ss

Saturday, April 20, 2013

உணவே மருந்து ( 54 )

February 21, 2012 இயற்கை உணவு
===============

என்னதான் மருத்துவத் திறனாலும் மருந்துகளாலும் சரி செய்து பாதுகாக்கப்பட்டு வாழ்ந்தாலும் இயற்கையாகவே சீரான உணவை உண்டு ஆரோக்கியமாய் வாழும் வாழ்வுக்கு அது ஈடாகாது. ஏனெனில் என்னதான் நவீன விஞ்ஞானம் சாதித்திருந்தாலும் இயற்கையில் விளையும் ஒரு பொருளின் அத்தனை குணங்களையும் உள்ளடக்கிய ஒருபொருளைத் தயாரிக்க முடியாது. சில குறிப்பிட்ட சத்துக்களை மட்டும் கொண்ட செயற்கையானதை உட்கொள்ளும்போது இயற்கையுணவின் தன்மையை அது ஒத்திருக்காது. எனவே உடலோ மனமோ அதைப் பெரிதும் விரும்புவதில்லை. தவிரவும் சீரான முறையில் தனது தேவைக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் உடற்கூறுகள் ஒருபகுதி சத்துக்களை மட்டும் கொடுக்கும் போது வேண்டா வெறுப்புடன் ஏற்றுக் கொண்டாலும் அதன் இயல்பான இயக்கத்தில் முரணான அம்சமே முன்னிற்கும். அதனால் சிலநோய்களும் தீங்கான சில எதிர்விளைவுகளும் ஏற்படலாம். ஆனால் நிறை, குறை இரண்டையும் பார்த்தால் நல்ல அம்சத்தைக் கணக்கில் கொண்டு நாம் செயற்கைத் தயாரிப்பை உட்கொள்கிறோம். ஆனாலும் அது இயற்கைத் தயாரிப்புக்கு ஈடு அல்ல.

இயற்கையில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்புகள், கிழங்குகள், மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களிலும் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்குத்தேவையான அத்தனை சத்துக்களும் குறைவின்றி அடங்கியுள்ளன. தேவையான பல்வேறு உணவுப் பொருட்களையும் நாம் அப்படியே உண்பது இல்லை. பல்வேறுமுறைகளில் பக்குவப்படுத்தியே உண்கிறோம்.

ஆதி மனிதன் எந்த உணவையும் சமைத்தோ பக்குவப் படுத்தியோ உண்ணவில்லை. இயற்கையில் கிடைத்ததை இயற்கையாகவே உண்டான். வேறு வழி இல்லை. ஆனாலும் அவன் வாழ்ந்தான். இயற்கைச் சூழ்நிலையாலும் நோயாலும் தவிர உணவால் அவன் பாதிக்கப் பட்டிருந்தால் இன்றைய உலகில் மனித இனம் வாழந்திருக்க வாய்ப்பில்லை.

அக்காலத்தில் மனிதன் மாமிசம் உள்பட கிடைத்தவற்றை அப்படியே உண்டாலும் அவன் வாழந்ததற்குக் காரணம் அவன் உடலமைப்பு அவற்றை ஏற்றுக் கொள்ளப் பழக்கப்படடு இருந்தது. உணவு கரடுமுரடாக இருந்தது போலவே மனிதன் உடலும் கரடுமுரடாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் நெருப்பின் உபயோகத்தை அறிந்தபோது உணவைச் சுட்டும் சமைத்தும் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. உணவைக் கடினமான முறையில் சாப்பிட்டு ஏற்றுப் பழகிப்போன உடலமைப்பு சுடுவதாலோ வேகவைப்பதாலோ எளிதாக்கப்பட்ட நிலையில் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டது. அப்படி எளிதாக்கப்பட்ட உணவால் ருசிக்கின்ற உறுப்புகளும் செரிக்கின்ற உறுப்புகளும் தங்கள் வேலையை எளிதாக்கியதன் காரணமாக அத்தகைய உணவு வகைகளையே விரும்பும் தன்மையைப் பெற்றது மட்டுமல்ல அந்த மாதிரியே பக்குவப்படுத்தப்பட்ட உணவையும் மேலும் மேலும் எளிதாக்கப்பட்ட உணவையும் கொடுக்குமாறு உணர்வுகளைத் தூண்டும் நிலை ஏற்பட்டது. மனிதனும் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக இன்றைய நவீன உணவு முறைவரை மாற்றிய படியே வந்துள்ளான்.

ஆனால் ருசிக்கும் பகுதி, செரிக்கும் பகுதி ஆகிய இந்த இரண்டு நிலைகளில் தவிர உடலின் வேறு உறுப்புகள் சமைக்கப்பட்ட, ருசியேற்றப்பட்ட உணவுதான் வேண்டுமென்கின்ற உணர்வைத் தூண்டுவதில்லை. இப்படி ருசிக்காக சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் எளிதாக்கபடும் அதே நேரத்தில் வெப்பத்தின் காரணமாக அதில் ஒருபகுதி நிச்சயம் நிலைமாற்றத்தால் குணமாற்றம் அடைந்து இயற்கைத் தன்மையை இழக்கும். அதனால் சமச்சீரான உணவைச் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்தி சீர் கெட்ட தன்மையுடன் உண்டு பழக்கப்பட்டு விட்டோம். இதன் பொருள் உடல் நலத்துடன் உள்ளளவர்கள்கூட இயற்கையான சமச்சீர் உணவை உடலின் நன்மைக்கு சிறிதும் பொருந்தாததாக்கி ஒருபகுதி சத்துக்களை விரயமாக்கி உண்டுவாழப் பழகிவிட்டோம் என்பதுதான். அதன் காரணமாக உடல்நலம் கெட, சத்துக் குறைவால், மிகையால் நோய்கள் ஏற்பட நாமே ஒருவகையில் காரணமாகிவிட்டோம்.

இந்தநிலையில் உடலுறுப்புகளின் உணர்வுகளைத் திருப்திப் படுத்தக்கூடிய அதேநேரம் உடல்நலத்துக்கு முற்றிலும் ஏற்றதான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முடியுமா?........ முடியும் என்பதே பதில்.

நாம் சாப்பிடக்கூடிய உணவு வகைகளுள் சமைத்தே சாப்பிட வேண்டும் என்ற அவசியமான பொருட்களை மட்டும் சமைத்து உண்ணவேண்டும். மற்றபடி சமைக்காமலே சாப்பிடக்கூடிய, இயற்கையாகக் கிடைக்கிற, ருசிக்கும் தன்மையுள்ள, தானியங்கள், காய்கறிகள், பருப்புவகைகள், பால், பழம், தேன் முதலான இன்னும் பலவற்றை இயற்கையாகவே உண்ண வேண்டும். சமைத்தே சாப்பிட்டுப் பழகிப்போன நமக்கு இயற்கையுணவால் சில நேரங்களில் செரிமானக்கோளாறு வரும் என்று பயப்படுவோர் உண்டு. சமையல் உணவின் பாதகமான அம்சங்களைக் காட்டிலும் இயற்கையுணவால் கிடைக்கும் நன்மை அதிகமாக இருப்பதால் சிறு சிறு பழக்கக் குரைபாடுகள் சரிசெய்யபபட்டு ஆரோக்கியமான உடல்நலன் நிச்சயம் பெறுவோம்.

இன்னும் ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து என்னவென்றால் இன்றைய நவீன வேளாண்முறையால் உணவுப்பொருட்கள் நஞ்சு கலந்துதான் வருகின்றன. அப்படி இருக்க வேகவைக்காமல் உண்பது எப்படி சரியாக இருக்கும் என்கின்றனர். உண்மையில் இவர்கள் சரியாகச் சிந்தித்து இந்த வினாவை எழுப்புவதில்லை. காரணம் தயாரிக்கப்படும் நஞ்சு வகைகள் பெரும்பாலும் ரசாயனக்கூடங்களில் தயாரிக்கப்படும் வேதிப்பொருட்களே! அதை வேகவைப்பதன்மூலம் நஞ்சில்லாமல் செய்துவிடமுடியாது. சுத்தமாகக் கழுவி உண்ணக்கூடியது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது. அல்லது நஞ்சில்லாத உணவுப் பொருட்கள் கிடைத்தாலும் உண்ணலாம். ஆனால் ஒன்றுமட்டும் நாம் உணரவேண்டும். இயற்கையாக உண்ணும்போதுதான் அத்தகைய நச்சுப் பொருட்களைக்கூட எதிர்த்துத் தாக்குப்பிடிக்கும் வலிமை நமது உடலுக்குக் கிடைக்கும்.


இயற்கை உணவு வகைகளை நேரடியாக உண்ணும்போது சமைத்தே உண்டு பழகிப்போன உடற்கூறுகள் சிரமப்பட்டாலும், சில உபாதைகளைக் கொடுத்தாலும்(மிகமிகச் சிலருக்கு) நாளடைவில் தன்னை மாற்றிக் கொள்ளும்.

நமது மூதாதையர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் கதைகதையாகச் சொல்லப்படும் உண்மையின் முக்கியக் காரணம் அவர்கள் இயற்கையுணவை அதிகம் உண்டதுதான் என்று சொன்னால் மிகையாகாது. அதுமட்டுமல்ல இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கும் உதாரணங்களும் உண்டு. காட்டிலும் மலைகளிலும் சுதந்திரமாகத் திரியும் விலங்குகளிடமோ மற்ற உயிரினங்களிடமோ மனிதனைப் பீடிப்பதைப் போன்ற நோய்கள் பீடிப்பதில்லை. காரணம் அவை இயற்கையுணவை உண்டு இயற்கையாய் வாழ்வதுதூன். செயற்கையுணவை உண்டு பழகிப்போன நாம் மட்டுமல்ல நம்மை அண்டிப் பிழைக்கும் விலங்குகளும் பறவைகளும்கூட வன விலங்குகளைப் போன்று ஆரோக்கியமாய் இல்லை. அவைகளையும் வன விலங்குகளைக் காட்டிலும் மிகமிக அதிகமாகவே மனிதர்களைத் தாக்குவது போலவே பல்Nறு நோய்களும் தாக்குகின்றன. காரணம் செயற்கையான உணவுதான். எனவே இயற்கையுணவின் முக்கியத்துவத்தை கண்கூடாகப் பாரத்துக்கொண்டிருப்பதை மறுக்கமுடியாது.

மேலும் சமைக்கப்பட்ட உணவு வகைகளைவிட இயற்கையுணவில் சத்துக்களின் செறிவு அதிமாக இருப்பதால் குறைந்த அளவு உண்டால் போதுமானது. எனவே பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இயற்கையுணவு உயர்ந்ததே. சீரற்ற உணவால் வரும் நோய்களில் இருந்து அதிகமான விடுதலை கிடைக்கும் அதே நேரத்தில் செரிமான உறுப்புக்களின் வேலையும் மிக மிக எளிதாகிறது. தரமும் உயர்ந்ததாகிறது.

அறிவியல் வளர்ச்சியால் நாம் பெற்ற அதிகப்படியான ஆக்கும் சக்தியை உலகில் நமது சிறப்பான வாழ்க்கைக்குத் தேவையான பல் வேறு ஆக்கரீதியான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இயற்கையான உடல் வளர்ச்சித் தன்மையுள்ள நமக்கு இயற்கையான, சிறப்பான உணவுபப் பொருட்களை விளைவிக்கும் முறையில் அறிவியலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் உண்பது இயற்கையாய் இருக்கவேண்டும். வழக்கத்துக்கு மாறாக முழுக்கவும் இயற்கையுணவை உண்ண இயலாவிட்டால் பெரும்பாலும் இயற்கையுணவை உண்பதோடு படிப்படியாக முழுமையான இயற்கையுணவுக்கு முன்னேற வேண்டும்

அதே சமயம் பொருளாதார ரீதியில் அனைவரும் ஒரேமாதிரி இல்லை. எனவே இயற்கையுணவில் சிறப்பானதையே அனைவரும் பெற இயலாது. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் ஆதாவது உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்களும் நன்மை தீமையும் அவற்றின் விலைமதிப்பைப் பொறுத்தது அல்ல. சில பொருட்களுக்கு நாம் கொடுக்கும் கூடுதல் விலை அவற்றின் ருசிக்குத்தானே அல்லாமல் அவற்றின் பயன்படு தன்மைக்கு அல்ல. ஆனால் அவரவர் வசதிக்கேற்ற விலையுள்ள ஆனால் சத்துள்ள பண்டங்கள் எத்தனையோ உள்ளன. அதைச் சாப்பிட்டுக் கொண்டே உயர்ந்த, சிறப்பான, ருசியுள்ள, விலை மதிப்புள்ள இயற்கைப் பண்டங்களை வாங்கியுண்ணும் அளவு வாழ்க்கை வசதி உயரப் பாடுபட வேண்டும். நாம் சாப்பிடும் உணவு நமது உடல் வாழ்க்கையின் தேவைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அதை ருசியுள்ளதாக உண்ணலாம். ஆனால் ருசிக்காகத் தேவையற்றதை உண்ணும் பழக்கத்தை ஒழிக்கவேண்டும்.

எனவே நமது உணவு தேவைக்காக இருக்க வேண்டும். அளவில் குறைந்ததும் சத்துக்கள் நிறைந்துமாக இருக்க வேண்டும். அதுவும் இயற்கையுணவு முக்கியமானதாக இருக்கவேண்டும். அத்தகைய முறையை நாம் அனைவரும் கடைப்பிடித்தால் பூமியின் அமைப்பே மாறுதல் அடையும். காரணம் நமது அறிவியல் சக்தியால் எண்ணற்ற இயற்கையான, ருசிமிக்க காய்கனிவகைகளை உருவாக்குவோம். இயற்கையான சூழ்நிலையில் வாழவேண்டும் என்ற விருப்பமும் இணைந்து வருமாதலால் பூமியின் பெரும் பாகத்தை இயன்ற இடங்களிலெல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் அழகிய நந்தவனம் போல ஆக்கிவிடுவோம். ஆதனால் தவறாது பெய்யும் மழையால் மேலும் மேலும் நமது உலகம் அழகியதாய் ஆகும். அமில மழை பெய்யும் காலம் வரும் என்ற நிலைக்கு மாறாக என்றென்றும் வாழையடி வாழையாக உலகம் மேலும் மேலும் சிறப்புப்பெறும் என்ற நிலையை நமது சந்ததிகளுக்கு உருவாக்கலாம். 

No comments:

Post a Comment