உயிரும் உடலும்
நண்பர்களே!
மனித இனம் மட்டுமல்ல எல்லா உயிரினமும் தாவரங்களும்கூட தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.
புதிது புதிதாகத் தோன்றுவது அரிதான ஒன்றாகவே இருக்கலாம்! !
ஆதாவது இருக்கும் உயிரினத்தோடு தாவரத்தோடு மக்களோடு தொடர்பு இல்லாமல் எந்த ஒன்றும் பிறப்பதில்லை.
பூமி உயிரினங்கள் வாழத் தகுதியுடையதாக மாறிய துவக்க காலத்தில் இயற்கைச் சூழலுக்குத் தக்கபடி எண்ணற்ற உயிரினங்கள் தோன்றின.
ஒவ்வொன்றும் தங்களுக்கே உரிய சிறப்புப் பண்புகளுடன் பல்வேறு விதமாகப் பல்கிப் பெருகி உலகை நிறைத்தன.
அப்படிப் புதிதாகத் தோன்றிய மாதிரியே தொடர்ந்து மாறிவரும் சூழலுக்கு ஏற்ற எண்ணற்ற நுண்ணுயிர் இனங்கள் இப்போதும் தோன்றி நம்மிடையே வாழக்கூடும் என்றே நினைக்கிறேன்.
ஆனால் நாம் இப்போது எடுத்துக்கொண்டிருப்பது உயிரினங்களிலேயே மிகவும் சிறப்பான பாத்திரம் வகிக்கின்ற மனித இனம் பற்றியதாகும்.
அதை முன்மாதிரியாகக் கொண்டு பிறவற்றையும் பார்ப்பது சரியாக இருந்தால் பின்னால் பார்ப்போம்.
மனிதராகிய நாம் ஒவ்வொருவரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வாழ்கிறோம், மறைகிறோம்.
ஒவ்வொரு மனிதன் இறக்கும்போதும் ஒரு உயிர் பிரிந்து விட்டதாக நினைக்கிறோம்.
ஆதாவது ஒரு மனிதனுடன் தோன்றும் உயிர் அவன் மறையும்போது மறைந்து விடுவதாக நினைக்கிறோம்.
தோன்றும் ஒரு மனிதன் இறக்கும் வரை எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் இறந்தால் அவனுடைய உயிர் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள்.
ஆனால் அவன் வாழும்போதே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து இன்னொரு உயிரை உருவாக்குகிறார்கள்.
ஆதாவது இரண்டு உயிர்கள் சேர்ந்து மூன்றாவதாக ஒன்றை அல்லது பலவற்றை உருவாக்குகின்றது.
அப்படிச் சொல்வது கூடத் தவறு.
இரண்டு உயிர்களில் இருந்து மேலும் சில கிளைகள் பிரிகின்றன.
ஆதாவது ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரானது தன்னைப் பலவாகப் பெருக்குகிறது!
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் முன்பு எண்ணற்ற தலைமுறையில் வாழ்ந்து மறைந்த எண்ணற்றவர்களின் உயிர்களின் கலவையாகத்தான் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
வாழும்போதே அடுத்த தலைமுறை தொடர்ந்து விடுகிறது...
ஆதாவது ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன்பின்பு உருவாவது இல்லை!
வாழும்போதே உருவாக்கி விடுகிறது!
ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய எண்ணற்ற தலைமுறைகளின் எண்ணற்ற உயிர்களின் இணைப்பாக இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வு முடியும்போதும் அவனுடைய உயிர் போய்விட்டதாகவும் ஒவ்வொருவன் பிறக்கும்போதும் புதிதாய் ஒரு உயிர் பிறந்துள்ள தாகவும் சொல்கிறோம்!
அது சரியானதுதானா?
ஒரே உயிர் தொடர்ந்து கிளை பிரிந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தனித் தனி உயிர்களாகப் பார்ப்பது சரியா?
ஒரே உயிரின் தொடர்ச்சியைத்தானே எண்ணற்ற உயிர்களாப் பார்க்கிறோம்?
ஆதாவது ஒரே சங்கிலியின் துண்டிக்கப்படாத கண்ணிகளைப்போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஒவ்வொரு கண்ணியையும் தனித்த ஒன்றாக ஆதாவது தனித் தனி உயிராகப் பாவிக்கிறோம்.
ஒரே உயிர்ச் சங்கிலியின் கண்ணிகளாக எண்ணற்ற கிளைகளாகப் பிரிந்து வாழ்ந்துகொண்டு ஒவ்வொரு கண்ணியையும் ஒரு தனி உயிராகப் பார்ப்பது வழக்கில் உள்ளது .
வழக்கில் உள்ள முந்திய தலைமுறை உயிருக்கும் அடுத்த தலைமுறை உயிருக்கும் இணைப்பு எப்போது துண்டிக்கப் படுகிறது?....இல்லையே!
ஆதாவது துவக்கமும் முடிவும் தெரியாத ஒரு உயிர்ச் சங்கிலியின் அடிப்பகுதி மறைந்துகொண்டும் நுனிப்பகுதி தொடர்ந்து பல கிளைகளாக வளர்ந்துகொண்டும் உள்ளது.
தொடர்பு துண்டிக்கப்படுவதே இல்லை .
ஆனால் ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு தனித்தனி உயிராகவே பாவிக்கிறோம்.
உண்மையில் உயிர்ச் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் தனித் தனிப் பண்புகளோடு வாழுகின்ற அம்சங்கள்தான் தனித்தனியானவை!
ஆதார உயிர் என்பது எப்போதும் துண்டிக்கப்படுவது இல்லை! மறைவதும் இல்லை!
உயிர்தாங்கி நிற்கும் ஆதாவது உயிர் என்கின்ற வாழும் இயக்கத்தின் உள்ளுக்குள்ளேயே நடக்கும் துணை இயக்கங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் உயிரும்!
நமது உயிர் அப்பா அம்மா இருவரின் உயிர் கலந்தது.
அவர்கள் இருவரின் உயிரும் அவர்களின் அப்பா அம்மாக்களான நால்வரின் உயிர் கலந்தது!
அவர்களின் உயிரோ அதற்கு முந்தைய தலைமுறையின் எட்டுப்பேரின் உயிர் கலந்தது!
ஆதாவது நம்முடைய உயிர் என்பது நமக்கு முந்தைய எண்ணற்ற வர்களின் உயிர்க் கூட்டு ஆகும்!
அதே போல நம் உயிரும் நமக்கு அடுத்து வரும் எண்ணற்ற தலைமுறையின் எண்ணற்றவர்களின் உயிரில் கலந்து இருக்கும்.
ஆதாவது உயிர் என்பது எண்ணற்ற புள்ளிகளால் ஆன ஒரு பெரும் தொகுப்பாகவும் அப்படிப்பட்ட எண்ணற்ற தொகுப்புகளாக மேலும் மேலும் பிரியக் கூடியதுமான ஒரு பேரியக்கம் ஆகும்.
அதில் ஒவ்வொரு தொகுப்புப் புள்ளியையும் ஒரு தனி உயிராகவும் அந்த உயிர்மையமான உடம்பைத் தனி மனிதராகவும் நினைக்கிறோம்.
நமது தோற்றத்துக்கு சில வருடங்கள் வாழ்ந்து மறையும் மனிதன் தனிமனிதனாகவும் அதன் இயக்கம் தனி உயிராகவும் தெரிகிறது. நாமும் நினைக்கிறோம்.
ஒவ்வொரு மனிதனின் உயிர் எப்படித் தனியான ஒன்று அல்லவோ அதுபோலவே உடம்பும் பிறந்ததில் இருந்து சாகும் வரை மாறாமல் இருக்கும் ஒன்று அல்ல!
ஒவ்வொரு மனிதனின் உடம்பும் ஒரு வினாடி நேரம்கூட நிலைமாறாமல் நீடித்து இருப்பதில்லை.
பிறக்கும்போதே எண்ணற்ற தலைமுறையினரின் உடற்கூறு மரபுகளை உள்ளடக்கியே பிறக்கிறோம்.
அதே போல நமது காலத்துக்குப் பின்னாலும் எண்ணற்ற தலைமுறைகளுக்கு நம்மிலிருந்து மரபு வழியான உடற்கூறுகளை விரிவாக புதிதாகப் பிறப்பிக்கவும் செய்கிறோம்.
ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான அணுக்களும் அனுக்களாலான பவேறு மூலக் கூறுகளும் புதிதாக உடம்பில் சேர்ந்தவண்ணம் உள்ளன.
அதேபோல ஏறக்குறைய வெளியேறவும் செய்கின்றன.
ஒவ்வொரு வினாடியும் சூழலில் இருந்து தன்னுடன் என்னற்றவற்றைச் சேர்த்துக்கொள்வதும் ஒவ்வொரு வினாடியும் தன்னையும் அந்தச் சூழலில் கரைத்துக் கொள்வதுமான வாழ்வைத்தான் ஒவ்வொரு உடம்பும் கொண்டிருக்கிறது.
தன்னுடன் சேர்த்துக் கொள்ள எடுத்துக்கொள்பவற்றில் ஏற்கனவே உயிருடன் வாழ்ந்த அல்லது வாழ்ந்துகொண்டிருந்த மனிதனின் உடம்பில் இருந்து வெளியேறிய அணுக்களும் மூலக் கூறுகளும் அடங்கும்!
அதுபோலவே தன்னிடம் இருந்து வெளியேற்றப்படும் எண்ணற்ற அணுக்களும் மூலக் கூறுகளும் மற்ற மனிதர்களின் உடம்பு உட்பட பல பாகங்களில் சூழலில் கலக்கிறது!
ஆதாவது ஒவ்வொரு வினாடியும் பிற மனிதர்களின் உட்கூறுகள் நம்முடன் கலக்கின்ற அதே நேரம் நம்முடைய உடம்பின் உட்கூறுகள் பிற மனிதர்களின் உடலிலும் கலக்கின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு மனிதருடைய உடலின் அடையாளமும் உறவுகளும்தான் மாறாமல் குறிப்பிட்ட காலம் நீடிக்கிறதே தவிர மனிதனின் உடல் கட்டமைப்பு மற்ற மனிதர்கள் உட்பட அனைத்தின் கலவையாகவே உள்ளது!
இந்த நிலையில் ஒரு உடம்பும் ஒரு உயிரும் என்பது உண்மையில் நம்மால் உணரக்கூடிய புறத் தோற்றமும் மேலெழுந்தவாரியான உணர்வும்தானே தவிர உண்மை அப்படி அல்ல!...
ஒரு இனத்தின் அனைத்து உயிர்களும் கலந்ததே உயிராகும்.
அனைத்து மனிதர்களும் கலந்ததே உடம்பும் ஆகும்.
மறைவது என்பது மனித உயிர் என்ற பொதுப் பண்பில் இருந்து மறையும் சிறு சிறு புள்ளிகளே!
அழிவது என்பது மனித உடல் தொகுபில் இருந்து குறிப்பிட்ட தலைமுறையைச் சேர்ந்த குறிப்பிட்ட அடையாளமும் பல்வேறு பண்புகளும் அடங்கிய குறிப்பிட்ட மனித வடிவங்களே!.
அதனால் நாம்......
ஒவ்வொரு வினாடியும் பிறந்துகொண்டே இருக்கிறோம்.
ஒவ்வொரு வினாடியும் இறந்து கொண்டே இருக்கிறோம்.
குறிப்பிட்ட வடிவத்துடன் உருவாவதைப் பிறப்பு என்றும் குறிப்பிட்ட வடிவம் மறைவதை இறப்பு என்றும் சொல்கிறோம்.
இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் மனித இனத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டாலும் அனைத்து உயிரினங்களுக்கும் தாவரங்களுகும்கூட ஏறக்குறையப் பொருந்தும்.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது....
ஆதாவது நிலையான ஒரு மனித உடம்பும் அதில் தனியாக ஒரு உயிரும் இல்லாத நிலையில் .....
தனித் தனியான உடல், தனித்தனியான உயிர் , என்று வழக்கில் உள்ள அம்சங்களின் பொருள் அடியோடு மாறுகிறது!....
இந்தநிலையில் போகாத உயிர் போனபின்னால் அது நிலைகொண்டிருந்த ஆன்மா அழிவது இல்லை என்ற கூற்றுகளின் பொருள் என்ன?
ஒரு பிறப்பே நிலையற்ற வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மறுபிறப்பு என்ற நம்பிக்கைக்கு என்ன பொருள்?
பாவபுண்ணியங்கள், சுவர்க்கம், நரகம் ஆகியவை மனித வாழ்வுடன் எப்படிப் பொருந்துகின்றன?
மக்களாகிய நாம் வாழும் வாழ்க்கையின் உண்மையான பொருள் என்ன?
வாழவேண்டிய முறை என்ன?
தெளிவான பதிலை யார் சொல்லப் போகிறார்கள்!......பார்ப்போம்!