ss

Saturday, February 27, 2016

எனது மொழி (208)

அரசுக்கு ஒரு யோசனை!
-----------------------------------------------
நண்பர்களே!

நான் மரம் வளர்ப்பு பற்றி இப்போது சொல்லப்போகும் யோசனைகள் அரசின் கவனத்துக்குச் சென்று அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை விட ஒரு நல்ல செயல் வேறு இருக்க முடியாது.

ஆதாவது எந்தவிதமான பெரிய செலவும் இல்லாமல் ஒரு சட்டத்தின் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான மரங்கள் உடனே நடுவதற்கான யோசனை இது.

நண்பர்கள் மனது வைத்தால் இந்த செய்தியைக் காணும் ஒவ்வொருவரும்.இதை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாடு முழுக்க ஏன் உலகு முழுக்க இந்த செய்தியைப் பயனுள்ள முறையில் கொண்டு செல்வதன் மூலம் பெரும் சாதனையே செய்ய முடியும்.

நாட்டில் உள்ள அனைத்துப் படடா நிலங்களிலும் நன்கு வரட்சியைத் தாங்கி உயிர் வாழக்கூடிய ஏதாவது பயனுள்ள மரங்கள் ஒரு ஏக்கருக்கு ஐந்து வீதம் கண்டிப்பாக நட்டு வளர்க்கவேண்டும். (தோப்புகளைக் கணக்கில் சேர்க்கக்கூடாது)

அப்படி வளர்க்கப்படாத நிலங்கள் அனைத்தின் உரிமையும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். குறிப்பட்ட தேதி அறிவிக்கப்பட்டு அந்தத் தேதிக்குள் மரக் கன்றுகள் நடப்பட வேண்டும்.

அதன்பின்பு அந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ வேண்டுமென்றால் அந்த அறிவிக்கப்பட்ட தேதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறிப்பட்ட வயதுடையதாக இருக்கவேண்டும் அல்லது கன்றுகள் நட்டு இவ்வளவு வயதுள்ள மரக்கன்றுகள் இருக்கும் நிலங்கள்தான் விற்கவோ வாங்கவோ முடியும் என்று அறிவிக்கவேண்டும்.

அதேபோல ரியல் எஸ்டேட்டுக்காக வாங்கப்பட்டு சைட்போட்டு விற்கப்படும் நிலங்கள் அனைத்தும் பத்து சென்டுக்குக் குறையாக ஒரு சைட்டுக்கு ஒரு மரம் அவசியம் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். அதைவிடக் குறைவான அளவுள்ள சைட்டுக்கு ஒரு மரம் என தெருக்களில் மரம் நட்டுக் காப்பாற்றவேண்டும் என்ற விதி இருக்கவேண்டும்.

அதேபோல தொழிற்பயன்பாட்டுக்கு என்று வாங்கிப் போட்டுப் பலகாலம் சும்மா இருக்கும் நிலங்களிலும் ஏக்கருக்கு இத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதை விதியாக்கவேண்டும்.

அதேபோல அரசுப் புறம்போக்கு மற்றும் ஏரி குளங்களின் ஓரங்கள் ஆற்றங்கரைகள் கடற்கரைகள் ஆகிய பகுதிகளில் மரங்ளை நட்டுக் கொடுத்து அதைக் காப்பாற்றுவோருக்கு ஒரு மரத்துக்கு இவ்வளவு என்று சன்மானமாகக் கொடுப்பதுடன் அவற்றில் விளையும் காய் அல்லது கனிகளை அவர்களே அனுபவிக்க உரிமை கொடுக்கலாம்.

அதேபோல கடும் வரட்சியைத் தாங்கி வாழக்கூடிய மூலிகைப்பண்புள்ள தாவரங்ளையும் கள்ளி, புதர். போன்ற பாரம்பரியத் தாவர வகைகளையும் அரசுப் புறம்போக்கில் நட்டுப் பராமரிப்போருக்கு நட்டுக்கொடுப்பதும் ஊக்கத்தொகையும் அனுபவிக்கும் உரிமையும் என்று உதவி ஊக்குவிக்கலாம்.

நாளைய உலகும் மக்களும் நமது சந்ததிகளும் வளமுடன் வாழவேண்டுமென்றால் நிலங்கள் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்படவேண்டும் என்றால் மழை நன்கு பெய்து பசுமை பூத்துக் குலுங்கவேண்டுமென்றால் அரசுகளுக்கு இதைவிட வேறு முக்கியக் கடமை இருக்கமுடியாது.

பெரும்பகுதி வெறும் சட்டத்தால் மட்டும் சாதிக்கக்கூடிய இந்த யோசனைகளை அரசு ஏன் ஏற்கக்கூடாது?
https://www.facebook.com/photo.php?fbid=275422189192134&set=pb.100001730669125.-2207520000.1456570053.&type=3&theater

Wednesday, February 17, 2016

எனது மொழி ( 207 )


கண்ணீர்....

பிறர் கண்களில் நீர் வழிவதைச் சகிக்காதவர்களா நாம்?

அப்படியானால்....

நம் கண்களில் ஆறாய் வழிந்தே தீரும்!

அதுதான் உலகம்! 

Saturday, February 13, 2016

எனது மொழி (206)

யிரையும் கொடுக்கலாம்!...

தனது வாழ்வில் சந்திக்கும் அநீதிகளைத் தடுக்கவும் நேர்மையாக உழைத்து வாழவும்  சட்டமும் நீதியும் துணைக்கு வராத ஒரு நிலையில்  சராசரி மக்கள்  என்ன ஆகிறார்கள்?


 நேர்மையான வாழ்வில் நம்பிக்கை இழக்கிறார்கள்.

 அக்கிரமங்களை எதிர்க்கும் துணிவற்ற கோழைகளாக ஆகிறார்கள்.

நேர்மையாக வாழ்ந்தால் வாழ முடியாது என்று சொல்லி நேர்மையற்ற வாழ்வுக்கு மாறுகிறார்கள்.


அதிகாரமும் வசதியும் படைத்த நேர்மையற்ற மனிதர்களையும் அண்டிப் பிழைப்பவர்களாக ஆகிறார்கள்.

வாய்ப்புக் கிடைத்தால் அத்தகையவர்களாகத் தாங்களும் ஆகிறார்கள்.

விரக்தியில் வீழ்ந்து முடிந்தால் வாழ்வது இல்லாவிட்டால் உயிரை விடுவது என்கிற தற்கொலை மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள்.

சமூக விரோதிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் ஆகிறார்கள்.

பரந்த மனப்பான்மையும் சமூக சிந்தனையும் உள்ள சிலர் மட்டும் இத்தகைய நிலைக்கான காரணங்களை உணர்ந்து தவறுகளை எதிர்த்துப் போராடும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

இத்தகைய பலவித மனோபாவங்களுடன் வாழும் மக்கள் வாழும் ஒரு நாடு வலிமைமிக்கதாகவும் உலக நாடுகள் மத்தியில் மதிப்பு மிக்கதாகவும் இருக்க முடியுமா?

இத்தனைக்கும் காரணமாக உள்ள ஒரே காரணமான சட்டமும் நீதியும் சராசரி மக்களுக்கு இல்லை என்கிற நிலையை மாற்ற ஒரு பகுதியினர் உயிரைத்தான் கொடுத்தால் என்ன?...

எஞ்சியிருப்பவர்களாவது நிம்மதியாக வாழ்வார்களே!....
Friday, February 12, 2016

அரசியல் ( 78 )

இன்னொரு வலியா?
மக்கள்நலக் கூட்டணி ஆட்சியைப் பிடிப்போம் என்பது மிகவும் அதிகமாகத் தெரிகிறது!
கூட்டணியின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதும் மக்களின் ஆதரவை வென்றெடுப்பதுமே நோக்கமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்!
தே மு தி க , தமிழ்நாடு மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளை அணிக்கு அழைப்பது வாக்குகளை உத்தேசித்தே என்று நினைக்கிறேன்.
அதனால் நோக்கம் பின்னுக்குபோய் தேர்தல் ஆதாயம் முன்னுக்கு வருகிறது!
தேர்தலுக்கு முன்னும் பின்னும் கொள்கை இல்லாத , இடங்களுக்கான, பதவிகளுக்கான குடுமிபிடி சண்டைக்கே நிறைய வாய்ப்பு இருக்கிறது.
தேர்தல் வெற்றியை மட்டும் நோக்கமாகக் கொண்டு களம் இறங்குவது சரியான பாதை அல்ல!
எதிர் நிற்பவர்கள் சாதாரண சக்திகளும் அல்ல, மக்களும் அதி புத்திசாலிகளும் அல்ல!
அதனால் மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து ஒற்றுமையாய் இருந்து மக்களின் ஆதரவை முதலில் வளர்ப்பதே பயிற்சிக் களமாய் அமையும்.
இந்தத் தேர்தலை ஒரு சோதனை ஓட்டமாய் நினைப்பதே சிறந்ததாக நினைக்கிறேன்.
இந்தச் சோதனையில் மக்களின் ஆதரவைக் கூடுதலாகப் பெற்றுவிட்டால் அதன்பின் போராட்டங்களில் களமிறங்குவது எளிதாக இருக்கும்!
தேர்ந்தெடுக்கப்படும் அரசு எதுவாக இருந்தாலும் அது மக்கள் விரோதப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றும் நிலையில் தேர்ந்தெடுத்த மக்களையே திரட்டிக் களமிரங்கித் துடைத்தெறிய முடியும்.
அத்தகைய எண்ணமோ நம்பிக்கையோ இல்லாத அணியாக இருக்குமானால் அந்த அணி வெற்றி பெற்றாலும் ஆண்டவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது!
மக்களையும் கொள்கைகளையும் நம்பாமல் தந்திரங்களை நம்பிக் களம் காணுவதாகவே அமையும்.
தலைவலியும் திருகுவலியும் அல்லாமல் கூடுதலாக இன்னொரு வலிதான் மிஞ்சும்!

Wednesday, February 10, 2016

எனது மொழி ( 205 )

மனச் சாட்சிக்கு ஒரு கேள்வி...
ஓய்வூதியம் பெறுபவர்களைவிட ஓய்வூதியம் பெறாத மக்கள்தான் பலமடங்காக இருக்கிறார்கள்.
அனைவரிடமிருந்தும் பெறப்படும் வரிகள் மூலம்தான் சிறுபான்மையினருக்கு ஓய்வூதியமாக வழங்கப் படுகிறது.
கேள்வி என்ன வென்றால்....
ஓய்வூதியம் பெறுபவர்களைவிட ஓய்வூதியம் பெறாதவர்கள் எந்த வகையில் முக்கியம் அற்றவர்கள்?
லஞ்சமும் ஊழலும் செய்தே அளவற்ற சொத்து சேர்த்த எண்ணற்றவர்கள்கூட ஓய்வூதியமும் பெற்று சுக வாழ்வு வாழும்போது விவசாயிகள், தொழிலாளிகள், ஏழைகள் உட்பட மற்றவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆற்றிய எந்த மக்கள் பணியை மற்றவர்கள் ஆற்றவில்லை?
எதனால் மக்களிடையே இப்படிப் பாகுபாடு?
அனைத்து மக்களிடமும் பிடுங்கி சிலர் மட்டும் வசதியாக வாழக் கொடுப்பது என்ன தர்மம்?
பணியில் இருக்கும்வரை ஏற்றத்தாழ்வான வருவாயுடன் மக்கள் வாழ்வது இருந்து தொலையட்டும்.
ஓய்வுக் காலம் வந்தவுடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துகை மட்டும் ஓய்வூதியமாக ஒரே மாதிரி வழங்கப்பட்டால் என்ன?...
அதன்மூலம் வயதான அனைவரையும் அரசு காப்பாற்றுகிறது என்ற ஒரே நிலை வருமல்லவா?
அதைப் பெருமையாக நினைப்பவர்கள் மகிழ்வுடன் எஞ்சிய காலம் வாங்கி வாழட்டும்.
சிறுமையாக நினைக்கும் வசதி படைத்தவர்கள் விருப்பம் இல்லாவிட்டால் விட்டுக் கொடுக்கட்டும். அதை மற்றவர்கள் கூடுதலாக வாங்கி காலம் தள்ளட்டுமே!...
என்ன தவறு?..

Thursday, February 4, 2016

அரசியல் ( 77 )

வாழ்வா சாவா?...
தமிழ்நாட்டு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதிக்கும் கெயில் நிறுவனத்தின் வேலைகளை மீண்டும் துவங்க மீண்டும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது.
சந்தை மதிப்பில் நாற்பது சதவிகிதம் இழப்பீடு வழங்கி நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாவது தமிழ்நாட்டு மக்களின் நியாயமான எந்த உணர்வுகளையும் மதிக்காமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆதாவது எரிவாயுக் குழாய்ப் பிரச்சினை, மீத்தேன் வாயுத் திட்டப் பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினை, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை இன்னும் பலவற்றிலும் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அவமானம் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தொடர்கிறது.
இதற்கு உண்மயான காரணம் தமிழ்நாட்டு மக்களின் விதி இரண்டு மக்கள் விரோத ஊழல் கட்சிகளால் நீண்டகாலம் தீர்மானிக்கப்பட்டு வருவதே!
இலவசங்களாலும் ஊழல்மயமான அரசு நிர்வாகங்களாலும் போலி அன்னியக் கலாச்சாரங்களின் திணிப்பாலும் மக்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டு, காயடிக்கப்பட்டு,முனை மழுங்கச் செய்யப்பட்டதே!
அதன்காரணமாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மலிவாக மதிப்பிடப்பட்டு காலடியில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
இது நல்லது அல்ல!
இது நாட்டு ஒற்றுமைக்கு வைக்கப்படும் ஆப்புகள் என்பதை நினைக்கவேண்டும்.
தமிழ்நாடு இந்திய யூனியனின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்களா இல்லை அந்நிய நாடு, அந்நிய மக்கள் என்று நினைக்கிறார்களா?
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மீது சவாரி செய்துகொண்டிருக்கும் மக்கள் விரோத ஊழல் குப்பைகளை உதறி எறிந்து விட்டு அரசியல் பாகுபாடு இன்றி சாதி மத பாகுபாடு இன்றி ஒன்றுபடவேண்டும்.
இப்போதைய அவமானங்களை அனைவர் தலை மேலும் பற்றிய நெருப்பாக நினைத்து தடுத்து நிறுத்தித் துடைத்தெறிய வேண்டும்.
தன்மானத்தையும் வாழும் உரிமையையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் பொங்கியெழ நேரம் வந்துவிட்டது!
என்ன செய்யப் போகிறோம்?.....