ss

Tuesday, December 29, 2015

எனது மொழி (200)

இது நல்லது அல்ல!

வாழவேண்டிய வயதில் பல இளைஞர்களும் பெரியவர்க்களும்கூட கொல்லப்படுவது மதவெறிப் பின்னணியில் நடப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது...

அவை நடக்கக் கூடாத கொடூரம் என்பதில் ஐயமில்லை!

இது தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் ஒரு பகுதியாக இருந்தால் ஒரு குற்றச் செயலாக மட்டும் பார்ப்பது நியாயம்!

ஆனால் அப்படியல்லாமல் மத உணர்வுகளும் அது தொடர்பான பகைமையும் காரணமாக இருந்தால் இது ஒரு சமூகப் பிரச்சினை ஆகிறது!

ஒருதாய்ப் பிள்ளைகளைப் போல வாழவேண்டிய மக்கள் மத உணர்வுகளுக்குப் பலியாவது நியாய உள்ளம் படைத்தவர்களுக்குப் பேரிடிகளே!

இதைத் தடுக்க ஒரே வழி மக்கள் தங்களது ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மதவழிப்பட்ட குறுகிய மனப்பான்மைகளைக் கைவிட்டு பாரபட்சமற்ற அனைத்து மக்களுக்கும் பொருந்துகின்ற நியாயங்களை பாதுகாப்பு அரணாகக் கடைப்பிடிக்கும் பண்பாடு வளரவேண்டும்.

அரசுகளும் அரசியல் சட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களும் காவல்துறையும் நீதிமன்றங்களும் அதற்கேற்ற முறையில் பயிற்றுவிக்கப்படவேண்டும்!
உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

ஏனோ ஒரு பெரிய பயங்கரத்தை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருப்பதாகவே மனதுக்குப் படுகிறது.

அந்த அளவு மக்களின் மனம் மதவெறிப் பிரச்சாரத்தால் மாசுபட்டிருக்கிறது!
இது நல்லது அல்ல!

Wednesday, December 16, 2015

விவசாயம் ( 88 )

வானகம்.... ஒரு வேண்டுகோள்! 

வானகம் பற்றியும் நம்மாழ்வார் ஐயா பற்றியும் நான் எனது வலைதளத்திலும் முகநூலிலும் சில கட்டுரைகள் எழுதியிருந்தேன்.

அது வானகம் பொறுப்பாளர்களின் கவனத்துக்குச் சென்றதா என்பது தெரியவில்லை.

வானகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இயற்கை வேளாண் இயக்கத்தைப் பதிவு செய்து அதில் விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரையும் பதிவு செய்ய வேண்டும்.

அந்த இயக்கத்தின் தேர்வு செய்யப்பட்ட குழு வருங்காலத்தில் வானகத்தை வழி நடத்த வேண்டும்!

உறுப்பினர் கட்டணம் மூலம் குறைந்த பட்ச நிதியையும் திரட்ட முடியும்!

வானகத்தை இப்போது வழி நடத்தும் குழு எது?

அதில் யார் யார் இருக்கிறார்கள்?

யார் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்கிறார்கள்?

அந்தக் குழுவின் உரிமையும் கடமைகளும் என்ன?

அந்தக் குழுவின் பொறுப்புக்காலம் எவ்வளவு?

அந்தக் குழுவை யார் தேர்வு செய்கிறார்கள்?

வானகம் சம்பந்தப்பட்ட அசையும் அசையாத சொத்துக்கள், வரவு செலவுக் கணக்குகள், போன்ற பல விபரங்கள் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களாக உள்ளன.

அது வானகத்தின் வருங்காலத்துக்கோ நம்மாழ்வார் ஐயாவின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கோ உதவிகரமாக இருக்காது என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்!

வானகத்தின் அனைத்து விபரங்களையும் கொண்ட விரிவான குறிப்புப் புத்தகம் உடனடியாக வெளியிடுவதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

அதுதான் வானகத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது!
நம்மாழ்வார் ஐயா மீதும் வானகத்தின்மீதும் வைத்துள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுப்பெறும் வண்ணம் வருங்காலம் இருக்கவேண்டும்.

சென்ற வருடம்  வானகத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நானும் நண்பர் சத்தியமங்கலம் திருமூர்த்தியும் முடிவு செய்து நண்பர்களுக்கும் அறிவித்து ஒரு குழுவாக சென்றிருந்தோம்.

சென்ற அன்றே இரவு கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.

மறுநாள் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டவும் செய்தோம்.

ஆனால் அதன் பின்னால் இப்படி ஒரு குழு வந்து சென்றது என்பதற்கான சுவடே இல்லை...

மக்களுக்கான பொது நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு திட்டமும் அதை அமல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு குழுவும் இருக்கவேண்டும்.

அந்தக் குழு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றமும் செய்யப்படவேண்டும்.

நிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டு அது நேர்மையாகவும் திறமையாகவும் கையாளப்படவேண்டும்.

இந்த முறையில் வானகம் என்னும் சீரிய இயற்கை வேளாண்மை மையம் செயல்பட்டால் தவிர இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் தலைமைப் பீடமாக வானகத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது! கடைசியில் அடிப்படை லட்சியம் நம்மாழ்வார் ஐயாவின் படத்தை வணங்குவதோடு நின்று விடும்!

வானகம் நிர்வாகிகள் மனது வைத்தால் இந்த வருடம் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு மாநாடாக நடத்தி வானகத்தை ஒரு எழுச்சிமிக்க இயற்கை வேளாண்மை தத்துவத்தின் தலைமைப் பீடமாக முறைப்படி அறிவிப்புச் செய்ய முடியும்.

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

இது தொடர்பான முகநூல் உரையாடல்....கீழே உள்ள இணைப்பில்...

https://www.facebook.com/photo.php?fbid=1004323296302016&set=pb.100001730669125.-2207520000.1453977666.&type=3&theater

Friday, December 4, 2015

எனது மொழி (199 )

நிலை மாறுமோ!....

சென்னை தோன்றாதபோது அங்கு நில அமைப்பு எப்படி இருந்திருக்கும்?

மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆங்காங்கே இயற்கையாகவே அமைந்த தாழ்வான பள்ளதாக்குகளின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் சிற்றாறுகளின் வழியாகவும் கடலுக்குச் சென்றிருக்கும்.

ஆதாவது இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது தேங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இடங்களில் நீரைப் பார்க்க முடியாது.

மழையை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் நீர் பெருக்கெடுக்காத மேட்டுப் பகுதிகளில் வீடுகள் ஆகும்போது மழை நீரை உறுஞ்ச வழி இல்லாததால் அந்த நீரும் சேர்ந்து மழை வெள்ளநீரின் அளவு இரட்டிப்பாகவே செய்யும்.

அதன்காரணமாகப் பெருகும் நீர் பாதிக்காமல் செல்லவேண்டுமானால் முன்னர் இருந்த நீர்வழிப் பாதைகளும் சிற்றாறுகளும் ஓடைகளும் முன்பிருந்ததைவிட ஆழமாகவும் அகலமாகவும் இரட்டிப்பு கொள்திறனுடன் ஆக்கப்படிருக்க வேண்டும்.

அப்படிச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே இருந்த நீரோட்டப் பாதைகள் அனைத்தையும் நெருக்கிக் குறுக்கினோம். முடிந்தவரை தடுத்து மேடாக்கினோம்.

சுயநலத்துக்காக மக்கள் நலம் பலியிடப்பட்டது.

அதன் விளைவாக பெருமழைக் காலங்களில் மக்கள் வாழும் இடங்கள் ஏரிகளாகவும் தெருக்களெல்லாம் ஓடைகளாகவும் பெரிய சாலைகளெல்லாம் சிற்றாறுகளாகவும் அடையாறு, கூவம் போன்றவையெல்லாம் நதிகளாகவும் மாறிப்போயின!

இயற்கையின் கதிப்போக்கில் மக்கள் விடப்பட்டார்கள்.

இதற்கு முடிவு ஏற்படுமா?

சரியான அச்சமற்ற சென்னையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளனவா?

அதற்காக எதையெல்லாம் செய்வது அவசியமோ அதையெல்லாம் செய்யும் நிலையில், தகுதியில் அரசுகள் உள்ளனவா?

அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளார்களா?

பாதிக்கப்படும் மக்களுக்கு அதிக பட்ச நட்ட ஈடு வழங்குவதன்மூலம் எத்தகைய முக்கியமான இடங்களையும் கட்டுமானங்களையும் கைப்பற்றி புதிய சென்னையை உருவாக்கும் துணிவு அரசுகளுக்கு இருக்கின்றதா?

அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தாங்கும் வல்லமை இருக்கிறதா?

இருக்கிறது என்றால் சென்னை புதிய சென்னையாக மாறும்!

இல்லாவிட்டால் இனி இந்த அவலம் தொடர்கதை ஆகும்.

அதிகமாகவும் ஆகும்!