ss

Monday, June 2, 2014

உணவே மருந்து (85)

அக்கு பஞ்சர் பெயரால் மோசடி......

(எனக்கும் ஒரு நண்பருக்கும் நடந்து உரையாடல். நண்பர் சொன்னதைக் கேள்வி என்றும் நான் சொன்ன பதிலை  நான் என்றும் குறித்திருப்பேன்)

கேள்வி:

ஐயா, காலை வணக்கம்.  தங்களுடைய ஒரு சமீபத்திய பதிவில் 'போலி அக்யு ஹீலர்கள்' என குறிப்பிட்டிருந்தீர்கள்.  எதனால் அவ்வாறு சொன்னீர்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா?  நன்றி.

நான்:

வணக்கமும் வாழ்த்துகளும் நண்பரே!....அக்கு பஞ்சர் பெயரால் மருத்துவம் பார்ப்பதாகச் சொல்லும் மற்றும் அப்பாவி மக்கள் கருதும் அத்தனை பேரும் உண்மையான மருத்துவர்களாக நீங்கள் கருதுகிறீர்களா?...

நானும் அப்படிக் கருதவில்லை. அதனால் அத்தகையவர்களை ப் போலிகள் என்று குறிப்பிடுவது நியாயம்தானே?

அத்தகையவர்களில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் பேருக்கு என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கும் ஆற்றல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?...

தொடு சிகிச்சை என்று சொல்லிக்கொண்டு எதுவும் தெரியாதவர்கள் புற்றீசல்போல் அதிகரிக்கும் நிலையில் அவர்களை எப்படி அழைக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட வகையை விமர்சிக்கும்போது அதில் உள்ள நல்ல அம்சங்கள் நல்லவர்களையும் குற்றச் சாட்டுகள் தவறானவர்களையும் சேரும்.  அப்படி அல்லாமல்  , அனைவரும்  சிறப்பான தகுதி உடையவர்கள் என்று கருதலாமா?...

கேள்வி:

அய்யா, தங்களுடைய பதிலுக்கு நன்றி.  நான் 4 வருடங்களுக்கு முன் எனக்கும், என்னுடைய குடும்பத்தினருக்கும் இருந்த தீவிர உடல் நலப் பிரச்சனைகளை சரி செய்வதற்க்கு ஆங்கில மருத்துவத்தை நாடிய போது எனக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்து.  எனவே நாங்கள் மற்ற மருத்துவ முறைகளான சித்த வைத்தியம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதியை முயற்சி செய்தோம்.  அவற்றிலும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.  அப்போதுதான் மறைந்த திரு. நம்மாழ்வார் அய்யா  மூலம்  தொடு சிகிச்சை (டாக்டர் Fazlur Rahman method) பற்றி தெரிய வந்தது.  ஒரு சரியான தொடு சிகிச்சை வல்லுனரை (அக்யூ ஹீலர்) அடையாளம் காண்பதற்கு நான் 5 அளவு கோல்களை  தேர்வு செய்தேன்.  அவையாவன: (1) அரசாங்க அங்கீகாரம் பெற்று சிகிச்சையளிப்பவரா?  (2) எத்தனை வருடங்களாக சிகிச்சையளித்து வருகிறார்? (3) இச்சிகிச்சை முறையை கட்டுப்படுத்தும் உயர் நிலைக் குழு உறுப்பினர்கள், நாம் அவர்களை அணுகும் பொது, நாம் கேட்கும் கேள்விகளுக்கு திருப்தியான பதில்களை தருகிறார்களா?  (4) சிகிச்சை பெற்ற எத்தனை பேர் குணமடைந்திருக்கிரார்கள்?  (5) நாடியைப் பரிசோதிப்பதில் சிகிச்சையாளரின் திறமை.

 மேலும் என்னுடைய அனுபவம் எனக்கு சொல்வது என்னவென்றால், போலிகள் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறார்கள்; வாழ்க்கையில் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சரியான பாதையோ அல்லது சரியான மனிதர்களோ கிடைக்காத நிலையில், நாம் மனம் தளராமல் தொடர்ந்து தேடும் போது சரியான பாதை / சரியான மனிதர்கள் கிடைப்பார்கள்.  நன்றி.

நான்:

நல்லது நண்பரே! உங்கள் அனுபவம் யாருக்கு நேர்ந்திருந்தாலும் அதுதான் செய்திருப்பார்கள்!

நான் ஆங்கில மருத்துவத்தின் இன்றைய நிலையை நன்றாக அறிவேன். அதன் பக்க விளைவுகளும் வர்த்தக சூதாட்டமும் அறிவேன். அதனால் மற்ற முறைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கும் விபத்துகளுக்கும் அறுவை தேவைப்படும் போதும், நுணுக்கமான சோதனைகளுக்கும் மட்டுமே ஆங்கில முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றபடி எந்த சிகிச்சையும் தேவைப்படாத வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதும் சிறு சிறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ப் பக்க விளைவுகள் இல்லாத முறைகளைப் பின்பற்றுவதுமே எனது மனதுக்கு உடன்பாடானது ஆகும்

எனது பதிவுகளிலும் விமர்சனங்களிலும் நான் சொல்வது என்னவென்றால் ஆங்கில மருத்துவத்தைக் குற்றம், குறை சொல்வதுமட்டும் வேறு ஒரு மருத்துவத்துக்கு உரிய தகுதிகள் ஆகாது!. அந்த மருத்துவ முறையின் உண்மையான சிறப்புக்களைச் சொல்வதும் அதன் மூலம் கிடைக்கும் பயன்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதுமே ஆகும்!....ஆனால் அப்படிச் செய்யாமல் ஆங்கில மருத்துவத்தைக் கண்டபடி விமர்சிக்கும் நபர்களையெல்லாம் போலிகள் என்று சொல்லாமல் சரியானவர்கள் என்று சொல்வது எப்படி?...அதுதான் பிரச்சினை!....

தவிர எந்த ஒரு மருத்துவ முறையும் அறிவியலுக்கும் உடல்கூறு இயலுக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும். அந்த மருத்துவம் எந்த முறையில் நமது உடலின் எந்தக் குறையை எப்படிப் போக்குகிறது என்று விளக்கவேண்டும். அப்படியெல்லாம் இதுவரை யாரும் விளக்கவில்லை!....
ஒருவர் உடம்பின் குறிப்பிட்ட பாகத்தைத் தொடுவதால் அல்லது தொடாமல் எதோ செய்வதால் நோய் குணமாகும் என்பதில் உள்ள அறிவியலை விளக்க ஏன் மறுக்கவேண்டும்?....அப்படி மறுப்பவர்கள் சொல்வதை உண்மைகள் என்று எப்படி நம்புவது?....அதனால் அதை ஒரு பிழைக்கும் உபாயம் என்று புறக்கணிக்கவேண்டி உள்ளது!....

கேள்வி:

அய்யா, தங்கள் பதிலுக்கு நன்றி.  தொடு சிகிச்சை தத்துவத்தின்படி விபத்து நிகழ்ந்தால் கூட அறுவை சிகிச்சையின் தேவையின்றி குணமாகின்றது.
ஒரு அக்யு ஹீலர், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியுடன்  மருத்துவம் செய்யும் போது அவரை 'போலி' என்று அழைப்பது சரியில்லை என நினைக்கிறேன்.  அதே சமயம் ஒரு அக்யு ஹீலர் (அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியுடன்  மருத்துவம் செய்யும் போது),  அவருடைய திறமை குறைவு காரணமாக தன்னை தேடி வரும் நோயாளிகளின் உடல் நலப் பிரச்சனைகளை குணப்படுத்த முடியவில்லை என்றால் அவரை திறமையற்றவர் என அழைக்கலாம்.  அப்படிப்பட்டவரிடம் நாளடைவில் மருத்துவத்துக்காக யாரும் செல்லாமல், அவர் மக்களால் நிராகரிக்கப்படுவார்.  அதுவே அனைத்து  துறைகளுக்குமான உலக நியதியல்லவா?
மற்ற மருத்துவ முறைகளைப் பற்றி குறை சொல்வதில் எனக்கு  உடன்பாடில்லை.
தொடு சிகிச்சையின் அடிப்படை தத்துவத்தின்படி. நம் உடலில் கழிவுகள் தேங்குவதும், தொடு சிகிச்சை சக்தி நாளங்களில் ஏற்படும் சக்தி ஓட்டத்தடையுமே நோயாகும். இப்படி கழிவுகள் தேங்குவதற்கு நம் உடலில் அமைந்துள்ள பன்னிரெண்டு முக்கிய உள்ளூறுப்புகளின் இயக்கக் குறைவே காரணமாக அமைகிறது. தொடு சிகிச்சை நோயறிதல் முறைகள் மூலம் பலவீனமடைந்த உள்ளுறுப்பைக் கண்டறிந்து, அவ்வுறுப்பின் சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ள சரியான தொடு சிகிச்சை புள்ளியைத் தூண்டுவதன் மூலம் நோய்க்குக் காரணமான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி ஆரோக்கியத்திற்குத் திரும்பலாம்.
இதனை நீங்கள் அறிவியல் அல்ல என நிராகரிக்கலாம்.

எனக்கு இவ்வாறு குணமடைதலின் அறிவியல் புரியாவிட்டாலும், குணமடைகிறார்களே, அதுவே பெரிது என நினைக்கிறேன்.  கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு, என்ற தத்துவத்தின்படி, என்னுடைய அறிவின் எல்லைக்கு ஒரு வரம்பு உள்ளதாக நினைக்கிறேன்.

தொடு சிகிச்சை அளிப்பதை ஒரு பிழைக்கும் வழி என்று தங்களுடைய பதிலில் சொல்லியிருந்தீர்கள்.  இது குறித்து என்னுடைய கருத்து.
(1) அக்யு ஹீலர்கள், ஒரு நோயாளிக்கு சிகிச்சையைத் துவங்கும் போது, ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறைகளை (பசித்தால் மட்டுமே உணவு உண்ணுதல், தாகம் எடுத்தால் தேவைக்கு ஏற்ற தண்ணீர் குடித்தல், பால், மைதா, வெள்ளைச் சர்க்கரை, போன்றவை உள்ள உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்த்தல், போன்ற விதிகளை) பின் பற்றச் சொல்கிறார்கள்.  அவற்றை நாம் தொடர்ந்து பின் பற்றும் போது, சில நாட்கள் / மாதங்கள் கழித்து, நம் உடல் நலம் சரியாகி, பிற்காலத்தில் நமக்கு எந்த ஒரு உடல் நலம் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளும் வராது என்றும், தொடு சிகிச்சைக்கே வர வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அக்யு ஹீலர்கள் சொல்கிறார்கள்.  அக்யு ஹீலர்களின் இக் கூற்று என்னுடைய சொந்த அனுபவத்தில் நிஜமாக ஆகி உள்ளது.

(2) மேலும் அக்யு ஹீலர்களின் ஒரு முக்கியமான தாரக மந்திரம், Dr . Fazlur Rahman, MBBS, MD, Acu (Phd), அவர்களின் வாக்கான: 'தொழில் ரகசியம், இறை துரோகம்'.  இதனைப் பின்பற்றி, தொடு சிகிச்சையை, அக்யு ஹீலர்கள், மத்திய அரசு அங்கீகாரத்துடன் பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு வருட பட்டய மற்றும் மூன்று வருட பட்டப் படிப்புக்கள் முலம் கற்றுக் கொடுக்கிறார்கள்.  இவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியை முடித்து மத்திய  அரசு அங்கீகாரத்துடன் தொடு சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
இவ்வாறு இருக்கையில், தொடு சிகிச்சையளிப்பது, பிழைப்புக்கு ஒரு வழி என்று சொல்வது சரியில்லை என்பது எனது பணிவான கருத்து.  நன்றி.

நான்:

.நாம் எடுத்துக்கொண்டுள்ளது பெரிய விஷயம். உங்கள் நோக்கத்தை நான் குறை சொல்லவில்லை!...நீங்கள் சொன்ன வழிமுறைகளை எத்தனைபேர் முறையாகப் பயின்று இந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?...இங்கு எனக்குத் தெரிந்தவரை ஒருவர்கூடத் தேரக்கூடியவர் இல்லை!....

ஆதாவது செய்யும் சிகிச்சையை விட உணவு சம்பந்தமாகவும் மற்ற பயிற்சிகள் சம்பந்தமாகவும் கொடுக்கும் ஆலோசனைகள் நிச்சயம் பயன்கொடுக்கும்!....நீங்கள் சொல்பவர்களின் சிகிச்சை வெற்றிக்கு அதுதான் காரணமாக இருக்கும்! தொடுதல் என்பது மனநம்பிக்கைக்காகச் செய்யப்படும் சடங்காகவே நான் பார்க்கிறேன். அதனால் பயன் கிடைக்கிறது என்றால் தொடுதல் உடலில் எப்படி வினை புரிகிறது என்பதை யாராவது தெளிவாக்க வேண்டும்!....

தவிர நோயாளி பேசமுடியாத நிலையில் இருந்தால் எந்த அடிப்படையில் அவருக்குத் தோடு சிகிச்சை அளிப்பார்கள்? அல்லது நோயைப் பற்றி நோயாளிக்கே தெரியாத நிலையில் என்ன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று எப்படி அறிவார்கள்?

கேள்வி:

தாங்கள் சொன்னீர்கள்:
உங்கள் நோக்கத்தை நான் குறை சொல்லவில்லை!...நீங்கள் சொன்ன வழிமுறைகளை எத்தனைபேர் முறையாகப் பயின்று இந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?...இங்கு எனக்குத் தெரிந்தவரை ஒருவர்கூடத் தேரக்கூடியவர் இல்லை!....
எனது கருத்து:
என்னுடைய உறவினர்களும், நண்பர்களும், சிகிச்சைக்காக அக்யு ஹீலர்களின் பெயர்களை பரிந்துரைக்க சொல்லும்  போது நான் பரிந்துரைக்கும் பெயர்கள்: திரு. போஸ் முகமது மீரா (மதுரை), திரு. உமர் பாருக் (கம்பம்), திரு. மஹி ராமலிங்கம் (கோயம்பத்தூர் மற்றும் ஹோசூர்), திரு. வசீர் அகம்மது சுல்தான் (சென்னை), திரு. எங்கல்ஸ் ராஜா (மறைந்த வேளாண் விஞ்ஞானி மதிப்புக்குரிய திரு. நம்மாழ்வார் அய்யாவின் வலது கரம்) (சென்னை). இவர்கள் அனைவரும் இத் துறையில் 7-10 வருட அனுபவம் உள்ளவர்கள்.  மற்ற அக்யு ஹீலர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.
தாங்கள் சொன்னீர்கள்:
ஆதாவது செய்யும் சிகிச்சையை விட உணவு சம்பந்தமாகவும் மற்ற பயிற்சிகள் சம்பந்தமாகவும் கொடுக்கும் ஆலோசனைகள் நிச்சயம் பயன்கொடுக்கும்!....நீங்கள் சொல்பவர்களின் சிகிச்சை வெற்றிக்கு அதுதான் காரணமாக இருக்கும்!
என்னுடைய புரிதல்:
அக்யு ஹீலர்கள்  சொல்வது என்னவென்றால், நோயை குணப்படுத்துவதில் நோயாளியின் பங்கு 99%.  அக்யு ஹீலர்களின் பங்கு: 1%.
தாங்கள் சொன்னீர்கள்:
தொடுதல் என்பது மனநம்பிக்கைக்காகச் செய்யப்படும் சடங்காகவே நான் பார்க்கிறேன். அதனால் பயன் கிடைக்கிறது என்றால் தொடுதல் உடலில் எப்படி வினை புரிகிறது என்பதை யாராவது தெளிவாக்க வேண்டும்!....
என்னுடைய புரிதல்:
சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ள சரியான தொடு சிகிச்சை புள்ளியைத் தூண்டுவதன் மூலம் நோய்க்குக் காரணமான கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு உடல் ஆரோக்கியத்திற்குத் திரும்புகிறது.  இச் செயலை, நாம் கண்களால் காண முடியாது; இதனுடைய விளைவை நமது உடல் நலமடைதலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தாங்கள் சொன்னீர்கள்:
தவிர நோயாளி பேசமுடியாத நிலையில் இருந்தால் எந்த அடிப்படையில் அவருக்குத் தோடு சிகிச்சை அளிப்பார்கள்? அல்லது நோயைப் பற்றி நோயாளிக்கே தெரியாத நிலையில் என்ன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று எப்படி அறிவார்கள்?
என்னுடைய புரிதல்:
நோயாளி பேசமுடியாத நிலையில் இருக்கும் போது, நோயாளியின் அருகில் இருக்கும் உறவினர்கள் / நண்பர்கள் சொல்வது மற்றும் நாடிப் பரிசோதனையின் முலம் என்ன நோய் என தெரிந்து கொண்டு, சிகிச்சை  அளிக்கிறார்கள்.

நான்:

உங்களின் ஆங்கில மருத்துவத்துக்கு எதிரான உணர்வையும் இயற்கை முறைகளுக்கு அதரவான உணர்வையும் பாராட்டுகிறேன். ஒரு மருத்துவம் என்பது சில நபர்களை மட்டும் சார்ந்ததாக இருக்கக்கூடாது!. அப்படி இருந்தால் அது மருத்துவமே அல்ல!. சொந்தத் திறமை என்று மட்டுமே என்று சொல்லவேண்டும். நீங்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் தவறானவர்கள் என்று தெரிகிறது!. இது சரியா என்று சோதிப்பதற்கு நான் ஒரு முறையைச் சொல்கிறேன். நம்பிக்கையான நான்கு தொடு சிகிச்சை மருத்துவர்(?) களிடம் ஒரே நோயாளியைத் தனித் தனியாக அழைத்துச் சென்று நோயைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்காமல் சோதித்து அறியும்படி கேட்டால்  அந்த நால்வரும் ஒரேமாதிரியான கருத்தைச் சொல்வார்களா?....நிச்சயம் மாட்டார்கள்! அப்படியானால் அந்த நால்வரில் யார் சரியானவர் யார் தவறானவர் என்று முன்கூட்டியே அறிவது எப்படி?....

கேள்வி:

நீங்கள் சொன்னீர்கள்:
ஒரு மருத்துவம் என்பது சில நபர்களை மட்டும் சார்ந்ததாக இருக்கக்கூடாது!. அப்படி இருந்தால் அது மருத்துவமே அல்ல!. சொந்தத் திறமை என்று மட்டுமே என்று சொல்லவேண்டும். நீங்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் தவறானவர்கள் என்று தெரிகிறது!.
எனது விளக்கம்:
அய்யா மன்னிக்கவும்.  நான் அவ்வாறு சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த அனுபவம் மற்றும் திறமை உள்ள அக்யு ஹீலர்களின் பெயர்களைத்தான் நான் சொன்னேன்.  எனக்குத் தெரியாதவர்கள் பலர் இருக்கலாம்.  ஒரு ஆங்கில மருத்துவரை முதல் முறையாக அணுக நேரும் பொது, அவர் பெயர்ப் பலகை வைத்து கிளினிக் வைத்திருக்கிறார் என்பதற்காக செல்ல மாட்டோம்.  அவரைப் பற்றி தீர விசாரித்து, திறமையானவர் என்று தெரிந்தால்தான் அவரிடம் செல்வோம்.  அதே போன்று ஒரு சிறந்த அக்யு ஹீலரையும் விசாரித்து அறிந்து தேர்வு செய்யலாம்.  தொடு சிகிச்சைக்கு வரும் முன், நான் வசிக்கும் பகுதியில், ஆங்கில மருத்துவரை அணுக நேரும் போது, நான் என்னுடைய குடும்ப ஆங்கில மருத்துவரிடம் மட்டுமே செல்வேன்.  அவர் வெளியூர்  சென்றிருந்தால், அவருடைய மகன் ஒரு ஆங்கில  மருத்துவராக இருக்கின்ற போதும், அவருடைய மகனிடம் நான் செல்ல மாட்டேன்.  அது போன்ற சமயங்களில், நான் வசிக்கும் பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கிளினிக் வைத்திருக்கும், நான் நன்கு அறிந்த இன்னொரு ஆங்கில மருத்துவரிடம்தான் செல்வேன்.  நான் வசிக்கும் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்ப்பட்ட ஆங்கில மருத்துவர்கள் இருக்கிறார்கள்.  மேலும் 5-க்கும் மேற்ப்பட்ட பெரிய ஆங்கில மருத்துவமனைகள் உள்ளன.  நான் செல்லாத ஆங்கில மருத்துவர்களை / ஆங்கில மருத்துவமனைகளை, நான் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்லலாம்.  ஆனால் அவர்களைத்  தவறானவர்கள் என்றோ ஆங்கில மருத்துவம் என்பது சில நபர்களை மட்டும் சார்ந்ததாக இருக்கிறது என்றோ சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன்.
மேலும் தொடு சிகிச்சை என்ற ஒரு மருத்துவ முறை துவங்கி குறுகிய காலமே (15 வருடங்கள்) ஆகிறது. எனவே இம்முறையில் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.  விரைவில் மேலும் பல நிபுணர்கள் உருவாவார்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் சொன்னீர்கள்:
இது சரியா என்று சோதிப்பதற்கு நான் ஒரு முறையைச் சொல்கிறேன். நம்பிக்கையான நான்கு தொடு சிகிச்சை மருத்துவர்(?) களிடம் ஒரே நோயாளியைத் தனித் தனியாக அழைத்துச் சென்று நோயைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்காமல் சோதித்து அறியும்படி கேட்டால் அந்த நால்வரும் ஒரேமாதிரியான கருத்தைச் சொல்வார்களா?....நிச்சயம் மாட்டார்கள்! அப்படியானால் அந்த நால்வரில் யார் சரியானவர் யார் தவறானவர் என்று முன்கூட்டியே அறிவது எப்படி?....
எனது விளக்கம்:
இச் சோதனையை, தொடு சிகிச்சைக்கு மாத்திரமல்ல, எந்த ஒரு சிகிச்சை முறைக்கு (ஆங்கில மருத்துவம் / சித்தா / ஆயுர்வேதா / ஹோமியோபதி) வைத்தாலும், அச்சிகிச்சை முறையில் உள்ள எந்த ஒரு நான்கு  மருத்துவர்களும் ஒரேமாதிரியான கருத்தைச் சொல்வது என்பது மிகவும் அரிது.  அந்த நால்வரில் யார் சரியானவர் யார் தவறானவர் என்று முன்கூட்டியே அறிவதற்க்கு உள்ள, எனக்குத் தெரிந்த ஒரே வழி 'தீர விசாரிப்பது'.

நான்:

இன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தால் எந்த மருத்துவ மனையில் சோதித்தாலும் சோதனை முடிவுகளில் பெரிய வேறுபாடு இருக்காது!. காரணம் அவற்றுக்கு உரிய சோதனை முறைகளை ஒவ்வொரு மருத்துவமும் பெற்றிருக்கிறது. ஆனால் அப்படிப் பட்ட சோதனை முறைகள் இல்லாமல் எப்போதும் முடிவுகளை ஒரேமாதிறிச் சொல்ல முடியாது!.தவிர இந்தத் தோடு சிகிச்சை என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை!. அப்படி இருந்திருந்தால் அதை விளக்கமுடியும்!...ஆனால் விளக்கியவர்கள் எவரும் இல்லை!. ஒரு கிராமத்து அப்பாவிகளுக்கு வேறொருவர் மந்திரித்து விடுவது போன்றதுதான் இந்தத் தொடுதல் சிகிச்சை!. அதைவிட இதை எப்படி மேலானது என்று எதைக்கொண்டு முடிவு செய்வது?....

Dr . Fazlur Rahman, MBBS, MD, Acu (Phd), அவர்களின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்த்திருக்கிறேன்.

அந்த அரங்கிலும் ஆங்கில மருத்துவத்தைக் குறைசொல்வதுதான் முக்கிய அம்சமாக இருந்தது!....கடைசியில் நான் ஒரு ஐந்து நிமிடங்கள் ஐயம் கேட்க அனுமதி கேட்டு அது கிடைக்கவில்லை!....கிடைத்திருந்தால் அங்கும் இதே கேள்விகளை எழுப்பியிருப்பேன். பதில் கிடைத்திருக்கலாம்!.....அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று தெரியாது!....

கேள்வி:

தாங்கள் சொன்னீர்கள்:
இன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தால் எந்த மருத்துவ மனையில் சோதித்தாலும் சோதனை முடிவுகள் பெரிய வேறுபாடு இருக்காது!. காரணம் அவற்றுக்கு உரிய சோதனை முறைகளை ஒவ்வொரு மருத்துவமும் பெற்றிருக்கிறது. ஆனால் அப்படிப் பட்ட சோதனை முறைகள் இல்லாமல் எப்போதும் முடிவுகளை ஒரேமாதிறிச் சொல்ல முடியாது!.
என்னுடைய சொந்த அனுபவம்:
ரத்தம் மற்றும் ஸ்கேன் சோதனை முடிவுகள், ஒரு பரிசோதனைக் கூடத்துக்கும் இன்னொரு பரிசோதனைக் கூடத்துக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடுவதை, பல முறை நான் பார்த்திருக்கிறேன்.
தாங்கள் சொன்னீர்கள்:
தவிர இந்தத் தோடு சிகிச்சை என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை!.   அப்படி இருந்திருந்தால் அதை விளக்கமுடியும்!...ஆனால் விளக்கியவர்கள் எவரும் இல்லை!. ஒரு கிராமத்து அப்பாவிகளுக்கு வேறொருவர் மந்திரித்து விடுவது போன்றதுதான் இந்தத் தொடுதல் சிகிச்சை!. அதைவிட இதை எப்படி மேலானது என்று எதைக்கொண்டு முடிவு செய்வது?....
என்னுடைய கேள்வி:
அறிவியல் அடிப்படை என்றால்  என்ன என்பதை தயவு செய்து சொல்லுங்கள்.
தாங்கள் சொன்னீர்கள்:
Dr . Fazlur Rahman, MBBS, MD, Acu (Phd), அவர்களின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்த்திருக்கிறேன்.
அந்த அரங்கிலும் ஆங்கில மருத்துவத்தைக் குறைசொல்வதுதான் முக்கிய அம்சமாக இருந்தது!...
என்னுடைய புரிதல்:
ஆங்கில மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அம் மருத்துவ முறை முற்றிலும் தவறானது என்பதால், அதனை விட்டு வெளியேறினார்.  அதற்க்கு அவர் சொல்லும் காரணங்கள், ஆங்கில மருத்துவத்தின் குறைபாடுகள் என்பது எனது கருத்து.
தாங்கள் சொன்னீர்கள்:
கடைசியில் நான் ஒரு ஐந்து நிமிடங்கள் ஐயம் கேட்க அனுமதி கேட்டு அது கிடைக்கவில்லை!....கிடைத்திருந்தால் அங்கும் இதே கேள்விகளை எழுப்பியிருப்பேன். பதில் கிடைத்திருக்கலாம்!.....அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று தெரியாது!....
என்னுடைய புரிதல்:
நீங்கள் கூறுவது சரி.  அவருடைய நிகழ்ச்சிகளில், கேள்வி கேட்க அனுமதியில்லை.

நான்:
சோதனைகளுக்கு உட்படுத்தி ஒரு கோட்பாடு உறுதிசெயயப்படுவதுதான் அறிவியல் அடிப்படை!.....

ஒவ்வொரு சோதனைக்கூடத்திலும் ரத்த வகை ஒவ்வொரு விதமாக இருக்காது!.கிருமிகள் வேறுவேறாக இருக்காது!. எக்ஸ்ரே ஒவ்வொரு விதமாக இருக்காது! ஸ்கேன் ஒவ்வொரு விதமாக இருக்காது!....அதனால் உங்கள் சொந்த அனுபவத்தை  சோதனைக்கூட முடிவுகளுடன் ஒப்பிட முடியாது!. நீங்கள் அதைப் புரிந்துகொள்ளும் முறை அறிவியல் விதிகளின்படி அல்ல!....

உலக மருத்துவத்தின் அடிப்படைகளைத் தீர்மானிப்பதற்கு தனியொரு மருத்துவர் யாருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வில்லை! அதனால் ஒருவர் சொல்வது உலக மருத்துவ முடிவு ஆகாது!.....

தொடாமலே பஜ்லூர் ரஹ்மான் சிகிச்சை செய்து குணப்படுத்தி வருவதாக அவருக்கு முன்னாலேயே ஒருவர் பேசினார்! அவர் மறுக்கவில்லை!. அப்படியானால் அவர் தொட்டோ தொடாமலோ ஒரு நோயாளியைக் குணப்படுத்துவாரா?....நிச்சயம் முடியாது!. அதனால் அவரின் பெயரால் நடப்பதை அவருடைய வழி நடப்பவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்!.அதை மெய்ப்பிக்காத வரையில் அவரும் ஒரு மற்றவர்களில் ஒருவரே!.

அந்த அரங்கில் வந்திருந்த அனைவரும் நோய்க்குச் சிகிச்சைக்காக ஒருவரிடம் சென்று நோயைக் குணப்படுத்திக்கொண்டதுடன் தங்களும் கற்றுக்கொண்டு தொழில் துவங்கியதாக ஒரே மாதிரிச் சொன்னார்கள். அவர்கள் தாங்கள் சந்தித்த எதோ  ஒருவரைத் தவிர வேறு யாரையும் பார்த்ததுகூட இல்லை! அவர்களுக்கு தொடுசிகிச்சை மருத்துவர் என்று அந்தக் கூட்டத்தில் சான்று வழங்கப்பட்டது!. அவர்கள் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை!...ஆக, ஆம்வே பாணியில் சங்கிலி இணைப்பாக இப்படிப்பட்ட நபர்களை இவர்கள் உருவாக்கி மக்களிடம் விடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்!

நீங்கள் அதில் எதோ ஒரு வகையில் பிணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் அதிலிருந்து மீண்டுவந்து எனது கூர்மையான விமர்சனங்களை ஆராயாமல் எனக்குச் சமாதானம் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!. அது உங்கள் பாதை என்றால் தொடருங்கள்!....உங்கள்மேல் எனக்கு எப்போதும் மதிப்பு இருக்கிறது!.....

இன்னும் நீண்ட விவாதம் நடத்த  நீங்கள் விரும்பினால் எனக்கு மகிழ்ச்சி !.

காரணம் ஒரு தவறுக்கு எதிராக எனது சக்தியையும் நேரத்தையும் செலவு செய்த மாதிரி இருக்கும்!.

ஆனால் யாருடைய பெயரையும் சொந்த அனுபவங்களையும் குறிப்பிடாமல் மருத்துவத்தைக் குறித்தும் அதன் அடிப்படைகளைக் குறித்தும் மட்டும் ஆழமாக விவாதிப்போம்!.

கேள்வி:

நான் சமாதானம் சொல்கிறேன் என்று நீங்கள் சொன்ன பின்னர், இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என நினைக்கிறேன்.  ஏனெனில், நான் சொல்லும் கருத்துக்கள் அனைத்துமே உங்களுக்கு நான் சொல்லும் சமாதானமாகத்தான் தோன்றும்.

நான்:

நன்றி நண்பரே!....வாழ்க்கையையும் அதில் அடங்கியுள்ள அத்தனையையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து வாழ்கிறோம். ஆனால் அந்தப் புரிதல் இணக்கமாக இருக்குமளவு பயன் கூடுகிறது. நல்ல நோக்கம் உடையவர்களும்கூட தவிர்க்கமுடியாமல் முரண்பட்டுவிடுவது இயல்பானதே காரணம் வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடுகளே! ஆனால் அது காலத்தால் சரிசெய்யப்படும். எந்த ஒரு கருத்தும் உடனே ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை. அது சரி அல்லது தவறு என்று வாழ்க்கை அனுபவங்கள் கற்றுக்கொடுக்கும்போது உண்மை உணரப்படுகிறது! உண்மைகளின்மேல் கட்டி எழுப்பப்படும் கருத்துக்கள்கூட அப்படியே! அதுதான் உலக வாழ்க்கையின் நியதி!

கேள்வி:

அய்யா,
இன்றைய என்னுடைய ஒரு பதிவுக்கு, தாங்கள் சொல்லியிருந்தீர்கள்:
//ஆனால் சீன மருத்துவமான அக்கு பஞ்சர் மருத்துவத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு அக்கு பிரஸ்ஸர் என்றும் அக்கு டச் என்றும் அக்கு நான்டச் என்றும் சொல்லி அப்பாவி மக்களை ஒரு கும்பல் ஏமாற்றிப் பிழைத்துக்கொண்டுள்ளது. //
அவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களைப் பற்றிய தகவல் தங்களிடம் இருந்தால், தயவு செய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நன்றி.

நான்:

நண்பரே!...அப்படிச் செய்வதே தவறு என்னும்போது அதன்மூலம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அது ஏமாற்று வேலைதானே? அதற்கு நிரூபணம் கொடுக்க முடியாத அளவு அதன்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா?
நான் ஒரு அலைபேசி எண் கொடுக்கிறேன். அவர் உங்களின் மரியாதைக்கு உரிய ராமலிங்கம் என்பவரிடம் பல முறை காசு கொடுத்து மனம் வெறுத்தவர்!..அவரை அவருடைய தொடு சிகிச்சை அனுபவம் பற்றிய அனுபவங்களைக் கேட்கிறீர்களா?...இத்தனைக்கும் அவரைப்போல் நல்ல மனிதரைப் பார்ப்பது கடினம்!....

கேள்வி:

அய்யா, நீங்கள் எழுதியிருந்தீர்கள்:
//அப்படிச் செய்வதே தவறு என்னும்போது அதன்மூலம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அது ஏமாற்று வேலைதானே? அதற்கு நிரூபணம் கொடுக்க முடியாத அளவு அதன்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா?//
இந்த இடத்தில் சுருக்கமாக ஒன்றைத் தெரிவிக்கிறேன்.  

உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ளும் போது, நான் வெவ்வேறு மருத்துவ முறைகளை (ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, இயற்க்கை வைத்தியம், யோகா, பஞ்சகவ்யம், திபெத்திய வைத்தியம், அக்குபங்சர்  மற்றும் நாட்டு வைத்தியம்) அணுக வேண்டிய தேவை எனக்கு எப்போதுமே உண்டு.  நான் முயற்சி செய்த எந்த ஒரு மருத்துவ முறையிலும் எனக்கு திருப்தி இல்லை.  அப்போதுதான் மறைந்த வேளாண் விஞ்ஞானி, திரு. நம்மாழ்வார் அய்யா தொடு சிகிச்சை பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  அதன் பின்னர் அது குறித்த தகவல்களை, சுமார் 2 வருடங்களுக்கு முன் சேகரிக்க ஆரம்பித்தேன்.  என்னுடைய அனுபவத்தில் எங்களுக்கு தொடு சிகிச்சை ஒரு வரப் பிரசாதாமாக தெரிகிறது.  அதே சமயத்தில் நான் தொடு சிகிச்சையின் நோய்களை தீர்க்கின்ற ஆற்றல் குறித்து திறந்த மனதுடன் தகவல்களை தொடர்ந்து திரட்டி வருகிறேன்.  தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் ஒரு வருட தொடு  சிகிச்சை பட்டயப் பயிற்சியில் தற்போது சேர்ந்துள்ளேன்.  மேலும் தொடு சிகிச்சையில், சிகிச்சை பெற்று குணமான மற்றும் குணமாகாதவர்களை சந்தித்து (நேரில் அல்லது தொலைபேசி) மூலம் உரையாடி திறந்த மனதுடன் தகவல்களை திரட்டும் எண்ணமும் எனக்கு உள்ளது.
     
அய்யா, நீங்கள் எழுதியிருந்தீர்கள்:
//நான் ஒரு அலைபேசி எண் கொடுக்கிறேன். அவர் உங்களின் மரியாதைக்கு உரிய ராமலிங்கம் என்பவரிடம் பல முறை காசு கொடுத்து மனம் வெறுத்தவர்!..அவரை அவருடைய தொடு சிகிச்சை அனுபவம் பற்றிய அனுபவங்களைக் கேட்கிறீர்களா?...இத்தனைக்கும் அவரைப்போல் நல்ல மனிதரைப் பார்ப்பது கடினம்!....//
அவருடைய பெயர் மற்றும் அலைபேசி எண்ணை தயவு செய்து கொடுங்கள்.  அவருடைய அனுபவத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நான்:
நல்லது நண்பரே! உங்கள் குடும்பப் பொறுப்பு உங்களுக்கு நிறையப் பொறுமையையும் அனுபவங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. அது வரவேற்க வேண்டிய விஷயம்... நான் எந்த மருத்துவத்துக்கும் எதிரானவன் அல்ல! ஒவ்வொரு மருத்துவத்துக்கும் என்ன தகுதியோ அந்த அடிப்படையில் அதை நாம் நமக்குப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில் அனைத்து மருத்துவங்களுக்கும் தனித்த சிறப்புகள் உண்டு! ஆனால் இதைப் பொருத்தவரை அக்கு பஞ்சர் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப் படுகிறதே தவிர அக்கு பஞ்சர் முறையைப் பின்பற்றுபவர்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். உண்மையா இல்லையா? ஆனால் தொடு வைத்தியம் தொடாத வைத்தியம், செவிவழி வைத்தியம், கண்வழி வைத்தியம் என்பது போன்ற சங்கதிகள்தான் நடந்துகொண்டு உள்ளன. நான் அவற்றைக்கூட மெய்ப்பித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். அப்படி இல்லாமல் குடுகுடுப்பைக்காரனைப்போலச் சொல்கிறார்களே தவிர மெய்ப்பிக்க யாரும் தயாராக இல்லை! நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

உங்கள் குடும்பத்து நோய்ப் பிரச்சினைகளுக்கு சுகம் கிடைத்ததற்குக் காரணம் தொடு வைத்தியம் செய்ததால் அல்ல! நீங்கள் அதோடு சேர்த்துப் பின்பற்றிய நல்ல பழக்கங்களால்தான் என்பது நிச்சயம்! காரணம் ஆங்கில மருத்துவம் பார்த்தபோது நீங்கள் பின்பற்றிய பழக்க வழக்கத்துக்கும் தொடுவைத்தியம் பார்த்த பின்னால் பழக்க வழக்கத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். அதுதான் உங்கள் நிவாரணத்துக்குக் காரணம்! பாரம்பரிய மருத்துவங்கள் அனைத்திலுமே கொடுக்கும் மருந்தைவிட கடைப்பிடிக்கும் பைத்தியமும் கட்டுப்பாடும் பயிற்சியும்தான் குணமளிக்கும் சக்திகள் ஆகும். அதுதான் உங்கள் குடும்பத்துக்கும் சுகம் அளித்திருக்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள்! உண்மை தெளிவாகும்!.

அப்படியும் உங்கள் எண்ணம் முடிவானது என்றால் நான் ஏற்றுக் கொள்ளாத சங்கதிகள் எப்படி உடம்பில் செயல்படுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குங்கள்!....

நான் சொன்ன உறவினர் பெயர் திரு . +++++++ அலைபேசி எண் கொடுக்கிறேன்.....+++++++

அவருடன் தொடர்புகொண்டு கேளுங்கள் நண்பரே!... அவர் ஒரு பண்பாளர்!...ஐம்பத்தி ஐந்து வருடங்களைக் கடந்தவர்.....

கேள்வி:
அய்யா. நன்றி.  நான் அவரிடம் தொடர்பு கொண்டு, பின்னர் என்னுடைய கருத்தை தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

நான்:

நல்லது நண்பரே! மிக்க மகிழ்ச்சி!

அலோபதியில் உள்ள குறைகளும் அதன் பக்க விளைவுகளும் எல்லோரும் அறிந்தவையே!

ஆனால் அதை நிராகரிக்குமளவு நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் சிறப்பாக வளர்க்கப்படவில்லை.

அதனால் அது பெரும் சக்தியாக வளர்ந்து விட்டது.

அந்த உண்மையை உணர்ந்து இயற்கையோடு இயைந்த வாழ்வையும் உணவையும் மருத்துவத்தையும் வளர்த்து நோயற்ற நிலையைநோக்கிப் பயணிக்க வேண்டும்.

ஆனால் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கற்றவர்களும் தொழில் செய்பவர்களும் ஆங்கிலமருத்துவத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களால் அவற்றில் உள்ள போலிகளைத் தடுக்கக்கூட இயலவில்லை!

காரணம் அரசுகளின் ஆதரவு இன்மையாகும்.

இந்த நிலையை நினைத்து பாரம்பரிய மருத்துவர்களும் மருத்துவங்களும் கவலைப் படுவதிலும் அக்கரைப் படுவதிலும் பொருள் இருக்கிறது!

ஆனால் சீன மருத்துவமான அக்கு பஞ்சர் மருத்துவத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு அக்கு பிரஸ்ஸர் என்றும் அக்கு டச் என்றும் அக்கு நான்டச் என்றும் சொல்லி அப்பாவி மக்களை ஒரு கும்பல் ஏமாற்றிப் பிழைத்துக்கொண்டுள்ளது.

அந்தக் கும்பல் அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வதன்மூலம் தங்களின் மோசடியை மூடி மறைத்து நல்லவர்கள்போல் நாடகமாடி சட்டத்திலிருந்து தப்பித்து தங்களையும் மருத்துவத் துறையின் ஒரு அங்கமாகக் காட்ட முயல்கிறார்கள் என்பதுதான் பெரிய வேடிக்கை!.....

அலோபதி மருத்துவத்தை இயன்ற்வரை தவிர்க்க முயல்வதும் பாரம்பரிய மருத்துவர்களில் நம்பகமானவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் போலிகளிடம் ஏமாறாமல் இருப்பதுமே இன்றைய நிலையில் சராசரி மனிதர் செய்யக்கூடிய சாத்தியமான வழியாகும்.

கேள்வி:

அய்யா, மத்திய அரசு, தமிழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ( http://tamiluniversitydde.org/courses.php ), பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்பத்தூர்) ( http://www.b-u.ac.in/sde_syllabus/1314/dip_28.pdf ) மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ( http://www.pmu.edu/coursesoffered.aspx ) வாயிலாக அக்குபங்சரில் சான்றிதழ் மற்றும் பட்டயப் பயிற்சிகளை நடத்தி வருகின்றது. அக்குபங்சரில் சிகிச்சை பெருபவர்கள், ஏமாறாமல் இருக்க, மேற்கண்ட அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களிடம் சிகிச்சை பெறலாம்.

நான்:

இதுபோல்  அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அறிவுபூர்வமான செயல்பாடுகளை வரவேற்கிறேன்.ண்பரே!...

அதற்காகப் போலிவேடதாரிகள் தொடு வைத்தியம் தொடாத வைத்தியம் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை மறுக்கவோ மறக்கவோ தவிர்க்கவோ முடியாது.

போலியை நம்பி நியாயப் படுத்துபவர்கள்  முன்னதாக அந்தக் குற்றச் சாட்டுக்கு அடிப்படையாக இருக்கும் தொடு வைத்தியம் தொடாத வைத்தியம் இரண்டும் எப்படி சரியானது என்று நிரூபிக்க முயற்சி செய்திருக்க வேண்டும்!

தவறைத் தவறென்று மெய்ப்பிப்பது அவ்வளவு கடினமானது அல்ல!

 சரி என்று மெய்ப்பிப்பவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு தருகிறேன். (பத்துக் கோடியை அறிவிக்கலாம்.ஆனால் எனக்கு வசதி இல்லை!) ஏற்றுக்கொள்ளும் ஒருவரைச் சொல்லுங்கள்! அதற்கான விதிகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றை முடிவு செய்வோம்.

பாராபட்சமற்ற நியாய உணர்வு கொண்டவராக இருந்தால் இங்கு விவாதிப்பதன்மூலமே முடிவுக்கு வரமுடியும்!.

அக்கு டச், அக்கு அன் டச் இந்த இரண்டைச் சொல்லி கடை விரித்து நடத்தும் யாராக இருந்தாலும் அதைப் பற்றி மட்டும் பேச அழையுங்கள் ! பேசுவோம்!....

ஆங்கில மருத்துவத்தின் தவறுகள், மற்ற பாரம்பரியமருத்துவத்தின் பயன்கள், இயற்கை உணவு மற்றும் வாழ்வு முறையின் நன்மைகள் இவற்றை அதன் வழி நடப்பவர்கள் சொல்வதில் அர்த்தமும் நியாயமும் இருக்கிறது! அதற்குச் சம்பந்தம் இல்லாத போலிகள் சொல்வது அவர்களைத் தற்காத்துக்கொள்ளும் தந்திரம் தவிர வேறொன்றும் இல்லை!.

கேள்வி:

எனக்கும், திரு. சுபாஷ் கிருஷ்ணசாமி அய்யா அவர்களுக்கும் இடையில் நடைபெறும் இக் கருத்துப் பரிமாற்றத்தைக் கவனித்து வருபவர்களுக்காக நான் சொல்ல விரும்புவது:
மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு தமிழக பல்கலைக்கழகத்தில் தொடு சிகிச்சை பயின்ற ஒரு தொடு சிகிச்சையாளரிடம், நானும் என்னுடைய குடும்பத்தைச் சார்ந்த 3 பெரும் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுக்கு 80-90% வரை குணமாகியுள்ளது. எங்களுக்கு தொடு சிகிச்சை குறித்து முழு திருப்தியும் உள்ளது. நான் இப்பதிவுகளில் யாருடைய பெயரையும் Privacy காரணங்களுக்காக குறிப்பிட வேண்டாம் என தீர்மானித்திருக்கிறேன். மேலும் விபரங்கள் தேவைப்படுவோர், என்னுடன் 'தனிச் செய்தி' மூலம் தொடர்பு கொள்ளவும். எனக்கு மேலும் தகவல்கள் தெரியும் போது தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

நான்:

ஆதாவது ஒரு கோட்பாட்டை ஆராய்வது என்பது அதில் சொல்லப்படும் செய்திகளை ஆழமாக நடைமுறை அனுபவங்களுடனும் அறிவியலுடனும் ஒப்பிட்டு ஆராய்வதே!....தனிநபர்களின் அனுபவங்கள் ஒரே மாதிரி இருக்காது. காரணம் அனைவரும் ஆய்வாளர்கள் அல்ல!. அதனால் ஒரு மருத்துவத்தைப் பற்றிய ஒவ்வொருவரின் தனித்தனியான அபிப்பிராயங்கள் என்பது ஒரு பொது முடிவு ஆகாது!....ஒருவரிடம் வைத்தியத்துக்குச் செல்லும் ஒருவர் அந்த வைத்தியத்தால் கிடைத்த பயனை அல்லது கிடைக்காததை ஆய்வு அடிப்படையில் சொல்ல முடியாது! அதனால் பாமர மக்களின் கருத்துக்களை விளைவுகளைப் பற்றிய அனுபவங்களாகக் கொள்ள முடியுமே தவிர ஆய்வு முடிவுகளாக எடுத்துக்கொள்ள முடியாது!

கேள்வி:

நோயாளி  மருத்துவர்  சொல்லும் விதி முறைகளை சமரசம் செய்யாமல் பின் பற்ற வேண்டும். இதனுடன் தொடு சிகிச்சையாளரின், சிகிச்சையும் இணையும் போது, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும், மலம், சிறுநீர், சளி, வேர்வை, உடல் சூடு, உடல் வலி, நமது மூச்சுக் காற்று, வாயு, மற்றும் பல வழிகளில் வெளியேறும். நோயாளியின் உடல் நலமடையும்.

கழிவு நீக்க தத்துவம், தொடு சிகிச்சையின் ஒரு சில முக்கியமான அடிப்படைகளில் ஒன்று. .

ஒரு சில பேருக்கு தொடு சிகிச்சையில், சிகிச்சை செய்து, ஒரு சில நாட்களில் குணமாகின்றது. ஒரு சில பேருக்கு சில மாதங்கள் / வருடங்கள், தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் போது, குணமாகின்றது. தொடு சிகிச்சையில் குணமாகாத நோய் என்பது கிடையாது.

தொடு சிகிச்சையில் என்னைக் கவர்ந்த ஒரு முக்கியமான விஷயம், மேற்குறித்த விதி முறைகளை நோயாளி, அவருடைய உடல் நலமடைந்த பின்னரும் சமரசம் செய்யாமல் பின்பற்றும் போது, அவருடைய ஆயுள் முழுமைக்கும், தொடு சிகிச்சைக்கும் வர வேண்டிய அவசியம் வராது.

தொடு சிகிச்சை (அக்குபங்சரில்) சிகிச்சை பெறுபவர்கள், குணமடைய, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களிடம் சிகிச்சை பெறலாம், என்பது எனது பணிவான கருத்து. மத்திய அரசு, தமிழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ( http://tamiluniversitydde.org/courses.php ), பாரதியார் பல்கலைக்கழகம் (கோயம்பத்தூர்) ( http://www.b-u.ac.in/sde_syllabus/1314/dip_28.pdf ) மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ( http://www.pmu.edu/coursesoffered.aspx ) வாயிலாக தொடு சிகிச்சை (அக்குபங்சரில்) சான்றிதழ் மற்றும் பட்டயப் பயிற்சிகளை நடத்தி வருகின்றது.

நான்:
குணமாகாததன் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்த போது, எனக்குத் தோன்றுவது என்று சில காரணங்களைச் சொல்லி இருந்தீர்கள். அதில் சொல்லப்பட்டதில் தொடுசிகிச்சை என்ற பெயரால் எமாற்றுபவர்களிடம் நம்பிச் செல்வது என்பதை ஏன் குறிப்பிடவில்லை? அப்படியானால் அத்தனை பேரும் அக்கு பஞ்சர் கற்றவர்களா?....

நோயாளி மேற்குறித்த விதி முறைகளை சமரசம் செய்யாமல் பின் பற்ற வேண்டும். இதனுடன் தொடு சிகிச்சையாளரின், சிகிச்சையும் இணையும் போது என்று சொன்னீர்கள்!

இங்குதான் தவறு நடக்கிறது!

மேலே குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுவதால் மட்டுமே நன்மை கிடைகிறது.

அந்த விதிமுறைகள் இந்த ஏமாற்றுக்காரர்கள் கண்டு பிடித்தது அல்ல!

பாரம்பரிய மருத்துவங்கள் ஏற்கனவே அறிவுறுத்துபவையே!....

அதை இவர்கள் கண்டுபிடித்ததுபோல் காட்டுவதும் மோசடியின் ஒரு பகுதியே!....

அத்தோடு தொடு சிகிச்சை என்ற மோடி வித்தை அவசியமில்லை!....

ஆனால் அதனால்தான் குணமடைவதாக நினைப்பதும் சொல்வதும்தான் ஏமாற்று வேலை!....

நல்ல உள்ளம் படைத்தவர்கள் இதில் நிறைய இருக்கிறார்கள்! அவர்களும் இந்த மோசடியை நம்புவதோடு பிரச்சாரமும் செய்கிறார்கள்.

அவர்கள் செய்யவேண்டியது என நான் சொல்வது என்னவென்றால் தொடுவைத்தியம் தொடாத வைத்தியம் போன்ற ஏமாற்று வேலைகளை ஒதுக்கித் தள்ளி விட்டுச் சுத்தமான இயற்கை மருத்துவர்களாக மாறுங்கள்!

அதற்கு பெரிய அளவு சிரமப்பட வேண்டியது இல்லை!

இயற்கை நல் வாழ்வுக் கோட்பாடுகளை ஆழ்ந்து கற்றலும் பின்பற்றலுமே போதுமானது!...

அதன் வழியாக மகத்தான சேவை செய்யுங்கள்! நீங்களும் வாழுங்கள்! மக்கள் நல்வாழ்வு வாழவும் உதவுங்கள்!

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வாழும் வாழ்வு சரியா?...சிந்தியுங்கள்!...


கேள்வி:

அய்யா , அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் தொடு சிகிச்சை (அக்குபங்சர்) கல்வி பயின்று, அரசாங்க விதி முறைகளின்படி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது, எவ்வாறு ஏமாற்றுதல் ஆகும்?

அய்யா, தொடு சிகிச்சையாளர்கள் (அக்குபங்சர்) இதை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று சொல்லவில்லை.

அய்யா, தொடு சிகிச்சையால் (அக்குபங்சர்), குணமானவர்களுக்கு, இது மோடி வித்தையல்ல. ஏமாற்று வேலையும் அல்ல.

அய்யா, தொடு சிகிச்சையாளர்கள் (அக்குபங்சர்), என்னைப் போன்ற குணமானவர்களுக்கு, அறிவைப் புகட்டியிருக்கிறார்கள், என்பது எனது பணிவான கருத்து.

நான்:

தொடுசிகிச்சையால் (அக்குபங்சர்), \\\\\\\\\\\என்று சொன்னீர்கள்.

இவை இரண்டும் ஒன்றா நண்பரே?....

தொடு சிகிச்சைசெய்வதாகச் சொல்லும் எத்தனை பேருக்கு அக்கு பஞ்சர் என்றால் என்ன என்று தெரியும்?....

இந்த இரண்டையும் ஒன்று என்று ஏமாற்றுபவர்கள் சொல்லலாம்!....

உங்களைப்போல நல்லெண்ணம் உடையவர்கள் சொல்லலாமா? நம்பலாமா?

வாருங்கள்! இங்கே தொடு சிகிச்சை(?) செய்யும் சிலரைச் சந்திப்போம்! அக்கு பஞ்சர் என்றால் என்ன? அக்கு பஞ்சர் புள்ளிகள் என்றால் என்ன? எந்தெந்தப் புள்ளிகள் எதை எதைக் குறிக்கும் என்று கேட்போம்!...அவர்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்!....அக்கு பஞ்சர் ஊசிகளை அவர்கள் கண்ணால் கண்டவர்களா என்றும் பார்ப்போம்!.அவர்களையெல்லாம் அக்கு பஞ்சர் வைத்தியர் என்று சொல்வீர்களா?...

அக்கு பஞ்சர் என்றால் அதைக் கற்று சிகிச்சை செய்யட்டும்!...மற்ற பாரம்பரிய மருத்துவம் என்றால் அதைக் கற்றுச் சிகிச்சை செய்யட்டும்! இயற்கையான மருத்துவக் கலையைக் கற்று முன்னேறுங்கள்! ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காக்கைக்கூட்டில் குயில் முட்டை வைப்பதைப்போல் மற்ற மருத்துவங்களைப்போல் போலிகளை முன்னிருத்துபவர்களை நம்பாதீர்கள்!...

கேள்வி:

சுபாஷ் கிருஷ்ணசாமி அய்யா - தொடுசிகிச்சையால் (அக்குபங்சர்), \\\\\\\\\\\இவை இரண்டும் ஒன்றா நண்பரே?....தொடு சிகிச்சைசெய்வதாகச் சொல்லும் எத்தனை பேருக்கு அக்கு பஞ்சர் என்றால் என்ன என்று தெரியும்?....இந்த இரண்டையும் ஒன்று என்று ஏமாற்றுபவர்கள் சொல்லலாம்!....உங்களைப்போல நல்லெண்ணம் உடையவர்கள் சொல்லலாமா? நம்பலாமா? வாருங்கள்! இங்கே தொடு சிகிச்சை(?) செய்யும் சிலரைச் சந்திப்போம்! அக்கு பஞ்சர் என்றால் என்ன? அக்கு பஞ்சர் புள்ளிகள் என்றால் என்ன? எந்தெந்தப் புள்ளிகள் எதை எதைக் குறிக்கும் என்று கேட்போம்!...அவர்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்!....அக்கு பஞ்சர் ஊசிகளை அவர்கள் கண்ணால் கண்டவர்களா என்றும் பார்ப்போம்!.அவர்களையெல்லாம் அக்கு பஞ்சர் வைத்தியர் என்று சொல்வீர்களா?...

அக்கு பப்ச்சர் என்றால் அதைக் கற்று சிகிச்சை செய்யட்டும்!...மற்ற பாரம்பரிய மருத்துவம் என்றால் அதைக் கற்றுச் சிகிச்சை செய்யட்டும்! இயற்கையான மருத்துவக் கலையைக் கற்று முன்னேறுங்கள்! ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காக்கைக்கூட்டில் குயில் முட்டை வைப்பதைப்போல் மற்ற மருத்துவங்களைப்போல் போலிகளை முன்னிருத்துபவர்களை நம்பாதீர்கள்!...//

கேள்வி:

தொடு சிகிச்சையின் (அக்குபங்சர்) அடுத்த உயர் நிலை, அக்குபங்சர் ஊசி இன்றி, அக்குபங்சர் புள்ளிகளில் தொட்டுத் தூண்டுவதன் மூலம் சிகிச்சையளித்தல். இந்த உயர் நிலை சரியானது என்பதால்தான், மத்திய அரசாங்கம் அங்கீகரித்து பயிற்சிகள் (courses) நடத்தி வருகின்றது.

நான்:

அப்படியானால் அக்கு பஞ்சர் என்பதன் பொருள் தொடு சிகிச்சையா?....ஊசிகளைப் பயன்படுத்தும் மருத்துவக் கலைக்கு என்ன பெயர்? மத்திய அரசு அங்கீகாரத்துடன் பல்கலைக் கழகங்கள் சொல்லித்தரும் பட்டப்படிப்புப் படித்துவிட்டுத்தான் குப்பனும் சுப்பனும் சந்து பொந்தெல்லாம் கடைவிரித்தார்களா? அரசு அங்கீகாரத்துடன்தான் கோவையில் நடந்த இன்னும் பல இடங்களில் நடந்த கூட்டங்களில் சான்றிதழ் வழங்கப்பட்டதா?....

நான் கொடுத்த எண்ணுக்கு அழைத்தீர்களா?......அவர் என்ன சொன்னார் என்பதை சொல்லவே இல்லை!....அவர் என்ன சொல்லி இருந்தாலும் அதுபற்றி எனக்கு அக்கறை இல்லை! காரணம் அதுபோன்ற கருத்துக்களை வைத்து முடிவுக்கு வரக்கூடாது! ஆனால் உங்களின் ஒரு கருத்தை மறுத்து நிரூபிக்கவே அவரைக் கேட்கச் சொன்னேன்! அவர் என்ன சொன்னார்?....

கேள்வி:

அய்யா, இன்று மாலை அவருடன் பேசினேன். அவரும் அவருடைய மனைவியும் சுமார் 1.5 வருடங்களுக்கு முன்னர், அவர்களுடைய மூட்டு வலித் தொந்தரவை சரி செய்ய ஐந்து முறை (சுமார் 3 மாதத்தில்) சென்றதாகவும், முன்னேற்றம் இல்லையென்றும் சொன்னார்.

நான்:

நண்பரே! அவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் அப்படி ஏமாற்றப்பட்டனர். அதில் இருவர் இப்போது உயிருடன்கூட இல்லை!....ஒரு ஏமாற்றுக் கும்பலை நம்பி அவர் வருடக் கணக்கில் போய்ச் சிகிச்சை என்ற பெயரில் நடக்கவேண்டுமா?...அப்படி நடக்கவேண்டுமென்று முதலில் சொல்லியிருக்கவேண்டுமே?....அவர் உங்களிடம் மரியாதை நிமித்தம் கண்ணியமாகச் சொல்லியிருக்கிறார்! உண்மை இன்னும் கடுமையானது!...

கேள்வி:

அரசு அங்கீகாரம் உள்ள பல்கலைகழகங்களில் பயின்று, அரசு அங்கீகாரத்துடன் சிகிச்சையளிபவர்களை, எவ்வாறு போலிகள் என்று கூறுகிறீர்கள்?

நான்:

அரசு அங்கீகாரம் பெற்றவர்களை நான் போலிகள் என்று சொல்லவில்லை!....போலிகள் யாரும் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் அல்ல என்று சொல்கிறேன்....அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவத்தையும் தடுப்பு மருந்துகளையும் தடுத்துப் பொய்ப் பிரச்சாரம் செயபவர்களைத்தான் போலிகள் என்கிறோம்....

நான் கலந்துகொண்ட கூட்டத்தில் நிறையப்பேருக்குச் சான்றிதழ் வழங்கினார்கள். அவர்களுக்கு அப்படிச் சான்றிதழ் வழங்கும் அனுமதியை யார் அளித்தார்கள்?....

நான் ஆயிரம் பதில்களைச் சொல்லிவிட்டேன். ஆயிரம் கேள்விகளையும் கேட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் சரியான பதில் சொல்லாமலும் சரியான விளக்கங்களைக் கேட்காமலும் மீண்டும் மீண்டும் போலிகளின் பிரச்சாரத்தை நம்பிக்கொண்டு அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ உலகத்தை நிந்திப்பதை மட்டும் செய்கிறீர்கள்.....அதில் உங்களுக்கு என்ன பயன்?.....

 எனக்குத் தெரிந்து பலர் அரசு அங்கீகாரம் மட்டுமல்ல எந்த ஒரு தகுதியும் இல்லாதவர்கள் தொடு சிகிச்சை என்ற பெயரால் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்!....

ஒரு சிறு வட்டத்தில் இத்தனைபேர் என்றால் நாடு முழுக்க எத்தனை பேர் இருப்பது?...ஏன் அப்படி யாரும் இல்லை என்கிறீர்களா?....

கோழி திருடியவன் தலையில் பொங்கு என்றால் திருடாதவர்கள் தலையைத் தடவி ஏன் பார்க்கணும்?....

தங்களைச் சொல்வதாக ஏன் நினைக்கணும்?அத்தகையவர்களை ஏன் நியாயப் படுத்துகிறீர்கள்?....

அய்யா, தங்களின் பதிலுக்கு நன்றி. இவ்விஷயத்தில் என்னுடைய விளக்கங்கள் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. உங்களுடைய விளக்கங்கள், எனக்கு ஏற்புடையதாக இல்லை. Let us both agree to disagree.

உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்து இருக்கிறேன் நண்பரே! ஆனால் நீங்கள் ஒரு கேவிக்குக் கூட சரியான பதில் அளிக்கவில்லை! இந்தநிலையில் இவருடைய கருத்தும் ஒன்றுதான் என்பது அரிசியும் உமியும் ஒன்று என்பது போல! அதனால் வெறும் கதை பேசுவதைவிட கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவும்! அக்கு பஞ்சர் என்பதன் பொருள் தொடு சிகிச்சையா? நீங்கள் இப்படிப் பலதடவை சொல்லிவிட்டீர்கள். இது பொய் என்று ஏன் உங்களுக்குப் படவில்லை!....

தொடு சிகிச்சையும் தொடாத சிகிச்சையும் எப்படி வேலை செய்கின்றது என்பதை விளக்கவும்....வேறு பக்கங்களில் இருந்து லின்குகளைப் பதிலாகச் சொல்வதைத் தவிர்க்கவும். உங்கள் பதில்களை மட்டும் சொல்லவும்!.


போலிகளை விமர்சனம் செய்தால் உங்களுக்கு வருத்தம் ஏன்?...போலிகளே இல்லை என்கிறீர்களா?

கேள்வி:

அய்யா, போலிகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. போலிகளை விமர்சனம் செய்தால் எனக்கு வருத்தமும் இல்லை.

நான்:

அப்புறம் ஏன் அக்கு பஞ்சர் என்ற பாரம்பரிய சீன மருத்துவத்தைத் தொடு சிகிச்சை என்று தவறாகச் சொல்கிறீர்கள்?அக்கு பஞ்சர் என்றால் தொடு சிகிச்சை என்பதுதான் தமிழ் மொழி பெயர்ப்பா?

தொடு சிகிச்சை அல்லது அக்கு டச் என்ற பெயரால் எந்தக் கல்லூரியிலாவது பட்டம் வழங்கப் படுகிறதா?...

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லுங்கள்! இந்த விவாதத்தின் மையப் பொருளே இதுதான். இதற்குத் தகுந்த பதில் அடங்கிய வார்த்தைகள் உங்கள் பதிலில் எங்காவது இருந்ததா?....திம்மன் காலைப் பற்றிச் சொன்னால் அதை விட்டுவிட்டுத் திருமன் காலைப் பற்றிப் பேசுவதுதான் பதிலா?

கேள்வி:

என்னுடைய புரிதல்: இச்சிகிச்சையால் பலனடைந்தவர்களுக்கு குணமானதுதான் முக்கியம். சிகிச்சையின் பெயர் முக்கியமில்லை. ரோஜாவை எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும், அதனுடைய நல்ல தன்மை மாறாது. "A rose by any other name would smell as sweet" - William Shakespeare. Meaning: Names of things do not matter, only what things "are".

நான்:

அப்படியென்றால் கருப்பை சிவப்பென்றும் வெண்மையை மஞ்சள் என்றும் சொல்லலாமா?....திருடனை யோக்கியன் என்று அழைப்பீர்களா?..அக்கு பஞ்சர் அல்லாத ஒன்றை அக்கு பஞ்சர் என்று சொல்வதற்கு நியாயமும் உண்மையும் சட்டமும் அனுமதிக்கிறதா?....பிரச்சினையின் அடிப்படையே இந்தப் பொய்தான் என்று இருக்கும்போது இப்படிப் பதில் சொல்வது தவறை ஒப்புக்கொள்வதாகும். ஏன் சித்தா அல்லது ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி என்று வைத்துக்கொள்ளக்கூடாது?

அழைக்கும் வார்த்தை முக்கியம் அல்ல என்றால் பொய்யர்களின் வைத்தியம் என்றுகூட சொல்லலாமே? பெயரில் என்ன இருக்கிறது?...

கேள்வி:

நீங்கள் எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், அதனுடைய நல்ல தன்மை மாறப் போவதில்லை. உண்மை என்பது தங்களுடைய வாதத்திற்கு அப்பாற்பட்டதாய் உள்ளது. அந்த உண்மையை, இச்சிகிச்சை முறையால் குணம் பெற்றவர்கள் அனுபவித்து உணர்ந்துள்ளோம்.

நான்:

நாங்கள் எந்தப் பெயரிட்டும் ஒரு பொய்யை அழைக்கமாட்டோம் நண்பரே!...ஒரு பொய்யின் பெயர் அக்கு பஞ்சர் என்பது அந்த மருத்துவத்துக்கு இழுக்கு! சரியான அரசாங்கம் இருந்தால் இதற்குத் தக்க தண்டனை கிடைக்கும். வருங்காலத்தில் கிடைக்கலாம்!...

இனியும் இந்த உரையாடலை நீட்டிப் பயன் இல்லை! ஒரு உரையாடலின் முடிவு உண்மை உறுதிப் பட்டதாகவும் தவறு உணரப்பட்டதாகவும் இருக்கவேண்டும்! அப்படி இல்லாவிட்டால் அந்த உரையாடலில் பயன் இல்லை!...இந்த உரையாடலின்மூலம் அந்தப் பொய்யர்கள் ஒரு நல்ல மனிதரைக்கூட இப்படி மூளைச் சலவை செய்துள்ளார்களே என்ற உணர்வுதான் ஏற்ப்பட்டது!

தவறுகளை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுமல்ல தனது தவறுகளை ஒப்புக்கொள்வதற்கும் திருத்திக்கொள்வதற்கும் துணிவு வேண்டும்!....வாழ்த்துகள்!.

இத்துடன் இந்த உரையாடலை நிறைவு செய்வோம்! நன்றி!5 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20-%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  ReplyDelete
 3. http://maatruu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D.

  ReplyDelete
 4. http://www.neethiyaithedy.org/?p=1318

  Acupuncture Treatment - Feedback

  ReplyDelete
 5. Can we switch to audio versions of these type of big blogs.

  ReplyDelete