ss

Friday, August 19, 2016

எனது மொழி ( 222 )

ஒலிம்பிக் பெருமை!

ஒலிம்பிக்கில் ஓரிரு பதக்கங்களை வென்றது வென்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பெருமையே!... அதே நேரம் சில விபரங்களையும் எண்ணிப்பார்ப்பது அவசியம்..இதை நமது நாட்டுக்கே கிடைத்த பெருமையாக நினைப்பது சரியா? அப்படியானால் பஞ்சத்தால் அடிபட்ட சின்னஞ்சிறு நாடுகள்கூட வாங்கும் அளவு பதக்கங்களை ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாம் வாங்கமுடியாமல் போவது சிறுமை அல்லவா? இதே வீராங்கனைகள் ஒரு சதவிகிதம் பின்தங்கிஇருந்தால்கூட இந்தப் பெருமை அவர்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்காது! அந்த ஒரு சதவிகிதத்தை நம்பித்தான் நமது தலை நிமிர்வும் தலைகுணிவும் இருக்கிறதா? அந்த ஒரு சதவிகிதத்தைத் தவற விட்டிருந்தால் அவர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்களா? பாராட்டுக்களாலும் பணத்தாலும் குளிப்பாட்டப்பட்டு இருப்பார்களா?

இந்த ஆரவாரம் எல்லாம் நமது பலவீனத்தை மக்களிடமிருந்து மறைக்கும் அவமானகரமான செயல்கள் ஆகும். அந்த வீராங்கனைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தாமல் இருந்திருந்தாலும் இதே மரியாதை அவர்களுடைய முயற்சிக்குக் கிடைத்திருக்கும் என்றால் நமது ஆரவாரம் நியாயமே! ஆனால் அலட்சியப்படுத்தப்பட்டு இருப்பார்கள்! அதனால் ஒருநூலிழையில் புகழ்ச்சியாய் மாறிய இகழ்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.
உண்மையாகவே நமது பெருமை வாங்கும் பதக்கங்களில் இல்லை! நமது மக்களின் வாழ்வில் விளையாட்டும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதிலும் அதனால் எல்லா விளையாட்டுக்களிலும் எண்ணற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதிலும் அந்த அளவு பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றுவதிலும்தான் பெருமை அடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் எத்தியோப்பியாவையும் கிரேனடாவையும் விடப் பின்தங்கியிருக்கிறோம் என்று கவலைப்படுவதே நியாயம்!

Friday, August 12, 2016

எனது மொழி ( 221 )

பாம்பு கற்பிக்கும்  பாடம்! 

ஒரு பம்புகூட தனது உடம்பின் மேல்பாகம் பயனற்றுப் போகும்போது, அது தனது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக  ஆகும்போது சட்டையாக உரித்து ஒதுக்கிவிட்டு புத்துணர்வுடன் புது வாழ்வைத் தொடங்கிவிடுகிறது.

தான் உரித்து விட்ட சட்டையைத் திரும்பிக்கூடப்  பார்ப்பது  இல்லை.

ஆனால் மனிதராகிய  நாமோ உறவு,  சொத்து, சுகம், பாசப்பிணைப்பு போன்ற மேல்சட்டைகள்   தாங்க முடியாத சுமைகளாகிப்போன பின்னாலும்   அவற்றைக் கைவிட  மனமில்லாமல் சுமந்துகொண்டு துன்பங்களை வளர்த்துக்கொள்கிறோம்.

 வேண்டாத சுமைகளைக் கைகழுவி  விட்டு இருக்கும் வாய்ப்புகளுடன், இருக்கும் உறவுகளுடன், புதுவாழ்வு வாழ்ந்தாலென்ன?

அந்த நிலையில்  வாழும் மற்றவர்கள்  மனிதரே  இல்லையா?

போலியான துன்ப வாழ்வினால் அடையும் நன்மைகள் என்ன?Tuesday, August 9, 2016

ஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )

மூலம்

நமது புலன்களாலும் அறிவாலும் உணரக்கூடிய மற்றும் உணர முடியாத நம்மைச் சுற்றியும் அண்டவெளியில் உள்ள அத்தனையும் அணுவைவிடச் சிறிய மற்றும் அணுக்களால் ஆனவையே!

அவற்றின் விதவிதமான சேர்மானமும் சிதைவுமே நாம் காணும் மற்றும் காண முடியாத அத்தனை பொருட்களும் இயக்கங்களும் ஆகும். இந்த இயக்க மகா சமுத்திரத்தில் புலனுக்கே எட்டாத சின்னஞ்சிறிய ஒன்றுதான் நாம் வாழும் உலகமும் அதில் அடங்கியுள்ள அத்தனையும் ஆகும்.

இதில் ஒரு துரும்பான மனிதனும் ஒட்டுமொத்த இயக்கத்தில் ஒரு நுண்ணிய அங்கமே!

ஜடப் பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் இயக்கங்களுக்கும் அவற்றின் ஆழமான அங்கமான அணுக்களுக்கு இடையே நடக்கும் இயக்கங்களுக்கும் அப்பால் அவற்றின் ஒரு ஒழுங்கமைந்த இரண்டாம் சுற்று இயக்கமான உயிரியல் இயக்கமும் அண்டத்தில் நிலவுகிறது.

அந்த உயிரியல் இயக்கக் கூறின் ஒரு வடிவம்தான் மனிதன்.

அவனுக்குக் கிடைத்த சிறப்பு வாய்ப்புதான் பரிணாம வளர்ச்சி.

அதன்காரணமாக சிந்தனைத் திறனும் திட்டமிடலும் இறந்தகால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவும் ஆகும்.

அந்த அறிவைக்கொண்டு அனைத்தையும் ஆராயும் வல்லமை கிடைத்தது.அதில் பிறந்த ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் மூலம் பற்றிய சிந்தனை.மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை இதுதான் மூலம் அல்லது படைப்பாளி என்று எண்ணற்ற நம்பிக்கைகளும் எண்ணற்ற தத்துவங்களும் நிலவுகின்றன.

ஆனால் கிட்டத்தட்ட அவை அனைத்துமே இந்த அண்டத்தில் நமது சூரியமண்டலத்தில் நமது பூமியில் மனிதர்களாகிய நமது மூலையில் உதித்த கற்பனை வடிவங்களே!

அந்தக் கற்பனை வடிவங்களே கடவுள்களாகவும் அவற்றை வலியுறுத்தும் தத்துவங்களே மதங்களாகவும் இன்றளவும் விளங்குகின்றன.

அவை  சொல்லும் ஒவ்வொன்றும் மனித விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டவைதானே தவிர உண்மையைப் பிரதி பலிப்பவையாக இல்லை.

காரணம் அவை நாம் காணும் மற்றும் காண முடியாத அனைத்தும் எதோ ஒன்றால் படைக்கப்பட்டவை என்றே சொல்வதோடு. இதுதான் படைத்தது என்றும் சொல்கின்றன.

ஒருபடி மேலேபோய் மனித மனமும் அறிவும் கொண்ட யாரு ஒரு தேவன் படைத்தான் என்றும் சொல்கின்றன.

மனித  அறிவுக்கு எட்டிய அதிகபட்ச எல்லையைவிட கணக்கிட முடியாத அளவு துவக்கமும் முடிவும் இல்லாத இந்த அண்டத்தை அதில் புலப்படாத ஒரு புள்ளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பவசத்தால் உருவான மனிதன் இப்படித்தான் படைக்கப்பட்டது இன்னார்தான் படைத்தார்கள் என்று சொல்வதுதான் வேடிக்கை!

அதைவிட  வேடிக்கை பெரிய பெரிய தத்துவ வாதிகளும் சிந்தனையாளர்களும் அதை மறுக்க முடியாத உண்மைகளாக நம்புவதும் நம்பவைப்பதும் ஆகும்.

அவர்கள்  எவரும் ஒன்றைமட்டும் நினைக்கத் தவறுகிறார்கள்.

ஆதாவது எல்லாவற்றையும் ஒரு சக்தி படைத்தது என்றால் அந்த சக்தியை எது படைத்தது, , எங்கிருந்து படைத்தது, அதை யார் படைத்தார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திப்பதே இல்லை!

அதற்கு விடை கொடுத்தால் அல்லாமல் படைப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்வது எப்படி அறிவுடைமை ஆகும்?

ஆனால் நம்பத் தகுந்த வேறொரு கண்ணோட்டமும் இருக்கிறது.

அது படைப்பு என்று சொல்லப்படும் அனைத்தையும் இயக்கம் என்று சொல்கிறது.

நம்மையும் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அதற்கு உள்ளும் புறமும் நடக்கும் அத்தனையையும் பேரியக்கமாகவும் அதன் உள்ளுறுப்பான சிறு இயக்கங்களாகவும் பார்க்கிறது.

அதில்  படைப்பது என்ற செயல் இல்லை. படைக்கப்படும் எதுவும் இலை.

எல்லாமே  என்றென்றும் இருந்துவரும் இயக்கங்களே!

அந்த இயக்க வெள்ளத்தில் தோற்றமும் மறைவும் இடைவிடாமல் நடக்கின்றன.

ஆனால் வடிவங்கள் மட்டும் குறுகிய மற்றும் நீண்டகாலத்துக்கு அப்படியே இருப்பதுபோல் தோன்றுகின்றன.

அனாலும் அதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிப்பட்ட  மாற்றங்களுக்கு மனிதனும் விலக்கு அல்ல!

ஒட்டு மொத்த இயக்கத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைப்போன்றே வாழ்ந்துவரும் சக மனிதர்களுடன் மோதல் இல்லாமல் இணக்கமாக வாழ்வதும் அதற்கான தத்துவங்களை வகுத்து அதன்படி வாழ்வதுமே மனித வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

அதைத்தான் உண்மையான ஆன்மிகமாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.

ஆனால்  நடந்தது வேறு

பரிணாம வளர்சியின் காரணமாக மனித வாழ்க்கையில் விருப்பு வெறுப்பு என்பது பிற உயிரினங்களைப்போல அல்லாமல் பல சிக்கலான படித்த தரங்களாக விளங்குகிறது.

இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போன்றவை என்பதை உள்ளபடியே உணராமல் ஒவ்வொருவரும் பிறருடைய துன்பங்களைப் பற்றி நினைக்காமல் தான்மட்டும் இன்பமான உலகில் வாழவேண்டும் என்று போராடும் போர்க்களமாக வாழ்வை ஆக்கி விட்டார்கள்.

 அதனால் துன்பங்களில் இருந்து விடுபட்டு தங்களால் விரும்பப்படும் இன்பத்தை எப்படி அடையலாம் என்பதை தங்கள் மனம்போனபடிஎல்லாம் சிந்திக்கத் துவங்கியபோதுதான் பேரியக்கமாக நினைப்பதற்குப் பதிலாக அனைத்தையும் படைத்ததாக நம்பப்பட்ட பரம்பொருள் அல்லது இறை களமிறக்கப்படுகிறது.

அதற்கு எண்ணற்ற வேடங்கள் இடப்பட்டு எண்ணற்ற தத்துவங்களுடன் மக்களைத் துன்பங்களில்  இருந்து விடுவித்து சுவர்கத்துக்கு அனுப்பும் பணி கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை அவை மக்களில்  ஒருவரைக்கூட  சுவர்கத்துக்கு  அழைத்துச்  செல்லவும்  இல்லை. வாழ்வில்  விரும்பிய  இன்பத்தைக் கொடுக்கவும்  இல்லை.

இந்தப்  பொய்மான்  வேட்டையை  இன்றளவும்  ஆன்மிகம் என்ற பெயரால் மதங்களின் பெயரால்  நம்பிக்கொண்டும்  நம்பவைத்துக்கொண்டும்  இருக்கிறோம்.

அறிவாற்றல் மிக்க சிந்தனைத் திறன் மிக்க யார் இதை  மக்களின் மேலான  வாழ்க்கைக்கு  உதவக்கூடிய  உண்மையான ஆன்மிகம்  என்று ஏற்றுக்கொள்ள  முடியும்?

மாறாக படைப்புக்கொள்கையை  நிராகரித்து அனைத்தையும் இயக்கமாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு  மனிதனும்  தான் விரும்பியதை  அடைய இல்லாத யாரையோ  எதையோ  நம்பி வாழ்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய முறையான கடமைகளே வாழ்வின் பணியாக இருந்திருக்கும்.

அதை  வகுத்துக் கொடுக்கும்  திட்டவட்டமான  பாதைகளே தத்துவங்களாக இருந்திருக்கும். ஒட்டுமொத்த  மனித இனத்தின் இணக்கமான  வாழ்வுமுறையே உண்மையான  ஆன்மிகமாக இருந்திருக்கும்.

அந்த உண்மையான  ஆன்மிகத்தின் மகத்துவம்  உணரப்படும்  வரை  ஆத்திகர்  என்றும்  நாத்திகர்  என்றும்  கடவுள் என்றும்  கடவுள் மறுப்பு என்றும்  கூக்குரல் எழுப்பிக்கொண்டு இல்லாத ஒன்றுக்காகப் போராடி  மடிவதே வாழ்க்கையாக இருக்கும்!
Monday, August 8, 2016

எனது மொழி ( 220 )மனச்சாட்சி...

மனச்சாட்சி மனச்சாட்சி என்கிறார்களே! அதன் உண்மையான பொருள் என்ன? மனச்சாட்சி என்பது பொதுவானதா? அல்லது தனியானதா? ஒவ்வொருவருக்கும் அறிவு வேறுபடுவதைப் போலவே மனச் சாட்சியும் வேறுபடுகிறது. அதனால்தான் நல்லவையும் கெட்டவையுமாக அனைத்தும் நடக்கிறது.. ஒன்று அறிவுக்குத் தவறென்று பட்டாலும் அதைச் செய்ய பல்வேறு சாக்குகளுடன் அனுமதிப்பது ஒருவரின் மனச் சாட்சியே! அதுபோலவே என்ன துன்ப துயரங்கள் வந்தாலும் மனதாலும் தீயவற்றைச் செய்ய நினைக்காமல் இருக்கச் செய்வதும் ஒருவருடைய மனச் சாட்சியே!.. இதில் பொது மனச்சாட்சிக்கு இடம் எங்கே?...

Tuesday, May 31, 2016

எனது மொழி ( 219 )

துன்பத்தில் இன்பம்....

எந்த அளவு நல்லவராக உலகில் வாழ நினைக்கிறோமோ அந்த அளவு துன்ப துயரங்களை அனுபவித்தே ஆகவேண்டும்...

காரணம் தங்கள் வாழ்வில் மட்டுமல்ல வெளி உலகில் நடக்கும் தவறுகளையும் நினைந்து நல்லோர் வருந்துகிறார்கள்..

 எது பற்றியும் கவலைப் படாதவர்களாக இருப்பதால் நல்லோரின் அளவு கெட்டவர்கள் துன்பங்களை  உணர்வது இல்லை...

ஆனால் நல்லோருக்கு துன்பத்திலும் இன்பம் காணும் வாய்ப்பு இருக்கிறது...

மற்றவர்களுக்கு அது இல்லை!..

Thursday, May 19, 2016

எனது மொழி ( 218 )

மானம் வருமா?...
இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு மக்களுடைய அரசியல் தகுதியை மேலும் உறுதிப் படுத்தியிருக்கிறது!
ஆண்ட கட்சி மீண்டும் வெற்றி பெற்றது ஆச்சர்யம் இல்லை! எதிர்பார்த்ததே!..
ஆனால் அதன் எதிரி கட்சி இந்த அளவு வெற்றிபெற்றது எதிர்பாராதது!...
மற்ற அனைவரும் துடைத்தெறியப்பட்டதும் அப்படியே!..
ஆக தமிழ்நாட்டு மக்கள் உலகுக்கு ஒரு கேவலமான முன்னுதாரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்கள்!...
மாற்று சிந்தனை இப்போதைக்கு இல்லை!
மானமுள்ள வாழ்க்கைக்கு வழியே இல்லை!...

Saturday, May 14, 2016

எனது மொழி ( 217 )

இது சத்தியம்!... நாடு முழுக்க உள்ள நேர்மையான சமூக சிந்தனையாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாட்டின் விமோசனத்துக்கான திட்டத்தை வகுத்து அதை நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டும்... அதன் வழிகாட்டுதலில் வளரும் சக்தி இப்போதுள்ள அவலங்களை ஒழித்துக்கட்டி நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதைவிட வேறு வழி நிச்சயம் இல்லை .. அதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் அத்தனையிலும் மக்கள் தொடர்ந்து தோல்விதான் அடைவார்கள்! இது சத்தியம்!....

Thursday, May 12, 2016

எனது மொழி ( 216 )

உரிமையும் கடமையும்....
ஒரு எம் எல் ஏ வுக்கு தனது தொகுதி மக்களுக்கான தேவைகளைத் தீர்த்துவைக்கத் தேவையான முடிவெடுக்கும் அதிகாரமும் நிதியாதாரமும் உத்தரவிடும் அதிகாரமும் இருக்கிறதா?.. இல்லை - என்றால் ஒரு எம் எல் ஏ அவரது தொகுதியில் எதுவும் செய்யவில்லை, என்று குற்றம் சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது? ஒட்டுப்போடுகின்ற எத்தனை பேருக்கு தான் ஓட்டுப்போடும் எம் எல் ஏ வின் கடமைகளும் உரிமைகளும் பற்றித் தெரியும்? அப்படித் தெரியாதென்றால் அவர்களால் எப்படி ஒரு தகுதியான நபரைத் தேர்வு செய்ய முடியும்?... நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு கட்சி நிறுத்தும் ஒரு கொலைகாரப் பொறுக்கியை ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் எதிர்த்து நின்று வெல்ல முடியுமா?.... இது என்ன ஜனநாயகம்? இது என்ன தேர்தல்?...

Tuesday, May 10, 2016

எனது மொழி (215 )

இரு!.....எப்படி?..

தனித்திரு! பசித்திரு! விழித்திரு என்று அடிக்கடி கருத்துரைக்கப்படும்...

ஆனால் அதன் பொருள் என்ன என்று விளக்கம் கொடுப்போர் பெரும்பாலும் கூர்மையான அறிவை முனை மழுங்கச் செய்யும் வித்தத்தில் மூட நம்பிக்கை அடிப்படையிலான புரியாத விளக்கங்களை மட்டுமே சுவையாகக் கொடுப்பார்கள்...

உண்மையில்.....

எந்த ஒரு தவறான உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் தான் வாழ்க்கை நெறியாகக் கொண்ட சத்தியத்தில் உறுதியாக இரு என்பதே தனித்திரு என்பதன் பொருள்....

எண்ணற்ற தத்துவங்களைக் கற்றிருந்தாலும் மேலும் மேலும் அறிவுப் பசி இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே பசித்திரு என்பதன் உண்மையான பொருள். .....

தான் சரியான பாதையை விட்டு இடரும் நிலை ஏற்ப்பட ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது என்பதே விழித்திரு என்பதன் பொருள்..

இப்பொருள் உணரப்ப்படுமா?....

எனது மொழி (214)

எனது ஒட்டு யாருக்கு?...

நண்பர்களே!....

தேர்தலுக்கு முன்பே தனது மக்கள் பணியால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்......

அனைத்துக் கட்சிக்காரர்களையும் அனைத்து மக்களையும் ஒரேமாதிரி நேசிப்பவர்......

வாக்காளர் மற்றும் வேட்பாளர் ஆகியோரின் கடமைகளையும் உரிமைகளையும் நன்கு உணர்ந்தவர்...

உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல்வரை நன்கு கற்றவர்....

உலகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றவேண்டும் என்ற தணியாத தாகத்தை உடையவர்....

சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் தூய்மையானவர்....

எந்த நிலையிலும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் விலைபோகாத நேர்மையாளர்.....

அக்கிரமங்களையும் அநீதியையும் ஊழலையும் சகித்துக் கொள்ளாதவர்....

தேர்தலில் தனது சொந்தப் பணத்தையோ பிறரிடம் வசூல் செய்த பணத்தையோ கொண்டு பிரச்சாரம் செய்யாதவர்.....

ஊர் ஊருக்கு தான் மக்கள் பிரதிநிதி ஆனால் தனது கடமைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்கும் வகையில் சில துண்டறிக்கைகளை மட்டும் பொது மைதானத்தில் பார்வைக்கு வைத்துவிட்டு தனது அன்றாட வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்...

வெற்றியா தோல்வியா என்பதைப் பிறர்மூலம் அறியும்வரை அது பற்றிக் கவலைப் படாமல் தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்....

எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தனது கடந்த கால நன்னடத்தைகளை மக்களிடம் நிரூபித்தவர்....

இப்படிப்பட்ட ஒருவருக்கே எனது வாக்கு கிடைக்கும் நண்பர்களே!...

அப்படி வாக்களிக்க வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் அப்படிப்பட்டவர்கள் இல்லாத ஒரு நிலையில் நடக்கும் தேர்தல்கள் நாசமாய்ப்போகட்டும்!....

எனது வாக்குரிமையை வீணருக்கு ஒருக்காலும் அளிக்க மாட்டேன்....

உங்கள் வாக்கு?....

Saturday, May 7, 2016

எனது மொழி ( 213 )

தேர்தல்!..

ஆடுகளுக்காக ஒரு தேர்தல் நடந்ததாம்....
ஆனால் வேட்பாளர்களாக நரிகள் மட்டுமே நிற்க முடிந்ததாம்...
பல புத்திசாலி ஆடுகள் சொல்லிச்சாம்......
அட முட்டாள் ஆடுகளே! ஓட்டுப்போடும் உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க அப்படின்னு!....
ஆடுகளும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நரிகளிடம் காசு வாங்கிக்கொண்டு வீறுநடைபோட்டுப் புறப்பட்டுக்கிட்டே இருந்ததாம்...
ஒவ்வொரு தேர்தலிலும்....

Friday, May 6, 2016

எனது மொழி ( 212 )

ஒண்ணுமே புரியலே!.....

மனித இனத்தை அனைத்து உயிரினங்களையும்விட மேலானவனாக இறைவன் படைத்திருக்கிறான் என்கிறார்கள்...

ஒரு சந்தேகம்....

மனிதனைவிட  பிற உயிரினங்களுக்கு அதிகம் தீங்கு விளைவித்த....

மனிதனைவிட இயற்கைக்கு அதிகம்  தீங்கு விளைவித்த.....

மனிதனைவிடத் தனது இனத்துக்குத் தானே  அதிகம்  தீங்கு விளைவித்த,..

ஏதாவது ஒரு உயிரினத்தைச் சொல்ல முடியுமா?..

முடியாதென்றால் இப்படிப்பட்ட மாபாதக இனத்தை மேலானவனாகப் படைத்தான் இறைவன் என்று சொல்வது மாபெரும் பொய் என்பதை ஒப்புக்கொள்கிறோமா?...

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதே இயற்க்கையில் நடந்த ஒரு பெரிய விபத்து என்பது எனது கோட்பாடு ! அதனால் மனித இனம் அழிவதே அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் நல்லது....

இந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் மனித வாழ்க்கை இயற்கைக்கும் பிற உயிரின வாழ்க்கைக்கும் பேராபத்தாக இல்லாமல் உதவிகரமாக மாற்றப்பட வேண்டும். தவிர்க்கமுடியாத இயற்கைத் தேவை இருந்தால்தவிர பிற உயிரினங்களை அழித்தல் கூடாது...

இது நடக்குமா?

Monday, May 2, 2016

எனது மொழி ( 211)

ஒழுக்கம்....

ஒழுக்கம் என்றால் அதைப் பெரும்பாலும் ஆண் பெண் உறவு சம்பந்தமான விஷயமாகவே பார்க்கிறார்கள்...

அது சரியானது அல்ல!

மிகச் சிறந்த வாழ்க்கைப் பண்புகளைக் கொண்டிருப்பதே ஒழுக்கம் என்பதன் உண்மையான பொருள் ஆகும்!...

எந்த அளவு சிறந்த பண்புகள் நிறையக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் எனலாம்.

எந்த அளவு சிறந்த பண்புகள் குறைவாகக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு ஒழுக்கத்திலும் தாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்!...

Thursday, April 28, 2016

எனது மொழி (210)

தேவையற்ற தேவைகள்.....
இன்றைய மனிதனின் தேவையற்ற தேவைகளும் நவீனம் என்கின்ற பெயரால் நடக்கும் இயற்கைப் பேரழிவுகளும் நாகரிகம் என்ற பெயரால் நடக்கும் அநாகரிகக் கூத்துக்களும் மனித உரிமை என்கிற பெயரால் நடக்கும் உரிமை மீறல்களும் உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கின்றன.
இந்த நிலையில் திக்கில்லாத திக்கில் ஓடுவதைத் தவிர பெரும்பாலோருக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை!....
அனைத்து மானிடருக்கும் வழிகாட்டும் உயர் தர்ம நெறிகள் தோன்றி உலகைக் காக்கட்டும்!....

Wednesday, March 16, 2016

எனது மொழி ( 209 )

காதலாவது கத்தரிக் காயாவது!....

ஆணும் பெண்ணும் விரும்பி காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் சமூக விரோதச் செயலோ  மானக் கேடான செயலோ சட்டவிரோதச் செயலோ அல்ல!

ஆனால் நமது நாட்டில் காலங்காலமாக திருமணங்களைப் பெற்றோர் தீர்மானிப்பதே வழக்கமாக இருந்ததால் அதை மீறுவதைக் கேவலமாக நினைப்பது இன்றளவும் நீடிக்கிறது.

ஆனால் காதல் திருமணங்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் முன்போல பெற்றோர்களால் தடுக்கமுடிவது இல்லை!

அதனால் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வசதியையும் தகுதியையும் பொறுத்து சண்டை போடுவதும் கொஞ்ச நாட்களில் இயல்பாகிவிடுவதுமாக நிலைமை மாறி விடுகிறது.

ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்களில் மட்டும் மேல்ஜாதிக்காரர்களின் மனநிலை தங்களைவிடக் கீழ் ஜாதிக்காரர்களுடன் வாழ்க்கை உறவு ஏற்படுத்திக் கொள்வதை சகித்துக் கொள்ளவே முடிவது இல்லை!

காரணம் இன்னும் நமது நாட்டில் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுற்றத்தாராக நினைக்கப் படுகிறார்கள்.

அத்தகைய சுற்றத்தார் தங்களைக் கேவலமாக நினைப்பதை மானக் கேடாக நினைக்கிறார்கள். ஒரு வகையில் கசப்பான உண்மையும் அதுவே!

அதற்காக தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தடுக்கவும் கைவிடவும் தாக்கவும் முடிந்தால் கொல்லவும் துணிகிறார்கள்.

இத்தகைய பண்பாட்டை ஒழித்துக்கட்டுவதே காலமாற்றத்துக்குத் தகுந்த வாழ்க்கை முறை என்ற உணர்வை வளர்ப்பதற்குப் பதிலாக ஒழிக்கவேண்டிய உணர்வை வளர்க்கிறார்கள்.

வரலாறு ஒழித்துக்கட்டுங்கள் என்று நிர்பந்திக்கும் ஒரு கேடுகெட்ட உணர்வை வளர்க்க நினைப்பது என்ன நியாயம்?

தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று தாங்கள் நினைக்கும் ஒரு பகுதிமக்களுக்கு எதிரான வெறுப்பையும் வெறியையும் வெளிப்படுத்துபவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் தங்களை அதே போல இழிவாக நினைக்கும் தங்களைவிட மேல்சாதிக்காரர்களாக நினைக்கும் பகுதியினரை அவர்களுக்கு இணையாக மதிக்காவிட்டால் அந்த மானக் கேட்டை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று களம் இறங்கவேண்டும்!

தங்களைவிட மேல்சாதிக்காரர்கள் தங்களை மதிப்பதில்லை என்ற குறையுடனும் தங்களைவிடக் கீழ்சாதிக்காரர்கள் தங்களுக்குச் சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்ற வெறியுடனும்தான் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த சாதிய வாதிகள் இருக்கிறார்கள்!

இது ஒரு அநியாயமான கேடுகெட்ட அனைவருடையதுமான சமூக உணர்வாகும்.

இந்த உணர்வு இருக்கும்வரை சாதிவெறி நீடிக்கும்.

சாதிவெறி நீடிக்கும்வரை ஆணும் பெண்ணும் சாதியை மீறித் திருமணம் செய்துகொள்வதை ஏகமனதாக விரும்பமாட்டார்கள்.

இதில் கொல்வதும் கொல்லப்படுவதும்  ஒரே மதத்தவர்களாக இருந்தாலும்  அந்த இருதரப்பினரையும் தனது அங்கமாகக் கொண்டிருக்கும் மதத்தின் வழிகாட்டிகள் மட்டும் வாயே திறக்க மாட்டார்கள்!...

ஜாதி வேற்றுமையை வளர்த்து வெட்டிக்கொண்டு சாகுங்கள்! ஆனால் மத ஒற்றுமைக்காக மட்டும் ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்கிறார்களா?

இது என்னமாதிரி ஆன்மிக வழிகாட்டுதல்?....

மக்களை ஒற்றுமையாக அமைதியாக வாழவைப்பதில் மதங்களுக்குப் பங்கில்லையா?

ஜாதிகளை ஒழித்துக் கட்ட வழிகாட்டுங்கள்! இல்லாவிட்டால் ஒற்றுமையையும் அன்பையும் கருணையையும் பற்றி வாய் திறக்காதீர்கள்!...

ஆடு மாடுகளையும் கோழி குஞ்சுகளையும் விட்டுவிடுங்கள்! பாவம்!

காதலர்கள் எதற்காக இருக்கிறார்கள்?...

செத்து ஒழியட்டும் என்று பலிகொடுங்கள்!...Saturday, February 27, 2016

எனது மொழி (208)

அரசுக்கு ஒரு யோசனை!
-----------------------------------------------
நண்பர்களே!

நான் மரம் வளர்ப்பு பற்றி இப்போது சொல்லப்போகும் யோசனைகள் அரசின் கவனத்துக்குச் சென்று அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை விட ஒரு நல்ல செயல் வேறு இருக்க முடியாது.

ஆதாவது எந்தவிதமான பெரிய செலவும் இல்லாமல் ஒரு சட்டத்தின் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான மரங்கள் உடனே நடுவதற்கான யோசனை இது.

நண்பர்கள் மனது வைத்தால் இந்த செய்தியைக் காணும் ஒவ்வொருவரும்.இதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாடு முழுக்க ஏன் உலகு முழுக்க இந்த செய்தியைப் பயனுள்ள முறையில் கொண்டு செல்வதன் மூலம் பெரும் சாதனையே செய்ய முடியும்.

நாட்டில் உள்ள அனைத்துப் படடா நிலங்களிலும் நன்கு வரட்சியைத் தாங்கி உயிர் வாழக்கூடிய ஏதாவது பயனுள்ள மரங்கள் ஒரு ஏக்கருக்கு ஐந்து வீதம் கண்டிப்பாக நட்டு வளர்க்கவேண்டும். (தோப்புகளைக் கணக்கில் சேர்க்கக்கூடாது)

அப்படி வளர்க்கப்படாத நிலங்கள் அனைத்தின் உரிமையும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். குறிப்பட்ட தேதி அறிவிக்கப்பட்டு அந்தத் தேதிக்குள் மரக் கன்றுகள் நடப்பட வேண்டும்.

அதன்பின்பு அந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ வேண்டுமென்றால் அந்த அறிவிக்கப்பட்ட தேதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறிப்பட்ட வயதுடையதாக இருக்கவேண்டும் அல்லது கன்றுகள் நட்டு இவ்வளவு வயதுள்ள மரக்கன்றுகள் இருக்கும் நிலங்கள்தான் விற்கவோ வாங்கவோ முடியும் என்று அறிவிக்கவேண்டும்.

அதேபோல ரியல் எஸ்டேட்டுக்காக வாங்கப்பட்டு சைட்போட்டு விற்கப்படும் நிலங்கள் அனைத்தும் பத்து சென்டுக்குக் குறையாக ஒரு சைட்டுக்கு ஒரு மரம் அவசியம் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். அதைவிடக் குறைவான அளவுள்ள சைட்டுக்கு ஒரு மரம் என தெருக்களில் மரம் நட்டுக் காப்பாற்றவேண்டும் என்ற விதி இருக்கவேண்டும்.

அதேபோல தொழிற்பயன்பாட்டுக்கு என்று வாங்கிப் போட்டுப் பலகாலம் சும்மா இருக்கும் நிலங்களிலும் ஏக்கருக்கு இத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதை விதியாக்கவேண்டும்.

அதேபோல அரசுப் புறம்போக்கு மற்றும் ஏரி குளங்களின் ஓரங்கள் ஆற்றங்கரைகள் கடற்கரைகள் ஆகிய பகுதிகளில் மரங்ளை நட்டுக் கொடுத்து அதைக் காப்பாற்றுவோருக்கு ஒரு மரத்துக்கு இவ்வளவு என்று சன்மானமாகக் கொடுப்பதுடன் அவற்றில் விளையும் காய் அல்லது கனிகளை அவர்களே அனுபவிக்க உரிமை கொடுக்கலாம்.

அதேபோல கடும் வரட்சியைத் தாங்கி வாழக்கூடிய மூலிகைப்பண்புள்ள தாவரங்ளையும் கள்ளி, புதர். போன்ற பாரம்பரியத் தாவர வகைகளையும் அரசுப் புறம்போக்கில் நட்டுப் பராமரிப்போருக்கு நட்டுக்கொடுப்பதும் ஊக்கத்தொகையும் அனுபவிக்கும் உரிமையும் என்று உதவி ஊக்குவிக்கலாம்.

நாளைய உலகும் மக்களும் நமது சந்ததிகளும் வளமுடன் வாழவேண்டுமென்றால் நிலங்கள் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படவேண்டும் என்றால் மழை நன்கு பெய்து பசுமை பூத்துக் குலுங்கவேண்டுமென்றால் அரசுகளுக்கு இதைவிட வேறு முக்கியக் கடமை இருக்கமுடியாது.

பெரும்பகுதி வெறும் சட்டத்தால் மட்டும் சாதிக்கக்கூடிய இந்த யோசனைகளை அரசு ஏன் ஏற்கக்கூடாது?
https://www.facebook.com/photo.php?fbid=275422189192134&set=pb.100001730669125.-2207520000.1456570053.&type=3&theater

Wednesday, February 17, 2016

எனது மொழி ( 207 )


கண்ணீர்....

பிறர் கண்களில் நீர் வழிவதைச் சகிக்காதவர்களா நாம்?

அப்படியானால்....

நம் கண்களில் ஆறாய் வழிந்தே தீரும்!

அதுதான் உலகம்! 

Saturday, February 13, 2016

எனது மொழி (206)

யிரையும் கொடுக்கலாம்!...

தனது வாழ்வில் சந்திக்கும் அநீதிகளைத் தடுக்கவும் நேர்மையாக உழைத்து வாழவும்  சட்டமும் நீதியும் துணைக்கு வராத ஒரு நிலையில்  சராசரி மக்கள்  என்ன ஆகிறார்கள்?


 நேர்மையான வாழ்வில் நம்பிக்கை இழக்கிறார்கள்.

 அக்கிரமங்களை எதிர்க்கும் துணிவற்ற கோழைகளாக ஆகிறார்கள்.

நேர்மையாக வாழ்ந்தால் வாழ முடியாது என்று சொல்லி நேர்மையற்ற வாழ்வுக்கு மாறுகிறார்கள்.


அதிகாரமும் வசதியும் படைத்த நேர்மையற்ற மனிதர்களையும் அண்டிப் பிழைப்பவர்களாக ஆகிறார்கள்.

வாய்ப்புக் கிடைத்தால் அத்தகையவர்களாகத் தாங்களும் ஆகிறார்கள்.

விரக்தியில் வீழ்ந்து முடிந்தால் வாழ்வது இல்லாவிட்டால் உயிரை விடுவது என்கிற தற்கொலை மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள்.

சமூக விரோதிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் ஆகிறார்கள்.

பரந்த மனப்பான்மையும் சமூக சிந்தனையும் உள்ள சிலர் மட்டும் இத்தகைய நிலைக்கான காரணங்களை உணர்ந்து தவறுகளை எதிர்த்துப் போராடும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

இத்தகைய பலவித மனோபாவங்களுடன் வாழும் மக்கள் வாழும் ஒரு நாடு வலிமைமிக்கதாகவும் உலக நாடுகள் மத்தியில் மதிப்பு மிக்கதாகவும் இருக்க முடியுமா?

இத்தனைக்கும் காரணமாக உள்ள ஒரே காரணமான சட்டமும் நீதியும் சராசரி மக்களுக்கு இல்லை என்கிற நிலையை மாற்ற ஒரு பகுதியினர் உயிரைத்தான் கொடுத்தால் என்ன?...

எஞ்சியிருப்பவர்களாவது நிம்மதியாக வாழ்வார்களே!....
Friday, February 12, 2016

அரசியல் ( 78 )

இன்னொரு வலியா?
மக்கள்நலக் கூட்டணி ஆட்சியைப் பிடிப்போம் என்பது மிகவும் அதிகமாகத் தெரிகிறது!
கூட்டணியின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதும் மக்களின் ஆதரவை வென்றெடுப்பதுமே நோக்கமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்!
தே மு தி க , தமிழ்நாடு மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளை அணிக்கு அழைப்பது வாக்குகளை உத்தேசித்தே என்று நினைக்கிறேன்.
அதனால் நோக்கம் பின்னுக்குபோய் தேர்தல் ஆதாயம் முன்னுக்கு வருகிறது!
தேர்தலுக்கு முன்னும் பின்னும் கொள்கை இல்லாத , இடங்களுக்கான, பதவிகளுக்கான குடுமிபிடி சண்டைக்கே நிறைய வாய்ப்பு இருக்கிறது.
தேர்தல் வெற்றியை மட்டும் நோக்கமாகக் கொண்டு களம் இறங்குவது சரியான பாதை அல்ல!
எதிர் நிற்பவர்கள் சாதாரண சக்திகளும் அல்ல, மக்களும் அதி புத்திசாலிகளும் அல்ல!
அதனால் மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஒற்றுமையாய் இருந்து மக்களின் ஆதரவை முதலில் வளர்ப்பதே பயிற்சிக் களமாய் அமையும்.
இந்தத் தேர்தலை ஒரு சோதனை ஓட்டமாய் நினைப்பதே சிறந்ததாக நினைக்கிறேன்.
இந்தச் சோதனையில் மக்களின் ஆதரவைக் கூடுதலாகப் பெற்றுவிட்டால் அதன்பின் போராட்டங்களில் களமிறங்குவது எளிதாக இருக்கும்!
தேர்ந்தெடுக்கப்படும் அரசு எதுவாக இருந்தாலும் அது மக்கள் விரோதப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றும் நிலையில் தேர்ந்தெடுத்த மக்களையே திரட்டிக் களமிரங்கித் துடைத்தெறிய முடியும்.
அத்தகைய எண்ணமோ நம்பிக்கையோ இல்லாத அணியாக இருக்குமானால் அந்த அணி வெற்றி பெற்றாலும் ஆண்டவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது!
மக்களையும் கொள்கைகளையும் நம்பாமல் தந்திரங்களை நம்பிக் களம் காணுவதாகவே அமையும்.
தலைவலியும் திருகுவலியும் அல்லாமல் கூடுதலாக இன்னொரு வலிதான் மிஞ்சும்!

Wednesday, February 10, 2016

எனது மொழி ( 205 )

மனச் சாட்சிக்கு ஒரு கேள்வி...
ஓய்வூதியம் பெறுபவர்களைவிட ஓய்வூதியம் பெறாத மக்கள்தான் பலமடங்காக இருக்கிறார்கள்.
அனைவரிடமிருந்தும் பெறப்படும் வரிகள் மூலம்தான் சிறுபான்மையினருக்கு ஓய்வூதியமாக வழங்கப் படுகிறது.
கேள்வி என்ன வென்றால்....
ஓய்வூதியம் பெறுபவர்களைவிட ஓய்வூதியம் பெறாதவர்கள் எந்த வகையில் முக்கியம் அற்றவர்கள்?
லஞ்சமும் ஊழலும் செய்தே அளவற்ற சொத்து சேர்த்த எண்ணற்றவர்கள்கூட ஓய்வூதியமும் பெற்று சுக வாழ்வு வாழும்போது விவசாயிகள், தொழிலாளிகள், ஏழைகள் உட்பட மற்றவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆற்றிய எந்த மக்கள் பணியை மற்றவர்கள் ஆற்றவில்லை?
எதனால் மக்களிடையே இப்படிப் பாகுபாடு?
அனைத்து மக்களிடமும் பிடுங்கி சிலர் மட்டும் வசதியாக வாழக் கொடுப்பது என்ன தர்மம்?
பணியில் இருக்கும்வரை ஏற்றத்தாழ்வான வருவாயுடன் மக்கள் வாழ்வது இருந்து தொலையட்டும்.
ஓய்வுக் காலம் வந்தவுடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துகை மட்டும் ஓய்வூதியமாக ஒரே மாதிரி வழங்கப்பட்டால் என்ன?...
அதன்மூலம் வயதான அனைவரையும் அரசு காப்பாற்றுகிறது என்ற ஒரே நிலை வருமல்லவா?
அதைப் பெருமையாக நினைப்பவர்கள் மகிழ்வுடன் எஞ்சிய காலம் வாங்கி வாழட்டும்.
சிறுமையாக நினைக்கும் வசதி படைத்தவர்கள் விருப்பம் இல்லாவிட்டால் விட்டுக் கொடுக்கட்டும். அதை மற்றவர்கள் கூடுதலாக வாங்கி காலம் தள்ளட்டுமே!...
என்ன தவறு?..

Thursday, February 4, 2016

அரசியல் ( 77 )

வாழ்வா சாவா?...
தமிழ்நாட்டு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதிக்கும் கெயில் நிறுவனத்தின் வேலைகளை மீண்டும் துவங்க மீண்டும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது.
சந்தை மதிப்பில் நாற்பது சதவிகிதம் இழப்பீடு வழங்கி நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாவது தமிழ்நாட்டு மக்களின் நியாயமான எந்த உணர்வுகளையும் மதிக்காமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆதாவது எரிவாயுக் குழாய்ப் பிரச்சினை, மீத்தேன் வாயுத் திட்டப் பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினை, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை இன்னும் பலவற்றிலும் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அவமானம் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தொடர்கிறது.
இதற்கு உண்மயான காரணம் தமிழ்நாட்டு மக்களின் விதி இரண்டு மக்கள் விரோத ஊழல் கட்சிகளால் நீண்டகாலம் தீர்மானிக்கப்பட்டு வருவதே!
இலவசங்களாலும் ஊழல்மயமான அரசு நிர்வாகங்களாலும் போலி அன்னியக் கலாச்சாரங்களின் திணிப்பாலும் மக்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டு, காயடிக்கப்பட்டு,முனை மழுங்கச் செய்யப்பட்டதே!
அதன்காரணமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மலிவாக மதிப்பிடப்பட்டு காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
இது நல்லது அல்ல!
இது நாட்டு ஒற்றுமைக்கு வைக்கப்படும் ஆப்புகள் என்பதை நினைக்கவேண்டும்.
தமிழ்நாடு இந்திய யூனியனின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்களா இல்லை அந்நிய நாடு, அந்நிய மக்கள் என்று நினைக்கிறார்களா?
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மீது சவாரி செய்துகொண்டிருக்கும் மக்கள் விரோத ஊழல் குப்பைகளை உதறி எறிந்து விட்டு அரசியல் பாகுபாடு இன்றி சாதி மத பாகுபாடு இன்றி ஒன்றுபடவேண்டும்.
இப்போதைய அவமானங்களை அனைவர் தலை மேலும் பற்றிய நெருப்பாக நினைத்து தடுத்து நிறுத்தித் துடைத்தெறிய வேண்டும்.
தன்மானத்தையும் வாழும் உரிமையையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் பொங்கியெழ நேரம் வந்துவிட்டது!
என்ன செய்யப் போகிறோம்?.....

Saturday, January 30, 2016

எனது மொழி ( 204)

யார் பொறுப்பு?

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குப் பின்னால் PETA வை தமிழ்நாட்டு விவசாயத்துக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் எதிரான அநியாயமான ஒரு அமைப்பாகச் சித்தரித்து விமர்சனம் செய்யப்படுகிறது.
நமது பாரம்பரிய கால்நடைகளை ஒழித்துவிட்டு அந்நியர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
அதற்கு ஆதாரமாக பதினைந்து நாட்கள் அவகாசத்தில் அதன் பொறுப்பில் வரும் விலங்குகள் கொல்லப்படும் கொடூரத்தைச் செய்வதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது...
அப்படியானால் PETA போன்ற ஒரு அமைப்பு நமக்குத் தேவை இல்லையா?
அதன் சேவையாகச் சொல்லப்படும் சேவைகளைச் செய்வதற்கு வேறு நம்பகமான பிராணிகள் நல அமைப்பு இல்லையா?
அரசுப் பொறுப்பில் அப்படிப்பட்ட அமைப்பு இல்லையா?
அல்லது பிராணிகள்பால் கருணை காட்டக்கூடிய அமைப்புகளே தேவையே இல்லையா?
ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு PETA காரணமா?
நமது அரசுகளும் சட்டங்களும் காரணமா?
யார் முக்கியப் பொறுப்பு?