பெண்ணுக்கு என்ன ஆச்சு?
நண்பர்களே!
உலகில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் என்னும் விகிதத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
நமது நாட்டிலும் அப்படியே!
அப்படி இருக்க இப்போது திருமண வயதில் இருக்கும் ஆண்பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பது அரிதாகிவிட்டதே!
இது எதனால்?
முன்பு மாப்பிள்ளை கிடைப்பதுதான் அரிதாக இருந்தது?
எதனால் இந்தத் தலைகீழ் மாற்றம்?
கொஞ்சம் அலசுவோமா?
எக்காலத்திலும் உலகில் ஆண் பெண் தொகை ஏறக்குறைய சமமாகவே இருக்கும்.
ஆனாலும் முன்னர் மாப்பிள்ளைகளுக்கு நமது நாட்டில் இருந்த கிராக்கி என்ன?
இப்போது அது தலைகீழாக மாறிப்போனதென்ன?
காரணம் சற்று ஆழமாக யோசித்தால் விளங்கும்!
ஆதாவது நமது நாட்டில் முன்பு பெண்கள் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள்.
காரணம் பருவ வயதடைந்த பெண்களை வீட்டோடு அதிக காலம் வைத்திருப்பதைக் கடினமாகவும் ஆபத்தாகவும் இழிவாகவும் கருதினார்கள்.
அதனால் பால்ய விவாகத்தில் துவங்கி அதன்பின்பு பருவம் அடைந்ததும் உடனே திருமணம் முடித்துவிடும் பழக்கத்துக்கு மாறிச் சென்றாலும் முடிந்தவரை குறைந்த வயதில் பெண்ணைக் கட்டிக்கொடுத்து விடுவது என்ற சமூக உணவு தொடர்ந்தே வந்தது.
அதே சமயம் ஆன் பிள்ளைகள் சம்பந்தமாக அத்தகைய அச்சமோ சிறு வயதிலேயே திருமணம் முடிக்கவேண்டும் என்ற நிர்பந்தமோ இல்லை.
மாறாக திருமணம் முடிந்ததும் குடும்பத்தைக் காக்குமளவு வருவாய் தேடவேண்டிய நிலையில் இருந்தார்கள்.
அதனால் அவர்களின் திருமண வயது பெண்களின் சராசரித் திருமண வயதைவிட அதிகரித்தது மட்டுமல்ல இரு பாலரின் சராசரிகளின் இடைவெளிகளும் அதிகரித்தன.
அதனால் மக்கள் தொகையில் இருபாலரும் சமமாக இருந்தாலும் திருமண சந்தையில் மாப்பிள்ளைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும் பெண்களை மலிவாக நினைத்து திருமணச் சந்தையில் விலை பேசப்பட்டதும் நடந்தன.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாற்றம் அடைந்தது!
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை பெற்றோருக்கும் கல்யாணத்துக்குப் பின்னால் கணவனுக்கும் கடைசிக் காலத்தில் பிள்ளைகளுக்கும் அடிமையாக வாழ்ந்த இழிநிலை போய் பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்ற கருத்துக்கள் வெறும் லட்சியங்களாக இல்லாமல் பலமாக எழுந்தன.
பெண்கள் முடங்கிப்போய் இருந்த நிலை மாறிக் கல்வி கற்கத் துவங்கினார்கள்.
அதிலும் ஆண்களுக்கு இணையாக அல்லது மேலாகக் கற்று பட்டம் பதவிகளைப் பெற்றார்கள்.
அப்படிக் கல்வி கற்பதற்கும் நல்ல வேலைகளில் அமர்வதற்கும் காலம் நிறையத் தேவைப்பட்டது.
அதன் காரணமாக அவர்கள் முன்போல மிகக் குறைந்த வயதிலோ பருவம் அடைந்த சில வருடங்களுக்கு உள்ளாகவோ திருமணம் செய்துகொள்வது குறைந்துகொண்டே வந்தது.
அதன் காரணமாக முன்பு சராசரித் திருமண வயது பதினைந்தில் இருந்து இருபதுக்கு உள்ளாக இருந்த நிலைமாறி சராசரி ஏறக்குறைய இருபத்தியைந்து என்கிற அளவுக்கு உயர்ந்து விட்டது.
ஆனால் ஏற்கனவே திருமண வயதை சராசரி இருபத்தியைந்திலிருந்து முப்பதுவரை வைத்திருந்த மாப்பிள்ளைகள் அதற்கும் மேல் உயர்த்தமுடியாத நெருக்கடி ஏற்ப்பட்டது.
அதன் விளைவாகத் தவிர்க்க முடியாமல் பெண்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படத் துவங்குகிறது.
அது முதலில் சாதாரணமாகத்தான் துவங்கியது.
எந்த ஒரு பொருளுக்கும் டிமாண்ட் அதிகமாகும்போது விலை அதிகமாகிறது.
விலை அதிகமாகும்போது பதுக்கலும் கூடவே நடப்பதால் சந்தையில் அந்தப் பொருளின் மார்கெட் மேலும் செயற்கையாக உயர்வது இயல்பானதே!
திருமணச் சந்தையிலும் இதுதான் நடந்தது!
பெண்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படத் துவங்கியதும் பெண்ணைப் பெற்றவர்கள் இறுக்கிப் பிடிக்கத் துவங்கினார்கள்...
அதனால் திருமணச் சந்தையில் பெண்ணுக்குக் கிராக்கி குறுகிய காலத்தில் உச்சத்தையே எட்டிவிட்டது!....
இதுதான் உண்மையான படப்பிடிப்பு என்று நினைக்கிறேன்!
அது இனியும் தொடருமா? எத்தனை காலம் இந்தநிலை நீடிக்கும்?
நிச்சயம் நீண்ட காலம் தொடராது! தொடரவும் முடியாது!
காரணம் சந்தை நிலவரம் என்றுமே நிரந்தரமானது அல்ல!
உச்சத்தைத் தொட்டபின்னால் சரியாவே செய்யும்.
கல்யாண மார்கெட்டும் அப்படியே!
பெண்களின் சராசரித் திருமண வயது மூன்றில் ஒரு பங்கு உயர்ந்ததன் காரணமாகவே பெண்களுக்குக் கிராக்கி ஏற்ப்பட்டது.
ஆனால் இதற்கு மேலும் பெண்களின் திருமண வயதைக் கூட்டிக்கொண்டே போக முடியாது!
ஆனால் புதிதாக சந்தையில் நுழைகின்ற சராசரி வயதுள்ள பெண்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே திருமண வயதை அடைந்தும் நல்ல மாப்பிள்ளைகளுக்காக பிடிவாதமாகக் காத்திருக்கும் பெண்களுமாகச் சேர்ந்து
கல்யாணத்துக்காக இருக்கும் பெண்களின் தொகை குறுகிய காலத்தில் அதிகமாகப் போகிறது.
ஆனால் அந்த அளவுக்கு பிடித்த மாப்பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போவது இல்லை. முன்னர் கைவிடப்பட்ட மாப்பிள்ளைகள் ஏராளமானோர் புதிய மார்க்கெட்டில் நுழையவும் வழி இல்லை!
அந்த நிலையில் பிடித்த மாப்பிள்ளைகளுக்குக் கிராக்கி ஏற்படத் துவங்கும்.
அதன் தொடர்ச்சியாக, பிடித்த மாப்பிள்ளைகளுக்குப் பதிலாகக் கிடைத்த மாப்பிள்ளை போதும் என்கிற நிலை உருவாகும்!
அப்புறம் என்ன? கொஞ்ச காலத்துக்கு மாப்பிள்ளைகளின் ராஜ்ஜியம்தான்.
பங்கு வர்த்தகத்தில் காளையும் கரடியும் மாறி மாறி முன்னுக்கு வருவதுபோல கல்யாணச் சந்தையிலும் மாப்பிள்ளைகளும் பெண்களும் மாறி மாறி முன்னுக்கு வருவார்கள்.
வாழ்க்கையே வர்த்தகமாகிபோன சமூகத்தில் திருமண பந்தங்களும் வர்த்தகமாவது தவிர்க்கமுடியாது!
இது சரியான வாழ்க்கை முறைதானா?
இப்படி வசதியையும் சொத்து சுகத்தையும் ஆடம்பர வாழ்வையும் நோக்கமாகக் கொண்டு நடக்கும் திருமண வாழ்க்கை நடைமுறையில் மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வாக அமைகிறதா?
நிச்சயம் கிடையாது!
எண்ணற்ற திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
நீதிமன்றங்களும் விவாகரத்துக்களுமாக சிதைந்து போகின்றன.
சிறு பகுதி தவிர ஒரு பெரும்பாகம் மானம் மரியாதை என்கிற கூட்டுக்குள் முடங்கிப்போய் விடுகிறார்கள்...
இந்த நிலையை மாற்ற முடியாதா?
நிச்சயம் முடியும்!
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் வசதியையும் வருவாயையும் கருத்தில் கொள்ளாமல் இணையப்போகும் இரண்டு உள்ளங்களுக்கும் இருக்கவேண்டிய தகுதிகள் பற்றிச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே!
அப்படிப்பட்ட அளவுகோலைக் கொண்டு தாங்களாகவே விரும்பிச் செய்துகொள்ளும் திருமணங்களும் பெற்றோரால் திட்டமிட்டுச் செய்யும் திருமணங்களும் நிச்சயம் சிறப்பாக இருக்கும்!
அதன் காரணமாகத் திருமண உறவுகள் மகத்தான ஒரு உயர்நிலையை அடையும்!....