ss

Monday, August 25, 2014

இயற்கை ( 21 )

செவிடன்காதில் சங்கு! 

அரசுக்கு முன்வைக்கும் சுலபமான நான்கு  வழிகள்!

நண்பர்களே!

நமது மக்களிடையே இப்போது அடிக்கடி ஆர்வமாகவும் அக்கறையுடனும் பேசப்படும் நான்கு  பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்!

முதலாவது இப்போது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷ முள் மரங்களாகிய வெளிக் வேலிக் கருவை ஒழிப்பு.

இரண்டாவது மரம் வளர்ப்பு.....

மூன்றாவது மழைநீர் சேகரிப்பு....

நான்காவது அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவது!

இந்த நான்கையும் எதற்காக எடுத்துக் கொண்டோம் என்றால் இதில் மூன்றுக்காக ஒரு பைசாகூட செலவு செய்ய வேண்டியது இல்லை.

ஒன்றுக்கு மட்டும் கணிசமாகச் செலவு செய்யவேண்டும்.

ஆனால் அந்தச் செலவைவிட அதனால் கிடைக்கும் பயன் மகத்தானது!

முதலாவது வேலிக் கருவை ஒழிப்பு:

ஒரு காலத்தில் இதற்கு அவசியம் இருந்தது. இன்று மக்களை மிரட்டுமளவு எங்கும் காணப்படும் தேவையற்ற ஒன்றாகி விட்டது.

அதை ஒழித்துக்கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் வழிதான் புலப்படவில்லை!

வழி உள்ளது. அதற்கு முன்னதாக ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்.

அதை அறவே ஒழித்துக்கட்டி விட்டால் அதை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தி வரும் செங்கல் சூளைகளுக்கும்  கரி சுடுவதற்கும் மாற்று வழி காணவேண்டும்.

இல்லாவிட்டால் அந்தத் தேவைகளுக்காக மற்ற நல்லமரங்கள் சூறையாடப் படுவதைத் தடுக்க முடியாது!

ஒழிக்கும் வழி:

மிகச் சுலபமானது!

ஆதாவது தனியார் நிலங்களில் உள்ள வேலிக் கருவையை ஒழித்துக் கட்டாமல் அந்த நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது!

குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பின்னால் யாருடைய நிலத்தில் வேலிக் கருவை உள்ளதாக அறியப் படுகிறதோ அல்லது தகவல் கிடைக்கிறதோ அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப் படும்!

பிரச்சினை உள்ள நிலமாக இருந்தால் அதிலுள்ள வேலிக் கருவை மரங்களை அழிக்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டு அதற்காக ஆகும் செலவையும் மீண்டும் அங்கு வளராமல் தடுப்பதற்கான செலவையும் அந்த நிலத்தின்மேல் தண்டமாக விதிக்க வேண்டும்.

அந்த தண்டத்தை வட்டியுடன் செலுத்தாமல் எப்போதும் பைசல் முடிக்க முடியாது.

பஞ்சாயத்து, நகடாட்சி, பொதுப்பணித்துறை, சாலைகள், மற்றும் இதர துறைசார்ந்த இடங்களில் வளர்ந்திருக்கும் வேலிக் கருவை மரங்களை ஒழித்துக்கட்டும் பொறுப்பை அந்தந்த அமைப்புகளும் துறைகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அப்படி ஒழிக்கும் வரை அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டும்!

இப்படி ஒரு உத்தரவை அரசு பிறப்பித்தால் குறுகிய காலத்தில் வேலிக் கருவை காணாமல் போகாதா?

இதைவிட எளிமையான வழி வேறு என்ன இருக்கிறது?

இரண்டாவதாக மரம் வளர்ப்பு ! 

அதற்கான வழி : 

 நாட்டில் உள்ள அனைத்துப் படடா நிலங்களிலும் நன்கு வரட்சியைத் தாங்கி உயிர் வாழக்கூடிய ஏதாவது பயனுள்ள மரங்கள் ஒரு ஏக்கருக்கு ஐந்து வீதம் கண்டிப்பாக நட்டு வளர்க்கவேண்டும். (தோப்புகளைக் கணக்கில் சேர்க்கக்கூடாது)


அப்படி வளர்க்கப்படாத நிலங்கள் அனைத்தின் உரிமையும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். குறிப்பட்ட தேதி அறிவிக்கப்பட்டு அந்தத் தேதிக்குள் மரக் கன்றுகள் நடப்பட வேண்டும்.

அதன்பின்பு அந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ வேண்டுமென்றால் அந்த அறிவிக்கப்பட்ட தேதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறிப்பட்ட வயதுடையதாக இருக்கவேண்டும் அல்லது கன்றுகள் நட்டு இவ்வளவு வயதுள்ள மரக்கன்றுகள் இருக்கும் நிலங்கள்தான் விற்கவோ வாங்கவோ முடியும் என்று அறிவிக்கவேண்டும்.

அதேபோல ரியல் எஸ்டேட்டுக்காக வாங்கப்பட்டு சைட்போட்டு விற்கப்படும் நிலங்கள் அனைத்தும் பத்து சென்டுக்குக் குறையாக ஒரு சைட்டுக்கு ஒரு மரம் அவசியம் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். அதைவிடக் குறைவான அளவுள்ள சைட்டுக்கு ஒரு மரம் என தெருக்களில் மரம் நட்டுக் காப்பாற்றவேண்டும் என்ற விதி இருக்கவேண்டும்.

அதேபோல தொழிற்பயன்பாட்டுக்கு என்று வாங்கிப் போட்டுப் பலகாலம் சும்மா இருக்கும் நிலங்களிலும் ஏக்கருக்கு இத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதை விதியாக்கவேண்டும்.

அதேபோல அரசுப் புறம்போக்கு மற்றும் ஏரி குளங்களின் ஓரங்கள் ஆற்றங்கரைகள் கடற்கரைகள் ஆகிய பகுதிகளில் மரங்ளை நட்டுக் கொடுத்து அதைக் காப்பாற்றுவோருக்கு ஒரு மரத்துக்கு இவ்வளவு என்று சன்மானமாகக் கொடுப்பதுடன் அவற்றில் விளையும் காய் அல்லது கனிகளை அவர்களே அனுபவிக்க உரிமை கொடுக்கலாம்.


அவர்களுக்குத் தண்ணீர் வசதியையும் செய்து கொடுக்கலாம். 

அதேபோல கடும் வரட்சியைத் தாங்கி வாழக்கூடிய மூலிகைப்பண்புள்ள தாவரங்ளையும் கள்ளி, புதர். போன்ற பாரம்பரியத் தாவர வகைகளையும் அரசுப் புறம்போக்கில் நட்டுப் பராமரிப்போருக்கு நட்டுக்கொடுப்பதும் ஊக்கத்தொகையும் அனுபவிக்கும் உரிமையும் என்று உதவி ஊக்குவிக்கலாம்.

நாளைய உலகும் மக்களும் நமது சந்ததிகளும் வளமுடன் வாழவேண்டுமென்றால் நிலங்கள் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படவேண்டும் என்றால் மழை நன்கு பெய்து பசுமை பூத்துக் குலுங்கவேண்டுமென்றால் அரசுகளுக்கு இதைவிட வேறு முக்கியக் கடமை இருக்கமுடியாது.

பெரும்பகுதி வெறும் சட்டத்தால் மட்டும் சாதிக்கக்கூடிய இந்த யோசனைகளை அரசு ஏன் ஏற்கக்கூடாது?


இதை எனது இணைய தளத்தில் ஏற்கனவே கட்டுரையாக எழுதியிருக்கிறேன். (http://www.drumsoftruth.com/2013/04/subash-krishnasamy-january-20-2012.html)

மூன்றாவதாக மழைநீர் சேகரிப்பு! 

இது சற்று செலவு பிடிக்கக்கூடிய ஆனால் பயனுள்ள திட்டம் ஆகும்! 

ஆதாவது தனியார் நிலம் அது எந்த வகையாக இருந்தாலும் அதில் ஐந்து அல்லது அதற்குக் குறையாமல் நிர்ணயித்து அத்தனை சதவிகிதப் பரப்பில் தாழ்வான பகுதியில் மழைநீர் சேமிப்பு இயற்கைக் குட்டைகளை அரசே அமைத்துக் கொடுக்கும். 

அதைப் பராமரிப்பது அவரவர் பொறுப்பு! அந்த நிலத்தை வாங்கும்போது விற்கும்போதோ நல்ல நிலையில் குட்டை இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும்!

அதைவிட அதிகப் பரப்பில் தேவை என்று ஒருவர் கேட்டால் அதையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். 

அரசு புறம்போக்கு , அரசுத் துறை சார்ந்த நிலங்களிலும் இதையே பின்பற்ற வேண்டும்! 

இதன்மூலம் நாட்டில் விழும் ஒவ்வொரு மழைத் துளியும் பயனுள்ள ஒன்றாக மாற்றப்பட்டு எங்கும் பசுமை என்ற நிலை ஏற்படும். 

நான்காவதாக அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டும் பிரச்சினை!

அதற்கு வழி:

அரசு அனுமதி இல்லாமல் நகர்ப புறங்களில் கட்டிடங்கள் கட்டுவது எவ்வளவு தவறோ அதைவிட ஆயிரம் மடங்கு தவறு கட்டப்பட்டதை இடிப்பது ஆகும்! 

அதுவும் இந்த நாட்டின் சொத்தும் உழைப்பும் ஆகும்! 

அதனால் ஒரே உத்தரவின்மூலம் சட்டவிரோதமாகக் கட்டிடங்கள் கட்டுவதையும் தடுக்க முடியும். 

கட்டிட கட்டுமானங்களை அழித்து நாசப்படுத்தவும் தேவை இல்லை! 

ஆதாவது அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டுமானம் அரசுக்குச் சொந்தம். 

அதைக் கண்டறிந்தால் அது கட்டப்பட்ட தேதியில் இருந்து அரசுக்கு வாடகை செலுத்த வேண்டும். 

கட்டியவர்களுக்கு அதை இடிக்க உரிமை இல்லை! 

அதை விற்கும்போது அரசு எடுத்துக் கொண்டதையும் அதற்கான அடி நிலத்தையும் விற்க முடியாது. 

இப்படியான ஒரு உத்தரவு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்காதா? 

ஆகவே நண்பர்களே! 

நான் குறிப்பிட்ட இந்த நான்கு யோசனைகளையும் அரசு ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! 

இதற்காக அரசு பெரும் செலவு செய்ய வேண்டியது இல்லை! 

இதை அமலாக்கக் கோரி நாடு முழுவதும் மக்கள் குரல் எழுப்பினால் நிச்சயம் நடந்தே தீரும்!

மக்களும் மக்கள் இயக்கங்களும் எழுச்சி பெற இந்தக் குரல் தூண்டுகோலாக அமையுமா?

அமைந்தால் அதைவிட நல்லதாக ஏது இருக்க முடியும்?.... 


No comments:

Post a Comment