ss

Thursday, August 28, 2014

எனது மொழி ( 175 )

உடல், உயிர், உணர்வு, அறிவு....... 

உடல் என்பதும் தாவரம் என்பதும்  பருப் பொருட்களின் குறிப்பிட்ட  முறையிலான  எண்ணற்ற வகையிலான சேர்மானம். 

உயிர் என்பது உயிரினம் மற்றும் தாவரங்களின் - சூழலில் இருந்து பெறும் மற்றும் தன்னில் இருந்து வெளியேற்றும் - சீரான இயங்கு நிலை! 

உணர்வு என்பது சுற்றுச் சூழலால் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் சீரான உயிரியல்  இயக்கத்தில் ஏற்படும்  நிலையற்ற   மாற்றம்.

, அறிவு, மனம், ஞானம், சிந்தனை மற்றும் பருப்பொருள் அல்லாத அனைத்தும் மனித உணர்வின் பல்வேறு வகையான நிலைகளே! 

Tuesday, August 26, 2014

எனது மொழி ( 174 )

இது என்ன வாழ்க்கை! 

நான் அவ்வப்போது இப்படி நினைத்து வேதனையும் அவமானமும் படுவதுண்டு! 

அதற்கான காரணம் நாம் கிரிமினல்களின் தயவில் வாழவேண்டியதாக உள்ளதே என்பதுதான்!...

ஆதாவது கிரிமினல்களின் நடவடிக்கைகளை அறிந்தாலும் குறுக்கிடும் துணிவின்றிக் கோழைகளாக வாழும் நிலையில்தான் மக்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்! 

கிரிமினல்களுடன் மோதும் அளவுக்கு நமது மக்களுக்குச் சட்டமும் அரசுத் துறைகளும் துணையாகவும் பக்க பலமாகவும் இல்லை! 

கிரிமினல்களின் நடவடிக்கைகளில் தலையிடாமல் ஒளிந்து வாழ்வதைப்போல் வாழும் வாழ்க்கையைத்தான் அமைதியான வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்!....

தேவை ஏற்பட்டால் அவர்களுக்குக் கப்பம் கட்டியும் வாழ்ந்துகொண்டுள்ளோம்!..

இது என்ன வாழ்க்கை!

======================================================================


Monday, August 25, 2014

இயற்கை ( 21 )

செவிடன்காதில் சங்கு! 

அரசுக்கு முன்வைக்கும் சுலபமான நான்கு  வழிகள்!

நண்பர்களே!

நமது மக்களிடையே இப்போது அடிக்கடி ஆர்வமாகவும் அக்கறையுடனும் பேசப்படும் நான்கு  பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்!

முதலாவது இப்போது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷ முள் மரங்களாகிய வெளிக் வேலிக் கருவை ஒழிப்பு.

இரண்டாவது மரம் வளர்ப்பு.....

மூன்றாவது மழைநீர் சேகரிப்பு....

நான்காவது அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவது!

இந்த நான்கையும் எதற்காக எடுத்துக் கொண்டோம் என்றால் இதில் மூன்றுக்காக ஒரு பைசாகூட செலவு செய்ய வேண்டியது இல்லை.

ஒன்றுக்கு மட்டும் கணிசமாகச் செலவு செய்யவேண்டும்.

ஆனால் அந்தச் செலவைவிட அதனால் கிடைக்கும் பயன் மகத்தானது!

முதலாவது வேலிக் கருவை ஒழிப்பு:

ஒரு காலத்தில் இதற்கு அவசியம் இருந்தது. இன்று மக்களை மிரட்டுமளவு எங்கும் காணப்படும் தேவையற்ற ஒன்றாகி விட்டது.

அதை ஒழித்துக்கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வழிதான் புலப்படவில்லை!

வழி உள்ளது. அதற்கு முன்னதாக ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்.

அதை அறவே ஒழித்துக்கட்டி விட்டால் அதை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தி வரும் செங்கல் சூளைகளுக்கும்  கரி சுடுவதற்கும் மாற்று வழி காணவேண்டும்.

இல்லாவிட்டால் அந்தத் தேவைகளுக்காக மற்ற நல்லமரங்கள் சூறையாடப் படுவதைத் தடுக்க முடியாது!

ஒழிக்கும் வழி:

மிகச் சுலபமானது!

ஆதாவது தனியார் நிலங்களில் உள்ள வேலிக் கருவையை ஒழித்துக் கட்டாமல் அந்த நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது!

குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பின்னால் யாருடைய நிலத்தில் வேலிக் கருவை உள்ளதாக அறியப் படுகிறதோ அல்லது தகவல் கிடைக்கிறதோ அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப் படும்!

பிரச்சினை உள்ள நிலமாக இருந்தால் அதிலுள்ள வேலிக் கருவை மரங்களை அழிக்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டு அதற்காக ஆகும் செலவையும் மீண்டும் அங்கு வளராமல் தடுப்பதற்கான செலவையும் அந்த நிலத்தின்மேல் தண்டமாக விதிக்க வேண்டும்.

அந்த தண்டத்தை வட்டியுடன் செலுத்தாமல் எப்போதும் பைசல் முடிக்க முடியாது.

பஞ்சாயத்து, நகடாட்சி, பொதுப்பணித்துறை, சாலைகள், மற்றும் இதர துறைசார்ந்த இடங்களில் வளர்ந்திருக்கும் வேலிக் கருவை மரங்களை ஒழித்துக்கட்டும் பொறுப்பை அந்தந்த அமைப்புகளும் துறைகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அப்படி ஒழிக்கும் வரை அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டும்!

இப்படி ஒரு உத்தரவை அரசு பிறப்பித்தால் குறுகிய காலத்தில் வேலிக் கருவை காணாமல் போகாதா?

இதைவிட எளிமையான வழி வேறு என்ன இருக்கிறது?

இரண்டாவதாக மரம் வளர்ப்பு ! 

அதற்கான வழி : 

 நாட்டில் உள்ள அனைத்துப் படடா நிலங்களிலும் நன்கு வரட்சியைத் தாங்கி உயிர் வாழக்கூடிய ஏதாவது பயனுள்ள மரங்கள் ஒரு ஏக்கருக்கு ஐந்து வீதம் கண்டிப்பாக நட்டு வளர்க்கவேண்டும். (தோப்புகளைக் கணக்கில் சேர்க்கக்கூடாது)


அப்படி வளர்க்கப்படாத நிலங்கள் அனைத்தின் உரிமையும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். குறிப்பட்ட தேதி அறிவிக்கப்பட்டு அந்தத் தேதிக்குள் மரக் கன்றுகள் நடப்பட வேண்டும்.

அதன்பின்பு அந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ வேண்டுமென்றால் அந்த அறிவிக்கப்பட்ட தேதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறிப்பட்ட வயதுடையதாக இருக்கவேண்டும் அல்லது கன்றுகள் நட்டு இவ்வளவு வயதுள்ள மரக்கன்றுகள் இருக்கும் நிலங்கள்தான் விற்கவோ வாங்கவோ முடியும் என்று அறிவிக்கவேண்டும்.

அதேபோல ரியல் எஸ்டேட்டுக்காக வாங்கப்பட்டு சைட்போட்டு விற்கப்படும் நிலங்கள் அனைத்தும் பத்து சென்டுக்குக் குறையாக ஒரு சைட்டுக்கு ஒரு மரம் அவசியம் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். அதைவிடக் குறைவான அளவுள்ள சைட்டுக்கு ஒரு மரம் என தெருக்களில் மரம் நட்டுக் காப்பாற்றவேண்டும் என்ற விதி இருக்கவேண்டும்.

அதேபோல தொழிற்பயன்பாட்டுக்கு என்று வாங்கிப் போட்டுப் பலகாலம் சும்மா இருக்கும் நிலங்களிலும் ஏக்கருக்கு இத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதை விதியாக்கவேண்டும்.

அதேபோல அரசுப் புறம்போக்கு மற்றும் ஏரி குளங்களின் ஓரங்கள் ஆற்றங்கரைகள் கடற்கரைகள் ஆகிய பகுதிகளில் மரங்ளை நட்டுக் கொடுத்து அதைக் காப்பாற்றுவோருக்கு ஒரு மரத்துக்கு இவ்வளவு என்று சன்மானமாகக் கொடுப்பதுடன் அவற்றில் விளையும் காய் அல்லது கனிகளை அவர்களே அனுபவிக்க உரிமை கொடுக்கலாம்.


அவர்களுக்குத் தண்ணீர் வசதியையும் செய்து கொடுக்கலாம். 

அதேபோல கடும் வரட்சியைத் தாங்கி வாழக்கூடிய மூலிகைப்பண்புள்ள தாவரங்ளையும் கள்ளி, புதர். போன்ற பாரம்பரியத் தாவர வகைகளையும் அரசுப் புறம்போக்கில் நட்டுப் பராமரிப்போருக்கு நட்டுக்கொடுப்பதும் ஊக்கத்தொகையும் அனுபவிக்கும் உரிமையும் என்று உதவி ஊக்குவிக்கலாம்.

நாளைய உலகும் மக்களும் நமது சந்ததிகளும் வளமுடன் வாழவேண்டுமென்றால் நிலங்கள் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படவேண்டும் என்றால் மழை நன்கு பெய்து பசுமை பூத்துக் குலுங்கவேண்டுமென்றால் அரசுகளுக்கு இதைவிட வேறு முக்கியக் கடமை இருக்கமுடியாது.

பெரும்பகுதி வெறும் சட்டத்தால் மட்டும் சாதிக்கக்கூடிய இந்த யோசனைகளை அரசு ஏன் ஏற்கக்கூடாது?


இதை எனது இணைய தளத்தில் ஏற்கனவே கட்டுரையாக எழுதியிருக்கிறேன். (http://www.drumsoftruth.com/2013/04/subash-krishnasamy-january-20-2012.html)

மூன்றாவதாக மழைநீர் சேகரிப்பு! 

இது சற்று செலவு பிடிக்கக்கூடிய ஆனால் பயனுள்ள திட்டம் ஆகும்! 

ஆதாவது தனியார் நிலம் அது எந்த வகையாக இருந்தாலும் அதில் ஐந்து அல்லது அதற்குக் குறையாமல் நிர்ணயித்து அத்தனை சதவிகிதப் பரப்பில் தாழ்வான பகுதியில் மழைநீர் சேமிப்பு இயற்கைக் குட்டைகளை அரசே அமைத்துக் கொடுக்கும். 

அதைப் பராமரிப்பது அவரவர் பொறுப்பு! அந்த நிலத்தை வாங்கும்போது விற்கும்போதோ நல்ல நிலையில் குட்டை இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும்!

அதைவிட அதிகப் பரப்பில் தேவை என்று ஒருவர் கேட்டால் அதையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். 

அரசு புறம்போக்கு , அரசுத் துறை சார்ந்த நிலங்களிலும் இதையே பின்பற்ற வேண்டும்! 

இதன்மூலம் நாட்டில் விழும் ஒவ்வொரு மழைத் துளியும் பயனுள்ள ஒன்றாக மாற்றப்பட்டு எங்கும் பசுமை என்ற நிலை ஏற்படும். 

நான்காவதாக அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டும் பிரச்சினை!

அதற்கு வழி:

அரசு அனுமதி இல்லாமல் நகர்ப புறங்களில் கட்டிடங்கள் கட்டுவது எவ்வளவு தவறோ அதைவிட ஆயிரம் மடங்கு தவறு கட்டப்பட்டதை இடிப்பது ஆகும்! 

அதுவும் இந்த நாட்டின் சொத்தும் உழைப்பும் ஆகும்! 

அதனால் ஒரே உத்தரவின்மூலம் சட்டவிரோதமாகக் கட்டிடங்கள் கட்டுவதையும் தடுக்க முடியும். 

கட்டிட கட்டுமானங்களை அழித்து நாசப்படுத்தவும் தேவை இல்லை! 

ஆதாவது அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டுமானம் அரசுக்குச் சொந்தம். 

அதைக் கண்டறிந்தால் அது கட்டப்பட்ட தேதியில் இருந்து அரசுக்கு வாடகை செலுத்த வேண்டும். 

கட்டியவர்களுக்கு அதை இடிக்க உரிமை இல்லை! 

அதை விற்கும்போது அரசு எடுத்துக் கொண்டதையும் அதற்கான அடி நிலத்தையும் விற்க முடியாது. 

இப்படியான ஒரு உத்தரவு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்காதா? 

ஆகவே நண்பர்களே! 

நான் குறிப்பிட்ட இந்த நான்கு யோசனைகளையும் அரசு ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! 

இதற்காக அரசு பெரும் செலவு செய்ய வேண்டியது இல்லை! 

இதை அமலாக்கக் கோரி நாடு முழுவதும் மக்கள் குரல் எழுப்பினால் நிச்சயம் நடந்தே தீரும்!

மக்களும் மக்கள் இயக்கங்களும் எழுச்சி பெற இந்தக் குரல் தூண்டுகோலாக அமையுமா?

அமைந்தால் அதைவிட நல்லதாக ஏது இருக்க முடியும்?.... 


Saturday, August 23, 2014

தத்துவம் ( 38 )

விதையும் விளைச்சலும்! 

 விளைச்சல் எவ்வளவு முக்கியமோ விதையும் அவ்வளவு முக்கியம்! 

  விதை எவ்வளவு முக்கியமோ விளைச்சலும் அவ்வளவு முக்கியம்! 

இவை இரண்டும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நிலத்தைப் பண்படுத்தலும் மற்ற விவசாயப் பணிகளும்  

பயிர் செய்பவர் தனது பயிர் சிறப்பாக விளைந்ததற்குத் தான் தேர்வு செய்த விதைகளையும் பயிர்செய்த முறைகளையும் சொல்லலாம்! 

 கிடைத்த மகசூலையும் சொல்லலாம்! 

ஆனால் தான் பயன்படுத்திய விதைகளையும் விவசாயப் பணிகளையும் பயிருக்காகத் தான் செய்த கடமையில் கிடைத்த அனுபவங்களையும் கிடைத்த நல்ல மகசூலையும் சொல்லாமல் இந்த விதை நல்லது, இந்த விதை நல்லது என்று நிறைய பயிர் ரகங்களையும் விதைகளின் பெயர்களையும் சொல்லிக்கொண்டிருந்தால் அதை யாரும் விரும்பி மதித்துக் கேட்க மாட்டார்கள். 

சிறந்த விதைகளைச் சொல்வதைவிட அதனால் கிடைத்த விளைச்சலைச் சொல்வதே சிறப்பான பயன் தரும்! 

அதுபோல நமக்கு முன்பு வாழ்ந்த தத்துவவாதிகள், ஞானிகள்,  நமக்குச் சொன்ன சொல்லி வருகிற பல்வேறு வாழ்க்கைக் கோட்பாடுகள் நம்மிடையே பல்வேறு வடிவங்களில் நிறைந்திருக்கின்றன! 

அவற்றில் சரியானவையும் தவறானவையும் கலந்தே உள்ளன! 

அவை யாவும் விதைகள் ஆகும்! 

விதைகளில் இருந்து  பயனுள்ள பயிர்களும் வளரும். பயனற்ற களைகளும் வளரும்! 

அதுபோலவே தத்துவவாதிகளும் ஞானிகளும் நமக்கு அளித்த ஞான விதைகளில் நல்லவையும் கெட்டவையும் கலந்தே உள்ளன! 

இந்த நிலையில் அந்த தத்துவ விதைகளில் நல்லது எது கெட்டது எது என்று அறிவது எப்படி?

விவசாய நிலத்தில் விதைகளை விதைத்துப்  பயனைச் சோதித்து அறிவதுபோல் தத்துவ விதைகளையும் நமது அறிவாற்றல் என்னும் நிலத்தில் விதைத்து அனுபவம் என்னும் நீரூற்றிச் சோதித்தால் அந்தப் பயிரும் அதன் விளைச்சலும்  எப்படி என்பது தெரியும்! 

அது நற்பயனைக் கொடுக்கும் நல் விதைகளைப்போல் நல்ல முடிவுகளுக்கு நம்மை அழைத்துச் சென்றால் அவை ஏற்றுக் கொள்ளத்தக்க உயர்ந்த நெறிகள். 

இல்லாவிட்டால் புறக்கணிக்க வேண்டிய களைகளுக்கான விதைகளைப் போன்று தவறான நெறிகள்.

ஆனால் சமூகத்தில் படித்தவர்கள் மத்தியில் உள்ள ஒரு தவறான பழக்கம் என்னவென்றால் விதைகளின் பெயர் தெரிந்தாலே பெரிய விவசாயி என்று எண்ணிக்கொள்வதைப் போல , தாம் படித்த புத்தகங்களின் பெயர்களையும் அல்லது மேற்கோள்களையும் சொன்னாலே தாங்களும் தத்துவவாதிகள் ஆகிவிடலாம் என்பதுபோல் புத்தகங்களையும் ஆசிரியர்களையும் உரைகளையும் ஒளி ஒலிப் பதிவு விபரங்களையும் பிறருக்கு முன்னால் அடுக்கத் தலைப் படுகிறார்கள்! 

அது பயன்தராது! 

அவற்றைத் தாங்கள் உண்மையாகவே படித்து, பார்த்து, கேட்டு சரி என்று உணர்ந்தது உண்மையானால் அவை தங்கள் மனதில் ஏற்படுத்திய நல்ல மாற்றம் என்னும் உயர்ந்த விளைச்சலை முன்வைக்க வேண்டும்! 

அது சமூகத்துக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை விளக்க வேண்டும்! 

அதை விட்டு விதைகளின் பெயர் தெரிந்தாலே விவசாயி ஆகிவிடலாம் என்று நினைத்தால் விளைச்சலை அறுவடை செய்ய முடியாது! 

அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளாமல் தத்துவவாதிகளின் அல்லது பல்துறை முன்னோடிகளின் பெயர்களும் அவர்களின் வெளிப்பாடுகளின் பெயர்களும் தலைப்புகளும் தெரிந்தால் மட்டும்  உண்மையான அறிவாளிகள் ஆகவும் முடியாது! 
உணவே மருந்து ( 90 )

நோயறி திறன் ............

நண்பர்களே!

முன்பெல்லாம் உடல் நிலை சரி இல்லை என்று நாட்டு வைத்தியரிடமும் ஆங்கில மருத்துவரிடமும் செல்வோம். 

இருவருமே என்ன செய்கிறது என்று கேட்பார்கள்! நாடி பார்ப்பார்கள். 

தினசரி வாழ்க்கையில் உடம்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்று கேட்பார்கள்.

தூக்கம், மலஜலம், பசி, போன்றவை எப்படி என்று விசாரிப்பார்கள்.

கண்களையும் விரல் நகங்களையும் நாக்கையும் கவனிப்பார்கள்.

அதன்பின்னால் நாட்டு வைத்தியர் நாட்டு மருந்துகளையும் ஆங்கில மருத்துவர் ஆங்கில மருந்துகளையும் கொடுப்பார்கள். தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவர்கள் ஊசிமூலமும் மருந்து செலுத்துவார்கள்.

இதன்காரணமாக ஓரளவு முதல் சற்றுக் கடுமையான நோய்கள் வரை குணப்படுத்தப்பட்டன.

காரணம் அவர்கள் நோயாளிகளைச் சோதிப்பதில் இருந்தும் விசாரிப்பதில் இருந்தும் அது என்ன நோய் என்றும் என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலும் சரியாகவே முடிவெடுத்தார்கள்!


நாட்டு மருத்துவத்தால் நோய்களைக் குணப்படுத்த முடிந்தது என்றாலும் அந்த நோய் குணமாகும்வரை வலியைப் பொறுத்துக்கொள்வதும் அவர்கள் சொல்லும் பத்திய உணவைப் பின்பற்றுவதும் கடினமாக இருந்தது. 

இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் உடனடியாக வலியை நிறுத்தவும் தூங்கவைக்கவும் உதவியதோடு உணவில் பத்தியம் என்ற கடும் நிபந்தனையையும் விதிப்பதில்லை! நோயைக் குணமாக்க அதிக காலமும் எடுத்துக் கொள்வது இல்லை. 

பக்க விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையாலும் உடனடி நிவாரணம் என்ற பயனாலும் மக்கள் மெல்ல மெல்ல ஆங்கில மருத்துவம்தான் சிறந்தது என்ற மனமாற்றத்துக்கு ஆளானார்கள். 

இந்த நிலையில் பெரும்பாலும் இலவச மருத்துவமாகச் செயல்பட்டு வந்த நாட்டு மருத்துவம் பலவீனமடைந்தது இயல்பானதே! 

தவிர வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பொருளாதாரத் தேவைகள் நாட்டு வைத்தியர்களை மருத்துவத்தில் இருந்து மெல்ல மெல்ல விரட்டியது! 

அதோடு நிறையப்பேர் மருத்துவத்தொடு மாந்திரீகம், செய் வினை யந்திரத் தகடு போன்ற பலவற்றைச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிக்கும் வேலையும் அதிகரித்ததால் நாட்டு வைத்தியம் மக்களிடம் இருந்து மறையத் தொடங்கியது.

அதே சமயம் ஆங்கில மருத்துவம் மந்திரமும் இல்லாமல் மாயமும் இல்லாமல் நோய்களை குணப்படுத்தியதால் மக்கள் அதன்பக்கம் அடியோடு சாய்ந்தார்கள்.

அதனால் ஆங்கில மருத்துவத்துக்கும் மருத்துவர்களுக்கும் ஏற்பட்ட கிராக்கி இன்றளவும் நீடிக்கிறது. 

துவக்க காலத்தில் நாட்டு வைத்தியத்தால் முடியவில்லை அல்லது பொறுமை இல்லை என்ற காரணங்களால் ஆங்கில மருத்துவர்களிடம்   நோயாளிகள் சென்றதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. 

ஆனாலும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்ததால் வருவாய் நிறையக் கிடைத்தது. 

அந்த மருத்துவர்களும் தங்களை ஒரு தலைசிறந்த மருத்துவராக மக்கள் மதிக்கவேண்டும் என்று விரும்பியதால் தங்களின் மருத்துவத் திறனை சிறப்பாக வளர்த்துக் கொண்டார்கள்.

அதன்காரணமாக அவர்களின் நோய்கள் பற்றிய அனுமானமும் நோயறி திறனும்  பெரும்பாலும் சிறப்பாக இருந்தன. 

அதன் விளைவாக மருத்துவர்கள் சமூகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டார்கள்.

ஆங்கில மருத்துவர் ஆகவேண்டும் என்பது நன்றாகப் படிக்கும் பிள்ளைளின் எதிர்காலக் கனவும் ஆனது. இன்றும் அதுதான் நிலை! 

இந்நிலையில்  ஆங்கில மருத்துவத்துக்கும் மருத்துவர்களுக்கும் தேவை அதிகரிக்க அதிகரிக்க அங்கு செல்லும் மக்கள் கூட்டமும் அதிகரித்தது. 

அதன் காரணமாக அவர்களுடைய மூளைக்கு அதிக வேலையும் ஏற்பட்டது. 

தவிர அவர்களின் நோயரி திறனை மீறிப் பல நோய்கள் கட்டுப்பட மறுக்கும் விளையும் அடிக்கடி ஏற்பட்டன.

அதன்காரணமாக அவர்களின் வேலைப் பழுவைக் குறைக்கவும் அனுமானத்தை உறுதிசெய்துகொள்ளவேணடியதுமான தேவை ஏற்பட்டது.

இந்த நிலைக்குக் கைகொடுத்தது நவீன மருத்துவமும் நோயறியும்  முறைகளும் ஆய்வுக்கூட ஆய்வு முறைகளும்....நவீன உபகரணங்களும்.....

துவக்கத்தில் மருத்துவர்களின் கடினமான மருத்துவப் பணிக்குத் துணையாக வந்த சோதனை முறைகளும் சோதனைக் கருவிகளும் நாளடைவில் இளைஞனின் தோளில் ஏறிய மாயக் கிழவனைப்போல விரும்பினாலும் புறக்கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன! 

அதுமட்டுமல்ல அவை மருத்துவரின் நோயறிதிறனை பலவீனப் படுத்தி அது இல்லாமல் அவர் இல்லை என்ற நிலைக்கு மருத்துவர்களை இளைய பங்காளி ஆக்கிவிட்டது. 

அது மட்டுமல்லாமல் அவை ஆய்வு உதவியை மட்டும் செய்யாமல் மருத்துவர்களின் பைகளைப் பணத்தால் நிரப்பும் புண்ணிய காரியத்தையும் செய்தன! 

மருத்துவர்களின் நோயறி திறனைத் துடைத்தெறிய வேறு என்ன வேண்டும்?

அது வெற்றிகரமாக நிறைவேறியது! 

அதனால் இன்றைய மக்கள் மருத்துவரின் நோயறி திறனால் எளிதாகக் குணம் பெற்ற நிலை மாறி சின்னச் சின்ன உபாதைகளுக்கேல்லாம் ஆய்வுக் கருவிகளுக்கும் சேர்த்துக் கப்பம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது! 

அதனால் இன்றைய கால கட்டத்தில் இன்ன நோய் என்று அறிவதற்குப் பதிலாக, உறுதி செய்வதற்குப் பதிலாக ஒன்றும் இல்லை என்று சாதாரணமாக யூகிக்க வேண்டியவற்றுக்கெல்லாம் ஆய்வுக் கட்டணமாகக் கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது! 

இந்த நிலையில் மருத்துவர்களின் நோயறி திறன் மீட்கப்படுமா?

 பெரும்பாலான சாதாரண நோய்களுக்கெல்லாம் கொள்ளை கொடுக்கும் மக்களின் பண விரயமும் மன உழைச்ச்சலும் தடுக்கப்படுமா? 

யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

இதற்குத் தீர்வு என்ன?

Friday, August 22, 2014

பல்சுவை ( 46 )

                                     அண்டப் புதிர்! 

நண்பர்களே! 


அண்டவெளியில் நான்கு புள்ளிகளை நேர்கோட்டில்  குறித்துக் கொள்வோம். 

அதில் A  என்பது முதல் புள்ளி. அங்கு நாம் இருக்கிறோம். D என்பது நான்காவது புள்ளி. இடையில்  B C என்ற இரண்டு புள்ளிகள்...

ஒருவர் B யில் இருந்து புறப்பட்டு C யைச் சென்று அடைய வேண்டும். 

ஆனால் அவர் பாதி தூரம் Cயை நோக்கிச் சென்று விட்டு மீதிப் பாதிதூரம் நம்மை நோக்கி வருகிறார் . 

ஆனால் C யை அடைந்து விடுகிறார்.

இப்படியான ஒரு வாய்ப்பு அண்ட வெளியில் இருக்கிறதா? 

இருக்கிறது என்றால் எப்படி என்று விளக்க முடியுமா?


Thursday, August 21, 2014

எனது மொழி ( 173 )

ஏன் நடக்காது?...

நண்பர்களே! 

நான் சில நேரங்களில் இப்படி நினைப்பதும் உண்டு! 

ஆதாவது மனிதனின் தொடர்ந்த இயற்கைக்கு எதிரான அட்டூழியங்களால் பலவகையான எதிர்விளைவுகளைச் சந்திக்கவும் நேர்கிறது. 

அதில் முதலாவது இயற்கைச் சீற்றங்கள், சுற்றுச் சூழல் மாற்றம்......அதனால் பூமி மனிதவாழ்வுக்குப் பயனற்ற திசையில் மாற்றம் அடைவது! 


இரண்டாவதாக பல்லுயிர்ச் சமநிலை பாதிப்பதால் உருவாகும் புதுப்புதுக் கிருமிகளும் புதுப்புதுக் கொள்ளை நோய்களும்.

எனது அச்சம் என்னவென்றால் ஏதாவது ஒரு கண்ணுக்குத் தெரியாத விஷப்பூச்சி தோன்றி அது கடித்தால் மனிதனுக்கு உடனே மரணம் என்ற ஒரு நிலை உருவானால் அப்போதைய உலகம் எப்படி இருக்கும் என்பதுதான்!

அப்படித் தோன்றாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? 

Wednesday, August 20, 2014

எனது மொழி ( 172 )

திருமணம் - ஒரு அலசல்! 

ஒரு காலத்தில் மாப்பிள்ளை தேடும் பெண்வீட்டார் தங்கள் பெண் கரம் பிடிக்கும் ஆண் ஒழுக்கமானவனாகவும் பெண்ணை மனம் கோணாமல் காப்பாற்றுபவனாகவும் பெண் நிம்மதியாக வாழும் வசதி இருந்தால் நல்லது என்றும் நினைத்தார்கள். 

அதேபோல பெண் பார்க்கும் மாப்பிளை வீட்டாரும் தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாகவும் அவசரகாலத்துக்கு உதவக்கூடிய வாய்ப்பு உள்ள இடமாகவும் இருந்தால் போதும் என்று நினைத்தார்கள்.

இத்தகைய எதிர்பார்ப்புகளை மட்டும் கொண்டு அமைந்த வாழ்க்கை பெரும்பாலோருக்கு நல்லதாகவே அமைந்தது! 


ஆனால் இக்காலத்தில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கல்வித் திறனும் ஆண்களுக்கும் மேலாக உயர்ந்ததால் பெண்வீட்டாரின் எதிர்பார்ப்புகள் வாலறுந்த பட்டம்போலத் தாறுமாறாக உயர்ந்து (?) விட்டன. 

ஆண்வீட்டாரும் முந்தைய நினைப்பைஎல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு பெண் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

இதற்கு நடுவில் நாகரிகம் என்ற பெயரால் வளர்ந்த அநாகரிகத்தாலும் திருமண காலம் வரம்பின்றித் தள்ளிப் போனதாலும் ஒழுக்க நெறிகள் சார்ந்த வாழ்க்கை முறை பலவீனமடைந்து கட்டுப்பாடற்ற போக்குகள் திருமணத்துக்கு முன்பே வளர்ந்து விட்டன. 

இந்த நிலையில் திருமண உறவுகள்  தவறான அடிப்படைகளின்மேல் நிறுவப்படுகின்றன! 

சமூகத்தில் நிலவும் தவறான பண்பாட்டுச் சீரழிவுகளின் தாக்கம் கணவன் மனைவி இடையே முற்றிலும் மறைந்துபோகாமல் நீறு பூத்த நெருப்பாக இருக்கவே செய்கின்றது.

அது பரஸ்பரம் அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக அவநம்பிக்கையையும் மனக் காயங்களை ஏற்படுத்தும் உணர்வையும் வளர்க்கிறது! 

அந்த உணர்வு பலருடைய வாழ்வையே சின்னாபின்னமாகச் சிதறடித்தும் விடுகிறது!

அதன்காரணமாக முன்னர் வருவாய் குறைந்த நிலையில் அனுபவித்த மகிழ்ச்சியான வாழ்வைக்கூட வசதியான நிலையைக் கொண்டு அனுபவிக்க முடிவது இல்லை!   

கோளாறு எங்கே இருக்கிறது?

இதற்குத் தீர்வு என்ன ? 

Thursday, August 14, 2014

உணவே மருந்து ( 89 )

தடுப்பு மருந்து சரியா? தவறா? 

நண்பர்களே! 

தடுப்பு ஊசி மற்றும் சொட்டு மருந்துகள் இன்று மிகப் பரவலாக நடைமுறையில் கையாளப் படுகின்றன! 

ஒரு காலத்தில் மிகப் பயங்கரமான கொள்ளை நோய்களாக இருந்த காலரா, பிளேக், வைசூரி, இளம்பிள்ளைவாதம், வெறிநாய்க்கடி, கக்குவான் இருமல் போன்றவற்றுக்குத்தான் தடுப்பு மருந்துகள் போடப்பட்டன. 

அதனால் அடிக்கடி வரும் கொள்ளை நோய்களில் இருந்து பாதுகாப்பும் கிடைத்தது. 

ஆனால் இந்தக் காலத்தில் நிறைய நோய்கள் தொடர்பான தடுப்பு மருந்துகள் வந்து விட்டன. 

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவை போடப்படுகின்றன. 

இத்தனை தடவை என்ற கணக்கின்றி அடிக்கடி போடப்படுகின்றன. 
குறிப்பிட்ட கால இடைவெளி இல்லாமல் போட்டாலும் பரவாயில்லை என்று தடுப்பு மருந்து கொடுப்பதை ஒரு சாதனையாக அரசுகள் கருதும் போக்கும் வளர்ந்து வருகிறது!

அதுமட்டுமல்ல , ஒரு காலத்தில் தடுப்பு மருந்து என்றால் அது அரசு ஏற்பாட்டில் நடப்பதாகவே இருந்தது.

ஆனால் இப்போது தனியார் மருத்துவ மனைகளும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதால் அது ஒரு பெரும் வர்த்தகமாகவும் வளர்ந்து விட்டது.

கொள்ளை நோய்த் தடுப்பு என்ற காரணத்துக்காக தடுப்பு மருந்துகள் புழக்கத்தில் இருந்தது போய் அது ஒரு திட்டமிட்ட வணிகமாக வளர்ந்து விட்டது. 

ஆதாவது கொள்ளைநோய்த் தடுப்பு மருந்து என்பது வணிக வருவாய்க்கான மருந்தாக மாற்றம் பெற்று வருகிறது! 

இது மக்களுக்கு நல்லதா?

அதனால் தடுப்பு மருந்துகளின் சாதக பாதகமான விளைவுகள் போதுமான அளவு கணக்கில் கொல்லப் படுகிறதா என்பது ஐயமாக இருக்கிறது! 

தடுப்பு மருந்துகளுக்கு எதிரான கருத்துக்களும் பரவலாக விவாதிக்கப் படுகின்றன. 

அதன் பக்க விளைவுகள் புறக்கணிக்க முடியாதவை என்ற கண்ணோட்டத்தில் செய்திகள் உலவுகின்றன.  

தடுப்பு மருந்துகளுக்கு எதிராக இப்படி  கருத்து பலமாக வளர்ந்து வருகிறது !

 அதைத் தவறு என்று தள்ளிவிட முடியாது! 

அதே சமயம் தடுப்பு மருந்துகள் இல்லாவிட்டால் அதனால் கிடைத்த பயன்களை அடைய மாற்று வழி இருக்கிறதா என்ற கேள்வி முன்னிற்கிறது! 

தடுப்பு மருந்துகளின் பயன்களை ஒப்பிடும்போது அதன் பக்க விளைவுகள் சிறியதாகி விடுவதாகவே தெரிகிறது! 

தடுப்பு மருந்துகளின் பக்க விளைவுகள், தடுப்பு மருந்துகளின் பயன்கள் இந்த இரண்டில் ஒன்றை நாம் அனுபவித்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம். 

இதற்குத் தீர்வு என்ன? 

Tuesday, August 12, 2014

விவசாயம் ( 82 )

வெளாவுல புடி! 

ஏர் ஓட்டுவதில் இரண்டு முறை உண்டு.

ஒற்றை ஏர் ஓட்டுவது, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஏர் ஓட்டுவது. 

எப்படி ஓட்டினாலும் துவக்கத்தில் மூன்று படைக்கால் ஓட்ட வேண்டும்.

அதை வெளா ஓட்டுவது என்பார்கள். முதல் வெளா, இரண்டாவது வெளா, மூன்றாவது வெளா.

முதல் வெளா  முழுமை அடைதவுடன் இரண்டு வெளாதான் மீதம் இருக்கும். அப்போது மீண்டும் ஒரு வெளா ஒட்டவேண்டும். 

அப்போதுதான் ஒவ்வொரு வெளா உழவு முடியும்போதும் உழவு பூமி தள்ளிப் பொய்க் கொண்டே இருக்கும். 

ஒரு ஏர் ஓட்டும்போது பிரச்சினை வராது. 
ஆனால் பல ஏர் ஓட்டும்போது முதல் வெளா முழுமையடையும் நிலையில் அனைத்து ஏர்களும் அதே வெளாவில் வர இடம் இல்லாமல் இருந்தால் யாருடைய ஏருடன் முதல் வெளா முடிந்து விடுமோ அவர் முன்னேச்சரிக்கையாகத் தனக்குப் பின்னால் வருபவரைப் பார்த்து வெளாவுல புடி என்பார்!

உடனே அவருக்குப் பின்னால் உழவோட்டி வருபவர் எல்லோரும் முதல் விழாவை விட்டுவிட்டு இரண்டாவது வெளாவிலேயே மாட்டைத் திருப்பி விடுவார்கள். 

 அடுத்த பக்கம் போய் மீண்டும் இணைந்து கொள்வார்கள்.

இதுதான் வெளாவுல புடி அப்படிகிறதுக்குப் பொருள் ஆகும். 

அப்படிப் பிடிக்காமல் எல்லோரும் பின்னாலேயே வந்தால் ஒரு ஏருக்கு மட்டும் உழவு இருக்கும் நிலையில் அனைத்து எர்களும் ஒரே படைக்காலில் உழும்போது தேவையில்லாமல் மாடுகள் சுற்றுவதால் உழவு அதிகம் ஆகாது.

ஆனால் ஒரு ஏர் மட்டும் ஓட்டும்போது இந்தப் பிரசினை வராது! 

பெரிய விவசாயிகள் பல ஏர்களைக் கொண்டு ஓட்டும்போது வெளாவுல புடி என்று அடிக்கடி சொல்லப்படுவதைக் கேட்கலாம். 

ஆனால் சின்ன விவசாயி தன்னுடைய ஒரு ஏர் கொண்டு ஓட்டுவதால் வெளாவுல புடின்னு சொல்லும் வாய்ப்பு இல்லை! 

அதனாலதான் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமான யோசனை சொல்பவர்களைப் பார்த்துக் கிண்டலாக "ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானானாம்!" என்று எகத்தாளமாகப் பழமொழி சொல்வார்கள்!  

Thursday, August 7, 2014

எனது மொழி ( 171 )


நாணையம்!

நாணையத்தால் தங்களுக்கு ஆதாயம் இருந்தால் அத்தனைபேரும் சுத்தமான நாணையஸ்தர்களே!

தங்களுக்கு ஆதாயம் இல்லாவிட்டால்......

நாணையமாவது மண்ணாங்கட்டியாவது!...

இதுதான் இந்த உலகம்!....

============================================================

சுடராய் எரிவோம் 

நண்பர்களே! 

ஒரு தீபம் எரியும்போது அடிப்படையாக இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப் படுகிறது!

ஒன்று அதற்குத் தேவையான எரிபொருள் வேண்டுமளவு கிடைக்கவேண்டும். 

இரண்டாவதாக எறிந்து முடிந்த கழிவுகள் உடனுக்குடன் சுத்தமாக வெளியேற்றப்பட வேண்டும்! 

எரிபொருள் போதுமான அளவு கிடைக்காவிட்டாலோ கழிவுப் பொருள் சுத்தமாக வெளியேற்றப் படாவிட்டாலோ தீபத்தின் சுடர் தடுமாறும். 

பலவீனமடையும். 

கடைசியில் அணைந்து போகும்! 

இது நாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மை! 

நமது உடல் வாழ்வும் அத்தகையதே! 

அது நன்றாக சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான எரிபொருளாகிய உணவும் காற்றும் நீரும்  சரியான தரத்தில் சரியான அளவில் கொடுக்க வேண்டும். 

அதே போல பயன்பாடு முடிந்த கழிவுகள் உடனடியாகக் கால தாமதம் இன்றி வெளியேற்றப்பட வேண்டும். 


இல்லாவிட்டால் இந்தத் தீபமும் சுடர்விட்டு எரியாது! 
                       
தட்டுத் தடுமாறி விரைவில் அணைந்து விடும்! 

இந்த உண்மையைக் காண ஏன் மறுக்கிறோம்?......


Monday, August 4, 2014

உணவே மருந்து ( 88 )

உணவு இயந்திரம்.....

நண்பர்களே! 

டோசர் என்கிற நிலத்தைச் சமப்படுத்தும் இயந்திரம் உள்ளது! 

அது என்ன செய்யும் தெரியுமா? 

நிலத்தின் மேடான பாகங்களை வெட்டி எடுக்கும் அதேநேரம் பள்ளமான பாகத்தை தேவையான அளவு மேடாக்கும். 


அதனால் நிலம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுகிறது. 

அது போன்றதே இயற்கை உணவும்....

சிறந்த இயற்கை உணவுகள் நமது உடம்பில் குறைவாக உள்ள சத்துக்களை ஈடு செய்யும் அதே நேரம் கூடுதல் சத்துக்களை உடம்பிலிருந்து அகற்றவும் உதவுகின்றன. 

அதனால் இயற்கை உணவை விடச் சிறந்த மருந்து எந்த நோய்க்கும் வேறு இல்லை!
=================================================================
அலர்ஜி!

நண்பர்களே!

இப்போதெல்லாம் உடல்நலக் குறைவுக்கான நோய்களை அலர்ஜி என்பதும் அதிகமாக இடம் பெறுகிறது!

அது சம்பந்தமாக நான் நினைப்பது:

அலர்ஜி என்பதை நான் இரு வகையாகப் பார்க்கிறேன்....

ஒன்று நமது உடல் ஏற்றுக்கொள்ளும் தகுதி இல்லாத எதிர்மறை உணவுப் பண்டங்களும் அவற்றின் பண்புகளும்....

இரண்டாவது நல்லதை உண்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு நமது உடல் தகுதி எதிர்மறையாக மாறிப் போவது!....

இது சரியான கருத்தா நண்பர்களே?...
=============================================================

Saturday, August 2, 2014

எனது மொழி ( 170 )

உணவும் சத்துக்களும்....

 நாம் இயற்கையாக உண்ணக்கூடிய பல்வேறு உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாகச் சத்துக்களின் சேர்மானம் இருக்கும்! 

ஒரேமாதிரி இருக்காது! 

காரணம் எந்த ஒரு தாவரமும் மனிதனுக்காக முழுமையாக உருவானது அல்ல! 

நாம் பல வகைகளை உண்ணும்போது ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு விதமாகச் சத்துக்கள் நமக்குக் கிடைக்கிறது. 

சராசரியாக நமக்கு ஏற்றதாக அமைகிறது. 

நமக்குத் தேவையானதை மட்டும் நமது உடல் எடுத்துக்கொள்ளும். 

அதனால் இயற்கை உணவுகள் சம்பந்தமாக அளவுக்கு அதிகமாகத் துல்லியமாக சத்துக்களை வகைப்படுத்தும் அட்டவணை அவசியம் இல்லை!

விவசாயம் ( 81 )

விளைபொருள் விலையேற்றமும் விவசாயியும்.....

நண்பர்களே! 

விவசாயி விளைவிக்கும் எந்தப் பொருள் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்குப் பயனுள்ள ஒன்றாக நினைப்பது சரியா? 

இப்படி ஒரு கேள்விய நான் முகநூலில் எழுப்பினேன். 

அதற்கு நிறைய நண்பர்கள் சரி அல்ல என்று பதில் அளித்திருந்தார்கள். 

அதற்குக் காரணமாகப் பல காரணங்களைச் சொல்லியும் இருந்தார்கள். 

ஆதாவது இடைத் தரகு, வர்த்தகக் கொள்ளை, விலை நிர்ணயம் இல்லாமை அரசின் தவறான அணுகுமுறை, விவசாயிகளின் செலவினங்கள் அதிகரிப்பு போன்ற பல காரணங்களைச் சொன்னார்கள். 

அத்தனை பதில்களும் இன்றைய விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி அக்கரை உடையவையாகவும் மாறுதல் வேண்டுபவையாகவும் இருந்தன.  

ஆனால் நான் எழுப்பிய கேள்விக்குப் பொருத்தமான முழுமையான பதில்களாக இல்லை. 

உண்மை என்னவென்றால் விவசாயம் பற்றிய விவசாயிகள் உட்பட மக்கள் அனைவரின் புரிதலில் இருந்துதான் அத்தகைய பதில்கள் வெளிப்பட்டன. 

ஆனால் உண்மையில் இதற்கான பதில் வேறு வகையானது! 

ஒரு விவசாய விளைபொருள் விலை உயர்கிறது என்றால் அதற்கான காரணங்களை அறியவேண்டும்.

எப்போது உயர்கிறது?

சந்தைக்கு வரத்துக் குறையும்போது! 

எப்போது வரத்து குறைகிறது?

அதிகமான விவசாயிகள்  அந்தப் பொருளை அதிகம் பயிர் செய்யாதபோது! 

பயிர் செய்துள்ள விவசாயிகளும் தங்களால் எவ்வளவு பரப்பில் விவசாயம் செய்ய முடியுமோ அவ்வளவு பரப்பில் அந்தப் பயிரைச் சாகுபடி செய்யாதபோது!...

ஆதாவது விலை உயர்வு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பது இல்லை! 

பயிர் செய்யும் வாய்ப்பு உள்ள விவசாயிகளாலும் தங்கள் நிலத்தில் மிகச் சிறு பகுதியே சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கிடைக்கிறது. 

அப்படியானால் இதிலிருந்து என்ன தெரிகிறது?

பெரும்பாலான விவசாயிகளுக்கும் அந்த விலை உயர்வுக்கும் சம்பந்தம் கிடையாது! 

ஒரு சிறு பகுதி விவசாயிகளுக்கும் முழுமையாகக் கிடைப்பது கிடையாது.

இந்த நிலையில் எந்தப் பொருள் என்ன விலைக்கு விற்றாலும் அதைப் பயிர்செய்த விவசாயிகே முழுப் பயன் இல்லாத நிலையில் பயிரே செய்யாத விவசாயிகளுக்கு என்ன பயன்? 

இப்படி இருக்க ஒரு பொருளின் விலை அதிகமானவுடன் அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைப்பதுபோன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதும் அதை நம்புவதும் என்ன நியாயம்?....

ஆனால் அதுதான் நடக்கிறது! 

காய்கறிகள் உற்பத்தி குறைந்து கொஞ்சம் விலை கூடிவிட்டால் ஆலாய்ப் பறக்கிறார்கள்! வெங்காயம் கிலோ இவ்வளவு, கத்தரிக்காய் இவ்வளவு, தக்காளி இவ்வளவு என்று! 

எதோ அந்த நேரத்தில் விளையும் சில பண்டங்களால் சிறு பகுதியினருக்குக் கிடைக்கும் அற்ப காசுகூடப் பறிபோக வேண்டுமா?

ஆனால் அப்படிப்பட்ட பிரச்சாரம்தான் தொடர்ந்து நடக்கிறது.....

அது அநியாயம்! உண்மைக்கு மாறான மாயத் தோற்றம்! 

அனைத்து விவசாயிகளுக்கும் விளையும்போது நல்ல விலை விற்றால் மட்டுமே அனைத்து விவசாயிகளின் முழு நிலமும் பயிர் செய்யப்பட்டு விளைச்சல் நல்ல விலைக்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் விலையேற்றத்தால் பயன்பெற்றார்கள் என்று சொல்வது சரி! 

அப்படியல்லாமல் சந்தையில் விலை உயர்ந்தவுடன் அதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துவிட்டது என்று பொத்தாம் பொதுவில் சொல்வது நயவஞ்சகமும் மோசடிப் பிரச்சாரமும் ஆகும்!

அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கவும் மக்களுக்கும் நியாய விலையில் விளைபொருள் கிடைக்கவும் என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்! 

அதுதான் நிரந்தரத் தீர்வு!....