ss

Friday, November 1, 2013

உணவே மருந்து ( 71 )

பாரம்பரியமும்அலோபதியும்......

இன்றைய காலகட்டத்தில் அலோபதி மருத்துவத்துக்குக் கிடைத்த ஆதரவும் வசதிகளும் மற்ற மருத்துவத் துறைகளுக்குக் கிடைக்காததால் அலோபதி அளவுக்குத் தங்களை வளர்த்துக்கொள்ள இயலவில்லை.

அதன்காரணமாக அலோபதி பணம் காய்ச்சி மரமாக மாறிய நிலையில் ஒவ்வொருவருடைய மருத்துவர் கனவும் அலோபதியை நோக்கியதாகவே ஆகிவிட்டது. 

கடைசியில் இப்போது சாதாரண மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்துகொண்டு பல்வேறு குறைகளுடன் ஆனால் மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறது! 

இப்படி மற்ற மருத்துவத் துறைகள் பலவீன மடைந்ததற்குக் காரணம் அரசுகளின் ஆதரவு அவற்றுக்குப் போதுமான அளவு கிடைக்காததும் அதன் தொடர்ச்சியாக புதுப் புது ஆய்வுகளைச் செய்து புதிய சிகிச்சை முறைகளைக் கண்டு பிடிக்கச் சக்தியற்றுப் போனதுமே ஆகும். 

மற்ற பாரம்பரிய மருத்துவத் துறைகளில் ஏதோ புகழ்பெற்ற தனி நபர்கள் சிலர் தங்கள் சொந்த முயற்சியால் சில மருந்துகளைக் கண்டரிந்தாலும் அவை அதற்கென உள்ள ஆய்வுக் கூடங்களில் ஆராயப்பட்டவை அல்ல என்னும் நிலையில் விளம்பரங்களை நம்பி அதன் நம்பகத் தன்மை வளர்கிறது. 

அதேபோல நோயறியும் வசதிகளும் பாரம்பரிய மருத்துவத் துறையினருக்கு மிகவும் குறைவே! அதற்குக் காரணம் அந்தத் துறையிலான அவர்களின் பயிற்சியும் தகுதியும் நவீன ஆய்வுக் கூடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இல்லாதிருப்பது ஆகும். 

அதன் காரணமாக ஆபத்தான சிகிச்சைகளையும் அறுவை சிகிச்சைகளையும் பல்வேறு வகையான புதுப் புது நோய்களையும் சந்திக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது! 

ஆனால் இப்படிப் பாரம்பரிய மருத்துவங்கள் வளராமலும் பயன்படாமலும் போனதற்கு என்ன காரணங்களோ அந்தக் காரணங்களுக்கு எதிராக அறிவாற்றல் மிக்க சமூக முன்னோடிகள் குரல் கொடுக்க வேண்டும். 

அதன் காரணமாக அரசுகளை அவற்றுக்குண்டான வசதிகளைப் போதுமான அளவு செய்து கொடுக்கும்படி நிர்ப்பந்தப் படுத்த வேண்டும். 

சாதாரண நோய்களுக்குப் பக்க விளைவுகள் அற்ற மருத்துவத்தைக் குறைந்த செலவில் கற்றுக் கொடுத்து சாதாரண மக்களுக்கு மிக எளிமையாக நோய் தீர்த்துக்கொள்ளும் வசதிகளை நம்பகத் தன்மையுடன் உருவாக்கவேண்டும். 

அப்படியில்லாமல் அலோபதி மருத்துவம் படிக்க வசதி இல்லாத ஒரே காரணத்தால் மாற்று மருத்துவத்தை நாடும் போக்கு வளர்ந்து வருகிறது! 

அதைக்கூட முறையான கல்விக் கூடங்களில் கற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குத் தெரிந்த சிலவற்றை வைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே பாரம்பரிய மருத்துவர் என்று அறிவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதோடு அலோபதி மருத்துவத்தைத் தாக்கி விமர்சிப்பதே தங்களின் தகுதியை நம்ப வைக்கும் வழியாகக் கடைப் பிடிக்கின்றனர்.

அது போலிகளுக்கும் மக்களை எமாற்றுபவர்களுக்கும் மட்டும்தான் பயன்படும். 

 பாரம்பரிய மருத்துவம் வளரப் பயன்படாது! 

ஆகையால் அலோபதியைத் தாக்குவதைப் பாரம்பரிய மருத்துவங்களை வளர்க்கும் வழியாக நினைக்காமல் பாரம்பரிய மருத்துவத்தைக் காக்கவும் வளர்க்க்கவுமான சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும். 

அதைப் பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் கும்பல்களை இனங்கண்டு அம்பலப் படுத்துவதில் துவங்க வேண்டும். 

பாரம்பரிய மருத்துவத்தை நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மாற்றியமைப்பதன் மூலம் வளரவேண்டும்.

தங்கள் மருத்துவத்தை அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தித் தகுதியையும் தரத்தையும் உயர்த்துவதன்மூலம் முதலிடத்தை நோக்கி நகர வேண்டும். 

அதுதான் உண்மையான வளர்ச்சி!... 

1 comment:

 1. பாரம்பரியம் அணைத்து துறைகளிலும் ஏகதேசம் ஒழிந்துவிட்டது ............
  அரசு ஜனநாயகம் என்ற மாயவலையில் நடக்கிறது
  பாரம்பரிய மருத்துவர்கள் அர்யவைத்யா பார்மசி முதலாளி கிருஷ்ணகுமார் இரண்டு முறை நெஞ்சு அறுவை சிகிச்சை செய்து உள்ளார் .............அலோபதி மருத்துவ அடிபடையில் ...இன்று பிரபலமாக உள்ள பரம்பரிய நிறுவனர் அரசின் சகல உதவியும் பெற்று இயங்கும் இந்த நிறுவனம் இந்த நோய்க்கு மருந்து இல்லாது இல்லை ..........
  இங்கு பாரம்பரிய உணவு முறை மாற்றம் சகல சிக்கலுக்கும் காரணம்.............
  என்றைக்கோ உண்ட இட்லி இப்போ தினம் இட்லி தோசை
  என்னை பதார்த்தம் ...............பழைய சோறு கலி சோளம் ராகி போய் அரிசி வந்தது ..............புது புது நோய்
  சிக்கிரம் வளர்ந்து சிக்கிரம் சாகும் இனமானது மானுடம் ....உண்பதற்கே பிறந்தவர்கள் என்று அல்லவா வாழ்கிறோம் ....................ஒவ்வருதரும் சாபிடரத்தை பாருங்கள் நாளைக்கு கிடைக்காது என்பது போல ..........
  உங்கள் உணவு பழக்கம் நாங்களும் இனி பின்பற்றுகிறோம் .............

  ReplyDelete