ss

Thursday, June 20, 2013

விவசாயம் ( 55 )

இயற்கை விவசாயமும் களைகளும் 

இப்போது வேதிப்பொருட்களைச் சார்ந்த விசாயத்தின் தீமைகள் உணரப்பட்டு அவற்றைப் புறக்கணிக்கும் இயற்கை முறையிலான விவசாயத்தின் பால் ஈடுபாடும் மேலோங்கி வருகிறது. 

அது மிக நல்ல அம்சம் ஆகும். 

அதே சமயம் பெரும்பாலும் வேதிப் பொருட்களைப் பயன்படுத்தியே விவசாயம் செய்யும் முறை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கத்தில் இருந்ததால் விவசாயத் தொழில் முறைகள் அதற்கேற்ப மிகவும் மாறிவிட்டன. 

இயந்திரப் பயன்பாடு மிகுந்தும் கால் நடைப் பயன்பாடு குறைந்தும் போய் விட்டன.

மனித உழைப்பும் அதற்கு முன்னர் இருந்ததில் இருந்து வெகுவாக மாறிவிட்டது.

ஆதாவது மனித உழைப்பு விவசாயத்தில் முன்பிருந்ததைவிட மிகவும் இலகுவாகிவிட்டது.

விவசாயக் கூலிகள் உயர்ந்த அளவு மற்ற செலவுகள் உயர்ந்த அளவு விவசாய விளைபொருட்களின் விலைகள் விலை உயராதது விவசாயிக்குப் பாதகமாகவும் மற்ற பகுதி மக்களுக்குச் சாதகமாகவும் அமைந்து விட்டன. 

அதன் காரணமாக விவசாயத் தொழிலாளர்களின் உழைப்புத் திறனும் தொழில் நுட்பமும் மிகவும் குறைந்து விட்டது. வேலை நேரங்களும் மிகவும் குறைந்து விட்டன.

அதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது களை வெட்டுதல்.


இது பெண்கள் மட்டுமே பெரும்பாலும் செய்யும் வேலை ஆகும்.

வேலையாட்களுக்குத் தட்டுப்பாடு வந்ததாலும் வேலை நேரம் குறைந்ததாலும் வேலைத்திறன் குறைந்ததாலும் களை வெட்டுவதற்காக ஒரு ஏக்கருக்குப் பிடித்த ஆட்களின் எண்ணி;க்கையும் செலவும் அதிகரித்தவண்ணம் இருந்தது. 

இதனால் வேலையாட்களிடம் கண்டிப்பாக வேலை வாங்கும் நிலைமை மாறி அவர்கள் செய்வதுதான் வேலை என்று ஆகிவிட்டது.

அதன் காரணமாக களை என்பது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது போய் கட்டுக்கு அடங்காத அளவில் நிலங்களில் அதிகம் ஆகிவிட்டது. 

அதன்காரணமாக களைகளை வெட்டாமல் ஒழிக்கக்கூடிய களைக்கொல்லி தெளித்து ஒழிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. 

இன்று களைக்கொல்லி தெளிக்காத விவசாயம் இல்லை என்று சொல்லும் அளவு களைக்கொல்லிப் பயன்பாடு விவசாயிகளிடம் அதிகரித்து விட்டது. 

ஆனால் களைக்கொல்லிகளால் இன்னொரு விளைவும் ஏற்பட்டது. ஆதாவது கடைக்கொல்லி தெளிக்கப்படும் வயல்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு களைகள் முளைக்காமல் போவதால் ஆட்களை விட்டு வெட்டுவதோ கால்நடைகளுக்கு புல் பிடுங்கிப் போடுவதோ நின்று போனது. 

அதன் விளைவாக களைக்கொல்லியின் வீரியம் குறைந்தவுடன் முளைக்கும் களைகளின் விதைகள் செடிகளாக வளர்ந்து அளவில்லாத களை விதைகளை மீண்டும் உருவாக்குகின்றன. களைக்கொல்லிகள் முளைத்த பின்னர்தான் களைகளைக் கொல்லுமே தவிர முளைக்காமல் மண்ணுக்குள் இருக்கும் களை விதைகளைக் கொல்வது இல்லை! 

களைகள் எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் நாம் பயிர் செய்யும் பயிர்களின் விதைகள் போல ஒரேயடியாக முளைப்பது இல்லை! அதனால் களைக்கொல்லி தெளிக்கும் போது சில நாட்களில் முளைக்கும் விதைகளைத் தவிர மற்ற விதைகள் அழியாமல் தங்களை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருக்கிக் கொள்கின்றன.

இப்பொது பிரச்சினை என்வென்றால் இப்படி மலிவான களைக்கொல்லிகளால் அழிக்கமுடியாத ஏராளமான களைகளை இயற்கை முறையில் அழிப்பது எப்படி என்பதே! 

களைகளை இயற்கை முறைகளில் அழிப்பதற்குப் பாரம்பரியமான சில வழிகள் இருந்தன. 

பெண்களைக் கொண்டு கொத்துகளால் வெட்டிவிடுவது ஒரு முறை!

அது இன்று கட்டுபடி ஆகாத அளவு செலவு பிடிப்பதாகவும் அப்படியும் களைகளை சுத்தமாக அகற்ற முடியாததாகவும் இருக்கிறது.

அதிலும் தப்பிவிடுபவற்றைக் கால்நடைத் தீவனத்துக்காக வெட்டி அப்புறப்படுத்தப்படுவது இரண்டாம் முறை!

இப்போது கால் நடைகளுக்கும் கரவை மாடுகளுக்கும் புல் வெட்டிப்போடும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. காரணம் அந்த அளவு கடின உழைப்புக்கு பெரும்பாலோர் தயாராக இல்லை! நிறையப் பேரிடம் கரவை மாடுகளும் இல்லை! 

வயல்களில் வரப்புக் கட்டித் தண்ணீர் நிறைய நிறுத்தி சேற்று உழவு செய்வதன் மூலம் களைகளையும் களை விதைகளையும் மண்ணின் ஆழத்துக்கு அழுத்தி மக்கச்செய்து அழிப்பது மூன்றாவது முறை! 

முன்றாவது முறையில் களைகளை அழிக்க நன்செய் நிலங்களில் மட்டுமே முடியும்.

ஆகையால் முடிவாகக் களைக் கொல்லிகளிடம் தஞ்சம் அடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. 

இதுதான் இன்று இயற்கை வேளாண்மைக்கு முன் உள்ள சவால்களில் மிகப்பெரியது ஆகும். 

வேதிப்பொருட்களைப் பயன்படுத்தவும் கூடாது. வேலையாட்களைக்கொண்டு களைகளை ஒழிக்கும் முறை பல்வேறு பயிர்களில் முடியாது.

அதனால் ஆட்களைக் கொண்டே களைகளைச் சமாளிக்கக்கூடிய பயிர் வகைகளைத் தேர்வு செய்யும் சிக்கலான நிலை உள்ளது. 

அதற்கு பல்வேறு வகையான மரத் தோப்புகள் மட்டுமே ஏற்றதாக உள்ளது. 

மற்ற பாரம்பரிய சாகுபடிப் பயிர்கள் அதுவும் புஞ்சை சாகுபடிப் பயிர்கள் களைக்கொல்லிகளிடம் இருந்து எப்படி விடுபடும் என்பது மிகவும் பெரிய கேள்விக் குறியாக உள்ளது!

இயற்கை வேளாண்மை இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டாக வேண்டும்! 

1 comment:

  1. பண்ணை கழிவுகளை கொண்டு மூடக்கு போடுவதால் களைகள் முளைப்பதில்லை. தண்ணீரும் குறைந்த அளவே தேவைப்படும்.

    ReplyDelete