

அதுவும் அல்லாமல் மாடுகள் மேய்ப்பத்தற்கும் தனியாக ஆள் வைத்துக்கொள்வார்கள்! 

முன்னோர் காலத்தில் ஒருவர் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் தாங்கள் விவசாயத்தில் அனைத்து வேலைகளும் தெரிந்தவராக இருக்கவேண்டும். அத்தோடு கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயமாக இருப்பதால் வேலையாட்களின் தேவை அதிகமாக இருக்கும்! 


அந்த அளவு ஆட்கள் கிடைத்தார்கள் என்பது மட்டுமல்ல அந்த வேலையாட்கள் அனைத்து வேலைகளும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்! 

அதுமட்டும் அல்ல. பாசன விவசாயம் செய்யும் பரப்பு குறைவாக இருந்ததால் குடியானவர்கள் யாராவது வேலைக்கு அழைப்பார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பார்கள்! 

நல்ல திடகார்த்திரமான ஆட்களுக்கும் தொழில் திறமை உள்ள ஆட்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும்!

வெலை செய்யும் விவசாய பூமிகளிலும் கெடுபிடி செய்து வேலை வாங்கப்பட்டது!  

துவக்க காலங்களில் அடி உதை கொடுப்பது சவுக்கால் அடித்து வேலை வாங்குவது என்ற நிலைமைகள் எல்லாம் இருந்தது! 

வயித்துச் சோறு என்கிற முறையும் இருந்தது! அதன்படி வேலைக்குப் போகும் ஒருவனுக்கு செய்யும் வேலைக்குப் பதிலாக சோறு மட்டும் கிடைக்கும். பெரும்பாலும் அவர்களுக்கும் நாய்களுக்கும் ஒரே உணவு வரும். 

அந்த வேலைக்குப் பெரும்பாலும் மாடுமேய்க்கும் சிறுவர்களே சேர்க்கப்படுவார்கள்...

காலப்போக்கில் அத்தகைய கொடுமைகள் மாறினாலும் சொன்ன படி வேலை செய்யாவிட்டால் அதன்பின் வேலைக்குக் கூப்பிட மாட்டார்கள் என்ற அச்ச உணர்வாலும் அடிமைகள்போல் வேலை செய்தார்கள்.

வேலைக்கு வந்தபின்னால் பிடிக்காத ஆட்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்பும் பழக்கம் சகஜமாக நடந்தது! 

ஆனால் காலப்போக்கில் பசுமைப் புரட்சி வந்தபின்னால் இயந்திரங்களும் வேதி உரங்களும் பூசிக்கொல்லிகளும் வீரிய ஒட்டுரக விதைகளும் வந்த பின்னால் நிலைமைகள் மாறியது. 

பாசன விவசாயம் செய்யும் பரப்பு அதிகமானது! கூடுதல் விளைச்சல் கிடைத்ததால் நவீன வேளாண் முறைகள் புகுத்தப்பட்டு மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட்டன. 

கால்நடைகளைப் பயன்படுத்தி அதிகாலையில் இருந்து இரவுவரை நீர் இரைப்பதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்ததுபோய் மின்மோட்டார்களும் கதிரடிக்கும் இயந்திரங்களும் ட்ராக்டர்களும் புழக்கத்தில் வந்ததால் வேலைகள் மிகவும் எளிமையாகிக்கொண்டே வந்தன.

பட்டினி கிடக்கும் நிலைமைகள் மாறி ஓரளவு முன்னேற்றமும் சுதந்திரமும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கிறது! 

அதன்பின்னால் ஏழைகளின் ஒட்டுக்களுக்காக அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அறிவிப்பதும் அதன் பழுவைஎல்லாம் மக்கள் தலையில் வைப்பதும் என்ற கலாச்சாரமும் தீவிரமாக அமலுக்கு வந்தது! 

அதன்காரணமாக விவசாய வேலைகளுக்குப் போதுமான ஆட்கள் தடையின்றிக் கிடைத்த காலம் போய் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கிய காலம் போய் அவர்களிடம் நயமாக நடந்து வேலைக்குக் கூப்பிடும் காலம் வருகிறது! 

பாவப்பட்ட அவர்களின் முன்னோர்களுக்குச் செய்த கொடுமையின் பயனை விவசாயிகள் அனுபவிக்கும் காலம் வந்தது! 

தொடர்ந்து மாறிய சூழ்நிலைகளில் வேலை நேரமும் வேலைத் திறனும் தொழில் நுட்பமும் தேய்ந்துகொண்டே வந்து இப்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு மாடுகளைக் கொண்டு உழவு வேலை செய்யவோ மண்ணை சமப் படுத்துதல் பரம்பு ஒட்டுதல், புஞ்சை தானியங்களை விதைத்தல், அறுவடைக்குப் பின்னர் கால்நடைத்தீவனங்களைப் போரடித்தல் மாட்டு வண்டி ஒட்டுதல் போன்ற வேலைகள் எல்லாம் அறியாதவர்களாக மாறிப்போய் உள்ளார்கள்....

இந்த நிலையில்  அடுத்து வரும் காலம் விவசாயம் எந்தத் திசையில் நகரும் என்பதே கேவிக்குரியாக உள்ளது! 


முன்பெல்லாம்  வெளியூருக்குக் கட்டிக் கொடுத்துப் போய்விடுபவர்களுக்குப் பதிலாக விவசாய வேலைக்கு அதே மாதிரி வெளியூரில் இருந்தும் வருவார்கள்!

அதேபோல வயதானவர்கள் வேலைசெய்ய முடியாமல் போகும் அளவு இளம் வயதினர் புதிதாக வேலைக்கு வந்து பழகுவார்கள்.

ஆனால் சமீப காலமாக வெளியூருக்குப் போகின்றவர்களும் வயதாகிப் போகின்றவர்களும் போனவண்ணம் இருக்க புதிதாக இளம் வயதினர் யாரும் வேலை பழகி வந்து செய்வது இல்லை! 

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் எங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வந்துகொண்டிருந்த மூன்று இளம் பெண்கள் கல்யாணம் முடிந்து வெளியேறி ஆறேழு வருடங்கள் ஆகிறது! அவர்களுக்குப் பின்னால் இதுவரை ஊரில் ஒருவர்கூடப் புதிதாக வேலைக்குத் தயாராக வில்லை! 

ஆண்களும் அப்படியே! 

ஆனால் வயதானவர்கள் கழிந்துகொண்டே இருக்கிறார்கள்! 

வருங்காலத்தில் விவசாய வேலைகளுக்கு ஆட்களுக்கு எங்கே போவது?

இதன் விளைவாக ஆட்கள் பிரச்சினையினாலேயே விவசாயத்தில் முழுமூச்சாக இறங்க முடியாமல் விவசாயம் தத்தளிக்கிறது! 

இதன் விளைவாக விவசாய உற்பத்தியே அடிபடும் வாய்ப்புகள் நிறைய உள்ளது! 

அதன்காரணமாக வருங்காலத்தில் விவசாய விளைபொருட்களின் தட்டுப்பாடு மட்டுமீறிப்போய்  விலைகள் கட்டுக்கடங்காமல் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. 

அதைத் தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் விவசாயிகள் என்ன செலவு செய்தாலும் கட்டுபடியாகும் என்கிற ஒரு நிலையை எட்டலாம். 

அதனால் கிராமங்களில் வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையில் நகர்ப்புறங்களில் இருந்து சும்மா உடம்பை வளர்த்துக்கொண்டு நோயாளிகளாக வாழ்வதற்குப் பதிலாகக் கிராமங்களுக்கு வேலைக்குச் சென்றால் வருவாயும் கிடைக்கும், உடலுக்கும் நல்லது என்ற விழிப்புணர்வு உருவாகும்! 

அதனால் விவசாய வேலைகளை இழிவாகக் கருதிய காலம் மாறிப் பெருமையாக நினைக்கும் காலமாக மாறும்!

அதுவரை விவசாயிகள் தாக்குப்பிடிப்பார்களா?.....

அல்லது வரப்போகும் , ஏகபோக நிறுவனங்களாகப்போகும் பெரும் பண்ணைகளுக்கு நிலங்களைப் பறிகொடுத்து விட்டு அவர்களிடமே வேலைக்கும் போவார்களா?....

அரசுகள் இது சம்பந்தமாக ஆழ்ந்த அக்கரை எடுத்து அனைத்து மக்களும் நலம்பெற என்ன செய்ய வேண்டுமோ அதன்படி திட்டமிட்டு திட்டங்களை அமலாகினால் தவிர விமோசனம் கிடையாது!

பார்ப்போம்!....

எனது மொழி ( 119 )


விருப்பும் வெறுப்பும்....

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போராடும் போர்க்களமாகவே வாழ்க்கை ஆகிப் போனது! 

அந்த நிலையில் ஒவ்வொருவருடைய தேவைகளும் மற்றவர்களின் தேவைகளுடன் பெரும்பாலான நேரங்களில் முரண்படுகிறது! 

அந்த முரண்பாடுகளே சாதகமாக இருந்தால் விருப்பாகவும் பாதகமாக இருந்தால் வெறுப்பாகவும் உணரப்படுகிறது! 

இந்தப் பண்பு தனிமனிதனில் இருந்து வல்லரசுகள் வரை பொதுப்பண்பாக விளங்குகிறது!

Saturday, March 23, 2013

எனது மொழி ( 118 )


தியானமும் மவுனமும்... 

சொற்பொழிவுகள்மூலமும் ஏடுகள் மூலமும் நடைமுறை அனுபவங்கல்மூலமும் வாழ்வின் உண்மைகளை அறிய முயல்கிறோம்! 

அப்படியிருந்தும் பயன் முழுமையாக இல்லை! 

அப்படியிருக்க பேசப்படும் கருத்துருவாக மட்டும் இருக்கும் தியானத்தின் மூலமும் மவுனத்தின்மூலமும் மட்டும் என்ன சாதித்துவிட முடியும்? 

கற்றும் கேட்டும் சிந்தித்தும்  செயல் படுபவர்களின்  தியானமும் மவுனமும் மட்டுமே ஆற்றல மிக்கதாக இருக்க முடியும்! 

மற்றபடி வெறும் தியானமும் மவுனமும்  ஊமை கண்ட கனவாக மட்டுமே இருக்கும்! 

Monday, March 18, 2013

பிற உயிரினங்கள் ( 4 )

கால்நடைகளும் கொல்லாமையும்! 

நமது நாட்டில் கால்நடைகளைக் கொல்லக்கூடாது என்றும் கடைசிவரை உயிருடன் பராமரிக்கபடவேண்டும் என்றும் கூறும் ஒரு பகுதியினர் உள்ளனர்! 

அவர்கள் முக்கியமாகப் பசுக்களை மட்டுமே முக்கியமாக முன்னிலைப் படுத்துகிறார்கள். அதை ஒட்டித் தவிர்க்க முடியாமல் உழவு மாடுகளைச் சொல்கிறார்கள்! 

மற்ற கால்நடைகளைக் கணக்கில் கொள்வதில்லை! 

விவசாயத்தில் கால்நடைப் பயன்பாடு குறைந்ததும் தீவனம் கட்டுபடியாகாத அளவு விலை ஆகிவிட்டதாலும்தான் பயனற்ற மாடுகள் அதிக அளவு விற்கப்படுகின்றன! 

விற்கப்படும் மாடுகளுக்கு யார் விலை கொடுப்பார்களோ அவர்களுக்குத்தான் விற்கப்படும்! 

அதுதான் சந்தை! அந்த சந்தையில் விற்கிறார்கள்! 

அது தவறென்று சொல்பவர்கள் இதற்குத் தீர்வாக என்ன செய்யலாம் சொல்ல முடியுமா? 

கால் நடைகள் தானாக இறக்கும்வரை விட்டுவிட வேண்டுமாம்! பராமரிப்பது யார்? 

தானாக இறக்கும் கால்நடைகள் உண்ணத் தகுந்ததுதானா?... அதற்கு யார் விலை கொடுப்பார்கள்?

சரி விடுங்கள் கொன்று தின்பவர்கள் இரக்கமற்ற கொடூர மனம் படைத்தவர்களாகவே இருக்கட்டும்! 

கருணை உள்ள எத்தனைபேர் ஆடுமாடுகள், பன்றிகள், கோழிகள், எருமைகள் போன்றவற்றைச் சாகும் வரை பராமரிக்கிறார்கள்? 


அவை செத்தபின் காசு கொடுத்து வாங்க எத்தனைபேர் தயாராக இருக்கிறார்கள்?

ஒரு மாட்டை பாலுக்காகவோ உழவு வேலைக்காகவோ வாங்கும் ஒருவர் அது தேவைப்படாத நிலையில் அதைக் கடைசி வரை பாதுகாப்பது யார்? 

அதற்கு முன் பலரிடமிருந்து கைமாறி வரும் ஒரு மாட்டை காப்பாற்றவேண்டிய பொறுப்பு யாருக்கு? 

அப்படிக் காப்பாற்றவேண்டுமானால் பயனற்ற கால்நடைகள் அனைத்தையும் காசுகொடுத்து வாங்கிப் பராமரிப்பது அனைவரின் சமூகக் கடமையாக ஆக்க வேண்டும்! முடியுமா?...

பால் கறந்து விற்றவரும் உழவு செய்த குடியானவனும் பொறுப்பு என்றால் பாலைக் குடித்த மக்களுக்கும் தானியத்தை உண்ணும் மக்களுக்கும் பொறுப்பு இல்லையா?

எத்தனை பேர் தயாராக உள்ளார்கள்?...

மற்ற உயிரினங்களை அன்புடன் பராமரிக்கவேண்டும், துன்புறுத்தக்கூடாது, கன்றுகளுக்குப் பால் விடாமல் உயிருடன் கொல்லக்கூடாது போன்றவைதான் நாம் பின்பற்றவேண்டிய கருணையுள்ள நடவடிக்கைகள்! 

அதைவிட்டு கொல்லக்கூடாது அல்லது தின்னக்கூடாது என்பதுபோன்ற கோரிக்கைகள் நடைமுறை சாத்தியம் இல்லாததும் யாரும் பின்பற்றாத, மற்றவர்களிடம் மட்டும் எதிர்பார்க்கும் ஒன்று ஆகும்! 

காரணம் அவற்றுக்குக் கொல்லப்படாமல் ஒரு வாழ்க்கை முடிவு இல்லை என்பது மனிதன் வாழ்வதற்கான விதி ஆகிவிட்டது! 

அதை மறுப்பதாக இருந்தால் மாற்று வழி என்ன என்று விளக்குவார்களா? 

உலகில் தொண்ணூறு சதமான மக்கள் மாமிசம் உண்ணும் நிலையில் அதைச் சார்ந்து எண்ணற்ற உயிரினங்கள் வளர்க்கப்படும் நிலையில் அவற்றுக்கென ஒரு வாழிடம் இல்லை!

இந்த நிலையில் அவை மனிதனின் பொருளாதாரத்தைச் சார்ந்துமட்டும் வாழ முடியும் என்ற நிலையில் கொல்லாமை எப்படி சாத்தியமாகும் என்று ஏன் இந்தக் கருணையாளர்கள் யோசிப்பது இல்லை?

உலக உயிரின வாழ்வு விரும்பியோ விரும்பாமலோ பிற உயிரினங்களின் அழிவையும் சார்ந்துள்ளது! 

நாம் செய்யக்கூடியதெல்லாம் தேவையின்றிக் கொல்லாமல் இருப்பதும் கொல்லும் உயிரினங்களை அதுவரை  துன்புறுத்தாமல் இருப்பதுமே! 

இயற்கை உணவுக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்களும் மாமிசம் உண்ண விருப்பம் இல்லாதவர்களும் பழக்கம் இல்லாதவர்களும் மாமிசம் உண்ணாமல் இருக்கலாம்! அவ்வளவே! 

மற்றபடி  கொல்லாமை சம்பந்தப்பட்ட வெற்றுப் பிரச்சாரங்கள்  அனைத்தும் சாத்தியமில்லாத கற்பனைகளே!


எனது மொழி ( 117 )


நம் நாடு! 

நமது மக்களை மூன்று விதமாகப் பிரித்து விடலாம்!


முதலாவது தவறு செய்பவர்கள்.


இரண்டாவது தவறு செய்ய வாய்ப்பில்லாதவர்கள்!


மூன்றாவது தவறு செய்யக் கூடாது என்று இருக்கும் சில பைத்தியங்கள்!....


அதுதான் தமிழ்நாடு! அதுதான் இந்தியா!

Friday, March 15, 2013

எனது மொழி ( 116 )


ஆசை! 

மனிதனின் எல்லா ஆசைகளும் எக்காலத்திலும் நிறைவேறப்போவது இல்லை! 

காரணம் ஆசை என்பது கல்லடிக்கு எட்டாத தூரத்துக்கு நகர்ந்து நகர்ந்து உட்காரும் காக்கையைப் போன்றது! 

கல்லுக்கு எட்டும்தூரத்துக்குள் அது வராது! 

அதனால் எதிர்பார்ப்புகளைச் சாத்தியப்பாட்டுக்குள் வைத்து இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழ்வதும் அடுத்த படியை நோக்கி மெல்ல நகர்வதும்தான் அற்புதமான வாழ்க்கை!

Thursday, March 14, 2013

எனது மொழி ( 115 )


உணர்வு அறிவாகுமா?....

உணர்வு இரு வகைப்படும் !

உடல் சார்ந்தது ஒன்று. அறிவு சார்ந்தது மற்றொன்று.

ஆனால் அறிவு என்பது மனம் சார்ந்தது மட்டுமே!

 உடல் சார்ந்த உணர்வை அறிவு என்று சொல்ல முடியாது!. அது தவறு .

மனம் சார்ந்த உணர்வைக்கூட அறிவின் ஒரு நிலை என்று சொல்லலாம்.

உடல் சார்ந்த உணர்வை வலி, வெப்பம், குளிர்ச்சி, சுகம், பசி, தாகம், என்கின்ற பெயரில்தான் குறிப்பிட முடியுமே தவிர கோபம், அன்பு, விருப்பு, வெறுப்பு, இரக்கம், குரூரம் , அறிவு, ஆசை, காதல், என்பதுபோன்ற பெயர்களால் வழங்க முடியாது!
ஆனால் பலர்  மொழி வழக்குக்கும் பொருள் வழக்குக்கும் மாறாக உடல் சார்ந்த உணர்வையும்  அறிவு என்று சொல்கிறார்கள்!

அது பெறும் தவறாகும்!
ஒருவர் சொல்லும் கருத்து சரியாக மட்டுமே இருக்கும் என்று முடிவெடுத்து விட்டால் அதன் பின் குறைகள் தெரியாமல் போய்விடும். உலகில் அப்படிக் குறையே இல்லாதவர் வரலாற்றில் இல்லை !...

அதனால் எதைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் அதை நடைமுறை அனுபவங்களுடனும் வரையறுக்கப்பட்ட உண்மைகளுடனும் ஒப்பிட்டு உண்மையான பொருளை உணரவேண்டும்!

அதுவே அறிவுடைமை!....

Tuesday, March 12, 2013

எனது மொழி ( 114 )

இருப்பும் அறிவும்.....

பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து நம்மைச் சுற்றிலும் எதுவெல்லாம் நிலவுகிறதோ நமக்குள் எதுவெல்லாம் நிலவுகிறதோ அதுபற்றிய அறிவு வளர்ந்ததால்தான் மனித நாகரிகமும் அதைத் தொடர்ந்து வளர்ந்தது! 

ஆனால் அந்த அறிவின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் மனித உணர்வுகள் அன்பால் நிறைந்து தளும்புவதற்குப் பதிலாக வெறுப்பும் கசப்புமாக முட்டி மோதி வாழ்ந்துகொண்டு உள்ளார்கள்! 

அத்தகைய முரண்பட்ட வாழ்க்கைப் பாதை இப்போதைக்கு சரியான திசைக்குத் திரும்பும் அறிகுறி காணப்படவில்லை! 

அதனால் மனித இனம் தானும் கெட்டுத் தான் வாழும் உலகையும் அதில் வாழும் சக உயிரினங்களையும் கெடுத்து அழிவுப் பாதையில் நடை போடுகிறது! 

யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்ற கருத்து வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழும் தத்துவமாக மாறும்போதுதான் மனித நாகரிகம் மகத்தானது என்று சொல்லும் தகுதி பெறும்! 

Wednesday, March 6, 2013

உணவே மருந்து ( 52 )


தானிய உணவைக் குறைப்போம்!

நண்பர்களே! 

நமது உணவுப் பழக்கம் எதுவென்றாலும் அதில் ஏதாவது ஒரு தானியம் முக்கியப் பங்கு வகிக்கிறது! 

மற்ற வகை உணவுகள் எல்லாம் தானிய உணவுக்குத் துணையாகவும் சுவை சேர்க்கவுமே பயன்படுகின்றன! 

அதுதான் உடம்புக்கும் உணவுத் தேவைக்கும் இடையேயான  சரிவிகிதத் தன்மையை ஏற்றத் தாழ்வானதாக மாற்றுகிறது! 


அதன் காரணமாக பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது!

ஆனால் தானியப் பயன்பாட்டை மற்ற காய்கறிகளின் அளவுக்கு மிகாமல் பயன்படுத்த வேண்டும். 

அத்துடன் பழங்களின் பயன்பாட்டையும் அதிகப்படுத்துவதன் மூலம் அனைத்து வகையான சத்துக்களும் சீராகவும் மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் இருக்குமாறு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும்! 

மிகையான தானியப் பயன்பாடுதான் உலகின் நோய்களுக்கு மட்டுமல்ல விவசாயப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. காரணம் அதற்கு மிகப் பரந்த அளவு நிலப்பகுதியும் நீர்வளமும் தேவைப்படுகின்றன. 

தானியப் பயன்பாட்டைக் குறைத்து அந்த இடத்தை காய்கனி வகைகளுக்கு ஒதுக்கினால் உலகின் இயற்கைக் கட்டமைப்பே மகத்தான மாற்றம் அடையும்! 

குறைந்த தண்ணீரைக்கொண்டு சிறப்பாக விவசாயம் செய்யக்கூடிய விதத்தில் விவசாயமும் மாற்றி அமைக்கப்படும். 

அதனால் உலகில் உணவுப் பிரச்சினையே இல்லாத நிலையையும் அடைய முடியும்! 

தத்துவம் ( 7 )சரியும் தவறும் 

நாம் காணும் உலகம் வெளிப் பார்வைக்கு ஒரு அழகான பந்துபோல் உருண்டையாக இருந்தாலும் உண்மையில் ஒரேமாதிரி இரண்டு எங்கும் பார்க்க முடியாது !

அதனால்தான் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கு இடையிலும் வேறுபாடுகள் உள்ளன! 

அத்தகைய வேறுபாடுகளுக்கு மத்தியில்தான் பொதுவான நெறிகளை வகுத்துக்கொண்டு வாழ்வேணி உள்ளது! 

உலகின் அடிப்படை இயங்கு விதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்வு அமைகிறது!

அது இணக்கமானதாகவும் முரண்பட்டதாகவும் ஒரே நேரத்தில் விளங்குகிறது! 

அது தொடர்பான அனைத்து நம்பிக்கைகளும் நமது வாழ்வில் அனுபவத்தின் வாயிலாக ஏற்ப்பட்டவையே!

அதில் தவறானவையும் உண்டு. சரியானவையும் உண்டு!

இயற்கையை இயற்கையாக நினைப்பவர்கள் சரியாகச் சிந்திக்கமுடியும். சரியான முடிவுக்கும் வரமுடியும்.

காரணம் அவர்கள் தங்களை இயற்கையின் ஒரு பகுதியாக உணர்கிறார்கள்.

ஆனால் இயற்கை படைக்கப்பட்டது என்று நம்புபவர்கள் தங்களை இயற்கையை ஆதாவது இறையை விட்டு அன்னியர்களாகவே சிந்திக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சரியாகச் சிந்திக்கவோ சரியான முடிவுக்கு வரவோ இயலாது! சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்போர் அத்தகையவர்களே!

உணவே மருந்து ( 51 )


நோயற்ற வாழ்வு! 

துவக்க கால மனிதனின் வாழ்க்கைக்கு உழைப்பு தவிர்க்க முடியாத நிபந்தனையாக இருந்தது.

அதனால் முடிந்தவரை உழைத்து கிடைத்ததை உண்டு வாழ்ந்தான்.

அதனால் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியும் போதுமான அளவில் இருந்தது! 

மனிதனின் உடல் உழைப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டே துவக்க காலம் முதல் அறிவியல் வளர்ந்து வந்துள்ளது! 

உழைப்பைக் குறைத்த அளவு உணவைக் குறைக்கவில்லை! 

காரணம் உடலுழைப்பு அவசியமாக இருந்த காலத்தில் பசிதான் உண்ணும் உணவையும் அளவையும் தீர்மானித்தது! 

ஆனால் நவீன வாழ்வு முறையில் உடல் உழைப்பின் பாத்திரம் சிறுத்துப்போய்விட்டது.


அதனால்  உணவின் அளவை அதற்கேற்பக் குறைப்பதற்குப் பதிலாக அல்லது விளையாட்டு அல்லது உடல் பயிற்சி போன்ற நல்ல பழக்கங்களால் உடலைப் பசிக்குமளவு தயார் நிலைப் படுத்துவதைவிட சுவையாக உணவுவகைகளைத் தயாரித்துப் பசி இல்லாமலே வயிறு நிறைய உண்ணும் வழக்கம் நடைமுறை ஆனது! 

அதன் காரணமாக இரண்டு தவறுகள் நேர்ந்தன. 

முதலாவது தேவைக்கு அதிகமான உணவை உண்பதால் தேவையற்ற சத்துக்கள் குப்பைகளாக உடலில் சேர்ந்து பின் நோய்களாக மாறுகின்றன.

நோயெதிர்ப்புச் சக்தியை உடலில் வளர்ப்பதற்குப் பதிலாக பல்வேறு மருந்துகளின் மூலம் பெற்று மருந்துகளைச் சார்ந்து வாழும் நிலை ஏற்ப்பட்டது! . 

இரண்டாவது சமையல் சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்ததால் இயல்பாகவே தினசரி உண்டு வந்த இயற்கை உணவின் பங்கு மெல்ல மெல்லக் குறைந்து கிட்டத்தட்ட நின்று விட்டது! 

அதனால் மருத்துவப் பண்புகள் குறைந்த வேதிப் பண்புகள் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் நோய்களுக்கான வரவேற்பை தினசரி செய்து கொண்டுள்ளோம்! 

அதன்மூலம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மாறி நோயுற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதாக ஆகி விட்டது! 

இந்த நிலை மாறவேண்டுமானால் உழைப்பு, உடல்பயிற்சி, விளையாட்டு  ஆகியவற்றின்மூலம் உண்ணும் உணவுகளை முழுக்கவும் செரிக்கச் செய்ய வேண்டும்.

இயன்ற வரை பண்டங்களை கண்டபடி சிதைத்துச் நாவுக்குச் சுவையேற்றி உண்பதைவிட பசியுணர்வுக்கு ஏற்ற அளவு மட்டும் சுவையான இயற்கை உணவு மற்றும் தீங்கற்ற சமையல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்! 

அதுவே நோயற்ற வாழ்வுக்கு ஏற்ற சிறந்த வழி! 

Sunday, March 3, 2013

தத்துவம் ( 6 )


உயிர்

இறப்புக்கு முன்னர் நம்முடன் இருந்து இறப்புக்குப் பின் வேறு எங்காவது செல்வதற்கு உயிர் என்பது அந்நியமான ஒரு பொருளோ அல்லது அமானுஷ்ய சங்கதியோ அல்ல! 

நமது உடலின் இயங்கு நிலைக்குப் பெயர் உயிர்! 

நமது உடல் இயங்கு நிலையை இழந்து விட்டால் உயிர் என்ற பெயரும் அத்துடன் மறைந்து போகிறது!. 

அவ்வளவே! 

இதற்கு இணக்கமான விளக்கங்கள்தான் உண்மையாக இருக்கும்.

அதற்குமேல் கொடுக்கப்படும் ஆயிரம் அபத்தமான விளக்கங்கள் மக்களின் அறிவைக் குழப்பவே பயன்படும். 

அப்படிக் குழப்புவது எண்ணற்றவர்களுக்குப் பிழைப்பாகவும் உள்ளது!  

அதுவே மூடநம்பிக்கைகளின் அடித்தளமாகவும் விளங்குகிறது! 

அதைத் தொடர்ந்து ஆன்மிகத்தை மூடநம்பிக்கை மயமாக்குவதும் எளிதாகிறது! 

ஆகையால் அறிவியல்பூர்வமாகச் சிந்திப்பதும் ஆன்மிகத்தை மூடநம்பிக்கைகளிடம் இருந்து விடுவிப்பதும்தான் சான்றோரின் முதன்மையான தத்துவக் கடமையாக இருக்கவேண்டும்! 

Saturday, March 2, 2013

தத்துவம் ( 5 )
 முன்னோரும் நமது கடமையும் 

நமது முன்னோர்கள் காலத்தில் அன்றைக்கு இருந்த அறிவையும் அறிவியலையும் வைத்து மக்கள் நலன் கருதி நிறையத் தத்துவங்களை நூல்களாக உருவாக்கியும் பாடல்வரிகளாக வடித்தும் புகழ்மிக்க பங்கை ஆற்றினார்கள். .

அதைப் பற்றி சிந்திக்கும்போது நமது காலத்தவர் ஒரு தவற்றைப் பெரும்பாலோர்   செய்கிறார்கள்...

ஆதாவது முன்னோர்களின் அறிவாற்றலைப் பாராட்டி மகிழலாம்.

 அவர்களால் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிந்தது என்று யோசிக்கலாம்.

 அதையெல்லாம் நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் ஏன் வளப்படுத்தத் தவறினோம் என்று வருத்தப்படலாம் .
ஆனால் அதற்குப் பதிலாக அவர்களின் ஞானத்தை மெச்சிப் புகழ்வதொடு நிறுத்திக் கொள்கிறார்கள். 

அதுமட்டும் அல்ல எந்த விதமான நிரூபணமும் இன்றி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்களை நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புகளுக்கு இணையானது அல்லவென்றும் அவர்களின் சாதனைகள் நவீன அறிவியல் சாதனைகளை விட மேலானது என்றும் சொல்வதன் மூலம் சுய திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள்! 

இது எந்த வகையிலும் அறிவியலுக்கோ ஆராய்ச்சிக்கோ மக்கள் கடந்த கால உண்மைகளை அறிவதற்கோ பயன்படாது! 

மாறாக நம் முன்னோர் அளித்த அறிவியலையும் தத்துவங்களையும் நவீன காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுத்து அறிவியலில் வேறு எவருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் என்று நிரூபிக்கவேண்டும்! 

அதைவிட்டு இருபதாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த நவீன அணு விஞ்ஞானத்தை நமது முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் என்பதும் சித்தர்கள் அறியாதது எதுவும் இல்லை என்பதும்  சரியான ஆய்வு முறை அல்ல! 

அப்படிச் சொல்வதன்மூலம் நமது முன்னோர்களுக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காது! அவர்களின் உண்மையான தகுதிகளையும் சிறப்புக்களையும் குறைத்துக் காட்டவே பயன்படும்.

நமது முன்னோர்கள் காலத்தில்  அத்தகைய அறிவியல் தொழில்நுட்பம்  இருந்திருக்கும் பட்சத்தில் இன்று நாம் உலகில் மற்ற எல்லோரையும் விட அதி நவீன விஞ்ஞானிகளாக இருந்திருக்க வேண்டும். 

அதுதான் அத்தகைய மகான்களின் வழிவந்த நமக்குச் சிறப்பு ஆகும்! 

ஆனால் உண்மை அப்படி இல்லை! அதனால் உண்மைக்கு மாறாக முன்னோர்களைப் புகழ்வதை விட அவர்கள் வழியில் காலத்துக்கு ஏற்ப நாம் நமது காலத்தில் சாதிக்க முயல்வதே மேலானதாகும்!