ss

Thursday, January 30, 2014

இயற்கை ( 20 )

கள்ளி -  இயற்கையின் மரணம்.....

நண்பர்களே!

திருகு கள்ளி எனப்படும் இந்தக் கள்ளி ஆயிரக் கணக்கான வருடங்களாக நமது மண்ணில் நிலைபெற்ற தாவரம் ஆகும்.

இது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம் . மரம்போல் உயரமாகவும் புதர்போலவும் வளரக்கூடியது. மூலிகைப் பண்பு மிக்கது.

இதனை உணவுக்காகவோ உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியாது. காரணம் இது அமிலத்தன்மையும் விஷத் தன்மையும் உடையது. வெளிப்புறமாகப் பூச்சு வைத்தியமாகவும் ஆவியில் கொதிக்கவைத்து ஒத்தனம் கொடுக்கும் வைத்தியமாகவும் சிறந்த பயனளிக்க் கூடியது.

இது முன்னர் மானாவாரி விவசாயிகளின் விவசாயத்துக்கு சிறப்பாக உதவி வந்துள்ளது.

இதனை நிலத்தைச் சுற்றிலும் வேலியாக நட்டு வளர்த்திருப்பார்கள்.

இது வேலியாகப் பயன்படும் அதே நேரம் அதன்மேல் பிரண்டை, கோவை, வேலிப்பருத்தி போன்ற அருமையான மூலிகைக் குணமுள்ள தாவரங்கள் நன்கு படர்;ந்து வளரும். அவை முலிகையாகவும் உணவாகவும் நமக்குப்பயன்படும் அதேநேரம் கால்நடைகளுக்கும் மிகச்சிறந்த தீவனமாகும்.

கள்ளியின் இளம் மடல்கள்கூட வரண்ட காலங்களில் வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப்பயன்படும்.

இவற்றின்மேல் பல்வகைத்தாவரங்கள் படர்ந்து வளருமாதலால் அவை சில பறவையினங்களுக்கும் ஓணான் பச்சோந்தி பாம்புகள் போன்றனவற்றுக்கும் எண்ணற்ற பூச்சி இனங்களுக்கும் வாழ்விடங்களாகப் பயன்படுகிறது.

முன்னர் கிராமப்புற மக்கள் இந்தக் கள்ளியின் காய்ந்து கிடக்கும் மடல்களை விறகுக்காகவும் பயன்படுத்துவர்.

கிராமப்புற விவசாயியின் இணை பிரியாத நண்பனாக இருந்த இது தற்காலம் பழக்கத்திலிருந்து வெகுவாக ஒழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்தான் இப்போதும் உள்ளது.

கடும் வரட்சியைத் தாங்கி நின்று மனித இனத்துக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் இவை போன்றவற்றை ஒழித்துக்கட்டுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்று.

இது கள்ளியின் மரணம் அல்ல இயற்கையின் மரணம்....

https://www.facebook.com/photo.php?fbid=286319884769031&set=pb.100001730669125.-2207520000.1391081583.&type=3&theater

Monday, January 27, 2014

எனது மொழி ( 151 )

அறிவாளிகள்....

சிறந்த பதில்களைச் சொல்பவர்கள் எப்படி அறிவாளிகளோ அதேமாதிரிச் சிறந்த கேள்விகளைக் கேட்பவர்களும் அறிவாளிகளே!...

அறிவாளிகளைப் புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வைப்பது சிறந்த கேள்விகளே!..

Friday, January 24, 2014

தத்துவம் ( 24 )

பிரபஞ்சம் ஏன் தோன்றியது?....

அணுவில் இருந்து அண்டம் ஈறாக அனைத்து இயக்கங்களும் காரணங்களாகவும் விளைவுகளாகவும் ஒரே நேரத்தில் விளங்குகின்றன. 

அதனால் பிரபஞ்சம் தோன்று வதற்கும் ஒடுங்குவதற்கும்காரணங்கள் இருந்துதான் தீரும். 

ஆனால் மனிதனின் அறிவுக்கு எட்டிய வரை மட்டுமே ஆராய முடியும். 

அறிவின் எல்லை விரிவடையுமளவு அண்டத்தின் கூடுதலான எல்லைகள் பற்றி அறிய வரும்!....

அதனால் மனிதன் இன்றுள்ள அறிவாற்றலால் முடிந்த எல்லைகளைத் தொட்டிருக்கிறான். 

அது பெருவெடிப்பையும் தாண்டி பிரபஞ்சத்தையும் தாண்டி கூடுதலான எல்லைகளைத் தொடும்போது கூடுதல் விளக்கங்கள் கிடைக்கும்!...

Saturday, January 11, 2014

தத்துவம் ( 23 )

எது நல்லது?....

முன்னோர்கள் அவர்கள் எத்தகைய ஞானிகளாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை! 

அதனால் அவர்கள் யாருடைய வழிகாட்டுதலும் உலக மக்களின் ஏகமனதான ஆதரவைப் பெறவில்லை! 

அப்படி இருக்க அவர்கள் சொன்ன அத்தனையும் நமக்கு வழிகாட்டுதல்களாக இருக்க முடியாது.

அது அவசியமும் இல்லை. 

நாம் செய்யவேண்டியதும் செய்யக் கூடியதும் நமக்கு முன்னர் வாழ்ந்த ஞானியர் சொன்ன வற்றில் எது நடை முறை வாழ்க்கைக்குப் பாரபட்ச மில்லாமல் ஒத்துப் போகிறதோ அவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு நம் பங்குக்கு மேலும் சிறப்பான வாழ்க்கைத் தத்துவங்களை அனுபவ ரீதியாக அறிந்து நமது பங்களிப்பை விட்டுச் செல்வதே!...

அதைவிட்டு முன்னர் கூறிச் சென்றவர்கள் குறையே அற்றவர்கள் போலவும் அதை அப்படியே பின்பற்றி வாழ்வதைத் தவிர நாம் சுயமாகச் சிந்தித்து புது வழியில் நடக்க அவசியம் இல்லை என்பதுபோல முந்தைய மேற்கோள்களை வைத்துக் கொண்டு வாதம் செய்வதில் பயனில்லை! 

நாம் வாதத்துக்காக எடுத்துக் கொள்ளும் பொருளை ஆதரித்தும் மறுத்தும் முன்னோர் அளித்த அறிவு வெளிச்ச்சத்தில் நாம் கற்ற சொந்த அறிவைக் கொண்டு விவாதிக்க வேண்டும். 

அதுதான் நாம் வாழும் சமூகத்துக்குப் பயனுள்ளது. தத்துவத் துறைக்கும் நமது சிறப்பான பங்களிப்பாக இருக்கும். 

அதைவிட்டு முன்னோரை மேற்கொள் காட்டியும் அதுதான் சரி என்றும் விவாதிக்கும் விவாத முறை நமது சொந்த அறிவாற்றலை என்றும் வளர்க்காது. 

நாம் கற்றதை மட்டும் முன்வைக்க ஜெராக்ஸ் இயந்திரங்கள் அல்ல!...

ஆனால் துரதிருஷ்டவசமாக அத்தகைய காப்பி பேஸ்ட் கலாச்சாரம்தான் வேகமாக வளர்ந்து வருகிறது....

அது நல்லது  அல்ல! 

Saturday, January 4, 2014

எனது மொழி ( 150 )

அரசியல் துணிவு....

பெரும்பாலோருக்கு தங்கள் கொள்கை கோட்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் அதைமட்டும் சார்ந்து அரசியல் களத்தில் நிற்கவும் துணிவில்லை!...

அரசியலைச் சாக்கடை என்று சொல்வதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றனவோ அதை எதிர்த்துப் போராடாமல் அந்த அருவருப்பான சகதியில் நின்றுகொண்டே ஆள் மாற்றி ஆள் சந்தர்ப்பம்போலக் கைகுலுக்குவதும் அதற்கு நியாயம் கற்பிப்பதும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதுதான் தெரியவில்லை!...

Friday, January 3, 2014

அரசியல் ( 56 )

ஒரு அரசியல் உரையாடல்.....

Subash Krishnasamy
அன்னா ஹசாரேவும் அர்விந்த் கெஜ்ரிவாலும் ஒரே நோக்கம் கொண்டவர்கள்தானே?

அவரும் இவரும் இணைந்து செயல்பட ஏன் முடியவில்லை?.....

நண்பர் : ANNA as a teacher he will teach, Kejrival like student to implement want he

learned and 

show the result to teacher.


Subash Krishnasamy இருவரும் ஒரே இயக்கத்தில் ஒன்றாக இருந்தவர்கள். கை கோர்த்துச் செயல் பட்டவர்கள். அதனால் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக அன்னா ஹசாரே இருக்கலாம். ஆனால் இயக்கத்தில் அவர்களுடைய உறவு என்பது பொதுவானதே!

டெல்லித் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருந்தால் கெஜ்ரிவால் பற்றி இப்போதுள்ள உணர்வு இருந்திருக்க வாய்ப்பு இல்லை....

அவருடைய அரசியல் பற்றி அப்போது (தேர்தலுக்கு முன்பு)அறிந்திருந்ததைவிட இப்போது அதிகம் ஒன்றும் அறிந்துவிடவில்லை!...

ஆனாலும் ஒரு மயக்கம்....

இந்த மயக்கம் எண்ணற்ற நபர்களின்மேல் எண்ணற்ற முறை வந்திருக்கிறது....

ஆனால் முடிவுகள் வேறு விதமாகவே இருந்துள்ளது!

அப்படி அல்லாமல் இது ஒரு புதிய மாறுபட்ட நம்பகமான அரசியல் என்றால் அது பற்றிய ஒரு ஆழமான கொள்கைத் திட்டம் வெளியிடவேண்டும்!

அதை ஆராய்ந்து நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

அதுவல்லாமல் பத்திரிகைச் செய்திகளும் தொலைக் காட்சிச் செய்திக்களும்தான் மக்களின் அரசியல் உணர்வைத் தீர்மானிக்கும் என்றால் இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் விமோசனம் கிடைக்காது!.....

Shivaraj Shivaraman : இந்திய அரசியலை குறை சொல்லும் அற்புதமான பெரியோர், களத்தில் இறங்குவதில்லை, விலகிச்செல்கின்றனர்.

இது அவர்களுக்கு (உங்களுக்கும் தான் அண்ணா) ஆத்ம திருப்தியை கொடுக்கக்கூடும்.\\\\\\\

தம்பி!

அரசியல் அக்கறை உடையவர்கள் அனைவரும் களப்பணி மட்டுமே செய்பவர்கள் அல்ல!

யார் எதைச் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

அப்போது ஒட்டு மொத்தமாகச் சிறப்பாக இருக்கும்.

விண்ணில் மனிதரைச் செலுத்துகின்ற விஞ்ஞானிகள் அனைவரும் விண்ணில் பறப்பது இல்லை!

அது சரியாக நடப்பதற்குச் சரியான திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்கள்.

அதுபோல அரசியலாகட்டும் மற்ற பல சமுதாய விஷயங்களாகட்டும் அவை சரியாக நடப்பதற்குப் பின்னணியில் சித்தாந்த அடிப்படையில் பலர் உந்து சக்தியாக இருப்பது தவிர்க்கமுடியாதது ஆகும்.

அப்படி இல்லாத எந்த இயக்கமும் கண்மூடித்தனமாகவே பயணிக்கும் மக்களும் கண்மூடித்தனமாகவே பின்னால் சென்று தோல்வி மேல் தோல்வி அடைவார்கள்....

சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ. வால்டர், ரூசோ, லியோ டால்ஸ்டாய் போன்ற பல மேதைகள் களப்பணி ஆற்றியவர்கள் அல்லர்!...

அதனால் அவர்களின் பங்கு வரலாற்றில் குறைவானது அல்ல!....

களப்பணியை விட அத்தகைய களப்பணிகளுக்கு சரியான பாதை வகுத்துக்கொடுப்பது மாபெரும் பணி!

அது ஒரு மாளிகையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு சிறு செங்கல்லாகவும் இருக்கலாம். ஆனால் அது உயர்ந்ததே!

என்னைப் பொருத்தவரை உடலாலும் உள்ளத்தாலும் சிறந்த மக்களாக அனைவரும் விளங்கவேண்டும், வாழ்க்கை இயற்கைக்கு நெருக்கமானதாக இருக்கவேண்டும் , உலகம் மாசற்ற ஒரு பூஞ்சோலையாக விளங்கவேண்டும் , அனைத்து மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழவேண்டும், உலகமே ஒரு அழகான குடும்பமாக மாறவேண்டும் என்ற விருப்பம் கொண்டவன்,

அதற்கான திசையில் எனது அறிவையும் சக்தியையும் நேரத்தையும் செலவு செய்துகொண்டுள்ளேன்...

அரசியலில் எனக்கு நாட்டம் இல்லை என்பதற்கு அது ஒரு காரணம்.

ஆனால் அனைத்து சமூக விஷயங்களிலும் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

அதைத்தான் நான் இத்தகைய விமர்சனங்கள் மூலம் செய்கிறேன்!......

அத்தகைய விமர்சனங்கள் நமது அரசியல்தரத்தை உயர்த்தவே பயன்படும் என்பதால் அதை இயன்றவரை செய்கிறேன்....

எனது விமர்சனங்கள் சரியானவை என்று காலங் கடந்து உணர்வதைவிட ஆழ்ந்து பரிசீலிப்பது பயனுள்ளதாக இருக்கும்!....

விவசாயம் ( 72 )

ஆறிய புழுதியும் பச்சைப் புழுதியும்....


ஆறின புழுதி இருந்து வெள்ளாமை செய்தா நல்லா இருக்கும்.

பச்ச புரட்டி வெள்ளாமை செய்யக் கூடாது ....

இப்படியான சொற்களை கிராமங்களில் முன்னர் அடிக்கடி கேட்கலாம்...

காரணம் என்ன? 

தெரிந்து கொள்வது மிகவும் நல்லது நண்பர்களே!......

பொதுவாக மண்ணின் மேல் ஏறக்குறைய முக்கால் அடிக்கு உள்ளாகத்தான் நுண்ணுயிகள் அதிகமாக வாழ்கின்றன, 

அவைதான் நிலத்தில் விழும் அனைத்தையும், முந்தைய பயிர்களின் கழிவுகளையும் மக்க வைக்கின்றன.

அப்படி மக்கச் செய்வதற்காகத்தான் உழவு செய்வதன்மூலம் மேல் மண்ணையும் அதில் கிடப்பவற்றையும் கலக்குகிறோம். 

அதன் காரணமாக மண்ணின் அடியில்  உள்ள ஈரத்தைப் பயன்படுத்தி நுண்ணுயிர்கள் பொருட்களை மக்கச் செய்வதோடு மண்ணுக்குள் சுலபமாக நடமாடவும்  வழி ஏற்ப்படுகிறது...

மழைநீர் அல்லது பாய்ச்சும் நீர் எளிதில் வேர்களுக்குச் சத்துக்களை எடுத்துச் செல்லவும் ஈரத்தைச் சேமிக்கவும் பயன்படுகிறது. 

அதே சமயம் ஈர மண்ணில் பச்சை புரட்டிப் பயிர் செய்யும்போது நுண்ணுயிர்கள் தாவரங்களுக்குக் கிடைக்கவேண்டிய ஈரம் உட்படப் பலவற்றைத் தான் எடுத்துக்கொண்டு இயங்குவதால் பயிரகளுக்குக் கிடைப்பதற்குப் பதிலாகத் தாற்காலிகமாகப் பறிபோகும் நிலை ஏற்படுகிறது....

அதற்கும் அப்பால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 

ஆதாவது நன்கு ஆறின புழுதியில் தண்ணீர் பாய்ச்சும்போது மண் பொதுபொதுபாக மாறும். 

அதே சமயம் ஈரமண்ணில் தண்ணீர் பாய்ச்சினால் மண் காயும்போது நிலம் கெட்டிப் படவே செய்யும். அதன்காரணமாக பயிர்களின் வேர்களுக்குக் காற்றோட்டமும் நீரின்மூலம் சத்துக்கள் விநியோகமும் முறையாக இருக்காது......

ஆறின புழுதியில் பயிர் செய்யும்போது களை வெட்டுவது கூடச் சுலபமாக பொருபொருபாக மண் இருக்கும். 

ஆனால் பச்சைபுரட்டிப்[ பயிர் செய்யும் நிலங்களில் களைவெட்டுவதற்குக்கூட மண் கடினமாக இருக்கும்....

இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.......

Wednesday, January 1, 2014

உணவே மருந்து ( 79 )

பாடம்....

நண்பர்களே!

ஐயா நம்மாழ்வார் அவர்கள் சாதாரண மனிதர் அல்ல!

அவர் யோகா உட்பட நல்ல பழக்கங்களைப் பின்பற்றுபவர்.  இயற்கையில் அதீத நாட்டம் உடையவர்.

இறுதிமூச்சு வரை உழைத்தவர்....

அப்படிப்பட்டவருக்கு இந்த மரணம் நியாயமானது அல்ல! 

                                       

இன்னும் பல ஆண்டுகாலம் அவர் வாழ்ந்திருக்கவேண்டும். 

நான் என்ன நினைத்தேன் என்றால் அவருடைய உடம்பில் எதோ ஒரு பலவீனம் இருந்திருக்க வேண்டும். 

அவருடைய நல்ல பழக்கங்களால் அவர் இவ்வளவு காலம் வாழ்ந்திருந்தார் என்றே நினைக்கிறேன். 

இல்லாவிட்டால் முன்னரே அவர் காலமாகியிருக்கலாம் என மனதுக்குப் பட்டது....

அத்தகைய ஒருவரே மரணத்தின் முன்னர் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லையென்றால் கண்டதைத் தின்று கட்டுப் பாடற்ற வாழ்க்கை வாழ்பவர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

அவருடைய மரணத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

சரியாக வாழ்ந்த ஒருவரையே வீழ்த்தக் கூடிய அளவு சூழல் மாசடைந்துள்ளது.

சரியற்ற முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தால் எந்த நிமிடமும் யாரையும் மரணம் அழைக்கலாம் என்பதை உணர்ந்து தங்களிடம் உள்ள தவறான உணவுப் பழக்கங்களையும் உழைப்பற்ற வாழ்க்கையையும் மாற்றவேண்டும். 

இயற்கைக்கு நெருக்கமாக உடலாலும் உள்ளத்தாலும் மாற்றிக்கொள்வோம்....

அதுவே நம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய உயர்ந்த பாடம் ஆகும்!...

தவிர நமது பண்பாடாக வளர்ந்துபோய்விட்ட ஒரு தவறு என்னவென்றால் நல்ல விஷயங்களைவிட அது சார்ந்த மனிதருக்கு முக்கியத்துவம் கொடுப்பது!.

அதன்விளைவாகக் கண்மூடித்தனம் வளர்வது மட்டுமல்லாமல் முன்னணியில் உள்ளவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படும் சூழலும் உருவாகிறது.

அதன் விளைவாகவும் நல்ல மனிதர்களுக்குக் கூட இப்படிப்பட்ட துயர் நேர வாய்ப்பிருக்கிறது!...

மாமனிதர் ஒருவர் நம்மிடையே வாழ்கிறார் என்றால் அவரையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் பண்பாடு ஒழியவேண்டும்.

அவருடைய நல்ல வழிகாட்டலைத் தொடர்ந்து முன்கொண்டு செல்ல ஏராளமானவர்கள் உருவாக வேண்டும்.

அப்படியல்லாமல் அந்த மாமனிதரையே அனைத்துக்கும் உயிரை வாங்குவது அவர்களின் சிந்தனைத் திறனையும் செயலூக்கத்தையும் பாதிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் உயிரையும் வாங்கிவிடும்....

அதுதான் நடந்துள்ளது!...

சில நண்பர்கள் நம்மாழ்வார் ஐயா அவர்கள் யோகாசனம் பயின்றவர்; இயற்கை உணவுப் பழக்கமும் உடையவர்; அப்படி இருக்க அவர் நூறாண்டுகள் வாழவேண்டிய நிலையில் அகால மரணம் அடைந்ததாகக் கருதுகிறார்கள்...

 நாம் இன்னும் சிலவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

யோகக் கலையையும் இயற்கை உணவையும் முதல் கடமையாகக் கொண்டவர்களையும் ஐயா நம்மாழ்வார் அவர்களையும் வேறுபட்ட கோணத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.

 நம்மாழ்வார் ஐயா அவர்கள் சமூகப் பொறுப்பை நெஞ்சில் சுமந்தவர்!

அதனால் அவருடைய உடல் வாழும் தகுதியை இழப்பதற்குப் பல காரணங்கள் இயல்பானதே!....

நம்மாழ்வார் அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது சுற்றுச் சூழலும் உணவும் தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்...

தவிர அவருக்கு உறக்கம் இல்லாமல்போவதர்கான காரணங்களும் நிறைய உள்ளன.

அவருடைய வாழ்க்கை ஒரே வட்டத்தில் சுழன்றது அல்ல!

புதுப் புதுக் கேள்விகளுக்கு விடைகாண்வேண்டிய போர்க்களமாக அவர் உணர்வுகள் இருந்தன என்பதே சரியானது!...

சுருக்கமாகச் சொன்னால் பனங்காயைச் சுமந்த குருவி அவர்!....