ss

Thursday, September 19, 2013

விவசாயம் ( 64 )

சாதனை படைத்த வண்டி.....

நண்பர்களே! 

இந்தப் படத்தில் உள்ளது இரட்டை மாட்டு வண்டி.

இதுவரை பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளில் இதை விடச் சிறந்த வண்டி வேறொன்றும் இல்லை என்பது எனது அனுபவம்....

 கட்டை வண்டி என்று சொல்லக்கூடிய வண்டிதான் காலங்காலமாகப் புழக்கத்தில் இருந்தது. 

அதைக்கொண்டுதான் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விவசாய வேலைகளையும் சரக்குப் போக்குவரத்தையும் செய்தார்கள். 

அந்தக் கால கட்டங்களின் தேவைக்கும் இருந்த பாதை வசதிக்கும் கட்டை வண்டி மிகவும் ஏற்றதாக இருந்தது. 

 வண்டியின் தரத்தை வைத்து அதிக பட்சம் ஒண்ணேகால் டன் எடையுள்ள பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொர இடத்துக்குக் கொண்டு செல்லலாம். 

அந்த வண்டி அதிக பட்சம் மரத்தைக் கொண்டும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அச்சு, பட்டா, கும்பக்கட்டு , அச்சாணி கயிறு கட்டும் வளையங்கள் போன்றவை இரும்பைக் கொண்டும் செய்யப்பட்டன. 

ஆனால் அந்த வண்டிகள் அடிக்கடி தேய்மானம் அடைவதும் உடைவதுமாக பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். 

அதனால் எல்லா ஊர்களிலும் வண்டிப் பட்டறைகள் அக்காலத்தில் தவறாமல் இருக்கும். 

ஆனால் காலம் மாற மாற அறிவியல் வசதிகளும் பாதை வசதிகளும் பெருகப் பெருக கட்டை வண்டிகளில் மாற்றம் தேவைப்பட்டது. 

அதிக பாரம் ஏற்றக் கூடியதாகவும் அதிகநாள் உழைக்கக்கூடியதாகவும் பராமரிப்பு வேலைகள் அதிகம் இல்லாததாகவும் ஆன வண்டிகள் தேவைப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக டயர் வண்டி என்று சொல்லப்படும் வேறு விதமான வண்டிகள் உருவாக்கப்பட்டன.

அவை பெரும்பாலும் இரும்பையும் அடிப்பலகை , நுகம் போன்றவை மட்டும் மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்டன. சக்கரங்கள் டயர்கள் இணைக்கப்பட்ட நவீன சக்கரங்களாக அமைந்தன. 

அச்சின்மீது பேரிங்குகள் பொருத்தப்பட்டன. 

அப்படி மாற்றம் செய்யப்பட்ட டயர்வண்டிகளில் மிகவும் சிறப்பானது இந்த வகை வண்டிகள் ஆகும்.

இதில் நான்கு டன்கள் வரை பாரம் ஏற்றிச் செல்ல முடியும். 

இழுக்கும் மாடுகளின் இழுவைத்திறன் சிறப்பாகப் பயன்படுகிறது.

பராமரிப்பு செலவு என்பதே சொல்லும் அளவில் கிடையாது. 

அவ்வப்போது காற்று அடிப்பதும் வருடக் கணக்கில் ஒரு தடவை டயர் மாற்றுவதும்தான் முக்கியமான பராமரிப்பு வேலைகள். 

மற்றபடி பெரிதாக இருக்காது. அவ்வப்போது பெயிண்ட் அடித்தால் போதும். 

இந்த வண்டிகள் சரக்குப் போக்குவரத்துக்கும் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு கொண்டு செல்லவும் விவசாய நிலங்களுக்கு குளத்து வண்டல்மண் அடிக்கவும் மகத்தான சேவை செய்தன.

இது அறிமுகம் ஆகி ஐம்பது வருடங்களில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 

ஆனால் பசுமைப்புரட்சிக் காலத்தில் இயந்திரப் பயன்பாடும் வேதி உரம், பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் வந்த பின்னால் மனித உழைப்பும் கால்நடை உழைப்பும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்களின் உழைப்புத் திறன் மாற்றியமைக்கப்பட்டு இயந்திரங்களைச் சார்ந்ததாக மாற்றப்பட்டது. 

அதனால் கூடுதல் உழைப்புத் திறன் தேவைப்பட்ட மாட்டு வண்டி பயன்பாடு, மாட்டு உழவுப் பணி இவையெல்லாம் பழங்கதையாகி வருகின்றன. 

இதன் விளைவாக அற்புதமான இந்த டயர் வண்டிப் பயன்பாட்டை மூன்று சக்கர , நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் சுலபமாகத் துடைத் தெரிந்து விட்டன. 

காய்கறிச் சந்தைகளில் இந்த டயர் வண்டிகள் நூற்றுக் கணக்காக குவிந்திருந்தது போய் இப்போது கண்களில் காண்பதே அரிதாகப் போய் விட்டது! 

அந்த அளவு மோட்டார் வாகனங்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன. 

இந்த டயர்வண்டிகளுக்கு நேர்ந்த கதிதான் நாட்டுமாடுகளின் அழிவுக்கும் ஒருபகுதி காரணம் எனலாம்.

காரணம் நாட்டு மாடுகள் உழைப்பின்மூலம்தான் விவசாயிக்கு அதிகப் பயன் கொடுக்க முடியும். 

ஆனால் இந்த வண்டிகள் புழக்கம் மற்றும் மாடுகளைக் கொண்டு உழவு செய்யும் பழக்கம் ஒழிந்து வருவதால் நாட்டுமாடுகளின் பயன்பாடும் குறைந்து அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த கட்டை வண்டிகளின் பயன்பாட்டை இந்த டயர் வண்டிகள் வந்து முடிவுக்குக் கொண்டு வந்தன. 

ஆனால் அப்பேர்ப்பட்ட சாதனை படைத்த இந்த டயர்வண்டிப் பயன்பாட்டை ஐம்பதே ஆண்டுகளில் சிறுரக மோட்டார் வாகனங்கள் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டன. 

இந்த வண்டி மறைந்து வருவது மிகவும் கவலைக்குரியது ஆகும். 

காரணம் இவை இல்லாமல் நாட்டு மாடுகள் இல்லை! 

ஜல்லிக் கட்டும் ரேக்ளா பந்தயமும் இதில் ஈடுபாடுள்ள சிலர் இருக்கும் வரை இன்னும் சில ஆண்டுகள் இருக்கலாம். 

ஆனால் அவை மட்டும் நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதற்கான நிரந்தர வழிகள் அல்ல! 

நாட்டுமாடுகள் காக்கப்படவேண்டுமானால் அவற்றைப் பயன்படுத்தும் வண்டி வாகனங்கள் புழக்கத்தில் இருக்க வேண்டும். 

அப்படி இல்லையேல் இந்த வண்டிகளுடன் சேர்ந்து நாட்டு மாடுகளும் மறைந்து விடும்!....

மாட்டுக்கு வால் எந்தப்பக்கம் என்று கேட்பவர்கள் எல்லாம் இக்காலத்தில் அதிகமாக நாட்டு மாடுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். 

அவையெல்லாம் கவைக்கு உதவாத கற்பனைகளே! 

உண்மையாகவே நாட்டுமாடுகள் நீடிக்கவேண்டுமானால் ......

மாடுகளைக் கொண்டு உழ வேண்டும்! 

இந்த வண்டிகளின் எண்ணிக்கை முன்போல அதிகரிக்கவும் பயன்படவும் வேண்டும். 

அதற்கேற்ற முறையில் வேலையாட்களும் கிடைக்க வேண்டும்....

அதற்கு வாய்ப்பு உள்ளதா?....


1 comment:

  1. இன்றைக்கு சிறிது சிரமம் தான் ஐயா... ஆனால் பயன் முழுமையாக புரிந்தவர்களிடம் மட்டும் இவை உண்டு...

    ReplyDelete