ss

Wednesday, November 27, 2013

உணவே மருந்து ( 76 )

பாரம்பரிய மருத்துவங்கள்...

பாரம்பரிய மருத்துவங்களின் மகத்துவத்தை உணர்ந்து அவற்றுக்குப் புத்துயிர் ஊட்ட நினைப்பது நியாயமே! 

அவசியமும் கூட! 

ஆனால் அதற்கு முன்னதாக அவை ஏன் வலுக்குன்றி மறையத் துவங்கின?

ஆங்கில மருத்துவம் எதனால் முதன்மையான இடத்துக்கு வந்தது?

 என்பதை ஆராய வேண்டும். 

பாரம்பரிய மருத்துவ முறைகள் தேவைக்குப் போதுமானதாக இல்லாததும் நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வந்ததும்தான் ஆங்கில மருத்துவம் இந்த அளவுக்கு வளர்ந்ததர்க்குக் காரணங்கள் ஆகும். 

அதனால் பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்து வழிகளிலும் தங்களை வளர்த்துக் கொள்வதும் நம்பகத் தன்மையைப் பெறுவதுமே சரியான மதிப்பைப் பெறுவதற்கு வழிகள் ஆகும்! 

அதை விட்டு விட்டு ஆங்கிலமருத்துவத்தை வசைபாடுவது என்பது ஒரு மருத்துவம் ஆகாது!....

ஆனால் தங்களை வளர்த்துக்கொள்வதற்குப் பதிலாக ஆங்கில மருத்துவத்தின் குறைகளை பூதாகரமாகக் காட்டி மக்களைப் பயமுறுத்துவதைத் தங்கள் முக்கியக் கடமையாகச் செய்கிறார்கள்.

காரணம் அவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் மிகவும் முயற்சி செய்ய வேண்டும்! 

அனால ஆங்கில மருத்துவத்தின் மேல் ஏற்றப்படும் அதிருப்தியாலும் இயலாமையாலும் ஒதுங்க நினைக்கும் மக்களை அப்படியே தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது எளிதாக நினைக்கிறார்கள்! 

அது நியாயமான செயல் அல்ல! ஏமாற்று வேலை! 

ஏமாற்று வேலைகளால் என்றும் எந்தத் துறையும் வளர்ந்து விட முடியாது! 

இதை ஏன் உணர மறுக்கிறார்கள்?

உணர்வது உண்மையானால் பாரம்பரிய மருத்துவத் துறைகளை மீண்டும் புத்துயிர் ஊட்டி வளர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கலாம். 

அதற்கு உதவிசெய்ய அரசுகளை வற்புறுத்தலாம்!

பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ அரசுகள் முடிவு செய்யலாம். அனைத்து ஆய்வுகளுக்கும் மருந்துகளுக்கும் அரசுகள் தகுந்த திட்டங்கள் வகுத்துச் செயல் படுத்தலாம்.

அதை விட்டு, மக்களை ஏமாற்றுவதில் குறியாக இருப்பது நல்ல பண்புள்ள செயல்முறை ஆகாது!...

அப்படிச் செய்கின்ற போலி ஆசாமிகளை இனங்கண்டு தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்!...

அதுதான் சரியான வழி! 


Monday, November 25, 2013

தத்துவம் ( 21 )

வாழ்வும் மரணமும்....

மனிதனின் பிறப்பில் இருந்து மரணம் வரை  ஒவ்வொரு வினாடியும் அழிந்துகொண்டும் தோன்றிக்கொண்டும் இருக்கிறான். 

ஆதாவது தோன்றுதல் என்பதும் மறைதல் என்பதும் வாழ்நாள் முழுக்க இடைவிடாமல் நடக்கிறது. 

உயிர் பிரியும்போது ஆதாவது இயக்கம் நிற்கும்போதுதான் தோன்றுதலும் மறைதலும் நிற்கின்றன. 

இந்த மூன்றுக்கும் அப்பால் மரணத்துக்குப் பின்பு உடம்பு மண்ணுக்கோ நெருப்புக்கோ இறையாதல் தவிர வேறு என்ன இருக்கிறது?... 

ஆனால் என்னென்னவோ இருப்பதாகக் காலம் காலமாகக் கதைகள் சொல்லப்பட்டே வருகின்றன! 

உண்மையில் அந்தக் கதைகள் ஆன்மிக சிந்தனைகளே அல்ல! வெறும் நம்பிக்கைகளே! 

அவற்றில் பெரும்பாலானவை அபத்தமானவை! 

ஆன்மிகத்துக்கு எதிரானவை!....

விவசாயம் ( 70 )

என்ன செய்யவேண்டும்?....


மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தில் விவசாய விளைவிளைபொருட்களுக்ககச் செலவிடப்படும் சதவிகிதம் உயர்ந்து மற்ற தேவையற்றவை குறைய வேண்டும். 

அதைவிட்டு விவசாயிகளுக்கு வேறு கதிமோட்சம் இல்லை! 

முன்னர் நிலைமை அப்படித்தான் இருந்தது.

ஆனால் அத்தகைய கண்ணோட்டம் உள்ள அரசுகளாக நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை!....

முதலில் நாம் ஒன்றை உணரவேண்டும். 

ஆதாவது இன்றைய நிலையில் விவசாயி எந்த உற்பத்தியைப் பெருக்குகிறானோ நிச்சயம் சந்தையில் அது அவனது தலையில் கல்லைப் போடும். 

அனைத்து விளைபொருட்களின் அதிக உற்பத்தியும் அவனுக்கு அந்த அனுபவத்தைத்தான் கற்பித்திருக்கிறது. 

ஆனால் செலவுகள் மட்டும் அதிகரிக்கும்.....

இந்த விஷ வலையில் இருந்து விவசாயி மீளவேண்டும்.....

விவசாய விளைபொருட்கள் அனைத்தையும் நியாயமான விளை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்யவேண்டும். 

அரசே மக்களுக்கு விநியோகமும் செய்யவேண்டும். 

தேவைக்கு அதிகமாக விளைந்தாலும் அதை அரசு நிர்ணய விலைக்குக் கொள்முதல் செய்து அவற்றை மதிப்புக் கூட்டி இருப்பு வைத்துப் பற்றாக் குறையான காலங்களில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். 

அதற்கான தொழில் மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் துவங்க வேண்டும். 

அதற்கும் மேல் அதிகமாக இருப்பதை ஏற்றுமதி செய்ய வேண்டும். 

அதனால் கிடைக்கும் வருவாய் அல்லது இழப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்...

இதை மிக நேர்மையாகச் செய்யும் அரசுகள் இருந்தால் அல்லாமல் விவசாயிகள் உருப்பட வழி இல்லை. 

ஆனால் விவசாயிகள் தங்களின் போராட்ட நடவடிக்கையின்மூலம் அரசுகளை நிர்ப்பந்திக்க முடியும்.

ஆனால் அதற்கு அனைத்து விவசாயிகளையும் ஒன்று படுத்தும் நேர்மையான தலைமையில் ஒரு இயக்கம் உருவாக வேண்டும்....

Wednesday, November 20, 2013

விவசாயம் ( 69 )

மாடுகளின் ஆரோக்கியம்....

மனிதன் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் நல்ல உணவுகளை உட்கொள்ளவேண்டும். நன்கு உழைக்க வேண்டும் . அல்லது உடல்பயிற்சி செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் கண்ட நோய்கள் வரும் என்று அனைவர்க்கும் தெரியும்!

ஆனால் இது கால்நடைகளுக்குப் பொருந்தாதா?

பொருந்தும் என்றால் அவை நலமாக இருக்கவேண்டும் என்றால் நல்ல இயற்கையான தீனி தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

அவற்றை உழைப்பில் ஈடுபடுத்த வேண்டும். அல்லது மேய்ச்சல்காடுகளில் திரிய விட வேண்டும். 

அப்படி எல்லாம் இல்லாமல் இயற்கைக்கு மாறான ஆலைத் தயாரிப்பு தீவனங்களைப் போடுவதும் ஒரே இடத்தில் கட்டிவைத்து மேலே தீனிபோட்டால் கீழே பால் கரக்கக்கூடிய இயந்திரமாக வளர்ப்பதும்  நியாயமா?

அப்படிச் செய்வதால் அவற்றுக்கு எதிர்ப்பு சக்தியே இல்லாமல் நோய்கள் வருவது தவிர்க்க முடியாதல்லவா?....

உணவே மருந்து ( 75 )

எப்படி இருக்க வேண்டும்!

நண்பர்களே!

இயற்கை உணவு தயாரிக்க சமையல் உணவுகளைப் போன்ற இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற செய்முறை இல்லை!...

நாம் தயாரிக்க விரும்பும் உணவில் சேர்கும் பொருட்கள் சுவையாக இருக்கவேண்டும்.

பெரும்பாலும் இயற்கையாக இருக்கவேண்டும்.

எண்ணை சேர்ப்பதோ தாளிப்பதோ இருக்ககூடாது.

எதை எதை எந்த முறையில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நமது சொந்த சிந்தனையைக் கொண்டு அறியவேண்டும்.

காய்கனிகள், பழச் சாறுகள், கிழங்குகள், முளைக் கட்டிய தானியங்கள், தேன், நாட்டுச் சர்க்கரை  இவற்றைக் கொண்டு காரமாகவும் இனிப்பாகவும் எண்ணற்ற வகைகள் கிடைக்கும்!

அவற்றில் தேங்காயின் பங்கும் வாழைப் பழங்களின் பங்கும் அதிகமாக இருக்கும்.

நாமும் அனுபவிக்கலாம். மற்றவர்களுக்கும் சொல்லலாம்.

அனைவரும் முயற்சி செய்யலாமே!....

Tuesday, November 19, 2013

உணவே மருந்து ( 74 )

தகுதிகள்!...

தற்பொழுது நவீன அலோபதி மருத்துவத்தைத் தாக்கு தாக்கென்று தாக்குவதை ஒரு கடமையாகவே சிலர் செய்து வருகிறார்கள். 

அவர்களில் பெரும்பாலோர் அலோபதிக்கு மாற்றாகப் பயனற்ற முறையில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களே! 

அவர்கள் தங்களின் தகுதியாகச் சொல்வதெல்லாம் அலோபதியைப் பற்றிய குற்றச் சாட்டுக்களே! 

பிறர் மேல் சொல்லும் குற்றச் சாட்டுகள் என்றும் தங்களின் தகுதிகள் ஆகிவிடாது! 

பிறர்மேல் குற்றம் சாட்டும் அதே நேரம் அதற்கான காரணங்களையும் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் அப்படிப்பட்ட வழிகளின் நம்பகத் தன்மையையும் மெய்ப்பிப்பதே உன்னதமான வழி! 

அதைவிட்டு அலோபதியின் குறைகளைப் பட்டியல் போட்டுப் பயன் இல்லை! 

நவீன மருத்துவத் துறைகளில் உள்ள குறைபாடுகள் மட்டும் அந்தத் துறை அல்ல! 

அதன் சாதனைகளையும் அதன் சக்தியால் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையும் பார்க்கவேண்டும்! 

அதைவிட நம்பகமான , மக்களின் துன்பம் போக்கும் மருத்துவம் ஒன்று இருந்து தன்னை மெய்ப்பிக்கும் வரை அதை குறை சொல்வதுமட்டும் தீர்வாகாது!....

அதற்கு மாற்று நம்பகமாக இன்னும் உருவாகவில்லை....

அதனால்தான் நாம் உணவே மருந்தாகக் கொண்டு பயிற்சியையும் கட்டுப்பாட்டையும் நடைமுறைகளாகக் கொண்டு நல்வாழ்வு வாழ அழைக்கிறோம். 

இயற்கை உணவுகளை அதிகமாகஉண்ணவும் இயற்கை முறையில் வாழவும் கற்றுக்கொள்ள அறைகூவல் விடுக்கிறோம்!...

எதிர்பாராத அவசர சிகிச்சைத் தேவைகளுக்கு மட்டும் இருப்பதில் நம்பகமான மருத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்....

https://www.facebook.com/groups/139649789477115/

உணவே மருந்து ( 73 )

இவர்களும் அவர்களும்....

நலமாக வாழும் ஒருவருக்குத் தேவை இல்லாமல் ஜாதகம் பார்க்க மாட்டார்கள்!

கோவில் குளத்துக்குச் சென்று நோய் தீர்க்கும்படி  வேண்ட மாட்டார்கள்!

பில்லி சூனியம் இருக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள்!..

தங்களுடைய கடமையைச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்...

அதுபோல இயற்கையான சுவையான உணவு வகைகளை உண்டு உழைப்பில் நாட்டம் செலுத்தும் யாரும் தாங்கள் உண்ணும் உணவைச் சோதிக்க வேண்டிய அவசியமில்லை!

தங்கள் உடல்நலனைச் சோதனைக் கூடத்துக்கும் மருத்துவருக்கும் மொய் எழுதி அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை!

தங்கள் உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த வாழ்வு வாழ்வதில் நாட்டம் செலுத்தலாம்!...

விவசாயம் ( 68 )

மண்ணுக்குள் தேன்கூடு! 

நண்பர்களே! 

தக்கைப்பூண்டின் வேர்கள்தான் இது! 

அதில் உள்ள குருணை போன்ற பகுதிகள் எல்லாம் வேர்முடிச்சுக்கள் எனப்படும். 

அந்த வேர் முடிச்சுக்களில் அடங்கியுள்ளவை அந்தத் தாவரம் காற்றில் இருந்தும் நிலத்தில் இருந்தும் சேகரிக்கும் சத்துக்கள் ஆகும். 

ஆதாவது தேனீக்கள் மலர்களில் இருந்து தேன் சேகரித்துக் கூடுகளில்  பாதுகாப்பதைப்போல இந்தத் தாவரம் உபரியான சத்துக்களை உருவாக்கித் தனது வேர்முடிச்சுகளில் சேகரிக்கிறது. 

அதனால் இவையும் ஒருவகையான தேன் கூடுகளே! 

அதனால் மண் இயற்கை முறையில் வளமாவதோடு இதை மடக்கி உழும்போது அந்த முழுச் செடிகளும் மக்கி எருவாகின்றன. 

அதனால் இது ஒரு சிறந்த பசுந்தாள் உரப் பயிர் என்பதில் ஐயமில்லை....

Wednesday, November 13, 2013

உணவே மருந்து ( 72 )

ஏற்றதும் எதிரானதும்...

இயற்கை நிலையில் நம்மால் எதை விரும்பி உண்ண முடியுமோ அவைதான் நமக்கு மிகவும் ஏற்ற உணவுகள்.

மற்றவை எல்லாம் சுவைக்காகவும் தவிர்க்க முடியாமலும் உண்ணும் உணவுகளே!....

அவற்றில் சிறிதளவாவது எதிர்மறை அம்சங்கள் இருக்கும்.

அந்த எதிர்மறை அம்சங்கள்  மிக அதிகமான தீங்கு செய்யும் அளவுக்கு தயாரிக்கும் முறையைப் பொறுத்து அதிகமாகவும் உள்ளன.

அதனால் இயற்கைக்கு நெருக்கமான உணவுகள் உண்ணும் அளவு நன்மை அடைவோம்.

இயற்கைக்கு எதிரான பண்புகளை ஏற்றி உண்ணும் அளவு நோய்களையும் அடைவோம்....


Wednesday, November 6, 2013

தத்துவம் ( 20 )காலப் பயணம் .....

காலப் பயணம் பற்றி அறிவியலில் அதிகம் பேசப்படுகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளி வேகத்தில் பயணித்தால் காலம் ஸ்தம்பித்து நின்று விடும் என்றும் சொல்லப் படுகிறது.

ஒருவர் ஒளி வேகத்தில் பயணித்து குறிப்பிட்ட தூரம் சென்று திரும்பினால் அவர் எடுத்துக் கொண்ட காலத்தைப் போல் இரண்டு மடங்கு காலம் பூமியில் கடந்திருக்கும் அல்லது கூடுதலான காலம் கடந்திருக்கும் என்றும் சொல்லப் படுகிறது. 

ஆனால் அவர் என்ன பொருளில் சொன்னார், என்ன பொருளில் எடுத்துக் கொள்ளப் பட்டது, உண்மையாகவே அதை ஆதரிப்பவர்கள் எல்லாம் அதைப் புரிந்துதான் ஆதரிக்கிறார்களா? 

அல்லது ஐன்ஸ்டீன் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஒப்புக் கொள்வதுதான் பெருமை என்று நினைத்து ஒப்புக் கொள்கிறார்களா? 

ஒன்றும் புரியவில்லை!....

காலப் பயணம் என்பதை ஒரு கற்பனையான கதையாகத்தான் நினைக்க முடிகிறது. 

ஐன்ஸ்டீனின் கூற்றின் படி என்று சொல்லப்படுவது மட்டும் போதுமானது ஆகாது. 

அது அவரின் கூற்றையே கேள்விக் குறி ஆக்கும். 

காலம் என்பது ஒரு இடமோ ஒரு பொருளோ குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கதிரோகூட அல்ல! 

அது  மனிதன் உருவாக்கிக்கொண்ட ஒரு குறியீடு .

அதற்குள் பயணம் செய்வது என்பது எந்த வகையான சிந்தனை?....

அது முடியும் என்றால் காகிதத்தில் பெரு வெடிப்பு என்று எழுதி அதனுள் பயணம் செய்தால் பெருவெடிப்பு நிகழ்ந்த காலத்துக்குச் செல்லலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒளியை விடக் கூடுதலான வேகத்தில் செல்லும் ஒரு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொள்வோம். 

அதில் ஏறிக்கொண்டு எதை நோக்கி அந்த வாகனத்தைச் செலுத்துவது?

நூறு வருடங்களுக்குப் பின்னால் வரும் எதிர்காலத்தை அடைய அந்த வாகனத்தை எப்படிச் செலுத்த வேண்டும்?

நூறு வருடங்களுக்குப் பின்னால் இருந்த இறந்தகாலத்துக்குப் போக அந்த வாகனத்தை எப்படிச் செலுத்த வேண்டும்?

நம்மைச் சுற்றிலும் எல்லாத் திக்குகளிலும் அண்டம் விரிவடையும் நிலையில் எந்தத் திசையில் பயணித்து இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அடைவது?

அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை ஒளிவேகத்தில் பயணித்துக்கொண்டே எப்படிப் பார்ப்பது?

நிறுத்துவது என்றால் எங்கே நிறுத்துவது?

ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் பூமியில் நடக்கும் ஒன்றை ஒளி வேகத்தில் வேறு திசையில் பயணித்து எப்படிக் காண முடியும்?

ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் காலப் பயணம் செய்து சந்திக்கும் ஒரு மனிதனும் அவனுடைய பல தலைமுறை முன்னோர்களும் தோன்றாத நிலையில் அப்படி ஒரு மனிதனை எப்படிக் காண முடியும்?

ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் சென்று நாம் சந்திக்கும் ஒருவரை நாம் கொன்றுவிட்டாலோ அல்லது நம்மை அவர் கொன்று விட்டாலோ என்ன ஆகும்?...

இன்னும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு யார் நம்பக்கூடிய விடைகளை அளிக்கப் போகிறார்களோ தெரிய வில்லை! 

ஐன்ஸ்டீனின் கோட்பாட்டைப் பற்றி ஐயம் எழுந்தால்  அவருடைய கோட்பாடுகளையே மேற்கொள் காட்டி காப்பி பேஸ்ட் செய்வதைத்தான் பலர் தங்கள் பதிலாக முன்வைக்கிறார்கள். 

தாங்கள் கற்றவற்றைத் தங்கள் புரிதலில் இருந்து வெளிப்படுத்த யாரும் தயாராக இல்லை! 

என்ன செய்வது!.....
------------------------------------------------------------------------------------------------------

இதுபற்றிய எனது மேலும் சில கருத்துக்கள்.....

இந்தக் கட்டுரையில் எழுப்பிடைள்ள கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்காமல் காலப் பயணம் பற்றிக் கற்பனை செய்வதில் பயனில்லை என்றே நினைக்கிறேன்.

அணுக்களால் ஆன ஜடப் பொருட்களால் ஆன மனிதனும் அவன் தயாரிக்கும் வாகனமும் ஜடப்பொருளே அல்லாத காலம் என்னும் கருத்துக்குள் எப்படிப் பயணம் செய்ய முடியும்?

அது முடியும் என்றால் கற்பனைக்கதைகளில் சொல்லப்படும் கதைகள் எல்லாமே உண்மை என்று ஆகிவிடும்.

மூட நம்பிக்கைகள்கூட அறிவியல் ஆகிவிடும்....

அறிவியல் சிந்தனைகளைத் தோற்கடித்து மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கச் செய்யப்படும் சதியாக இருக்குமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது!...
---------------------------------------------------------------------------------------------------------
பெரு வெடிப்பு என்பது ஒரு நிகழ்வு!

அதற்குப் பின்னால் பலநூறுகோடி வருடங்கள் கடந்திருக்கிறது.

பெருவெடிப்புக்குப் பின்னால் எப்படிக் காலம் நீண்டதோ அதுபோல அதற்கு முன்னும் வேறொரு நிலையில் காலம் நீண்டிருக்கத்தான் வேண்டும்.

எது ஒன்றும் இல்லாதிருந்து புதிதாகத் தோன்றவோ அல்லது இருந்து அதன்பின் இல்லாமல் போகவோ முடியாது.

ஒன்று இன்னொன்றாக அல்லது ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு மாறிச் செல்ல மட்டுமே முடியும்.

அப்படியிருக்க பெருவெடிப்புக்கு முந்தைய நிலையை நாம் அறியவில்லை என்று மட்டுமே சொல்ல முடியும் .

எதுவும் இல்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?

அப்படி இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய ஒரு நிலை புதிதாக எப்படித் தோன்றியது?
-----------------------------------------------------------------------------------------------------
ஒரு பக்கம் மட்டுமே உள்ள ஒரு நாணயம் இருக்க முடியாது. அதுபோல ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இருந்து ஒரு பக்கமாக மட்டும் காலமும் இருக்க முடியாது!...
-------------------------------------------------------------------------------------------------------

ஒரு பயணம் என்றால் அதற்கு புறப்படும் இடம் என்று ஒன்று இருக்க வேண்டும். அது தவிர செல்லும் இடம் அல்லது செல்ல நினைக்கும் இடம் என்று ஒன்று இருக்க வேண்டும். மேலும் செல்லும் வழி இன்னது என்றும் இருக்க வேண்டும்.

இந்த மூன்றுமே இல்லாத ஒரு பயணத்தை எப்படிச் செய்ய முடியும்?

அல்லது காலப் பயணத்தில் இந்த மூன்றும் எங்கு அமைந்துள்ளன?

--------------------------------------------------------------------------------------------------

Friday, November 1, 2013

உணவே மருந்து ( 71 )

பாரம்பரியமும்அலோபதியும்......

இன்றைய காலகட்டத்தில் அலோபதி மருத்துவத்துக்குக் கிடைத்த ஆதரவும் வசதிகளும் மற்ற மருத்துவத் துறைகளுக்குக் கிடைக்காததால் அலோபதி அளவுக்குத் தங்களை வளர்த்துக்கொள்ள இயலவில்லை.

அதன்காரணமாக அலோபதி பணம் காய்ச்சி மரமாக மாறிய நிலையில் ஒவ்வொருவருடைய மருத்துவர் கனவும் அலோபதியை நோக்கியதாகவே ஆகிவிட்டது. 

கடைசியில் இப்போது சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்துகொண்டு பல்வேறு குறைகளுடன் ஆனால் மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறது! 

இப்படி மற்ற மருத்துவத் துறைகள் பலவீன மடைந்ததற்குக் காரணம் அரசுகளின் ஆதரவு அவற்றுக்குப் போதுமான அளவு கிடைக்காததும் அதன் தொடர்ச்சியாக புதுப் புது ஆய்வுகளைச் செய்து புதிய சிகிச்சை முறைகளைக் கண்டு பிடிக்கச் சக்தியற்றுப் போனதுமே ஆகும். 

மற்ற பாரம்பரிய மருத்துவத் துறைகளில் ஏதோ புகழ்பெற்ற தனி நபர்கள் சிலர் தங்கள் சொந்த முயற்சியால் சில மருந்துகளைக் கண்டரிந்தாலும் அவை அதற்கென உள்ள ஆய்வுக் கூடங்களில் ஆராயப்பட்டவை அல்ல என்னும் நிலையில் விளம்பரங்களை நம்பி அதன் நம்பகத் தன்மை வளர்கிறது. 

அதேபோல நோயறியும் வசதிகளும் பாரம்பரிய மருத்துவத் துறையினருக்கு மிகவும் குறைவே! அதற்குக் காரணம் அந்தத் துறையிலான அவர்களின் பயிற்சியும் தகுதியும் நவீன ஆய்வுக் கூடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இல்லாதிருப்பது ஆகும். 

அதன் காரணமாக ஆபத்தான சிகிச்சைகளையும் அறுவை சிகிச்சைகளையும் பல்வேறு வகையான புதுப் புது நோய்களையும் சந்திக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது! 

ஆனால் இப்படிப் பாரம்பரிய மருத்துவங்கள் வளராமலும் பயன்படாமலும் போனதற்கு என்ன காரணங்களோ அந்தக் காரணங்களுக்கு எதிராக அறிவாற்றல் மிக்க சமூக முன்னோடிகள் குரல் கொடுக்க வேண்டும். 

அதன் காரணமாக அரசுகளை அவற்றுக்குண்டான வசதிகளைப் போதுமான அளவு செய்து கொடுக்கும்படி நிர்ப்பந்தப் படுத்த வேண்டும். 

சாதாரண நோய்களுக்குப் பக்க விளைவுகள் அற்ற மருத்துவத்தைக் குறைந்த செலவில் கற்றுக் கொடுத்து சாதாரண மக்களுக்கு மிக எளிமையாக நோய் தீர்த்துக்கொள்ளும் வசதிகளை நம்பகத் தன்மையுடன் உருவாக்கவேண்டும். 

அப்படியில்லாமல் அலோபதி மருத்துவம் படிக்க வசதி இல்லாத ஒரே காரணத்தால் மாற்று மருத்துவத்தை நாடும் போக்கு வளர்ந்து வருகிறது! 

அதைக்கூட முறையான கல்விக் கூடங்களில் கற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குத் தெரிந்த சிலவற்றை வைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே பாரம்பரிய மருத்துவர் என்று அறிவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதோடு அலோபதி மருத்துவத்தைத் தாக்கி விமர்சிப்பதே தங்களின் தகுதியை நம்ப வைக்கும் வழியாகக் கடைப் பிடிக்கின்றனர்.

அது போலிகளுக்கும் மக்களை எமாற்றுபவர்களுக்கும் மட்டும்தான் பயன்படும். 

 பாரம்பரிய மருத்துவம் வளரப் பயன்படாது! 

ஆகையால் அலோபதியைத் தாக்குவதைப் பாரம்பரிய மருத்துவங்களை வளர்க்கும் வழியாக நினைக்காமல் பாரம்பரிய மருத்துவத்தைக் காக்கவும் வளர்க்க்கவுமான சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும். 

அதைப் பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் கும்பல்களை இனங்கண்டு அம்பலப் படுத்துவதில் துவங்க வேண்டும். 

பாரம்பரிய மருத்துவத்தை நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மாற்றியமைப்பதன் மூலம் வளரவேண்டும்.

தங்கள் மருத்துவத்தை அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தித் தகுதியையும் தரத்தையும் உயர்த்துவதன்மூலம் முதலிடத்தை நோக்கி நகர வேண்டும். 

அதுதான் உண்மையான வளர்ச்சி!...