ss

Saturday, December 27, 2014

எனது மொழி ( 184 )

முதல் அடி! 

ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு அம்சங்கள் தவிர்க்க முடியாதவை. 

ஒன்று தனிநபர் வாழ்க்கை. இரண்டாவது சமூக வாழ்க்கை. 

இந்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றையொன்று சார்ந்தவை. 

இந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமளவு ஒரு நாடும் உலகமும் மேலானதாகவும் இருக்கும். ஆனால் 

துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் இந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இல்லை. 

அதன் விளைவுகளைப் பார்க்கிறோம். 

இதில் மாற்றம் எதில் துவங்குவது என்று பார்த்தால் இரண்டுமே முக்கியம்தான். 

ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும். 

அடிமரமும் கிளைகளும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருப்பினும் கிளைகளில் ஏற்படும் பாதிப்புகள் அடிமரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைவிட அடிமரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கிளைகளில் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையானவையும் கூடுதலானவையும் வேகமானவையும் ஆகும். 

காரணம் ஒவ்வொரு கிளையும் அடிமரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 

சமூக வாழ்க்கை அடிமரத்தைப் போன்றது. 

தனிநபர் வாழ்க்கை கிளைகளைப் போன்றது. 

அதனால் சமுதாயத்தில் பெருத்த மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டுமானால் முன்னோடிகள் முதலடி கொடுக்க வேண்டியது சமூக வாழ்வுக்கே! 

அதில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும்!....

Thursday, December 18, 2014

எனது மொழி ( 183 )

நடக்குமா!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எத்தனையோ பெண்கள் அது வெளியே தெரிந்தால் கிடைக்கும் நியாயத்தைவிட அடையும் அவமானத்தை நினைத்து தங்களுக்குள்ளேயே மூடி மறைத்து வெந்து மடிந்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.....

 அப்படி இல்லாமல் அனைத்துக் குற்றச் செயல்களும் வெளிவந்து ஒழிக்கப்படவும் வேண்டுமானால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு மற்ற பெண்களுக்குக் கொடுக்கும் சமூக அந்தஸ்தைக் குறைவில்லாமல் கொடுக்க வேண்டும். 

அது நடக்குமா?

Monday, December 8, 2014

எனது மொழி ( 182 )

ஞானிகள்...

ஒவ்வொருவரும் இரண்டு விதமான பாத்திரத்தை ஏற்று வாழ்கிறோம். 

ஆதாவது பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் நிலையில் மாணவராகவும் பிறருக்கு சில விஷயங்களை வெளிப்படுத்தும்போது ஆசானாகவும் விளங்குகிறோம். 

அப்படிப் பார்க்கும்போது எத்தகைய ஞானிகளும்  அதற்கு விதிவிலக்கு அல்ல! 

இந்த இரண்டு பாத்திரங்களில் எதில் அதிகம் நிலைபெற்றிருக்கிறோம் என்பதில்தான் சிறப்பு அடங்கியிருக்கிறது! 

Friday, December 5, 2014

எனது மொழி ( 181 )

யார் தண்டிப்பது?...

முப்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த போபால் விஷ வாயு துயரம் பற்றி நேற்று நேஷனல் ஜியாக்ரபி சேனலில் இரவு பத்தரை மணிக்கு ஒளிபரப்பானதைக் கண்டேன்....

பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனேயும் தொடர்ந்தும் பலியானதும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்ததும் இன்றும் ஏராளமானவர்கள் செத்துக்கொண்டிருப்பதும் நடைப்பிணமாக வாழ்வதும் நினைத்தாலே பதறச் செய்பவை! 

அதற்கான குற்றவாளிகள் யூனியன் கார்பைட் நிர்வாகத்தினர் என்பதைவிட நமது அரசுகள்தான் என்பது தெளிவாக விளங்கியது!......

யார் தண்டிப்பது? இழப்பை யார் ஈடு செய்வது? 

அத்தகைய குற்றவாளிகள் இன்றும் தங்களை யோக்கியர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியல் நடத்தவே செய்கிறார்கள்!  மக்களை ஆளவும் செய்கிறார்கள்!

நமது மக்கள் எப்போது உண்மைகளை உள்ளபடியே உணர்வார்கள்?.....


Monday, December 1, 2014

சிறு கதைகள் ( 19 )

மாமியார்!....

சுதாகருக்கு விடுப்பு கிடைக்கவில்லை!

ஆனால் அவன் மனைவி சுதா ஊருக்குப் போக மிகவும் நச்சரித்துக்கொண்டு இருந்தாள்.

கல்யாணம் முடிந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை. அதனால் பெற்றோர் ஞாபகம் அதிகமாக இருப்பது நியாயம்தானே!

கடைசியில் சுதா ஊருக்குப் போய்வருவதென்றும் மாமியார் அன்னபூரணி துணைக்குப் போய் வருவதென்றும் முடிவாயிற்று! 


அது சுதாவுக்கு இஷ்டமில்லை என்றாலும் வேறு வழி இல்லை! 

அவளைத் தனியாக அனுப்ப யாருக்கும் விருப்பம் இல்லை! 

ஊருக்கும் வந்தாயிற்று.

விசாரிப்புகள் முடிந்ததும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கப் போய்விட்டார்கள்...

மறுநாள் பிற்பகல் சுதாவும் மாமியாரும் திரும்ப ஊருக்குப் புறப்பட்டார்கள்...

சுதாவின் அப்பா அம்மாவுக்கு மகளும் மருமகனும் வராமல் அவளுடைய மாமியாரை அழைத்துக்கொண்டு வந்தது பெரிய குறையாக இருந்தது. 

அதற்குத் தகுந்தாற்போல வந்த சம்பந்தியம்மா எதோ சில வார்த்தைகள் பேசியதைத் தவிர அதிகமாகப் பேசவில்லை! 

அவர்களுடன் அதிகமாக ஒட்டவும் இல்லை! 

தனியாக ஒதுங்கி ஒதுங்கிப் போய்விட்டார். அல்லது தனியாகப்போய்ப் படுத்துக் கொண்டார்! 

அது சுதாவின் அம்மா மனத்தைக் குடைந்துகொண்டே இருந்தது! 

இங்கேயே இப்படிப் பாராமுகமாக இருக்கும் சம்பந்தியம்மா ஊரில் மருமகளுடன் எப்படி இருப்பாரோ என்ற பயம் பிடித்துக்கொண்டது! 

சுதா  அப்படி எதுவும் சொல்லாவிட்டாலும் தாய் மனதுக்கு நம்பிக்கை வரவில்லை! 

சம்பந்தியம்மாவின் பெயரில்தான் சொத்துகள் இருந்தன. வீட்டில் அதிக அதிகாரமும் அந்த அம்மாவுடையதுதான்.

கடைசியில் புறப்படும்போது கேட்டே விட்டார்! 

"சம்பந்தியம்மா! நீங்க வந்ததுல இருந்து எங்களோட கலகலப்பாகவே இல்லே! ஒதுங்கியே போயிட்டீங்க.ஏதாவது மனசுல வருத்தம் இருக்கா? சுதா ஏதாவது தப்புப் பண்ணினாளா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க! ஊருல நீங்கதான அவளுக்கு எல்லாமும்?...

"அடடே ! அப்படியெல்லாம் இல்ல சம்பந்தி! நான் ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கேன். ஊர்ல நாங்க இல்லாம என்ன பண்ணிட்டு இருக்காங்களோ என்ற யோசனைதான். வேறே ஒண்ணும் இல்ல "

"இல்ல இல்ல சம்பந்தி! உங்க மனசுல என்னமோ இருக்கு! சுதா என்ன தப்பு செய்திருந்தாலும் நீங்கதான் உங்க பிள்ளையா நினைச்சு திருத்திக்கணும். இல்லே எங்ககிட்ட வேணும்னாலும் சொல்லுங்க! புத்தி சொல்லி அனுப்புறோம்!..."

" என்ன சம்பந்தியம்மா பெரிய வம்பாப் போச்சு! அப்படியெல்லாம் ஒன்னுமில்லே! மனசுல இருக்குறதைச் சொல்லாம விடமாட்டீங்க போல இருக்கு! "

பார்த்தீங்களா! நான் நினைச்சது சரியாப் போச்சு! சொல்லுங்க! அவளாலையோ எங்களாலையோ  ஏதாச்சும் தப்புத் தவறு இருந்தா சொல்லுங்க! மனசுல வச்சுக்காதீங்க! " சுதாவின் அம்மாவுக்கு தன்னோட மகள் புகுந்த வீட்டில் எந்தக்குறையும்  இல்லாம இருக்கணும்கிறதுல அக்கறை! 

" அட நீங்க ஒண்ணு! அவங்க ரெண்டுபேரும் வந்திருந்தா உங்களுக்கு ரொம்பச் சந்தோஷமா இருந்திருக்குமே அப்படின்னு எம் மனசுல...."

"அதக் கொறையா எப்படி நெனைக்க முடியும் சம்பந்தி? அவங்க அடிக்கடி வரமுடியலேங்கிறது அவங்க தப்பு இல்லியே! "

" அதுமட்டும் இல்ல சம்பந்தி! உள்ளதைச் சொல்லாம உடமாட்டீங்க போல ! "

"நீங்க சொல்லித்தான் ஆகணும்! "

"பெரிய வம்பாப் போச்சு! புள்ள அம்மா வீட்டுக்கு வந்திருக்குறா, பெத்தவங்க கிட்டப் பேச அதோட மனசுல நல்லது கெட்டது ஆயிரம்  இருக்கும்! நான் கூடவே ஒட்டிகிட்டு இருந்தா அவ எப்பிடிப் பேசுவா? எம்மேலையே ஒரு கொறையைச் சொல்ல நெனச்சா நானும் கூடவே தொத்திக்கிட்டு இருந்தா எப்பிடி சொல்லுவா? அவ மனசு எப்பிடி ஆறும்?..."

அதுக்குமேல அன்னபூரணியம்மா பேசியது எதுவும் சம்பந்தியம்மா காதுல விழலே!

கண்ணுல  தண்ணி மட்டும் தாரை தாரையா வந்தது. சுதாவுக்கும்தான்! 

சுதாவோட அம்மாவால ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் சொல்ல முடிந்தது! 

" சம்பந்தியம்மா! சுதாவுக்கு நான் தாயல்ல, உண்மையான தாய் நீங்கதான்! ......"