ss

Tuesday, July 30, 2013

உணவே மருந்து ( 61 )

பனையும் பயனும்!

பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்! 

அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது. 

இன்றும் கொடுத்து வருகிறது. 

ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம். 

தாங்க முடியாத பஞ்ச காலத்திலும் தானும் தாக்குப்பிடித்து நம்மையும் வாழவைக்கும் திறன் கொண்டது! 

ஆனாலும் நாம் அவற்றை அழிப்பதைவிடத் தற்கொலைத் தனமான செயல் ஒன்றும் இருக்காது! 

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பனைமரங்கள் நிறைந்திருந்தால் எந்தப் பஞ்சமும் வறட்சியும் எதுவும் செய்யாது. 

செலவே இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அனைத்து வழிகளிலும் காக்கும் திறன்கொண்ட பனைமரத்தைக் காப்போம்! 

அது பனைமரத்துக்கு நாம் செய்யும் உதவி அல்ல! நமக்கு நாமே செய்து கொள்ளும் மாபெரும் உதவியாகும்!....

பனையைப் போற்றும் விதத்தில் நான் இரண்டு விதமான உணவுப் பண்டங்களைச் சொந்த உத்தியில் உருவாக்கியுள்ளேன். இது இனியும் தொடரும்.

முதலாவது பனம்பழ பானம்.

இரண்டாவது பனம்பழக் கேசரி...

எடுத்து வந்த பனம்பழங்கள்....
பனம் பழத்தின் மேல்தோலை உரித்தவுடன்.....
மேல்தோல் உரித்தபின்னால் உள்ளிருக்கும் சதைப்பகுதி தண்ணீரில் கரைத்துப் பிழியப்பட்டபின் வெறும் கொட்டைகள்.

இவற்றை நட்டுவைத்தால் நல்ல பனங்கிழங்குகள் கிடைக்கும்.
ஒரு பனம்பழத்தின் சதைப் பகுதியைத் தண்ணீரில் கரைத்து பிழித்து எடுத்தபோது கிடைத்த பணங்கூழ்..

ஒரு பெரிய பழத்தில் இருந்து ஒரு லிட்டர் அளவுக்கு இதைத் தயாரிக்கலாம்.
பனம்பழ பானம்( ஜூஸ்)

பணம்பழக் கூழுடன் எலுமிச்சைச்ச் சாறு, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், சில சொட்டுக்கள் இஞ்சிச் சாறு விட்டுக் கலக்கிய பானம். 

அருமையான இயற்கைப் பானம்....பனம்பழக் கேசரி!...

தேவையான பொருட்கள்:

பனங்கூழ், மக்காச் சோள ரவை, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள் , நெய்...

செய்முறை: பனங்கூழை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு ரவையையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதித்தபின் திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த் தூளையும் சேர்க்கவும்.போதுமான அளவு கெட்டியானபின் இறக்கி வைக்கவும்.

பனம்பழக் கேசரி தயார்!...


இவ்வளவு நல்ல பனைமரத்தை நாம் வெட்டலாமா?....

Monday, July 29, 2013

உணவே மருந்து ( 60 )

சர்க்கரை நோய் மட்டுமா?

நண்பர்களே! 

சர்க்கரை நோயைப் பரம்பரை நோய் என்கிறார்கள். 

அதிலும் தனது ரத்த சொந்தங்களில் இன்னாருக்கு ஏற்கனவே இருந்தால் நமக்கு வரும் வாய்ப்பு இவ்வளவு சதவிகிதம் என்று பட்டியலும் சொல்கிறார்கள்! 

ஆதாவது முன்னோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் கண்டிப்பாகப் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்கிறார்கள். 

ஆனால் முன்னோருக்கு இல்லாமல் முதன்முதலாகவும்  ஒருவருக்கு வருகிறது. 

அதேபோல ஒருவருக்குப் பிள்ளைகள் பிறந்த பின்னால் சர்க்கரைநோய்க்கான காரணங்கள்  முதன்முதலாகத் தோன்றினால் அது எப்படிப் பிள்ளைகளைப் பாதிக்கும்?...

தாங்கள் பிறந்தபின்னால் பெற்றோருக்குச் சர்க்கரை நோய்க்கான காரணங்கள் ஏற்பட்டிருந்தால் அது தங்களை மரபு வழியாகப் பாதிக்காது என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதாகத் தெரியவில்லை! 

ஆகப் பெரியவர்களுக்கு சர்க்கரை என்றால் அது தங்களையும் பாதிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

இந்த இடத்தில் ஒன்றை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.


ஆதாவது சர்க்கரை நோய் முன்னோர்களுக்கு இல்லாமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

அப்படியானால் முன்னோருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் அடுத்து வரும் சந்ததிக்கு வராமல் போவதற்கான காரணங்கள் மட்டும் என் இருக்கக்கூடாது?

அதுதான் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று ஆகும். 

நமது உடம்பின் கட்டமைப்பு இந்த பூமியில் நிலவும் பஞ்ச பூதங்களின் பல்வேறு அம்சங்களில் இருந்து உணவையும் நீரையும் காற்றையும் பெற்றுத் தோன்றி  வளர்ந்து வாழ்ந்து மடியும் விதத்தில் அமைந்திருக்கிறது. 

இந்த இயக்க முறையின் ஒரு அம்சம்தான் உடம்பு பல்வேறு முறைகளில் தனக்குத் தேவையான பல்வேறு சத்துக்களைப் பல்வேறு விகிதங்களில் பெற்று வாழ்கிறது. 

அதைத்தான் உடல்வாழ்க்கை என்கிறோம். 

அத்தகைய சீரான உணவுமுறையும் சீரான வாழ்க்கை முறையும் பல காரணங்களால் சீர்குலையும்போது  நோய் ஏற்படுகிறது. அதைத்தான் மிகினும் குறையினும் நோய் செய்யும் என்று வள்ளுவர் சொன்னார்! 

அது சர்க்கரை நோய்க்கும் பொருந்தும்.

உடம்புக்கு எந்த அளவு சர்க்கரை தேவையோ அந்த அளவு மட்டுமே செரிமான உ\றுப்புக்களால் கொடுக்கப்படவேண்டும். ஆனால் அந்தச் செயல்பாட்டில் இடர் ஏற்படும்போது அது கூடுதலாக அல்லது குறைவாக ஆகிறது.

அதனால் ஏற்படும் நோயைக் குணப்படுத்தப் பல்வேறு மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றன.

பல்வேறு சிகிச்சைகளும் மருந்துகளும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. 

ஆனால் நோய் முற்றிலும் குணமாகும் என்று யாரும் உறுதி சொல்வது இல்லை.

அந்தநோயின் அடிப்படைக் குறையான இன்சுலின் சுரப்புக் குறைவை ஈடு செய்ய குறைபாட்டுக்குத் தக்க மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுப்பதோடு மருத்துவர்களின் கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.

தாங்கமுடியாத கட்டத்தை எட்டியவுடன் அதற்கான வேறு காரணங்களைச் சொல்வதோடு உறுப்புக்களை வெட்டுவதும் முடியாது எனக் கையை விரிப்பதும் ஆண்டவன்மேல் பழிபோடுவதுமாகத் தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள்.

ஆனால் அனைவரும் நினைக்க மறந்த ஒன்று உள்ளது. 

இன்சுலின் சுரப்பு ஏன் தடைப்பட்டது? அந்தத் தடை ஏற்பட்ட உறுப்பு பலவீனமடைந்ததற்கு என்ன காரணம்?

அந்த பலவீனம் ஏன் ஏற்பட்டதோ அந்தக் குறையைச் சரி செய்வதால் அதை ஏன் நல்ல நிலைக்கு உயர்த்த முடியாது?

இதைத்தான் நாம் நினைப்பதில்லை!  

காரணம் மருத்துவர்களின் மண்டையில் உதிக்கும் தீர்வும் மக்களின் ஊறிப்போன நம்பிக்கைகளும் அந்த பாதிக்கப்பட்ட பகுதியின் தேவைக்கு மாறாகத்தான் இருக்கும். 

காரணம் அவர்களால் ஆங்கில மருந்துகளையும் நவீன முறையில் சமைக்கப்படும் உணவுகளையும் தவிர உடல் ஏற்றுக்கொள்ளும் அவசியமான பண்டங்கள் இருப்பதாக நினைக்க முடிவது இல்லை! 

காரணம் அவர்களுக்கு அப்படிப் பழக்கமோ சிந்தனையோ அடிப்படை அறிவோ கிடையாது!...

ஆனால் சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல வேறு பல நோய்களுக்கும் இப்போது வழக்கில் உள்ள மருந்துகளை உண்ணாமல் உணவின்மூலமே தீர்வு காண முடியும். 

ஆதாவது  நமது நோய்களில் பெரும்பாலானவற்றுக்கு உணவுக் கோளாறும் உழைப்பின்மையே காரணம் ஆகும்.

ஆதாவது நமது உணவுப் பழக்கமும் உழைப்பின்மையும் பல நோய்களுக்கு இடம் கொடுக்கின்றன. காரணங்களாகவும் இருக்கின்றன. 

அதன் பொருள் என்ன? உணவுப்பழக்கத்தை மாற்றி உடலுக்கும் வேலை கொடுத்தால் நோய்களுக்கு இடம் இல்லை என்பதுதானே?

நோய்கள் உருவாகக் காரணமாக இருந்தவற்றை மாற்றி அமைப்பதன் மூலமும் உடலுக்கு உழைப்பு விளையாட்டு, உடற்பயிற்சி, ஆகியவற்றின்மூலம் வேலை கொடுப்பதன்மூலமும் ஏன் கோளாறுகளைச் சரிப்படுத்தி, வந்தவழி திருப்பி அனுப்ப முடியாது?

அதுதான் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி!

அப்படி அனுப்பவேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வி..

ஆதாவது என்னென்ன உணவுகள் நாம் உண்ட தவறான உணவுகள் என்பதை அறிய வேண்டும். அதனால் உடம்புக்கு நேர்ந்த தீங்கை உணர வேண்டும், அதன்பின் அத்தகைய உணவுப் பழக்கங்களை ஒழிப்பதன்மூலம் உடலில் பல்வேறு முறைகளில் சேர்ந்த கழிவுகளை சுத்தப்படுத்த வேண்டும். காரணம் அந்தக் கழிவுகள்தான் நோய்களுக்கு அடிப்படைக் காரணம்.

அதன்பின் அந்த இடத்துக்கு கழிவுகள் அசுத்தங்கள் இல்லாத நல்ல உணவுகள் மூலம் புத்துயிர் ஊட்டவேண்டும்.

அந்த நிலையில் தவறான உணவுகளால் செயற்பாடு குலைந்த உறுப்புக்கள் தங்களின் குறைபாட்டை சரிசெய்துகொண்டு புத்துணர்ச்சியுடன் இயங்கத் தொடங்கும்.

அதன் தொடர்ச்சியாக எந்தெந்த உறுப்புக்கள் பாதிப்படைந்ததால் என்னென்ன நோய்கள் உருவாயினவோ அவையெல்லாம் ஒழித்துக் கட்டப்படும்.

அப்படியானால் உடலில் நோய்கள் உருவாவதற்கான உணவுகள் எவை?

எந்தெந்த உணவுகளை சமைத்து உண்கிறோமோ அந்தந்த உணவுகள் எல்லாமே சமைக்கும் முறைக்கு ஏற்ப உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.

தீங்கு விளைவிக்கும் உணவுகள் உண்ணும் நல்ல உணவுகளின் சக்திக்கு மீறியதாக இருந்தால் உடல்நலம் ஏதாவது ஒருவகையிலோ பல வகையிலோ பாதிக்கப்படும்.

நல்ல உணவுகளே உண்ணாமல் முழுக்கவும் தவறான உணவுகளை உண்பவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் அதிகமான அளவு ஏற்படும். காரணம் அந்த அளவு அவயங்கள் பாதிக்கப்படும்.

அதைச் சரி செய்வதற்கான ஒரே வழி தீங்கை உருவாக்கிய தவறான உணவுகளை நிறுத்திவிட்டு நன்மை செய்யும் இயற்கை உணவுகளை உண்ணத் துவங்குவதே! 

இயற்கை உணவு என்பது மனிதன் தோன்றிய நாளில் இருந்தே உண்ணப்பட்டு வரும் மனிதனுக்கு ஏற்ற உணவாகும். 

காரணம் அது மனிதன் உருவானதற்கே காரணமாக இருந்த உணவுகளாகும். 

மனிதன் நெருப்பின் பயனைக் கண்டறியும்வரை உண்டு வந்த சிதைக்கப்படாத -  வேதிப் பண்புகள் ஏற்றப்படாத -  இயற்கை உணவாகும். 

அது முதலில் வேண்டாத கழிவுகளாக மாறி உடலில் தங்குவது இல்லை! 

தவிர தவறான உணவுகளால் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுகிறது.

 அதைத் தொடர்ந்து முன்னர் ஏற்பட்ட உடல் கோளாறுகளையும் சரி செய்கிறது. 

காரணம் அதன் இயற்கையான பண்பு அத்தகையது! 

அதன்காரனமாகத் தவறான உணவுகளால் சீர்குலைந்து தமது வேலைகளைச் சரியாகச் செய்ய இயலாமல்போன உடல் உறுப்புக்கள் தங்களைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் தங்கள் பணிகளை முழுமையாகச் செய்யும் தகுதியைப் பெறுவது தவிர்க்க முடியாதது ஆகிறது. 

அப்புறம் என்ன? நல்லதுதானே?

அதை நாம் உணர்ந்தோம் எனில் நமது முன்னோர்களுக்கு நோய் இருந்திருந்தாலும் அந்த மரபு வழிக் கோளாறுகளை நம் காலத்தில் சரி செய்து நமக்கு அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்தாமல் நல்ல மரபை உடற்கூறுகளில் உருவாக்க முடியும் என்று ஆகிறது!

எனது சொந்த அனுபவமும் அதுவே! 

எனது பெற்ற தாயாருக்கு இருபத்தி ஐந்து வருடங்கள் சர்க்கரை நோய் இருந்து சமீபத்தில் காலமானார்கள். 

அவருக்கு எப்போது சர்க்கரை நோய் என்று தெரிய வந்ததோ அது வருங்காலத்தில் என்னையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதை உணர்ந்தேன். 

காரணம் நான் பிறக்கும் முன்பே அவருக்குச் சர்க்கரைநோய் வருவதற்கான கூறுகள் உருவாகி இருந்தால் அது என்னையும் நிச்சயம் பாதிக்கும் அல்லவா?

அதனால் நான் எச்சரிக்கை அடைந்தேன். 

அவருக்கு சர்க்கரை நோய் துவங்கிய காலம் நான் இயற்கை உணவில் தஞ்சம் அடைந்த காலமாக இருந்தது!

அதன் காரணமாக நான் இயற்கைஉணவின் பங்கை அதிகரித்தேன். 

சமைக்கும் உணவிலும் தீங்கு அதிகம் இல்லாத சமையல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.

அதன்காரணமாக எனது உடல்நலத்தைப் பராமரிக்கும் பொறுப்பு சமையல் உணவில் இருந்து இயற்கை உணவுக்குக் கை மாறியது. 

இன்று நான் உண்ணும் உணவில் இயற்கை உணவுதான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. 

அதன் தொடர்ச்சியாக எனக்கு அறுபத்தி இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயின் அறிகுறியும் இல்லாமல் வாழ்கிறேன்.

இளைஞனைப்போல் மண்ணில் உழைக்க முடிகிறது.

காரரணம் இயற்கை உணவும் உழைப்பு அல்லது உடல்பயிற்சியுமே! 

அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுப் பொருட்களையும் உண்டபின் சர்க்ரையாக அதிக அளவு மாற்றப்படக் கூடிய உணவுப் பொருட்களையும் உணவில் தவிர்க்க வேண்டும்.

 இயற்கையான காய் கறிகளுக்கும் மூலிகைச் சத்துக்கள் நிறைந்த கீரைகளுக்கும் முளைக் கட்டிய தானியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உண்ணவேண்டும். 

அதன் காரணமாக அவர்களின் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு, அதற்குக் காரணமாக இருந்த உடல் பாகங்கள் தங்கள் பணியைச் செய்யத் துவங்கி போதுமான அளவு இன்சுலினைச் சுரக்கும் தன்மையைப் பெற்றுவிடும். 

அதன் பின்னால் இனிப்புச் சுவை உள்ள பழங்கள் உட்பட அனைத்து உணவுகளையும் உண்ணும் முழுமையான சக்தியைப் பெறலாம். 

ஆனால் அதை சமைப்பதன்மூலம் கெடுக்கப்பட்ட உணவுகளை முன்போலவே வரைமுறை இன்றி உண்ண அனுமதிக்கப்பட்ட அனுமதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது! இயற்கை உணவின் மேலாதிக்கத்தைக் கை விட்டால் மீண்டும் பலவிதக் கோளாறுகள் வந்தே தீரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல மனிதனை பாதிக்கும் எந்த நோயின் பிடியில் சிக்கியவர்களும் இதிலிருந்து விடுதலை பெறலாம் என்பதே நாம் உணரவேண்டிய முக்கியமான ஒன்றாகும்! 

உணவே மருந்து (59)

வேரில் பழுத்த பலா

"கோரிகையற்றுக் கிடக்குதண்ணே: இந்த வேரில் பழுத்த பலா". 
 இது  பாரதிதாசன் மொழி! 

இது இந்தப் பனம்பழங்களுக்கும் பொருந்தும்!


 செலவில்லாமல் ஆயிரம் பங்கு நன்மை செய்யக்கூடிய இந்தப் பனம் பழங்கள் கேட்பாரற்று எறிந்து கிடக்கின்றன.

ஆனால் கணக்கின்றிக் காசு பணம் கொடுத்து நச்சு உணவுகளான பாஸ்ட் புட் ஆயிட்டங்களை வாங்கிச் சாப்பிட்டு நோய்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறோம். 

என்னே நமது அறிவு!

Saturday, July 27, 2013

விவசாயம் ( 57 )

யானைக் கற்றாழை

இது ஒரு  வேலித் தாவரம் ஆகும். 

கடும் வறட்சியையும் தாங்கி வாடாமல் வளரக் கூடியது.

அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக் கூடியது.

இதன் மடல்கள் ஐந்தடி நீளம் வரை வளரக்கூடியது. 

அவற்றின் இரு பக்கமும் ரம்பம் போல முட்கள் இருக்கும். 

நுனியில் ஒரு கனமான நீளமான முள் இருக்கும்.

யானைக் கற்றாழை 
இதன் முற்றிய மடல்களை அறுத்துத் தண்ணீரில் ஊறவைத்துச் சில நாட்களுக்கும் பின் எடுத்துத் துவைத்தால் அருமையான வெண்மை நிறமான நார் கிடைக்கும்.

அந்த நார் மிகவும் வலிமையானதும் நீடித்து உழைக்கக்கூடியதும் ஆகும். முன்னோர் காலத்தில் இதன் நாரைக் கொண்டுதான் விவசாயத்துக்குத் தேவையான கயிறு வகைகள் திரிக்கப் பட்டன.

கோரைப் பாய்கள் நெசவுக்கு கோரையுடன் சேர்ந்து இதுதான் அடிப்படை மூலப் பொருளாக விளங்கியது. இந்த நாரால் தயாரிக்கப்படும் மெல்லிய நூல் கயிறுதான் கோரைப் பாய் நெசவில் நெட்டுப்பாவாகப் பயன்பட்டது. கோரை ஊடு பாவாகத்தான் பயன்படுத்தப்படும். 

நாடகம் மற்றும் கூத்துக் கலைஞர்கள் இந்த நாரைப் பயன்படுத்தி வெண்தாடி உடைய கிழவர் வேடம் போடுவார்கள்.

இதன் மடல்களை ஒரு அங்குல அளவுள்ளதாக நீள நீளமாகக் கிழித்துக் காயவைத்து அந்த நாரைக் கொண்டு கூரை வீடுகள், பந்தல்கள், படல் என்று சொல்லக்கூடிய தட்டிகள் ஆகியவற்றை ஓலைகளுடன் இணைத்துக் கட்டப் பயன்படுத்துவார்கள்.

இதன் மடல்களில் இருந்து வெளிப்படும் சாறு உடம்பில் பட்டால் எரிச்சலாகவும் நமைச்சலாகவும் இருக்கும்.

இந்த மடல்களில் மேல் பத்தாகப் பயன்படக்கூடிய மருத்துவப் பண்புகள் உண்டு. 

இது பக்கக் கன்றுகளுடன் வாழையடி வாழையாக என்றென்றும் அழியாமல் வளரக்கூடிய தாவரம் ஆகும்.

இதன் அடித்தண்டை ஒட்டியுள்ள கிழங்குப் பாகத்தை முற்காலங்களில் கொடும் பஞ்ச காலங்களில் வெட்டி எடுத்துச் சமைத்து உண்டு உயிர் பிழைத்தார்கள்.

 குறிப்பிட்ட வருடங்களுக்கும் பின் கற்றாழையின் மத்தியில் பாக்குமரம் போன்று தோன்றி மரமாக வளரும். குறிப்பிட்ட காலத்தில் அது மட்டும் காய்ந்து விடும். 

அந்தக் காய்ந்த மரம் உறுதியாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். 

அதனால் விவசாயிகள் தங்கள் குடிசைகளை அமைப்பதற்கும் மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கும் பட்டிகள் அமைப்பதற்கும், வெங்காயம், சோளத்தட்டுப்போர் போன்றவற்றுக்கு அடியில் பட்டறைகள் அமைப்பதற்கும் இந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள்.

எடை குறைவான இதன் மரக் கட்டைகளை முதுகில் மிதவையாகக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் நீச்சல் பழகுவார்கள். 

(நான்கூட இந்த முறையில் நீச்சல் கற்றவன்தான்!) 

இதன் அருமையை உணர்ந்திருந்ததால் முன்னர் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு வேலியாக இதை நட்டு வளர்த்தார்கள். அது அவர்களுக்குப் பலவகையிலும் பயன்பட்டதோடு நிலத்தின் பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது.

ஆனால் இப்போதைய விவசாயத்தில் அதன் பயன்பாடு ஒழிந்துபோனதால் அதை ஒரு தேவையற்ற ஒன்றாகக் கருதி அழித்து ஒழித்து வருவதால் அது அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களில் ஒன்றாக உள்ளது.

கயிறுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில் இதன் அருமை உணர்வதற்கான வாய்ப்பு சுத்தமாக அடைபட்டு விட்டது! 

இந்ததப் பாரம்பரியத் தாவரத்தின் அருமை உணர்ந்த யாராவது தங்களின் நிலத்தைச் சுற்றி வேலியாக இதை வளர்த்தால் இயற்கை அன்னைக்குச் செய்த சேவையாகவே கருதலாம்!

அப்படி இல்லாவிட்டால் வருங்காலத்தில் இதன் அழிவைத் தவிர்க்க முடியாது! 

ஆனால்  விவசாயியின் உற்ற துணையாக  விளங்கிய இந்தத் தாவரத்தை அழிய விடுவது இயற்கைக்குச் செய்யும் மன்னிக்க முடியாத தீங்கு ஆகும்.
Thursday, July 25, 2013

பல்சுவை ( 17 )

ஞாபகம் வருதே!.....

நான் சிறுவனாக இருந்தபோது வேப்பமரத்து நிழலில் மணலில்தான் அ  ஆ எழுதிப் பழகினேன். 

அந்த மணலில் குட்டிக்கரணம் அடித்து விளையாடுவோம். 

அங்கு கொட்டுவதற்காக ஓடைகளுக்கு மணல் அள்ளச் செல்வோம். 

அங்கு கைகளால் பறித்தால் நீர் உற்றுப் பெருகும் . 

அந்த நீரைக் குடித்துவிட்டு மணலில் அமர்ந்து அரைக்கால் சட்டையினுள் மணலை நிரப்பிக்கொள்வோம்.

காலுடன் சேர்த்துச் சிந்தாமல் பிடித்துக்கொண்டே குனிந்தபடி நடந்து வந்து மணலை மரத்தடியில் கொட்டுவோம். 

அதன்பின் பாடமும் நொண்டி விளையாட்டும் கதைகேட்டலும் நடக்கும்....

அதை இனி மீட்க முடியுமா?...

வேப்பமரத்தைப் பள்ளிகள் வருமா?


அங்கு படிக்கக்  குழந்தைகளை அனுப்புவோமா?

ஓடையில் மணலைப் பார்க்கும் அளவு மழை பொழியுமா?

அந்த மணலில் குட்டிக்கரணம்போடும் வாய்ப்பு இனி குழந்தைகளுக்குக் கிடைக்குமா?....

எல்லாவற்றையும் தொலைத்தாயிற்று!....

பரபரப்பான யாந்திரீக வாழ்க்கையும் நாளைப் பொழுதை எண்ணிக் கவலையும்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது!....

காலம் மாறுமா!.....

Wednesday, July 17, 2013

பங்கு வர்த்தகம் ( 3 )ஏன் அதைச் செய்கிறார்கள்?


பங்கு வர்த்தகத்தைச் சரியாகச் செய்து தாங்கள் போடும் பணத்துக்கும் மேலாகப் பல மடங்கு அதிக லாபம் பார்க்க ஒவ்வொருவருக்கும் விருப்பம்.

ஆனால் அந்த அளவு ஒவ்வொருவரும் அதன் நெளிவு சுழிவுகளை அறிந்தவர்கள் அல்ல! 

அதனால் என்ன? 

எதற்குத் தேவை இருக்கிறதோ அதற்குச் சந்தையில் கிராக்கி இருந்துகொண்டே இருக்கும்.

அதனால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்குவதற்கென்றே ஆபத் பாந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். 

அவர்கள்தான் ஆலோசனை வழங்குபவர்கள்!. 

நான் பல முறை கேட்டிருக்கிறேன் . பங்குகளின் விலை குறைவாக இருக்கும்போது  வாங்க வேண்டும் . அதிகமாக ஏறியவுடன் விற்கவேண்டும் என்பது இவர்களின் ஆலோசனையாக உள்ளது. 

அதேபோல உச்சத்தில் இருக்கும்போது விற்றும் வைக்கலாம். குறைந்தபின் வாங்கி  லாபத்துடனும் வெளி வரலாம். 

ஆனால் நான் கெட்ட ஒரு கேள்விக்கு உள்ளூர் தரகர்களில் இருந்து தொலைக்காட்சியில் ஆலோசனை சொல்லும் கனவான்கள் வரை யாரும் சரியான பதில் சொல்லவில்லை! அந்தக் கேள்வி:

குறைவான விலைக்கு வாங்கி வைத்து விலை ஏறியவுடன் விற்பதும் லாபம் பார்ப்பதும் சரியே! அதிக விலைக்கு விற்றுவைத்து குறைந்தபின் வாங்கி  லாபம் பார்ப்பதும் சரியே! 

கேள்வி என்னவென்றால் விலை கிடுகிடுவென ஏறியபின்னால் குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் லாபம் பார்க்க விற்கும்போது அடுத்து விலை இறங்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் அதை வாங்குபவர்கள் ஏன் வாங்குகிறார்கள்?

அதேபோல அதிகவிலைக்கு விற்று கடகடவெனக் குறைந்த நிலையில் வாங்கி லாபத்துடன் வெளி வருபவர்களிடம் அடுத்து விலை ஏறுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ள நிலையில் எதற்காக அவ்வளவு குறைந்த விலைக்கு விற்பவர்கள் விற்கிறார்கள்?

இப்படிக் கேட்டால் அவர்கள் மொழியில் என்னென்னவோ சொல்கிறார்கள் . ஆனால் நம்பக்கூடியதாக இல்லை! 

நம்பும்படியான காரணத்தை அறிந்தவர்கள் சொல்லுங்கள்!....

உணவே மருந்து ( 58 )தாவரத்தில் நல்லதும் கெட்டதும்.


எந்த ஒரு தாவரத்தையும் இயற்கை தேவையின்றி உருவாக்குவது இல்லை! 

ஆனால் நாம் உண்ணக்கூடியதை நல்ல தாவரம் என்றும் உண்டால் தீங்கு விளைவிப்பதை நச்சுத் தாவரம் என்றும் சொல்கிறோம். 

அது அனைத்தும் மனிதனுக்கானது என்ற நோக்கில் சொல்லப்படும் கருத்து ஆகும். 

நமக்கு நஞ்சாக நினைக்கும் பல தாவரங்களைச் சார்ந்து பல்வறு உயிரினங்கள் வாழ்கின்றன. 

அத்தகைய தாவரங்கள் நமக்கு உண்ணப் பயன்படாவிட்டாலும் மருத்துவ ரீதியில் பயன்படு பண்புகள் ஏராளம் கொண்டுள்ளன. 

நல்லபாம்பின் நஞ்சில்கூட மருத்துவப் பயன் உள்ளது! 

அதனால் உலகில் உள்ள தாவரங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உணவுத் தொடர்பை மட்டும் வைத்து ஒட்டுமொத்த முடிவுக்கு வரக்கூடாது! 

எந்தத்தாவரம் எந்த வகையில் நமக்குப் பயன்படுமோ அந்த வகையில் பயன்படுத்துவதே சரியான முறை ஆகும். 

அதை மாற்றிச் செய்யும்போது நஞ்சாக நமக்கு ஆகிறது!

இன்னும் அறியப்படாமல் தாவரங்களில் பொதிந்திருக்கும் நற்பயன்களை வெளிக்கொணர முயன்றால் அளவற்ற நன்மை கிடைக்கும்! 

                         

Tuesday, July 16, 2013

பங்கு வர்த்தகம் ( 2 )

பங்குவர்த்தகத்தை விரும்புபவர்கள். ......

1. பங்கு முதலீட்டைக் கொண்டு தொழில் நடத்த விரும்பும் தொழில் நிறுவனங்கள். காரணம் அவற்றுக்கு வட்டி இல்லாமல் தொழில் நடத்தப் பணம் கிடைக்கின்றது. அதைக் கொண்டு வருவாய் ஈட்டி கொஞ்சம் துகையை ஈவுத் தொகையாகக் கொடுத்தால் போதும். 

2.  பங்கு வர்த்தகத்தை நடத்தும் அமைப்புகள்! காரணம் இவற்றுக்குக் கோடி கோடியாக வருவாய் கிடைக்கிறது.

3. பங்கு வர்த்தகத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வியாபார நிறுவனங்கள். காரணம் அவற்றுக்கும் கணிசமாக வருவாய் கிடைக்கிறது.

4. உள்ளூர் தரகு அலுவலகங்கள். அவர்களுக்கும் கமிஷன் கிடைக்கிறது.

5. ஆலோசனையும் டிப்சும் தரும் நிபுணர்கள். இவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது.

6.  ஊடகங்கள்.இவற்றுக்கும் விளம்பரங்கள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வருவாய் கிடைக்கிறது.

7.   வங்கிகள். டிமேட் அக்கவுண்டில் இருக்கும் பணத்துக்கு வட்டி கொடுப்பதில்லை. அதனால் வட்டியின்றிப் பணத்தைக் கையாளும் வங்கிகள் அல்லது அதற்குப் பொறுப்பான நிறுவனங்கள்.

8.  முதலீட்டை மட்டும் நல்ல நிறுவனங்களில் செய்துவிட்டு அவர்கள் கொடுக்கும் ஈவுத் தொகையை மட்டும் வாங்கிக்கொண்டு திருப்தி அடைபவர்கள்..காரணம் பணத்துக்கு உத்திரவாதமும் அந்தப் பங்கின் சந்தை மதிப்பு உயர்வும்.  

9.வர்த்தகத்தில் லாபம் அடைந்தவர்கள். இவர்கள் சிறுபான்மையோராக இருந்தாலும் தாங்கள் அடைந்த லாபத்தைத் தொடர்ந்து அடைய நிறைய சம்பாதிக்க விரும்புபவர்கள். ஆதாவது இவர்கள் இழந்ததைவிட அடைந்த லாபம் அதிகம். 

10.  வர்த்தகத்தில் நட்டம் அடைந்தவர்கள். இவர்கள்தான் முக்கியமான பகுதியினர்! இவர்கள் தாங்கள் அடைந்த லாபத்தைவிட இழந்தது பலமடங்கு அதிகம். இவர்கள்தான்  மிகப் பெரும்பான்மையோர்! இவர்களும் தாங்கள் நட்டம் அடைந்து ஏராளமாக இழந்திருந்தாலும் இந்த வர்த்தகத்தில் தாங்கள் செய்த தவறுகளைச் சரிசெய்து ஜாக்கிரதையாகச் செய்தால் இழந்ததை அதிலேயே மீட்பது மட்டுமல்ல பெரிய வெற்றியையும் அடைய முடியும் என்று நம்புபவர்கள்.

ஆக பயன் அடைந்தவர்களும் பயன் அடையாமல் இழந்தவர்களுமாக அனைவரின் ஏக மனதான ஆதரவுடன் சக்கைப் போடு போடுகிறது பங்கு வர்த்தகம். 

 நல்ல நிறுவனங்களில் ஆரம்பகால முதலீடு செய்து விட்டு கிடைக்கும் ஆதாயத்தை வட்டியாக நினைத்து வாங்கிக்கொள்கின்றவர்களுக்குப் பிரச்சினை இல்லை! 

பங்கு வர்த்தகத்தில் மொத்தமாக அனைவராலும் இழக்கப்படும் தொகையில் ஒரு சிறு பகுதி  அவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு  லாபமாகச் சேருகிறது. அவர்களுக்கும் பிரச்சினை இல்லை! 

 மற்ற துகை  முழுவதும்  முதல் ஏழு வகையினரால் சூறையாடப்படுகிறது....

( நண்பர்களே! நான் பங்கு வர்த்தகத்தில் அனுபவம் உள்ளவன் அல்ல. ஆனால் நியாயமான கண்ணோட்டத்தில் எனது மனதுக்குப் பட்டதைச் சொல்லி இருக்கிறேன். சரியானதாக இருப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்!) 

Friday, July 12, 2013

பங்கு வர்த்தகம் ( 1 )


பங்கு வர்த்தகத்தில் அனுபவத்தில் கற்றது! 
------------------------------------------------------------------------
(எனது முகநூல் பதிவும் அதன் தொடர்ச்சியாக நம்பர்கலுக்கு நாள் அளித்த பதில்களும்.....)

பதிவு : 

நண்பர்களே!

பங்கு வர்த்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரியாக சந்தை நிலவரத்தைக் கணித்து வர்த்தகம் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்கிறார்கள்! 

அது உண்மையா?

என்னால் அதை நம்ப முடியவில்லை! ஏமாற்றுவேலை என்கிறேன்.....

தொடர்ந்து நான் நண்பர்களுக்கு அளித்த பதிலில் இருந்து :.............................................................................................................................................


இதற்கு எதிராக ஒவ்வொருவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது நண்பர்களே! ஆனால் எனது கருத்து என்வென்றால் இதன்மேல் நாட்டம் ஏற்ப்பட்டுவிட்டால் எத்தகைய ஒரு மனிதரிடமும் உழைத்துப் பிழைக்கும் எண்ணத்தை ஒழித்துவிடும் என்பதே!

மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவர்கூட, இது என்ன பிரமாதம் , சரியான நேரத்தில் வாங்கி அல்லது விற்று வைத்திருந்தால் ஒரு வருடம் சம்பாதிப்பதை ஒரு லாட்டில் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணம்தான் மேலோங்கும் என்று நினைக்கிறேன்....

பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளைப் பற்றி அதில் ஈடுபட்டுள்ளவர்களே சரியாகப் புரிந்திருக்கிரார்களா என்று தெரியவில்லை! அல்லது புரிந்தும் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நான் கேட்ட ஒரு கேள்விக்கு தொலைக் காட்சி நிகழ்ச்சியிலாகட்டும் நேரடியான சில நபர்களாகட்டும் சரியான பதிலைச் சொல்லவே இல்லை!

 ஆனால் இது தலைவைத்துப் படுக்கக்கூடாத ஒரு தொழிலாகப் படுகிறது நண்பர்களே! காரணம் இதில் கிடைக்கும் லாபம் இதில் மற்றவர் அடையும் நட்டத்தில் ஒரு பகுதியே! யாருக்கும் லாபம் இல்லாமல் முதலீட்டாளர்களிடம் இருந்து தினமும் கரையும் துகை என்றென்றும் யாருக்கும் திரும்பி வராத பெரும் துகை ஆகும்!....

அதனால் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபத்தைவிடப் பல மடங்கு மொத்த முதலீட்டில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படுகிறது என்பதை லாப போதையில் உள்ள யாரும் கண்டுகொள்வதில்லை என்பதில்தான் இந்தத் தொழிலின் வெற்றி அடங்கியுள்ளது!.

மற்ற தொழில்களில் மொத்த நஷ்டம் என்பது மொத்த லாபத்தை விழுங்கி விடுவது இல்லை ! 

ஆனால் இந்தத் தொழிலில் மொத்த நஷ்டம் என்பது மொத்த லாபத்தைவிடப் பல மடங்கு அதிகம் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பது இல்லை!...

அந்தக் கூடுதல் நஷ்டம் என்பது பங்கு வர்த்தகத்தைத் தொழிலாக நடத்தும் நிறுவனங்களுக்கும் தரகு நிறுவனங்களுக்கும் மற்றும் அதுசார்ந்த நிபுணர்களுக்கும் அரசுக்கும் வங்கிகளுக்கும் லாபமாகவும் கமிஷனாகவும் ஊதியமாகவும், வரியாகவும், வட்டியில்லாத வைப்பு நிதியாகவும் போய்ச் சேருவதைப் பார்க்கலாம்.

இதிலும் லாபம் பார்ப்பவர் ஒரு சிலர் இருக்கலாம்! ஆனால் அதைவிடப் பல மடங்கு மக்கள் சராசரியாக இழப்பைச் சந்திக்கிறார்கள் என்பதுதான் நாம் கவலைப்படவேண்டிய உண்மையாகும். 

அந்தச் சிலரும் அடுத்து வரும்காலத்தில் இழப்பைச் சந்தித்த அந்தப் பலருள் ஒருவராக ஆகலாம் என்பதும் உண்மை!

பங்கு வர்த்தகத்தில் எந்த முறையில் லாபம் வந்தாலும் அது மொத்த இழப்பில் ஒரு பகுதியே! 

இழப்பில் பெரும்பகுதி முதலீட்டாளர்களைத் தவிர மற்றவர்களைச் சென்றடைகிறது! 

அதனால் மக்களின் பணம் இந்தத் துறையில் இறைக்கப்படும் அளவு திரும்பவும் அவர்கள் கைகளுக்குப் போய்ச் சேர்வது இல்லை என்பதுதான் முக்கியம். 

அதனால் பங்கு வர்த்தகத்தின் பேரால் மக்களின் பணம் அட்டையாக உறிஞ்சப்படுகிறது. 

லாபம் கிடைத்த சிலர் மேலும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்ற ஆசையிலும் நஷ்டம் அடைந்த ஏராளமானோர் எப்படியும் மீண்டுவிடலாம், லாபம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையிலும் எப்போதும் இருக்கிறார்கள்.

அதனால் உண்மையான விபரீதத்தை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை நிலை!...

அதனால் இந்தக் கரடிகளும் காளைகளும் தாங்கள் பாடுபட்டு உழைத்துத் தேடிய கரும்பாகிய பணத்தை பங்கு வர்த்தகம் என்னும் செக்கில் இட்டு செக்கை இழுக்க இழுக்க அதிலிருந்து சாறாக வெளிப்படும் ஆதாயங்களை மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள். 

கரடிகளும் காளைகளும் என்றும் பயன் அடையப்போவதில்லை.

கரடிகள் காளைகள் ஆகும். காளைகள் கரடிகளும் ஆகும். 

தங்கள் வேஷத்தை மாற்றிக் கொள்வதையும் பொருளை இழப்பதையும் தவிர வேறு பயன் அவற்றுக்கு இல்லை!

பங்குவர்த்தகத்தின் வலிமை!. நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் திறமையாளர்களையும்கூட அவர்களின் தனித்தன்மையைச் செயலிழக்கச் செய்து விடும்.

 சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கத் தவறுவார்கள். கணக்கறிந்தவர்கள் கணக்கைத் தவறாகப் போடுவார்கள்.அறிவாளிகள்கூட அதிருஷ்டத்தை நம்பத் துவங்கி விடுவார்கள்....

அதுமட்டும் அல்ல , சிக்கலான நேரத்தில் பற்று, பாசம் எல்லாம் பின்னுக்கும் போய் லாப நட்டம் சம்பந்தப்பட்ட உணர்வுகள் மட்டும் முன்னால் நிற்கும்.

இது சார்ந்த முதலீடுகளுக்கு அதிக வட்டி கொடுப்பதாகச் சொல்லி எண்ணற்ற மக்கள் நிதி நிறுவனங்களால் எமாற்றப்பட்டிருக்கிறார்கள்....

பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் இழப்பும் விவசாயத்தில் ஏற்ப்படும் இழப்பும் ஒன்றாக நினைக்க முடியாது! 

ஒரு முறை இழப்பு ஏற்பட்டால் பல முறை வருவாய் கிடைக்கும் தொழில் விவசாயம். 

அந்த வருவாய் கட்டுபடி ஆகவில்லை என்பதுதான் இன்றுள்ள விவசாயிகள் பிரச்சினை! 

ஆனால் பங்கு வர்த்தகம் சிலரைப் பணக்காரர் ஆக்கும் அதே நேரம் ஏராளமானோரைப் படுகுழியில் தள்ளுகிறது என்பது உண்மை! 

இப்படி இருக்க இரண்டையும் ஒன்று என்று யாரும் சொல்ல முடியாது! 

சிலர் தாங்கள் இழக்கவில்லை என்கிறார்கள்!

 இழக்கவில்லை என்று சொல்லும் அதே நேரம் இழக்கின்ற அனேகம் பேருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? 

இது பற்றி விரிவாக விவாதிக்க விரும்புகிறேன் நண்பர்களே! 

பொறுமையுடன் பதில் சொல்ல முடிந்தால் நிறைய ஐயங்கள் உள்ளது பதில் சொல்லித் தெளிவு படுத்தலாம். 

படிக்கும் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்!

எனக்கும் இதில் சிறிய அனுபவம் உண்டு! 

ஆதாவது மக்காச் சோளம் போன்ற தானியங்களையும் தங்கம் வெள்ளி போன்றவற்றையும் பணம் இருக்கும்போது வாங்கி வைத்தால் விலை ஏறும்போது விற்கலாம். கொள்முதல் பண்ணாமல் குறைந்த பணத்தை மார்ஜின் துகையாகச் செலுத்தி வாங்கலாம் விற்கலாம், பொருளைக் கையாள வேண்டியது இல்லை. அதை அதற்கென உள்ள நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் என்று சொன்னார்கள். 

சொன்ன நபர்கள் எனக்கு நெருங்கியவர்களாக இருந்ததாலும் எனக்கு வருவாய் இல்லாத கடினமான காலமாக இருந்ததாலும் முழுக்க ஆராயாமல் இறங்கிவிட்டேன். 

அதன்பின்தான் அதுபற்றிய பாதகமான நிலைமைகளை உணர்ந்தேன். 

அதில் உள்ளோரின் நடவடிக்கைகளையும் கவனித்தேன். 

அனுபவம் கசப்பாக இருந்தது! 

எதிர்மறையாக உணர்ந்தேன்.

நான் எனது அனுபவங்களை வைத்து மட்டும் மதிப்பிடவில்லை ! அதன் அடிப்படைகளையே ஆராய்ந்து பார்த்தேன். 

சூதாட்டத்தில் அடையும் வெற்றிக்கும் இதில் கிடைக்கும் வெற்றிக்கும் வேறுபாடு இல்லை என்பதைக் காலம் கடந்து உணர்ந்தேன்....

ஒ!....சிலர் தாங்கள் இதில் கொஞ்சம் ஆதாயம் அடைந்ததை எவ்வளவு பெருமையாகவும் திறமையாகவும்  நினைக்கிறார்கள்!

ஆனால் அவர்களைப் போன்றவர்கள் மிகக் குறைவே! 

அத்தகையவர்களுள் தாங்களும் ஒருவராக ஆகவேண்டும் என்ற உந்துதல்தான் இந்த வர்த்தகத்துக்கு உள்ளே மக்களைக் கவர்ந்து இழுக்கிறது!

சூதாட்டக் கிளப்பில் சிலர் தோற்பதும் சிலர் ஜெயிப்பதும் தொடர்ந்து நடக்கும். 

தோற்றவர்களும் ஜெயித்தவர்களும் எவ்வளவு உள்ளே கொண்டு வந்தார்களோ அவ்வளவையும் வெளியே கொண்டுபோவதில்லை. 

மொத்தத்தில் குறைகிறது. 

கணிசமாகக் குறைகிறது. 

அந்தக் குறைவு என்பது கிளப் சொந்தக் காரனுக்கு வருவாயாகப் போகிறது. 

தோற்பதும் ஜெயிப்பதும் உறுதி இல்லை. 

கிளப் சொந்தக்காரன் பணக்காரன் ஆவது உறுதி! 

இதுதானே பங்கு வர்த்தகத்திலும் நடக்கிறது? 

அதில் வெற்றியடையும் கனவுடன்தானே பலரும் தோல்வி அடைகிறார்கள்?....

அந்த வெற்றி அடைபவர்களாக பயிற்சியின்மூலம் ஆகமுடியும் என்பதுதான் நிபுணர்களின் மற்றும் ஜெயித்தவர்களின் கருத்து! 

ஆனால் சிலர் ஜெயிக்கவேண்டும் என்றால் பலர் இழக்கவேண்டும் என்ற நிபந்தனையை யாரும் எதுவும் செய்ய முடியாதல்லவா?..

பங்கு வர்த்தகத்தில் எத்தனை கெட்டிக்காரர்கள்  உருவானாலும் அதைவிட பல மடங்கு முதலை இழப்பவர்கள்  அங்கு இருந்துதானே தீரவேண்டும்?....

அது லாபத்துக்கு அடிப்படை நிபந்தனை அல்லவா?

அதுதானே பிரச்சினையே!

சில வெற்றி பெரும் நபர்களை ரோல்மாடல்களாகக்கொண்டு எண்ணற்றவர்கள் இழக்கிறார்கள் என்பதே சோகம்! 

சீட்டு விளையாடியே சம்பாதித்தவர்கள் பலரைப் பார்க்கலாம். 

ஆனால் அவர்களைப்போல் கெட்டிக்காரர்களாக சீட்டு விளையாடி சம்பாதிப்பதைவிட நல்ல வழிகள் எத்தனையோ இருக்கின்றன. 

அதனால் வெற்றி பெற்றவர்கள்கூட அதைத் தங்கள் பிள்ளைகள் தொடர விரும்புவது இல்லை! 

பங்கு வர்த்தகமும் அப்படியே! 

சம்பாதித்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகள் அதில் ஈடுபடுவதைப் பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள். 

வேண்டுமென்றால் தரகர்களாகவோ ஆலோசகர்களாகவோ இருக்க வழிகாட்டுவார்கள்.....

பொதுவாகவே பங்கு வர்த்தகம் ஒரு மனிதனின் அனைத்துப் பண்புகளையும் ஆட்டிப்பார்க்கும் வல்லமை படைத்தது!.

நான் கமாடிட்டி வர்த்தகத்தில் இறங்கியபோது நான் செய்தது தவறு என்று உணரும்வரை எனக்குத் தெரியாது !

காரணம் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்பது மட்டும் அல்ல!

மிகவும் எளிமையானதாக எனது அன்புக்கு உரியவர்களால் அறிவுருத்தப்பட்டிருந்தேன்.

தவறுக்குப் பின்னால் உணர்ந்தேன்.

எனது இழப்பை வைத்து நான் முடிவுக்கு வரவில்லை!

எனது இழப்பு ஏன் ஏற்பட்டது? எந்த இடத்தில் தவறு செய்தோம்? தவறு செய்யாமல் இருந்திருக்க என்ன வாய்ப்பு இருந்தது? தவறு செய்யாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்குமா ? என்று பலவிதமாக ஆராய்ந்தேன் .

நிபுணர்கள் எழுதிய சில புத்தகங்களையும் படித்தேன்.

ஆனால் இதன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தாலும் இந்த வர்த்தகத்தில் வருவாய் உத்திரவாதம் இல்லை, தோல்வி அடைந்து முதலை இழக்கும் பெரும்பாலோரில் ஒருவராக இல்லாமல் வெற்றி பெரும் ஒரு சிலருள் ஒருவராக ஆக முயற்சி செய்யலாம்.

ஆனால் தோற்கும் பலருள் ஒருவராக ஆவதற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்ந்தேன்....

அப்படி நான் நினைத்தது தவறு என்றால் எனது நியாயமான கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்கவேண்டும்!

நண்பர்கள் சொல்கின்ற பயிற்ச்சியின் மூலமும் அதற்கேர்ப்பச் சில பண்புகள் மூலமும் தோல்விகளைத் தவிர்த்து வெற்றி ஈட்டலாம் என்ற  கருத்துக்களை நான் மறுக்கவில்லை!

ஆனால் அது நிபந்தனையற்றது அல்ல!

அந்த நிபந்தனைதான் இதைச் சூதாட்டம் ஆக்குகிறது.

அந்த நிபந்தனை சிலர் வெற்றி அடையப் பலர் பலியாடுகள் ஆகித்தான் தீரவேண்டும் என்பதே!

வெற்றி பெறுபவர்கள் தாங்கள் அடைந்த ஒரு ரூபாய் ஆதாயத்தைத் திறமையின் அளவுகோலாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் லாபம் அடைந்தவர்களும் நட்டம் அடைந்தவர்க்களுமாக இழக்கும் பத்து ரூபாய்களைப் பற்றித்தான் நாம் கவலைப்படுகிறோம் .

அந்த ஒன்பதுரூபாய் இழப்பு வெற்றியாளர்களின் கண்களில் படுவதில்லை என்பதுகூட இயல்பானது. தோல்வி அடைபவர்களும் கண்டுகொள்வது இல்லை! அது சேரவேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேருகிறது! அந்த நிலைதான் இதைச் சூதாட்டம் ஆக்குகிறது!

Monday, July 8, 2013

விவசாயம் ( 56 )

கமலை ஓட்டும் முறை.

நமது முன்னோர்கள் இன்றுள்ளது போல் அறிவியல் சாதனங்கள் வளராத காலத்தில் நிலத்தடி நீரைப் பாசனம் செய்து விவசாயம் செய்வதற்கு கிணறுகளைத் தோண்டி அதன் நீரைக் கமலை என்று சொல்லப்படும் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கும் முறையைப் பயன்படுத்தினார்கள்.

அது எப்படிச் செயல் பட்டது என்பதை இப்போதுள்ள இளம் தலைமுறையினர் யாரும் அறிய மாட்டார்கள்.

அதுபற்றிய விளக்கம்.......

இன்றுள்ளதுபோல் அக்காலத்தில் கிணறுகள் இவ்வளவு ஆழம் கிடையாது.

இருபது அடியில் இருந்து நாற்பது அடிகளுக்குள் இருக்கும்.  அதைவிட ஆழமாக இருந்தால் மாடுகளைக் கொண்டு போதுமான நீரை மேலே கொண்டுவர முடியாது.

அதனால் ஆழம் குறைவான கிணறுகளின் சுற்றுச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் துலை மூலம் மாடுகளைக் கொண்டு நீர் இறைத்தார்கள்.

கிணற்றின் துலை என்பது அடிப்பாகம்  கிணற்றுக்குள் நீட்டியபடி இருக்கும் துளைகள் உள்ள இரண்டு நீளமான கல்பாறை விட்டங்களின்மேல் அமைக்கப்படும் அமைப்பு ஆகும்.

அது குத்துக் கால்கள், தோரணப் பலகை, காதுப் பலகை, கமலை வண்டி (பிரதான உருளை) உதைகால்கள், பண்ணைவாய் உருளை ஆகியவை கொண்ட வலுவான மரத்தாலான அமைப்பு  ஆகும்.

அதில் சால், என்ற இரும்புத் தகரத்தால் ஆன சாதனத்தையும் தும்பி என்ற தோலால் ஆன நீளமான பை போன்ற சாதனத்தையும் கயிறுகளுடன் இணைத்துத் துலை வழியாக மாடுகளைக் கொண்டு தண்ணீர் இறைப்பார்கள்.

தகரத்தால் செய்யப்பட்ட மேல்பகுதி அகலமாகவும் கீழ்ப்பகுதி குறுகலாகவும் திறந்தபடி  உள்ள உருண்டை வடிவப் பாகத்தைச் சால் என்பார்கள். 

அதன் மேல்பாகம் நான்கு பட்டையான இரும்புப் பட்டாக்களால் இணைக்கப்பட்டு உறிபோல் ஒரு இடத்தில் வளையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். 

அதிலிருந்து மேல் நோக்கிப் பெரிய வடக் கயிறு துலையின் உச்சியில் மேல்நோக்கி அமைந்துள்ள பிரதான உருளை வழியாக மாடுகளின் கழுத்தில் பூட்டப்பட்டுள்ள நுகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். 

சாலின் அடிப்பகுதியில் உள்ள குறுகலான திறந்தபாகம் நீளமான தோல்பையின்  ஒரு பக்கத்துடன்  இணைக்கப்பட்டிருக்கும் .

தும்பி என்று சொல்லப்படும் அதன் மறு முனையும் திறந்தும் மேல் நோக்கியும் இருக்கும். 

மேல் நோக்கிய அதன் நுனியில் தோல் பட்டையுடன் இணைக்கப்பட்ட  வடத்தைவிட சற்று கனம் குறைந்த ஒரு வலிமையான  வால் கயிறு மேல்நோக்கிச் சென்று கிணற்றின் விளிம்பும் பண்ணை வாய் என்று சொல்லப்படும் வாய்க்கால் துவங்கும் இடமும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள பண்ணை வாய் உருளை வழியாக மாடுகள் பூட்டப்பட்ட நுகத்தின் மையத்துக்குச் செல்லும். 

இப்போது மாடுகள் பின்னோக்கி நகர்ந்து துலையை நெருங்கும்போது தும்பியும் தோலும் கிணற்றினுள் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு இருக்கும். 

அப்போது கமலையோட்டும் நபர் வால் கயிற்றைப் பிடித்து கொஞ்சம் இழுத்தால் கிணற்றினுள் தண்ணீருக்குள் சால் மூழ்கி சாலும் தும்பியும் நீரால் நிரம்பி விடும் . 

வால் கயிற்றை தளர்த்தினால் மீண்டும் சாலும் தும்பியும் சம நிலைக்கு வந்து விடும்.

அதனால் தண்ணீர் வெளியேறாமல் உள்ளேயே இருக்கும். 

மாடுகளை வடத்தின்மேல் அமர்ந்தவண்ணம் ஓட்டினால் மாடுகள் முன்னோக்கிச் செல்லும். அப்போது தண்ணீருடன் சாலும் தும்பியும் மேலே வேகமாக வரும். 

சால் துலையை நெருங்கும் போது தும்பி சற்றுக் கீழே இருக்கும் பண்ணை வாய்க்குள் இழுக்கப்படும் . 

அப்போது சாலுக்கும் தும்பிக்கும் இருந்த சமநிலை மாற்றம் அடைவதால் அவற்றுக்குள் இருக்கும் தண்ணீர் தும்பியின் அடிப்பாகம் வழியாக வேகமாக பண்ணை வாய்க்குள் நுழைந்து வாய்க்கால் வழியாக நிலத்துக்குப் போகும்.

மீண்டும் மாடுகள் பின் நோக்கி நகரத் துவங்கினால் மீண்டும் தண்ணீரை அள்ளிவர சாலும் தும்பியும் கிணற்றுக்குள் போகும். 

இதுதான் கமலை ஓட்டுவது. 

ஒரே கிணற்றில் இதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட துலைகள் அமைத்து ஆட்களையும் மாடுகளையும் நிறைய வைத்துத் தண்ணீர் இறைத்து நிறைய நிலத்தில் விவசாயம் செய்வார்கள்.

இதுதான் அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் கமலை எனும் முறையில் மாடுகளைக் கொண்டு கிணற்று நீரைப் பாசனம் செய்த முறை ஆகும். 

Saturday, July 6, 2013

எனது மொழி (142)

சாதியும் தேவையும்..... 

ஒரு கொடுமையான உண்மை என்ன வென்றால் எந்த ஒரு சாதியைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கும் கீழ் என்று நினைக்கும் சாதிகளைச் சேர்ந்த மக்களுடன் சகஜமாக உறவு கொண்டாடத் தயாராக இல்லை என்பதே! 

இதன் காரணமாக  கடிக்கும் நாய்களை ஒன்றை ஒன்று கடித்துக்கொள்ளாமல் கட்டிவைத்ததைப் போன்ற இழிவான நிலையில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

 அதனால் ஒற்றுமை என்பது மக்கள் அறியாத ஒன்றாகவும் ஒன்றை யொன்று மோதிக்கொள்ளும் குழு ஒற்றுமையாக மட்டும் உள்ளது. 

அதனால் சாதிகளைப் பிரித்துக் காட்டும் ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் எதிராக ஈவிரக்கமற்ற தாக்குதல் தொடுக்கவேண்டும். 

அரசுகள் அதற்கு ஏற்ப சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும்! 

அப்போதுதான் அனைவரும் ஒன்றுபட்ட தன்மானமுள்ள மக்களாக வாழ முடியும்!

Thursday, July 4, 2013

தத்துவம் ( 17 )

மொழியின் வீழ்ச்சி!

மொழி என்பது கற்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் வாழ்வதற்குமான ஒரு சாதனம்! 

அதுவே அறிவாகிவிடாது! 

ஆனால் நம் நாட்டில் அதை அறிவுக்கும் தகுதிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுவதால் தாய்மொழியை விட ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது! 

மொழிகளில் ஏற்றத் தாழ்வு இல்லை! 

அதில் எந்த மொழி மக்களின் வாழ்வில் அதிகப் பயனுடையதாக இருக்கிறதோ அது வாழும் வளரும். 

அப்படி அல்லாதவை மெல்ல மெல்லத் தேய்ந்து மறையும்! 

அதற்கு எந்த மொழியும் விதிவிலக்கு அல்ல! 

அப்படி நடக்கக் கூடாது என்றால் அந்த மொழி மக்களின் முழுப் பயன்பாட்டில் இருக்க வேண்டும்! 

Wednesday, July 3, 2013

எனது மொழி ( 141 )

ஏன் கூடாது?

ஆன்மிகத்தின் அடிப்படையாக விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என்று உலகில் எங்காவது ஆலயம் உள்ளதா?

உலக மக்கள் அனைவரும் போற்றிப் பின்பற்றும் மார்க்கம் ஏதாவது உலகில் உள்ளதா?

ஏன் இதைச் சிந்திக்க மறுக்க வேண்டும்?

கடந்த காலத்தில் தலைமுறை தலைமுறையாக நமது மனங்களில் விதைத்து வளர்ந்துள்ள தவறான நம்பிக்கைகளை அகற்றி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும்  அறிவியலுக்கு முரண்படாத புது ஆன்மிகக் கோட்பாட்டை நிறுவுவதே சரியான வழி!

அதைவிட்டு ஆன்மிகம் என்ற பெயரால் சமூக ஒற்றுமையை நார் நாராகக் கிழித்துக்கொண்டிருப்பது அல்ல ஆன்மிகம்! 

Monday, July 1, 2013

தத்துவம் ( 16 )

மறு பிறப்பு!

இன்னும் உலகில் மறு பிறப்பை நம்புபவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களில் அறிவியலில் மேம்பட்டவர்களும் இருக்கிறார்கள். 

அனாலும் அவர்கள் சில விஷயங்களைக் காண மறுக்கிறார்கள். 

 மனித உடம்பு நிலையானதல்ல. 

ஒவ்வொரு வினாடியும் சிதைந்து கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது 

அப்படியானால் ஒரு ஜென்மத்தில் வாழும் மனிதனாக எந்த வினாடியில் வாழும் மனித உருவத்தைச் சொல்வது?

 உலகத்தில் உள்ள அத்தனையையும் அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டால் எலெக்ட்ரான்களும் புரோட்டான்களுமாக அல்லது இரண்டும் சேர்ந்த நியூட்ரான்களும் சேர்ந்த கலவையாகத்தான் இருக்கும். 

இவற்றின் குறிப்பிட்ட ஒரு பகுதி என்றும் ஒருமனிதனின் உடம்பில் நிரந்தரமாகத் தங்கி இருப்பதில்லை! ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான முறை மாறி அமைகிறது. 

அப்படி அமைவதுகூட மனிதனுக்கு மனிதன் மட்டும் என்று இல்லை! அதைவிட பல்லாயிரக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மடங்கு வேறு உயிரினங்களுடனும் உயிரற்ற ஜடப்பொருட்களுடனும் நடக்கிறது!

அப்படியிருக்க எதை முன் ஜென்மம் பின் ஜென்மம் என்று கூறுகிறார்கள்?

அதுமட்டுமல்ல,

 ஒரு மனிதனின் மிக நுண்ணியமான ஒரு பகுதிதான் அவனுடைய சந்ததிகளாக உரு மறுகின்றது. 

ஏற்கனவே வாழ்ந்த ஒரு மனிதனின் தொடர்ச்சியாகத்தான் அடுத்து வரும் சந்ததிகளும்  இருக்கும்.

நிரந்தரமாகத் துண்டிக்கப்படுவது இல்லை!

அதனால் ஒரு மனிதனின்  ஜென்மம் அல்லது பிறப்பு  என்பது வேறு மனித வடிவங்களில் பல கிளைகளாக நீண்டுகொண்டே போவதுதான் மனித உயிரியல் வாழ்க்கை. 

மற்ற அனேக உயிரினங்களிலும் இந்த முறை நிலவுகிறது. 

புதிதாகவும் தோன்றுகிறது.

இதில் தனித் தனியான மனித ஜென்மங்கள் என்று எதில் துவங்கி எதில் முடித்துக் கணக்கிடுவது?....

சிந்திக்க வேண்டாமா?...

அறிவியல் கற்றவர்கள் அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளா விட்டால் அவர்களுடைய அறிவாற்றல் மூட நம்பிக்கைகளுக்குள் மூட்டை கட்டப்பட்டு விடும்! 

அதுதான் இன்று உலகில் நடக்கிறது! 

அது சரியா?
---------------------------------------------------------

இதுபற்றிய உரையாடலின்போது வெளியான எனது கருத்துக்கள்......

மறு பிறவி பற்றிக்  காலங்காலமாகச் சொல்லப்படும் விளக்கங்கள் பல.

நமது வாழ்க்கை அனுபவங்கள் இத்தகைய கூற்றுக்களை மறுக்கின்றன.

காரணம் உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமாக இருந்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டதான ஒரு கண்ணோட்டத்தில் உருவானது!

மற்ற உயிரினங்களின் பாத்திரம் கண்டுகொள்ளப்படுவது இல்லை.

ஆனால் பூமியில் வாழும் எந்த உயிரினமும் மனிதனைவிடத் தாழ்ந்தது அல்ல.

தவிர, மனிதன் நாகரிகம் அடையாத காட்டுமிராண்டியாக இருந்தபோதும் , அதற்கு முன் பரிணாம வளர்ச்சிக்கு முந்தைய குரங்கினங்களில் ஒன்றாக இருந்தபோதும் , அதற்கும் முன் ஆரம்பகால உயிரினங்களில் ஒன்றாக இருந்தபோதும் , அதற்கும் முன் உயிரினங்கள் தோன்றியும் தோன்றாமலும் இருந்த பொதும், ஒன்றும் இல்லாமல் வெறும் நெருப்புப் பந்தாக இருந்தபோதும் இந்தக் கோட்பாட்டின் நிலை என்ன?

எல்லாமுமாக இருக்கும் பரம்பொருள், அவற்றுள் அடங்கியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற உட்பொருள் இவை இரண்டைத் தவிர வேறு என்ன இருந்தன?

தோன்றிய கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒன்றான மனிதன் தன் வரலாற்றின் கடைசிக் கட்டத்தில் நம்பிய பல்லாயிரக்கணக்கான கருத்துக்களில் ஒன்றுதானே இந்த மறு பிறவிக் கோட்பாடு?

அது எப்படி அடி முடி தெரியாமலே இவ்வளவு நம்பத் தகுந்ததாக ஆயிற்று?

அடிப்படையான ஆன்மிகத்தைத் தவிர மற்ற இதுபோன்ற நம்பிக்கைகள் எல்லாம் உண்மைக்கும் அறிவுக்கும் நடைமுறைக்கும் முரணாகத் தெரியவில்லையா?
----------------------------------------------------------------------------------------------

அனைத்து மக்களுக்கான உயர்ந்த வழிகாட்டு நெறிகளே ஆன்மிகம்!

அதை மெய் என்று நிரூபிப்பது அறிவியல்!

அறிவியல் சிந்தனைக்கு முரணான ஆன்மிகமும் அனைத்து மக்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் எதிரான அறிவியலும் பயனற்றவை!

ஆகையால் மூடநம்பிக்கைகள் அற்ற அனைத்து மக்களுக்கும் நன்னெறி காட்டும் நடைமுறை அம்சங்களே உயர்ந்த ஆன்மிகம் ஆகும்!

அத்தகைய அனைதுமக்களின் அனைத்து உயிர்களின் ஆன்மிகத்தினபடி மறுபிறப்புக் கோட்பாடு தவறானது.

உண்மை நடப்புகளுக்கு மாறானது. அதற்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இல்லை. அது வெறும் தவறான நம்பிக்கையே!
----------------------------------------------------------------------------------------------

ஒவ்வொருவரும் அனைத்து மக்களையும் நேசிப்பதும் அனைத்து மக்களும் ஒவ்வொருவரையும் நேசிப்பதுமே ஆன்மிகத்தின் அடிப்படை ஆகும்.

அதை விட்டுச் சடங்கு சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மையான ஆன்மிகக் கோட்பாடுகளை உதாசீனம் செய்வதுதான் ஆன்மிகம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

அது மக்களிடையே வேற்றுமையையும் கசப்புணர்வையும் வளர்கிறது.

அதைத் தவிர்த்து நன்னெறி பற்றிச் சிந்திப்பது அனைவரின் கடமை ஆகும்.
------------------------------------------------------------------------------------------------

இறைவன்

கடவுள்நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் பக்திமான்கள் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்

மதவழிப்பட்ட ஆச்சாரம் நிறைந்தவர்கள் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

சதா கடவுள் சிந்தனை வடிவாய் இருக்கும் துறவிகள் என்றும் தாங்களும் சொல்லிக் கொள்கிறார்கள். பிறரும் நம்புகிறார்கள்.

பலவிதமான வேடங்களையும் போட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால் பல்வேறு வகையான இவர்கள் அனைவரும் நடைமுறைவாழ்வில் அப்படி இல்லை!

அவர்கள் போற்றும் பரம்பொருளுக்கு அல்லது இறைவனுக்கு ஏற்புடைய குணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

பெரும்பாலும் இவர்களின் எண்ணமெல்லாம் இறைவனுக்குப் பதிலாகப் பணத்தையும் பொருளையும் பதவியையுமே சுற்றிவருகின்றன.

உண்மையான ஆன்மிகத்தின் உயர்பண்புகளை உதாசீனப்படுத்துவதால் சாராம்சத்தில் ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மிகப் பெரும்பாலோர் கடவுள் நமபிக்கை அற்றவர்களே!

ஆம்! இறைவன் என்று சொல்லிக்கொண்டே இறைநம்பிக்கை இல்லாமல்தான் வாழ்கிறார்கள்.
http://www.drumsoftruth.com/2012/06/37.html

இந்த நிலையில் இவர்கள் சொல்லும் மறுபிறவி உட்படப் பல கோட்பாடுகள் எப்படி நம்பத் தக்கவை? அவையெல்லாம் அடிப்படை ஆன்மிகத்துக்கு எதிரானவை, மக்களைக் குழப்பக்கூடியவை , எமாற்றக்கூடியவை என்று ஏன் அறிவாற்றல் மிக்கவர்கள் உணரக்கூடாது?
-------------------------------------------------------------------------------------------

அறிவியலும் அனைத்தையும் அறிந்து விடவில்லை!

இன்னும் அறியவேண்டியவை ஏராளமாக உள்ளன.

காலமும் தூரமும் பற்றி ஆன்மிகம் , அறிவியல் இரண்டுமே முழுமையாக அறிந்திருக்க வில்லை.

அப்படி இருக்க ஒன்றைவிட ஒன்றைவிட ஒன்று மேலானது அல்ல.

பிரபஞ்ச மற்றும் உயிரியல் வாழ்வு பற்றிய இரு வேறு பார்வைகள். அவ்வளவே!

ஆனால் ஆன்மிகம் என்ற பெயரால் வழக்கில் இருக்கும் மூட நம்பிக்கைகளைத் தவிர்த்து அடிப்படைக் கோட்பாட்டில் அறிவியலுடன் இணைந்து செயல்பட்டால் ஆன்மிகம் தத்துவமாகவும் அறிவியல் செயல்பாடாகவும் இருக்கும்.

அதுதான் மனித வாழ்வுக்கு உகந்தது!
------------------------------------------------------------------------------------------------

அறிவியலையும் ஆன்மிகத்தையும் சரியான பொருளில் ஆராய்ந்தால் அதன் ஒற்றுமை விளங்கும் அப்படி இல்லாததால்தான் எதிரும் புதிருமாக மோதவிட்டு சேதப்பட்டுக்கொண்டுள்ளோம்!.

அறிவியல் என்றால் என்ன? ஆன்மிகம் என்றால் என்ன என்று முதலில் தெளிவடைய வேண்டும். இல்லாவிட்டால் நல்லவர்க்குள்ளும் ஒத்த கருத்து ஏற்படாது!

இன்று ஆன்மிகம் மக்கள் அறியாத ஒன்றாகவும் அறிவியல் நாம் வாழும் உலகைச் சூறையாடும் ஒன்றாகவும் மட்டுமே நடப்பில் உள்ளது!மொத்தத்தில் இரண்டின் பெயராலும் உலகம் சீரழிந்துகொண்டுள்ளது என்பதுதான் உண்மை!
---------------------------------------------------------------------------------------

மனித வாழ்வில் உயர்நிலையை அடைய தேவையான வழிகாட்டுதல் மூட நம்பிக்கைகள் அற்ற ஆன்மிகமாக இருத்தலே பொருத்தமானது!

மலையளவு மூடநம்பிக்கைகளை வைத்திருக்குமளவு ஆன்மிகத்தின் சிறப்பை அறியவே முடியாது! ஆன்மிக வேடம் மட்டுமே போட முடியும்!...அதனால் என்ன பயன்?
----------------------------------------------------------------------------------------

ஏன் கூடாது?

ஆன்மிகத்தின் அடிப்படையாக விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என்று உலகில் எங்காவது ஆலயம் உள்ளதா?

உலக மக்கள் அனைவரும் போற்றிப் பின்பற்றும் மார்க்கம் ஏதாவது உலகில் உள்ளதா?

ஏன் இதைச் சிந்திக்க மறுக்க வேண்டும்?

கடந்த காலத்தில் தலைமுறை தலைமுறையாக நமது மனங்களில் விதைத்து வளர்ந்துள்ள தவறான நம்பிக்கைகளை அகற்றி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அறிவியலுக்கு முரண்படாத புது ஆன்மிகக் கோட்பாட்டை நிறுவுவதே சரியான வழி!

அதைவிட்டு ஆன்மிகம் என்ற பெயரால் சமூக ஒற்றுமையை நார் நாராகக் கிழித்துக்கொண்டிருப்பது அல்ல ஆன்மிகம்!

http://www.drumsoftruth.com/2013/07/141.html
----------------------------------------------------------------------------------------

உலகில் நல்லவிஷயங்களை வாயளவில் சொல்வதோடு நடைமுறையில் தகாத நெறிகளைப் பின்பற்றும்படி மக்களைத் தூண்டும்  வேலையைத்தான் மதங்கள் செய்கின்றன.

இப்படிப்பட்ட மதங்கள் தேவைதானா?

அவை சொல்லும் அத்தனை சங்கதிகளும் உண்மைதானா?

அப்படிப் புறம் தள்ளவேண்டிய சங்கதிகளில் ஒன்றுதானே மறுபிறவிக் கோட்பாடு?

மனிதன் வாழ்வில் தான்படும் துன்பத்துக்கு காரணமான சமூக அடித்தளத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த ஏமாற்றுப் பேர்வழிகள் உருவாக்கியதுதானே மறு பிறவிக் கோட்பாடு?

இப்பிறப்பின் பலனை அடுத்தபிறப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று எத்தனைபேர் உலகில் நம்பி வாழ்கிறார்கள்?

அப்படி உலகில் ஒருவரும் நடைமுறையில் நம்பாத ஒரு பொய்யை ஏன் மனதளவில் நியாயப்படுத்திப் போலி வாழ்வு வாழவேண்டும்?
-----------------------------------------------------------------------------------------------