ss

Monday, September 28, 2015

அரசியல் (74)

டிஜிட்டல் இந்தியா!  

திடீரென்று நிறைய நண்பர்களின் முகநூல் ப்ரோபைல் படங்கள் ஒரேமாதிரி நிறம் மாற்றம் அடைந்துள்ளது!...

காரணம் என்னவென்று தெரியவில்லை!

அதற்கான காரணத்தை இத்தனைநாள் யாரும் நினைக்காமல் இப்போது ஒரே நேரத்தில் நினைத்தது ஏனென்று தெரியவில்லை!


மரப்பாச்சிக்கு பதிலாக டிஜிடல் இந்தியா என்கிற மின்னணுப் பாச்சி!


இயற்கைக்கு எதிரான ஈவிரக்கமற்ற தாக்குதலை ஆதரிக்கிறோம் என்பதே இதன் பொருள்!

இயற்கை மன்னிக்காது!

நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் நாம் நாமாக இருந்து ஆய்வு மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அல்லது நிராகரிக்கவேண்டும்!

இந்தப் பஞ்சுமிட்டாய்த்தனமான திட்டங்களெல்லாம் உண்மையான பிரச்சினைகளிலும் கடமைகளிலும் இருந்து மக்களைத் திசை திருப்பவும் ஏமாற்றவும் ஒரு சிறு பகுதியினரின் குபேர வாழ்வுக்கு மட்டுமே பயன்படும்.

இப்போது ஆட்சியில் யாரிருந்தாலும் இதையேதான் செய்திருபார்கள்.

அதற்கான பெயர்மட்டுமே வேறு ஆட்களால் வைக்கப்பட்டிருக்கும்!...

மக்களுக்கோ இயற்கைக்கோ ஒரு சுக்கும் நன்மை இருக்காது!

இன்று நாடு எதை அடிப்படைத் தேவையாக முதன்மைத் தேவையாக எதிர்பார்க்கிறதோ அதற்கு இது எந்த வகையிலும் பயன்படாது!..

ஆதாவது நாட்டில் லஞ்சம் என்கிற புற்று நோயை ஒழிப்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல் என்னென்னமோ சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள்!

நல்லவேளை உடம்பில் டிஜிட்டல் இந்தியா என்று யாரும் பச்சை குத்திக்கொள்ளவில்லை!

வெறும் காகித வேஷம்தானே! ..

தவறை உணரும்போது மாற்றிக்கொள்ளலாம்.....

ஆனால்....நாடு என்று உருப்படுமோ!....
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டபோது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நான் சொன்ன பதில்கள்: 
---------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கேள்வி:
அய்யா, டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய நோக்கம் அரசு மையங்களை மின்னணு துறை மூலம் சிறப்பாக துரிதமாக வேலை செய்ய வைப்பது..இதில் இயற்கைக்கு எதிராக என்ன உள்ளது ? 

எனது பதில்: 
நண்பரே! இந்தப் பண்பாடு குழந்தைமுதல் முதியவர்வரை இயற்கையின் பாத்திரத்தையும் உழைப்பின் பாத்திரத்தையும் காணாமல் செய்து விடுகிறது. அந்த உணர்வுகள் இயற்கையைப் பாதுகாக்கும் அடிப்படைகளையே தகர்ந்துவிடும் என்றே நினைக்கிறேன். அறிவியல் சாதனைகள் அனைத்தும் இயற்கையின் அழிவின்மேல்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல!...ஒவ்வொரு அறிவியல் திட்டத்தின் பயனும் இயற்கையைப் பேணி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இருக்கவேண்டும்.

நீங்களோ நானோ இயற்கையை நேசிப்பதன் காரணங்களை இந்தத் திட்டத்தால் பயன் அடைபவர்கள் உணர்வார்களா?
------------------------------------------------------------------------------------------------------------
 உயர்ந்த நோக்கத்துக்காக மட்டும் இது பயன்படுவதாக இருந்தால் அதுதவிர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பண்பாட்டைச் சீரழிக்கும் அம்சங்களுக்காகவும் மடை திறக்கக்கூடாதல்லவா? ஆனால் நமது அனுபவம் என்ன சொல்கிறது? இன்றைய துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை கணினி பயன்படுத்தும் எத்தனைபேர் அதன் பயன் என்ன என்று சொல்லப்படுகிறதோ அதற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்?...அலைபேசிப் பயன்பாடு இன்று உலகை ஆட்டிப் படைக்கிறதல்லவா? இந்த மாற்றத்தால் நாட்டின் இயற்கை வளங்கள் ஆதாவது காடுகளின் பரப்பு ஒரு ஏக்கராவது அதிகரிக்கும் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கேள்வி:
கூடுதலாக காடுகள் பெருகிவிடாமல் இருக்கலாம். ஆனால் மிண்ணணுவியல் இல்லையென்றால் இதை விட அதிகமாக காடுகள் அழிக்கப்பட்டிருக்கும்.......

எனது பதில்:
முழு உண்மை! சந்தேகம் இல்லை! ஆனால் நாம் அதற்கும் மேலாகப் போய் இயற்கை வளத்தைப் பெருக்க நினைக்கிறோம். காரணம் தேவை. அழிவை நிறுத்துவதுமட்டும் போதுமானது அல்ல.அது தவிர நவீன வசதிகள் அனைத்தும் நல்லவற்றுக்கும் மேலாகத் தவறாகப் பயன்பட்டிருக்கின்றன. அத்தகையை முறையில்தான் இதுவும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். இன்று கணினியும் அலைபேசியும் தொலைக்காட்சியும் சமுதாயத்தை பண்பாட்டு அளவில் எந்த திசைய்ல் அழைத்துச் செல்கிறது என்று நினைத்தால் குலை நடுக்கம் வருகிறது!
---------------------------------------------------------------------------------------------------------------------

தங்கள் காலத்துக்கு தாங்கள் நினைப்பதுபோல் நடந்தால் சரி, வாழ்ந்தால் சரி என்று அடிமுட்டாளில் இருந்து உலகை ஆள நினைக்கின்ற அறிவாளிவரை எல்லோரும் நினைக்கின்ற காலம் இது! வருங்காலப் பேரன் பேத்திகளையும் கொள்ளு மற்றும் எள்ளுப் பேரன் பேத்திகளையும் அவர்கள் வாழ உலகம் நன்றாக இருக்குமா என்பதையும் நினைக்க யாருக்கும் நேரமில்லை!
--------------------------------------------------------------------------------------------------------------
பல துப்பாக்கிகளால் இந்த இயற்கைத் தாய் சல்லடையாகத் துளைக்கப்பட்டு வருகிறாள்!....அதில் இது அதி சக்திவாய்ந்த ஒன்று. ஆதாவது நேரடியாக ஏற்ப்படுத்தும் பாதிப்பு குறைவானது ஆனால் இன்றைய நிலையில் மனித நாகரித்தின்மேல் ஏற்ப்படுத்தும் எதிர்மரைத்தாக்கம் மிக மிக அதிகம்!...அது தடுக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பால்புட்டி ஒரு கையிலும் ஏதாவது ஒரு மின்னணுப் பயன்பாட்டு சாதனம் ஒரு கையிலுமாக தொட்டில் குழந்தைகளைக் காணும் காலம் விரைவில் வந்து விடும்.
------------------------------------------------------------------------------------------------------------

 வரைபடங்களும் ஆவணங்களும் தயாரிப்பதில் துல்லியமான முறைகளுக்கு நவீன மின்னணுவியல் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போது இருக்கும் வசதிகளைக்கூடப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு விவசாயியும் தங்கள் எல்லைகள் தொடர்பாக பக்கத்து விவசாயிகளுடன் எதிரி போல்தான் வாழ்ந்து வருகிறான். காரணம் எல்லைக் கற்களோ வரப்புகளோ எந்த விவசாயியின் நிலத்திலும் சரியாகக் கிடையாது. இந்த முறை அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுமா?....

ஆதாவது சரியாகப் பயன்படுத்தப்படாது என்பதுதான் முக்கியமான குறைபாடு. ஆனால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதில் யாருக்கும் ஐயம் இலை. காரணம் அனுபவம் அப்படி! அதனால்தான் இருக்கும் தேவைகளையும் இருக்கும் அறிவியல் வசதிகளையும் சரியாகப் பயன்படுத்திவிட்டு அடுத்த நிலைக்குப் போவதே சிறந்த பயனளிக்கும். இல்லாவிட்டால் இயற்கைக்கும் மனிதநாகரிகத்துக்கும் தொடர்ந்து எதிராகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படும். இதுவரை அதைத்தான் பார்த்து வருகிறோம்...
-------------------------------------------------------------------------------------------------------------
இதுதான் இன்றைய அவசரத் தேவையா? இப்போதுள்ள நவீன வசதிகள் அனைத்தையும் நேர்மையாகவும் தவறுகளுக்கு இடம் கொடுக்காமலும் பயன்படுத்தி முடித்தாயிற்றா? கலாச்சாரச் சீரழிவு கொஞ்சமா நஞ்சமா?...

 காலத்தின் கட்டாயம் என்பது உண்மை! ஆனால் ஒவ்வொரு படியிலும் நடப்பில் இருந்த வசதிகள் முழுமையாக நல்ல திசையில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இதுவும் நம்பகமான ஒன்றாக நினைக்க முடியும்.

ஏற்கனவே இருக்கும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி நாட்டை நல்ல தவறு இல்லாத கட்டமைப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த அடியும் சரியாக இருக்கும்!

எல்லாத் தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவனின் கல்வித் திறனை மேம்படுத்தாமல் மேல்வகுப்புக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை.

 நண்பரே! நான் சொல்வது தொழில் நுட்பத்தில் உள்ள குறைகளை அல்ல! சமுதாயத்தில் உள்ள குறைகளை. குறைகளே வாழ்க்கையாகிப்போன நிலையில் ஒவ்வொரு நிலையிலும் தவறிலாத சமூக நிலையை நாம் ஏன் விரும்பக் கூடாது? தொழில்நுட்ப மாற்றங்கள் இயற்கைக்கும் சமூக வாழ்வுக்கும் பண்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதே நான் சொல்ல நினைப்பது! அது தவறா? அன்னியரைப் பார்த்து வியந்துகொண்டேதான் நமது காலம் போகணுமா?
------------------------------------------------------------------------------------------------------

இயற்கையும் மனித நாகரிகமும் மேம்படவேண்டும் என்பதுதான் கோரிக்கை! இந்த இரண்டையும் சின்னாபின்னமாக்குகின்ற திசையில்தான் அனைத்தும் நடக்கின்றன. அப்படியில்லாமல் நடந்தால் சரி!

ஆதாவது நாட்டு நடப்பைப்பத்தி யார்வேண்டுமானாலும் நியாயமாக விமர்சிக்கலாம். எதை விமர்சிக்கிறோமோ அதற்கு ஏற்ற ஒரு தொழிலில் இருப்பவர்தான் விமர்சிக்கவேண்டும் என்பது இல்லை. திருடனைப்பற்றித் திருடன் அல்லது போலீஸ்காரர்தான் விமர்சிக்க வேணுமா?
----------------------------------------------------------------------------------------------------------------
 நவீன வசதிகள்தான் நம் அனைவரையும் நெருக்கத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. அதே சமயம் ஏற்கனவே இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி முழுமையாகவோ நேர்மையாகவோ நாட்டில் அனைத்தும் நடந்துவிடவில்லை. அதனால் இருக்கும் நிலையை மக்களுக்கான சேவையில் முழுமையாகப் பயன்படுத்திவிட்டு வருங்காலத்தையும் கணக்கில்கொண்டு முன்னேற்றத்தை வரவேற்போம். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியே மக்களை நல்லவழிகளை விடத் தவறான வழிகளில் கொண்டு செல்கிறது.இயற்கையும் பண்பாடும் பாழ்படாத ஒரு திசையில் வளர்ச்சிப்பாதை இருப்பதே நல்லது!
-----------------------------------------------------------------------------------------------------------

சோசியல் மீடியாக்கள்தான் இன்று பண்பாட்டை நாரடிக்கவும் பயன்படுகிறது! கெட்டதைத் தவிர்த்து நல்ல பணிகளுக்கு மட்டுமே பயன்படவேண்டும். மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கக்கூடாது என்பதே பதிவின் நோக்கம்...இதுவரை கிடைத்துள்ள அறிவியல் வசதிகளை பாமர மக்களைவிட தீய சக்திகளும் பண்பாட்டைக் கெடுப்பவர்களும்தான் அதிகம் பயன்படுத்திப் பயன் அடைந்திருக்கிறார்கள்...அதையெல்லாம் இது தடுக்குமா?
------------------------------------------------------------------------------------------------------------

பொதுவாக மூவண்ணம் என்றால் தேசிய உணர்வைக் குறிக்கும்...அதை மரியாதையான இடங்களில் தகுதியுள்ள முறையில்தான் கையாளவேண்டும்.கண்ட இடங்களில் எல்லாம் கையாள்வது பண்புடைய செயலாக இருக்காது. முகநூல் படமாக ஒருவர் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளமுடியும். அதன்மேல் மூவண்ணத்தைப் போர்த்துவது சரியா? சரியென்றால் அவமதிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நேற்று ஒரு நண்பர் தனது முகநூல் ப்ரோபைல் படமாக இரண்டு செருப்புகளைப் போட்டு அதன்மேல் மூவண்ணம் போர்த்தப்பட்டிருந்தது. அதன் பொருள் மதிப்புக்குரியது அல்ல! ஆனால் அனுமதிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதே போல மூவண்ணம் கொண்ட ஒரு நடைவிரிப்பைப் பயன்படுத்துவது சரியா? இவையெல்லாம் சரியென்று ஆகிவிடக்கூடாது என்பதால்தான் நான் சொன்னேன்...மூவண்ணத்தைப் பயன்படுத்த சில நியதிகள் இருக்கவேண்டும். பொது தளத்தில் ஒட்டப்படும் சினிமா சுவரோட்டிபோல் ஆகிவிடக்கூடாது! அதில் பாலாபிசேகமும் நடக்கும். சாண அடியும் விழும்....பாலாபிசேகம் முக்கியமல்ல! சாண அடி முக்கியம்!
-----------------------------------------------------------------------------------------------------
Friday, September 25, 2015

எனது மொழி ( 193 )

தாயிற்சிறந்த....

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது யாருமே மறுக்கத் துணியாத வரிகள்!

இதன்மூலம் பெற்றோரின் பாத்திரம் மிக உயர்வாகச் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் பெற்றதைத் தவிர பெற்றோருக்கு இருக்கவேண்டிய பண்புகள் எதுவும் இல்லாத கடமைகள் எதையும் செய்யாத சமூகத்தால் மதிக்கப்படாத பண்புகளைக் கொண்ட பெற்றோர் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு இந்த வரிகள் பொருந்துமா?

பெற்றோரின் சுமந்து பெற்ற பாத்திரத்தைப் போற்றுமளவு அவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றி ஏன் அதிகமாகப் பேசப்படுவதிலை?

அதனால் பெற்றோரைத் துதிக்கும் பண்பாடு மட்டும் வளர்க்கப்படுகிறது.

பெற்றோரின்  பொறுப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

அதன் விளைவாகப் பிள்ளைகளை வளர்க்கும் முறை விமர்சனத்துக்கு உள்ளாவது இல்லை.

அதனால் பாசத்தைத் தவிர மற்றபடி  தவறான வளர்ப்பு முறையைப் பெரும்பாலான பெற்றோர் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதனால் போற்றப்படும் பெற்றோர் கைவிடப்படும் நிலையையும் அடைகிறார்கள்...

கண்மூடித்தனமான பெற்றோர் வழிபாட்டை  ஒரு சமூக அவலமாகப் பார்க்கிறேன்.

Monday, September 7, 2015

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 41 )

உண்மையும் பொய்யும்.....

மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுள் வடிவங்கள் மட்டுமல்ல கடவுளர்களின் விருப்பங்களும் குணங்களும் ஒழுக்கங்களும் மனிதனுடையதாகவே உருவகப் படுத்தப்பட்டன.

தவிர மனிதருடன் தொடர்புடைய மனிதருக்குப் பயன்பட்ட, மனிதன் விரும்பிய , மனிதன் அஞ்சிய அனைத்தும் கடவுள் வடிவங்களாக்கப்பட்டன.

காரணம் கடவுளை ஒரு அன்னியனாகப் பாவிக்கும் பண்புதான் உலகம் முழுவதும் இருக்கிறது!

அதனால் தனக்குள் அடங்காத , தன்னால் ஒன்றும் செய்ய முடியாத தான் உருவாக்கிய பயங்கரக் கடவுளிடம் பயமும் துதியும் கீழ்ப்படிதலும் கப்பம் கட்டும் புத்தியும் இயல்பானதே!

கடவுளும் நாமும் ஒன்றே, கடவுளின் ஒரு அங்கமே நாம் என்ற புத்தி வந்துவிட்டால் தவறு இல்லாத உயர் பண்புகள்தான் உண்மையான ஆன்மிகமாக இருக்கும்!