விவசாயமும் தொழிலாளர்களும்!
விவசாயம் என்பது விவசாயிகள் மட்டும் உழைத்து அனைத்து வேலைகளையும் செய்யும் ஒரு தொழில் அல்ல!
பண்ணை நிலத்தைப் பொறுத்து செய்யும் பயிரைப் பொறுத்து தேவையான தொழிலாளர்களையும் வைத்துச் செய்ய வேண்டிய தொழில் ஆகும்!
ஆனால் இன்றுள்ள நிலையில் விவசாயிகள் நிலையும் தொழிலாளர் நிலையும் விவசாயத்தொழிலுக்கு உகந்ததாக இல்லை!
அவர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பும் வேலைமுறையும் வருவாய்ப் பங்கீடும் விவசாயிகளுக்குச் சாதகமாக இல்லை!
முப்பது நாற்ப்பது வருடங்களுக்கு முன்னரெல்லாம் வருடத்துக்கு இத்தனை மூட்டை தானியம் என்றும் தானியத்துக்குப் பதிலாக இவ்வளவு ரூபாய் சம்பளம் என்றும் பேசி விவசாயத்துக்கு நிரந்தரமாக ஆள் சேர்ப்பார்கள்.
அதுவல்லாமல் கூடுதல் வேலைகளைச் செய்ய அவ்வப்போது அத்தக் கூலிக்கும் ஆள் பிடித்துக் கொள்வார்கள்!
அதுவும் அல்லாமல் மாடுகள் மேய்ப்பத்தற்கும் தனியாக ஆள் வைத்துக்கொள்வார்கள்!
முன்னோர் காலத்தில் ஒருவர் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் தாங்கள் விவசாயத்தில் அனைத்து வேலைகளும் தெரிந்தவராக இருக்கவேண்டும். அத்தோடு கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயமாக இருப்பதால் வேலையாட்களின் தேவை அதிகமாக இருக்கும்!
அந்த அளவு ஆட்கள் கிடைத்தார்கள் என்பது மட்டுமல்ல அந்த வேலையாட்கள் அனைத்து வேலைகளும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்!
அதுமட்டும் அல்ல. பாசன விவசாயம் செய்யும் பரப்பு குறைவாக இருந்ததால் குடியானவர்கள் யாராவது வேலைக்கு அழைப்பார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பார்கள்!
நல்ல திடகார்த்திரமான ஆட்களுக்கும் தொழில் திறமை உள்ள ஆட்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும்!
வெலை செய்யும் விவசாய பூமிகளிலும் கெடுபிடி செய்து வேலை வாங்கப்பட்டது!
துவக்க காலங்களில் அடி உதை கொடுப்பது சவுக்கால் அடித்து வேலை வாங்குவது என்ற நிலைமைகள் எல்லாம் இருந்தது!
வயித்துச் சோறு என்கிற முறையும் இருந்தது! அதன்படி வேலைக்குப் போகும் ஒருவனுக்கு செய்யும் வேலைக்குப் பதிலாக சோறு மட்டும் கிடைக்கும். பெரும்பாலும் அவர்களுக்கும் நாய்களுக்கும் ஒரே உணவு வரும்.
அந்த வேலைக்குப் பெரும்பாலும் மாடுமேய்க்கும் சிறுவர்களே சேர்க்கப்படுவார்கள்...
காலப்போக்கில் அத்தகைய கொடுமைகள் மாறினாலும் சொன்ன படி வேலை செய்யாவிட்டால் அதன்பின் வேலைக்குக் கூப்பிட மாட்டார்கள் என்ற அச்ச உணர்வாலும் அடிமைகள்போல் வேலை செய்தார்கள்.
வேலைக்கு வந்தபின்னால் பிடிக்காத ஆட்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்பும் பழக்கம் சகஜமாக நடந்தது!
ஆனால் காலப்போக்கில் பசுமைப் புரட்சி வந்தபின்னால் இயந்திரங்களும் வேதி உரங்களும் பூசிக்கொல்லிகளும் வீரிய ஒட்டுரக விதைகளும் வந்த பின்னால் நிலைமைகள் மாறியது.
பாசன விவசாயம் செய்யும் பரப்பு அதிகமானது! கூடுதல் விளைச்சல் கிடைத்ததால் நவீன வேளாண் முறைகள் புகுத்தப்பட்டு மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட்டன.
கால்நடைகளைப் பயன்படுத்தி அதிகாலையில் இருந்து இரவுவரை நீர் இரைப்பதில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்ததுபோய் மின்மோட்டார்களும் கதிரடிக்கும் இயந்திரங்களும் ட்ராக்டர்களும் புழக்கத்தில் வந்ததால் வேலைகள் மிகவும் எளிமையாகிக்கொண்டே வந்தன.
பட்டினி கிடக்கும் நிலைமைகள் மாறி ஓரளவு முன்னேற்றமும் சுதந்திரமும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கிறது!
அதன்பின்னால் ஏழைகளின் ஒட்டுக்களுக்காக அவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை அறிவிப்பதும் அதன் பழுவைஎல்லாம் மக்கள் தலையில் வைப்பதும் என்ற கலாச்சாரமும் தீவிரமாக அமலுக்கு வந்தது!
அதன்காரணமாக விவசாய வேலைகளுக்குப் போதுமான ஆட்கள் தடையின்றிக் கிடைத்த காலம் போய் அவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கிய காலம் போய் அவர்களிடம் நயமாக நடந்து வேலைக்குக் கூப்பிடும் காலம் வருகிறது!
பாவப்பட்ட அவர்களின் முன்னோர்களுக்குச் செய்த கொடுமையின் பயனை விவசாயிகள் அனுபவிக்கும் காலம் வந்தது!
தொடர்ந்து மாறிய சூழ்நிலைகளில் வேலை நேரமும் வேலைத் திறனும் தொழில் நுட்பமும் தேய்ந்துகொண்டே வந்து இப்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு மாடுகளைக் கொண்டு உழவு வேலை செய்யவோ மண்ணை சமப் படுத்துதல் பரம்பு ஒட்டுதல், புஞ்சை தானியங்களை விதைத்தல், அறுவடைக்குப் பின்னர் கால்நடைத்தீவனங்களைப் போரடித்தல் மாட்டு வண்டி ஒட்டுதல் போன்ற வேலைகள் எல்லாம் அறியாதவர்களாக மாறிப்போய் உள்ளார்கள்....
இந்த நிலையில் அடுத்து வரும் காலம் விவசாயம் எந்தத் திசையில் நகரும் என்பதே கேவிக்குரியாக உள்ளது!
முன்பெல்லாம் வெளியூருக்குக் கட்டிக் கொடுத்துப் போய்விடுபவர்களுக்குப் பதிலாக விவசாய வேலைக்கு அதே மாதிரி வெளியூரில் இருந்தும் வருவார்கள்!
அதேபோல வயதானவர்கள் வேலைசெய்ய முடியாமல் போகும் அளவு இளம் வயதினர் புதிதாக வேலைக்கு வந்து பழகுவார்கள்.
ஆனால் சமீப காலமாக வெளியூருக்குப் போகின்றவர்களும் வயதாகிப் போகின்றவர்களும் போனவண்ணம் இருக்க புதிதாக இளம் வயதினர் யாரும் வேலை பழகி வந்து செய்வது இல்லை!
உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் எங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வந்துகொண்டிருந்த மூன்று இளம் பெண்கள் கல்யாணம் முடிந்து வெளியேறி ஆறேழு வருடங்கள் ஆகிறது! அவர்களுக்குப் பின்னால் இதுவரை ஊரில் ஒருவர்கூடப் புதிதாக வேலைக்குத் தயாராக வில்லை!
ஆண்களும் அப்படியே!
ஆனால் வயதானவர்கள் கழிந்துகொண்டே இருக்கிறார்கள்!
வருங்காலத்தில் விவசாய வேலைகளுக்கு ஆட்களுக்கு எங்கே போவது?
இதன் விளைவாக ஆட்கள் பிரச்சினையினாலேயே விவசாயத்தில் முழுமூச்சாக இறங்க முடியாமல் விவசாயம் தத்தளிக்கிறது!
இதன் விளைவாக விவசாய உற்பத்தியே அடிபடும் வாய்ப்புகள் நிறைய உள்ளது!
அதன்காரணமாக வருங்காலத்தில் விவசாய விளைபொருட்களின் தட்டுப்பாடு மட்டுமீறிப்போய் விலைகள் கட்டுக்கடங்காமல் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
அதைத் தொடர்ந்து தாக்குப்பிடிக்கும் விவசாயிகள் என்ன செலவு செய்தாலும் கட்டுபடியாகும் என்கிற ஒரு நிலையை எட்டலாம்.
அதனால் கிராமங்களில் வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையில் நகர்ப்புறங்களில் இருந்து சும்மா உடம்பை வளர்த்துக்கொண்டு நோயாளிகளாக வாழ்வதற்குப் பதிலாகக் கிராமங்களுக்கு வேலைக்குச் சென்றால் வருவாயும் கிடைக்கும், உடலுக்கும் நல்லது என்ற விழிப்புணர்வு உருவாகும்!
அதனால் விவசாய வேலைகளை இழிவாகக் கருதிய காலம் மாறிப் பெருமையாக நினைக்கும் காலமாக மாறும்!
அதுவரை விவசாயிகள் தாக்குப்பிடிப்பார்களா?.....
அல்லது வரப்போகும் , ஏகபோக நிறுவனங்களாகப்போகும் பெரும் பண்ணைகளுக்கு நிலங்களைப் பறிகொடுத்து விட்டு அவர்களிடமே வேலைக்கும் போவார்களா?....
அரசுகள் இது சம்பந்தமாக ஆழ்ந்த அக்கரை எடுத்து அனைத்து மக்களும் நலம்பெற என்ன செய்ய வேண்டுமோ அதன்படி திட்டமிட்டு திட்டங்களை அமலாகினால் தவிர விமோசனம் கிடையாது!
பார்ப்போம்!....
ஏகபோக நிறுவனங்களாகப்போகும் பெரும் பண்ணைகளுக்கு நிலங்களைப் பறிகொடுத்து விட்டு அவர்களிடமே வேலைக்கும் போவார்களா
ReplyDeleteஇந்த அரசாங்கமும் ஒன்றும் செய்யாது அய்யா.
ReplyDeleteவிவசாயிகளிடம் ஒற்றுமையும், நவீன யூகத்திற்கு ஏற்பமாறி விவசாயம் செய்யும் சக்தியும் இல்லை அய்யா.
இனி வரும் காலங்களில் கூட்டு பண்ணைதான் ஒரே தீர்வு. நிழ உச்ச வரம்பு சட்டம் வந்தது தவறாக தெரிகிறது அய்யா.