ss

Thursday, February 27, 2014

எனது மொழி ( 155 )

நாலாவது வழி!...

நமது சமூக அமைப்பு நம்மை மூன்று வகையாக வாழ அனுமதித்து இருக்கிறது! 

முதலாவது பிறரை வஞ்சித்து அவமானப் படுத்தி வாழ்வது! 

இரண்டாவது பிறரது வஞ்சனைக்கு ஆளாகி அவமானப் பட்டு வாழ்வது! 

மூன்றாவது வஞ்சிக்கவும் செய்யாமல் பிறரது வஞ்சனையால் ஏற்படும் அவமானத்தையும் கண்டு கொள்ளாமல் மழுங்கையாக வாழ்வது! 

இதற்கு அப்பால் ஒரு உன்னத சகோதரத்துவ வாழ்க்கையை நாம் எப்போது காண்போம்?...

Monday, February 24, 2014

எனது மொழி ( 154 )

அவமானம்! அவமானம்!....

இருவருக்கு இடையே ஒரு பிரச்சினை முற்றித் தகராறு என்ற அளவுக்குப் போனால் அப்போது அவர்களில் யார் அங்கு ஆள்பலம் மிக்கவர், யாருக்கு செல்வாக்கும் உள்ளூர் ஆதரவும் அதிகம், யார் வசதியானவர், யாருக்கு அரசியல் பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்பது போன்றவைகளே நீதிமானாக விளங்குகின்றன! 

நியாமானவர்,  நேர்மையானவர், நாட்டுப் பற்றாளர், கல்வியாளர், பண்பாளர் சிந்தனையாளர்,பாராபட்சமற்றவர் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் செல்லாக் காசாகி விடுகின்றன.

அத்தவர்களைக் காக்க எந்தச் சட்டமும் அதை அமலாக்கும் துறைகளும் தயாராக இல்லை!

அவர்கள் கெட்டவர்களுடன் மோதினால் தலைகுனிந்து வாழவேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்! 

இத்தகைய கேடுகெட்ட சூழலில்தான் நாம் மனச் சாட்சியை அடகுவைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.....

அவமானம்! அவமானம்! 

அரசியல் ( 57 )

வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....

ஆம்! 

வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.

போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!

அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்! 

அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்  வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.

அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்! 

அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர்  வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.

அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்! 

அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.

அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது. 

சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது. 

அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.

அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!

முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது. 

இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது. 

மேலும் பலவலுவான காரணங்கள் :  

அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு) 

அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. 

ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..

வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்! 

வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!

அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.

ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று  கல்வெட்டு இருக்கிறது!...

அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். 

அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..

பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....

சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.

அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும். 

அங்கு எடுக்கப்பட்ட படங்கள்.....Saturday, February 22, 2014

எனது மொழி ( 153 )

தேடலுக்கு விடுதலை.....

நமது மனதில் பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடே இல்லாமல் ஒரே மாதிரி இருக்காது! 

அப்படி நமது சொந்தக் கருத்துக்களுக்கு உள்ளேயே இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து நல்ல முடிவுக்கு வருவதற்கான முயற்சியே தேடல் ஆகும்!....

அந்தத் தேடலில் வெற்றிக்காண வேண்டுமானால் நாம் வேறு கருத்துகளுக்குள் சிறைப்பட்டிருக்கக் கூடாது!.... 

அப்படிச் சிறைப்பட்டிருந்தால் முதலில் அந்தச் சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து விடுதலை அடைய வேண்டும்!

Wednesday, February 12, 2014

எனது மொழி ( 152 )

படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால் வெற்றி தோல்வியாகும்!

தோல்வி மாபெரும் தோல்வியாகும்!

படிப்பினைகளைக் கற்றுக் கொண்டால் தோல்வி வெற்றியாகும்!

வெற்றி மாபெரும் வெற்றியாகும்!.....

Tuesday, February 11, 2014

தத்துவம் ( 25 )


 ஒரு ஆன்மிகக் கனவு!....

எல்லா மதங்களுக்கும் ஒரு பொதுவான குணம் உள்ளது! ஆதாவது அடுத்தமதத்தவர் தம் மதத்தில் சேர்ந்தால் வரவேற்ப்பது, அதே சமயம் தங்கள் மதத்தவர் அடுத்த மதத்தில் சேர்ந்தால் அதை வெறுப்பது! இது என்ன நியாயம்?

ஒருவர் இன்னொருவருடைய மதமாற்றத்தை வரவேற்கும் அதே நேரம் தங்கள் மதத்திலிருந்து வெளியேறி அடுத்த மதத்தில் சேர்ந்திருந்தால் அதை இதே கண்ணோட்டத்தில் வரவேற்பாரா?அதேபோல அவர் மதம் மாறியதர்காக வருத்தப்படும் ஒருவர், ஒருவர் அடுத்த  மதத்தில் இருந்து விலகி வந்து தன் மதத்தில் சேர்ந்திருந்தால் வேண்டாம் என்று சொல்வாரா?....

என்னவகையான சிந்தனை இது! எந்த மதத்தவராக தான் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பது அவரவர் உரிமை அல்லவா? அதில் தலையிட என்ன அவசியம் அல்லது நியாயம் இருக்கிறது?...

எல்லா மதங்களிலும் குறைகளும் நிறைகளும் உள்ளன!

எல்லா மதங்களைச் சேர்ந்த மக்களின் சராசரிப் பண்பாட்டில் பெரிய வேறுபாடு கிடையாது!

அப்படி இருக்க மதங்களில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற விவாதத்தில் பகைமை உணர்வைத் தவிர வேறு பயன் இல்லை!.

இந்த மதங்கள் அனைத்தும் இற்றுப்போன படகுகள் !

இவற்றை நம்பிக் கரையேற முடியாது!

மதங்களுக்கு அப்பாற்பட்ட உயர்தர்ம நெறிகள் வகுக்கப் பட்டு அதில் அனைத்து மதங்களின் கீழ் வாழும் மக்களும் சங்கமிக்க வேண்டும்!...

ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்தி அனைவரும் தாங்கள் விரும்பும்படி பரம்பொருளுக்கு இணக்கமான உன்னத நிலையை அடைய முடியாது...

அது சரியான ஒரு வழியாக இருக்கவேண்டும்.

ஆனால் இதுதான் வழி என்று பழைய கந்தல் துணியை நாய்கள் பிய்த்துப் பிடுங்குவதுபோன்ற ஒரு முறையில் மக்களைப் பலரும் பல விதங்களில் பிடுங்குகிறார்கள்!

ஆனால் அவர்களில் ஒருவரும் முழுமையான வழிகாட்டிகளாக இல்லை என்பதே மனித வாழ்வின் சோகம்!....

ஒவ்வொரு மதத்தவர்களும் தங்கள் மதத்தில் உள்ள நல்ல அம்சங்களையும் மற்ற மதங்களில் உள்ள தவறான அம்சங்களையும் மட்டுமே முன் நிறுத்தித் தங்கள் உணர்வுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பரஸ்பரம் குற்றம் குறைகளைப் பெரிது படுத்திப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வதைவிட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தவறுகளை நீக்கி அனைவருக்கும் பொருந்துகின்ற உயர் நெறியில் வாழ்வதே இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்!....

நடக்குமா?...

Wednesday, February 5, 2014

கூடங்குளமும் நானும் ( 8 )

நிரந்தர அபாயம்!...

நண்பர்களே! 

அணுக் கழிவுகளை இறுதியில் என்ன செய்கிறார்கள் என்பதற்குச் சரியான நம்பகமான விடை இருப்பதாகத் தெரியவில்லை....
ஆனாலும் உலகம் முழுக்கவும் அணுசக்தித் துறை அது சார்ந்த ஆலைகளையும் உலைகளையும் இயக்கிக் கொண்டுதான் உள்ளது...

இப்போதைக்கு அணுக் கழிவுகளை இருக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியின் எதோ சில இடங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடும்...

ஐம்பது வருஷங்களுக்கு முன்னர் இருந்த கிராமபோன் பெட்டியை இப்போது இயக்கிப் பாட்டுக் கேட்க முடிவது இல்லை. காரணம் அது சம்பந்தமான தொழில்நுட்பமும் உபகரணங்களும் வழக்கொழிந்து போய் விட்டன.

இப்படி இருக்க ஆயிரக் கணக்கான வருடங்கள் ஆனாலும் கதிர்வீச்சைக் கொண்டிருக்கக் கூடிய அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இப்போது பயன்படுத்தப் பட்டிருக்கும் தொழில் நுட்பப்படி இயங்க வருங்காலத்திய அதி நவீனத் தொழில் நுட்பம் இடங்கொடுக்குமா?....

அப்போதைய நிலைமை அப்போதைய கல்வி, அப்போதைய தொழில் நுட்பம் எல்லாமே மாறிப் போக வாய்ப்புள்ள சூழலில் நிரந்தர ஆபத்தான அணுக் கழிவைப் பாதுகாக்கும் பிரச்சினை வருங்கால சந்ததிகளுக்கு ஒரு சவாலாக ஆகி விடாதா?...