ss

Wednesday, April 2, 2014

அரசியல் ( 60 )

ஊழல் வண்டி....

 பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய ஆட்சியைத் தருவதாகவும் மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதி கொடுக்கிறார்கள்...

ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. 

மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது! 

ஆள்கின்ற ஆட்களில்தான் மாற்றமே தவிர மக்களுக்கான சேவைகளில் அனைவரும் ஒன்றே!....

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு விதமான ஆட்களையும் புதுப் புது வாக்குறுதிகளை மட்டும் பார்க்க முடிகிறது....

இதற்கு முடிவே இல்லையா?

இதற்குக் காரணம் என்ன?

இதற்கான காரணங்களை யாராவது சொல்கிறார்களா?...

நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்! 

நமது நாட்டு அரசு நிர்வாக இயந்திரம் ஒரு ஊழல் வண்டி! 

அது அனைத்து வகையான தவறுகளும்தான் உள்ளடக்கியது! 

மக்களுடைய துன்ப துயரங்களுக்கெல்லாம் யார் காரணமோ அவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப் பட்டது. 

அதில் உயர்ந்த பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சேவையையும் சட்டதிட்டங்களின்பால் உண்மையான விசுவாசத்தையும் எதிர்பார்க்க முடியாது!...

அது நல்லவர்களையும் தேசபக்தர்களையும் அவமதிக்கும்!  மாறாக கிரிமினல்களை வாழவைக்கும்!

இத்தனை தகுதிகள் உள்ள ஊழல் வண்டியில்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பயணம் செய்கிறார்கள். 

 ஊழல் செய்பவர்களும், அதைப் பயன்படுத்தத் தெரிந்த கயவர்களும், சட்டத்தின் நல்ல அம்சங்களைஎல்லாம் செயலிழக்கவைத்து அதைக் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மக்கள் விரோதிகளும் மட்டுமே அதில் பயன் அடைபவர்கள் ஆவர்.

அத்தகைய ஊழல் வண்டியில் பயணித்துக்கொண்டே அதில் கிடைக்கும் முறைகேடான ஆதாயங்களை அனுபவித்துக்கொண்டே அதைப் பயன்படுத்தி மக்களுக்கு மகத்தான சாதனைகளைச் செய்யப்போவதாக வாய்கூசாமல் சொல்கிறார்கள்! 

அதன்மூலம் கள்ளத்தனமாகப் பயன் அடைபவர்கள் மக்கள் மத்தியில் மாற்றி மாற்றிப் பொய் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது! காரணம் அவர்களின் தர்மம் அது! 

ஆனால்  காலாகாலத்துக்கும்  திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும்  அவர்கள் சொல்லும் பொய்களையும் நம்பி நம்பி ஏமாந்துகொண்டு இருப்பதுதான் மக்களின் கடமையா?....

யாரை நம்புவது என்பதில் ஒரு அளவுகோல் வேண்டாமா?

மேலே சொல்லப்பட்ட நிரந்தரமான அமைப்பான ஊழல் அரசு இயந்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி அதில் உள்ள தவறான பாகங்களைஎல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஊழலற்ற மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் அமைப்பாக மாற்றுகிறோம் என்று யார் சொல்கிறார்களோ அப்படிச் சொல்வதற்கான கோட்பாடுகளையும் செயல் திட்டத்தையும் யார் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் நம்பிக்கைக்கு உரியவர்கள்!....

காரணம் இப்போது உள்ள அரசு இயந்திரமும் அதன் விதிகளும் அந்நியர்கள் தங்களுக்கு அடிமைகளாய் நம் தாய்நாடு இருக்கவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை! 

அவர்கள் இருந்தவரை அவர்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்ய மட்டும் பயன்பட்டது....

ஆனால் அவர்கள் சென்றபின்னால் அதே அரசு இயந்திரம் நம்  சொந்த நாட்டின் சுயநலவாதிகளின் கைக்கருவியாக மாற்றப்பட்டது!

அதில் ஒரே ஒரு பெரும் மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. 

ஆதாவது வெள்ளையன் இருந்த இடத்தில் நமது நாட்டுக் கொள்ளையர்கள் அமர்ந்ததோடு அரசு இயந்திரமும் ஊழல் மயமாக்கப் பட்டது!

அதைக்கொண்டு சுயநலவாதிகளும் நாட்டுப் பற்றற்றவர்களும் அந்நிய விசுவாசிகளும் மட்டுமே பயனடைய முடியும்.

நல்லவர்களும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் பாடுபடும் சாதாரண மக்களும் ஏழை எளியவர்களும் தன்மானம் இல்லாத வாழ்வு மட்டுமே வாழ முடியும்!....

அப்படிப்பட்ட மோசமான அரசு இயந்திரத்தை மாற்றி அமைப்பதைவிட உயர்ந்த மக்கள் பணி எதுவாக இருக்க முடியும்?....

அப்படி யாராவது திட்டவட்டமான வாக்குறுதியைக் கொடுக்கிறார்களா? அதற்கான அவர்களின் தகுதியைத் தெளிவாக்கி இருக்கிறார்களா?

ஆம் என்றால் அவர்களை நம்பலாம்! 

நம்பிப் பின்னால் ஓடுவது அல்ல! அனைவரும் அணிவகுத்து உன்னதமான அரசமைப்பையும் அரசியல் அமைப்பையும் உருவாக்கலாம். 

துரதிருஷ்ட வசமாக அப்படி மிகச் சரியான சக்திகள் நமக்கு முன்னால் இல்லை என்பதே உண்மை!...

No comments:

Post a Comment