ss

Tuesday, December 29, 2015

எனது மொழி (200)

இது நல்லது அல்ல!

வாழவேண்டிய வயதில் பல இளைஞர்களும் பெரியவர்க்களும்கூட கொல்லப்படுவது மதவெறிப் பின்னணியில் நடப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது...

அவை நடக்கக் கூடாத கொடூரம் என்பதில் ஐயமில்லை!

இது தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் ஒரு பகுதியாக இருந்தால் ஒரு குற்றச் செயலாக மட்டும் பார்ப்பது நியாயம்!

ஆனால் அப்படியல்லாமல் மத உணர்வுகளும் அது தொடர்பான பகைமையும் காரணமாக இருந்தால் இது ஒரு சமூகப் பிரச்சினை ஆகிறது!

ஒருதாய்ப் பிள்ளைகளைப் போல வாழவேண்டிய மக்கள் மத உணர்வுகளுக்குப் பலியாவது நியாய உள்ளம் படைத்தவர்களுக்குப் பேரிடிகளே!

இதைத் தடுக்க ஒரே வழி மக்கள் தங்களது ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மதவழிப்பட்ட குறுகிய மனப்பான்மைகளைக் கைவிட்டு பாரபட்சமற்ற அனைத்து மக்களுக்கும் பொருந்துகின்ற நியாயங்களை பாதுகாப்பு அரணாகக் கடைப்பிடிக்கும் பண்பாடு வளரவேண்டும்.

அரசுகளும் அரசியல் சட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களும் காவல்துறையும் நீதிமன்றங்களும் அதற்கேற்ற முறையில் பயிற்றுவிக்கப்படவேண்டும்!
உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

ஏனோ ஒரு பெரிய பயங்கரத்தை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருப்பதாகவே மனதுக்குப் படுகிறது.

அந்த அளவு மக்களின் மனம் மதவெறிப் பிரச்சாரத்தால் மாசுபட்டிருக்கிறது!
இது நல்லது அல்ல!

Wednesday, December 16, 2015

விவசாயம் ( 88 )

வானகம்.... ஒரு வேண்டுகோள்! 

வானகம் பற்றியும் நம்மாழ்வார் ஐயா பற்றியும் நான் எனது வலைதளத்திலும் முகநூலிலும் சில கட்டுரைகள் எழுதியிருந்தேன்.

அது வானகம் பொறுப்பாளர்களின் கவனத்துக்குச் சென்றதா என்பது தெரியவில்லை.

வானகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இயற்கை வேளாண் இயக்கத்தைப் பதிவு செய்து அதில் விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரையும் பதிவு செய்ய வேண்டும்.

அந்த இயக்கத்தின் தேர்வு செய்யப்பட்ட குழு வருங்காலத்தில் வானகத்தை வழி நடத்த வேண்டும்!

உறுப்பினர் கட்டணம் மூலம் குறைந்த பட்ச நிதியையும் திரட்ட முடியும்!

வானகத்தை இப்போது வழி நடத்தும் குழு எது?

அதில் யார் யார் இருக்கிறார்கள்?

யார் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்கிறார்கள்?

அந்தக் குழுவின் உரிமையும் கடமைகளும் என்ன?

அந்தக் குழுவின் பொறுப்புக்காலம் எவ்வளவு?

அந்தக் குழுவை யார் தேர்வு செய்கிறார்கள்?

வானகம் சம்பந்தப்பட்ட அசையும் அசையாத சொத்துக்கள், வரவு செலவுக் கணக்குகள், போன்ற பல விபரங்கள் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களாக உள்ளன.

அது வானகத்தின் வருங்காலத்துக்கோ நம்மாழ்வார் ஐயாவின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கோ உதவிகரமாக இருக்காது என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்!

வானகத்தின் அனைத்து விபரங்களையும் கொண்ட விரிவான குறிப்புப் புத்தகம் உடனடியாக வெளியிடுவதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

அதுதான் வானகத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது!
நம்மாழ்வார் ஐயா மீதும் வானகத்தின்மீதும் வைத்துள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுப்பெறும் வண்ணம் வருங்காலம் இருக்கவேண்டும்.

சென்ற வருடம்  வானகத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நானும் நண்பர் சத்தியமங்கலம் திருமூர்த்தியும் முடிவு செய்து நண்பர்களுக்கும் அறிவித்து ஒரு குழுவாக சென்றிருந்தோம்.

சென்ற அன்றே இரவு கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.

மறுநாள் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டவும் செய்தோம்.

ஆனால் அதன் பின்னால் இப்படி ஒரு குழு வந்து சென்றது என்பதற்கான சுவடே இல்லை...

மக்களுக்கான பொது நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு திட்டமும் அதை அமல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு குழுவும் இருக்கவேண்டும்.

அந்தக் குழு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றமும் செய்யப்படவேண்டும்.

நிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டு அது நேர்மையாகவும் திறமையாகவும் கையாளப்படவேண்டும்.

இந்த முறையில் வானகம் என்னும் சீரிய இயற்கை வேளாண்மை மையம் செயல்பட்டால் தவிர இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் தலைமைப் பீடமாக வானகத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது! கடைசியில் அடிப்படை லட்சியம் நம்மாழ்வார் ஐயாவின் படத்தை வணங்குவதோடு நின்று விடும்!

வானகம் நிர்வாகிகள் மனது வைத்தால் இந்த வருடம் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு மாநாடாக நடத்தி வானகத்தை ஒரு எழுச்சிமிக்க இயற்கை வேளாண்மை தத்துவத்தின் தலைமைப் பீடமாக முறைப்படி அறிவிப்புச் செய்ய முடியும்.

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

இது தொடர்பான முகநூல் உரையாடல்....கீழே உள்ள இணைப்பில்...

https://www.facebook.com/photo.php?fbid=1004323296302016&set=pb.100001730669125.-2207520000.1453977666.&type=3&theater

Friday, December 4, 2015

எனது மொழி (199 )

நிலை மாறுமோ!....

சென்னை தோன்றாதபோது அங்கு நில அமைப்பு எப்படி இருந்திருக்கும்?

மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆங்காங்கே இயற்கையாகவே அமைந்த தாழ்வான பள்ளதாக்குகளின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் சிற்றாறுகளின் வழியாகவும் கடலுக்குச் சென்றிருக்கும்.

ஆதாவது இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது தேங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இடங்களில் நீரைப் பார்க்க முடியாது.

மழையை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் நீர் பெருக்கெடுக்காத மேட்டுப் பகுதிகளில் வீடுகள் ஆகும்போது மழை நீரை உறுஞ்ச வழி இல்லாததால் அந்த நீரும் சேர்ந்து மழை வெள்ளநீரின் அளவு இரட்டிப்பாகவே செய்யும்.

அதன்காரணமாகப் பெருகும் நீர் பாதிக்காமல் செல்லவேண்டுமானால் முன்னர் இருந்த நீர்வழிப் பாதைகளும் சிற்றாறுகளும் ஓடைகளும் முன்பிருந்ததைவிட ஆழமாகவும் அகலமாகவும் இரட்டிப்பு கொள்திறனுடன் ஆக்கப்படிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே இருந்த நீரோட்டப் பாதைகள் அனைத்தையும் நெருக்கிக் குறுக்கினோம். முடிந்தவரை தடுத்து மேடாக்கினோம்.

சுயநலத்துக்காக மக்கள் நலம் பலியிடப்பட்டது.

அதன் விளைவாக பெருமழைக் காலங்களில் மக்கள் வாழும் இடங்கள் ஏரிகளாகவும் தெருக்களெல்லாம் ஓடைகளாகவும் பெரிய சாலைகளெல்லாம் சிற்றாறுகளாகவும் அடையாறு, கூவம் போன்றவையெல்லாம் நதிகளாகவும் மாறிப்போயின!

இயற்கையின் கதிப்போக்கில் மக்கள் விடப்பட்டார்கள்.

இதற்கு முடிவு ஏற்படுமா?

சரியான அச்சமற்ற சென்னையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளனவா?

அதற்காக எதையெல்லாம் செய்வது அவசியமோ அதையெல்லாம் செய்யும் நிலையில், தகுதியில் அரசுகள் உள்ளனவா?

அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளார்களா?

பாதிக்கப்படும் மக்களுக்கு அதிக பட்ச நட்ட ஈடு வழங்குவதன்மூலம் எத்தகைய முக்கியமான இடங்களையும் கட்டுமானங்களையும் கைப்பற்றி புதிய சென்னையை உருவாக்கும் துணிவு அரசுகளுக்கு இருக்கின்றதா?

அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தாங்கும் வல்லமை இருக்கிறதா?

இருக்கிறது என்றால் சென்னை புதிய சென்னையாக மாறும்!

இல்லாவிட்டால் இனி இந்த அவலம் தொடர்கதை ஆகும்.

அதிகமாகவும் ஆகும்! 

Saturday, November 21, 2015

எனது மொழி (198)

வலி! 

நண்பர்களே!..

தாக்கப்பட்டாலோ காயம் பட்டாலோ நமக்கு குறைந்த அளவில் இருந்து மரண வலி வரை பல அளவுகளில் வலிக்கிறது.

மற்ற உயிரினங்களுக்கும் அப்படி வலிக்கும் என்று உணர்வதால் அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்கிறோம்.அதை அஹிம்சை என்றும் கூறுகிறோம்.

 அதைப்போலவே தாவரங்களுக்கும் உயிர் இருகிறது.

சிதைக்கப்ப்படும்போது  அவற்றுக்கும் வலி இருக்கும், ஆனால் அந்த வலியை நமக்கு உணர்த்தக்கூடிய அசைவுகளோ ஒலி எழுப்புதலோ இல்லாததால் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன்.

எனது கேள்வி என்னவென்றால் தாவரங்களுக்கு வலிக்குமா வலிக்காதா?

வலிக்கும் என்றால் அதுவும் ஹிம்சைதானே?....

Thursday, November 19, 2015

எனது மொழி (197)

எது சரி?

சிலர் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து : மத்தவங்க சொல்லுறதை நாம் எப்போதும் கண்டுக்கக் கூடாது; கவலைப் படவும் கூடாது! நம்ம மனச் சாட்சிப்படிதான் நடக்கணும்!.....
இது மிகவும் தவறான கருத்து நண்பர்களே!

காரணம் பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் இருப்பது உயர்ந்த பண்பு அல்ல!

அவர்களில் நல்லோர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்து வாழ்வதே சிறந்த பண்பு!

அந்த உணர்வுதான் நம்மை சிறந்த மனச் சாட்சியுள்ள உயர்ந்த மனிதராக்கும்!

அதனால் ஒரு சரியான மனிதன் நியாய உணர்வற்ற பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டியது இல்லை என்பதே சரியான கருத்து ஆகும்!

Friday, November 6, 2015

எனது மொழி (196))

சிற்பிகள்...
உயர்ந்த மனிதர்களின் வாழ்வும் அவர்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் சமுதாயத்தைச் செதுக்குகின்றன.

ஆனால் அவர்கள் வாழ்வில் நேரும் துன்பங்களும் அனுபவங்களும் அவர்களையே செதுக்குகின்றன……


Friday, October 30, 2015

உணவே மருந்து (99)

உணவே மருந்தா? மருந்தே உணவா?
உணவே மருந்து என்பது இயற்கை உணவாளர்களின் தாரக மந்திரம் ஆகிவிட்டது!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இயற்கை உணவின் அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பலர் உணவே மருந்து என்பதோடு நிற்காமல் மருந்தே உணவு என்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

சரியான முறையில் தேவையறிந்து தரமறிந்து இயற்கையான உணவு வகைகளை உண்டால் அவை உணவாகமட்டுமல்ல மருத்துவ குணங்கள் சிதையாமல் இருப்பதால் மருந்தாகவும் செயல்பட்டு நோய்களைத் தீர்க்கும் என்கிற பொருளில் உணவே மருந்து என்கிறோம்.

அது நியாயம்!

அனால்  மருந்தை அது எந்த வகை மருந்தாக இருந்தாலும் தேவையறிந்து வகையறிந்து சாப்பிட்டால் அது உடலுக்குத் தேவையான அளவு நல்ல சத்துக்களை வழங்கும் உணவாகிவிடுமா?....

எந்த மருந்தும் உணவாக முடியாது!

அப்படிச் சொல்வது என்ன நியாயம்?

தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்!

Wednesday, October 28, 2015

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை( 42 )

 ஆன்மிக அரட்டையில் ஒரு பகுதி! 

நண்பர்களே!

குழு அரட்டையில் நடந்த ஒரு ஆன்மிக உரையாடலுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

அதில் எனது உரையாடலின் துவக்கமாகச் சில கேள்விகளை முன்வைத்திருந்தேன்.

ஆனால் அதற்கான பதில் ஒன்றும் சொல்லாமல் சம்பந்தமில்லாத எதைஎதையோ பேசினார்கள்.

ஒரு சில கருத்துக்களுடன் பயனற்ற அந்த உரையாடலில் பதிவு செய்வதை நிறுத்தி விட்டேன்.

நான் பதிவு செய்தவை:

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்!

நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். அதற்கு அனைத்து நண்பர்களின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

ஆதாவது இறைவன் யார்?

இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இறைவனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

மனித நாகரிகம் தோன்றுவதற்கு முன்னால் இறைவனின் பாத்திரம் எப்படிப்பட்டதாக இருந்தது?

சிருஷ்டிக்கு முன்னால் இறைவனின் பாத்திரம் எப்படி இருந்தது?

மற்ற நண்பர்களின் விடைகளை அறியும்போதுதான் சரியான அல்லது தவறான விடைகளை  இனங்காண எதுவாக இருக்கும் ! அதனால் பதில்கள் கிடைத்தால் ஆய்வுக்கு நன்றாக இருக்கும்!
-------------------------------------------------------------------------------------------------------------------
இறையியல் மட்டுமல்ல அனைத்து ஞானங்களுக்கும் அடிப்படை கேள்வி ஞானமே!

அதனால் அந்தக் கேவி ஞானத்தின்மூலமும் கற்ற ஞானத்தின்மூலமும் அனுபவ ஞானத்தின்மூலமும் நாம் அறிந்தவை நடைமுறை உண்மைகளுடன் ஒத்துப் போகிறதா என்று ஆராயும்போதுதான் உண்மைஞானம் ஆதாவது சத்திய ஞானம் பிறக்கிறது!...

எனவே அந்தப் பயணத்தில் பயணிக்க எண்ணும் ஒவ்வொருவரும் மற்ற நண்பர்களின் வினாக்களுக்குத் தெளிவான தகுந்த விடைகளை அழிப்பதன்மூலம் உண்மை ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா?
----------------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/photo.php?fbid=980417355359277&set=a.244609168940103.64557.100001730669125&type=3&theater
----------------------------------------------------------------------------------------------------------------

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்பவர்களிடம் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதுபோல்தான் தற்போதைய போலி ஆன்மிகவாதிகளின் அறிவுத் திறன் உள்ளது!

காரணம் அவர்கள் தாங்கள் எங்கோ யாரிடமோ கற்றதை மனப்பாடம் செய்து அப்படியே மற்றவர்களிடம் ஒப்புவிப்பதைத்தான் ஆன்மிகப் பணியாகச் செய்து வருகிறார்கள்.

அத்தகையவர்கள் தாங்கள் படிக்காத  விஷயங்களைப்பற்றி கேட்கப்படும்போது ஒன்று மவுனமாகி விடுவார்கள்.

அல்லது கண்டுகொள்ளாமல் எதையாவது சொல்வார்கள்.

அல்லது தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பார்கள்.

எதைப் பற்றிப் பேசுகிறோமோ அந்தப் பொருளில் நிற்காமல் தாண்டித் தாண்டி ஓடுவார்கள்.

ஆனால் எந்த விஷயத்தைப் பற்றி யார் எது கேட்டாலும் தங்கள் சொந்த அறிவுத் திறனைக் கொண்டு பதில் அளிப்பவரும் அளிக்க முயல்பவரும் அறியாத விஷயம் என்றால் அது பற்றிக் கற்றுக்கொள்ள முயல்பவருமே உண்மையான ஆன்மிக வாதிகள்!

இதை யார் ஒப்புக்கொள்ளப் போகிறார்கள்?
----------------------------------------------------------------------------------------------------------
முதலும் மூன்றாவதும்......

இந்த உலகில் வாழும் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள். இவர்கள் சிலர் மட்டுமே!

இரண்டாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... இவர்கள் முதல் வகையினரைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள்.

மற்ற அனைவரும் மூன்றாவது வகையினர்!

ஆதாவது கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வெறும் சடங்கு சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள்.

வாய்ச்சொல் வீரர்களின் துதிப்பாடல்கல்களும் உரைகளும் எழுத்துக்களும் மூட நம்பிக்கைகளும்தான் அவர்களின் ஆன்மிகம்!

அவர்களின் வழிகாட்டிகளும் அவர்களும் ஒரேமாதிரித் தகுதி உடையவர்களே!..

அவர்களுக்குக் கடவுள் என்பது பற்றியோ கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தொடர்பு பற்றியோ அல்லது கடவுளின் நெறிநின்று வாழ்வது எப்படி என்பது பற்றியோ ஒன்றும் தெரியாது!

ஏமாறுவதும் ஏமாற்றுவதுமான இரண்டு மட்டுமே தெரியும்!

ஆதாவது யானையைப் பார்க்கச் செல்லும் குருடர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு கிடையாது!.

மூன்றாவது வகையினர் எப்போது முதல் வகையினர் ஆகிறார்களோ அப்போதுதான் ஆன்மிகம் உண்மையான சிறப்பைப் பெறும்!
(Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2015/10/195.html)
-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு நண்பரின் கேள்வி:

அவரது இருப்பையும் காலங்காலமாக. அவர் பூமிக்கு தனது வாயாக தூதர்களை அனுப்பி கொண்டே  இருப்பதை உணராதவரை நீங்கள் சொல்வதெல்லாம் வார்த்தை ஜாலம் என்பதற்குமேல் ஒன்றுமில்லை

கடவுளை அறிந்த அந்த முதலாம் வகையினர் என்கிரீர்களே யார்\\\\\\\

நான் அளித்த பதில் :

முதலில் சொன்ன கருத்துதான் உங்களுடையது என்னும்போது இரண்டாவது உங்கள் கேள்விக்கு உடனே பதில் சொன்னாலும் அது உங்களுக்கு சரியாகப் படப்போவதிலை.

இரண்டாவது நீங்கள் கெட்ட கேள்விக்கு மிகத் தெளிவான பதில்கள் உள்ளன.

அதை நான் சொல்லும் முன்பாக நான் முதலில் கேட்ட சில கேள்விகளுக்கான உங்கள் பதிலையும் நான் சொல்லி நீங்கள் மறுக்கும் கருத்துக்களுக்கு எதனால் மறுத்தீர்கள் என்ற விளக்கத்தையும் கொடுங்கள்.

அப்போதுதான் உங்கள் புரிதலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பதில் அளிக்க முடியும்!

உரையாடல்களின் நோக்கம் உண்மையைக் கண்டறிவதாக இருக்க வேண்டும்.

பொய்களுக்கும் கட்டுக் கதைகளுக்கும் தவறான நம்பிக்கைகளுக்கும் வக்காலத்து வாங்குவதாக இருக்கக்கூடாது! ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது!

பரவாயில்லை....

உங்கள் கேள்விக்கான சுருக்கமான பதில்.

இறைவனைக் கண்மூடித் தனமாகப் ப் போற்றிப் புகழ்வதும் அவனுடைய திருவிளையாடல்கள் என்று சொல்லிக்கொண்டு பலவிதமாகப் பஜனை செய்வதும் ஆன்மிகம் ஆகாது!

இறைவனின் விருப்பங்களாகவும் மனிதனின் கடமைகளாகவும் இறைநெறிகள் என்ன சொல்கின்றனவோ அதைப் பின்பற்றுவதுதான் உண்மையான ஆன்மிகம்!

அப்படிப் பின்பற்றி நடப்பவர்கள்தான் உண்மையான இறை நம்பிகைவாதிகள்! (கவனிக்கவும்)

அப்படிப்பட்ட உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கு தடைகளாக உள்ளதை விமர்சிப்பதையே சகிக்க முடியாதவர்கள் உண்மையான மார்கத்தை எங்கே பின்பற்றப் போகிறார்கள்?

வாழ்த்துக்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------

புத்தர் உலக வரலாற்றில் முதன்மையான சிந்தனையாளர் என்பதே உண்மை!

புத்தருடைய சிந்தனைகளுக்கும் பவுத்த மதம் என்று நம்மால் அறியப்படும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை!

புத்தருடையது மனிதருக்கான வாழ்வியல் சிந்தனைகளே! இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே புத்தர் சிந்தித்ததை இன்றைய நவீன உலகில் மக்களைத் தவறான பாதைகளில் வழி நடத்தும் அறிவாளிகளே சிந்திக்க வில்லை உணரவில்லை என்பது சோகமான உண்மை ஆகும்!
---------------------------------------------------------------------------------------------------------------

எங்கள் வீட்டில் பகவத்கீதை, திருக்குர்ஆன், பைபிள் இந்த மூன்றும் தவிர புத்தரின் தம்ம நெறிகளும் உள்ளன நண்பரே! நாம் எதைப் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல! எப்படி நடக்கிறோம் என்பதே முக்கியம்!
-----------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே! கடவுள் பற்றிய தவறான புரிதலே இந்த மதவழிப்பட்ட முரண்படுகளுக்குக் காரணம். கடவுள் பற்றிய உண்மையை உணர்ந்தால் பவவிதமாக வணங்கவோ சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றவோ தேவை இல்லை! கடவுள் என்பது கேவலம் மனிதனிடமிருந்து பலவிதமான காணிக்கைகளையும் துதிபாடலைம் அடிமைத்தனத்தையும் எதிர்பார்த்திருக்கும் மனிதப் பதர் அல்ல என்பதை ஏன் உணரத் தவறுகிறோம்?
-------------------------------------------------------------------------------------------------------------

உண்மையான கடவுளை உணரவேண்டுமானால் இந்த மதங்களையும் மத நம்பிக்கைகளையும் தூக்கி உடைப்பில் போட வேண்டும்!

எந்த மதத்திலாவது அந்த மத தர்மத்தின்படி வாழும் ஒற்றை நபரை உங்களால் சொல்ல முடியுமா? எதற்காக கடவுளை ஏமாற்றும் இந்த வேடம்?....
மத வழி சிந்திக்கும்வரை கடவுள் அல்லது ஆன்மிகம் என்பது பற்றிய அறிச்சுவடிகூடப் படிக்க முடியாது!

நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியான பதில் அளியுங்கள் நண்பர்களே! எந்த மதத்திலாவது தனது மதத்தின் கடவுள் விரும்பும் பாதையில் நடக்கும் யாராவது அன்பைத் தவிர வேறொன்றும் அறியாத தூயவர்கள் யாராவது இருக்கிறார்களா??...

http://www.drumsoftruth.com/2012/05/23.html
--------------------------------------------------------------------------------------------------------------

உலகில் வாழும் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு மதத்தின் கீழ்தான் வாழ்கிறார்கள்.அப்படியிருக்க உலகில் என் அதர்மம் மேலோங்கியது?

எப்படியோ திலகாஷ்ட மகிட பந்தனம் என்று தெனாலிராமன் சொல்லக்கேட்டு தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்த பண்டிதனைப்போல பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல்வேறு தத்துவங்களும் மக்களுக்குப் புரியாதவற்றைச் சொல்லியே அடிமைப்படுத்தி வைத்துள்ளன! அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக்கொண்டு அறிவுத் திறனுடன் தட்டிக்கேட்கும் திறனுள்ள மக்களாக மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தில் உருவாகும் ஆன்மிகம்தான் சுத்த ஆன்மிகமாக இருக்கும். அதுவல்லாமல் சொல்லப்படும் கேட்கப்படும் அனைத்தும் சாராம்சத்தில் மூட நம்பிக்கைகளே! அத்தகைய மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டியது உண்மையான ஆன்மிகவாதிகளின் கடமை ஆகும்!
_____________________        --------------------------------------        ________________________Tuesday, October 27, 2015

எனது மொழி (195)

முதலும் மூன்றாவதும்......

இந்த உலகில் வாழும் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள். இவர்கள் சிலர் மட்டுமே!

இரண்டாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... இவர்கள் முதல் வகையினரைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள்.

மற்ற அனைவரும் மூன்றாவது வகையினர்!

ஆதாவது கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வெறும் சடங்கு சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள்.

வாய்ச்சொல் வீரர்களின் துதிப்பாடல்கல்களும் உரைகளும் எழுத்துக்களும் மூட நம்பிக்கைகளும்தான் அவர்களின் ஆன்மிகம்!

அவர்களின் வழிகாட்டிகளும் அவர்களும் ஒரேமாதிரித் தகுதி உடையவர்களே!..

அவர்களுக்குக் கடவுள் என்பது பற்றியோ கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தொடர்பு பற்றியோ அல்லது கடவுளின் நெறிநின்று வாழ்வது எப்படி என்பது பற்றியோ ஒன்றும் தெரியாது!

ஏமாறுவதும் ஏமாற்றுவதுமான இரண்டு மட்டுமே தெரியும்!

ஆதாவது யானையைப் பார்க்கச் செல்லும் குருடர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு கிடையாது!.

மூன்றாவது வகையினர் எப்போது முதல் வகையினர் ஆகிறார்களோ அப்போதுதான் ஆன்மிகம் உண்மையான சிறப்பைப் பெறும்! 

Monday, October 26, 2015

விவசாயம் ( 87)

மாடித் தோட்டமா? மாய மானா?..... 

சமீபகாலமாக மாடித்தோட்டம் என்கிற விஷயம் பற்றிப் பேசுவது  மிக அதிகமாக வேகம் பிடித்திருக்கிறது.

இதுநாள் வரை அதைத் தெரிந்துகொள்ளாமல் ஏமாந்து போனோமே , இப்படிப்பட்ட காமதேனுவை இனியாவது வளர்த்து வேண்டிய வரம்(காய்கறி) பெறுவோம் என்கிற ரீதியில் விஷயம் வேகம் பிடித்திருக்கிறது.

நல்லதுதான்!

ஆனால் உண்மையாகவே இது மக்கள் நினைக்கும் வண்ணம் அல்லது மக்கள் மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் வண்ணம் அவ்வளவு எளிய சிறப்பான பயனுள்ள முறையா?

நிச்சயம் பொதுவாக அப்படிச் சொல்ல முடியாது!

ஆதாவது விண்வெளியிலும் சமைத்து உண்ணமுடியும் அல்லது விண்வெளியில் சமைக்கப்பட்ட அதற்காகவே விசேச முறையில் சமைக்கப்பட்ட உணவை நீண்டகாலத்துக்கு வைத்து உண்ண முடியும் என்பதால் அந்த முறையைப் பயன்படுத்தி அனைவரும் சமைத்து உண்ணலாம் அல்லது வைத்து உண்ணலாம் என்பதைப் போன்றதுதான் இந்த மாடித் தோட்ட விவசாயம்.

மாடித் தோட்டம் எப்போது பயன் தரும்?

ஆதாவது அதற்காகப் பயன்படுத்தும் பொருட்கள், எரு, விதை, நாற்று, தண்ணீர், உழைப்பு போன்ற அனைத்தும் செலவில்லாமல் அல்லது மிகக் குறைந்த செலவில் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

ஆதாவது பழைய டப்பாக்கள், பேரல்கள், தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் இலவசமாக விதை அல்லது நாற்றுக்களைப் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டுச் சமையலறைக் கழிவுகள், பழத் தோல்கள், மக்கக்கூடிய பொருட்கள் போன்றவற்றை மக்கச் செய்து எருவாகப் பயன்படுத்த வேண்டும்.

காலி இடங்களில் கிடைக்கும் இலை மக்கையும், சாணம் போன்றவற்றையும் பழகியவர்களின் ஓட்டல் கழிவுகளையும் எருவுக்காகப் பயன்படுத்தலாம்.

விவசாயம் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் விதை, நாற்று, தண்ணீர் பாய்ச்சுதல், எருவிடுதல் போன்றவற்றைப் பற்றி நேரடியாகவோ தொடர்புகொண்டோ கற்றுக்கொள்ள வேண்டும்.

போர்வெல் தண்ணீரை அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் குடிநீரை விரையமாக்குவது தவிர்க்கப்படும்.

தோட்டவேலை செய்வதை ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகப் பயன்படுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன்மூலம் செலவில்லாமல் தங்களுக்குத் தேவையான பல காய்கறிகள் பழங்கள், கீரை வகைகள், ஆகியவற்றை மாடித் தோட்டத்திலும் வீட்டுத் தோட்டத்திலும் இருந்து பெற முடியும்.

எந்த எந்தப் பட்டங்களில் என்ன மாதிரிக் காய்கறிகள் நன்றாக வருமோ அதை அறிந்து சிறப்பாகச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சிலர் இதைச் சிறப்பாகச் செய்தால் அதைக்கண்டு பலரும் பின்பற்றுவார்கள்.

இனியொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம்.

 மாடித் தோட்டம் மட்டுமல்ல எது ஒன்றுக்கும் தேவை இருக்க வேண்டும்.

மாடித்தோட்டம் போடுவதற்கு சமூக அடிப்படையில் தேவைகள் எப்படி இருக்க வேண்டும்?

முதலாவதாக நாட்டில் விவசாயம் செய்யும் நிலப்பரப்போ வசதிகளோ குறைவாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக நாட்டில் விவசாய நிலங்கள் இருந்தாலும் மக்கள் தொழில் சார்ந்தும் நகர்ப் புறங்களில் குவிந்து வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

அப்போதுதான் தங்களின் மாடித் தோட்ட விருப்பம் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கும்.

மூன்றாவதாக மார்கெட் விலைகள் தங்களின் மாடித்தோட்டம் பயனுள்ளதாக இருக்குமளவு உயர்ந்த அளவில் இருக்க வேண்டும்.

நான்காவதாக மாடித் தோட்டம் போடுவதற்குத் தேவையான உபகரணங்களும் தொழில் நுட்பமும், தண்ணீர் வசதியும் கட்டுபடியாகும் விதத்தில் கிடைக்க வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் ஏராளமான விவசாய நிலங்கள் விவசாயம் செய்யப்பட்டும் தரிசாகவும் இருக்கின்றன.

மக்கள் இன்னமும் கிராமங்களில்தான் பெரும்பாலோர் வாழ்கிறார்கள்.

மாடித் தோட்டம் என்பது கட்டுபடியாகும் என்பது கேள்விக் குறியே! காரணம் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளின் விலைகள் ஏறுமாறாக வீழ்ச்சி அடையும்போது மாடித் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளுக்கான  செலவுகள் மிக மிக அதிகமாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. அப்போது வசதியற்றவர்கள் வெறுத்துப் போவார்கள்....

அதுதவிர நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உத்திரவாதமான இயற்கை முறைகள் போதுமான அளவு இல்லை.

இந்த நிலையில் இதுபோன்ற இடர்பாடுகளுக்குத் தீர்வு இல்லாமல் மாடித்தோட்டம் என்கிற ஆர்வத்தை செயற்கையாக உருவாக்கி வளர்ப்பது அதை வணிக ரீதியில் செய்பவர்களின் வருவாய்க்கு மட்டுமே பயன்படுமே தவிர மக்களைப் பெரும் இழப்பில் தள்ளி விடும்.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு பெண்மணி மாடித்தோட்டம் என்கிற முறையைப் பயன்படுத்திப் பெரிய சாதனை புரிந்து குடியரசுத் தலைவரின் விருந்துக்குச் செல்லுமளவு பெருமைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தார்.

ஆனதில் அவர் சாதித்ததாக எடுத்துக் காட்டப்பட்ட மாடித்தோட்ட செடிவளர்ப்பு நடைமுறை சாத்தியமற்ற வெறும் கற்பனையாகும்.

காரணம் ஐந்து மாதங்களுக்குப் பின்பு ஒரு குறிப்பிட்டநாளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் ஒரு விருந்துக்கு பத்து வீடுகளின் மாடித் தோட்டங்கள் போதும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு உள்ளது.

நடைமுறையில் ஒரு விருந்துக்குத் தேவைப்படும் அனைத்துக் காய்கறிகளையும் குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டு உருவாக்கிவிட முடியாது.

காய்கறிகள் விளைவிக்க பருவம், இயற்கை, வட்டார சீதோஷ்ண நிலை போன்ற பலதரப்பட்டவை இணக்கமாக இருக்கவேண்டும். தவிர ஒரே நாளில் காய்கறிகள் முழுமையாக அறுவடை செய்யப்படுவது இல்லை.

இப்படி இருக்க பத்து வீடுகளின் மாடித்தொட்டங்களில் சுமார் பத்து சென்ட் பரப்பளவில் விளைவிக்க சாத்தியமான காய்கறிகளின் ஒரு நாள் அறுவடையைக் கொண்டு எப்படித் தேவையான காய்கறிகள் அனைத்தையும் தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்க முடியும்?

திரைப்படத்தைப் பார்க்கும் விவசாயம் பற்றி அறியாத பாமர மக்கள் வேண்டுமானால் இதை நம்பலாம்.

விவசாயம் தெரிந்தவர்கள் நம்ப முடியாது.

ஆனால் அந்தத் திரைப்படத்துக்குப் பின்பு மாடித்தோட்ட ஜுரம் அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன்.

அதீதமான கற்பனைகளை மக்கள் மனதில் சுலபமாக ஏற்றிவிடலாம். ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை யாரும் வந்து ஈடு செய்யப்போவது இல்லை.

ஆகவே மாடித் தோட்டம் என்னும் முறையை முதலில் சொன்னபடி செலவில்லாத, விலைகள் பற்றிக் கவலையில்லாத அல்லது வசதி இருப்பவர்கள் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காக மட்டுமே செய்யலாம்.

நிச்சயம் செய்ய வேண்டும்.

அப்படியில்லாவிட்டால் எனது மதுரை நண்பர் சொன்னதுபோல மாடித் தோட்டம் போட்டுவிட்டுப் போன அந்த ஆட்கள் கிடைத்தால் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் என்று புலம்ப மட்டுமே முடியும்!

மாடித் தோட்டம் அமைத்து வெற்றி பெற்றவர்களும் தோல்வி அடைந்தவர்களும் கணக்கிடப்பட்டால் தோல்வி அடைந்தவர்களின் கணக்கு கணக்கில் அடங்காது என்றே நினைக்கிறேன்......
Saturday, October 17, 2015

எனது மொழி ( 194 )

பூமிக்கு வெளியே!...

பூமிக்கு வெளியே தகவல் தொடர்புக்காகவும் மற்றும் பல ஆராய்ச்சிகளுகாகவும் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களும் ராக்கெட்டுகளும் ஆராய்ச்சிக் கருவிகளும் என நிறுத்திக் கொள்வதே நல்லது.

காரணம் அதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கும் இழக்கும் இழப்புகளுக்கும் கூடுதலாகப் பயன் கிடைக்கிறது.
ஆனால் அதற்கும் அப்பால் சந்திரன், செவ்வாய் , பிற கோள்கள், அண்டவெளி என எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக பூமியின் இயற்கைக் கட்டமைப்பும் பொருள் வளங்களும் இழப்பதற்கு ஈடாகப் பெரிய பயன் இருக்கப் போவதில்லை!

ஆனால் பூமியை மனிதன் வாழப் பயனற்றதாக்கும் திசையில் அது பெரும் பங்கு வகிக்கும்!

அதனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அண்டம் பற்றிய விபரங்களைக் கொண்டு வாழ்வதும் அந்த விபரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி வாழ்வதும் மட்டுமே  போதுமானது!

-------------------------------------------------------------------------------------------------------------
இதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டபோது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நான் சொன்ன பதில்கள்:
---------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நண்பரின் கருத்து:

வேறு கிரகங்களைப் பற்றி வெறும் கோட்பாடுகளின் அடிப்படையில் கணக்குப் போட்டு அறிவிக்கமுடியுமே தவிர அது 100% உண்மையாக இருக்கப் போவதில்லை.

எனது பதில்:

அப்படியே உண்மையாக இருந்தாலும் அதைப் பற்றி அறிந்துகொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அதற்கும் அப்பால் அங்கு செல்லவேண்டும் அதையும் நமது சொத்தாக பட்டா போட வேண்டும் என்று நினைத்தால் கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முயன்ற கதைதான் ஆகும்! சித்திரம் கிடைக்காது. ஆனால் கண்கள் நிச்சயம் போய்விடும்!
---------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நண்பர்:

எதிர்காலத்தில் அவை வாழ்விடமாகவோ, தாதுப்பொருட்கள் நல்கும் சுரங்கமாகவோ மாறலாம்\\\\\\

நான்:

சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பார்கள். ஆனால் சுமைகூலி முன்னூறு பணமாக இருக்கும் இது பயனுள்ளதாக இருக்காது. ஆனால் அதற்கான முயற்சிகளில் பூமியின் இயற்கை வளங்களை பலி வாங்கி விடும்!. சிந்திக்க வேண்டும்!

பூமியில் ஓரிடத்திலிருந்து இன்னொர் இடத்துக்குப் போய்வர ஆகும் செலவு ஆயிரக் கணக்கில் அல்லது லட்சக் கணக்கில் மட்டுமே! ஆனால் பூமியில் இருந்து விண்வெளிக்குப் போய்வர ஆகும் செலவு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகள். அவ்வளவு துகையும் எதற்காகச் செலவிடப்படுகின்றன? விண்வெளிப் பயணத்துக்கான கருவிகள் தயாரிப்புக்கும் அவை தொடர்பான இதர வேலைகளுக்கும் ஆகும்! அந்த வேலைகளில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஏதாவது ஒன்று இருக்கிறதா? விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் பல நூறு அல்லது ஆயிரம் டன் கணக்கில் பூமியில் இயற்கையைப் பாழ்படுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்படி இல்லை என்றால் இயற்கையைப் பாழ்படுத்தாத புஷ்பக விமானம் ஏதாவது விண்வெளிப் பயணத்துக்கென கண்டுபிடிக்கப்பட வேண்டும்!
--------------------------------------------------------------------------------------------------------------

  பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் செய்யப்படும் எந்த ஆய்வும் பயனுள்ளதே! காரணம் அதற்காக நாம் இழப்பதைவிட அடையும் பயன்கள் கூடுதலானவை. காரணம் இப்போதுள்ள விண்வெளிக் கலங்களின் வேகமே அதற்குப் போதுமானது. தொழில் நுட்பமும் போதுமானது. மனித ஆயுளும் போதுமானது. ஆனால் அயல் கிரகங்களுக்கோ அல்லது அயல் நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்களுக்கோ பயணிக்கும் திட்டங்களுக்கு இப்போதுள்ள விண்கல வேகங்களோ மனித ஆயுளோ தொழில் நுட்பமோ போதுமானவை அல்ல! அத்தகைய தொழில் நுட்பங்களைக் கண்டறிவதற்கான முயற்சி அல்லது பயணிக்கும் முயற்சி பூமியின் இயற்கைச் சூழல்களை பாதிக்குமளவு இருக்கும் என்பதே எனது அடிப்படைக் கருத்து! ஆனால் அவற்றால் கிடைக்கப்போகும் பயன் என்பது உத்திரவாதமானது அல்ல
------------------------------------------------------------------------------------------------------------

அறிவியலால் அநேக சாதனைகள் புரியப்பட்டிருந்தாலும் இனியும் புரியப்படும் என்பது உண்மை என்றாலும் அதனால் என்றென்றும் முடியாதவையும் எண்ணற்றவை உள்ளன! உதாரணத்துக்கு மனித ஆயுள் நீட்டிப்பைச் சொல்லலாம். மனிதனின் ஆயுள் அதிக பட்சம் நூறாண்டுகளுக்கு மேல் நீட்டுவது கடினம் என்கின்ற நிலையில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயண நேரம் பிடிக்கும் ஆய்வுகளால் என்ன பயன் இருக்க முடியும்?

பூமிக்கு மிக அருகில் நாலரை ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரமான பிராக்சிமா சென்டாரி என்கிற விண்மீனுக்கு இப்போதுள்ள நமது விண்வெளி வாகனத்தின்மூலம் சென்றால் தோராயமாக அறுபதாயிரம் வருடங்கள் ஆகலாம். அதற்கு அப்பால் கோள்கள் இருப்பதாக நினைக்கும் விண்மீன்கள் பலமடங்கு தூரத்தில் இருப்பவை!...அங்கெல்லாம் கற்பனை வாகனத்தில் தவிர நிஜ வாகனத்தில் பயணிக்க முடியுமா? அதற்கான ஆய்வுகளுக்காக பூமியின் வளங்கள் சிதைக்கப்பட வேண்டுமா?...
--------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:
இந்த சிந்தனை நாங்குனேரிக்கு வெளியே பெண் எடுப்பதை எதிர்ப்பதற்கும், கடல் கடந்து வியாபாரம் செய்வதை எதிர்ப்பதற்கும், கொலம்பசின் வாயாஜின் பலனை அனுபவிப்பதை நிராகரிப்பதற்கும் சமமாகவே படுகிறது.

எனது பதில்:

கேள்வியையும் கேட்கப்படுவதற்கான காரணங்களையும் பற்றி யோசித்தீர்களா? நாங்குநேரிக்கும் கூடங்குளத்துக்கும் உள்ள தூரத்துக்கும் மில்கிவே என்று சொல்லப்படுகிற பால்வெளி மண்டலத்துக்கும் அண்ட்ரோமிடா காலக்சிக்கும் உள்ள தூரத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? தெரியாதென்றால் தெரிந்துகொள முயலுங்கள்! தெரியும் என்றால் விளக்கமாகச் சொல்லுங்கள்! அண்டவெளி என்பது அண்டை வீடு அல்ல!

கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்றால் அப்படிக் கடப்பதற்குத் தேவையான வசதிகள் தோன்றிவிட்டன. அப்படிப் பட்ட வசதிகளைத் தோற்றுவிக்கப் பெரிய அளவில் இயற்கைக் கட்டமைப்புகளைச் சீர்குலைக்கவில்லை. ஆனால் அண்டத்தில் சூரிய மண்டலத்தைத் தாண்டவோ அல்லது சூரிய மண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள கோள்களில் குடியேறவோ விரும்பி அதற்காகச் செய்யப்படும் முயற்சிகளுக்காக இயற்கையை பெருமளவில் சீர்குலைக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதே புவி வெப்பமாதலின் பாதிப்புகளை உணரத்துவங்கியுள்ள நிலையில் அதை மேலும் விரைவு படுத்தவே இந்த ஆய்வுகள் பயன்படும். அதனால் மனிதனின் அறிவியல் ஆக்க ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் வளரலாம். அழிவுப் பாதை நல்லதல்ல! பதிவை நன்றாகப் படிக்கவும்!
==============================================================Thursday, October 8, 2015

உணவே மருந்து ( 98)

மாமிச உணவா? தாவர உணவா? இயற்கை உணவா?
பொதுவாக மாமிச உணவுப் பழக்கத்தைக் கைவிடவில்லை என்றாலும் அதிகமாக எங்கள் வீட்டில் உண்பது இல்லை.

மாட்டுக் கறி உண்ணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது தவிர அதை உண்ணாததற்கு வேறு காரணம் இல்லை.

உணவு என்பது அது தாவர உணவாகட்டும் மாமிச உணவாகட்டும் இரண்டுமே மனிதனுக்கான உணவு வகைகளே!

எதை உண்பது என்பதை அவர்களின் பழக்கமும் விருப்பமும்தான் தீர்மானிக்கின்றன.

இதைத் தான் உண்ண வேண்டும் இது உண்ணக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.


ஆனால் உடல் நலனுக்கு எது நல்லது என்று யார் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசனை சொல்லாம்.

அந்த வகையில் நாங்கள் சமைக்காத இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.


அதற்கு ஈடு இணை இல்லை.


https://www.facebook.com/photo.php?fbid=973097062757973&set=a.244609168940103.64557.100001730669125&type=3&theater

Friday, October 2, 2015

அரசியல் (75)

தொங்கட்டும் அஹிம்சை! 

ஐயா!

உங்கள் அஹிம்சையைப்  பின்பற்றும் யாராவது ஒருவர் இருக்கிறாரா என்று தேடித் தேடிப் பார்க்கிறோம்.

உங்களைப்போல் கோவணம் கட்டிய தலைவர் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடிப் பார்க்கிறோம்.

உங்களைப்போல் ராட்டை சுற்றும் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்றும் தேடித் தேடித் பார்க்கிறோம்.
ஒற்றை ஆள் கிடைக்கவில்லை!

ஆனால் அவ்வப்போது குரங்குகளைப் போல் சிலர் குல்லா அணிந்துகொண்டு திரிவதை மட்டும் பார்க்கிறோம்.

உங்கள் அஹிம்சையின்  மறைவில் மக்களை அக்கிரமங்களுக்கு அடிபணியும் கோழைகளாக்கி எண்ணற்றவர்கள்  தாங்கள் மட்டும் ஆயுதபாணிகளாகவும்  குபேரர்களாகவும் ஆகிவிட்டார்கள்!

பகத் சிங்கைத் தூக்கிலிட்டதற்குப் பதிலாகத் தர்மத்துக்கு எதிரான  உங்கள் அஹிம்சையைத் தூக்கில் தொங்கவிட்டிருந்தால் நாட்டில் இன்று எண்ணற்ற விவசாயிகள் தூக்கில் தொங்க நேர்ந்திருக்காது!...

லஞ்சம் ஆட்சிக்கட்டில்களை நிரந்தரமாகக் கைப்பற்றியிருக்க முடியாது!

தர்மம் நிரந்தரமாகத் தலைகுனியும் நிலையும் ஏற்பட்டிருக்காது!

ஆனாலும் என்ன, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஹிம்சாமூர்த்தியான உங்கள் ஜெயந்தியைக் கொண்டாடியே தீருவோம்.

காரணம் ஒருநாள் லீவு கிடைக்கும்..... 

Monday, September 28, 2015

அரசியல் (74)

டிஜிட்டல் இந்தியா!  

திடீரென்று நிறைய நண்பர்களின் முகநூல் ப்ரோபைல் படங்கள் ஒரேமாதிரி நிறம் மாற்றம் அடைந்துள்ளது!...

காரணம் என்னவென்று தெரியவில்லை!

அதற்கான காரணத்தை இத்தனைநாள் யாரும் நினைக்காமல் இப்போது ஒரே நேரத்தில் நினைத்தது ஏனென்று தெரியவில்லை!


மரப்பாச்சிக்கு பதிலாக டிஜிடல் இந்தியா என்கிற மின்னணுப் பாச்சி!


இயற்கைக்கு எதிரான ஈவிரக்கமற்ற தாக்குதலை ஆதரிக்கிறோம் என்பதே இதன் பொருள்!

இயற்கை மன்னிக்காது!

நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் நாம் நாமாக இருந்து ஆய்வு மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அல்லது நிராகரிக்கவேண்டும்!

இந்தப் பஞ்சுமிட்டாய்த்தனமான திட்டங்களெல்லாம் உண்மையான பிரச்சினைகளிலும் கடமைகளிலும் இருந்து மக்களைத் திசை திருப்பவும் ஏமாற்றவும் ஒரு சிறு பகுதியினரின் குபேர வாழ்வுக்கு மட்டுமே பயன்படும்.

இப்போது ஆட்சியில் யாரிருந்தாலும் இதையேதான் செய்திருபார்கள்.

அதற்கான பெயர்மட்டுமே வேறு ஆட்களால் வைக்கப்பட்டிருக்கும்!...

மக்களுக்கோ இயற்கைக்கோ ஒரு சுக்கும் நன்மை இருக்காது!

இன்று நாடு எதை அடிப்படைத் தேவையாக முதன்மைத் தேவையாக எதிர்பார்க்கிறதோ அதற்கு இது எந்த வகையிலும் பயன்படாது!..

ஆதாவது நாட்டில் லஞ்சம் என்கிற புற்று நோயை ஒழிப்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல் என்னென்னமோ சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள்!

நல்லவேளை உடம்பில் டிஜிட்டல் இந்தியா என்று யாரும் பச்சை குத்திக்கொள்ளவில்லை!

வெறும் காகித வேஷம்தானே! ..

தவறை உணரும்போது மாற்றிக்கொள்ளலாம்.....

ஆனால்....நாடு என்று உருப்படுமோ!....
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டபோது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நான் சொன்ன பதில்கள்: 
---------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கேள்வி:
அய்யா, டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய நோக்கம் அரசு மையங்களை மின்னணு துறை மூலம் சிறப்பாக துரிதமாக வேலை செய்ய வைப்பது..இதில் இயற்கைக்கு எதிராக என்ன உள்ளது ? 

எனது பதில்: 
நண்பரே! இந்தப் பண்பாடு குழந்தைமுதல் முதியவர்வரை இயற்கையின் பாத்திரத்தையும் உழைப்பின் பாத்திரத்தையும் காணாமல் செய்து விடுகிறது. அந்த உணர்வுகள் இயற்கையைப் பாதுகாக்கும் அடிப்படைகளையே தகர்ந்துவிடும் என்றே நினைக்கிறேன். அறிவியல் சாதனைகள் அனைத்தும் இயற்கையின் அழிவின்மேல்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல!...ஒவ்வொரு அறிவியல் திட்டத்தின் பயனும் இயற்கையைப் பேணி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இருக்கவேண்டும்.

நீங்களோ நானோ இயற்கையை நேசிப்பதன் காரணங்களை இந்தத் திட்டத்தால் பயன் அடைபவர்கள் உணர்வார்களா?
------------------------------------------------------------------------------------------------------------
 உயர்ந்த நோக்கத்துக்காக மட்டும் இது பயன்படுவதாக இருந்தால் அதுதவிர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பண்பாட்டைச் சீரழிக்கும் அம்சங்களுக்காகவும் மடை திறக்கக்கூடாதல்லவா? ஆனால் நமது அனுபவம் என்ன சொல்கிறது? இன்றைய துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை கணினி பயன்படுத்தும் எத்தனைபேர் அதன் பயன் என்ன என்று சொல்லப்படுகிறதோ அதற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்?...அலைபேசிப் பயன்பாடு இன்று உலகை ஆட்டிப் படைக்கிறதல்லவா? இந்த மாற்றத்தால் நாட்டின் இயற்கை வளங்கள் ஆதாவது காடுகளின் பரப்பு ஒரு ஏக்கராவது அதிகரிக்கும் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கேள்வி:
கூடுதலாக காடுகள் பெருகிவிடாமல் இருக்கலாம். ஆனால் மிண்ணணுவியல் இல்லையென்றால் இதை விட அதிகமாக காடுகள் அழிக்கப்பட்டிருக்கும்.......

எனது பதில்:
முழு உண்மை! சந்தேகம் இல்லை! ஆனால் நாம் அதற்கும் மேலாகப் போய் இயற்கை வளத்தைப் பெருக்க நினைக்கிறோம். காரணம் தேவை. அழிவை நிறுத்துவதுமட்டும் போதுமானது அல்ல.அது தவிர நவீன வசதிகள் அனைத்தும் நல்லவற்றுக்கும் மேலாகத் தவறாகப் பயன்பட்டிருக்கின்றன. அத்தகையை முறையில்தான் இதுவும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். இன்று கணினியும் அலைபேசியும் தொலைக்காட்சியும் சமுதாயத்தை பண்பாட்டு அளவில் எந்த திசைய்ல் அழைத்துச் செல்கிறது என்று நினைத்தால் குலை நடுக்கம் வருகிறது!
---------------------------------------------------------------------------------------------------------------------

தங்கள் காலத்துக்கு தாங்கள் நினைப்பதுபோல் நடந்தால் சரி, வாழ்ந்தால் சரி என்று அடிமுட்டாளில் இருந்து உலகை ஆள நினைக்கின்ற அறிவாளிவரை எல்லோரும் நினைக்கின்ற காலம் இது! வருங்காலப் பேரன் பேத்திகளையும் கொள்ளு மற்றும் எள்ளுப் பேரன் பேத்திகளையும் அவர்கள் வாழ உலகம் நன்றாக இருக்குமா என்பதையும் நினைக்க யாருக்கும் நேரமில்லை!
--------------------------------------------------------------------------------------------------------------
பல துப்பாக்கிகளால் இந்த இயற்கைத் தாய் சல்லடையாகத் துளைக்கப்பட்டு வருகிறாள்!....அதில் இது அதி சக்திவாய்ந்த ஒன்று. ஆதாவது நேரடியாக ஏற்ப்படுத்தும் பாதிப்பு குறைவானது ஆனால் இன்றைய நிலையில் மனித நாகரித்தின்மேல் ஏற்ப்படுத்தும் எதிர்மரைத்தாக்கம் மிக மிக அதிகம்!...அது தடுக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பால்புட்டி ஒரு கையிலும் ஏதாவது ஒரு மின்னணுப் பயன்பாட்டு சாதனம் ஒரு கையிலுமாக தொட்டில் குழந்தைகளைக் காணும் காலம் விரைவில் வந்து விடும்.
------------------------------------------------------------------------------------------------------------

 வரைபடங்களும் ஆவணங்களும் தயாரிப்பதில் துல்லியமான முறைகளுக்கு நவீன மின்னணுவியல் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போது இருக்கும் வசதிகளைக்கூடப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு விவசாயியும் தங்கள் எல்லைகள் தொடர்பாக பக்கத்து விவசாயிகளுடன் எதிரி போல்தான் வாழ்ந்து வருகிறான். காரணம் எல்லைக் கற்களோ வரப்புகளோ எந்த விவசாயியின் நிலத்திலும் சரியாகக் கிடையாது. இந்த முறை அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுமா?....

ஆதாவது சரியாகப் பயன்படுத்தப்படாது என்பதுதான் முக்கியமான குறைபாடு. ஆனால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதில் யாருக்கும் ஐயம் இலை. காரணம் அனுபவம் அப்படி! அதனால்தான் இருக்கும் தேவைகளையும் இருக்கும் அறிவியல் வசதிகளையும் சரியாகப் பயன்படுத்திவிட்டு அடுத்த நிலைக்குப் போவதே சிறந்த பயனளிக்கும். இல்லாவிட்டால் இயற்கைக்கும் மனிதநாகரிகத்துக்கும் தொடர்ந்து எதிராகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படும். இதுவரை அதைத்தான் பார்த்து வருகிறோம்...
-------------------------------------------------------------------------------------------------------------
இதுதான் இன்றைய அவசரத் தேவையா? இப்போதுள்ள நவீன வசதிகள் அனைத்தையும் நேர்மையாகவும் தவறுகளுக்கு இடம் கொடுக்காமலும் பயன்படுத்தி முடித்தாயிற்றா? கலாச்சாரச் சீரழிவு கொஞ்சமா நஞ்சமா?...

 காலத்தின் கட்டாயம் என்பது உண்மை! ஆனால் ஒவ்வொரு படியிலும் நடப்பில் இருந்த வசதிகள் முழுமையாக நல்ல திசையில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இதுவும் நம்பகமான ஒன்றாக நினைக்க முடியும்.

ஏற்கனவே இருக்கும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி நாட்டை நல்ல தவறு இல்லாத கட்டமைப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த அடியும் சரியாக இருக்கும்!

எல்லாத் தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவனின் கல்வித் திறனை மேம்படுத்தாமல் மேல்வகுப்புக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை.

 நண்பரே! நான் சொல்வது தொழில் நுட்பத்தில் உள்ள குறைகளை அல்ல! சமுதாயத்தில் உள்ள குறைகளை. குறைகளே வாழ்க்கையாகிப்போன நிலையில் ஒவ்வொரு நிலையிலும் தவறிலாத சமூக நிலையை நாம் ஏன் விரும்பக் கூடாது? தொழில்நுட்ப மாற்றங்கள் இயற்கைக்கும் சமூக வாழ்வுக்கும் பண்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதே நான் சொல்ல நினைப்பது! அது தவறா? அன்னியரைப் பார்த்து வியந்துகொண்டேதான் நமது காலம் போகணுமா?
------------------------------------------------------------------------------------------------------

இயற்கையும் மனித நாகரிகமும் மேம்படவேண்டும் என்பதுதான் கோரிக்கை! இந்த இரண்டையும் சின்னாபின்னமாக்குகின்ற திசையில்தான் அனைத்தும் நடக்கின்றன. அப்படியில்லாமல் நடந்தால் சரி!

ஆதாவது நாட்டு நடப்பைப்பத்தி யார்வேண்டுமானாலும் நியாயமாக விமர்சிக்கலாம். எதை விமர்சிக்கிறோமோ அதற்கு ஏற்ற ஒரு தொழிலில் இருப்பவர்தான் விமர்சிக்கவேண்டும் என்பது இல்லை. திருடனைப்பற்றித் திருடன் அல்லது போலீஸ்காரர்தான் விமர்சிக்க வேணுமா?
----------------------------------------------------------------------------------------------------------------
 நவீன வசதிகள்தான் நம் அனைவரையும் நெருக்கத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. அதே சமயம் ஏற்கனவே இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி முழுமையாகவோ நேர்மையாகவோ நாட்டில் அனைத்தும் நடந்துவிடவில்லை. அதனால் இருக்கும் நிலையை மக்களுக்கான சேவையில் முழுமையாகப் பயன்படுத்திவிட்டு வருங்காலத்தையும் கணக்கில்கொண்டு முன்னேற்றத்தை வரவேற்போம். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியே மக்களை நல்லவழிகளை விடத் தவறான வழிகளில் கொண்டு செல்கிறது.இயற்கையும் பண்பாடும் பாழ்படாத ஒரு திசையில் வளர்ச்சிப்பாதை இருப்பதே நல்லது!
-----------------------------------------------------------------------------------------------------------

சோசியல் மீடியாக்கள்தான் இன்று பண்பாட்டை நாரடிக்கவும் பயன்படுகிறது! கெட்டதைத் தவிர்த்து நல்ல பணிகளுக்கு மட்டுமே பயன்படவேண்டும். மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கக்கூடாது என்பதே பதிவின் நோக்கம்...இதுவரை கிடைத்துள்ள அறிவியல் வசதிகளை பாமர மக்களைவிட தீய சக்திகளும் பண்பாட்டைக் கெடுப்பவர்களும்தான் அதிகம் பயன்படுத்திப் பயன் அடைந்திருக்கிறார்கள்...அதையெல்லாம் இது தடுக்குமா?
------------------------------------------------------------------------------------------------------------

பொதுவாக மூவண்ணம் என்றால் தேசிய உணர்வைக் குறிக்கும்...அதை மரியாதையான இடங்களில் தகுதியுள்ள முறையில்தான் கையாளவேண்டும்.கண்ட இடங்களில் எல்லாம் கையாள்வது பண்புடைய செயலாக இருக்காது. முகநூல் படமாக ஒருவர் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளமுடியும். அதன்மேல் மூவண்ணத்தைப் போர்த்துவது சரியா? சரியென்றால் அவமதிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நேற்று ஒரு நண்பர் தனது முகநூல் ப்ரோபைல் படமாக இரண்டு செருப்புகளைப் போட்டு அதன்மேல் மூவண்ணம் போர்த்தப்பட்டிருந்தது. அதன் பொருள் மதிப்புக்குரியது அல்ல! ஆனால் அனுமதிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதே போல மூவண்ணம் கொண்ட ஒரு நடைவிரிப்பைப் பயன்படுத்துவது சரியா? இவையெல்லாம் சரியென்று ஆகிவிடக்கூடாது என்பதால்தான் நான் சொன்னேன்...மூவண்ணத்தைப் பயன்படுத்த சில நியதிகள் இருக்கவேண்டும். பொது தளத்தில் ஒட்டப்படும் சினிமா சுவரோட்டிபோல் ஆகிவிடக்கூடாது! அதில் பாலாபிசேகமும் நடக்கும். சாண அடியும் விழும்....பாலாபிசேகம் முக்கியமல்ல! சாண அடி முக்கியம்!
-----------------------------------------------------------------------------------------------------
Friday, September 25, 2015

எனது மொழி ( 193 )

தாயிற்சிறந்த....

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது யாருமே மறுக்கத் துணியாத வரிகள்!

இதன்மூலம் பெற்றோரின் பாத்திரம் மிக உயர்வாகச் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் பெற்றதைத் தவிர பெற்றோருக்கு இருக்கவேண்டிய பண்புகள் எதுவும் இல்லாத கடமைகள் எதையும் செய்யாத சமூகத்தால் மதிக்கப்படாத பண்புகளைக் கொண்ட பெற்றோர் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு இந்த வரிகள் பொருந்துமா?

பெற்றோரின் சுமந்து பெற்ற பாத்திரத்தைப் போற்றுமளவு அவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றி ஏன் அதிகமாகப் பேசப்படுவதிலை?

அதனால் பெற்றோரைத் துதிக்கும் பண்பாடு மட்டும் வளர்க்கப்படுகிறது.

பெற்றோரின்  பொறுப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

அதன் விளைவாகப் பிள்ளைகளை வளர்க்கும் முறை விமர்சனத்துக்கு உள்ளாவது இல்லை.

அதனால் பாசத்தைத் தவிர மற்றபடி  தவறான வளர்ப்பு முறையைப் பெரும்பாலான பெற்றோர் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதனால் போற்றப்படும் பெற்றோர் கைவிடப்படும் நிலையையும் அடைகிறார்கள்...

கண்மூடித்தனமான பெற்றோர் வழிபாட்டை  ஒரு சமூக அவலமாகப் பார்க்கிறேன்.

Monday, September 7, 2015

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 41 )

உண்மையும் பொய்யும்.....

மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுள் வடிவங்கள் மட்டுமல்ல கடவுளர்களின் விருப்பங்களும் குணங்களும் ஒழுக்கங்களும் மனிதனுடையதாகவே உருவகப் படுத்தப்பட்டன.

தவிர மனிதருடன் தொடர்புடைய மனிதருக்குப் பயன்பட்ட, மனிதன் விரும்பிய , மனிதன் அஞ்சிய அனைத்தும் கடவுள் வடிவங்களாக்கப்பட்டன.

காரணம் கடவுளை ஒரு அன்னியனாகப் பாவிக்கும் பண்புதான் உலகம் முழுவதும் இருக்கிறது!

அதனால் தனக்குள் அடங்காத , தன்னால் ஒன்றும் செய்ய முடியாத தான் உருவாக்கிய பயங்கரக் கடவுளிடம் பயமும் துதியும் கீழ்ப்படிதலும் கப்பம் கட்டும் புத்தியும் இயல்பானதே!

கடவுளும் நாமும் ஒன்றே, கடவுளின் ஒரு அங்கமே நாம் என்ற புத்தி வந்துவிட்டால் தவறு இல்லாத உயர் பண்புகள்தான் உண்மையான ஆன்மிகமாக இருக்கும்!

Saturday, August 8, 2015

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (40 )

மனிதன் படைத்த கடவுளும் மனிதனைப் படைத்த கடவுளும்......

கிட்டத்தட்ட அனைத்து உலக மக்களிடையே கடவுள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

பெரும்பாலோரிடையே நம்பிக்கையாகவும் மிகச் சிலரிடையே நம்பிக்கையின்மையாகவும் இருக்கிறது!

நம்பிக்கையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது மனிதன் படைத்த கடவுள்!

இரண்டாவது மனிதனைப் படைத்த கடவுள்!....

இதில் மனிதனைப் படைத்த கடவுள் என்பது விவாதப் பொருளாக மட்டுமே நடப்பில் இருக்கிறது.

ஆனால் மனிதன் படைத்த கடவுள் மட்டுமே மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது!.

மனிதன் எப்படிக் கடவுளைப் படைக்க முடியும்?

ஏன் படைக்க முடியாது?

படைக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் என்ன?

மனிதன் படைக்காத கடவுள் , மனிதன் வடிக்காத கடவுள் வடிவங்கள், மனிதன் எழுதாத மறைநூல்கள், மனிதன் சொல்லாத தத்துவங்கள், மனிதன் ஓதாத மந்திரங்கள், மனிதன் செய்யாத சடங்குகள், மனிதன் கொடுக்காத பலிகள், மனிதன் செலுத்தாத காணிக்கைகள் மனிதன் செய்யாத பிரசங்கங்கள் உலகில் எங்காவது உள்ளதா?

இவையெல்லாம் மனிதப் படைப்புகள் அல்லவா?

இவற்றையெல்லாம் மனிதனே படைத்துவிட்டு தானே படைத்த அந்தக் கடவுள் தான் வேண்டியதையெல்லாம் கொடுக்கும் என்று நம்பி வாழ்வதுதானே இன்றைய உலக வழக்காக இருக்கிறது?

இவன் படைத்ததுதான் அனைத்தையும் காக்கும் கடவுள் என்றால் அண்டசராசரத்தையும் படைத்தவன் மனிதன்தான் என்றல்லவா ஆகிறது!

Friday, August 7, 2015

எனது மொழி (192)

இழப்பும் இல்லை! இழிவும் இல்லை! 

சொத்து சுகம் என்கிற சுயநலத்தில் மனித உணர்வுகளும் நியாயங்களும் காலடியில் போட்டு நசுக்கப்படுகின்றன.

நூறு வயதிலும் ஒருவர் விரும்பினால் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் உடலாலும் உள்ளத்தாலும் நலமாக இருப்பின் வாழ்வாதாரங்கள் இருப்பின் தமக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம்.

தேடிக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் வெறுமையும் விரக்தியும்தான் வாழ்க்கையாக இருக்கும்!.

இளம் வயதில் கணவன் மனைவி உறவு எந்த அளவு மதிக்கப்படுகிறதோ அந்த அளவு வயதான காலத்தில் ஏற்படும் ஆண் பெண் நட்பு உயர்வாக மதிக்கப்பட வேண்டும்.

அதனால் யாருக்கும் இழப்பு கிடையாது!

இழிவும் கிடையாது!

அதை இழிவாக நினைக்கும் எவரையும் குப்பைகளாக நினைக்க வேண்டும்!
Saturday, August 1, 2015

அரசியல் ( 73 )

மோசமான முன்னுதாரணம்.....

கடந்த நான்கு நாட்களாக உண்மையாகவே நான் நொந்து நூலாகிப்போனேன் என்று சொன்னால் அது மிகையாகாது!...

அது ஏன் என்று சொன்னால் நிறைய நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!

காரணம் அந்த அளவு மக்களின் உணர்வுகள் தவறான பண்பாட்டில் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது!

தனிநபர் வழிபாடு அதன் எல்லையைத் தொட்டுவிட்டதாகவே நினைக்கிறேன்.

புகழ்வதில்  தேசிய அளவிலான ஒரு போட்டியே நடந்து முடிந்திருக்கிறது!

ஒரு நல்ல மனிதருக்குக் கொடுக்கும் மரியாதையாக நிறைய நண்பர்கள் நினைக்கிறார்கள்!

ஆனால் சமூக விரோதிகளைவிட மோசமான பிரபலங்கள்  சாகும்போதும்  இதுதான் முன்னுதாரணமாக இருக்கப்போகிறது!.

ஆதாவது நல்லவர்களுக்கும் கயவர்களுக்கும் ஒரே மரியாதைதான்  கொடுக்கப்படப் போகிறது.

அப்போது நல்ல மனிதர்கள் வெட்கித் தலைகுனியத்தான் போகிறார்கள்!

உலகில் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் உள்ள நாடுகளில் இத்தகைய அநாகரிகம் இல்லை!

மறைந்த தலைவர்களை மனதார நினைத்து மனத்தால், மலர்களால்  அஞ்சலி செய்துவிட்டுத் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள்!

ஆனால் நம் நாட்டிலோ கற்பனைக்கு எட்டாத மிகையான பொய்யான உணர்வில் மக்கள் திட்டமிட்டு மூழ்கடிக்கப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

மக்கள் மனதில் இருக்கும் சமூக உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அரசுகளின்மேல் உள்ள எதிர்ப்புணர்வையும் அநீதி, ஊழல் போன்றவற்றுக்கு எதிரான உணர்வுகளையும் மழுங்கச் செய்து மறக்கடிக்க பிரபலங்களின் சாவையும் வெட்கமின்றிப் பயன்படுத்துகிறார்கள்!

ஊடகங்கள் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

அப்துல் கலாமுக்கு அஞ்சலி தெரிவிக்கும் அதே நேரம் அவரே விரும்பாதவையெல்லாம் நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை!

வருங்காலம் இன்னும் பலமடங்கு மோசமாகவே இருக்கப் போகிறது!


Wednesday, July 29, 2015

எனது மொழி ( 192)

பலம் அல்ல பலவீனம்! 

நண்பர்களே!

நமது நாட்டில் ஒரு பழக்கம் அதிகரித்து வருகிறது.

ஆதாவது செல்வாக்குப்பெற்ற ஒருவர் மறைந்துவிட்டால் அவருடைய மறைவின் பெயரால் ஒரு நாளை விடுமுறையாக அறிவித்து பலவிதமாக அன்றைய நாளைப் பயன்(பாழ்)படுத்துவதே!

கிராமங்களில் எந்தப் பணிகளும் நிறுத்தப்படுவது இல்லை!

காரணம் அதனால் ஏற்ப்படும் இழப்பை விவசாயிகளும் தொழிலாளிகளும் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை!

நகரங்களிலும்  அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் வீட்டில் விடுமுறையில் இருப்பது இல்லை!

 பாதுகாப்புப்படை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை போன்ற அத்தியாவசியத் துறையில் உள்ளவர்களெல்லாம் விடுமுறையில் வீட்டில் இருந்து துக்கம் கொண்டாடவேண்டியது இல்லையா?

ஒருநாள் விடுமுறை என்றாலும் வருவாய் இழப்பு இல்லை என்கிற நிலை உள்ளவர்கள் மட்டுமே இந்த விடுமுறைகளை விரும்புகிறார்கள். ஊக்குவிக்கிறார்கள்.

அவர்கள்கூட அந்த விடுமுறை நாளை வேலை நாளாகப் பயன்படுத்தி அந்த நாளின் வருவாயை மறைந்த அந்த மனிதரின் நினைவைப் போற்றும் விதத்தில் நல்ல காரியங்களுக்கு அளிக்கச் சொன்னால் மிகப் பெரும்பாலோர் விடுமுறையை விரும்பமாட்டார்கள்.

நான்கூட எனது தினசரி வேலைகளை நிறுத்தினால் பயிர்கள் காயும்! கால்நடைகள் பட்டினி கிடக்கும். எப்படி விடுமுறையைப் பின்பற்றுவேன்?

அப்படியானால் மறைந்தவர்களுக்கு இந்த விடுமுறையால் நாம் அளிக்கும் மரியாதைதான் என்ன?

மறைந்தவர்களின் பெயரைப் பயன்படுத்தி இப்படி ஒரு நாளை வருவாயுடன் மற்றும்  வருவாய் இல்லாமல் வீணடிப்பது மறைந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை என்பதைவிட அவமரியாதை என்றே நினைக்கிறேன்.

உண்மையாக மரியாதை செய்ய விரும்பினால் ஒருநாள் வருவாயை மறைந்தவர்களின் பெயரால் நல்ல திட்டங்களை  உருவாக்கி அதைச் செயல்படுத்த கொடையாக வழங்கட்டும்!

மேலோர் நடந்த பாதையில் தாமும் நடக்க உறுதி ஏற்கட்டும்!

அதைவிட்டு இப்படி விடுமுறைகளை அதிகரித்துக்கொண்டே போவது பலம் அல்ல நாட்டின் பலவீனம்!

Wednesday, April 15, 2015

எனது மொழி ( 191)

சித்தர்கள் யார்? 

நண்பர்களே! 

சித்தர்கள் மனித இனத்துக்குப் பெருமை சேர்த்த பன்முகத் திறன் கொண்ட மனிதர்களா?

அல்லது அமானுஷ்ய சக்திகொண்ட நம்மால் புரிந்துகொள்ள முடியாத வினோதப் பிறவிகளா?

அவர்களைப் பற்றிய எண்ணற்ற செய்திகளில் உண்மையின் தாக்கம் எவ்வளவு இருக்கும்?

அவர்கள் வாழ்ந்த காலத்தின் துவக்கமும் முடிவுமாக எதைக் கொள்ளலாம்?

இப்போதும் யாராவது சித்தர்கள் உள்ளார்களா?

சித்தர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்களா? அல்லது வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சித்தர்களால் சிறப்பு உண்டா? 

சித்தர்களைப் பற்றித் தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற அளவு உலகின் மற்ற பாகங்களில் பேசப்படுகிறதா? 

அவரவர்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளலாமே!


Saturday, April 11, 2015

எனது மொழி ( 190 )

அறிவும் அறியாமையும் 

முன்னோர் செய்த ஒவ்வொன்றிலும் அறிவியல் இருப்பதாகச் சொல்வது ஒரு நோய் மாதிரி பரப்பப்பட்டு வருகிறது. 

முன்னோர்களின் செயல்களிலும் நம்பிக்கைகளிலும் ஒரு காரணம் மறைந்திருக்கும். 

ஆனால் அந்தக் காரணங்கள் அறிவுபூர்வமாகவும் அறியாமை நிறைந்ததாகவும் இரு வகையிலும் இருக்கும். 

அதில் எது அறிவுபூர்வமானது எது அறியாமையால் பின்பற்றப்பட்டது என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

அப்படிப் பார்க்கத் தவறினால் மூட நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் ஆகிவிடும்! 

Wednesday, April 8, 2015

எனது மொழி ( 189 )

நேரம்!

நண்பர்களே! 

நல்லநேரம் என்றால் என்ன? 

கெட்டநேரம் என்றால் என்ன? 

நல்ல அல்லது கெட்டசெயல்களைச் செய்பவர்கள் நாமே! 

அப்படியிருக்க நேரம் எப்படி நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்க முடியும்?

நல்ல நேரத்தில் கெட்டசெயல்களும் கெட்ட நேரத்தில் நல்ல செயல்களும் நடப்பது இல்லையா?....

Monday, March 30, 2015

எனது மொழி (188)

அறிவுடைமை! 

மனிதனால் உருவாக்கப்பட்ட எதையும் பயன்படுத்துவது மட்டுமே அறிவுடைமையாக இருக்கும். 

வணங்குவது அறிவுடைமை ஆகாது.

அணுவிலிருந்து அண்டம் முடிய அனைத்தையும் இறைவனாகவும் அதில் நம்மை ஒரு உறுப்பாகவும் நினைத்து அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாக்குவதே மிகச் சிறந்த அறிவுடைமை ஆகும்!

அதுவே மிகச் சிறந்த ஆன்மிகம்! 

Tuesday, March 24, 2015

எனது மொழி (187)

இன்பமும் துன்பமும்...

துன்பத்தைப் பற்றி அறியாதவனுக்கு இன்பம் என்றால் என்னவென்று தெரியாது.

இன்பத்தைப் பற்றி அறியாதவனுக்குத் துன்பம் என்றால் என்னவென்றும் தெரியாது!

சாராம்சத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டும் சமமாகவே இருக்கிறது.

ஆனால் அது பற்றிய அறியாமையால் அவ்வப்போது எந்த நிலையில் இருக்கிறோமோ அதை மிகையாக நினைத்து மகிழ்கிறோம். அல்லது வருந்துகிறோம். 

Thursday, February 12, 2015

எனது மொழி ( 186)

ஆத்திகம் - நாத்திகம் - மூட நம்பிக்கை .....

உண்மையான ஆத்திகர்களிடமோ நாத்திகர்களிடமோ மூட நம்பிக்கைகள் இருக்கக்கூடாது . 

இரு வேறுபட்ட அடிப்படைக் கண்ணோட்டங்களாக மட்டுமே இருக்கும்! 

அதில் முட்டல் மோதல் இருக்காது!

ஒன்று படைப்பு என்று சொல்லும்.

மற்றது இயற்கை என்று சொல்லும்.

அதில் மூட நம்பிக்கைகளுக்கு என்ன வேலை?

 மூட நம்பிக்கை என்பது யதார்த்த உண்மைகளுக்கு மாறானது. 

அதை உண்மை என்கிற தத்துவம் எதுவென்றாலும் புறக்கணிப்பதே நியாயமானது!

Monday, January 12, 2015

உணவே மருந்து ( 97 )

சோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்.....

சோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.

அதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம்! சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.

அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே!

அத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

அந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்
 இனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.

உணவாகவும் தின்பண்டமாகவும் தயாரிக்கலாம்.

எப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்!

அதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.

ஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்!

முதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும்  எளிமையான முறையைப் பார்ப்போம்!.....

இது சோற்றுக் கற்றாழை .......
வெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்.....அது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட  நிலையில்.....
சிறு சிறு கீற்றுக்களாக்குதல்.....
மேல்தோல் நீக்கப்படுதல்......


குழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும். 

நீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....


அதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....கசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்!....

 இதைக் கொண்டு நாம் விரும்பும் சுவைகளில் எல்லாம் எண்ணற்ற உணவுப் பண்டங்கள் தயாரித்து இயற்கையாகவும் சமைத்தும் உண்ணலாம்.....


https://www.facebook.com/photo.php?fbid=844085558992458&set=pcb.844086982325649&type=1&theater

Thursday, January 8, 2015

தத்துவம் ( 41 )

மூலம் ! 

காரணமில்லாத எதுவும் எங்கும் கிடையாது . 

ஆதாவது மூலமில்லாத மூலம் என்று எதுவும் இருக்க முடியாது!  

அப்படியிருக்க இதைத்தான் மூலம் என்று எதைச் சொன்னாலும் அது பொய்யே! 

நம்மால் முடிந்ததெல்லாம் நமது அறிவுக்கு எட்டியவரையிலான இயக்கப் போக்கில் ஒரு அங்கமாகச் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதை அறிந்து அதன்படி நடப்பதே! 

இயக்கத்தின் மூலத்தைக் கண்டறிய முயல்வதும் அது இப்படித்தான் என்று சொல்லத் துணிவதும் பயனற்ற வேலையும் அபத்தமான கற்பனையுமே ஆகும்! 

நமது அறிவு எட்டக்கூடிய எல்லைதால் அண்டத்தின் எல்லை! 

அதைப் பற்றிய ஆழமான பார்வைதான் அறிவியலும் ஆன்மிகமும்! 

சந்தேகமே வேண்டாம்!

 அறிவியலுக்கு வழிகாட்டுவதும் அறிவியலால் வளர்வதும்தான் ஆன்மிகம்! 

அறிவியலுக்கு முரண்படும் எதுவும் ஆன்மிகம் அல்ல! மூடநம்பிக்கைகளே!...

Thursday, January 1, 2015

எனது மொழி (185 )

நாம்! 

நம்மை நினைந்து மனம் வருந்தும் யாரும் இல்லையானால் நாம் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்!...

நம்மை நினைந்து பிறர் மகிழ்கிறார்கள் என்றால் மிகவும் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்.

நமது வாழ்க்கையால் இயற்கை மகிழும் என்றால் நாம் மகத்தான வாழ்வு வாழ்கிறோம் என்பது பொருள்!